உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில், இது அலையில்லாத் தேர்தல். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் முடிவையும் நிர்ணயிப்பதில் சாதியின் பங்குதான் அதிகம்.
உத்தரப் பிரதேசம் மிக அதிக எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பதால், பொதுத் தேர்தல்களில் எப்போதுமே அம்மாநிலம் மீது கவனம் குவியும். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தமது கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துடன் இணைந்து, மாநிலத்தின் 80 தொகுதிகளில் 73 இடங்களைக் கைப்பற்றியது. இந்த எண்ணிக்கை, மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு உதவியது. காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
எனினும், முன்னாள் அரசியல் எதிரிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் கைகோத்து ‘மகாகட்பந்தன்’ என்ற பெயரில் பெரிய கூட்டணி அமைத்து, அரசியல் பரிசோதனையாக இம்முறை தேர்தல் களத்தைச் சந்திக்கின்றன. இவ்விரு கட்சிகளும் பின்தங்கிய வகுப்பினர், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோரை ஒன்று திரட்டி, சமூக நீதி என்னும் சொல்லாடலை மீட்டுருவாக்கம் செய்து, மோடி தலைமையிலான பாஜகவை எதிர்கொள்ள முடியும் என நம்புகின்றன.
இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இல்லாதது, வாக்குகளைப் பிரித்து, பாஜகவுக்கு சாதகமானச் சூழலையே தோற்றுவிக்கும் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம், போதுமான வளர்ச்சியைக் காட்டாத ஆதித்யநாத் அரசு மீதான அதிருப்தியை நன்கு உணர்ந்திருக்கும் பாஜக, மோடியின் தலைமையையும் வசீகரத்தையும் முன்வைத்து உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் மகத்தான வெற்றி பெற முனைப்பு காட்டுகிறது.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகளும் இந்தப் போக்கை உள்ளடக்கியதாக உள்ளன. குறிப்பாக, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்த பாலகோட் வான்வழித் தாக்குதல் நடவடிக்கைக்குப் பிறகு, மோடியின் செல்வாக்கு மேலும் கூடியிருப்பதாகவும், உத்தரப் பிரதேசத்தில் மகாகட்பந்தன் கூட்டணியால் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
இந்தச் சூழலில், ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு கேள்விகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று, மோடி அலை ஓய்ந்துவிட்டதா அல்லது இந்த மாநிலத்தில் அது இன்னமும் வலுவாக உள்ளதா? இரண்டு, இம்மாநிலத்தில் 2014லிருந்து நீடிக்கும் பாஜகவின் வெற்றிக் களியாட்டத்தை மகாகட்பந்தன் கூட்டணியால் தடுத்து நிறுத்த முடியுமா?
உ.பி.யின் பெரும்பாலான பகுதிகளில் விரிவான கள ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தேடிக் கண்டடைய முயன்றுள்ளோம். முதலாவதாக, பாஜக வேட்பாளர்களுக்கான ஆதரவுக்குப் பின்னால் ‘மோடி காரணி’ என்பது மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுவது குறித்து ஆராய்ந்தோம். இரண்டாவதாக, மோடி எதிர்ப்பாளர்களின் சமூகப் பின்புலத்தைப் பொருத்திப் பார்த்தோம். இவ்விரு வழிகளில் விடைகளை அடையாளம் கண்டிருக்கிறோம்.
இந்த எதிரணிகளின் மோதலில், சாதி ஒரு முக்கியக் காரணியாக நீடிப்பதைக் கள ஆய்வு காட்டியது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் சாதிக் குழுக்களின் அரசியலுக்கும், பொருளாதார மேலாதிக்கத்துக்கும் இடையேதான் இந்த மோதல் நிகழ்கிறது என்பதைக் கள ஆய்வு காட்டுகிறது. மோடி ஆதரவு – எதிர்ப்பு மோதல்களைக் கட்டமைக்கும் இந்த இரண்டு குழுக்களின் முயற்சிகளே இரண்டில் ஒரு தரப்புக்கு வாக்களிக்க வைத்து, அரசியல் மேலாதிக்கத்தைத் தக்கவைக்க வழிவகுக்கும். உண்மையில், இந்தக் குறிப்பிட்ட குழுக்களின் சாதிய – சமூகப் பகுதி சார்ந்த பிரிவினரே தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் முதன்மைக் காரணியாக உருவெடுத்து சிக்கல்களைத் தோற்றுவிக்கின்றனர்.
மோடி ஆதார வலிமை
சத்தீஸ்கரில் பாஜகவின் தற்போதைய எம்.பி.க்கள் 10 பேருக்குமே மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அப்படி அல்லாமல், உத்தரப் பிரதேசத்தில் பெரும்பாலான எம்.பி.க்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்காளர்களிடையே நற்பெயர் பெற்றவர்கள் அல்லர். பிஎஸ்பி – எஸ்பி – ஆர்எல்டி கூட்டணி தங்களது ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் மிகவும் பரிச்சயமான வேட்பாளர்களையே பரவலாக களமிறக்கியிருக்கும் நிலையில், பாஜகவோ பெரும்பாலான மக்களவைத் தொகுதிகளிலும் வலுவற்ற வேட்பாளர்களையே நிறுத்தியிருக்கிறது.
பாஜகவின் வலுவற்ற வேட்பாளர்கள் மற்றும் அரசின் கொள்கைகள் மீது கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி ஆகிய பின்னடைவுகள் இருப்பினும், ஜாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், உயர் சாதியினரும், யாதவ் – தலித் அல்லாத ஒரு பிரிவினரும் பாஜகவுக்குப் பின்னால் உற்சாகத்துடன் இருக்கின்றனர். இதற்கு, ‘மோடி காரணி’யும் முக்கியக் காரணம்.
மீரட், முசாஃபர்நகர், சஹாரான்புர் ஆகிய பகுதிகளிலுள்ள காஷ்யப் / ஜிமார், சைனி, பதாய் (மரத் தச்சர்); பிராஜ், ரோஹில்கண்ட் மற்றும் மத்திய உ.பி. பகுதிகளிலுள்ள லோத், குர்மி, குஷ்வாமா மற்றும் இதர பிரிவினரின் வாக்குகள்; அவாத், பூர்வாஞ்சல் பகுதிகளிலுள்ள பெரும்பான்மை குர்மி, ராஜ்பர், குஷ்வாஹாஸ் ஆகிய யாதவ் அல்லாத சமூகத்தினரின் வாக்குகள் கணிசமான அளவில் பாஜகவுக்குப் பின்னால் இருப்பதைக் கள ஆய்வு காட்டியது.
இதைப் போலவே, பாஜக வேட்பாளரைவிட பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜ்புத் வேட்பாளருக்கு ராஜ்புத் ஆதிக்கச் சாதியினரில் ஒரு பகுதியினரின் ஆதரவு குவியக்கூடிய ஹமீர்பூர் மக்களவை தொகுதி போன்ற சில குறிப்பிட்ட விதிவிலக்குகளைத் தவிர்த்து, உயர் சாதியினர், பிராமணர்கள், தாக்கூர், பனியா, தியாகிஸ் மற்றும் இதர பிரிவினரும் பாஜகவுக்கு உத்வேகத்துடன் ஆதரவு அளிப்பதை மாநிலம் முழுவதும் பரவலாகக் காண முடிகிறது.
மேற்கு, மத்தியப் பகுதிகள் மற்றும் அவாத் பகுதிகளிலுள்ள காதிக், வால்மிகி, கதேரியா மற்றும் பாசி முதலான ஜாதவ் அல்லாத தலித்துகள் ‘மோடி காரணி’யால் தங்களது ஆதரவை அளிக்க முன்வருகின்றன. பாஜகவின் வலுவற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதில் அவர்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.
ஆட்சி மீதான அதிருப்தி, வேலையின்மை உள்ளிட்ட காரணிகளைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், உயர் சாதியினர் மற்றும் யாதவ் அல்லாத இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஜாதவ் அல்லாத தலித்துகளின் அமோக ஆதரவு, துணிச்சலான மற்றும் உறுதியான முடிவெடுக்கக் கூடிய தலைவர் என்ற மோடியின் பிம்பம், தேசப் பாதுகாப்புப் பிரச்சினைகள் போன்ற காரணிகள் முன்னிலை வகிக்கின்றன. பிரதமரின் ஆவாஸ் யோஜனா, உஜ்வாலா யோஜானா (இலவச கேஸ் சிலிண்டர் திட்டம்), விவசாயிகளுக்கு ரூ.2000 போன்ற நலத்திட்டங்களும் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுக்குரிய இரண்டாம் நிலைக் காரணிகளாக உள்ளன.
மோடி எதிர்ப்பாளர்கள்
உயர் சாதியினர், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வலுவான ஆதரவை மோடி தலைமையிலான பாஜக பெறும் என அனுமானிக்கப்படுகிறது. அதேவேளையில், உத்தரப் பிரதேசம் முழுவதும் விரவியுள்ள ஆதிக்க இடைநிலைச் சாதியினர் மட்டுமின்றி, அரசியல் ரீதியில் பலம் பொருந்தியவர்களாகக் கருதப்படும் ஜாதவ் – சாமர் தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோர் காவிக் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் கொள்கைகளுக்கும் வலுவான எதிர்ப்பாளர்களாக உருவெடுத்துள்ளதையும் காண முடிகிறது.
ஆதிக்க இடைநிலைச் சாதியினருடன், மேற்கு உ.பி.யின் பெரும்பான்மையான ஜாட் பிரிவினர், குஜ்ஜார்களில் ஒரு பிரிவினர், ஒட்டுமொத்த மாநிலத்திலுமுள்ள பெரும்பான்மை யாதவ் சமூகத்தினர் ஆகியோர் பாஜகவுக்கும் மோடிக்கும் எதிரணியில் வலுவாகத் திரண்டுள்ளனர். வேளாண் பிரச்சினைகள், வேலையின்மை, விலைவாசி அதிகரிப்பு, பசுப் பாதுகாப்பு குண்டர்களிடமிருந்தும், விளைநிலங்களைக் கால்நடைகள் அழிப்பதிலிருந்தும் காத்துக்கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நிலையை உருவாக்கிய கால்நடை வர்த்தகத் தடை போன்றவைதான் மாநிலம் முழுவதும் உருவெடுத்துள்ள முக்கியப் பிரச்சினைகள் என இவர்கள் பார்க்கின்றனர்.
இந்த ஆதிக்கச் சமூகத்தினர் ‘இந்து’ என்ற தங்களது கலாச்சார அடையாளத்தால் முன்னிறுத்தப்பட்டனர். குறிப்பாக, 2013 முஸாஃபர்நகர் கலவரங்களுக்குப் பின் இந்தப் போக்கு நிலவியது. ஆனால், இவர்களே இன்று தங்களைச் சாதி / சமூகத்தைத் தாண்டி விவசாயிகள் என்ற அடையாளத்தை முன்னிறுத்தி, பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுவுகின்றனர்.
எனினும், தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் வாக்காளர்களின் சமூகப் பின்னணியில் அடங்கியிருக்கின்றன. உயர் சாதியினருக்கும், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கால்நடை சார்ந்த பிரச்சினைகள் என்பது அவர்களுக்கு எந்த விதத்திலும் அரசியல் ரீதியில் கவனத்துக்குரியது அல்ல. மாறாக, ஜாட் மற்றும் யாதவர்களுக்கு மற்ற வேளாண் விவகாரங்களுடன் இப்பிரச்சினையும் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைப் போதுமான அளவில் நிர்ணயிக்காதது, சர்க்கரை ஆலைகளிலிருந்து தொகை வராதது, தரப்படும் தொகையும் தாமதமாவது, வேளாண் உள்ளீட்டுப் பொருள்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவை வேளாண் சார்ந்த பிரச்சினைகளில் முக்கியமானவை. குறிப்பாக, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போலீஸ் கடுமையாக ஏவப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளும் உ.பி. விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பு தொடரக் காரணமாக இருக்கிறது.
தேசியவாதத்தை எடுத்துக்கொண்டால், எண்ணிக்கையில் மிகுதியாக உள்ள இடைநிலைச் சாதியினர் மத்தியில் மோடிக்கு ஆதரவான சூழல் துளியும் இல்லை. இந்திய ராணுவம் எப்போதுமே நாட்டுக்குப் பெருமை சேர்த்துவருகிறது. தேசியவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்தின் பெருமித நடவடிக்கைகளுக்கு மோடியும் பாஜகவும் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்று அவர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். உதாரணமாக, எட்டாவா மக்களவைத் தொகுதியின் யாதவ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்திய ராணுவத்தில் கடமையாற்றும் பலரும் விவசாயிகளின் மகன்கள்தான்; ஆனால், அந்த விவசாயிகளையே மோடி அரசு நசுக்கப் பார்க்கிறது என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.
மேலும், உயிர் நீத்த ராணுவ வீரர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் வசதி முலாயம் சிங் யாதவ் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகித்தபோது தொடங்கப்பட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. தங்களுக்கும், ஜாதவ் சமூகத்தினருக்கும் வாக்குகளை நிறைவேற்றுவதில் மோடி தலைமையிலான பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த உணர்வே முஸ்லிம்கள் மத்தியிலும் எதிரொலிக்கிறது.
தேசியவாதம், துணிச்சலான தலைமை, முதல் முறையாக இந்தியாவின் பெருமை உலக அரக்கில் உயர்த்தப்படுவது ஆகிய முழக்கங்கள் ஒருபுறம்; கிராம மக்களின் துயரங்கள், விவசாயிகள் பிரச்சினை, வேலையின்மை, விலைவாசி அதிகரிப்பு போன்றவை மறுபுறம். இந்த இரு விதமான காரணிகளுக்கும் இடையிலான விவாதம் என்பது உத்தரப் பிரதேசத்தின் கள நிலவரத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை.
தேர்தலில் சிக்கலான விளைவுகளைத் தரக் கூடிய சமூகச் சூழலும், பிரச்னைகளுக்கு முன்வைக்கப்படும் நியாயங்களும் சில விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. அதன்படி, உயர் சாதியினரும், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தேசியவாதத்தையும், துணிச்சலான தலைமையையும் முன்னிறுத்தித் தங்கள் ஆதரவை பாஜகவுக்கு தர முன்வருகின்றனர். ஜாட், யாதவ் போன்ற ஆதிக்க இடைநிலைச் சாதியினரோ மிகைப்படுத்தப்பட்ட தேசப் பாதுகாப்பு விவகாரத்தைவிட விவசாயிகள் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். இவ்வாறாக, தேர்தலில் சமூகப் பின்புலம்தான் தனக்குப் பொருத்தமான பிரச்சினைகளை நிர்ணயித்துக்கொள்கிறதே தவிர, பிரச்சினைகள் அந்தச் சமூகத்தினரின் வாக்குகளை நிர்ணயிக்கவில்லை.
புதிருக்கான விடை
வாக்காளர்களின் சமூகப் பின்புலம்தான் எந்தக் கட்சிக்கு, எந்தெந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை நிர்ணயிக்கிறது. இதை விளக்குவதற்கு மூன்று காரணிகள் உதவுகின்றன. மோடியும் பாஜகவும் எழுச்சி பெற்றால், மேற்கு உத்தரப் பிரதேசத்தில் தங்களது அரசியல் முக்கியத்துவம் சீர்குலைவது தொடரும் என்று ஜாதவ் சமூகத்தினரும், ஜாட், யாதவ் ஆகிய ஆதிக்க இடைநிலை சாதியினரும் கருதுகின்றனர். இதேதான் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் பொருந்தும் என்பது ஜாட், யாதவ் ஆகிய சமூகத்தினரின் நிலை. மோடியின் வருகைக்குப் பின் இந்த மோடி எதிர்ப்பாளர்கள் தங்களது அதிகாரத்தை வலுவாகவே இழந்துள்ளனர். மிகக் குறிப்பாக, இன்றைய சூழலில் இதை உறுதிபட உணர்ந்துள்ளனர்.
இன்னொரு புறம், மண்டல் கமிஷன் விளைவால் இதரப் பிற்படுத்த வகுப்பினரும், தலித்துகளும் முக்கியத்துவம் பெற்றதன் எதிரொலியாக, 1990களின் முற்பகுதியிலிருந்து தங்களது அரசியல் முக்கியத்துவத்தை இழந்த உயர் சாதியினர், மோடி தலைமையிலான பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் அரசியல் முக்கியத்துவத்தைக் கைப்பற்றினர்.
யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 1990களின் இறுதியில், யாதவ் சமூகத்தினரைச் சேர்ந்த இதர பிற்படுத்த வகுப்பினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் சமாஜ்வாதி கட்சியால், உரிய சலுகைகளைப் பெற முடியாத வகையில் ஓரங்கட்டப்பட்டனர். மண்டல் கமிஷன் அமலுக்குப் பிறகு சமாஜ்வாதி கட்சியின் இத்தகைய அணுகுமுறையால் இந்தப் பிரிவினர் ஏமாற்றம் அடைந்தனர். இதுவே, யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மோடி தலைமையிலான பாஜக பக்கம் சாய்வதற்குக் காரணமாக அமைந்தது. பாஜக் அவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததுடன், அமைச்சர் பதவிகளையும் தந்து அழகு பார்த்தது. அவர்களைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியலில் மோடியை வீழ்த்துவது என்பது ஒரு கட்சிக்கு பதிலாக வேறொரு கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்பதான சாதாரணச் சூழல் அல்ல; மாறாக, மீண்டும் தங்களது முக்கியத்துவத்தை இழக்க நேரிட்டு, திரும்பவும் வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்படும் என்ற அச்சமூட்டும் அசாதாரண விஷயம்.
இரண்டாவதாக, ‘மாபெரும் கூட்டணி’ அமைந்ததன் விளைவால் ஜாதவ் சமூகத்தினர் உடன் ஜாட், யாதவ் போன்ற ஆதிக்க இடைநிலைச் சாதியினர் மீண்டும் தங்களது அரசியல் முக்கியத்துவத்தைத் திரும்பப் பெற முடியும் என்ற உத்வேகத்துடன் தேர்தல் களத்தில் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்த உத்வேகமும் அரசியல் சாதகச் சூழலும் ஜாட், யாதவ் மற்றும் தலித்துகள் மீண்டும் எழுச்சி பெறச் காரணமாக அமைந்து, தாங்கள் மீண்டும் அரசியல் முக்கியத்துவத்தை இழக்க நேரிடுமோ என்று உயர் சாதியினரும், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் கவலை கொண்டுள்ளனர். ஏனெனில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில் தங்களது அரசியல் முக்கியத்துவத்தை இழந்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.
இவர்களைப் பொறுத்தவரையில், எவ்வித குழப்பமும் இன்றி உணர்வுப்பூர்வமாக உறுதியான முடிவுடன்தான் இந்தச் சூழலை எதிர்கொள்கின்றனர். இது, உயர் சாதியினர் தங்களது மனநிலையைப் பகிர்ந்துகொண்டதில் இருந்து தெளிவுபடத் தெரிந்தது. ஆகவே, ஆதிக்க இடைநிலை சாதியினரின் ஆதிக்க அரசியலுக்கு எதிராகத் தங்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய ஒரே நபர் மோடி மட்டுமே என்பதை உறுதிபட நம்புகிறார்கள். இவ்வாறாக, உத்தரப் பிரதேசத்தில் தங்கள் சமூக அந்தஸ்தில் அரசியல் முக்கியத்துவத்தை தக்கவைப்பது என்பதில் உயர் சாதியினரும், யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் உறுதியுடன் இருக்கின்றனர். இதைப் போலவே, தங்கள் மாநிலத்தில் மீண்டும் அரசியல் முக்கியத்துவத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் ஜாட், யாத்வ் மற்றும் தலித்துகள் இம்முறை கரம் கோர்த்துக் களமிறங்கியுள்ளனர்.
இந்தப் பின்னணியில், இந்தத் தேர்தலில் சமூகப் பின்புலம் மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. சாதிய – சமூக ரீதியிலான வாக்குகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன.
மக்களவைத் தொகுதியின் புவியியல் பின்புலத்தின் அடிப்படையில், உயர் சாதியினர் மற்றும் யாதவ் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டாக அதிகம் வாழும் தொகுதி அல்லது யாதவ் – ஜாதவ் – முஸ்லிம்கள் கூட்டாக அதிகம் வாழும் தொகுதியும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் என அனுமானிக்கப்படுகிறது. ஆதிக்க இடைநிலைச் சாதியினரும், அரசியல் ரீதியில் உறுதியான ஜாதவ்களும் ‘மோடி காரணி’யால் எந்த விதத்திலும் ஈடுபாடு கொள்ளவில்லை. மாறாக, மோடியை அவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், ஒரு விஷயம் மட்டும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அந்த விஷயம்: இது அலையில்லாத் தேர்தல். ஒரு தலைவர் விரும்பப்படுவதோ அல்லது புறக்கணிக்கப்படுவதோ இங்கே நடக்கவில்லை. அதேபோல், பிரச்சினைகளும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மாறாக, வாக்காளர்களின் சமூகப் பின்புலம்தான் முடிவுகளை நிர்ணயிப்பதில் முன்னுரிமை பெறுகிறது. தற்போதைய தேர்தல் உ.பி.க்கும் நாட்டுக்கும் மிகவும் முக்கியமான தேர்தல் என்பதில் ஐயமில்லை என்றாலும் உள்ளூர் ஆதிக்கப் போட்டிக்கும் சம அளவில் இங்கே முக்கியத்துவம் உள்ளது. ஏனெனில் அதுதான் மாநில அரசியலின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகிறது.
சுதா பை, சஜ்ஜன் குமார்
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/elections-2019-uttar-pradesh-modi-factor