அன்பார்ந்த டாக்டர் தமிழிசை அவர்களே,
காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்தவர் நீங்கள். உங்கள் தந்தை குமரிஅனந்தன் பழுத்த காந்தியவாதி. 1996ல்தான் உங்கள் தந்தையை முதன் முதலாக கவனிக்கத் தொடங்கினேன்.
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஒரே வருடத்தில், காங்கிரஸோடு மோதலை தொடங்கினார். ராஜீவ்காந்தியின் அனுதாப அலையில்தான் அதிமுக வெற்றி பெற்றது என்று காங்கிரஸ் கூற, என் சொந்த செல்வாக்கில் கிடைத்த வெற்றி என்று ஜெயலலிதா பதில் கூற, சட்டப்பேரவையில், வார்த்தை மோதல்களுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது அப்போது. 1995 முதலாகவே அமலாக்கப் பிரிவு ஜெயலலிதா, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மீது சராமரியாக வழக்கு தொடுக்க 1996 தேர்தலை காங்கிரஸோடு சேர்ந்து போட்டியிட வேண்டிய நெருக்கடிக்கு நரசிம்மராவ் ஜெயலலிதாவைக் கொண்டு வந்தார்.
தேர்தல் நெருங்கியது. காங்கிரஸ் கட்சியை மிக மிக மோசமாக விமர்சித்த காரணத்தால், அதிமுகவோடு கூட்டணி வைக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கினர். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் உங்கள் தந்தை குமரி அனந்தன். சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய குமரி அனந்தன், தமிழக காங்கிரஸாரின் உணர்வுகளை டெல்லி மேலிடத்துக்கு தெரியப்படுத்தி, நல்ல முடிவை எடுக்க முயற்சி செய்வதாக கூறி டெல்லி சென்றார். டெல்லி சென்று சென்னை திரும்பியவர், காங்கிரஸ் மேலிட முடிவை மீற முடியாது என்றார். அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே, குமரி அனந்தனை, “பெட்டி அனந்தன்” என்று விமர்சித்து கோஷமிட்டனர் காங்கிரஸார்.
இந்த முடிவுக்கு பின்னரே, ஜி.கே.மூப்பனார், காங்கிரஸிலிருந்து பிரிந்து, “தமிழ் மாநில காங்கிரஸ்” கட்சியை தொடங்கி, திமுகவோடு கூட்டணி சேர்ந்து அமோக வெற்றி பெற்றார். அன்று சரிந்த குமரி அனந்தனின் அரசியல் செல்வாக்கு மீண்டு எழவேயில்லை.
அவருடைய நம்பிக்கைக்கு பலவகையிலும் ஈடுகொடுத்த நீங்கள் பாஜகவில் இணைந்தீர்கள் எனும்போது உங்களுடைய தந்தைக்கு அது மிகப்பெரிய பேரிடியாக இருந்தது என்றும், கோபத்தில் உங்களிடம் மாதக்கணக்கில் பேசாமல் இருந்தார் என்றும் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் அப்போது திராவிடக் கட்சி ஏதாவது ஒன்றில் இணைந்திருந்தால் உங்களுடைய அப்பாவுக்கு இத்தனை கோபம் ஏற்பட்டிருக்குமா? காங்கிரசுக்கு எதிரான கட்சி என்பதைக் கடந்து பாஜக தீவிர வலதுசாரிக் கொள்கையைக் கொண்டிருந்தது. அதில் நீங்கள் இணைந்ததற்கான காரணம் என்னவென்று கேட்டதற்கு ‘தேசியத்தைப் பேசிய கட்சியாக இருந்தது’ என்றீர்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால், பிஜேபியை தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் நாட்டுப் பற்றோ, தேசபக்தியோ இல்லாத கட்சிகள் போல தோன்றுகிறது. இது எந்த அளவுக்கு ஒரு நகைச்சுவையான காரணம் என்பது உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீங்கள் மருத்துவராக உயர்ந்ததற்கு காரணம் சமூக நீதியைக் காக்க வேண்டி கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீட்டு முறையினால் தான். தமிழகத்தில் நீட் தேர்வினைப் புகுத்தியபோது தற்கொலை செய்து கொண்டார் அனிதா. அந்த மரணத்தினால் தமிழகத்தில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. அப்போது நடந்த போராட்டங்களை பிரதமருக்கு எதிரான நாகரீகமற்ற போராட்டங்கள் என்று விமர்சித்தீர்கள். எங்கள் பொறுமையை சோதிக்காதீர்கள் என்றும் சொன்னீர்கள். இது ஒரு தேசியவாதியின் பேச்சா?
பிஜேபி என்றாலே, அது பார்ப்பனர்களின் கட்சி என்ற இமேஜை உடைப்பதற்காகவே, உங்களை பிஜேபியின் தமிழக தலைவராக்கினார்கள் என்பதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால் அதற்கு முந்தைய ஆண்டுகள் வரை நீங்கள் ஒரு மருத்துவராகவே பணியாற்றினீர்கள். பார்பனரல்லாத ஒரு முகமும் கொஞ்சம் பிரபலத்த்ன்மையும் தேவைப்படவே உங்களை தமிழத்தில் தலைவராக்கினார்கள். வேறு எந்த காரணத்துக்காகவும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான உங்களை பிஜேபியின் தமிழக தலைவராக்கியிருக்க, பிஜேபி தலைமை ஒருக்காலும் ஒப்புக் கொண்டிருக்காது.
ஒரு மகப்பேறு மருத்துவரான உங்களுக்கு, ஒரு தமிழ்ப் பெண்ணான உங்களுக்கு பிஜேபியின் கொள்கைகள் அனைத்தும் தமிழர் நலனுக்கு விரோதமானவை என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும், பிஜேபி தலைவர்களின் அனைத்து முட்டாள்தனமான அறிக்கைகள், பேட்டிகள், நடவடிக்கைகளுக்கு கண்மூடித்தனமான ஆதரவு தரவேண்டிய நெருக்கடிக்கு நீங்கள் இன்று ஆளாகியிருக்கிறீர்கள்.
நீங்கள் தமிழக பாஜக தலைவராக இருப்பதை, இங்கே உள்ள பார்ப்பன தலைவர்கள் ஒருவர் கூட விரும்பவில்லை. உங்களை இந்த பதவியை விட்டு தூக்குவதற்கு, அத்தனை முயற்சிகள் எடுத்தனர் எடுத்து வருகின்றனர். அவர்களை விடுங்கள். ஏன் உங்கள் கட்சியை சேர்ந்த பொன் ராதாகிருஷ்ணனே, கட்சி சார்பாக நாடார் சமூகத்தை சேர்ந்த நான் நிற்கிறேன். இன்னொரு நாடாருக்கு சீட் வேண்டாம். வேறு யாருக்காவது கொடுங்கள் என்று தூத்துக்குடியில் வேறு வேட்பாளரை நிறுத்துவதற்கு அவர் முயன்றதையும் நீங்கள் அறிவீர்கள்.
இங்கு ஜெயலலிதாவுக்குப் பிறகு எத்தனையோ அவமானங்கள், இழிவுகள், சிறுமைப்படுத்துதல்களையும் தாண்டி, ஒரு பெண்ணாக அரசியல் களம் காணுபவர் நீங்கள். ஆனால் அவை யாவும் மோடியின் புகழ் பாடுவதற்குத் தான் எனும்போது உங்கள் மீது பரிதாபம்தான் வருகிறது.
பெண்கள் அரசியலில் காலம் தள்ளுவது, அத்தனை எளிதல்ல. அதுவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீங்கள் அரசியலில் கரையேறுவது எளிதான விஷயமே அல்ல. உங்களிடம் உள்ள ஒரு முக்கியமான சிறப்பம்சம், உங்களைப் பற்றி வரும், அத்தனை மீம்களையும், கேலி கிண்டல்களையும், மிக இயல்பாக எதிர்கொள்கிறீர்கள். அந்த வகையில், நீங்கள் பாராட்டுக்குறியவர்கள்.
ஒரு காலத்தில், “பறையனை தொட்டால் தீட்டு, சாணானை பாத்தாலே தீட்டு” என்ற வழக்கை கேள்விப்பட்டிருப்பீர்கள். அவ்வாறு பிற்படுத்தப்பட்டு இருந்த நாடார்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினருக்கு, சமுதாயத்தில் உரிய இடத்தை பெற்றுத் தரவும், பார்ப்பன ஆதிக்கத்தை அடித்து நொறுக்கவும், தந்தை பெரியார் எத்தனை களப்பணி ஆற்றினார் என்பது நீங்கள் அறியாதது அல்ல. தமிழகத்தில் தீவிர கடவுள் பக்தன் கூட பெரியார் மீது மரியாதை வைத்திருகிறான் என்பது வெளிப்படையான உண்மை. உங்கள் கட்சியை சேர்ந்த எச்.ராஜா, தந்தை பெரியாரின் சிலைகளை உடைக்க வேண்டும் என்று பேசியதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ? ஆனால் நீங்கள் அதையும் சமாளித்துதான் பேசினீர்கள். கோழைத்தனமாக, எச்.ராஜா, தனது அட்மின் பெரியாரை இழிவுபடுத்தி ட்வீட் போட்டார் என்று சமாளித்து தப்பித்ததையும் நீங்கள் ஆதரித்தீர்கள்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை பற்றி மிக மிக தரம்தாழ்ந்து எச்.ராஜா ட்வீட் போட்டதையும், ஹைகோர்ட்டாவது மயிராவது என்று அவர் பேசியதையும் நீங்கள் சமாளிக்க வேண்டியிருந்தது. பிஜேபியில் உள்ள தலைவர்கள், தொடர்ந்து, தமிழர் நலனுக்கு எதிராகவும், தமிழக நலனுக்கு எதிராகவும் பேசியதையெல்லாம் நீங்கள் ஆதரித்தே வந்தீர்கள். வருகிறீர்கள்.
மற்ற பிஜேபி தலைவர்களின், முட்டாள்தனத்துக்கு நீங்கள் ஜால்ரா அடித்ததை எல்லாம் உங்கள் நெருக்கடியான நிலைமை காரணமாக என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், ஆராய்ச்சி மாணவி, சோபியா விமானத்தில், “பாசிச பாஜக ஒழிக” என்று குரல் கொடுத்ததற்காக, அவர் மீது புகார் அளித்து, அவரை சிறையில் அடைத்த உங்களின் ஆணவப் போக்கை ஒரு நாளும் மன்னிக்க முடியாது.
ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பீர்களானால், பிஜேபி மீதும், மோடி மீதும் மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு என்பதை நீங்கள் யோசித்திருக்க வேண்டும். ஒரு படித்த ஆராய்ச்சி மாணவி, பொது வெளியில், “பாசிச பாஜக ஒழிக” என்று குரல் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு ஏன் அத்தனை கோபம் என்பதையும் நீங்கள் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால், உங்கள் கட்சி மத்தியில் ஆளும் கட்சியாக இருப்பதாலும், மாநிலத்தில் ஒரு அடிமை அரசு இருக்கிறதென்ற காரணத்தாலும், நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி சோபியாவை சிறையில் தள்ளினீர்கள். அங்கே இருந்த காவல்துறை அதிகாரிகள் சமாதானம் கூறியும், சோபியாவை சிறையில் அடைக்கத் தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து, அவரை சிறையில் அடைத்தீர்கள்.
உங்கள் குடும்பப் பின்னணியைக் கொண்டுப் பார்க்கையில் உங்களுக்கு வறுமை என்றால் என்ன என்பதோ, சிறை என்றால் என்ன என்பதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஆராய்ச்சி மாணவி, பாஜக ஒழிக என்று கோஷமிட்டதால், பாஜக அழிந்து விடப் போவதுமில்லை. அப்படி அவர் கோஷமிடாமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தாமரை மலரப் போவதுமில்லை. அப்படி இருந்தும், டெல்லியில் உள்ள தலைவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே, நீங்கள் சோபியாவின் மீது புகார் அளித்து அவரை சிறையில் அடைத்தீர்கள். இதனால் தாமரை தமிழகத்தில் நீங்கள் அடிக்கடி சொல்வது போல மலருமா என்ற கேள்விக்கு, அதற்கு வாய்ப்பே இல்லை என்பதையே பதிலாக சொல்ல வேண்டியிருக்கிறது.
நீங்கள் இருப்பது, அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சி கிடையாது. நீங்கள் என்னதான் மறுத்தாலும், பிஜேபி என்பது ஒரு பார்ப்பன கட்சிதான். அதில் நீங்கள் தேசியத் தலைவராகி, மத்திய அமைச்சராவது என்பது கனவிலும் நடக்கப் போவதில்லை. அப்படி இருக்கையில், எதற்காக, உங்களது அடிப்படை அனுபவம், புரிதல், பகுத்தறிவு, எல்லாவற்றையும் இழந்து, மனித இனத்துக்கே விரோதமான ஒரு பாசிச கட்சியை தூக்கிப் பிடிக்கிறீர்கள் ?
பெண்களை பாஜக எப்படி நடத்துகிறது என்பதை பார்த்துக் கொண்டுதானே உள்ளீர்கள் ? பெண்களை மிக மிக அவமானமாக, இழி சொற்களால் வசைபாடும், பிஜேபி தொண்டர்களை மோடி ட்விட்டரில் பின் தொடர்கிறார் என்பது நீங்கள் அறியாதது அல்ல. வெளியுறவுத் துறை அமைச்சர், ஒரு இந்து-இஸ்லாமிய தம்பதியினருக்கு உடனடியாக பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்தார் என்பதற்காக, உங்கள் கட்சித் தொண்டர்களே அவரை மிக மிக தரக் குறைவாக, ட்விட்டரில் வசை பாடினார்கள். அதை காங்கிரஸ் கட்சிதான் கண்டித்ததே ஒழிய, பிஜேபி தலைவர்கள் ஒருவர் கூட கண்டிக்கவில்லை. பிஜேபியின் மிக மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜுக்கே இந்த நிலைதான் என்றால் மற்ற பெண்களைப் பற்றி நான் உங்களுக்கு விளக்கிக் கூற வேண்டியதில்லை.
ஜெயலலிதா இறக்கும் வரை, தமிழகத்தில் உங்கள் கட்சியால் எங்கும் காலூன்ற முடியவில்லை. தமிழகத்தை கலவர பூமியாக்கி விடக் கூடாது என்பதில் ஜெயலலிதா தெளிவாக இருந்தார். ஆனால் பிஜேபியோ, தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது. ஒரு காந்தியவாதியின் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள், மதவாதத்தை வளர்க்கும் ஒரு கட்சியின் பிரதிநிதியாக தமிழகம் முழுக்க வலம் வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அன்பார்ந்த தமிழசை அவர்களே, அழுது புரண்டாலும் மாண்டார் வருவதில்லை என்பது போல, நீங்கள் கூரை மீது ஏறி உரக்க கத்தினாலும், தாமரை தமிழகத்தில் மலரவே மலராது.
தூத்துக்குடியில் நீங்களும் மண்ணைக் கவ்வப்போவது உறுதி. ஆகையால், இந்தத் தேர்தலுக்கு பிறகாவது, பிஜேபியை விட்டு வெளியேறுங்கள். அல்லது அரசியலை விட்டே வெளியேறுங்கள். நீங்கள் திறமையான மருத்துவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதை நீங்கள் தொடர வேண்டுமென்பது என்னைப் போன்றோரின் விருப்பம். இல்லையென்றால், பிஜேபியின் இதர தலைவர்களைப் போல, உங்கள் பெயரும், தமிழகத்தின் வரலாறின் கருப்பு பக்கங்களில் பதிவு செய்யப்படும்.
அன்புடன்
ஒரு பாமர வாக்காளன்
இந்த நாய் வாங்குன காசுக்காக குரைக்குது
மரியாதை சகோதரர் …நாய் நன்றி உள்ளது…
Good write up.
Foolish article, Narendra Modi Brahmin aah? Rajnath singh Brahmin aah? Arun Jaitley Brahmin aah?.. Nee DMK congress sombu thookinu ellarukkum therium
கண்டிப்பாக தமிழகத்தில் தாமரை மலரும் இதை யாராலும் தடுக்க முடியாது
koovaththil thaan malarum …
தாமரை என்ன அல்லி ,அரலி என் எதுவேண்டுமானாலும் இங்கு முலைக்கும் ஆனால் பீஜேபி வளராது