பிரதமர் நாடாளுமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தைத் துவக்கும் விதமாக ட்விட்டரில் ‘சௌக்கிதார் நரேந்திர மோடி’ என்று பெயர் மாற்றம் செய்துகொண்டு, அதையே தமது அமைச்சர்கள், தொண்டர்கள் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
‘சௌகிதார்’ ரவி ஷங்கர் பிரசாத், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர். ‘#நானும் சௌகிதார்தான்’ என்னும் பிரச்சாரம் இணையத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிப் பெருமிதத்துடன் ஊடகங்களில் தெரிவித்தார். மோடியின் இந்தப் பிரச்சாரத்தைப் போற்றும் விதத்தில் ஒரு இசைக் காணொளியும் வெளியானது.
தமிழில் ‘காவலாளி’ எனும் பொருள்படும் ‘சௌகிதார்’ என்னும் இந்த வார்த்தை, ’பாதுகாப்போம்’ என்னும் உறுதியை தனக்குள் கொண்டுள்ளது. அப்படியென்றால், இந்தக் காவலாளி நரேந்திர மோடி ’காவல்’ காத்த கதை தான் என்ன?
1) குஜராத் மாநிலத்தின் உனா என்னும் பகுதியில் தோல் பதனிடும் தலித்துகள் மீது நடந்த தாக்குதல்.
ஜுலை 11, 2016 அன்று பசுப் பாதுகாவலர்கள் கூட்டம் ஒன்று பாலு சரவையா என்பவரையும் அவர் குடும்பத்தினரையும் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காகக் கடுமையாகத் தாக்கியது. தோல் பதனிடுதல் தொழில்தான் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம். அவர்களை அக்கூட்டம் இரும்பு பைப்புகள், கட்டைகள், கத்தி ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர்.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இரண்டு வருடம் கழித்து, ஜூன் 2018இல், ஜாமீனில் வெளிவந்தபோது முன்பு தாக்கப்பட்டவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். இந்த முறை, அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதற்காகத் தாக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை 2018 ஆகஸ்டில்தான் துவக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில் 21பேர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.
2) முஸ்லிம் தொழிலாளி ஒருவர் ’லவ் ஜிகாத்’திற்காக வெட்டப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்.
டிசம்பர் 6, 2017 அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ராஜ்சமந்த் பகுதியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மொகம்மது அஃப்ரசுல் வெட்டுக் கத்தியால் வெட்டப்பட்டு, பின் நெருப்பில் கொளுத்தப்பட்டார்.
இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர் ராஜ்சமந்தைச் சேர்ந்த ஷம்புலால் ரேகர் என்றும் அஃப்ரசுல் ஒரு இந்துப் பெண்ணோடு காதலில் இருந்ததுதான் இச்சம்பவத்திற்கு காரணம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ரேகர் எடுத்த ஒரு காணொளி இணையத்தில் வைரல் ஆகியது. அவர், தான் செய்தது சரி என்று கேமராவின் முன் உரையும் ஆற்றினார்.
அவரது காணொளிகளில் ஒன்று, முஸ்லிம்களை எச்சரிப்பதாக உள்ளது: “இந்த நாட்டில் “லவ் ஜிகாத்’’ செய்தால் இதுதான் உங்களுக்கும் நடக்கும்” என்கிறான். “லவ் ஜிகாத்” என்னும் சொல்லை ஊருவாக்கியது இந்துத்துவக் குழுக்கள். இந்துப் பெண்களை மயக்கி இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவது “இஸ்லாமியர்களின் சதி” என்னும் புனைவைக் கட்டமைத்த அவர்கள், அதைக் குறிக்கவே “லவ் ஜிகாத்” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
3) கால்நடை வியாபாரிகள் இருவர் ஒரு கூட்டத்தினரால் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டனர்.
32 வயதான மாஸ்லம் அன்சாரியும், 13 வயது இம்தியாஸ் கானும் கால்நடை வியாபாரிகள். ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாபர் மற்றும் சேட்டன் பகுதிகளுக்கிடையில் இருக்கும் மரமொன்றில் இவர்களுடைய சடலங்கள் தொங்கவிடப்பட்டுக் கிடந்தது 2016, மார்ச் 17அன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் வியாபாரத்திற்காக கால்நடைகளை வேறொரு கிராமத்திற்குக் கொண்டு செல்கையில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டனர். போலீஸ் கூற்றுப்படி இந்தக் கொலைகள், பணத்தையும் கால்நடைகளையும் திருடும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோர் ‘ஆச்சார்ய கோபால் மானிஜி மஹாராஜ்’ என்பவரையே குற்றம் சாட்டினர், அவர் ‘பாரதிய கௌ கிராந்தி மஞ்ச்’ என்னும் பசுப் பாதுகாப்புக் கூட்டதின் பிரச்சாரகர்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
4) கத்துவாவில் எட்டு வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
2018 ஜனவரியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள கத்துவா மாவட்டதில் எட்டு வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சிறுமி பகர்வால் என்னும் முஸ்லிம் சிறுபான்மையின இனக்குழுவைச் சேர்ந்தவர். கத்துவா மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினர்.
அந்தச் சிறுமி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பிரார்த்தனைக் கூடத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இந்தக் குற்றத்துக்கான ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காகப் பின்னர் கைதும் செய்யப்பட்டனர்.
வலதுசாரி இந்துக் குழுக்கள் இந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ‘இந்து ஏக்தா’ என்னும் போராட்டத்தைத் துவக்கின. போராட்டத்தில் வனத்துறை அமைச்சர் லால் சிங் சௌத்ரி, தொழில் துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்;
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக வழக்காடும் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத், இந்த வழக்கைக் கையிலெடுத்த பின் தமக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பல வாரங்கள் நாடு தழுவிய போராட்டங்கள், அஞ்சலிகள் எல்லாம் நடந்த பிறகுதான் ‘காவலாளி’ நரேந்திர மோடி இந்தப் பாலியல் வல்லுறவுக் கொலைக் குற்றத்தைக் கண்டித்து டிவீட் செய்தார்.
6) கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட ‘பசுப் பாதுகாவலர்களை’ பாஜக அமைச்சர் ஒருவர் பூமாலை போட்டு கௌரவித்தது.
அலிமுத்தீன் என்னும் அஸ்கார் அன்சாரி, கும்பல் ஒன்றினால் அடித்துக் கொல்லப்பட்டார். இது 2017, ஜூன் 29 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கரில் நடந்துள்ளது. மாட்டிறைச்சி கொண்டுபோயிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரிலேயே அவர் கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட எட்டுப் பேரும் பஜ்ரங்தள் அமைப்பையும் பாஜகவின் வட்டாரக் கிளையையும் சேர்ந்தவர்கள். அந்தக் கும்பல் அவரின் வேனையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது.
இந்தக் கொடூரமான கூட்டுக் கொலைக்காக எட்டுப் பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால், கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சென்ற வருடம் ஜூலை மாதத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் ஜயந்த் சின்ஹா, தண்டிக்கப்பட்டவர்களைத் தனது வீட்டிற்கே வரவழைத்து மாலையிட்டு கௌரவித்தார்.
வெறுப்பினால் நடக்கும் குற்றங்களைப் பார்வையிடும் அமைப்பின் அறிக்கை, 2014இலிருந்து பாஜகவின் பார்வையின் கீழ் வெறுப்பின் பேரால் 140 குற்றச் செயல்கள் இந்தியா முழுவதும் நடந்ததாகத் தெரிவிக்கிறது. இந்தக் 140 குற்றச் சம்பவங்களில் 41 சம்பவங்கள் உயிரிழப்புகளில் முடிந்துள்ன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அந்த அறிக்கை, “சிறுபான்மையினரை, விளிம்பு நிலையில் வாழும் இனக் குழுக்களை, அரசை விமர்சிப்பவர்களை நோக்கிய வன்முறைகள்” அதிகரித்ததாகக் கூறுகிறது. இந்தத் தாக்குதல்களை உடனடியாகவோ நம்பிக்கை அளிக்கும் விதத்திலோ விசாரிக்க அரசு தவறியது. தற்போது’காவலாளிகளாக’த் தங்களை அறிவித்துக்கொண்டுள்ள பாஜகவின் தலைவர்கள் பலர் குற்றவாளிகளைக் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.
6) பாஜக எம்பி ஒருவர் அவர் கட்சி எம்எல்ஏவையே ஷுவால் அடித்தது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் சாந்த் கபீர் நகரில் மாவட்டத் திட்டக் கமிட்டிக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. அந்தப் பகுதியைச்சேர்ந்த பாஜக எம்பி ஷரத் திரிபாதி குறிப்பிட்ட ஒரு சாலைக்கான அடிக்கல்லில் தனது பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.
இந்த விஷயம் பற்றி திரிபாதி கட்டுமானப் பொறியாளர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கையில் இடைமறித்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராகேஷ் பாக்கேல், “இது பற்றி என்னிடம் கேளுங்கள், அடிக்கல் உருவாக்கும் வேலையை நான்தான் செய்தேன்” என்றார்.
இதையடுத்து இருவருக்கும் சூடான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் திரிபாதி தன் காலிலிருந்த ஷூவைக் கழற்றி பாக்கேலைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பாக்கேல் திருப்பி அறைந்தார். இவை எல்லாமே காணொளிக் காட்சிகளாகப் பதிவாயின. மோடி தனது ‘காவலாளி’ பிரச்சாரத்தைத் துவக்கியபோது, திரிபாதி உடனடியாகத் தனது ட்விட்டர் பெயரை ‘காவலாளி ஷரத் திரிபாதி’ என்று மாற்றத் தவறவில்லை!
கட்டுரை: ரிபு
படங்கள்: பரிப்லாப் சக்கரவர்த்தி
நன்றி: தி வயர்
https://thewire.in/rights/in-illustrations-five-times-our-chowkidars-could-not-prevent-hate-crimes
தமிழில்: இனியன்
Modi and his goons are the robbers and not the securities.
https://www.youtube.com/watch?v=V-yXl_aLkSw