விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயரத்துவது, கொள்முதலைச் சீராக்குவது போன்றவற்றில் பாஜக சொன்னதைச் செய்யவில்லை.
மந்தமான சந்தை, தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, பணமதிபிழப்பு நடவடிக்கை என இதற்கு மத்தியில், நரேந்திர மோடி அரசு எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்று விவசாயத் துறையின் இன்னலாகும். இதில் போதாமையே மிஞ்சுகிறது.
அதனால்தான் 2016 முதல், எம்.எஸ்.சாமிநாதன் குழு அறிக்கை பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், பல்வேறு பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் அரசுக்கு எதிராகப் போராடிவருகின்றனர்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்துவது, பயிர் உற்பத்திக்கான குறைந்தபட்ச மானிய விலையை 1.5 மடங்காக உயர்த்துவது, கொள்முதல் அமைப்புகளை மேலும் செயல்திறன் மிக்கவையாக ஆக்குவது, உணவு உற்பத்தியில் மதிப்புக் கூட்டலை மேம்படுத்துவது ஆகிய வாக்குறுதிகளை அளித்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது.
ஆளும் கட்சி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எப்படி செயல்பட்டிருக்கிறது என Scroll.in ஆய்வு செய்கிறது:
விவசாயம்
- வாக்குறுதி: விவசாயம் தான் இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் இஞ்சின். அதுவே அதிக வேலை வாய்ப்பு அளிக்கும் துறையும் ஆகும். பாஜக, விவசாய வளர்ச்சிக்கு, விவசாயிகள் வருமானம் உயர்வதற்கு, கிராமப்புற வளர்ச்சிக்கு அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது.
உண்மை நிலை: பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று விவசாயிகள் வருமானத்தை 2022இல் இரண்டு மடங்காக உயர்த்துவதாகும். இது எப்படிச் சாத்தியமாகும் என்பதற்கான அறிக்கையை 2016இல் நபார்ட் வங்கி வெளியிட்டது. 2017இல் இது தொடர்பாக நிதி ஆயோக் தனது அறிக்கையை வெளியிட்டது. ஆனால் உண்மையில், 2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டில் விவசாய வருமான வளர்ச்சி கடந்த 14 ஆண்டுகளில் மிகவும் குறைவானதாக உள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் மார்ச்சில் செய்தி வெளியிட்டது. இரண்டாவது காலாண்டாகத் தொடர்ந்து இந்த நிலை என்றும் தெரிவித்திருந்தது. “உண்மையான அளவில், விவாசயம் மூலமான வளர்ச்சி மொத்த மதிப்பு வழக்கத்தைவிடக் குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
- வாக்குறுதி: விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் பொது முதலீடு அதிகரிப்பு.
உண்மை நிலை: விவசாயத்தில் அரசு முதலீடு 1980-81இல் 43.2 சதவீதத்தில் இருந்து 2016-17இல் அது 18.8 சதவீதமாகக் குறைந்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.
- வாக்குறுதி: உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் 50 சதவீத லாபத்தை உறுதி செய்வது, விவசாய உள்ளீடு செலவுகள் குறைவது, கடன் வசதி ஆகியவை மூலம் விவசாயத்தில் லாபத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பது. விவசாயம் மற்றும் அதிக மகசூல் விதைகளுக்கான நவீன தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது, விவசாயத்துடன் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை இணைப்பது.
தற்போதைய நிலை: 2018-’19 பட்ஜெட்டில், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறைந்தபட்ச ஆதரவு விலை 1.5 மடங்கு உயர்த்தப்படும் என அறிவித்தார். மத்திய அரசு ஒரு மாதம் கழித்து 2018 ஜூலையில் கரீஃப் பயிருக்கான விலையை அறிவித்தது. இருப்பினும், விலை A2+FL எனும் சூத்திரத்தின்படி உயர்த்தப்பட்டது. இந்த முறை குடும்ப உழைப்பு மற்றும் விவசாய இடுபொருட்கள் ஆகியவற்றுக்கான உற்பத்திச் செலவை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது. ஆனால், C2 என்னும் சூத்திரத்தின் அடிப்படையிலான விலை நிர்ணயம் என்பது இதைவிட அதிகம். இது A2+FL அடிப்படியிலான விலையுடன் நிலத்தின் வாடகை மதிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை சி2 அடிப்படையில் அமைய வேண்டும் என விவசாயிகள் கோரிவருகின்றனர்.
- வாக்குறுதி: குறைந்த நீர்ப் பாசன உத்திகளை அறிமுகம் செய்து பிரபலமாக்கி, நீர் ஆதாரங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது.
தற்போதைய நிலை: பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா, 2015இல் துவக்கப்பட்டது. மாநிலங்களின் ஒத்துழைப்புடன் ஒட்டுமொத்த பாசனப் பரப்பைச் சீராக்கும் நோக்கத்துடன், விவசாயத் துறை, கிராமப்புற மேம்பாடு நீர் வளத்துறை ஆகிய அமைச்சகங்களின் கீழ் இருந்த மூன்று திட்டங்கள் ஒன்றிணைக்கப்பட்டு இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. 2017-18 பொருளாதார ஆய்வறிக்கை, அந்த ஆண்டு மொத்த பயிர்ப் பரப்பில் நிகர பாசனப் பரப்பு 34.5 சதவீதம் என அறிவித்தது. நுண் பாசனத் திட்டத்தின் கீழ், 2015-16 முதல் மத்திய அரசு தனது ஆண்டு இலக்கை அடைந்தது. ஆனால், பரப்பு விரிவாக்கத்திற்கு 78 சதவீதம் பொறுப்பாகும் ஐந்து மாநிலங்களின் கூடுதல் செயல்பாடே இதற்குக் காரணமாகும்.
- வாக்குறுதி: மண் ஆய்வுக்கு ஏற்பப் பயிர்த் திட்டமிடலை அறிமுகம் செய்வது, நடமாடும் மண் ஆய்வுக் கூடங்களை அமைப்பது.
தற்போதைய நிலை: 2015 பிப்ரவரியில், விவசாயிகள் மண்ணின் தரத்தை அறிவதற்கான மண் ஆரோக்கிய அட்டை திட்டத்தை அறிமுகம் செய்தது. விவசாயிகள் இதன் அடிப்படையில், உரங்கள் தொடர்பான தகவல் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ளலாம். 2017 மே 1ஆம் தேதி முதல், அரசு 1.98 மண் மாதிரிகளைப் பரிசோதனை செய்து, 6.73 கோடி விவசாயிகளுக்கு மண் ஆரோக்கிய அட்டை விநியோகம் செய்துள்ளதாக 2018 டிசம்பர் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தில் பல்வேறு அமைப்பு ரீதியான பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, ஒவ்வொரு மண் ஆரோக்கிய அட்டையும், 2.5 ஏக்கர் பாசன நிலம் மற்றும் 10 ஏக்கர் பாசனம் செய்யப்படாத நிலத்திலிருந்து சோதனை மாதிரி எடுக்கிறது. இந்தியாவில் சராசரி நில உரிமை 2 ஏக்கர். எனவே பரிசோதிக்கப்பட்ட மாதிரி என்பது கிரிட்டில் உள்ள அனைத்து நிலங்களுக்குமான பிரதிநித்துவமாக இருக்க முடியாது. மேலும் தொடர்ச்சியாகச் சோதனைகள் மேற்கொள்ளப் போதுமான மண் பரிசோதனை நிலையங்கள் இல்லை என ஸ்க்ரால் 2017இல் கண்டறிந்துள்ளது. சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகத்தில் ஆய்வு, இந்த அட்டையில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல்களை விவசாயிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் அதன் அடிப்படையில் முடிவு எடுக்க முடிவெடுக்க அதிக வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.
- வாக்குறுதி: பூச்சிக்கொல்லி நிர்வாகம் மற்றும் கட்டுப்பாட்டைச் சீரமைப்பது.
தற்போதைய நிலை: பருத்தி விவசாயிகளில் பெரும்பாலானோர் மகராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள், 2017ன் பிற்பகுதியில் ஆபத்தான பூச்சிக்கொல்லியை சுவாசித்ததால் சிலர் இறந்தனர். தேசிய அளவில் இது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் தவறான கொள்கையே ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் தடையில்லாமல் கிடைக்கக் காரணம் என்பது ஸ்க்ரால் விசாரணையில் தெரிய வந்தது. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட, ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் 99 பூச்சிக்கொல்லிகளில் 66ஐ ஆய்வு செய்ய அனுபம் வர்மா தலைமையில் மத்திய அரசு 2015இல் குழு அமைத்தது. வர்மா குழு அறிக்கை அடிப்படையில் 2016 டிசம்பரில் தடை உத்தரவுக்கான வரைவை உருவாக்கியது. பிறகு 2017 மார்ச்சில் ஆட்சேபணைகள், ஆலோசனைகளைப் பரிசீலிக்க இன்னொரு குழு அமைத்தது. புதிய குழுவின் தலைவர் அறிக்கை அளிக்காமலேயே 2017 ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். 2 மாதங்கள் கழித்து குழு மாற்றி அமைக்கப்பட்டது. இறுதியாக 2018 பிப்ரவரியில் 18 நச்சுப் பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்தது. ஆனால் விவசாயிகள் மரணத்திற்குக் காரணமானவை இதில் இடம்பெறவில்லை.
- வாக்குறுதி: இதுவரை பேச்சளவில் மட்டுமே இருக்கும் உணவு பதப்படுத்தும் துறையை அமைக்க ஊக்கம் அளிப்பது, செயல்படுத்துவது. இது விவசாயிகளுக்கு அதிக வருமானம் அளித்து வேலைவாய்ப்பை உருவாக்கும். அதிக மதிப்பு கொண்ட, ஏற்றுமதி தரத்திலான, வாக்குவம் வசதி கொண்ட பதப்படுத்தும் வசதிகள் கொண்ட விவசாய உணவு பதப்படுத்தும் தொகுப்புகளை அமைப்பது.
தற்போதைய நிலை: உணவு பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியில் தொகுப்புகளை உருவாக்குவதற்கான அம்சங்கள் கொண்ட விவசாய ஏற்றுமதி கொள்கை 2018 டிசம்பரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இன்னமும் பேச்சளவில்தான் இருக்கிறது.
- வாக்குறுதி: இந்திய இயற்கை வேளாண்மை மற்றும் உர கழகத்தை அமைப்பது. தற்போதைய நிலை: பரம்பராகத் கிரிஷி விகாஸ் யோஜானா 2019 ல் அறிவிக்கப்பட்டது. 2019 பிப்ரவரியில் 2015-16 முதல் 2017-18 வரை 11,831 இயற்கை வேளாண்மைத் தொகுப்புகள் (ஒவ்வொன்றும் 500 முதல் 1,000 ஹெக்டேர் கொண்டவை) உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது. இந்தியா முழுவதும் மேலும் 20,000 தொகுப்புகள் 2018 -19இல் உருவாக்கப்ப்ட்டன. இந்தத் திட்டம் துவங்கியது முதல் ரூ.800 கோடி வழங்கப்பட்டுள்ளது. தொகையில் பெரும்பகுதி, உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம். ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செலவிடப்பட்டுள்ளன. இந்தியா உலகிலேயே அதிக இயற்கை விவசாயிகளைக் கொண்டுள்ள நிலையில், அவர்களில் பலர் வரம்பு கொண்ட சந்தை, அதிக உற்பத்தி செலவு, குழப்பமான சான்றிதழ் முறை ஆகிய பிரச்சினைகளைக் கொண்டிருப்பதாக டவுன் டூ எர்த் பத்திரிகை தெரிவிக்கிறது.
- வாக்குறுதி: எதிர்பாரா இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்வதற்கான பயிர் காப்பீடு திட்டம்.
தற்போதைய நிலை: பிரதம மந்திரி பசல் பீமா யோஜானா, ஏற்கனவே இருந்த பல திட்டங்களுக்கு பதிலாக உருவாக்கப்பட்டது. இந்தத் துறையில் தனியார் நிறுவனங்களை இது அனுமதித்தது. ஆனால் இந்நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று போட்டி போடாத வகையில் தமக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் ஏகபோகம் கொண்டவையாக அமைந்துள்ளன. பயிர்க் காப்பீடு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதால், கடன் வழங்கல் குறைந்து, பதிவுகளும் குறைந்துள்ளது.
- வாக்குறுதி: கிராமப்புறக் கடன் வசதியை விரிவாக்கி, வலுப்படுத்தல்;
தற்போதைய நிலை: கடந்த 5 ஆண்டுகளில் கிராமப்புற வங்கிகளின் கிளைகள் எண்ணிக்கையும் வர்த்தகப் பிரதிநிதிகள் எண்ணிக்கையும் குறைந்துள்ளன. விவசாயத்துறைக்கான கடன் வழங்கலை ஊக்குவிக்க, 2016 ஏப்ரலில் ரிசர்வ் வங்கி, முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் வழங்கல் சான்றிதழ் முறையை அறிமுகம் செய்தது. 2018 மார்ச் வரை, வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகள் விவசாயக் கடனுக்கு அரசு நிர்ணயித்த ரூ.11,000 கோடி இலக்கை மிஞ்சியுள்ளன. கூட்டுறவு வங்கிகள் 94.6 சதவீத இலக்கை அடைந்துள்ளன.
- வாக்குறுதி: விவசாய உற்பத்திச் சந்தைக் குழு சட்டத்தைச் சீரமைப்பது.
தற்போதைய நிலை: விவசாயத் துறை அமைச்சகம் 2017இல் மாதிரி ஏ.பி.எம்.சி. சட்டத்தை அறிமுகம் செய்தது. மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம், ஒற்றைச் சாரளச் சந்தைக் கட்டணம், அறிவிக்கப்பட்ட சந்தைப் பகுதியைக் கைவிடுவது ஆகிய அம்சங்கள் இதில் இருந்தன. மாநிலங்கள் இந்தத் திட்டத்தை இன்னமும் முன்னெடுத்துச் செல்லவில்லை.
- வாக்குறுதி: பிராந்திய கிசான் டிவி சேனல்களை அமைப்பது.
தற்போதைய நிலை: விவசாயத்திற்கான 24 மணி நேர சேனலான கிசான் டிடி 2015இல் அமைக்கப்பட்டது. இந்த சேனல் பல நிகழ்ச்சிகளை வழங்கினாலும், பிராந்திய மொழி சேனல்கள் இல்லை.
- வாக்குறுதி: கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை.
தற்போதைய நிலை: மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் வறுமையை ஒழிப்பதில் முக்கியமாக விளங்குகிறது. ஆனால் இந்தத் திட்டத்திற்கான நிதி 2011 க்கு பிறகு அதிகம் உயரவில்லை என தி இந்து நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. தேவை மற்றும் வேலை உருவாக்கத்திற்கான இடைவெளி ரூ.12,000 கோடி அளவில் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மாநிலங்களுக்கு சுமையாக அமைந்து, 2019-20 பட்ஜெட்டை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்குறுதி: மண் வளம், உற்பத்தி மற்றும் மனிதர்கள் மீதான நீண்ட கால பாதிப்பு குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு இல்லாமல் மரபணு மாற்ற உணவுகள் அனுமதிக்கப்படாது.
தற்போதைய நிலை: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சான்றிதழ் ஆணையம் இதுவரை இந்தியாவில் மரபணு மாற்று உணவை அனுமதிக்கவில்லை. இந்தியாவில் மரபணு மாற்று உணவு அனுமதிக்கப்படவில்லை என 2017 செப்டபரிம் இந்த ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தாலும், 2017 டிசம்பரில் மரபணு மாற்று சோயா எண்ணெய் மற்றும் கேனோலா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக டவுன் டூ எர்த் இதழ் தெரிவிக்கிறது.
- வாக்குறுதி: நாட்டின் உணவு உற்பத்தி இலக்கையும் பொருளாதார இலக்குகளையும் மனதில் கொண்டு, விவசாயிகள் நலனைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் பயிர் செய்ய முடியாத நிலத்தைக் கையகப்படுத்தி மேம்படுத்துவதற்கான தேசிய நிலப் பயன்பாடு கொள்கையை ஏற்பது.
தற்போதைய நிலை: விவசாயத் துறை அமைச்சகம், மாதிரி தேசிய நிலப் பயன்பாடு கொள்கையை 2015இல் அறிமுகம் செய்தது. இதில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், நில உரிமைகள் தொடர்பாக மற்ற முக்கிய நடவடிக்கைகள் நிகழ்ந்துள்ளன. 2014இல் பாஜக அரசு பதவிக்கு வந்தவுடன், அது முதலில் கொண்டுவந்த சட்டங்களில் ஒன்று, நில கையகப்படுத்தல்,மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தலுக்கான நியாயமான இழப்பீடு 2013 சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கான சட்டத் திருத்தமாகும். இந்தச் சட்டத் திருத்தத்தை மூன்று முறை புதுப்பித்த பிறகு 2015 ஆகஸ்ட்டில் இது காலவதியாக மத்திய அரசு அனுமதித்தது. பரவலாக எழுந்த கடும் விமர்சனம் காரணமாக இதைக் கைவிட்டது. இந்தச் சட்டத்திற்கான திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை. எனினும் தேசியச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்து, அதிக நிலத்தைக் கையகப்படுத்திக்கொள்ள அதிகாரம் அளிக்கும் திருத்தங்களை மாநில அரசுகள் தக்க வைத்துக்கொண்டன.
விலைவாசி உயர்வு
- வாக்குறுதி: பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தையைத் தடுக்கக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்; சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
தற்போதைய நிலை: இத்தகைய நீதிமன்றம் எதுவும் இல்லை.
- வாக்குறுதி: விலை நிலைத்தன்மைக்கான நிதி ஏற்படுத்துவது.
தற்போதைய நிலை: பருப்பு வகைகளின் கையிருப்பைத் தக்கவைக்க 2014இல் விவசாய அமைச்சகத்தின் கீழ் விலை நிலைத்தன்மைக்கான நிதி உருவாக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு, இந்த நிதி நுகர்வோர் துறைக்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டு நிதியின் செலவு அதிகரித்தது. வர்த்தகர்கள் கூட்டால் பருப்பு விலை உயர்ந்தது.
- வாக்குறுதி: இந்திய உணவுக் கழகத்தின் செயல்பாடுகளைச் சிறந்த செயல்திறனுக்காக, கொள்முதல், சேமிப்பு மற்றும் விநியோகம் எனப் பிரிப்பது.
தற்போதைய நிலை: சாந்த குமார் குழு, உணவு கழகத்தை மறுசீரமைப்பது தொடர்பான அறிக்கையை 2015இல் தாக்கல் செய்தது. கொள்முதலை, அதற்கான உள்கட்டமைப்பு கொண்ட மாநிலங்களிடம் ஒப்படைக்கவும் சேமிப்புச் செயல்பாட்டைத் தனியார் துறையிடம் ஒப்படைக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. இரண்டும் நிகழவில்லை.
- வாக்குறுதி: தொழில்நுட்பம் மூலம், குறிப்பாக விவசாயிகளுக்கு, உற்பத்தி, விலை, இறக்குமதி, கையிருப்பு போன்றவை தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை அளிப்பது.
தற்போதைய நிலை: விலைகள், வானிலை, பயிர் காப்பீடு, ஆலோசனைகள் தொடர்பான தகவல்களை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்க அரசு பல மொபைல் செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. இருப்பினும் இவை அதிகம் பேரைச் சென்றடையவில்லை. உதாரணமாக, வானிலைத் தகவல்களை அளிக்கும் எம்கிசான் (mKisan) என்னும் செயலி காங்கிரஸ் ஆட்சியில் 2013இல் அறிமுகம் செய்யப்பட்டது. 2018 அறிக்கை, 2.5 கோடி விவசாயிகள் இதில் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கிறது. இந்தியாவில் 9 கோடி விவசாயிகள் உள்ளனர்.
- வாக்குறுதி: ஒற்றை தேசிய விவசாயச் சந்தையை உருவாக்குவது.
தற்போதைய நிலை: 2016 எப்ரலில் மோடி, இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான தேசிய விவசாயச் சந்தையான இ-என்.ஏ.எம்.ஐத் துவக்கினார். நாட்டின் 22,000 விவசாயச் சந்தைகளில் 585 சந்தைகள் மட்டுமே இதில் இணைந்துள்ளதாக விவசாயத் துறை இணையதளம் தெரிவிக்கிறது. இவற்றில் 7,500 விவசாய உற்பத்திச் சந்தைகளாகும். இந்த இணையச் சந்தையில் மாநிலங்களுக்கு இடையிலான முதல் விற்பனை 2019 ஜனவரியில் நிகழ்ந்தது.
மிருதுளா சாரி
நன்றி: ஸ்க்ரால்.இன்