அன்பார்ந்த ராமதாசு அய்யா,
எண்பதுகளில் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று முழக்கத்தை முன்னெடுத்திருந்தது உங்களது வன்னியர் சங்கம். பின்னர் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்று முடிவெடுத்து கட்சியை உருவாக்க முயற்சிகள் எடுத்தபோது உங்களோடு உடனிருந்தவர்கள் முன்னாள் நக்சலைட்டுகள். திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன், பேராசிரியர் மூர்த்தி, பேராசிரியர் கல்யாணி ஆகியோர் ஒன்று சேர்ந்து கட்சியின் பெயரில் பாட்டாளி என்ற சொல் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள், நீங்கள் அதை அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள். பாட்டாளி மக்கள் கட்சியை வெறும் வன்னியர்களுக்கான கட்சியாக சுருக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் நீங்கள் கட்சி தொடங்கினீர்கள். தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக உங்களை அடையாளப்படுத்த விரும்பியதன் தொடக்கமே நீங்கள் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சி.
கட்சி தொடங்கியபோது கட்சியின் கொள்கை அறிக்கைகள் கருணா மனோகரன், பேராசிரியர் மூர்த்தி மற்றும் பேராசிரியர் கல்யாணி அவர்களால் உருவாக்கப்பட்டன. அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்–தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைக்கும் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் இடம் பெற்றன.
வள்ளிநாயகம் என்ற தலித்தை கட்சியின் முதல் பொதுச் செயலாளர் ஆக்கியதும் நீங்கள்தான். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்பதற்காக, கட்சியின் முதல் பொருளாளராக, குணங்குடி ஹனீபா என்ற இஸ்லாமியரையே நியமித்தீர்கள்.
தொடக்கக் காலத்தில், தலித்துகளின் கோரிக்கைக்காக, பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நீங்கள். பல இடங்களில் அம்பேத்கர் சிலைகளத் திறந்து வைத்தீர்கள். இதன் காரணமாகத்தான், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, உங்களுக்கு “அம்பேத்கர் சுடரொளி” விருதை வழங்கி கவுரவித்தது.
கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலரோடு கட்சியை வழிநடத்தினீர்கள்.
பாமக பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதும், தலித் எழில்மலையைத் தான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்.
1992ம் ஆண்டு, தடா சட்டத்துக்கு எதிராக, நீங்கள் நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாடு வரலாற்று சிறப்பு பெற்றது. புலிகள் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே தடா சட்டத்தில் கைது என்று அன்று இருந்த சூழலில், துணிச்சலாக பிரபாகரன் படத்தோடு அந்த மாநாடு பெரியார் திடலில் நடத்தினீர்கள்.
“தேர்தல் பாதை, திருடர் பாதை” என்பது வன்னியர் சங்கம் தொடக்கத்தில் முன்வைத்த முழக்கம் அதுவே பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியதும் காலப்போக்கில் அந்த முழக்கத்தை உண்மையாக்கி விட்டீர்கள்.. 1989 தேர்தலில், எந்தக் கூட்டணியும் இல்லாமல், பாமக தனித்து தேர்தலை சந்தித்தது. அந்த சட்டப்பேரவை தேர்தலில், 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றாலும், ஒரு தொகுதியிலும் உங்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. 1991 சட்டப்பேரவைத் தேர்தலில், உங்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட பன்ருட்டி ராமச்சந்திரன் எம்.எல்.ஏவாக ஆனார். அப்போது உங்கள் கட்சியின் சின்னம் யானை. முதல் முறை சட்டப்பேரவைக்கு வருகை தந்த பன்ருட்டி ராமச்சந்திரன், யானையிலேயே சட்டப் பேரவைக்கு வருகை தந்தார்.
1996 சட்டப் பேரவைத் தேர்தலில், வாழப்பாடி ராமமூர்த்தி நடத்திவந்த திவாரி காங்கிரஸோடு போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றீர்கள். தமிழகத்தில் கடுமையான ஜெயலலிதா எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருந்த இந்தத் தேர்தலில் நீங்கள் பெற்ற வெற்றிதான் தமிழகத்தை உங்களை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்குள்ளாகவே இரண்டே ஆண்டுகளில் அதாவது 1998 மக்களவை தேர்தலில், ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்து 4 பாராளுமன்ற இடங்களை பெற்றீர்கள்.
அமைச்சரவையிலும் இடம் கிடைத்தது. புதிதாகக் கிடைத்த அதிகாரமும் பணமும் உங்களை சறுக்க வைத்தது. கொள்கை கோட்பாடு என்று பேசிக் கொண்டிருந்த நீங்கள், சுயலாபத்தை பார்க்கத் தொடங்கினீர்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான், உங்களோடு கட்சி தொடங்கியபோது நெருக்கமாக இருந்த அறிவுஜீவிகள் உங்களை விட்டு விலகத் தொடங்கினார்கள்.
அதற்கு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், திமுக அணிக்கு தாவினீர்கள். 2001 சட்டமன்றத் தேர்தலில் துளியும் கூச்ச நாச்சமின்றி அதிமுக அணிக்கு தாவினீர்கள். போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் உங்களுக்கு எத்தனை இடம் என்று கேட்ட கேள்விக்கு “அன்புச் சகோதரி முடிவு செய்வார்” என்று திருவாய் மலர்ந்தீர்கள். அந்தத் தேர்தலில் 20 எம்.எல்.ஏ சீட்டுகளை உங்கள் கட்சி வென்றது.
2004 பாராளுமன்றத் தேர்தலில், மீண்டும் திமுக அணிக்கு தாவினீர்கள். 2009 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக அணி. அப்போதும் ‘அன்புச் சகோதரியை’ சந்தித்து விட்டு, செய்தியாளர்களிடம் இப்படி கூறினீர்கள். ”அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை–மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன”
அது வரை, உங்கள் வாக்கு வங்கிக்காக நீங்கள் கேட்ட இடங்களை கொடுத்து வந்தன இரண்டு திராவிடக் கட்சிகளும். 2009 மக்களவைத் தேர்தலிலும் நீங்கள் கேட்ட இடங்களைக் கொடுத்தார் ஜெயலலிதா. ஆனால் உங்களைத் தோற்கடிக்க வேண்டும் என்றே கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருந்தார். ஜெயலலிதா தான் நினைத்ததை நடத்தவும் செய்தார். அந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிட்ட இடங்கள் அனைத்திலும் தோல்வியை சந்தித்தீர்கள். உங்களை சீராட்டி வளர்த்த திமுகவும் தன் பங்குக்கு உங்களுக்கு இதனைச் செய்தது.
பிறகு உங்களுக்கு தொடர் தோல்விதான். 2014 மக்களவைத் தேர்தலில், பிஜேபியோடு கூட்டணி சேர்ந்தாலும், அன்புமணி மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
உங்கள் அரசியல் வாழ்விலேயே மோசமான சறுக்கல், 2012ல் தொடங்கியது. தருமபுரி இளவரசன்–திவ்யா திருமணத்தை ஒட்டி நிகழ்ந்த சாதிக் கலவரத் தீயில் குளிர்காயத் தொடங்கினீர்கள். அந்தக் கலவரத்தை, பயன்படுத்தி தலித்துகள் அல்லாத உயர் சாதியினரை இணைத்து, ஒரு சாதிக் கூட்டணியை உருவாக்க முயன்றீர்கள். ஒரு சமூக போராளியாக உருவாகத் தொடங்கிய நீங்கள் அப்பட்டமான சாதிவெறி பிடித்த மனிதராக மாறினீர்கள். அப்போது நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், தலித் இளைஞர்கள் குறித்து, “ஜீன்ஸ் பேண்ட்டும், கூலிங் க்ளாஸும் போட்டுக்கிட்டு மத்த சாதி பொண்ணுங்களை மடக்கறதுக்காகவே சுத்தறானுங்க” என்று நீங்கள் பேசியபோது, அப்பட்டமான உங்களின் சாதி வெறி பல்லிளித்தது. தூரத்தில் இருந்து உங்களை பார்த்துக் கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு, ஏற்பட்ட அதிர்ச்சி சொல்லி மாளாது.
வெறும் சாதியை மட்டுமே முதலீடாக வைத்து மேற்கு மண்டலத்திலும், தென் தமிழகத்திலும், ஒரு பெரும் அரசியல் இயக்கத்தை கட்டலாம் என்று முயன்ற உங்களுக்கு, பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. இன்று ஒரு பலமான அரசியல் கட்சியின் துணையோடு வன்னியர்கள், தங்களை ஆண்ட பரம்பரை என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், தமிழகத்தில் அதிகார மையத்திலும் பணபலத்திலும் வலுவான சாதிகளாக உள்ள முக்குலத்தோர், கவுண்டர்கள் போன்ற சாதியைச் சேர்ந்தவர்கள், இன்னும் வன்னியர்களை பிற்படுத்தப்பட்டவர்களாகத்தான் பார்க்கிறார்கள் என்பதை நீங்கள் தாமதமாகவே உணர்ந்தீர்கள். வட தமிழகத்தில் உள்ள வன்னியர்களை மட்டுமே கருத்தில் கொண்டு, சிறு சிறு கட்சிகளை இணைத்து, 2016 தேர்தலில், உங்கள் மகனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி, “மாற்றம் முன்னேற்றம் என்று நீங்கள் தனித்து களம் கண்டது உங்களை முச்சந்தியில் கொண்டு நிறுத்தியது. ஒரே ஒரு எம்.எல்.ஏ சீட்டில் கூட வெற்றி பெற முடியாமல், அனைத்துத் தொகுதிகளிலும், உங்கள் கட்சி தோல்வியைத் தழுவியது.
இனி தனித்துக் களம் கண்டு வெற்றி பெறுவது சாத்தியம் இல்லாதது என்பதை உணர்ந்தே 2019 தேர்தலுக்கு கூட்டணி வைக்க முடிவெடுத்தீர்கள்.
கலைஞர் கருணாநிதிக்கு பிறகு, அறிக்கைகள் செழுமையோடு, ஆழ்ந்த கருத்துக்களோடு இருக்குமானால் அது உங்களின் அறிக்கைகள் மட்டுமே. எந்த விவகாரமாக இருந்தாலும், அதைத் தீர ஆராய்ந்து, விரிவாக அறிக்கை அளிப்பீர்கள். அதிலும், ஆளும் அதிமுகவையும், பாஜகவையும், உங்கள் அறிக்கைகள், ஏவுகணைகள் போல தாக்கும். அதிலும் குறிப்பாக, சேலம் எட்டு வழிச் சாலை குறித்த உங்கள் அறிக்கைகளும் போராட்டங்களும், மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
ஆனால், 2019 தேர்தலில், அதிமுக–பாஜக அணியில் கூட்டணி சேரலாம் என்று நீங்கள் எடுத்த முடிவு, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியதை நீங்களும் அறிவீர்கள். இரண்டு பெரிய திராவிடக் கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சிகளுமே தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறினாலும், பாமக மட்டுமே கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியது. அதற்கு காரணம், கடந்த காலங்களில், நீங்கள் ஆட்சியாளர்களை செய்த விமர்சனங்கள் என்பதைத் தாண்டி, நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள். உங்கள் மகன், முதல்வரையும், துணை முதல்வரையும், ‘டயர் நக்கி’ என்றார். முட்டாள்கள் என்றார். நீங்களோ, இரு திராவிட கட்சிகளோடும் இனி கூட்டணி கிடையாது என்று பத்திரத்தில் எழுதி கையெழுத்து போட்டு தருகிறேன் என்றீர்கள்.
இப்படியெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து விட்டு, அதே ‘டயர் நக்கி’களோடு இணைந்து பிரச்சாரத்துக்கு வர உங்களுக்கு வெட்கமாக இல்லையா என்று என்னைப் போன்ற வாக்காளர்கள் கேட்கும் கேள்விக்கு உங்கள் பதில் என்ன ?
அதிகாரம் கைக்கெட்டியதும், அதிகார போதையில் திசைமாறி தறிகெட்டுப் போகும் பல இயக்கங்களைப் போல நீங்களும் மாறிப் போனது காலத்தின் கோலமே. அதிமுக–பிஜேபியோடு நீங்கள் வைத்துள்ள 2019க்கான கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. களத்தில் உள்ள உங்கள் தொண்டர்களே சொல்வார்கள். கூச்ச நாச்சமின்றி, அதிகாரத்துக்காகவும், பணத்துக்காகவும், நீங்கள் மாறி மாறி கூட்டணி வைத்தால், அப்பாவி மக்கள் உங்களை ஆதரிப்பார்கள் என்ற உங்கள் நம்பிக்கை பொய்த்துப் போகும் என்பதே எனது கணிப்பு.
மக்களை பல அரசியல் கட்சித் தலைவர்களைப் போல நீங்களும் முட்டாளாகத்தான் கருதுகிறீர்களா? ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை மே 23 உங்களுக்கு உணர்த்தும்.
நீங்கள் ஒருவேளை ஜெயித்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வாக்காளனாக சொல்வதற்குக் கூட என்னிடம் எதுவுமில்லை என்பது தான் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற மோசமான பலன்.
ஆனாலும்
2019 தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துகள்.
அன்புடன்
ஒரு பாமர வாக்காளன்.
இராமதாஸ் போன்ற நபர்களால் பாராளுமன்ற, ஓட்டு வங்கி ஜனநாயக அமைப்பின் மீதான நம்பிக்கை என்னை போன்ற மனிதனுக்கு தகர்ந்து போய்விட்டது. இப்போது எனக்கு நாம் தமிழர் கட்சி சீமானின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இவரின் செயல்பாடுகள் நாளைக்கு ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பிறகு தான் தெரியும். சீமானும் இப்படி மாறி விட்டால் பாராளுமன்ற தேர்தல் பாதையில் பயணிக்க முடியாது. மாவோயிஸ்டுகள் மட்டுமே நமது நம்பிக்கை நட்சத்திர மாக தென்படுவார்கள்.
அருமை, இதையேதான் நானும் நினைத்தேன்.
நீங்கள் ஒருவேளை ஜெயித்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு வாக்காளனாக சொல்வதற்குக் கூட என்னிடம் எதுவுமில்லை என்பது தான் இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் நீங்கள் பெற்ற மோசமான பலன்.