ஒரு அரசின் பெருமை அதன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம், கொள்கையின் வெற்றி, தோல்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இந்த அளவுகோலின்படி பார்த்தால், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிகபட்சம் இடைப்பட்ட நிலையைத்தான் பெறுகிறது.
ஆனால், வேறு ஒரு அளவுகோலின்படி பார்த்தால், கடந்த ஐந்தாண்டுகள் இந்தியாவை மாற்றக்கூடியதாக இருந்துள்ளன. நாடு தேர்தலை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த மாற்றம் 2014 மக்களவைத் தேரத்ல் பிரச்சாரத்திலிருந்து துவங்கியது என்பதைக் கண்டுகொள்ளாமல் தவறவிடும் அபாயம் இருக்கிறது.
2014 பிரச்சாரம் பலரால் அதிபர் பாணியிலானது என வர்ணிக்கப்பட்டது. பாஜகவுக்கு ஆதரவாகப் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது நரேந்திர மோடி என எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள், தனியார் டிவி சேனல்கள் முன்னின்று நடத்திய பிரச்சாரத்தில் குஜராத் முதல்வரான நரேந்திர மோடி தேசிய மீட்பராக முன்னிறுத்தப்பட்டார். இது மற்ற எந்தப் பிரச்சாரம் போலவும் இல்லாமல், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பாஜகவின் திட்டத்தை வகுத்துக்கொடுத்தது.
2015 செப்டம்பரில் நடைபெற்ற முகமது அக்லக் படுகொலை இனி என்ன எல்லாம் நடக்க இருக்கின்றன என்பதற்கான அறிகுறியாக அமைந்தது. அவர் ஒரு பசுவைக் கொன்றுவிட்டதாக கிராமக் கோயிலிலிருந்து அறிவிப்பு வெளியானதை அடுத்து, தில்லியின் புறநகரில் உள்ள அவரது வீட்டில் திரண்ட கும்பலால் அக்லக் அடித்துக் கொல்லப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் இந்தக் கொலையை நியாயப்படுத்தினர்.
இது குறிப்பிட்ட விதமானதொரு நிகழ்வுப் போக்கை உருவாக்கியது. அடுத்து வந்த மாதங்களில், ஆண்டுகளில், பலர் – அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள் – வட இந்தியா முழுவதும், ஆர்எஸ்எஸ் அல்லது அதன் எண்ணற்ற துணை அமைப்புகளில் ஒன்றுடன் தொடர்புகொண்ட பசுக் காவலர்களால் கொல்லப்பட்டனர்.
2014இல் வளர்ச்சி பாஜகவின் முக்கியத் தேர்தல் அம்சமாக இருந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசு பசுவதை மற்றும் மாட்டிறைச்சி விற்பனையை ஊக்குவித்ததது எனும் குற்றச்சாட்டு, மோடி பிரச்சாரத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுவந்த அம்சங்களில் ஒன்றாக இருந்தது.
“இந்த நாட்டிற்குப் பசுமை புரட்சி தேவை. ஆனால் மத்தியில் உள்ளவர்கள் பிங்க் புரட்சியை விரும்புகின்றனர். இதன் பொருள் என்ன என உங்களுக்குத் தெரியுமா? விலங்குகள் கொல்லப்படும்போது அவற்றின் சதை இந்த நிறத்தில்தான் இருக்கும். நாட்டில் பல பெரிய இறைச்சிக் கூடங்கள் இருக்கின்றன. பசு வைத்திருப்பவருக்கு இந்த மானியம் வழங்க அரசு முன்வரவில்லை, ஆனால் அவர் இறச்சிக்கூடம் அமைக்க விரும்பினால் உதவி செய்கிறது” என்று 2014 ஏப்ரலில் மோடி பேசினார்.
மோடியின் பூடகமான செய்திகள்
தான் சொல்ல விரும்புவதைத் தன் ஆதரவாளர்களுக்குப் புரியும் விதத்தில் சங்கேத மொழியில் பூடகமாகத் தெரிவிப்பதில் மோடி வல்லவர். அவருடைய பிரச்சாரம், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர் முஸ்லிம்களைக் குறை கூறினார். காங்கிரஸை முஸ்லிம் கட்சி என முத்திரை குத்தினார். காங்கிரஸுடன் தொடர்புகொண்ட எல்லாக் கட்சிகளையும் அவர் அப்படி முத்திரை குத்தினார்.
“இந்து அகதிகள்” vs “வங்கதேச ஊடுருவலாளர்” உள்பட 2014 தேர்தலில் மோடி திறம்பட பயன்படுத்திய பல உருவகங்களில் “பிங்க் புரட்சி”யும் ஒன்று. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாருக்கு இலக்காகக் கூடாது என்பதற்காக அவர் மிக கவனமாக முஸ்லிம் எனும் வார்த்தையை குறிப்பிடுவதை கவனமாக தவிர்த்தார்.
மற்றொரு நட்சத்திர பிரசாரகரான, தேர்தலில் போட்டியிடாத அமித் ஷாவும் இப்படியெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. அவருடைய ஆட்சேபகரமான பேச்சுக்காக 2014 ஏப்ரல் மாதத்தில் தேர்தல் கமிஷன் பொதுக்கூட்டத்தில் பேச அவருக்குச் சிறிது காலம் தடை விதித்தது. தேர்தல் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டிற்காக அவர் பதில் அளிக்க வேண்டியிருந்தது.
நம்முடைய பெண்களை அழிப்பவர்களாக, நம் சகோதரிகளையும், புதல்விகளையும் பாலியல் தாக்குதல் செய்பவர்களாக, முஸ்லிம்களை ஷா தன்னுடைய பல்வேறு உரைகளில் வர்ணித்தார். ஷாவின் இந்த மீறல்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்யப்பட்டவை எனத் தேர்தல் கமிஷன் குறிப்பிட்டது.
அக்லக் கொலை செய்யப்பட்டபோது பிரதமர் மோடி மவுனமாக இருந்ததில் எந்த வியப்பும் இல்லை. ஆர்எஸ்எஸ் – பாஜக தொடர்புடைய பசுக் காலவர்கள் மத அடையாளத்தின் அடிப்படையில் மனிதர்களை அடித்துக் கொல்வது, மற்ற வடிவிலான வன்முறைகளைத் தூண்டிவிடுவது போன்ற செயலில் ஈடுபடத் துவங்கினார்கள். பசு வதை தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தபோதும் மோடி மவுனமாக இருந்தார். அவரது அமைச்சர்கள் வன்முறையை நியாயப்படுத்தினர். அல்லது, வன்முறை சட்டம் ஒழுங்கு பிரச்சினை; அது மாநில அரசின் கீழ் வருவது; எனவே மத்திய அரசு அதற்குப் பொறுப்பல்ல என்றனர்.
2015இல் பிகாரில் தேர்தல் நடைபெற்றபோது, மோடி ஒவ்வொரு பேரணியிலும், 2014இன் பிங்க் புரட்சி பற்றிய குறிப்புகளை மீண்டும் பயன்படுத்தினார். இந்துகளும் மாட்டிறைச்சி உண்கின்றனர் எனும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் கருத்து, மாடுகளுடன் வாழும் யாதவ சமுதாயத்தினரையும் இதர இந்துக்களையும் அவமானப்படுத்துவது என்று மோடி கூறினார். நாடாளுமன்ற வேட்பாளராக இருந்தபோது மோடியைச் செல்லமாகக் கண்டித்த தேர்தல் ஆணையம், பிரதமராக இருந்தபோது அவருக்கு சகல சுதந்திரங்களையும் வழங்கியது.
தேர்தல் பிரச்சார உஷ்ணத்தின் மத்தியில் பேசப்படும் மோசமான, பிளவுத்தன்மை கொண்ட, பொய்யான அறிக்கைகள், தேர்தலுக்குப் பிறகு அன்றாட அரசியலைப் பாதிக்காது என்பது மோடியின் வாதம். இப்போதுபோலவே, அப்போதும், அரசியல் வர்ணனையாளர்களில் பெரும்பாலானோர் இந்தக் கூற்றை ஆதரித்தனர்.
கும்பல் வன்முறைச் சம்பவம் நடைபெற்ற வாரங்கள் ஏன் மாதங்கள் கழித்து, அமைதி காக்க வேண்டிய அவசியம் பற்றி மோடி, பூடகமான, பாசாங்கான கருத்தைக் கூறினாலும், அதைக் கேட்டு விமர்சர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். மோடியின் மவுனம் பிரதமர் பதவியைக் களங்கப்படுத்தியிருந்தது. வன்முறையைக் கண்டித்து அவர் கருத்து தெரிவித்தபோது, பெயரளவிலேனும் இந்தப் பதவியின் கண்ணியம் காக்கப்பட்டதாகப் பலரும் நினைத்தனர்.
இந்தியர்கள் vs எதிரிகள்
வன்முறை நடந்தபோது மவுனம் காத்த பிரதமர், அடுத்தடுத்து நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தூண்டிவிடக்கூடிய வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஒருவர் ஒரே பிரதமராகவும் விஷ நாக்கு கொண்ட பேச்சாளராகவும் மாறி மாறி உருவெடுக்க முடியும் என்பதை மோடி நிரூபித்தார். புனைவுக்கு ஒப்பான இந்த இரட்டை நிலையை அவர் தொடர்ந்து வகித்துவந்தார்.
பாஜக அமைச்சர்கள், மாநிலத் தலைவர்கள், எம்பிக்கள், தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சமூக வலைதளப் பிரசாரகர்கள் ஆகியோர், பாஜகவை விமர்சிப்பவர்களையும் எதிர்க்கட்சிகளையும் தேச விரோதிகள் என கூறி, பாகிஸ்தானுக்கு செல்லுமாறு எழுப்பிய கூச்சல்கள் ஒரு சிலர் கூறியதுபோல, கவனச் சிதறல் அல்ல; அதுதான் செய்தியே.
2014இல் புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப காலத்தில், வளர்ந்துவரும் வகுப்புவாதம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மானத்திற்கு பதில் அளிக்க ஆதித்யநாத்தை மோடி அரசு தேர்வு செய்ததற்குக் காரணம் இல்லாமல் இல்லை. எதிர்கட்சிகள் தீவிரவாதிகளை ஆதரிக்கின்றன என்றும், பாகிஸ்தான் திட்டத்துடன் இணைந்து செயல்படுகின்றன என்றும் ஆதித்யநாத் அதிரடியாக முழங்கினார். அமைச்சர்கள் மேஜையைத் தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.
மற்றொரு தேர்தல் பிரச்சாரப் போர்வையில், மோடி இந்தக் கதையாடலைத் தான் கையில் எடுத்துக்கொண்டு ஆதித்யநாத்தை விட ஒரு படி மேலே சென்றார். தன்னை எதிர்ப்பவர்கள், பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள் என்றார். அதோடு அவர் நிறுத்தவில்லை. இதை அவர் 2014 பிரச்சாரத்திலேயே கூறியிருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி ஆகியோரை, இந்தியத் தேர்தல்களைச் சீர்குலைக்க பாகிஸ்தானுடன் சேர்ந்து சதி செய்பவர்கள் எனக் கூறினார். பாஜகவுக்கு அரசியல் எதிர்க்கட்சிகளே கிடையாது, எதிரிகள் மட்டுமே உள்ளனர் என்னும் கருத்தை இதன் மூலம் அவர் வலியுறுத்தினார்.
2014 மே மாதம், பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட மோடி, “என் சக இந்தியர்களுக்கு, அனைத்து இந்தியர்களையும் என்னுடன் அழைத்துச் செல்வேன் என உறுதி அளிக்க விரும்புகிறேன்” எனக்கூறினார்.
அந்த நேரத்தில் இது பெருந்தன்மையின் அடையாளமாக, தீவிரமான தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிறகு புதிதாகத் துவங்கும் விருப்பமாகக் கருதப்பட்டது. இது நம்பிக்கையின் பெரும் பாய்ச்சலாகவும் அமைந்திருந்தது. ஏனெனில் மோடி இத்தகைய பெருந்தன்மையைக் கொண்டவர் என்பதற்கான எந்த அறிகுறியும் வரலாற்றில் இல்லை. 15 ஆண்டுகள் குஜராத்தில் எதிர்க்கட்சிகளை விளம்பு நிலைக்குத் தள்ளி ஆட்சி நடத்தியிருக்கிறார். மாநில சட்டமன்றத்தைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப வளைப்பதற்காக, ஆளுங்கட்சிக்கு ஆதரவான சபாநாயகரின் துணையுடன் எதிர்க்கட்சிகளைச் சட்டமன்றத்திற்குள் நுழையவே அவர் விடவில்லை.
குஜராத்தின் மோடியை விடவும் கூடுதலான விஷத்தன்மை கொண்டவராகப் பிரதமர் மாறிவிட்டார் என்பதைத்தான் கடந்த ஐந்து ஆண்டுகள் உணர்த்துகின்றன. அனைத்து இந்தியர்களையும் தன்னோடு அழைத்துச்செல்வேன் என அவர் கூறியபோது, தன்னோடு வருபவர்கள் எல்லாம் இந்தியர்கள், மற்றவர்கள் எல்லாம் எதிரிகள் என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.
உள்ளுக்குள் இருந்தும் வெளியில் இருந்தும், எதிரிகளால் முற்றுகையிடப்படும் தேசம் எனும் வாதத்தை உருவாக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் 2014 திட்டத்தை மோடியும் அமித் ஷாவும் முன்னெடுத்துச் சென்றனர். முஸ்லிம்கள், எதிர்க்கட்சிகள், பாஜகவை விமர்சிப்பவர்கள், தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆகிய அனைவருமே எதிரிகள்தான். இந்த எதிரிகளை அழித்துப் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான மீட்பராக மோடி சித்தரிக்கப்பட்டார்.
தனது உரைகளின் போது தன்னை மூன்றாம் நபர் போலக் குறிப்பிட்டுக்கொள்வதற்காக மோடி கேலி செய்யப்படுகிறார். ஆனால், பாஜகவின் கதையாடலில் அவர் இந்தியாவை உருவகப்படுத்துகிறார். பிப்ரவரி 7இல் நாடாளுமன்றத்தில் கடைசியாக நிகழ்த்திய அழுத்தமான உரையில், மோடி தனது வழக்கமான பாணியில், “மோடியை வெறுப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள் தேசத்தை வெறுக்கத் துவங்கிவிட்டன” என்றார்.
புதிய இந்தியா
குறி வைக்கப்பட்ட வகுப்புவாத வன்முறை அதிகரிப்பு, வன்முறைக்கான பீதி, அரசியல் எதிர்கட்சிகள் மற்றும் எதிர்வாதம் செய்யும் இந்தியர்களை எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கு, வெறுப்புப் பேச்சை பேச்சை சகஜமாக்குவது, மிரட்டலைப் பிரதான அரசியல் மொழியாக்குவது. இதுதான் இன்றைய நிலவரம். மோடி- ஷாவின் திட்டம் ஐந்து ஆண்டுகளின் முடிவில் இந்தியர்களுக்கு இத்தகைய சூழலையே தந்திருக்கிறது.
ஆனால், மோடி இல்லை எனில் வேறு யார் என்று மோடியின் ஆதரவாளர்கள் மட்டுமின்றி, மோடியின் விமர்சகர்களும் கேட்கும் டிவி தேசத்தையும் பாஜகவின் ஆட்சி நமக்கு அளித்திருக்கிறது.
மீண்டும் மீண்டும் விஷத்தைக் கக்கும் உரையை நிகழ்த்தினாலும், சிறந்த பேச்சாளர் என அழைக்கப்படக்கூடிய இன்னொருவர் இல்லை என்பது உண்மைதான். தன்னுடைய அரசியல் எதிராளிகளை எதிரிகளாகச் சித்தரிக்க அவரைப் போலப் பொய்களை வெற்றிகரமாகச் சொல்லக்கூடியவர் வேறு யாரும் இல்லைதான். சுய கௌரவம் மிகவும் தாழ்வாக இருக்கும் மக்களின் நிலையையே தனக்கான போர் முழக்கமாக மாற்றிக்கொள்ளக்கூடியவர் வேறு யாரும் இல்லை என்பதும் உண்மைதான்.
எதிர்ப்புக்கும் அரவணைப்புக்கும் பழகிய அரசியல் எதிர்க்கட்சிகளும் அரசியல் கருத்தாளர்களும் மோடியின் ஆட்சியில் மூலையில் தள்ளப்பட்டதாக உணர்ந்தனர். அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக உருவெடுக்க மோடிக்கு ஓராண்டு அவகாசம் அளித்துக் காத்திருந்த எதிர்க்கட்சிகள் அந்த எண்ணமே அவரது செயல் திட்டத்தில் இல்லை என உணர்ந்த பிறகு பாஜக மீதான தாக்குதலை நடத்த நாடாளுமன்றத்தில் தங்களை மீண்டும் ஒருங்கிணைத்துக்கொண்டன.
ஆனால், மோடி – ஷா – பாஜக – ஆர்எஸ்எஸ் திட்டத்தில் நாடாளுமன்றம் என்பது ஒரு உபரி அம்சம்தான். நாடாளுமன்றத்திற்கு வெளியே, வெகுஜன ஊடகம், மாபியா கும்பலின் அடியாட்கள் போல செயல்பட்டு, ஊடகத் தேசத்தைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. ‘மோடி இல்லை எனில் வேறு யார்? எனக் கிளிப்பிள்ளைகள் போல அனைவரும் சொல்லும்வரை இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.
பாஜகவின் 2019 தேர்தல் பிரச்சாரம், பிப்ரவரி 25இல் தில்லி தேசியப் போர் நினைவுச் சின்னத்தின் துவக்க விழாவில் மோடியின் பேச்சுடன் துவங்கியது, கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிப்பட்ட வாதத்தின் அடிப்படையில்தான் அந்தப் பேச்சு அமைந்திருக்கிறது.
எதிர்கட்சிகள் இந்தியாவைத் துண்டு போட முயற்சிப்பதாகவும், தீவிரவாதிகளின் மொழியில் பேசுவதாகவும் மோடி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார்.
தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு முறை மோடிக்குச் சகல சுதந்திரங்களையும் வழங்கும் என்பது தெளிவு. ஆனால், தேர்தல் காலத்தின் இந்த மோசமான, பிளவுபடுத்தும் தன்மை கொண்ட முயற்சியை வெறும் பிரச்சார உத்தி எனச் சரியாக யோசிக்கும் மக்கள் கருதினால் அது மிகப் பெரிய தவறாகவிடும்.
நாடு ஒரு இருத்தலியல் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. பன்முகம் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா, பெரும்பான்மைவாத துவேஷம் நிறைந்த புதிய இந்தியாவுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளப் போராடுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாம் பார்த்துள்ள, மோடி – ஷா – பாஜகவின் வன்முறை மொழி, கட்சியின் அரசியல் இலக்கை அடைவதற்கான நிஜ வன்முறையாக வேகமாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் இது மாறப்போவதில்லை.
அஞ்சலி மோடி
நன்றி: தி ஸ்க்ரால்
–
ஒரே வள வள கொள கொள