பொருளாதாரம்
2013-14ஆம் ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில், பொருளாதார மறுமலர்ச்சியையும், வளர்ச்சியையும் கொண்டு வருவதாகவும், பெருகிவரும் பணியாளர் எண்ணிக்கைக்கு ஈடான லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் மோடி எதிர்பார்ப்புகளை உருவாக்கினார். புதிய அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது. புழக்கத்தில் இருக்கும் 86% பணத்தை பணமதிப்பிழக்கச் செய்ய வேண்டும் என்ற தன்னிச்சையான முடிவை அவர் எடுக்கும் வரையிலான முதல் இரண்டு ஆண்டுகள் புதிய திட்டங்களால் நிறைந்திருந்தன. அவருடைய ஆட்சிக் காலம் முடியும் நிலையில், பல வெற்றிகளும், மிகப் பெரிய தோல்விகளும் உள்ளன.
சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி)
ஜிஎஸ்டி என்பது பல மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரிவிதிப்புகளை நீக்கிவிட்டு வந்த மறைமுகமான வரி. இது, நடைமுறையில் இருந்த வரிகளை, பல அடுக்கு நிலைகளில் சிக்கலான ஒரு வரி அமைப்பாக மாற்றிவிட்டது. இந்தியாவின் 29 மாநிலங்களையும் ஒரே வரி விகிதங்களைக் கொண்ட ஒரு சந்தையாக மாற்றிவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் இந்த ஜிஎஸ்டி சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால், அதைக் கொண்டு வந்தது தேசிய ஜனநாயகக் கூட்டணிதான்.
மாநிலங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளும், மத்திய அரசுக்கு மூன்றில் ஒரு பங்கு வாக்குகளும் கொண்டு உருவாக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில், கூட்டுறவுக் கூட்டாட்சிக்கான அரிதான ஒரு எடுத்துக்காட்டு. அதை நடைமுறைப்படுத்தியதில்தான் அரசாங்கம் தடுமாறிவிட்டது. ஐந்து வரி அடுக்குகள், வரித்தாக்கல் செய்வதில் மிகவும் சிக்கலான செயல்முறை ஆகியவை, பணமதிப்பிழப்பிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த சிறு வர்த்தகர்கள் மற்றும் வணிகர்களைத் தனிமைப்படுத்தி, அமைப்பையே சிக்கலாக்கிவிட்டதாக அரசு உணரத் தொடங்கிவிட்டது.
தற்போது அரசும் ஜிஎஸ்டி கவுன்சிலும் பொறுப்புடன் நடந்துகொண்டு, பல பிரச்சினைகளைத் தீர்ப்பதோடு, வரி அடுக்குகளையும் செயல்முறைகளையும் எளிமைப்படுத்தியுள்ளது. அது தற்போதும் நடந்துகொண்டிருக்கும் ஒரு வேலை.
புதிய திவாலா சட்டம் (Insolvency and Bankruptcy Code)
மிகப் பெரிய தொகையிலான வராக்கடனின் சுமையுடனேயே அரசாங்கம் வங்கி அமைப்பைப் பெற்றது. கடன் கொடுப்பதில் தவறான முடிவுகள் எடுப்பது, கண்காணிப்புக் குறைபாடு, வங்கி ஊழியர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, சுழற்சி முறையில் வர்த்தகங்களின் வீழ்ச்சி ஆகியவை உள்ளிட்ட பல காரணங்களால், வங்கிகளின் செயல்பாட்டில் இல்லாத சொத்துக்களின் (non-performing assets (NPAs)) அளவு அதிகரித்துள்ளது. இந்த NPAக்களை நேரடியாகத் தாக்கியதில், புதிய திவாலா சட்டம் மாற்றம் கொண்டுவருவதாக இருந்தது. இந்தச் சட்டம், கடன் கொடுத்தவரோ அல்லது பெற்றவரோ, திவாலா விவகாரங்களை முன்னெடுப்பதோடு, கால வரையறைக்குட்பட்ட முடிவுகளை எடுக்க தேசிய நிறுவனச் சட்டம் தீர்ப்பாயத்திற்குச் செல்ல அனுமதிக்கிறது. இது ஆரம்ப நிலையாக இருந்தாலும், பெரிய அளவிலான வங்கி NPAக்களைப் பெற்றிருந்தாலும், லாபகரமான சொத்துக்களையும் கொண்டிருக்கும் திவாலான நிறுவனங்களை வாகிகிக்கொள்வதில் உள்ளூர் மற்றும் உலகளாவிய வணிக நிறுவனங்கள், ஆர்வம் காண்பிப்பது IBC சட்டத்தின் வெற்றி. இது வங்கிகளின் நலனை மீட்டெடுப்பதோடு, மீண்டும் செயல்திறனுள்ள திட்டங்களுக்கு கடன் கொடுக்கத் தொடங்க வேண்டும். 2017-18இல் IBC மூலமாக, வங்கிகள் 1.1 லட்சம் கோடியைத் திரும்பப் பெற்றிருக்கின்றன.
தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம்
தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் ஏப்ரல் 2018இல் நடைமுறைக்கு வந்தது. கடந்த சில ஆண்டுகளில் வங்கிகளால் அறிவிக்கப்பட்ட பெரும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், அதுவும் 30க்கும் அதிகமானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு, ஊழல் / மோசடி வழக்குகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், சட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் நாட்டை விட்டு ஓடுவதால் இந்தச் சட்டம் தேவைப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ், பொருளாதாரக் குற்றம் செய்த ஒருவர் நாட்டைவிட்டு ஓடினால், அவர் ஒரு ‘தப்பியோடிய பொருளாதார குற்றவாளி’ என்று அறிவிக்கப்பட்டு அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்யலாம். நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகியோர் பொருளாதாரக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய கலைச் சேகரிப்புகள், வாகனங்கள் உட்பட அனைத்து சொத்துக்களும், ஏலத்திற்கு விடப்பட்டு, கடனின் ஒரு பகுதியைக் கழிக்கலாம்.
பணமதிப்பிழப்பு
2016, நவம்பர் 8 அன்று, இந்தியப் பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருந்த ஏறத்தாழ 86% பணத்தை நரேந்திர மோடி காலாவதியாக்கிவிட்டார். ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் என்ற இரு அடுத்தடுத்த ஆர்.பி.ஐ. கவர்னர்களின் ஆலோசனைக்கு எதிராக இம்முடிவை அவர் எடுத்தார். பொருளாதாரத்தில் நிறைய பணம் புழக்கத்தில் இருக்கிறதென்னும் (ஜி.டி.பி.யில் 12%) தவறான அனுமானத்தின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நீக்கப்பட்ட ரொக்கப் பணமான ரூ. 500 மற்றும் ரூ. 1000, உயர்மதிப்பு நோட்டுக்களுக்குப் பதிலாக, மோடி ரூ. 2000 நோட்டுக்களை அறிமுகப்படுத்தினார்!; இந்த முடிவு நம் அமைப்பில் உள்ள கள்ள நோட்டுக்களையும் கறுப்புப் பணத்தையும் நீக்கிவிடுமென்பது இதன் நோக்கம்.
ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். நம் அமைப்பிலுள்ள 99.7% பணம் வங்கிகளுக்குள் வந்துவிட்டது, எனவே ‘கறுப்புப் பணம்’ இல்லை. அதுவும் அரசாங்கம் எதிர்பார்த்த ரூ. 3 லட்சம் கோடி கறுப்புப் பணம் இல்லை. எல்லாமே ‘கணக்கில்’ வந்துவிட்டன.
மறுபுறம், லட்சக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டன. இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தரவுகள் அடிப்படையில், பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு அடுத்த ஆண்டில் 3.5 லட்சம் வேலைகள் இழக்கப்பட்டன. இன்றுவரை ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீண்டு வரவே இல்லை. கட்டுமானத் துறை சரிந்ததாலும், விதைப்புப் பருவத்திற்கு முன்பு இத்திட்டம் வந்ததால் விவசாயிகள் அதிகமாக அடிபட்டதாலும், இப்போதும் வேலைவாய்ப்புகள் இல்லாட நிலை உள்ளது.
ஒரு ஜனநாயகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஒருவரால் எடுக்கப்பட்ட ஆகப் பெரிய தன்னிச்சையான முடிவுகளில் ஒன்றாக பணமதிப்பிழப்பு உள்ளது.
விவசாய நெருக்கடி
எப்படிப் பார்த்தாலும், மோடியின் ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய நெருக்கடி மோசமாகியுள்ளது. ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில், வேம்பு கலந்த யூரியா, மண் ஆரோக்கிய அட்டைகள் மற்றும் பயிர் காப்பீடு என்று புதிய அலோசனைகள் கொண்டுவரப்பட்டாலும், இந்த ஒட்டு வேலைகள் பலிக்கவில்லை. ஆட்சியின் நான்காம் ஆண்டில்தான், விவசாய நெருக்கடியைப் போக்கத் தன்னால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்பதை அரசு உணர்ந்தது. கறுப்புப் பண ஒழிப்பு, கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளால் உத்தரப் பிரதேச தேர்தலில் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், இந்தி பேசும் மாநிலங்களில் அதிகமான உதவித் தொகை வேண்டுமென்று, தேர்தலை ஒட்டி டிசம்பர் 2018இல் கேட்கத் தொடங்கினர். அப்போது நடந்த மாநிலத் தேர்தல்களில் தோல்வியடைந்ததை ஒட்டி, பிரதமர் – கிசான் திட்டத்தை, முன்வைத்தனர். இதன்படி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இது.
இந்த ஐந்து ஆண்டுகளில், வேளாண் பொருட்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்ய வேண்டியது உட்பட, எந்த ஒரு மாற்றத்தையும் செய்யத் தவறிவிட்டனர். விளைவாக, 2019ஆம் ஆண்டுவாக்கில் (இப்போது இது 2022ஆக மாறியிருக்கிறது), விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்கு, விவசாயிகளுக்கு வெறும் கனவாகவே உள்ளது.
உள்கட்டமைப்பு
அரசாங்கத்தின் சாதனைகளில் இது ஒன்றுதான் பிரகாசமான புள்ளி. நெடுஞ்சாலைக் கட்டுமானத்தைத் துரிதப்படுத்துதல், புதிய பாரதமாலா மற்றும் சாகர்மாலா ஆகிய திட்டங்கள், பிராந்திய விமான நிலையங்களையும், விமான இணைப்புகளையும் கட்டமைத்தல் அல்லது மீண்டும் உயிர்ப்பித்தல், ரயில் சேவையை விரிவுபடுத்துதல், நவீனமயமாக்கல் ஆகியவற்றைத் தங்கள் சாதனைகளாக மோடி அரசு சொல்லிக்கொள்ளலாம். நிலக்கரி மற்றும் மின் துறைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றிலும் இந்த அரசு வெற்றிபெற்றிருக்கிறது.
ஆனால், “70 ஆண்டுகளில் காங்கிரஸ் எதுவுமே செய்திராத நிலையில்” இந்தியா முழுவதும் மின் இணைப்புகள் கொடுத்துள்ளதாகச் சொல்லுவது மிகைப்படுத்துதல். இந்தியாவில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. அவற்றில் கடைசி 18,000 கிராமங்களையே மோடி அரசு மின்மயமாக்கி உள்ளது.
அதற்குப் பதிலாக, வெற்றிகரமான உஜ்ஜலா LED பல்ப் திட்டத்திற்கான பெருமையை எடுத்துக்கொள்ள வேண்டும். முந்தைய ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தாலும், மோடி அரசுதான் அதை விரிவுபடுத்தியது. ஒரு பல்பின் விலை பாதியாகக் குறைந்ததால், விற்பனை அதிகமாகி, அதனால் பொருளாதார லாபமும் கிடைத்துள்ளது.
முதலீட்டைத் திரும்பப் பெறுதல்
நிதியாண்டு 2019க்கான முதலீட்டைத் திரும்பப் பெறும் இலக்கான ரூ. 80,000 கோடியை அடைந்துவிட்டதாகவும், இலக்கிற்கும் மேல் ரூ. 5,000 கோடி பெற்றிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. முதலீட்டைத் திரும்பிப் பெறுவது என்றால், ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் அரசு தன்னுடைய முதலீட்டை (பங்கை) குறைத்துக்கொண்டு (PSU) அவற்றைத் தனியாரிடம் விற்பது. ஆனால், அதை ஒழுங்காகச் செய்யாமல், ஒரு PSUவை விற்று, இன்னொன்றை வாங்கியிருக்கிறார்கள். கிராமப்புற மின்மாற்றக் கழகம், பவர் ஃபைனான்ஸ் கழகத்தின் 53 விழுக்காட்டைப் பெற்றபோது இதுதான் நடந்தது, இதன் மூலம் அரசு ரூ. 14,500 கோடியை உருவாக்கியது; ONGC, HPCLல் அரசாங்கத்தின் பங்குகளை ரூ. 37,000 கோடிக்கு வாங்கியபோதும் இதுதான் நடந்தது. நிதியாண்டு 2019இல் வெறும் ஐந்து நிறுவனங்களை மட்டுமே அரசு பட்டியலிட்டுள்ளது, இதன் மூலம் ரூ. 2000 கோடியைச் சேர்த்துள்ளது. மேலும், PSU மூலம் பங்குகளை வாங்குவதற்காக ரூ. 8000 கோடியைப் பெற்றது. ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவதில் நடந்த ஏலம்தான் மிகப் பெரிய தோல்வியில் முடிந்தது.
வங்கிச் சீர்திருத்தங்கள்
வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை (NPA) சரியாக அங்கீகரித்து, பேலன்ஸ் ஷீட்களைச் சுத்தமாக்கியபடி, சரியான பாதையிலேயே அரசாங்கம் தன் வேலையைத் தொடங்கியது. இத்துறையில், குறைந்தது ஐந்து பெரிய வங்கிகளில் இருந்து வேலையாட்களை நியமிக்க வேண்டும் என்பது போன்ற சில மேலாண்மைச் சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அறிவித்தது. 2016ஆம் ஆண்டின் தொடக்கத்தில், வங்கிகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர வங்கிகள் பணியக வாரியம் (பிபிபி) அமைக்கப்பட்டது. ஆனால், பிபிபியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல், அந்தச் சீர்திருத்தத்தின் வேகம் குறைந்துவிட்டது. சில நாட்கள் விளையாடியதற்குப் பிறகு, வங்கிகளுக்குத் தேவையான ரூ. 2 லட்சம் கோடி மூலதனத்தை அரசு கொடுக்கவில்லை. இந்தச் சீர்த்திருத்தங்கள் இல்லாத பட்சத்தில், கேள்வி இதுதான், தேவையான பணம் தேவையில்லாமல் செலவழிக்கப்படுகிறதா?
பெட்ரோல் விலை
மோடி அரசின் அதிருஷ்டம், 2014இல் அதிகாரத்திற்கு வந்த பிறகு, சர்வதேசச் சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியுற்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடங்கிய டீசல் மற்றும் பெட்ரோல் விலையைச் சீரமைக்கும் வேலையை அது தொடர்வதற்கு இது உதவியாக இருந்தது. இப்படி மெதுவாக, மானியச் செலவைக் குறைத்துவிட்டது. ஆனால், 2016இல் ஒரு பாரல் எண்ணெயின் விலை $30 என்னும் அளவுக்குக் குறைந்தபோதும் அதனால் கிடைத்த லாபத்தை, வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கவில்லை. மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் காலத்தில், சர்வதேச அளவில் எண்ணெயின் விலை மும்மடங்கு அதிகமாக இருந்தபோது இருந்த விலையை அப்படியே தக்கவைத்துக்கொள்ளக் கலால் வரியை அதிகப்படுத்தியது. இது பொருளாதார ரீதியாக நல்லதா, கெட்டதா என்பதைச் சொல்ல முடியவில்லை. அரசாகத்தின் நிதியைச் சமன் செய்ய, இந்த ரூ. 2.3 லட்சம் கோடி வரி உதவியது. அதேவேளையில், வாடிக்கையாளர்களுக்கு இது அதிகச் சுமையைத் தந்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு, பணவீக்கம்
பொருளாதார வளர்ச்சியை 7%க்கும் அதிகமாகவே பராமரித்துவந்ததற்கு மோடி அரசைப் பாராட்டலாம் (ஆனால், சமீபத்திய தரவுகள், வளர்ச்சி குறைவதாக, குறிப்பாக, ஏற்கெனவே அழுத்தத்தில் இருக்கும் விவசாயத் துறையில் குறைவதாகத் தெரிவிக்கிறது). பணவீக்கத்தைக் குறைத்ததற்காகவும், குறைவாகவே வைத்திருப்பதற்காகவும் அரசைப் பாராட்டலாம், மேலும், நிதி விஷயத்தில் பெரும்பாலான நேரத்தில், தேர்தல் நேரத்தைத் தவிர, சரியாகவே நடந்துகொண்டதற்காகவும் பாராட்டலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது என்பதை நிரூபிக்க ஜிடிபி தரவுகளை தானே பரிசீலனை செய்து, மறுபரிசீலனை செய்ததன் மூலமும், அரசாங்கத்தின் வேலைவாய்ப்புத் தரவுகளை மறைத்ததன் மூலமும், மோடி அரசாங்கம் இந்த அனைத்து எண்ணிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தி இருக்கிறது. எனவே இவ்விஷயத்தில், நாம் சொல்ல வேண்டியது, ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்பதைத்தான்.
எஸ்.ரகோத்தம், கீதிமா கிருஷ்ண தாஸ், வெங்கடேஷ் நாயக்
(பிற துறைகள் பற்றிய மதிப்பீடு, விரைவில்)
நன்றி: டெக்கான் ஹெரால்டு
https://www.deccanherald.com/specials/sunday-spotlight/modi-s-5-years-a-report-card-726064.html
மொழிபெயர்ப்பு: ஆஸிஃபா
பாரதியாரை பற்றி யார் படிக்கிறார்கள்?. பாரதி ராஜாவை பற்றியே படிக்கிறார்கள்.