முதன்மையான திட்டங்கள்:
ஸ்வச் பாரத்: அவசரக் கோலம்!
2019 வாக்கில், இந்தியாவைத் ‘திறந்த வெளி மலம் கழித்தல் அற்ற நாடாக’ மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஸ்வச் பாரத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 9 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன, 2014ஆம் ஆண்டில் 40%ஆக இருந்த கிராமப்புற சுகாதாரம் 98%ஆக உயர்ந்துள்ளது. பல நகராட்சிகளும் ‘திறந்த வெளியில் மலம் கழிக்கப்படாத’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய உரையாடல்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்த வேலையை இத்திட்டம் செய்துள்ளது. ஏழை மக்களின் ஆரோக்கியம் மற்றும் மரியாதை ஆகியவற்றோடு தொடர்புடைய இந்தத் திட்டம், மோடி அரசாங்கத்தின் மிகவும் வெற்றிகரமான, முக்கியமான திட்டம்.
ஆனால், களத்தில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, கழிவறைகள் வேகமாகக் கட்டப்பட்டுள்ளதாகவும், முறையான தண்ணீர் வசதியோ, வடிகாலோ இல்லாததால், பல கழிவறைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிகிறது.
ஆதார், பணப் பட்டுவாடா: அரசின் கண்காணிப்பு
JAM trinity எனப்படும் ஜன் தன் ஆதார் மொபைல் எனும் திட்டம் முதன்முதலில் மன்மோகன் சிங் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. ஆட்சி முடிந்ததும், ஆதார் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாத அளவிற்கு வேலை செய்துவிட்டதோடு, Direct Benefit Transfer திட்டத்தைக் கொண்டுவந்தது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது, பாஜக, குறிப்பாக மோடி ஆதார் திட்டத்தை வன்மையாகக் கண்டித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், மோடி அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதோடு மட்டும் நில்லாமல், விரிவுபடுத்தினார் (அப்படிச் செய்யும்போது, குடிமக்களின் பல்வேறு செயல்களில் தலையிடும் என்றும், ஆதார் கண்காணிக்கும் அரசை உருவாக்கும் என்றும் சொல்லப்பட்டது).
“கடந்த நிதியாண்டில், நம்பகமான பயனாளர்களின் வங்கிக் கணக்கிற்கு மானியமாக ரூ. 2.8 லட்சம் கோடி நேரடியாக மாற்றப்பட்டதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 1.2 லட்சம் கோடி சேமித்ததாகவும், பல்வேறு திட்டங்களுக்குக் கீழ் இயங்கிய 7 கோடிப் போலி கணக்குகளை நீக்கியதாகவும்” அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த எண்ணிக்கை முழுமையான கதையைத் தெரிவிக்கப்போவது இல்லை.
மேக் இன் இந்தியா: புஸ்வாணம்
‘மேக் இன் இந்தியா’ திட்டம் பலத்த ஆரவாரத்துடன் ஆரம்பித்தது. ஆனாக், FDIக்கான முதலீடுகள் திறந்துவிடப்பட்டும், ‘தொழில் செய்வது எளிமையாக்கப்பட்டும்’, எதிர்பார்த்த அளவிற்கு உற்பத்தி அதிகரிக்கவில்லை. 2018ஆம் ஆண்டின் Q3யில் சேர்க்கப்பட்ட உற்பத்தியின் அளவு 6.7%, அதாவது ஏப்ரல் – ஜூனில் இருந்த 12.4%இலிருந்து இது இந்த அளவுக்குக் குறைந்துள்ளது. இத்துறை தேவை, விநியோகம் என்று இரு புறங்களிலிருந்தும் சிக்கலைச் சந்திக்கிறது. வாகனத் துறையில் அதிகமாகிவரும் இருப்புக் கணக்கிலிருந்தும், FMCG நிறுவனங்களின் குறைந்துவரும் விற்பனைத் தரவுகளிலிருந்தும், தேவை குறைந்துள்ளது என்பது தெரிகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் முறைசாரா சிறு, குறு வணிகத் துறை பாதிக்கப்பட்ட பிறகு, சப்ளை பக்கம் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் மொத்த தொழில்துறை வெளியீட்டில் 40% வகிக்கும் எட்டு முக்கியமான துறைகளான நிலக்கரி, கச்சா எண்ணெய், எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் ஜனவரி 2019இன் ஒட்டுமொத்த வளர்ச்சி வெறும் 1.8% மட்டுமே.
திட்டங்களைப் பற்றிய இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, புதிய திட்டங்களுக்கான முதலீடு 2019, மூன்றாம் காலாண்டில் குறைந்துள்ளது. பூடகமான தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்துவதற்கு அரசாங்கம் எந்த முயற்சியும் செய்யவில்லை. மேலும், நிலக் கையகப்படுத்துதல் சட்டத்தை மாற்றுவதற்கான ஆரம்ப முயற்சியிலிருந்து அரசாங்கம் பின்வாங்கிவிட்டது. இந்தச் சீர்திருத்தங்கள் இல்லாமல், ‘மேக் இன் இந்தியா’ திட்டம் வெற்றியடையாது.
உஜ்வாலா: காணாமல்போன சிலிண்டர்கள்
மோடி சொன்னதும் நம்மில் லட்சக்கணக்கானோர் சிலிண்டர்களுக்கான மானியத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள ஏழை வீடுகளுக்கு அந்த சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டன. இது நல்ல நோக்கம்தான். ஆனால், இந்த திட்டம் தாக்குப்பிடிக்கக்கூடியதுதானா?
ஏறத்தாழ 8 கோடி வீடுகளுக்கு இலவச எரிவாயு இணைப்பும், முதல் சிலிண்டரும் கொடுத்துள்ளதாக அரசு தெரிவித்தபோதும், உண்மையில் இவற்றில் பல இல்லங்களால் ரூ. 600 விலையுள்ள சிலிண்டர்களை அடுத்தடுத்து வாங்க முடியாது. உஜ்வாலா பற்றி மேலும் பேசுவதற்கு முன்பு, எத்தனை பேர் தொடர்ந்து சிலிண்டர்களை வாங்கினார்கள் என்பது பற்றிய ஆய்வை அரசாங்கம் செய்ய வேண்டும்.
ஆயுஷ்மான் பாரத்: தெளிவற்ற நிலை
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது சமீபத்தியது. எனவே, ஏழை மக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை அளிப்பதற்கு இது நல்ல வழியா என்பதை இன்னும் தீர்மானிக்க முடியவில்லை. நாடு முழுவதிலும், 18000 தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இத்திட்டத்தில் இதுவரை இணைந்துள்ளன. மலிவான விலையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான ஒரே ஒரு வழி, பொதுநலச் சுகாதார அமைப்பின் திறனை வளர்ப்பதே என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆயுஷ்மான் பாரத்தின் இன்னொரு அங்கமான ஜன் ஔஷதி கேந்திரம், முழங்கால் அறுவை சிகிச்சை போன்றவற்றுக்கான செலவைக் குறைத்தல், அடிப்படை மருந்துகளை வழங்குதல் ஆகியவை ஏழைகளுக்கு உதவியாக இருக்கும்.
முத்ரா கடன்: எதிர்பார்த்த பலன் இல்லை
ஏற்கெனவே நிலுவையில் இருந்த சிறு, குறு தொழில்துறைகளுக்கான கடன் திட்டத்தின் மறு உருவாக்கம்தான் முத்ரா கடன் திட்டம். வேலைவாய்ப்பு உருவாக்கினோம் என்ற அரசின் வாதம் இப்போது இந்த கடனின் மேல்தான் உள்ளது. காரணம், அரசாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ. 7 – 8 லட்சம் கோடி தொழில்முனைவோருக்குக் கடனாகக் கொடுத்துள்ளது. இவை நிச்சயமாக வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்க வேண்டும்.
ஆனால், உண்மை நிலை என்ன? சராசரியான கடன் தொகை மிகவும் குறைவாகவே இருந்தது. அதை வைத்து நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியாது. ஒன்று, இந்த கடன் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் பற்றிய தரவுகளை அரசு சேகரிக்கவில்லை, இல்லை அதை பொதுமக்களுக்குத் தெரிவிக்கவில்லை. எதுவாயினும், அதன் கூற்றுகளை சந்தேகத்துடன்தான் அணுக முடியும்.
தேசியப் பாதுகாப்பு
பாகிஸ்தான் கொள்கை: மிகையான தம்பட்டம்
பாலகோட் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களில், தேசியப் பாதுகாப்பு விஷயத்தில் தன்னுடைய அரசுதான் மிகவும் வலிமையானது என்றும், குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் தீவிரவாத விஷயத்தில் தன்னுடைய அரசு உறுதியானது என்றும் பிரதமர் சொல்லிக்கொண்டிருக்கிறார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கும் அரசியல் முடிவை எடுத்ததற்கு மோடி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டும். காரணம், அதன் மூலம் பாகிஸ்தானின் அணு ஆயுதம் என்ற உளவியல் தடையை இந்தியாவால் கடந்து வர முடிந்தது.
ஆனால், அந்தத் தாக்குதலில் என்ன நடந்தது என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கும்போது (குறிப்பாக, இலக்கு தாக்கப்பட்டதா என்றும், தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா…), பாகிஸ்தான் விங் கமாண்டர் அபினந்தனை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைத்தபடி முடிந்த அந்த நிகழ்வினால், பாஜகவின் ஒளியின் சோபை மங்கியது. மேலும், காங்கிரஸ் பாகிஸ்தான் விஷயத்தில் மென்மையாக இருக்கிறதென்றும், மோடி கடினமாக நடந்துகொள்கிறார் என்பதும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.
காஷ்மீர் கொள்கை: முழுத் தோல்வி
தேசியப் பாதுகாப்பு விஷயங்களில், மோடி அரசு பதில் சொல்ல வேண்டியது காஷ்மீர் விவகாரத்தில்தான். காஷ்மீரிகளுடன் பேசி, அவர்களை இந்தியாவுக்கு நெருக்கமாகக் கொண்டுவர அரசாங்கம் அவர்களுடன் பேசியிருக்க வேண்டும். மாறாக, அதிருப்தியில் இருந்த காஷ்மீரி இளைஞர்களைப் பாதுகாப்புப் படைகள் மூலம் கடினமான முறையில் கையாண்டார்கள். 1990களில் இருந்து வேறு எந்த அரசும் செய்யாத அளவிற்கு, அதிகமான இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி இது திருப்பியிருக்கிறது. வாஜ்பாயி காலத்திற்குப் பிறகு குறைந்துவந்த தீவிரவாதிகளுக்கான உள்ளூர் ஆதரவு மீண்டும் வளர்கிறது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, மோடி ஆண்டுகளில் காஷ்மீர் இந்தியாவை விட்டு மேலும் விலகி நிற்கிறது.
அழுத்தத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள்
நீதிபதிகளின் பத்திரிகையாளர் சந்திப்பு: கலங்கும் நீதி
ஜனவரி 12, 2018 அன்று, நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு எதிர்பாராத விதத்தில் இந்திய ஜனநாயகத்தின் அனைத்துக் கட்டுமானங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது நீதிபதிகளுக்கு இடையிலான பிரச்சினை என்பதுபோல வெளியில் தோன்றினாலும், உடனடி எதிர்வினையாக, நீதிபதி லோயா வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு மனுதாரர்கள் கேட்டனர் (லோயா, குஜராத்தின் சொராபுதீன் ஷேக்கின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி. இவர் பாஜக தலைவர் அமித் ஷா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று வலியுறுத்தினார். திடீரென்று, சந்தேகமான சூழ்நிலையில் இறந்துபோனார்). மேலும், செயல்முறை மெமோரண்டத்தில் கையொப்பமிடவும் மற்றும் உயர் நீதித் துறையில் நீதிபதிகளை நியமிப்பதற்கான தடையை நீக்கவும் அரசாங்கம் மறுக்கிறது.
சிபிஐ: காணாமல்போன நம்பகத்தன்மை
டிசம்பர் 2016இல், கர்நாடகவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மற்றும் சிபிஐ சிறப்பு இயக்குனரான ஆர்கே தத்தா அடுத்த சிபிஐ தலைவராகப் போவதாக தகவல் சொல்லப்பட்டது. ஆனால், அப்போதைய தலைவர் அனில் சின்ஹா ஓய்வு பெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அவர் அந்த அமைப்பை விட்டு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். தத்தாவின் இடத்தில், ஏற்கெனவே துணை இயக்குனராகக் கொண்டுவரப்பட்ட குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் ஆஸ்தனாவை மோடி கொண்டுவந்தார். ஆஸ்தனா இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். அவர் சிபிஐ தலைமை அதிகாரியாக வந்திருப்பார். ஆனால், அவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் பொது நல மனுவாகத் தாக்கல் செய்யப்பட்டது.
மோடி அதன் பிறகு, டெல்லியின் முன்னாள் காவல் துறை கமிஷனரான அலோக் வர்மாவைத் தலைவராக நியமித்தார். ஆஸ்தனா, நிறுவனத்தின் இரண்டாவது அதிகாரம் மிக்க நபராக நியமிக்கப்பட்டார். ஆனால், பல ஊழல் வழக்குகளில் அவர் விசாரிக்கப்பட்டுவந்தார். அவர் தன் பங்கிற்கு, வர்மா லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தினார். விஷயம் கைமீறிப் போகத் தொடங்கும்போது, மோடி உள்ளே புகுந்து வர்மா மற்றும் ஆஸ்தனா இருவரது நியமனங்களையும் நிறுத்திவைத்தார். இறுதியில், அவருக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று CVC3 தெரிவித்தும், உச்சநீதிமன்றம் அவரை மீண்டும் பணியில் அமர்த்தியும், வர்மா வெளியேற்றப்பட்டார்.
ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ஒரு புகாரை வர்மா பெற்றதாகவும், சிபிஐயில் அரசின் ‘நள்ளிரவு சதி’ நடப்பதற்கு சற்று முன்பு, அப்புகாரை விசாரிக்கும் கடமை இருந்ததால், அவர் அவ்வழக்கில் FIR பதிவு செய்ய இருந்ததாகவும் தெரிகிறது.
ஆர்பிஐ என்னும் ஏவலாள்?
ஆர்பிஐ அமைப்பை, மோடியின் பணமதிப்பிழப்பிற்கு முந்தைய சந்திப்பின் மினிட்ஸை வெளியிட வைத்த RTI விசாரணைக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போதிருந்த ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் மற்றும் ஆர்பிஐ-யின் போர்ட் உறுப்பினர்கள் அரசின் பணமதிப்பிழப்பிற்கான காரணத்தை ஏற்கவில்லை என்பது அதன் மூலம்தான் நமக்குத் தெரிந்தது. மேலும் பணமதிப்பிழப்புக்குச் சொல்லப்பட்ட குறிக்கோள்களை அது அடையும் என்றும் படேல் நம்பவில்லை. இருப்பினும், நவம்பர் 8, 2016இல் மோடி தொலைக்காட்சியில் அறிவிப்பதற்கு மூன்று மணிநேரங்களுக்கும் குறைவான நேரத்திற்கு முன் நடந்த பெயரளவிலான சந்திப்பில், “பொதுநலன் காரணமாக” இது குறித்து அவர்கள் அரசிடம் தெரிவித்தனர். பணமதிப்பிழப்பு எவ்வளவு பெரிய பேரிடராக வந்துவிட்டது என்பதும் நமக்குத் தெரியும்.
ஆனால், அரசாங்கம் இதோடு நிற்கவில்லை. பொருளாதார வளர்ச்சி குறையத் தொடங்கியதும், வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டும் என்று ஆர்பிஐக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. செயலற்று இருக்கும் கடன்களால் பாதிப்படைந்த வங்கிகளிடம், மேலும் கடன் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஆண்டுக்கணக்கில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஆர்பிஐ கையிருப்பு நிதியை ஒப்படைக்குமாறும் கேட்டது. உர்ஜித் பட்டேல் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். மோடியின் வழித்தடை நீங்கியது.
குலைந்து வரும் கல்வி சுதந்திரம்!
மோடி ஆட்சிக்கு வந்ததுமே, பல்கலைக்கழகங்களில் கருத்தியல் மீதும் சுதந்திரத்தின் மீதும் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. இதைத் தலைமையேற்று நடத்தியது பாஜகவின் மாணவப் பிரிவான ABVP; இவர்களின் குறிக்கோள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மொத்த பல்கலைக்கழகத்தின் மீதும், இடதுசாரிகள், மாவோயிஸ்டுகள், தீவிரவாதிகள், தேசத்துரோகிகள் போன்ற முத்திரைகள் குத்தப்பட்டன. JNUவின் மாணவர்கள் சங்கத் தலைவரான கன்னையா குமார் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதன் பிறகு, உயர் கல்வியின் மீதான தாக்குதல்கள் பல வடிவங்களில் நடைபெறுகின்றன. சமீபத்திய தாக்குதல் என்பது, ஆராய்ச்சி மாணவர்கள் “தேசத்திற்குப் பொருத்தமான” தலைப்புகளில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்ற HRDயின் அறிவிப்பு! அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளர்களின் தேசிய அளவிலான எதிர்ப்பு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
எஸ்.ரகோத்தம், கீதிமா கிருஷ்ண தாஸ், வெங்கடேஷ் நாயக்
நன்றி: டெக்கான் ஹெரால்டு
https://www.deccanherald.com/specials/sunday-spotlight/modi-s-5-years-a-report-card-726064.html
மொழிபெயர்ப்பு: ஆஸிஃபா