சிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான தோல்விதான்.
எதிரிகளின் செயற்கைக்கோள்களைச் சுட்டு வீழ்த்தும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயலா இல்லையா என்ற வாதம் மிக ஆழமானதொரு பிரச்சினையிலிருந்து நம் கவனத்தைத் திருப்ப முயல்கிறது. பிரதமராகப் பொறுப்பேற்ற நாளன்று அவர் அளித்த பதவியேற்பு உறுதிமொழியை மீறிய பிரச்சினை அது.
அந்த உறுதிமொழியின் இரண்டாம் பகுதி இவ்வாறு சொல்கிறது: “. . . அரசமைப்பு சாசனத்திற்கும் சட்டத்திற்கும் உட்பட்டு, அச்சமோ பாகுபாடோ இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல், அனைத்துப் பிரிவு மக்களுக்கும் நான் நியாயம் செய்வேன்.”
கடந்த பிப்ரவரி 14 அன்று அந்த உறுதிமொழியை மீறினார் மோடி. அன்றுதான் 40க்கு மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஒரு பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தார்கள். அப்படியொரு தாக்குதல் நடக்கலாம் என்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்த நிலையில், அதைக் கண்டிப்பாகத் தடுத்திருக்க வேண்டும். புத்திக்கூர்மை உள்ள அரசியல்வாதி என்ற முறையில் அவருக்கு இன்னொன்றும் தெரிந்திருந்தது. ஏதாவது பெரிய சம்பவம் நிகழுமானால் அதனால் பொதுமக்களிடையே ஏற்படக்கூடிய கொந்தளிப்பு, தற்போதைய தேர்தலில் பாஜக ஆதரவு வாக்குகளை எகிறச் செய்யும் என்பதுதான் அது.
சிஆர்பிஎப் படையினரை எதிர்நோக்கிக்கொண்டிருந்த அச்சுறுத்தல் பற்றிய எச்சரிக்கைகளை மோடி அரசு திட்டமிட்ட முறையிலேயே புறக்கணித்தது. அவ்வாறு புறக்கணிக்கத் தூண்டியது எதுவெனில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகளிலும் பதிவான மோசமான தோல்விதான். பொருளாதாரமாகட்டும், சட்டம் ஒழுங்காகட்டும், சமூக நல்லிணக்கமாகட்டும், பன்னாட்டு உறவுகளாகட்டும், உள்நாட்டில் மாநிலங்களுடனான உறவுகளாகட்டும், அத்தனையிலும் தோல்வி.
வேறு எந்தத் துறையை விடவும் பொருளாதாரத் துறையில் அந்தத் தோல்வி மிக அப்பட்டமாக வெளிப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்று அவர் வாக்குறுதி அளித்தது தெரிந்ததுதான். ஆனால், முன்னெப்போதுமே இருந்திராத அளவுக்கு வேலை வாய்ப்புகளை அவரது ஆட்சி வற்றிப்போக வைத்துவிட்டது. மோடி அரசு மூடி மறைக்க முயன்றும் முடியாமல்போன தேசிய மாதிரி ஆய்வு (என்எஸ்எஸ்) நிறுவன அறிக்கையின்படி, ஒட்டுமொத்தத் தொழில் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த தொழிலாளர்களை விட இன்று 1 கோடியே 10 லட்சம் பேர் குறைவாக உள்ளனர். இன்னும் மோசமான நிலவரம் என்னவென்றால், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 4 கோடி தற்காலிகத் தொழிலாளர்களுக்கு இன்று வேலையே இல்லை.
கிராமப் பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு முன், 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களில் 20 பேருக்கு ஒருவர் எந்த வேலையும் கிடைக்காதவராக இருந்தார். இன்று 6 பேருக்கு ஒருவர் எவ்வித வேலையும் இல்லாத நிலைமை. நகரங்களிலும் பெரிய ஊர்களிலும் இதே வயதுப் பிரிவினரில் 8 பேருக்கு ஒருவர் வேலையின்றி இருந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம். இன்று 5 பேரில் ஒருவருக்கு வேலையில்லை. பெண்களிடையே வேலையின்மை என்பதும் இதே அளவுக்குக் கவலையளிப்பதாகவே உள்ளது.
இந்த நிலைமையின் அரசியல் தாக்கம் எப்படி இருக்கும் என்பது வேறு யாரையும்விட மோடிக்கு மிக நன்றாகத் தெரியும். ஏனென்றால் இந்த வயதுப் பிரிவினர்தான் 2014இல் அவருடைய வாக்குறுதிகளை நம்பியவர்கள், அவரை மத்திய ஆட்சியதிகாரத்திற்குக் கொண்டுவந்தவர்கள். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அடுத்த மக்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை உறுதிப்படுத்துகிறது என்பதும், ஆகவே பிரதமர் பதவியில் தொடர்வதற்கான நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதும் அவருக்குத் தெரியும். ஆகவே, தனது வெற்றியை உறுதிப்படுத்த எதையும் செய்வதற்கு அவர் தயாராகிவிட்டார். ஆகவே, சங் பரிவாரத்தின் கடைசிப் புகலிடத்தில் அவர் சரணைடைந்துவிட்டார் – இந்து மக்களின் மத உணர்வுகளைக் கிளறிவிடுவது, போர் முரசு ஒலிப்பது இரண்டும்தான் அந்தப் புகலிடம்.
ஆகவே, அவரைப் பொறுத்தவரையில், புல்வாமாவில் சிஆர்பிஎப் வாகனத் தொடரணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு வரப்பிரசாதமாக வந்தது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் அவர் ஒவ்வொரு மேடையிலும் வெளிப்படுத்திய ஆவேசம் உண்மையானதுதானா அல்லது பாசாங்கா? அந்தத் தாக்குதல் அவர் எதிர்பார்க்காத அதிர்ச்சியா அல்லது எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் அதை அவர் அனுமதித்தாரா?
புல்வாமா தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் இந்தச் சந்தேகம் முன்னுக்கு வந்துவிட்டது. ஏனென்றால், காஷ்மீரில் ஒரு மிகப் பெரிய தாக்குதல் நிச்சயமாக நடக்கப்போகிறது என்ற எச்சரிக்கைகள் உளவுத் துறையிடமிருந்து சில நாட்களாகவே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வந்துகொண்டிருந்தன என்பதை ஊடகங்கள் உடனடியாகக் கண்டுபிடித்தன. தாக்குதலுக்கு இரண்டு நாட்கள் முன்பாக, ஜெய்ஷ் அமைப்பு ஆப்கானிஸ்தானில், சரக்கு வாகனத்தை வைத்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் பற்றிய வீடியோ காட்சியை இணையத்தில் பதிவேற்றியது. அத்துடன், அதே போன்ற தாக்குதல் காஷ்மீரில் நடக்கும் என்றும் பெருமை பொங்க அறிவித்தது. ஆகவே ஒரு சில நாட்களில் ஒரு பெரிய தாக்குதல் நடக்கத்தான் போகிறது என்பது மோடி அரசுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. காஷ்மீர் காவல் துறையிடமிருந்து இது தொடர்பாக ஒரு எச்சரிக்கை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு வேறு உளவு அமைப்புகளிடமிருந்து ஒரே மாதிரியான தகவல் வருகிறதென்றால் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அடிப்படையான உளவு விதி. ஆபத்து சூழ்வதை உணர்ந்த சிஆர்பிஎப் தனது வீர்ர்களை விமானம் மூலம் கொண்டு செல்ல அனுமதி கோரியது. ஆனால், புதிரான வகையில், உள்துறை அமைச்சகம் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. பிரதமர் அலுவலகத்திற்காவது தெரிவிக்காமல் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. அப்படியானால், அனுமதி மறுக்கப்பட்டது வெறும் கவனக்குறைவால் நிகழ்ந்ததா அல்லது அந்த முட்டாள்தனமான முடிவில் ஒரு திட்டமிட்ட ஏற்பாடு இருந்ததா?
இந்தக் கேள்வியை எழுப்புவதில் ராகுல் காந்திக்கு ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கொல்கத்தாவில், மம்தா பானர்ஜிக்கு அப்படிப்பட்ட மனத்தடை எதுவும் இல்லை. “புல்வாமா தாக்குதல் நடந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் மோடி அவர்களே,” என்று அவர் கேட்டார். “ஒரு தாக்குதல் நிச்சயமாக நடக்கப்போகிறது என்று உங்களுக்குத் தெரியும். ஏற்கெனவே அரசாங்கத்திற்கு உளவுத் துறைத் தகவல்கள் வந்துவிட்டன. பிறகு ஏன் வீரர்களை விமானத்தில் அனுப்பவில்லை? சோதனைச் சாவடிகளில் ஏன் முறையான சோதனைகள் நடத்தப்படவில்லை? சாலைகள் ஏன் முற்றிலுமாகத் தடுக்கப்படவில்லை? அவர்களை நீங்கள் ஏன் சாவின் விளிம்பில் தள்ளிவிட்டீர்கள்? அதன் மூலம் தேர்தலுக்கு முன் அரசியல் செய்யலாம் என்றா? நமது வீரர்களது குருதியின் மேல் அரசியல் செய்வதற்கில்லை,” என்றார் அவர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த தகவல்
மோடியால் இந்தக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்ய முடிந்தது. இது தொடர்பாகத் தன்னை விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகள் என்று சாட முடிந்தது. ஏனென்றால் ஊடகங்களில் யாருமே, புல்வாமா தாக்குதலுக்கு இட்டுச்சென்ற தவறுகள் என்ன என்று கேட்பதில் அக்கறைகாட்டவில்லை. நான்கூட, இது தொடர்பான எனது முந்தைய கட்டுரையில், சந்தேகத்தின் பலனை மோடிக்கு அளித்தேன். ஆனால், அதற்குப் பிறகு எனக்குக் கிடைத்த விவரங்கள், ஒரு நிச்சயத் தாக்குதல் பற்றி நமது உளவுத் துறையினர் பாகிஸ்தானிலிருந்து சேகரித்துத் தந்த தகவல்களை அவர் புறக்கணித்தார், அதன் மூலம் புல்வாமா தாக்குதலைத் தடுக்கத் தவறினார் என்ற என் கருத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கின்றன.
பாகிஸ்தான் அரசுக்கு இந்தத் தற்கொலைப்படைத் தாக்குதல் பற்றி பிப்ரவரி 7 அன்றே தெரியவந்துவிட்டது என்றும், இந்தியா பதிலடி கொடுக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகத் தனது துருப்புகளைப் போர்க்கள முகாம்களுக்கு அனுப்பத் தொடங்கியது என்றும் நம்பகமான வட்டாரங்கள் எனக்குத் தெரிவித்தன.
இவ்வளவு பெரிய அளவுக்கு ராணுவத்தினர் போர்க்கள மையங்களுக்கு அனுப்பப்படுவதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. ஏனென்றால், அந்த நடவடிக்கை வெறும் காலாட்படையினர் மட்டுமே அனுப்பப்படுவதோடு நிற்பதில்லை. களம் சார்ந்த விமானப் படைத் தளங்களும் சுறுசுறுப்பாகிவிடும். ஆயுத வாகனங்கள், தாக்குதல் வாகனங்கள், தரைவழி வெடிகுண்டுகள் என எல்லாமே தயாராகிவிடும். 36 ஆண்டுகளுக்கு முன், இதே போன்ற ஒரு ராணுவத் தயாரிப்பு நடவடிக்கை பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது. இந்திய ராணுவம் தனது ‘ஆபரேஷன் பிராஸ்ட்ராக்ஸ்’ என்று பெயரிடப்பட்ட பயிற்சித் திட்டத்தைத் தொடங்கவிருந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இந்திய அரசுக்கு அது பற்றித் தெரியவந்துவிட்டது. இன்றைக்கு இந்தியாவிடம் உள்ள எல்லைப்புற உளவு ஏற்பாடுகளையும், செயற்கைக்கோள் கண்காணிப்புத் திறன்களையும் கொண்டு, எல்லைக்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதைச் சில மணிநேரங்களிலேயே தெரிந்துகொள்ள முடியும்.
பொதுவாக, போர்க்கள மையங்களில் வீரர்களைக் காலவரையின்றி நிறுத்திவைத்திருக்க முடியாது. ஆகவே, தற்போது பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கை நிச்சயமாக ஒரு தாக்குதல் நடக்கப்போகிறது என்பதற்கான ஒரு சிக்னல்தான். இந்தப் பின்னணியில், உளவுத் துறையிடமிருந்தும் காவல் துறையிடமிருந்தும் குறிப்பான எச்சரிக்கைகளே வந்துள்ள நிலையில், வீரர்களை விமானம் மூலம் கொண்டுசெல்லக் கோரி சிஆர்பிஎப் விடுத்த வேண்டுகோளை உள்துறை அமைச்சகம் (பிரதமர் அலுவலகமும்தான்) ஏற்க மறுத்தது, கண்டிப்பாக ஒரு பொறுப்பற்ற செயலாகவே தெரிகிறது.
தெளிவாகும் முரண்கள்
புல்வாமா தாக்குதலின் இந்தப் பின்னணிகள் உண்மைதான் என்றால், எதிர்க்கட்சிகளால் காண முடிந்த ஆனால் புரிந்துகொள்ள முடியாத பல முரண்பாடுகளுக்கு விளக்கம் கிடைக்கிறது. முதலாவதாக, புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டது பற்றிய தகவல் கிடைத்த பல மணிநேரங்களுக்கு மோடி தனது கோர்பெட் பூங்கா படப்பிடிப்பைத் தொடர முடிவு செய்த விவகாரம். இது, அப்படியொன்றும் அவர் அதிர்ச்சியடையவில்லை என்பதைத்தான் காட்டுகிறதே தவிர, பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் என்று காட்டவில்லை. ஒரு பெரிய தாக்குதல் நடக்கப்போகிறது என்பது அவருக்குத் தெரியும், அதற்காக அவர் காத்திருந்தார். ஆகவே அவர் அதிர்ச்சியடைய மறந்தார். தன் வேலைகளை வழக்கம்போல் செய்துகொண்டிருந்தார்.
புல்வாமாவை அடிமுதல் நுனிவரை முற்றிலுமாகச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்ற மோசமான ஆசையில், மோடி ஏன் 40 வீரர்களுக்காக ஒரு தேசியத் துக்க நாளை அறிவிக்கவில்லை, அவர்கள் கொல்லப்பட்டதன் எதிர்வினையாக நாடு முழுவதும் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை மட்டுப்படுத்துவது தொடர்பாக ஏன் அவர் எதுவும் பேசவில்லை, ஏன் எதுவுமே செய்யவில்லை என்பதற்கான விளக்கங்களையும் காணலாம். மாறாக அவர் தனது வழக்கமான மௌனத்தைத்தான் கடைப்பிடித்தார். பின்னர் பாகிஸ்தானுக்கும் காஷ்மீரி பயங்கராவதிகளுக்கும் எதிராக – நுட்பமான முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக – சண்டமாருதமாக முழங்கினார். இன்னொரு பக்கத்தில் இந்துத்துவக் கும்பல்கள் ஜம்மு, ஹரியானா, தில்லி, புனே போன்ற இடங்களிலும் காஷ்மீரி மாணவர்களை அடித்து உதைத்தார்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் உயிரைக் காத்துகொள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குத் திரும்பிச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
கோத்ரா மறு பதிப்பு
கணக்குகள் எதுவானாலும், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகும், 2002 பிப்ரவரி 27இல் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் பயணிகள் பெட்டி எரிக்கப்பட்டதற்குப் பிறகும் மோடி எப்படி நடந்துகொண்டார் என்பதில் பளிச்செனத் தெரியும் ஒற்றுமை இருக்கிறது. கோத்ரா சம்பவத்திற்கு முன்பே, விஎச்பி, பஜ்ரங் தள் அமைப்புகள் “ஏதோவொரு பெரிய நடவடிக்கையில்” இறங்கத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள், அதற்காக வாள்களோடும் ஈட்டிகளோடும் உருட்டுக்கட்டைகளோடும் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள், அணிவகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று குறைந்தது 20 முறையாவது உளவுத் துறையினரிடமிருந்து எச்சரிக்கைகள் வந்தன. அவற்றை மோடி கண்டுகொள்ளவில்லை.
ரயில் பெட்டி எரிக்கப்பட்ட பின்பு, 59 கரசேவகர்களை முஸ்லிம்கள் சூழ்ச்சி செய்து கொன்றுவிட்டார்கள் என்று விஎச்பி ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் ஒரு வார காலம் மனித வேட்டை நடந்தது. இந்துத்துவக் கும்பல்களின் அந்தத் திட்டமிட்ட படுகொலைகளைக் கண்டித்து மோடி வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளியே வரவில்லை. “பகவான் திருக்காரியத்தில்” ஈடுபட்டிருந்த அந்தக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் பலரும் தலையில் காவிப் பட்டி கட்டியிருந்தார்கள், நெற்றியில் காவித் திலகமிட்டிருந்தார்கள். சடலங்கள் அப்புறப்படுத்தப்படுவதற்கும் முன்பாகவே மோடி தேர்தல் ஆணையத்திடம் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தக் கோரினார். 2003 மார்ச் மாதம் நடைபெற வேண்டிய தேர்தலை 2002 ஜூலையில் நடத்திவிடலாம் என்றார். (ஆணையம் அதை ஏற்கவில்லை என்றாலும், 2002 டிசம்பரில் தேர்தலை நடத்தியது.)
கோத்ரா – புல்வாமா ஒற்றுமைகள் இத்தோடு நிற்கவில்லை. அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற பெருமிதத்தோடு மோடி ஓய்ந்துவிடவில்லை. குஜராத் காவல் துறையினர் 22 என்கவுன்டர் கொலைகளைச் செய்தனர். கொல்லப்பட்டவர்களில் பலர், குஜராத் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக, பாகிஸ்தானிலிருந்து அந்நாட்டு அரசாங்க ஆதரவோடு அனுப்பப்பட்ட தீவிரவாதிகள் என்று காவல் துறையினர் பரப்பிக்கொண்டே இருந்தனர்.
அப்போது ஒரு விசயம் தெளிவாகப் புரிந்தது. மோடி அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுவிட மாட்டார். தேர்தலில் தனது வெற்றியை உறுதிப்படுத்த எதையும் விட்டுவைக்க மாட்டார். இப்போதும் அது தெளிவாகத் தெரிகிறது. அப்போது அவரது லட்சியங்கள் குஜராத்துக்குள் அடங்கியிருந்தன. இப்போது இந்தியா முழுவதையும் அடக்கியுள்ளன.
பிரேம் ஷங்கர் ஜா
நன்றி: தி வயர்
தமிழில்: அ. குமரேசன்
Sir ungloda godhra riots YouTube ..interview pathen bayangara shocking ah irunchu ..but remove pannitanga ..will you please send me the link or video of you have