அது 2001ஆம் ஆண்டு நவம்பர். பெங்களூருவில் தொடங்கப்பட்டிருந்த, தற்போது செயல்படாத, பிரீமியர் இன்ஃபோடெக் என்ற சிறிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இளம் நிர்வாகிகள் என்னை அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர். குஜராத்தின் அன்றைய முதலமைச்சர் நரேந்திர மோடி தொடங்கியிருந்த அற்புதமானதொரு மின்னணு நிர்வாகம் (இ-கவர்னன்ஸ்) பற்றி எனக்குச் சொல்ல விரும்புவதாகத் தெரிவித்தனர்.
“திரு மோடி துடிப்பு மிக்க முதலமைச்சர் சார். தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார். குஜராத்திகள் ஒவ்வொருவரும் ஸ்மார்ட் கார்டு வைத்திருக்க வேண்டும், அதில் பெயர், முகவரி, ரத்தப் பிரிவு போன்ற எல்லா விவரங்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இரண்டு மாதங்களில் இந்தத் திட்டத்தை நாங்கள் முடித்துக்கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எங்களுக்கு நேரமே போதவில்லை. குஜராத் அதிகாரிகள் இரவு பகலாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிலர் எங்களோடு வாரம் முழுக்க அதிகாலை 2-3 மணி வரையில்கூட இருக்கிறார்கள்,” என்று அந்த இளைஞர்கள் என்னிடம் மூச்சுவிடாமல் பேசினார்கள்.
அந்த நாட்களில் இ-கவர்னன்ஸ், ஸ்மார்ட் கார்டுகள் முதலியவை கவர்ச்சிகரமான சங்கதிகள். நரேந்திர மோடி 2001ல் முதலமைச்சரானார், உடனடியாக ஸ்மார்ட் கார்டு திட்டத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு தனிமனிதரைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் ஒரே தகவல்தளத்தில் இருக்கும், அதன் மூலம் குடிமக்களுக்கான சேவைகள் அனைத்தும் செயல்திறனோடு வழங்கப்படும்! இப்படியொரு கனவு குஜராத் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடந்தது. அதில், அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த 54 கரசேவகர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள். 2002 பிப்ரவரி 27இல் அது நடந்தது. இறந்தவர்களின் சடலங்களை அகமதாபாத் நகரின் சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டது. மறுநாள் குஜராத் கலவரங்களும் படுகொலைகளும் தொடங்கின. நாட்கணக்காக, சில இடங்களில் மாதக்கணக்காக வன்முறைகள் தொடர்ந்தன. ஊடகச் செய்திகளிலும் அதிகாரபூர்வ விசாரணை அறிக்கைகளிலும், வன்முறையாளர்கள் பட்டியல்களை வைத்துக்கொண்டு இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று தாக்கினார்கள் என்று தெரிவித்தன.
முஸ்லிம் மக்களின் வீட்டுக் கதவுகளில் பெருக்கல் குறி இடப்பட்டது. மறுநாள் அந்த வீடு தாக்கப்பட்டது. வீடுகளுக்கு உள்ளேயிருந்து மக்கள் வெளியே இழுத்துவரப்பட்டார்கள். வன்புணர்வு செய்யப்பட்டார்கள். தெருக்களில் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அல்லது வீடே தீக்கிரையாக்கப்பட்டு உள்ளே இருந்தவர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறாகிவிட்டது. நரேந்திர மோடி “ஹிந்து ஹிருதய் சாம்ராட்” (இந்து மனங்களின் சக்கரவர்த்தி) என அவதாரமெடுத்தார். உலக அளவில் எழுந்த கண்டனங்களைத் தொடர்ந்து அவர் “விகாஸ் புருஷ்” (வளர்ச்சி நாயகர்) அவதாரமெடுத்தார். நாட்டின் பிரதமர் பதவியிலும் அமர்ந்தார்.
முஸ்லிம் மக்களின் வீடுகளைக் குறிவைத்துத் தாக்குவதற்கு அந்த ஸ்மார்ட் கார்டு விவரங்கள் பயன்படுத்தப்பட்டனவா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்படிப்பட்ட தகவல் தொகுப்புகளைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களைக் கொன்றொழித்ததற்கு வரலாற்றில் ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. ஹிட்லரின் நாஜி அரசு யூத மக்களைக் கண்டறியவும், கொலை செய்யப்பட வேண்டியவர்ளாகவோ சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட வேண்டியவர்களாகவோ அடையாளப்படுத்தவும் ஹோலரித் அட்டைகளைப் பயன்படுத்தியது. அமெரிக்க வல்லுநர் ஹோலரித் உருவாக்கிய அந்த மின்காந்தத் துளை அட்டைகள்தான் தற்போதைய ஸ்மார்ட் கார்டுகளுக்கு முன்னோடி.
பிப்ரவரி 27, நாஜி வரலாற்றிலும் ஒரு முக்கியமான நாள். ஜெர்மனியின் அதிகாரங்கள் அனைத்தையும் ஹிட்லர் கைப்பற்றத் தொடங்கியது அந்தத் தேதியில்தான். பின்னாட்களில் பயங்கரங்கள் எல்லாவற்றிற்கும் முன்னுரையாக அமைந்தது அதுதான். 1933இல் நாஜிகள் அதிகாரத்திற்கு வந்தார்கள், நாஜி ஆட்சியின் தலைவரானார் ஹிட்லர். பிப்ரவரி 27 அன்று சில வன்முறையாளர்கள் ஜெர்மன் நாடாளுமன்றக் கட்டடமான ரெய்ஷ்டாக் மாளிகைக்குத் தீ வைத்தனர். அதற்குத் தீ வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான் என்று உடனே அறிவித்தார் ஹிட்லர். நாடு தழுவிய அவசர நிலை ஆட்சியை அவர் மக்கள் மீது திணித்தார். நாட்டின் எல்லா அதிகாரங்களையும் தன் கையில் எடுத்துக்கொண்டார். 60 லட்சம் யூதர்களை அழித்து, ஐரோப்பா கண்டத்தையே சின்னாபின்னப்படுத்திய ‘ஃபியுரர்’ பிறந்தது இப்படித்தான் (ஃபியூரர் என்பது தலைவர் அல்லது வழிகாட்டி என்பதற்கான பேச்சுவழக்குச் சொல். இங்கே ‘தல’ அல்லது ‘குருஜி’ என்பது போல).
இதை இப்போது நான் நினைவுகூர்வது எதற்காக? இப்போது ஏன் இது முக்கியத்துவம் பெறுகிறது? ஏனென்றால், ஒரு சுதந்திர நாடு என்ற முறையில் நாம் இன்று ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். நமது வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலைச் சந்திக்கிறோம். இந்தியாவின் ஆன்மாவுக்கான தேர்தல் இது. இந்தியாவின் எதிர்காலத்தை முடிவு செய்யப்போகும் தேர்தல் இது.
சோகம் என்னவென்றால், ‘மகாபாரதம்’ இதிகாசக் கதையில் வரும் கர்ணன் போர்க்களத்தில் தன் ஆற்றலுக்கான மந்திரத்தை மறந்தது போல, இந்தியாவின் மிக முக்கியமான, மிக வலிமையான மந்திரத்தை – மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சகிப்புடைமை அதாவது எல்லா வகையான மக்களுக்குமான ஏற்புடைமை என்ற மந்திரத்தை – மிக முக்கியமான தருணத்தில் நாம் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
அனுபவ மூப்புள்ள சிந்தனையாளர்கள், அறிவுத்தளத்தில் செயல்படுவோர், சாதாரண மக்கள் உள்படப் பலரும் யாருக்கு ஓட்டுப்போடுவது என்ற குழப்பத்தில் இருப்பதாகக் கூறுகிறார்கள். மோடிக்கும் மற்றவர்களுக்கும் இடையே, நிலையான அரசுக்கும் உறுதியற்ற கூட்டணிக்கும் இடையே, கடந்த ஐந்தாண்டுகளின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்கும் அதற்கு முந்தைய மூன்றாண்டுகளின் நம்பிக்கையற்ற நிலைமைகளுக்கும் இடையே, வாரிசுத் தலைமைக் கட்சிகளுக்கும் கட்டுப்பாடான தொண்டர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிக்கும் இடையே, மிக முக்கியமாக ஊழலுக்கும் மதவெறிக்கும் இடையே அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆயினும், என்னைப் பொறுத்தமட்டில் யாருக்கு ஓட்டு என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
வாரிசு அரசியல் என்பதெல்லாம் விரைவில் முடிந்துபோகும், அல்லது பிற்காலத்தில் முடிவுக்கு வந்துவிடும். தற்போதைய அரசாங்கமோ முந்தைய அரசாங்கமோ வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஒன்றும் கிரிமினல் குற்றமல்ல – அதற்கான அக்கறையுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குமானால். ஊழல் என்பது கட்சி வேறுபாடின்றிப் பரவியிருக்கிற பிரச்சினை, காலப்போக்கில் நமது ஜனநாயகமும் அதற்கான அமைப்புகளும் வலுப்பெற வலுப்பெற ஊழலை ஒழிக்க முடியும். சொல்லப்போனால் இந்தத் திசையில், 2005இல் கொண்டுவரப்பட்ட தகவல் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒருமுறை விதைத்துவிட்டால் பிறகு எளிதில் அழிக்க முடியாதது எதுவெனில் வகுப்புவாதமும் சக இந்தியர்கள் மீது வளர்க்கப்படும் வெறுப்பும்தான். இது மதப் பெரும்பான்மைவாதச் சித்தாந்தத்திலும் பெருவர்த்தக நிறுவனக் கோட்பாடுகளிலும் நம்பிக்கை உள்ள ஒரு கட்சியின் ஆட்சியோடு நெருக்கமாக இணைகிறபோது அபாயகரமானதாகிறது. நிச்சயமாக இதற்கு நான் ஓட்டுப்போட மாட்டேன்.
ஊழலை மையமாக வைத்து எதிர்க்கட்சிகள் மீது மோடி தொடுத்த தாக்குதல் சரியானதொரு தேர்தல் உத்தி. நாட்டின் ஒரே தீமை ஊழல்தான் என்றும், காங்கிரசும் இதர கட்சிகளும்தான் ஊழலின் ஊற்றுக்கண்கள் என்றும், ஊழலை ஒழிக்கிற ஆற்றல் படைத்த ஒரே அவதாரம் மோடிதான் என்றும் ஒரு எண்ணம் ஏற்படுத்தப்பட்டது. 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது அந்த எண்ணத்தை ஏற்படுத்துவதில் மோடி வெற்றிபெற்றார்.
முதலில், நாட்டின் ஒரே அபாயமாக அல்லது மிகப்பெரிய அபாயமாக ஊழலை மட்டும் சொல்வதற்கில்லை. ஆனால் வகுப்புவாதம் அப்படிப்பட்டதுதான். சமூக ஊடகங்கள் உட்பட, பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே பரப்பப்படும் வெறுப்பு அப்படிப்பட்டதுதான். கடந்த ஐந்தாண்டுகளில் யாரை வேண்டுமானாலும் கும்பலாகச் சென்று அடித்துக் கொல்லலாம் என்று சில கும்பல்கள் உறுத்தலே இல்லாமல் புறப்பட்டது அப்படிப்பட்டதுதான். பாசிசத்தை நோக்கி நாடு திரும்பியிருப்பது அப்படிப்பட்டதுதான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சாணக்கியன் இப்படி எழுதினார்: “தண்ணீரில் நீந்தும் மீன்கள் எப்போது தண்ணீர் குடிக்கின்றன என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. அதே போல, அரசாங்க அதிகாரிகள் எப்போது பொது நிதியை விழுங்குகிறார்கள் என்பதையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியாது.” ஆகவே, ஊழல் நீண்ட காலப் பிரச்சினை. பெருமைமிகு தொன்மைக்கால இந்தியாவில்கூட அது இருந்திருக்கிறது. அது ஏதோ, மோடியும் பாஜகவும் நம்மை நம்பவைக்க முயல்வது போல, இருபதாம் நூற்றாண்டில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆரம்பமானதல்ல. அந்தக் கட்சி இல்லாமல் போவதால் ஊழல் இல்லாமல் போகப்போவதில்லை.
ஊழல் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தாலும் அது கடந்த நூற்றாண்டுகளில் ஒருபோதும் நாட்டைக் கூறுபோட்டதில்லை. இந்தியாவை இரண்டாகப் பிளவுபடுத்தியது எதுவென்றால், 19ஆம் நூற்றாண்டில் திடுமெனத் தலைதூக்கிய வகுப்புவாதம்தான். இந்து, முஸ்லிம் ஆகிய இரண்டு மதங்களும் சார்ந்த வகுப்புவாதம்தான். அது அடுத்த சில பத்தாண்டுகளிலேயே இந்தியாவை இரண்டாகப் பிளவுபடுத்தியது.
ஊழல் ஊர்ந்து பரவுகிற பிரச்சினை என்றால், வகுப்புவாதம் வெடித்துப் பரவுகிற பிரச்சினை. வகுப்புவாதம் தனது அருவருப்பான தலையைத் தூக்குகிறபோது, எதிர்வினையாற்றுவதற்கு நேரம் இருப்பதில்லை. நாடு ஒரு வெறியாட்டத்திற்குள், ஒரு படுகொலைக் களத்திற்குள், ஒரு உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படுவதைத் தடுக்க முடிவதில்லை. இந்தியாவை உருவாக்கிய தலைவர்கள் கற்ற பாடம் இதுதான். காந்தியும் நேருவும் மௌலானா ஆஸாத்தும் மட்டுமல்ல, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவருடைய வழிவந்த சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்களும், காங்கிரஸ் இயக்கத்திற்குள் இருந்த வலதுசாரிகளும் கற்ற பாடம் அது. அந்தப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் தங்களுடைய கொள்கைகளை உருவாக்கினார்கள், இந்தியாவை வடிவமைத்தார்கள். இன்று நாம் கற்க வேண்டிய பாடமும் அதுதான்.
இது ஊழலைக் கண்டுகொள்ளாமல் விடச் சொல்லும் வாதமல்ல. மாறாக, அதை விடவும் தெளிவாகப் புலப்படுகிற, இன்று நம்மை அச்சுறுத்துகிற பேரபாயத்தை எதிர்கொள்கிறபோது சரியான கோணத்தில் ஊழல் பிரச்சினையைப் புரிந்துகொள்ளச் சொல்லும் வாதம்.
அதேவேளையில், பாஜகவும் அதன் தலைவர்களும் ஊழலே செய்யவில்லை என்று நாம் நம்ப வேண்டுமா என்ன? அவர்கள் கூட்டுக் களவு முதலாளித்துவத்தின் அரசியல் கூட்டாளிகள் அல்ல என்றும் எதிர்க்கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் மட்டுமே ஊழலில் திளைத்திருப்பதாகவும் நாம் நம்பிவிட வேண்டுமா என்ன? ஜிஎஸ்பிசி (குஜராத் அரசு பெட்ரோலியம் கழகம்) முறைகேடு, சஹாரா – பிர்லா டயரிக் குறிப்புகள், ரஃபேல் ஒப்பந்தம், விஜய் மல்லையா தில்லி விமான நிலையத்தின் முக்கியப் பிரமுகர்கள் வாயில் வழியாக (அவரைப் பிடிப்தற்கான ஆணையை நீர்த்துப்போக வைத்த பிறகு, 300 பெட்டிகளுடன்) தப்பிக்கவிட்ட விவகாரம், லலித், நீரவ் ஆகிய இரண்டு மோடிகள் வெளிநாட்டுக்குப் பறந்தது, ‘நமது அருமைச் சகோதரர் மெஹூல் இதோ இங்கேதான் அமர்ந்திருக்கிறார்’ என்று ஒரு நிகழ்ச்சியில் பிரதமரால் புகழ்ந்துரைக்கப்பட்ட வைர வியாபாரி மெஹூல் சோக்ஸ்கி (நீரவ் மோடி கூட்டாளி) தப்பித்துச் சென்றது, ஜனார்த்தன் ரெட்டி கனிமச் சுரங்க ஊழல் வழக்கை முடித்துக்கொள்வதாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது, தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள், 1976ஆம் ஆண்டிலிருந்து பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் வெளிநாடுகளிலிருந்து பெற்ற நன்கொடைகளுக்குக் கணக்குக் காட்டாமலிருப்பதற்குத் தோதாக வெளிநாட்டு நிதி முறைப்படுத்தல் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், ஊழல் தடுப்புச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் மாற்றங்கள், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரோடு சென்ற தனியார் நிறுவன முதலாளிகள் யார் என்று தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு மத்திய அரசு பதிலளிக்க மறுத்தது, தகவல் உரிமை அமைப்பை சட்டத்தையே சீர்குலைக்க மோடி அரசு முயன்றது ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் அம்பலமான பிறகும் பாஜகவும் அதன் தலைவர்களும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நம்புகிறவர்கள் இருப்பார்களானால், அவர்களிடம் ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ளலாம்: “பக்தி குருட்டுத்தனமானது.”
ஊழலில் ஈடுபடுவது காங்கிராசானாலும் சரி, பாஜகவானாலும் சரி, வேறு எந்தக் கட்சியானாலும் சரி, இயங்கிக்கொண்டிருக்கும் ஜனநாயக நாடாக நாம் இருக்கிற வரையில், பெரும்பாலான வடிவங்களில் ஊழலை ஒழித்துக்கட்டுவதை நோக்கி நாம் படிப்படியாக முன்னேற முடியும். ஆனால், அரசியல்வாதிகள் வெறுப்பைப் பரப்பவும், சமுதாயத்தைக் கூறுபோடவும், அவர்களது சொந்தப் படையாட்கள் வன்முறைகளில் ஈடுபடவும், சட்டத்தின் ஆட்சியைப் புறந்தள்ளவும் அனுமதிப்போமனால், அரசாங்கங்களும் பெரும் தனியார் நிறுவனங்களும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு இந்தியாவை பாசிசப் பாதையில் கொண்டுசெல்ல விடுவோமானால், ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை செத்துவிடும். ஊழலைத் தடுப்பதற்கான அமைப்புகளை ஜனநாயகத்தில் ஏற்படுத்த முடியும். ஆனால் மதவாத வெறுப்புணர்வை அதனால் தடுக்க முடியாது. பாசிசம் மேலோங்கிவிட்டால் ஜனநாயக அமைப்புகளால் தாக்குப்பிடிக்க முடியாது.
‘தீவார்’ என்ற இந்தித் திரைப்படத்தின் ஒரு காட்டசியில், பின்னணியில் ‘சாரே ஜஹான் கி அச்சா’ பாடலிசை ஒலிக்க, இரண்டு சகோதரர்களில் தம்பியாகிய ரவி, தனது அண்ணனாகிய விஜய்யிடம் சொல்வது நினைவுக்கு வருகிறது: “நான் போகிற பாதையில் ஒருவேளை மோசமான பின்விளைவுகள் ஏற்பட்டாலும் ஏற்படலாம், ஆனால் நீங்கள் போகிற பாதையில் நிச்சயமாக மோசமான பின்விளைவுகள்தான் ஏற்படும்.”
ஆகவே, எனது ஓட்டு முதலில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகவே. கர்ணனைப் போல நான் இந்த முக்கியமான தருணத்தில் மந்திரத்தை மறந்துவிட மாட்டேன்.
உங்கள் நிலைப்பாடு என்ன?
எஸ். ரகோத்தம்
(கட்டுரையாளர் ‘டெக்கான் ஹேரால்டு’ பத்திரிகையின் கருத்துப் பிரிவு ஆசிரியர்)
நன்றி: டெக்கான் ஹெரால்டு
தமிழில்: அ. குமரேசன்
ஆதார் அட்டையை வைத்து உபயோகமில்லாத (வருமானமில்லாத) பாமர மக்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வாய்ப்புகள் உண்டு.