வெளிப்படைத்தன்மையை அமுக்குவதற்கான அரசின் முயற்சிகள் அதன் உண்மையான நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது
பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதன் கட்சித் தலைவர் அமித் ஷா, அமைப்பில் வெளிப்படையான தன்மையைக் கொண்டுவருவதில் தேஜகூ அரசு உதாரணமாகத் திகழ்வதாக கூறினார். இந்தக் கூற்றைக் கேள்விக்கு உட்படுத்தக் குறைந்தபட்சம் ஐந்து காரணங்கள் உள்ளன.
ஒன்று, அரசு செயல்பாடுகளில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆர்டிஐ சட்டம் மோடி ஆட்சியில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகிறது. தகவல் ஆணையர்கள் மீதான புகார்களைப் பெற்று, அதன் மீது முடிவெடுக்க அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு நியமிக்கவிருக்கிறது. இது ஆர்டிஐ சட்டத்தின் மீதான சமீபத்திய தாக்குதல்களில். ஆணையர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க அதிகாரிகள் குழுவை நியமிப்பது அவர்களுடைய சுதந்திரமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சி. அரசு நிலைப்பாட்டை ஒட்டி நடக்க ஆணையர்களை அச்சுறுத்துவதற்கான வழியாகவும் இது அமையும்.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ், தகவல் ஆணையர்கள்தான் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் உடையவர்கள், இந்தச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்கள் மறுக்கப்படுவது குறித்த பொதுமக்களின் புகார்கள் குறித்தும் முறையீடுகள் குறித்தும் அவர்கள்தான் முடிவெடுக்கின்றனர். அண்மைக் காலங்களில் மத்தியத் தகவல் ஆணையம் (சிஐசி) மக்கள் கோரும் தகவல்களை வழங்குமாறு அரசுத் துறைகளுக்குப் பல முறை உத்தரவிட்டுள்ளது. அந்தத் தகவல்கள் அரசுக்குச் சங்கடம் தரக்கூடியவையாகவும், நெளியவைப்பதாகவும் இருந்துள்ளன. பிரதமரின் கல்வித் தகுதிகளுக்கான நிரூபணத்தை வெளியிடுவது துவங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பான ஆலோசனை விவரங்களை வெளியிடுவது வரை பல தகவல்களை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
தகவல் ஆணையர்களின் முக்கியப் பங்கை உணர்ந்துகொண்ட அரசு, அவர்களின் சுயேச்சைத் தன்மையைக் குறைக்கத் தொடர்ந்து முயன்றுவந்துள்ளது. ஆர்டிஐ சட்டத்தில் சத்தமில்லாமல் பல திருத்தங்களைக் கொண்டுவர பாஜக அரசு முயன்றுவருகிறது. இந்தத் திருத்தங்கள் தகவல் ஆணையத்தின் தன்னாட்சி மற்றும் சுயேச்சைத் தன்மையை முழுவதுமாகச் சீர்குலைக்கக்கூடியவை. இந்நிலையில் ஆணையர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆர்டிஐ சட்டத்தில் ஏற்கனவே வரையறை செய்யப்பட்டுள்ளதை மீறி, தகவல் ஆணையர்களின் பதவிக் காலம், ஊதியம், படிகள் மற்றும் இதர அம்சங்களைத் தீர்மானிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்க இந்தத் திருத்தங்கள் உத்தேசிக்கப்பட்டிருந்தன. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த ஆர்டிஐ திருத்த மசோதா பொதுமக்கள் மற்றும் எதிர்கட்சிகள் நெருக்கடி காரணமாகக் கிடப்பில் போடப்பட்டது.
இரண்டாவதாக, பாஜக அரசு, 2014க்குப் பிற்கு நீதிமன்றத் தலையீடு இல்லாமல் சி.ஐ.சிக்கு ஒரு தகவல் ஆணையரைக்கூட நியமிக்கவில்லை. 2018இல், அனுமதிக்கப்பட்ட மொத்த 11 ஆணையர்களில், மூன்று ஆணையர்களுடன் மட்டுமே ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. தலைவர் உள்பட 8 ஆணையர்களின் இடம் காலியாக இருந்தது. அதன் பின் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில்தான் தலைவரும் நான்கு ஆணையர்களும் நியமிக்கப்பட்டனர். குறித்த காலத்தில் நியமனங்களை செய்யத் தவறியதன் காரணமாக, ஆணையத்தில் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குவிந்து கிடக்கும் நிலை உண்டானது. இதனால் தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இத்தகைய தாமதம் இந்தச் சட்டத்தையே அர்த்தமில்லாமல் செய்துவிடுகிறது.
மூன்றாவதாக, லோக்பால், சிபிஐ, சிஐ.சி போன்ற அமைப்புகளுக்கான நியமனங்கள் ரகசியமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பதவிகளுக்குப் விண்ணப்பித்தவர்கள் யார், அவர்கள் தகுதி என்ன, தேர்வுக்கான நெறிமுறைகள் எவை என்பன போன்ற தகவல்களை மக்களுக்கு வழங்க அரசு மறுத்துவருகிறது. தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, முக்கியத்துவம் வாய்ந்த இந்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை பாதித்துள்ளது. தகவல் ஆணையர்கள் நியமனத்தில் ரகசியம் நிலவுவது தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம் 2018இல் சிஐசி நியமனம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இணையதளத்தில் இடம்பெற வைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
நான்காவதாக, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படைத்தன்மைக்கு மிகப் பெரிய அடி விழும் வகையில் அரசு தேர்தல் பத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஊழலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது அரசியல் கட்சிகள் பெறும் நிதி. இவ்விஷயத்தில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பது உடனடித் தேவை. நிதிச் சட்டம் 2017இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் மூலம் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரம் திட்டம், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது யார் என மக்கள் அறிவதைத் தடுக்கிறது. கோடிக்கணக்கான மதிப்பில் நன்கொடை அனாமதேயமாக வழங்கப்பட இது வழி செய்கிறது. தேர்தல் பத்திரம் திட்டத்தில் அதிக பலன் பெற்றது ஆளும் கட்சிதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 2018 மார்ச்சில் முதல் கட்டப் பத்திரங்கள் வெளியிடப்பட்டபோது, ரூ.210 கோடி மதிப்பிலான பத்திரங்களில் 94.5 சதவீதப் பத்திரங்களை பாஜக பெற்றது எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. யாரெல்லாம் இந்த நன்கொடை அளித்தனர் என்பதை அறிய எந்த வழியும் இல்லை.
இறுதியாக, சாதகமில்லாத புள்ளிவிவரங்கள் மற்றும் அறிக்கைகளை அமுக்க, தரவுகள் கணிப்பில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜிடிபி எண்ணிக்கை சீரமைக்கப்பட்டது தொடர்பாகவும், வேலைவாய்ப்பு குறித்த என்.எஸ்.எஸ்.ஓ. தரவுகள் அமுக்கப்பட்டது தொடர்பாகவும் சர்ச்சை இருக்கிறது. இதன் காரணமாக, தேசியப் புள்ளிவிவர ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர் ஒருவரும் பதவி விலகினர்.
நல்ல நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு ஆகிய அம்சங்களை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் செயல்பாடுகளில் வெளிப்படையான தன்மை படுமோசமாக உள்ளது. வெளிப்படையான தன்மையை முடக்குவதற்கான தொடர் முயற்சி, அரசின் உண்மையான நோக்கத்தை – பொதுமக்கள் தனது செயல்பாடுகளை ஆய்வு செய்ய அனுமதிக்காமல் இருப்பது – அம்பலப்படுத்துகிறது.
கட்டுரையாளர்கள், ஆர்டிஐ செயற்பாட்டாளர்கள்,. மக்களின் தகவல் அறியும் உரிமைக்கான தேசியத் திட்டம் மற்றும் சத்ரக் நாக்ரிக் சங்கடன் ஆகியவற்றுடன் தொடர்புகொண்டவர்கள்.
அஞ்சலி பரத்வாஜ், அம்ரிதா ஜோகாரி
நன்றி: தி ப்ரின்ட்
https://theprint.in/opinion/5-reasons-why-bjp-govts-transparency-claims-must-be-questioned/219438/