அன்பார்ந்த திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு,
தேமுதிக என்கிற கட்சி மாபெரும் அலை போல உருவாகி வந்ததையும் கற்பூரம் போல காற்றில் கரைந்து வருவதையும் நீங்கள் உடனிருந்து பார்த்து வருகிறீர்கள். ஆனாலும் அது குறித்த உணர்வு கொண்டிருக்கிறீர்களா என்று எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. தேமுதிக என்பது நீங்களும், உங்கள் தம்பியும் ஆண்டுகொண்டிருக்கும் குடும்ப சொத்து என்பது போல் நீங்கள் நடந்து கொண்டிருப்பதாலேயே உங்களுக்கு இந்தக் கடிதம்.
2019 தேர்தலை சந்திக்கப்போகுக் கட்சிகளிலேயே மக்களால் அதிகம் வெறுக்கப்படும் கட்சியாக உங்களின் தேமுதிக இருக்கிறது பிஜேபியை விட அதிகமாக நீங்கள் வெறுக்கப்படுகிறீர்கள் என்பது வெளிப்படையாகவேத் தெரிகிறது. இதற்கான காரணம் வேறு யாரும் அல்ல. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும்தான்.
நமது தமிழக மக்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. திரைப்படத்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் விஜயகாந்தையும் கவனித்தார்கள். அவர் படங்களில் தேசிய உணர்வு கொண்டவராய், தமிழ் உணர்வாளரை வருவதை ரசித்தார்கள். அவருக்கென்று ரசிகர் கூட்டம் எல்லாத் தரப்பிலும் உண்டு. இதோடு அவர் நடிகர் சங்கத் தலைவராய் இருந்து கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடிகர் சங்கத்தின் கடனை அடைத்ததை தமிழகமே பார்த்துக் கொண்டிருந்தது. அதில் அவருக்கு திரைப்படத்துறைக் கடந்தும் பொது மக்களிடையே நல்ல பெயர் உருவானது.
14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, இந்தப் பின்னணி அவருக்கு ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோதே துணிச்சலாக கட்சி தொடங்கினார் விஜயகாந்த். இருவரின் மறைவுக்கு பிறகே சலம்பத் தொடங்கியிருக்கும், கமல் மற்றும் ரஜினிகாந்த் போல இல்லாமல் துணிச்சலாகவே கட்சி தொடங்கினார். இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் குறை சொல்லிக் கொண்டிருக்கையில் இரண்டு கட்சிகளின் குறையையும் மூன்றாவதாக ஒரு நபர் விமர்சித்தது அனைவரையும் கவனிக்க வைத்தது. மக்களுக்கு ஒரு பிரபலமான ஒரு முகம் தேவைப்பட்டது.
ஒரு வருடத்துக்கு உள்ளாகவே 2006 சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு, 8.5 சதவிகித வாக்குகளை தேமுதிக பெற்றது, பலரை வியப்பில் ஆழ்த்தியது உண்மைதான். திமுக அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ், மற்றும் இடதுசாரிகளோடு இணைந்து அத்தேர்தலை சந்தித்தது. ஜெயலலிதா, மதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகளோடு தேர்தலை சந்தித்தார். தொடங்கி ஒரு வருடம் கூட நிறைவு செய்யாத ஒரு கட்சி, 27.64 லட்சம் வாக்குகளை பெற்றது, எளிதான வெற்றி அல்ல.
அன்று உங்கள் கட்சிக்கு அத்தனை ஆதரவு கொடுக்கப்பட்டதற்கு காரணம், உங்கள் கணவரின் பேச்சுத் திறமையை பார்த்தோ அல்லது, உங்களின் அற்புதமான கொள்கைகளை பார்த்தோ அல்ல. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாறி மாறி ஆதரவு கொடுத்து மனம் வெறுத்துப்போயிருந்த மக்களுக்கு, ஏதாவது ஒரு மாற்று கிடைக்காதா என்று நினைத்தே தேமுதிகவுக்கு வாக்களித்தார்கள். இன்று சமூக நலனில் உங்களுக்கு இருக்கும் அக்கறை குறித்து வாய் கிழிய பேசும் நீங்கள், இதே சமூகத்தின் நலனுக்காக கட்டப்பட்ட கோயம்பேடு மேம்பாலத்துக்காக உங்கள் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதியை இடிக்க அரசு முனைந்தபோது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்றீர்கள். ஆனால், உச்சநீதிமன்றம், மக்கள் நலனே பிரதானம் என்று உங்கள் கோரிக்கையை நிராகரித்தது.
2009 பாராளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தனித்தே போட்டியிட்டது. காங்கிரஸ், திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஒரு அணியிலும், அதிமுக, மதிமுக, இடதுசாரிகள், பாமக ஆகியவை மறு அணியிலும் போட்டியிட்டன. கூட்டணியில் சேர்ந்து பாமக வெறும் 6.4 சதவிகித வாக்குகளையே பெற்றது. ஆனால் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட தேமுதிக 31 லட்சம் வாக்குகளோடு 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது. இரண்டு திராவிட கட்சிகளோடு போட்டியிட்டு, கூட்டணி இல்லாமல் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது, எளிதான காரியம் அல்ல.
2009 தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள்தான் 2011ல், ஜெயலலிதாவை, தேமுதிகவோடு கூட்டணி அமைக்க நெருக்கடி கொடுத்தது. போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்குத் தயாரானார். திமுகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நினைத்த பல தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்தான், தேமுதிக-அதிமுக கூட்டணி அமைய காரணமாக இருந்தார்கள். தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஏராளமான பரிச்சயம் உள்ளவரான ஜெயலலிதா, 41 இடங்களை தேமுதிகவுக்கு ஒதுக்கினார். அன்று தமிழகத்தில் இருந்த திமுக எதிர்ப்பு அலையால், 41 இடங்களில் 29 இடத்தில் தேமுதிகவால் வெற்றி பெற முடிந்தது.
அந்த வெற்றி உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், திமுக, அதிமுகவை விட, நாம் பெரிய கட்சி, நாம் இல்லாவிட்டால் எந்த கட்சியாலும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற அகந்தையை அளித்தது.
திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். வெகு சீக்கிரத்திலேயே, பிப்ரவரி 2012ல், விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும், சட்டப் பேரவையில் வாக்குவாதம் ஆனது. கூட்டணி முறிந்தது என்பதை ஜெயலலிதா அறிவித்தார். தேமுதிகவின் அழிவுகாலம் தொடங்கி விட்டது என்றும் கூறினார். அவர் ஆத்திரத்தில் கூறினாரா, அல்லது, இன்று நடந்து கொண்டிருப்பதை ஆருடம் கூறினாரா என்று தெரியாது. ஆனால், அப்போதே தேமுதிகவின் சரிவுப் பாதைத் தொடங்கிவிட்டது. 2011 அதிமுக ஆட்சி முடிவதற்குள்ளாக, எட்டுக்கும் மேற்பட்ட தேமுதிக எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் தாவினர்.
அதன் பிறகு நடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில், தேமுதிக தலைமையில் கூட்டணி என்று தமிழகத்தில் பிஜேபி, பாமக, மதிமுக மற்றும் சில உதிரிக் கட்சிகளோடு தேமுதிக தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தேமுதிக தோல்வியை சந்தித்தது. கூட்டணிக் கட்சிகளோடு போட்டியிட்டும், தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் 5.1 சதவிகிதமாக குறைந்தது.
2016 தேர்தலில்தான் தேமுதிகவுக்கு மிகப் பெரிய சறுக்கலாக அமைந்தது. விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் இடதுசாரிகளோடு இணைந்து மூன்றாவது அணி நீங்கள் அமைப்பதற்குக் காரணமாக அமைந்தது திமுக தலைவர் அப்போது எடுத்திருந்த சில தவறான முன்னகர்வுகள். வைகோ விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்றார். விஜயகாந்தை முதல்வராக்காமல் ஓய மாட்டேன் என்றார். கூட்டணியில் பெரிய கட்சி என்பதால், தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தேமுதிக மண்ணைக் கவ்வியது. 104 தொகுதிகளில் போட்டியிட்டு தேமுதிகவால் வெறும் 10.34 சதவிகித வாக்குகளையே பெற்றது.
அதன் பிறகு தேமுதிகவுக்கு தொடர்ந்து பின்னடைவுதான். ஒரு காலத்தில் கட்சியின் தூணாக இருந்த பன்ருட்டி ராமச்சந்திரன், பணத்தை அள்ளித் தரும் கற்பகத்தருவாக இருந்த மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் என்று அனைவரும் கட்சியிலிருந்து விலகிச் சென்றனர். கட்சியிலிருந்து இப்படி பலர் வெளியேற தேர்தல் தோல்விகள் மட்டும் காரணமல்ல. விஜயகாந்தின் நடவடிக்கைகளும்தான்.
பத்திரிக்கையாளர் சந்திப்புகளில் ‘அவனே இவனே’ என்று ஏகவசனத்தில் பேசுவது, பத்திரிக்கையாளர்களை நோக்கித் துப்புவது, அடிக்கப் பாய்வது இதோடு மிக மிக அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துவார். இவற்றையெல்லாம் வீரம் என்று விஜயகாந்த் நினைத்துக் கொண்டிருக்கலாம். அதற்கு நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஒத்து ஊதலாம். ஆனால் மக்கள் இவற்றையெல்லாம் மிக மிக அநாகரீகமான செயல்களாகவே பார்க்கிறார்கள்.
2016 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு, தேமுதிகவின் அரசியல் நடவடிக்கைகள் ஏறக்குறைய எதுவுமே இல்லை என்று கூறலாம். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் கூட, ஒரு கட்சியின் நடவடிக்கைகள், அதைக் காரணம் காட்டி தொய்வடையக் கூடாது. ஒரு அரசியல் கட்சி, தன் தொண்டர்களை உற்சாகமாக வைக்க, வருடத்துக்கு ஒரு மாநாடு, ஒரு மாநிலம் தழுவிய போராட்டம், முக்கிய பிரச்சினைகளில் அறிக்கைகள், அவ்வப்போது பத்திரிக்கை சந்திப்பு என்று உயிர்ப்போடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். வருடம் முழுவதும் உறங்கி விட்டு, தேர்தல் சமயத்தில் வாக்கு கேட்க வந்தால், மக்கள் ஒரு நமட்டுச் சிரிப்போடு உதாசீனப்படுத்திவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள்.
ஒரு கட்சியின் பலம் அல்லது பலவீனங்கள் தேர்தலுக்கு முந்தைய ஆண்டில் அக்கட்சியின் செயல்பாடுகள், கடைசியாக நடந்த தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் ஆகியவற்றை வைத்துத்தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் அல்லது, நிராகரிக்கப்படும். இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் தேமுதிக இன்று பூஜ்யம். ஆனால், நீங்களும், உங்களும் தம்பியும், 2011 தேர்தலில் வெற்றி பெற்ற மிதப்பிலேயே இன்னமும் இருக்கிறீர்கள்.
கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிய சமயத்தில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே உங்களை தங்கள் கூட்டணியில் சேர்க்க விருப்பமாகத்தான் இருந்தன. 2016ல் திமுக தோற்க நீங்கள்தான் காரணம் என்பது தெரிந்தும் ஸ்டாலின் கூட்டணிக்காக வீடு தேடி வந்தார். அது வெளிப்படையாக தெரிய வேண்டாமே என்பதற்காக, அவர் உடல் நிலை விசாரிக்க சென்றேன் என்று பேட்டியளித்தார். ஆனால் நீங்கள், ஸ்டாலின் அரசியல் பேசத்தான் வந்தார் என்றீர்கள். உங்கள் மகன் விஜய பிரபாகரனோ, ”பொழுது விடிஞ்சா ஒவ்வொரு அரசியல் கட்சிக்காரனும், எங்க வீட்டு வாசல்ல கூட்டணிக்காக தவம் கிடக்குறான்” என்று ஏக வசனத்தில் பேசினார். ஸ்டாலின் கூட்டணி பேசியதை, நீங்கள் அதிமுகவோடு கூட்டணி சேருவதற்கு பேரம் பேசுவதற்கு பயன் படுத்திக் கொண்டீர்கள்.
அதை விட மிக மிக ஆபாசம், ஒரே நேரத்தில் நீங்கள், திமுக மற்றும் அதிமுகவோடு பேச்சுவார்த்தை நடத்தியது. ட்ரைடண்ட் ஹோட்டலில் சுதீஷ் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே, உங்கள் கட்சி நிர்வாகிகளை துரைமுருகனோடு பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது. அன்று மாலையே பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுதீஷ், திமுகவோடு பேச்சு நடத்தியது உண்மையே என்று ஒப்புக் கொண்டார்.
ஆனால் மறுநாள் பத்திரிகையாளர்களை சந்தித்த நீங்கள், மிக மிக அநாகரீகமாக நடந்து கொண்டீர்கள். பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசினீர்கள். நீ யாரு ? எந்தப் பத்திரிக்கை ? உனக்கு என்ன தெரியும் ? என்று மிக மிக அநாகரீகமாக பேசினீர்கள். ஆனால், நீங்கள் உங்களை ஜெயலலிதாவாக கருதிக் கொண்டீர்கள். எப்போதாவது தான் ஜெயலலிதா பத்திரிகையாளர்களை சந்திப்பார். அப்போதும் கூட அவர் இப்படி பத்திரிக்கையாளர்களை பேசியது கிடையாது. நீங்கள் என்ன ஜெயலலிதாவை விட பெரிய ஆளா? அல்லது எல்லோரையும் விட மூத்த அரசியல்வாதியா ? நிச்சயம் இல்லை.
விஜயகாந்த் மேடையில் கோபப்பட்டதும், பத்திரிகையாளர்களிடம் ஏக வசனத்தில் பேசியதும் சட்டமன்றத்தில் நடந்து கொண்டதும் மீம்ஸ்களாகவும், அரசியல் பகடியாகவும் அனைவராலும் ‘கண்டு களிக்கப்பட்டன’. வேறெந்த அரசியல் கட்சித் தலைவரும் அதற்கு முன்பு இந்தளவுக்கு கேலிக்கு உள்ளாகவில்லை. அதிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவரை விட கீழாக இறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
இன்று அரசியலில் இறங்குவோர் சமூக சேவைக்காகவோ, மக்கள் தொண்டுக்காகவோ வருவதில்லை. மாறாக, தங்கள் சுயநலத்துக்கும், அதிகார மோகத்துக்குமாகத்தான் வருகிறார்கள். ஆனால், அப்படி வருபவர்கள் கூட, உங்களைப் போல வெளிப்படையாக தங்கள் சுயநலத்தை வெளிப்படுத்தியதில்லை. ஆனால், நாலு தொண்டன் உங்கள் பின்னால் வருகிறான் என்ற உணர்வு, உங்களுக்கு மமதையை ஏற்படுத்தி உள்ளது. உருப்படியாக ஒரு கொள்கை இல்லை. கட்சித் திட்டம் இல்லை. பெயர் சொல்லிக் கொள்ளும்படி ஒரே ஒரு தலைவர் கூட இல்லை. ஆனால், உங்களுக்கு தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற அதிகார ஆசை கொண்டிருக்கிறீர்கள். கூட்டணி பேரத்தை வைத்து, பெரிய அளவில் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை உங்களுக்கு உள்ளது.
தற்போது அதிமுகவோடு நீங்கள் அமைத்துள்ள கூட்டணிக்காக, உங்களுக்கு 200 கோடி கொடுக்கப்பட்டது என்று அதிமுகவினர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரங்கள் இல்லையென்றாலும், இப்படி ஒரு தொகை இல்லாமல் நீங்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருக்க மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன்.
உங்கள் குடும்பத்தின் பேராசைக்காக உங்கள் பின்னால் இன்னமும் நம்பிக்கையோடு சுற்றும் சில தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் எதிர்காலத்திற்காகவாவது, உங்கள் கட்சியின் 4 வேட்பாளர்களும், இந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வுவார்கள். உங்கள் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போகும். ஒருவகையில் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இது நல்லது தான்.
இந்தத் தேர்தலில், உங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோற்க வேண்டும் என்று நான் விரும்புவதால், ஒப்புக்காகக் கூட, உங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லப் போவதில்லை.
அன்புடன்
ஒரு பாமர வாக்காளன்.
கொள்கை இல்லாமல் நடிகன் என்ற முகத்தை வைத்து கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி. இதெல்லாம் ஜனநாயக கேலி கூத்து. திமுக, அதிமுக வெறுப்புகளின் காரணமாக வந்த கட்சி. இந்த தேர்தலோடு ஒழிய வேண்டும்
விஜயகாந்த் துணிச்சலில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லாத ரஜினி மற்றும் கமலுக்கு எனது ஒட்டு எப்பொழுதும் இல்லை .
haha jaha
விஜயகாந்த் சார் நல்லா இருக்க வாழ்த்துக்கள்.
வேற ஒண்ணும் இல்லை.
ஹும்.