மோடியை விடவும் குறைவான வெறுப்புப் பேச்சுக்களுக்காக பால் தாக்ரே வாக்களிக்கும் உரிமையை இழந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான விமானத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலை மதவாதமயமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
ஏப்ரல் 1ஆம் தேதி வார்தாவில் நடைபெற்றக் கூட்டத்தில் அவர் கேரளாவின் வயநாட்டதைத் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்தெடுத்ததற்காகக் கடுமையாக விமர்சித்தார். இதை இந்து சிறுபான்மைத் தொகுதி என அவர் வர்ணித்தார்.
மற்றொரு இடத்தில், தீவிரவாதிகளில் ஒரு பிரிவினரை காவித் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டதற்காக காங்கிரஸ் கட்சியை அவர் சாடினார்.
இந்தப் பேச்சுகள் தொடர்பான தேர்தல் ஆணைய எதிர்வினை இதுவரை போதுமானதாக இல்லை. பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவ சேனா, இதே போன்ற செயலுக்காக 1980கள் மற்றும் 1990களில் இதற்கான விலையைக் கொடுத்தது என்பதைப் பார்க்கும் போது இது தெளிவாகிறது. அப்போது தேர்தல் ஆணையம், பால் தாக்கரே, கட்சியின் வேட்பாளர் டாக்டர் ரமேஷ் பிரபு ஆகிய இருவரையும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிதது. இதே காலகட்டத்தில் இருவரின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
1970களிலிருந்து தனது மருத்துவராக இருந்துவந்த பிரபுவுக்கு ஆதரவாகத் தேர்தலில் பிரச்சாரம் செய்த தாக்கரே, 1987 டிசம்பரில் மகாராஷ்டிரா சட்டமன்ற இடைத்தேர்தலில், முஸ்லிம் பெயர்களைக் குறிப்பிட்டு, இந்துக்கள் சக இந்துவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
காந்திய சோஷலிசத்தின் அடிப்படையில் 1980ல் உருவாக்கப்பட்ட பாஜக, அப்போது 1987இல் ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்தக் காலத்தில் தாக்கரேவின் பேச்சு எல்லை மீறுவதாக இருந்தது. தேர்தல் களம் காங்கிரஸுக்கும் சிவசேனாவுக்கும் இடையில் நேரடி மோதலாக அமைந்தது. தாக்கரே, முஸ்லிம்களைப் பாம்புகள் என்றும் லாண்ட்யா (மோசமான செயலைக் குறிக்கும் சொல்) என்றும் குறிப்பிட்டார்.
மூன்று பேச்சுகள் அவர் வாக்குரிமையை இழக்கக் காரணமாக அமைந்தன. அவற்றில் ஒன்று, 1987 நவம்பரில் அவர் பேசியது. “இங்கு திரண்டிருக்கும் இந்து சகோதர, சகோதரிகள், அன்னையர்கள் அனைவரையும் சிவசேனாவை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தாக்கரே வேண்டுகோள் விடுத்தார். இப்படி நீங்கள் செய்யவிட்டால் நாம் வாழ்வது கடினமாக இருக்கும் ஏனெனில், அவர்கள் வருவார்கள், மதப்போர் நடக்கும்” என்றும் அவர் கூறினார்.
சிவசேனா வேட்பாளரை எதிர்த்து நின்றவர்கள், காங்கிரஸ் வேட்பாளர் பிரபாகர் குந்தே, ஜனதா கட்சியின் பிரான்லால் வோரா ஆகியோர். இந்நிலையில் தாக்ரே எந்த முஸ்லிம் சட்டமன்றத்திற்கு வரக்கூடும் என கருதினார் என்று தெரியவில்லை.
1987 டிசம்பர் 9ஆம் தேதி, முஸ்லிம் வேட்பாளர்கள் யாரும் களத்தில் இல்லாத நிலையில், இரண்டாவது பேச்சில் தாக்ரே இவ்வாறு கூறினார்:
“இந்த வெற்றி என்னுடையதாக அல்லது சிவசேனாவுடையதாக அல்லது டாக்டர் பிரபுவின் வெற்றியாக இருக்காது. இது இந்துயிசத்தின் வெற்றியாக இருக்கும். இந்த வெற்றிக்கு நீங்கள் முக்கியக் காரணமாக இருப்பீர்கள். இருக்க வேண்டும். உங்கள் சாதி, இனம், கடவுள், இந்து மதம் ஆகியவை எதிர்கொண்டுவரும் கஷ்டங்களைக் களைவதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. இங்குள்ள மசூதிகளை எல்லாம் தோண்டத் துவங்கினால், இந்துக் கோயில்களைக் காணலாம். மதத்தின் பெயரால் தேர்தலில் போட்டியிடும் பிரபு எனும் நபர் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.”
மறுநாள் தாக்ரே இப்படிக் கூறினார்:
“முஸ்லிம்களிடமிருந்து ஒரு வாக்குகூடக் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களில் யாரேனும் இங்கிருந்தால் நன்றாக யோசிக்கட்டும்”.
“அவர்கள் வாக்குகள் எனக்குத் தேவையில்லை. எனக்கு உங்கள் (இந்து) வாக்குகள்தான் வேண்டும். சிவசேனாவின் டாக்டர் ரமேஷ் பிரபுவைத்தான் நீங்கள் சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும், இல்லை எனில் எல்லாம் முடிந்தது. விரைவில் இந்துஸ்தான் பச்சைமயமாகிவிடும்”.
மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர் என்றபோதிலும் பிரபு தன் பங்கிற்கு, குஜராத்தி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் தோற்றால் இந்து மதம் தோற்றதாகக் கருதுவேன் என்றார்.
இடைத்தேர்தலில் பிரபு வெற்றி பெற்றார். பிரச்சாரத்தின்போது தாக்ரேவைப் பொருட்படுத்தாமல் இருந்த காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் சுதந்திர போராட்ட வீரருமான குந்தே, மக்கள் பிரதிநிதுவச் சட்டத்தை மீறியதாக, பாம்பே உயர் நீதிமன்றத்தில் தாக்ரே, பிரபுவு ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
ஒராண்டு கழித்து 1989 ஏப்ரலில், பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.பருச்சா, குந்தேவின் வாதத்தை ஏற்று, பிரபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்தார். ஆர்.பி.ஏ சட்டத்தின் 99ஆவது பிரிவின் கீழ் தாக்ரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த சட்டத்தின் 123ஆவது பிரிவின் படி, “ஒருவரது மதம், இனம், சாதி அல்லது மொழி சார்பில் வாக்களிக்க அல்லது வாக்களிக்காமல் இருக்குமாறு, வேட்பாளர் அல்லது அவரது ஏஜெண்ட் அல்லது வேட்பாளர் அனுமதி பெற்று வேறு யாரேனும் கோரக் கூடாது” என தெரிவிக்கிறது.
மற்றொரு துணைப் பிரிவு “மதம், இனம், சாதி அல்லது சமூகம் அல்லது மொழி அடிப்படையில், இந்திய மக்களின் பல்வேறு பிரிவினர் இடையே பகைமையை ஏற்படுத்த அல்லது அதற்கான முயற்சியில், வேட்பாளர் அல்லது வேட்பாளர் ஆதரவுடன் வேறு யாரேனும் ஈடுபடுவதை”த் தடை செய்கிறது.
தாக்ரேயும் அவர் பேசும்போது மேடையில் அமைதியாக அமர்ந்திருந்த பிரபுவும் இந்த நெறிமுறைகளை மீறியிருக்கிறார்கள். இருவரும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் 1995இல் பாம்பே நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. பிரபு பதவி நிக்கம் செய்யப்பட்டார். இருவருடைய வாக்குரிமைகளும் பறிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம், தாக்ரேவின் கருத்துகள் 123 பிரிவின் கீழ் சட்ட விரோதமானவை எனத் தெரிவித்தது. இதற்கு பிரபு ஆதரவு தெரிவித்ததும் குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக வாக்குரிமையைப் பறித்த இந்தத் தீர்ப்பு, மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என நீதிபதிகள் ஜே.எஸ்.வர்மா, என்.பி.சிங், வெங்கடசாமி ஆகியோர் கருதினர். அவர்கள் இவ்வாறு தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர்:
“ஒரு அரசியல் கட்சின் முக்கியத் தலைவரால் இது போன்ற உரை நிகழ்த்தப்பட்டது குறித்து எங்கள் கவலையைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை. தேர்தல் பிரச்சார உரையில், மொழியில் கட்டுப்பாடு இல்லாத தன்மை, குறிப்பிட்ட மக்களைத் தரக்குறைவாகக் குறிப்பிடும் வார்த்தைகள் ஆகியவை கண்டிக்கப்பட வேண்டியவை. இந்தத் தீர்ப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் நாகரிகத்தையும் பொறுப்பேற்கும் தன்மையையும் வலியுறுத்துவதற்காக மட்டும் அல்ல, நம்முடைய கலாச்சாரத்தின் அங்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் விழுமியங்களைக் காப்பாற்றவும், மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல்களைப் பாதுகாக்கவும்தான். இந்த வழக்கில் ஆட்சேபணைக்குரிய பேச்சுகள், நம்முடைய செழுமையான கலாச்சார மதிப்புகளை புறந்தள்ளியுள்ளதோடு, நம்முடைய மதச்சார்பற்ற கொள்கையையும் பாதித்துள்ளன. எதிர்காலத் தேர்தல் பிரச்சாரத்தில் எங்கள் கருத்துகள் கொஞ்சமேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறோம்”.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மோடி இதே சட்டங்களை மீறியிருக்கிறார்.
தாக்ரே வழக்கில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க இன்னும் சில ஆண்டுகள் ஆனது. குந்தே பாம்பே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் தன்னுடைய ஏகமனதான அறிக்கையை அரசுக்கு – சட்டத் துறை மூலம் ஜனாதிபதிக்கு – அனுப்பிவைத்தபோது, தாக்ரேயும் பிரபுவும் வாக்களிக்க முடியாத நிலை உண்டானது. 2004இல்தான் அவர்கள் மீண்டும் வாக்களிக்க முடிந்தது.
அரசியல்வாதிகள் அஞ்சிய வலுவான மற்றும் சுயேச்சையான தேர்தல் ஆணையம் மற்றும் அரசுக்கு எதிரான உறுதியான தீர்ப்பை வழங்க அஞ்சாத உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது.
இந்தியச் சமூகத்தைப் பிளவுபடுத்தக்கூடிய விதத்தில், பிரதமர் மோடி, தாக்ரேவைப் போலவே பேசுகிறார். அதற்கு மேலும் பேசுகிறார். ஆனால், இதுவரை தேர்தல் ஆணையம் மோடிக்கு மக்கள் பிரதிந்தித்துவச் சட்டத்தைப் படித்துக்காட்டவில்லை.
சுஜாதா ஆனந்தன்
சுஜாதா ஆனந்தன், மும்பை நூலாசிரியர், பத்திரிகையாளர்.
நன்றி; தி வயர்
https://thewire.in/politics/bal-thackeray-disenfranchised-narendra-modi-polarisation