நரேந்திர மோடியின் ஏமாற்றம் தரும் மற்றுமொரு நேர்காணலைக் காண நேர்ந்தது. இம்முறை நேர்காணல் செய்தவர் அர்னாப் கோஸ்வாமி. மோடியை யார் பேட்டி எடுக்கிறார்கள் என்பது பொருட்டே அல்ல; அவரிடம் முன்வைக்கப்படும் கேள்விகள்தான் விஷயமே என்பது மீண்டும் தெளிவுபடத் தெரிந்தது. ‘தி கேரவன்’ பத்திரிகைக்கு மோடி பேட்டியளிப்பது சாத்தியமில்லை என்பதால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள 10 கேள்விகளும் அவரிடம் கேட்கப்பட வேண்டியவை என நம்புகிறேன். ‘குஜராத் மாடல்’ வளர்ச்சி குறித்து கேட்பதற்கு மேலும் 10 கேள்விகள் இருந்தாலும், இப்போதைக்கு இந்தக் கேள்விகளுடன் தொடங்குவோம். மோடியோ அல்லது அவர் சார்பில் பேசுவோர் எவராயினும் பதில் அளிக்கலாம். நீங்கள் சொல்கிற பதிலில் இருந்து குறுக்கு கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதைத் தவிர்க்க வேண்டுமானால், எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க முன்வரலாம்.
கேள்வி 1: திரு மோடி, 2002 கலவரத்துக்காக எந்த நீதிமன்றமும் உங்களை குற்றவாளியாக அறிவிக்கவில்லை என்பது உண்மை எனும்போது, சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையிலும் எந்த ஒரு முதல்வரும் இத்தகையதொரு வழக்கில் ஒருபோதும் குற்றம்சாட்டப்படவில்லை என்பதும் உண்மையே. அசெளகரியமான சில நிஜங்களுக்கு பதில் இல்லாமல் போகலாம். கோத்ராவுக்குப் பிந்தைய கலவரங்களில் 697 முஸ்லிம்களும், 177 இந்துக்களும் கொல்லப்பட்டனர். அத்துடன், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 170 பேர் கொல்லப்பட்டனர். தெருக்களில் கூடிய இந்து மக்களின் கூட்டம், இச்சம்பவத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்களின் எண்ணிக்கையைவிட மிகவும் அதிகம். எனினும், போலீஸாரில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 170 பேரில் 93 நபர்கள் முஸ்லிம்கள். தெரிவுசெய்யப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளை வியக்கத்தக்க வகையில் உங்கள் போலீஸார் நிகழ்த்தியது எப்படி?
கேள்வி 2: உங்கள் உத்தரவுகளாலோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவரின் உத்தரவுகளாலோ இது நடக்காமல், போலீஸ் தன்னிச்சையாக மேற்கொண்ட நடவடிக்கையாகவே இப்போதைக்கு இதைக் கருதுவோம். அப்படியென்றால், ஒரு முதல்வர் என்ற வகையில், மதவாத வன்முறைமயமான போலீஸ் படையைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுப்பதுதானே முறையாக இருக்கும்? மாறாக, நீங்கள் என்ன செய்தீர்கள்? தங்களது மாவட்டங்களில் அதுபோன்ற மதக் கலவரங்கள் நடக்காமல் காத்துவந்த அப்போதைய பாவ்நகர் எஸ்.பி. ராகுல் ஷர்மா, கட்ச் எஸ்.பி. விவேக் ஸ்ரீவத்சவா போன்ற அதிகாரிகளை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்தீர்கள். போலீஸ் வாயிலாக மதக் கலவரத்தை நிகழ்த்தியவர்களாகக் குற்றம்சாட்டப்பட்ட மூத்த அதிகாரிகளுக்குத் தொடர்ந்து பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டன. திரு.மோடி, உங்களின் இத்தகைய செயல்பாடுகளின் உள்நோக்கம்தான் என்ன?
கேள்வி 3: 2002இல் மாயா கோட்லானி எம்.எல்.ஏ.வாக இருந்தபோது, அவர் தலைமை வகித்த 10,000 பேர் கொண்ட கும்பலால் 97 பேர் கொல்லப்பட்டனர். நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் ரீதியில் யாருக்கு அவர் நெருக்கமாக இருந்தார் என்பது முக்கியமல்ல. குஜராத் அரசில் அவரை அமைச்சராக்கியது நீங்கள்தானே. அந்த நேரத்தில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என்று நீங்கள் இன்றுவரை தற்காப்பு பதிலைச் சொல்கிறீர்கள். சரி, அந்த நேரத்தில் ஏன் அவருக்கு எதிராக வழக்குப் பதியவில்லை, திரு.மோடி? உங்களது போலீஸ் என்ன செய்துகொண்டிருந்தது? அவருக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகேனும் காவல் துறையிலுள்ள இந்தக் குறைபாடுகளை சரிசெய்ய ஏதேனும் நடவடிக்கை எடுத்தீர்களா?
கேள்வி 4: ஷாஹித் சித்திக்குக்கு 2012இல் நீங்கள் அளித்த பேட்டியில், “பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் முஸ்லிம்கள் கூட்டு சேர்ந்து, இந்திய முஸ்லிம்களின் உதவியுடன் இந்தியாவில் பதற்றத்தை உருவாக்குவதால்தான் இன்று நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்” என்றீர்கள். இப்படித்தான் முஸ்லிம்கள் குறித்து நீங்கள் பேசும் தொனியும் வெளிப்படுத்தும் குரலும் மறைமுகமாகவோ அல்லது மிகவும் நேரடியாகவும் தாக்குவதாக இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்களுடன் கரம் கோத்து இங்கே பிரச்சினைகளை ஏற்படுத்த இந்திய முஸ்லிம்கள் காத்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? தாங்கள் இந்தியர்கள் என்ற குடியுரிமையை அவர்கள் உங்களிடம் மெனெக்கெட்டு நிரூபிக்க வேண்டுமா?
கேள்வி 5: உலகெங்கும் இருக்கும் அனைத்து இந்துக்களுக்கும் இயற்கை இல்லமாகவே இந்தியா திகழும் என்று உங்களது கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, ‘இந்துத்துவம் என்பது ஓர் மதம் அல்ல; அது ஓர் வாழ்க்கை முறை’ என்று சொன்னீர்கள். அப்படியென்றால், மற்ற பிரிவினரையும் அது உள்ளடக்கியதுதானே. ஓர் இந்தியக் குடிமகனாக, இந்த வாழ்க்கை முறை என்பது எனது வாழ்க்கை முறை அல்ல என்று நான் கருதுகிறேன். எனவே, இந்தியா எனக்கு இயற்கையான இல்லம் இல்லை என்று அர்த்தமாகிவிடுமா?
கேள்வி 6: சீக்கியர்களும் இந்து வாழ்க்கை முறையைத்தான் பின்பற்றுகிறார்கள் என்னும் உங்களது பார்வையை உங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகாலி தளத்தினர் அங்கீகரிக்கிறார்களா? கடுமையான எதிர்வினைகளை அல்லது பின் விளைவுகளைத் தோற்றுவிக்காமல், அகாலிதளம் கட்சியினரையே உங்களால் இந்தக் கருத்தை ஏற்கவைக்க முடியாத சூழலில், பிறரை விலக்கும் உங்கள் கருத்தால் முஸ்லிம்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் அச்சம் கொள்ளத்தானே செய்வார்கள்?
கேள்வி 7: ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் ஊழல் மிக முக்கியப் பிரச்சினையாக தேர்தலில் முன்னிறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நீங்கள் செய்தது என்ன? (குஜராத்தில்) ஒரு லோக்ஆயுக்தாவை நியமிக்கப் பத்து ஆண்டுகளை எடுத்துக்கொண்டது ஏன்? அதுவும் ஒரு தன்னிச்சையான அமைப்பாக இயங்குவதற்கான வாய்ப்பு ஏதுமில்லாத வகையில், நீர்த்துப்போன சட்டத்தின் கீழ் அதைக் கொண்டுவந்தது ஏன்? சுதந்திரமில்லாமல் இயங்கக்கூடிய இதுபோன்றதொரு ஊழல் ஒழிப்பு முன்னெடுப்புகளைத்தான் மத்தியிலும் கொண்டுவர விரும்பினீர்களா?
கேள்வி 8: குஜராத்தில் 2012ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றபோது, மாநிலத்தின் உள்துறை, தொழில்துறை, தகவல் துறை, கப்பல் போக்குவரத்து, பொது நிர்வாகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், நர்மதா மற்றும் அனைத்துக் கொள்கை முடிவுகள் தொடர்பான துறைகளை நீங்களே வைத்துக்கொண்டீர்கள். வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கவே இல்லை. திரு.மோடி, வேறெந்த மாநிலத்திலும் இப்படி அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கவில்லை. நீங்கள் மற்ற அரசியல்வாதிகளை நம்புவதில்லையா? இந்தத் துறைகளை கையாளும் அளவுக்கு குஜராத் பாஜகவில் வேறு யாருமே இல்லையா? இப்படித்தான் இந்த நாட்டை நீங்கள் ஆட்சி செய்வீர்களா?
கேள்வி 9: இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் மிதமிஞ்சிய பங்கை வகிக்கும் அமித் ஷா மட்டுமே நீங்கள் நம்பும் ஒரே மனிதர். அவரது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம். ஓர் இளம் பெண்ணையும், மூன்று ஆண்களையும் சுட்டுக் கொன்றதாக போலீஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, குஜராத் உள்துறை அமைச்சகத்தை கவனித்துவந்தவர் அமித் ஷா. முறையான அனுமதியின்றி ஒரு பெண்ணைக் கடுமையான கண்காணிப்பின்கீழ் கொண்டுவந்ததாகவும் போலீஸ் மீது குற்றச்சாட்டு எழுந்ததே, அது கவலைக்குரியது இல்லையா? அமித் ஷா மீது நீங்கள் கொண்டிருக்கும் எல்லையில்லா நம்பிக்கை சொல்லும் சேதிதான் என்ன? நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்னும் உங்கள் கருத்து மாயா கோட்னானி வழக்கில் உங்களுடைய ஆட்சேபத்துக்குரிய செயல்பாட்டையே பிரதிபலிக்கிறது அல்லவா?
கேள்வி 10: நர்மதாவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில், உங்கள் மாநிலத்தின் கால்வாய் கட்டுமானத் திட்டம் மகத்தான தோல்வி அடைந்ததற்கு நீங்கள்தானே நேரடிப் பொறுப்பு? அந்தத் திட்டம் 2010ஆம் ஆண்டுக்குள் நிறைவடைந்திருக்க வேண்டுமல்லவா? குஜராத்துக்குக் கிடைக்கின்ற சர்தார் சரோவர் நீரின் 90 சதவீதம் இன்னமும் கடலில்தான் கலக்கிறது அல்லவா? இன்னும் 70 சதவீத திட்டம் முடிக்கப்படாமல் இருக்கிறது அல்லவா? விவசாயிகளுக்கு நீரை எடுத்துச் செல்வதற்கான கால்வாய்களை இன்னமும் கட்டி முடிக்காததுதான் இதற்குப் பெருமளவு காரணம் அல்லவா? கார்ப்பரேட் நிறுவனத்துக்கு சில ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்துவிடுவது சுலபம். ஆனால், உங்கள் மாநிலத்தின் மிகப் பெரிய கட்டுமானத் திட்டத்தை நிறைவேற்றுவது அப்படி அல்ல. ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத அளவுக்குச் செலவிடப்பட்டுள்ள சர்தார் சரோவர் திட்டத்தின் மாபெரும் தோல்விக்கு நீங்கள்தானே பொறுப்பு?
ஹர்தோஷ் சிங் பால்
நன்றி: கேரவான்
Request to write what you think than translating something from Scroll.in or caravanMagazine.com or anyother sites.