ஏப்ரல் 11 அன்று தேர்தல் ஆணையம் நமோ டிவி ஒலிபரப்புக்கு தடை விதித்தது. இநதச் சேனல் தேர்தல் விதிமுறையை மீறுவதாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தனர்.
தேர்தல் விதிமுறையை மட்டும் தான் நமோ டிவி மீறியுள்ளதா, அதற்கும் மேல் என்கிறது இந்தக் கட்டுரை.
(இந்தக் கட்டுரை நமோ டிவி தடை செய்யப்படுவதற்கு முன்பு எழுதப்பட்டது).
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் உரைகளிலும், பொதுக்கூட்ட பேரணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்தும் 24×7 சேனல் ஒன்று மார்ச் 31, 2019இல் தொடங்கப்பட்டது. நமோ டிவி (NaMo TV) என்றழைக்கப்படும் இந்தச் சேனல் அனைத்து முக்கிய டி.டி.எச். நெட்வொர்க்குகளிலும் கிடைக்கிறது. இந்தச் சேனல் தொடங்கப்பட்டதில் இருந்து, அதன் சட்டரீதியிலான அம்சங்கள் குறித்தும், உரிமை சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன. நமோ டிவி இப்போது தொடங்கப்பட்டிருப்பது தேர்தல் நடத்தை விதிமீறல் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் முறையிட்டுள்ளன. இந்தச் சர்ச்சை தொடர்பாக நீங்கள் அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள் இதோ:
நமோ டிவிக்கு உரிமம் உள்ளதா?
நமோ டிவிக்கு உரிமம் இல்லவே இல்லை. தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மார்ச் 31, 2019இல் வெளியிட்ட அறிவிப்பின்படி, அனுமதிக்கப்பட்ட தனியார் சேட்டிலைட் டிவி சேனல்கள் பட்டியலில் நமோ டிவி இடம்பெறவில்லை.
செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு அல்லது ஹோம்-ஷாப்பிங் என எந்த வகை சேனல் என்றாலும், செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்புவதற்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து சேனல்களின் விவரமும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சேட்டிலைட் சேனல்கள் பட்டியலில் இடம்பெறும். ஒளிபரப்பு உரிமம் பெறுவதற்காக நமோ டிவி சார்பில் விண்ணப்பம்கூட வரவில்லை என்று அந்த அமைச்சக வட்டாரம் வெளியிட்ட தகவலில் உண்மை உறுதி செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் பட்டியலில் நமோ டிவி இல்லாத நிலையில், அந்தச் சேனல் யாருடையது, அதன் உரிமையாளர்களிடம் பாதுகாப்பு நடைமுறைகள் சார்ந்த அனுமதி உள்ளதா, டிவி சேனல்களுக்கான வெளிநாட்டு முதலீடு தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பன போன்ற எந்த விவரமும் இல்லை.
நமோ டிவியின் நோக்கம் என்ன?
நமோ டிவியின் நோக்கம் விளம்பரமா, செய்தியா, அல்லது வேறு ஏதாவதா என்று பல்வேறு கேள்விகளுடன் சர்ச்சை எழுந்த நிலையில், “நமோ டிவி இந்தி செய்திச் சேவை” என்று டாடா ஸ்கை நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவல் பதிவு வெளியானது. ஆனால், பின்னர் என்.டி.டி.வி.யிடம் பேசிய டாடா ஸ்கை நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி, “நமோ டிவி ஒரு செய்தி சேனல் அல்ல, ஆனால் சிறப்புச் சேவை சேனல்” என்று விளக்கம் அளித்தார்.
இப்போது விஷயம் இதுதான். ஹோம்-ஷாப்பிங், செய்தி, பொழுதுபோக்கு என எந்த வகை சேனலாக இருந்தாலும், செயற்கைக்கோள் சேனல் என்ற முறையில் நமோ டிவி ஒளிப்பரப்பப்படுவதற்கு உரிமம் தேவை. இதுவே நடைமுறை என்கிறபோது, இந்தச் சேனலை ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது எப்படி?
சரி, நமோ டிவி ஒரு சிறப்புச் சேவைச் சேனலா? பொதுவாக சேவைச் சேனல்கள் என்பவை நடனம், இசை, பஜனைகள் போன்ற பிரிவுகளின் கீழ் வரும். வெவ்வேறு டி.டி.எச். நிறுவனங்களும் தங்களுக்கென பற்பல சேவைச் சேனல்களைக் கொண்டுள்ளனர். அப்படி இருக்கும்போது, நமோ டிவி ஒரு சிறப்புச் சேவைச் சேனல் என்றால், பல்வேறு டி.டி.எச். நிறுவனங்களும் அந்தச் சேனலைத் தருவது எப்படி?
மேலும், பாஜகவிடமிருந்துதான் நமோ டிவிக்கான அலைவரிசையை டாடா ஸ்கை பெறுகிறதே தவிர, வேறு யாரிடமிருந்தும் இல்லை என்பதையும் அந்த டி.டி.எச். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியே கூறியிருக்கிறார்.
இது உண்மை எனில், நமோ டிவி என்ற பெயரில் ஓர் அரசியல் கட்சி தமது வளர்ச்சித் திட்டங்களையும் சாதனைகளையும் ஒளிபரப்புவது தேர்தல் நடத்தை விதிமீறல்தான் என்பது தெளிவு.
நமோ டிவியும் செய்தி ஒளிபரப்பு விதிகளும்
நமோ டிவி இணைய டிவி சேனல் என்றும், அதன் அலைவரிசை டிவியில் ஒளிபரப்பப்படுகிறது என்றும் வைத்துக்கொள்வோம். அப்போதும்கூட, அந்தச் சேனலின் செய்தி உள்ளடக்கத்துக்குச் செய்தி ஒளிபரப்பு விதிமுறைகள் பொருந்தும்.
இணையச் செய்தி வலைதளங்களுக்கு ஒளிபரப்பு விதிமுறைகள் பொருந்தாது என்று கருதப்பட்டுவந்தது. ஆனால், 2014இல் ஒரு டிஜிட்டல் செய்தி வலைதளம் ஒன்று தனது பங்குகளில் ஒரு பகுதியை வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு விற்க முற்பட்டபோது, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் (FIPB) வழங்கும் ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு, அரசு அப்போது ஒரு வாதத்தை முன்வைத்தது. டிஜிட்டலாக இருந்தாலும், அதன் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கு செய்தி ஒளிபரப்பு விதிகள் பொருந்தும் என்பதே அரசின் வாதம்.
ஆக, நமோ டிவிக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? காரணம் உங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்ததுதான்.
நமோ டிவி உதயமானது எப்போது?
குஜராத்தில் இதேபோல் ஒரு ‘சம்பவம்’ 2012இல் நடந்தது. இவ்விரு சேனல்களுமே ஒரே மாதிரியானவைதான். அம்மாநிலத்தில் 2012ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளில், நமோ டிவி உதயமானது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகள் பின்பற்றப்படாததால் அந்தச் சேனல் மறுநாளே இழுத்து மூடப்பட்டது. மோடியின் சாதனைகளைத் தூக்கிப்பிடித்த குஜராத்தின் நமோ டிவி சேனல் அப்போது கேபிள் நெட்வொர்க்குகள், டி.டி.எச். மற்றும் டிஜிட்டல் டிவி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
அதேவேளையில், அந்தச் சேனல் மீது தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளை விதித்தது. அந்தச் சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு (MCMC) மூலம் அனுமதி பெற வேண்டும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அந்தச் சேனல் பின்பற்றுகிறதா என்பதை மாவட்ட தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக, அந்தச் சேனலின் செலவினங்கள் அனைத்தும் பாஜகவின் கட்சி செலவினத்துக்குள் வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கறார் காட்டியது.
குஜராத்தின் அப்போதைய அமைச்சர் சவுரவ் படேல், பாஜக தலைவர் பாரிந்து பகத் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ்தான் நமோ டிவி திட்டம் செயல்படுத்தப்பட்டதாக, 2012இல் ‘டெய்லி பாஸ்கர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
எனினும், இந்த நமோ டிவியும் அதுவும் ஒன்றுதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. நமோ டிவி சேனலுக்கு யார் உரிமையாளர்கள் என்பது குறித்த எந்த விவரமும் தெளிவாக இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
நமோ டிவிக்கு அரசு சொல்லும் பதில் என்ன?
தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளித்துள்ள தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம், நமோ டிவி என்பது டி.டி.எச். சேவை நிறுவனங்களால் தொடங்கப்பட்ட ஒரு விளம்பரத் தளம் என்றும், அதற்கு அரசின் ஒப்புதல் தேவையில்லை என்றும் கூறியிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அரசியல் கட்சி ஒன்றினால் அந்தச் சேனல் குறிப்பிட்ட காலத்துக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது என்றும், அது தமது வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் அமைச்சகம் தமது பதிலில் தெரிவித்துள்ளது.
“இது, இப்போதைக்குத் தகவல் மற்றும் ஒலிபரப்பு வரம்புக்கு அப்பாற்பட்டது. உதாரணமாக, பல்வேறு டிஜிட்டல் தளங்களும் எந்த விதியின் கீழும் இப்போதைக்கு நிர்வகிக்கப்படுவதில்லை. அவற்றைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகமோ அல்லது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சமோ கவனிப்பதில்லை. ஆகவே, இதையும் அதைப் போலவே எடுத்துக்கொள்ளலாம்” என்று அமைச்சக வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
மேலும், நமோ டிவி என்பது வழக்கமான டிவி சேனல் அல்ல என்றும், எனவேதான் அனுமதிக்கப்பட்ட சேனல்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அமைச்சகம் கூறுகிறது.
அரசே தனது விதிகளை மீறுகிறதா?
ஆம், அப்படித்தான் தெரிகிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையின் அனுமதிக்கப்பட்ட தனியார் சேட்டிலைட் டிவி சேனல்களின் பட்டியலில் இல்லாமல், நாட்டின் பிரதமரை முன்னிறுத்தும் ஓர் அரசியல் சேனல் எவ்வித உரிமமும் இல்லாமல் அனைத்து முக்கிய டி.டி.எச். தளங்களிலும் ஒளிபரப்பப்படுவது எப்படி?
இது தொடர்பாகத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் விளக்கம் கோருகிறது தேர்தல் ஆணையம். ஆனால், அந்தச் சேனல் வெளிப்படையாகவே அனைத்து விதிமுறைகளையும் உடைத்தெறிந்துவிட்டு, தேர்தல் நடத்தை விதிகளையும் அப்பட்டமாக மீறுகின்றபோது, வெறும் விளக்கம் மட்டும் கேட்டால் போதுமா?
நன்றி: தி க்வின்ட்