குடியரசு பாணி தேர்தலைக் கொண்டது இந்திய நாடாளுமன்ற முறை. பாரதிய ஜனதா கட்சி நான்கு விவகாரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. (i) மோடி வழிபாடு (ii) துல்லியத் தாக்குதல்கள் மற்றும் பாலகோட் குண்டுவீச்சைக் காட்டி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் காப்பாளராக மோடியை முன்னிறுத்துதல் (iii) மோடியின் பொருளாதாரச் சாதனைகள் (iv) நேரு காலம் தொட்டு தொடர்கிற காங்கிரஸின் வாரிசு அரசியலைக் குறிவைத்தல்.
மிக முக்கியமாக, தான் ஆட்சியைப் பிடிக்க உதவிய இந்து மதவாதத்தை இந்த முறை வெளிப்படையாகக் காட்டிக்கொள்வதை பாஜக தவிர்த்துவவருகிறது. மதம் சார்ந்தததும், பாபர் மசூதி – ராமர் கோயில் விவகாரம் குறித்ததுமான நிலைப்பாட்டை வெளிக்காட்டிக் கொள்வதில் அக்கட்சி மிகவும் அப்பட்டமாகச் செயல்படவில்லை. கடந்த காலம், தற்காலம், எதிர்காலம் என எப்படிப் பார்த்தாலும் இது பாஜகவைப் பொருத்தமான விதத்தில் பிரதிபலிக்கவில்லை.
பாஜகவின் வெற்றியில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சங்கப் பரிவார் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளிடமிருந்து அக்கட்சி தன்னைப் பிரித்துக்கொள்ள முடியாது. ஒரு மசூதியை ஒட்டுமொத்தமாக அழித்தது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களைத் தாக்கியது, மதக் கலவரங்களைத் தூண்டியது, இந்து மதத்துக்குத் திரும்புவதை வலியுறுத்தும் ‘கர் வாப்ஸி’யை ஊக்கப்படுத்துவதை நிர்பந்திப்பது, எதிர்ப்புக்குரிய முத்தலாக் சட்ட மசோதாவை இயற்றுவது, கும்பல் கொலைகளைத் தூண்டுவது, குஜராத் படுகொலைகளை நீடிக்கச் செய்தது எனப் பற்பல செயல்களைப் பல்லாண்டுகளாக மேற்கொண்டுவருகின்றன சங்கப் பரிவார்.
பாஜகவின் ‘மதசார்பற்ற முகம்’ என்பது வெறும் வெளிவேடம் எனக் கருதப்படுவதால் அக்கட்சி, சிறுபான்மையின உறுப்பினர்கள் சிலரைத் தன்னுடன் இணைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், சமரசமற்ற இந்துத்துவ அடிப்படைவாத நடவடிக்கைகளில் தீவிர சங்கப் பரிவாரத் தொண்டர்களையும், ஆர்எஸ்எஸ் ஷாகாக்களையும் மென்மேலும் முன்னோக்கி நகர்த்தக்கூடிய கொள்கைகளையே கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக செயல்படுத்திவந்துள்ளது.
பன்மைத்துவம் நிறைந்த இந்தியாவின் மதசார்பின்மையைப் ‘போலி’ மதச்சார்பின்மை என்று சங்கத்தின் கருத்தியல் நிராகரிக்கிறது. ‘போலி’ என்னும் சொல்லே அதன் வாதத்தின் சாரத்தை எடுத்துச் சொல்கிறது.
பாஜகவின் ரத யாத்திரை தொடங்கி பாபர் மசூதி இடிப்பும், கோயில் இயக்கமும் வரை அனைத்துமே சமூக உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமே என்று பாஜக நம்மை நம்பவைக்க விரும்புகிறது. ஆனால், ஒட்டுமொத்த சங்கப் பரிவார் அங்கங்களையும் கொண்டுள்ள பாஜகவின் தேர்தல் படையோ இந்துத்துவச் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளது. பாஜகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியின் ஒவ்வொரு அசைவிலும் சகிப்பின்மையை ஊக்குவிக்கும் அம்சம் நிறைந்துள்ளது. இந்த நோக்கத்தை அடக்கி வாசிக்கும் பாஜக, வளர்ச்சிக்கு வித்திடும் கட்சியாகத் தன்னைச் சொல்லிக்கொள்கிறது. குறிப்பாக, தேர்தல் காலத்தில் தன் செயல் திட்டத்தை மறைப்பதில் தெளிவாக இருக்கிறது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அக்கட்சியின் அனைத்து மோசமான கொள்கைகளும் தன்மையும் மாறப்போவதில்லை. அடுத்த ஆண்டுகளுக்கு (2019 முதல் 2024 வரை) மீண்டும் ஆட்சியில் இருந்தாலும் சரி, ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டிருந்தாலும் சரி தன்னுடைய நிலையிலிருந்து பாஜக மாறாது. தனது நிஜ முகத்தைக் காட்ட மறுக்கும் பாஜக, சங்கப் பரிவார இயக்கங்களின் சகிப்பின்மையையும் வெறுப்பரசியல் உத்திகளையும் முற்றிலும் மறைக்கிறது. ஆனால், அவற்றை நேரடியாகவும் கமுக்கமாகவும் ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறது.
பாஜக தமது தேர்தல் படையில் சங்கப் பரிவாரை பெருமளவில் கொண்டுள்ளது. பாபர் மசூதி இடிப்புக்காக பாஜக மன்னிப்புக் கோரியதுண்டா? மசூதி அழிப்பு மீது 1993இல் பாஜக வெளியிட்ட வெள்ளை அறிக்கை, மசூதித் தகர்ப்பை முழுக்க முழுக்க அங்கீகரித்திருக்கிறது. இந்து தாலிபான்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் நான் கூறியிருக்கிறேன். பாமியான் சிலைகளை முல்லா ஓமர் அழித்தார். அதற்கும், 16ஆம் நூற்றாண்டின் மசூதியை இவர்கள் இடித்ததற்கும் என்ன வேறுபாடு?
மசூதியை இடித்த இந்துக்களுக்கு அந்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்ட வேண்டும் என்பதே விருப்பம். உச்ச நீதிமன்றத்திலுள்ள தங்கள் முதன்மை வழக்கில் அவர்கள் அவ்வாறு வாதிடுவதற்கே தகுதி இல்லை என்று யாருமே வாதிடவில்லை. ஆனால், ‘இந்துக்கள்’ என்ற பெயரில் திணிக்கப்படும் உணர்வுகள் இந்திய அரசியல் சாசனத்தின் கோட்பாடுகளை மழுங்கடிக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
பாஜக தலைவர்கள் நேர்காணல்களிலிருந்து பாதியிலேயே வெளியேறுவார்களே தவிர, ஒருபோதும் குஜராத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்க மாட்டார்கள். கிறிஸ்ட்சர்ச் மசூதி படுகொலையை நியூஸிலாந்து கையாண்ட விதத்தைப் பாருங்கள். பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்துத்துவத் தொண்டர்களும் ஆதரவாளர்களும் நடத்திய பல்வேறு கூட்டுக் கொலைகளைக் கண்கூடாகப் பார்த்தோம். அவ்வாறு கூட்டுக் கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் பிரச்சாரப் பேரணியில் கலந்துகொள்வது எதைக் காட்டுகிறது? அவர்களின் ‘உணர்வுகளை’ ஆதித்யநாத் பகிர்ந்துகொள்கிறார் என்பதாகத்தானே நாட்டு மக்கள் அதைப் பார்க்க முடியும்?
வடகிழக்கு மாநில மக்கள் மாட்டிறைச்சி உண்பது ஏற்கத்தக்கதுதான் என அவர்களிடம் பாஜக சொல்லுமா? அதையே இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் சொல்லுமா? ‘கர் வாப்சி’ பிரச்சாரம் என்பது மதச் சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது. அதைக் கண்டிப்பதன் மூலம் இந்தக் கொள்கையைக் கைவிடச்செய்வதாக பாஜக உறுதியளிக்குமா?
எந்த நம்பிக்கையின் அடிப்படையிலும், கட்டாய மதமாற்றம் என்பது வெறுக்கத்தக்க செயல் என்று 1976இல் உச்ச நீதிமன்றம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறது. எனவே, ‘கர் வாப்ஸி’ பிரச்சாரம் என்பது வெறுக்கத்தக்கது அல்ல என்ற பாவனையைத் துளியும் ஏற்க முடியாது. சமூக ரீதியில் வெறுக்கத்தக்க பிரச்சாரங்களில் ஈடுபடுவது மதச் சுதந்திரத்தை அவமதிக்கும் செயல். இவ்வாறாக, கட்டாய மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜகவினர், மதமாற்றத்துக்கு எதிரான சட்டங்களைப் பெரும்பாலும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்தே இயற்றுவதைப் பார்க்கலாம். எம்.எஃப். உசைன் விவகாரம், கலைகள், பேச்சு மற்றும் எழுத்து சுந்திரம் மற்றும் சமூகப் போராளிகளின் கொலைகள் என அனைத்தும் நமக்குச் சொல்லும் செய்திகளைப் பாருங்கள்.
பாஜக அதிகாரத்தைப் பிடிக்கத் தனக்கு உதவிய தனது கடந்த கால அடிப்படைவாதத்தைத் துறக்கவோ அல்லது தீமைகளைப் புறந்தள்ளவோ போவதில்லை. ஆட்சி நிர்வாகத்தில் சமத்துவம் பேணுதல் என்பது வளர்ச்சியைவிட முக்கியமானது. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள். பெரிய எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். இணையற்ற வேற்றுமைகளுடன் இந்தியா ஒன்றாக இருக்கிறது.
அரசியல் கட்சி ஒன்றினைப் பதிவு செய்வதற்கு, அக்கட்சி “மதசார்பின்மை”யைப் பின்பற்றுவது அடிப்படை என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 29(A)(5) சொல்கிறது. இந்த விஷயத்தில் பொய் அறவே கூடாது. வாக்கு சேகரிக்கும்போது எந்த ஒரு மதத்தையும் முன்னிறுத்திப் பேசுவதற்கு அனுமதியில்லை என்று 2017இல் நடந்த அபிராம் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்தது இங்கே நினைவுகூரத்தக்கது. பாஜக மற்றும் சங்கப் பரிவாரத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் எந்தச் செயலும் தேர்தல் முறைகேடாகவோ அல்லது குற்றமாகவோ பார்க்கப்படாது. எந்த வேட்பாளரையும் கட்சியையும் குறிப்பிடாமல் இதை நான் எழுதுகிறேன். பாஜகவின் பெற்ற வெற்றி அனைத்துக்கும் காரணம் அதன் சகிப்பின்மையும் திரிக்கப்பட்ட இந்துத்துவக் கொள்கையும்தான். இது அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் மறைந்துவிடப் போவதில்லை.
தமது கட்சி மதசார்பற்றது என்றும், சில தவறான விஷயங்கள் (பாபர் மசூதி இடிப்பு விவகாரம்) நடந்திருந்தாலும்கூட எப்போதுமே மதச்சார்பற்ற கட்சியாகச் செயல்படவே விரும்புகிறது என்றும் பாஜக தேர்தல்களில் வாக்குகளை அறுவடை செய்வதற்காகப் பசப்புவதுண்டு. இத்தகைய பேச்சுகள் அனைத்துமே சாரமற்றவை.
மத ரீதியிலான துணை தேசியவாதத்தைக் கொண்டே பாஜகவின் எழுச்சி நிறுவப்பட்டுள்ளது. பாஜக, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2014-2019) மதரீதியிலான சகிப்பின்மை, வன்முறையையும் கலவரங்களையும் செழித்தோங்கச் செய்துவந்திருக்கிறது. மதங்களைக் குறிவைப்பது பாசிசத்தின் அடிப்படைகளில் ஒன்று. பாஜக, மதவெறி சார்ந்தவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு செயல்பட வாய்ப்பே இல்லை. உண்மையில் வெளிப்படையாகத் தெரியும் மறைமுகமான சங்கப் பரிவாரின் ஆதரவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகவும் மோசமான சகிப்பின்மைக்குச் சான்று. மதசார்பின்மை குறித்த முறைசார் அறிக்கைகளால் எந்தப் பலனும் இல்லை.
சங்கப் பரிவார் அமைப்புகளின் கேடுகளை பாஜகவால் மறுக்க முடியுமா? சப் கா சாத் (அனைவரையும் உள்ளடக்கியது) என்பது வெறுமனே வறுமையை ஒழிப்பது அல்ல. இது, உள்ளிருந்து வரும் அனைத்து விதமான முற்றுகைகளிலிருந்தும் இந்தியாவைக் காப்பதையே குறிக்கும். பாஜக தமது மதசார்பின்மைக்கு எதிரான நிஜ முகத்தை மறைத்தபடி தேர்தல் களத்தைச் சந்திக்கிறது. சங்கப் பரிவாரின் எதிர்காலத் திட்டங்களையும் நோக்கங்களையும் முன்னெடுக்கும் தனது நிஜமான செயல்திட்டத்தை பாஜக சாதுரியமாக வாக்காளர்களின் பார்வையிலிருந்து மறைக்கிறது. எனவேதான் இது 2019 பொதுத் தேர்தலின் மிக முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்பட வேண்டும்.
ராஜீவ் தவன்
நன்றி: தி வயர்