தமிழகம் சந்திக்கப் போகிற மிக மிக முக்கியமான தேர்தல் இது.
2019 நாடாளுமன்றத் தேர்தல், நாம் தமிழர்களாக தமிழ் அடையாளத்தோடு வாழப் போகிறோமா, அல்லது, நமது அடையாளத்தை இழந்து, இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை ஏற்றுக் கொள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டிய தேர்தல். நெடுஞ்சாலை அறிவிப்பு கற்களில் கூட தமிழை அழித்து விட்டு இந்தியில் எழுதுகிறது மத்திய அரசு. சுதந்திரம் பெற்றது முதல் இல்லாத வகையில், அரசு அறிவிப்புகளை ட்விட்டரில் இந்தியில் துறை அமைச்சகங்கள் வெளியிட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடுகிறது மத்திய அரசு.
நமது அடையாளம், பண்பாடுகளை சிதைத்து விட்டு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற திணிப்பை செய்து வரும் பிஜேபி, மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றால், நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகிய அடையாளங்களை நாம் இழக்க வேண்டி வரும்.
நாட்டின் காவலாளி என்று கூறிக் கொண்டே, இந்தியாவின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும், வேலையில் மோடி ஈடுபட்டு வருகிறார். விமானப்படையின் தேவைகளுக்கேற்ப 136 ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் அரசு ஒப்பந்தம் போட்டால், அதை ரத்து செய்து விட்டு, வெறும் 36 விமானங்களை 42 சதவிகிதம் அதிக விலை கொடுத்து வாங்குகிறார் மோடி.
மேக் இன் இந்தியா என்று கூறி விட்டு, இந்தியாவின் நவரத்னா அந்தஸ்து பெற்ற இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்க வேண்டிய விமானங்களை, கடுமையான கடனில் இருக்கும், விமானத் தயாரிப்பில் எவ்வித முன்னனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு 30 ஆயிரம் கோடிகளை அள்ளித் தந்துள்ளார் மோடி.
2014 தேர்தல் அறிக்கையில் கொடுத்த ஒரே ஒரு வாக்குறுதியை கூட பிஜேபி நிறைவேற்றவில்லை. அந்த தேர்தல் அறிக்கையில் இருந்த அத்தனை வாக்குறுதிகளையும் அப்படியே 2019 தேர்தல் அறிக்கையில் மீண்டும் அச்சிட்டுள்ளனர். அவர்களின் வாக்குறுதிகளை துளியும் நிறைவேற்றாமல்தான் இன்று உங்கள் முன்னால் வந்து வாக்கு கேட்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் நாங்கள் இதனை சாதித்தோம் என்று ஒரே ஒரு திட்டத்தை கூட இவர்களால் பெருமையாக சொல்லிக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாகத்தான், பாகிஸ்தானை காட்டி அச்சுறுத்தி வாக்கு சேகரிக்கின்றனர்.
நதிநீர் இணைப்பு என்று ஒரு புதிய ஏமாற்று வேலையை பிஜேபி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. கங்கையை சுத்தப்படுத்துகிறோம் என்று ஒரு துறையை அதற்காக உருவாக்கி, 3000 கோடிகளை கடந்த 5 ஆண்டுகளில் பிஜேபி செலவிட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இன்று கங்கை அசுத்தமாகி இருக்கிறது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் கருப்புப் பணம் ஒழிந்து விடும் என்று மார்தட்டினார் மோடி. ஆனால் தேர்தலையொட்டி இன்று நாடெங்கும் பல நூறு கோடிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதுதான் இவர்கள் கருப்புப் பணத்தை ஒழித்த லட்சணம். அந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், சில நூறு உயிரிழப்புகளும், நாம் ஏடிஎம் ஏடிஎம்மாக தெருவில் அலைந்ததும்தான் மிச்சம்.
கடந்த ஐந்தாண்டுகளாக மோடி அரசு என்னதான் செய்தது என்பது குறித்து, மோடியின் ரிப்போர்ட் கார்ட் 1, மற்றும், மோடியின் ரிப்போர்ட் கார்ட் 2 என்ற இரண்டு பகுதிகளில் சவுக்கில் கட்டுரை வெளி வந்துள்ளது. இது தவிர்த்து, மோடி ஆட்சியின் அவலங்கள் குறித்து, கடந்த மே 2018 முதல் ஒரு வருடமாக, சவுக்கில் #PackUpModi series என்று தொடர் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வந்துள்ளன. இக்கட்டுரைகளில் வந்த விபரங்களே, மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப போதுமானவை. இருப்பினும், 18 ஏப்ரல் 2018 வாக்கு தினத்தை முன்னிட்டு ஒரு சில விஷயங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவஹர்லால் நேருவுக்கு போதுமான நிர்வாக அனுபவங்கள் இல்லை. ஆனால் நேரு ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். இந்தியாவுக்கு என்ன வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். இதனால்தான், ஐஐடிக்கள், ஐஐஎம்கள், விண்வெளி ஆராய்ச்சி, பெரும் தொழிற்சாலைகள் போன்றவற்றை, சோவியத் யூனியன் உதவியோடு நிர்மாணித்தார்.
இந்தியாவின் தன்னிச்சையான அமைப்புகளான, சிபிஐ, ரிசர்வ் வங்கி, திட்டக் கமிஷன், அமலாக்கப் பிரிவு, நீதித் துறை, பல்கலைக்கழகங்கள், புள்ளியியல் ஆணையம் என பல்வேறு அமைப்புகள் கடந்த 70 ஆண்டுகளாக, படிப்படியாக செழுமை பெற்று வருகின்றன. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள், அரசியல் அமைப்புச் சட்ட திருத்தங்கள் ஆகியவற்றால், இந்த அமைப்புகள் செழுமையடைந்து, உலகின் மற்ற எந்த அமைப்புகளுக்கும் நிகராக வளர்ந்துள்ளன. உலகின் வளர்ந்த நாடுகள் 200 அல்லது 300 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை, சுதந்திரம் பெற்று வெறும் 70 ஆண்டுகளில் இந்தியாவால் அடைய முடிந்தது என்றால் அது மிகையல்ல.
ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில், நாம் உருவாக்கிய அத்தனை அமைப்புகளையும், திட்டமிட்டு சிதைத்துள்ளார் மோடி. நீதிதுறையையும், மோடி விட்டு வைக்கவில்லை. இதன் காரணமாகத்தான், உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், வரலாற்றில் இல்லாத வகையில், பத்திரிக்கையாளர்களை சந்த்திதனர். சிபிஐ, சிவிசி, ரிசர்வ் வங்கி, திட்டக் கமிஷன், புள்ளியியல் ஆணையம், மத்திய பல்கலைக்கழகங்கள் என்று அத்தனை அமைப்புகளையும் திட்டமிட்டு சிதைத்துள்ளது பிஜேபி அரசு.
பிரதமரான பிறகு ஒரே ஒரு முறை கூட பத்திரிக்கையாளர் சந்த்திப்பை நடத்தாத ஒரே பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே. ஏனெனில், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தெரியாத, முடியாத கோழை அவர். இந்தியா என்ற நாடு வட கொரியா அல்ல. வட கொரியா போன்ற சர்வாதிகார நாட்டில், அந்நாட்டின் அதிபர் கேள்விகளை எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இந்தியா போன்ற உலகின் பெரிய ஜனநாயகத்தில், பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் இருப்பதை அனுமதிக்க முடியாது.
மோடி அரசு பதவியிழக்க வேண்டுமென்பதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும். மிக மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது, மோடி ஆட்சியில் தலைவிரித்தாடும் மத வெறி.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தானை பிரித்து ஜின்னா தனி நாடு உருவாக்குகையில், பாகிஸ்தான் ஒரு முஸ்லீம் நாடாக இருக்கப் போகிறது என்பது வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டது. அந்த பிரிவினையின்போது, இந்திய எல்லைக்குள் இருந்த பல இஸ்லாமியர்கள், பாகிஸ்தானை தேர்ந்தெடுத்து குடிபெயர்ந்தனர். அதே போல, லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள், இந்தியாதான் எங்கள் நாடு என்று முடிவெடுத்து இந்தியாவிலேயே இருந்தனர். அப்படி இந்தியாதான் எங்கள் தாய்நாடு என்று முடிவெடுத்த இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் இந்திய தலைவர்கள்.
இதன் காரணமாகவே, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகவுரையில், இந்தியாவை “சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக” கட்டமைப்போம் என்று குறிப்பிடப்பட்டது. இந்தியாவை, வளைகுடா நாடுகளை போல ஒரு இஸ்லாமிய நாடாகவோ, ஒரு மதத்தினருக்கான நாடாகவோ உருவாக்கக் கூடாது என்பதில், இந்திய தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில், இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாகவே மாற்றியுள்ளது. இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்களை பிரதமர் மோடியே பேசுகிறார். மிகப் பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசம் தேர்தலை சந்திக்கையில், ஒரே ஒரு இஸ்லாமிய வேட்பாளரை கூட வேட்பாளராக பாஜக நிறுத்தவில்லை. இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அத்தனை பேரும் பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள் என்ற ஒரு பிம்பத்தை பாஜக தொடர்ந்து கட்டமைத்து வருகிறது.
இந்தியாவில், இந்து மதத்துக்கும், இந்துக்களுக்கும், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களால் கடும் ஆபத்து என்ற பிம்பம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் சில மாநிலங்களில் ஆங்காங்கே சில மதக் கலவரங்கள் ஆண்டுதோறும் நடந்து வந்தாலும், பரந்துபட்ட அளவில் பார்க்கையில், இஸ்லாமியர்களும், இந்துக்களும், பிற மதத்தினரும் இணக்கமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
மதம் என்பதை வீதிக்கு கொண்டு வருவதை பெரும்பான்மை மக்கள் விரும்பியதில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவாக தமிழகத்தில் 15 ஆண்டுகளாகத்தான் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு வரை, விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து விட்டு, சில நாட்கள் கழித்து அந்த மண் விநாயகரை கிணற்றிலோ, ஆற்றிலோ போட்டு விட்டு அமைதியாக அடுத்த வேலையை பார்த்ததுதான் தமிழகம். ஆனால், இன்று ஒவ்வொரு தெருவிலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்து, காது கிழியும் அளவுக்கு ஒலிப் பெருக்கிகளை வைத்து, அதை ஊர்வலமாக கடற்கரைக்கு எடுத்துச் செல்வோம். அதுவும், மசூதி இருக்கும் தெருவில்தான் எடுத்துச் செல்வோம் என்று பிடிவாதம் பிடிப்பது யார் ? இந்த சங்கிகள்தானே ? பெரிய பெரிய விநாயகர் சிலைகளை தெருவில் வைப்பதற்கு முன் நம் வாழ்க்கை பரிதாபகரமாக இருந்ததா ? அல்லது தற்போது இப்படி சிலைகளை வைப்பதால் நம் வாழ்வு முன்னேறி விட்டதா ? இந்த விழாக்களால், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் எத்தனை சிரமம் ? இந்த விநாயகர் விழாக்களை கலவரத்தை தூண்டுவதற்காகவே பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள் இந்த சங்கிகள்.
இது போதாதென்று, ரத யாத்திரை, புஷ்கர யாகம் என்று கலவரத்தை உருவாக்க புதிது புதிதாக தந்திரங்களை கண்டுபிடிக்கிறார்கள். இவர்களின் நோக்கமே, இந்துக்களும், இதர சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழவே கூடாது என்பதுதான்.
ஒரு நாடு, ஒரு மதம், ஒரே மொழி என்று இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். இதன் பரிணாம வளர்ச்சியாகவே அரசியல் அமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று துடியாக துடிக்கிறார்கள்.
பசுவின் பெயரால், இந்தியா முழுக்க படுகொலைகள் நடக்கின்றன. வீட்டுக்குள் நுழைந்து அவர் வீட்டு ப்ரிட்ஜில் வைத்திருக்கும் மாமிசத்தை எடுத்து அது மாட்டுக் கறி என்று கூறி, அவரை அடித்துக் கொலை செய்யும் வெறி பிடித்த கூட்டத்தைத்தான் மோடி விரும்புகிறார். வளர்த்து வருகிறார். பசுவின் பெயரால், நாடெங்கும் நடக்கும் படுகொலைகளுக்கு, மோடி தனது மறைமுகமான ஆதரவை அளித்து வருகிறார் என்பதை நாம் கடந்த ஐந்தாண்டுகளாக பார்த்து வருகிறோம்.
நாட்டின் பல இடங்களில், இஸ்லாமியர்கள் அற்ப காரணங்களுக்காக தாக்கப்பட்டு, நெற்றியில் திலகமிட்டு, “பாரத மாதா கீ ஜெய்” என்று முழக்கமிட வைக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறுகின்றன.
மாற்று சிந்தனையாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில், காவி ரவுடிக் கும்பல் உள்ளே நுழைந்து கலவரம் செய்து நிகழ்ச்சியை ரத்து செய்யும் சம்பவங்களும் நாடெங்கும் நடந்து வருகின்றன.
நாட்டின் வரலாற்றையே மாற்றி, பிரிட்டிஷார் காலத்தில், அவர்கள் காலடியில் மண்டியிட்டு, பிச்சை கேட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை, மிகச் சிறந்த தேசபக்தர்களாக சித்தரிக்கும் வகையில் பாடப் புத்தகங்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
இட ஒதுக்கீட்டை ஒழித்து, மீண்டும் மனுதர்ம ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான் இவர்களின் நீண்ட நாள் விருப்பம். அதற்காகத்தான் மீண்டும் ஒரு முறை வாக்களியுங்கள் என்று உங்களிடம் கரம் கூப்பி வருகிறார்கள்.
இன்று இந்த காவி கூட்டத்தால் நமது வாழ்வியல் முறையே எப்படி புரட்டிப் போடப்பட்டுள்ளது என்பதை பாருங்கள்.
இவர்கள் சனாதன தர்மத்தை நிறுவ பயன்படுத்தும் மற்றொரு கருவி “தேசபக்தி”. இவர்கள் சொல்லிக் கொடுத்தா நாம் தேசபக்தியை கற்றுக் கொள்ள வேண்டும் ? நாம் எல்லோரும் என்ன பாகிஸ்தானுக்கு உளவு வேலையா பார்த்து வருகிறோம் ? நம் அனைவருக்கும் தேசபக்தி உள்ளது. நாம் வாழும் இந்த தேசத்தை நேசிப்பவர்கள்தாம் நாம். ஆனால் இவர்களைப் போல, பக்கத்து வீட்டு இஸ்லாமியனை பாகிஸ்தான் உளவாளி என்று அடித்து நம் தேச பக்தியை நிறுவ விரும்பும் குடிமகன்களல்ல நாம். அன்போடும், சகோதரத்துவத்தோடும், மனித நேயம் தழைக்கும் வகையில் நம் வாழ்வை வாழ வேண்டும் என்று நினைப்பவர்களே இந்தியாவில் நம்மைப் போன்ற பெரும்பான்மையினர்.
ஆனால் இவர்கள் தேசபக்தி என்ற பெயரில், இந்து அல்லாதோர், இந்து மதத்தை சேர்ந்த தலித்துகள் போன்றவர்களை, அடக்கி ஆண்டு, அவர்களை இழிகுலத்தோராக வைக்க விரும்புகிறார்கள்.
இப்படிப்பட்ட இந்தியாவையா நீங்கள் விரும்புகிறீர்கள் ?
ஒருவனோடு நட்பு கொள்ள வேண்டுமென்றால் அவன் என்ன மதம், என்ன மொழி பேசுகிறான், என்ன உணவு உண்கிறான் என்பதை அறிந்துகொண்ட பின்னர் உங்கள் பிள்ளை தன் சக மாணவனோடோ, அல்லது ஒரு இளைஞனோடோ பழக வேண்டும் என்பதையா நீங்கள் விரும்புகிறீர்கள் ?
என்ன புத்தகம் படிப்பது, எந்த மதத்தை பின்பற்றுவது, என்ன விதமான இசையை கேட்பது, எந்த மதத்தை சேர்ந்த, எந்த சாதியை சேர்ந்த பெண்ணை காதலிப்பது, எந்த உணவை உண்பது, என்ன திரைப்படத்தை பார்ப்பது, என்பன அனைத்தையும், ஒரு அரசும் ஒரு காவி ரவுடிக் கூட்டமும் தீர்மானிப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா ? இப்படியொரு அசாதாரணமான இந்தியாவையா உங்கள் சந்ததிக்கு விட்டுச் செல்ல விரும்புகிறீர்கள் ?
நான் அப்படி ஒரு இந்தியாவை விரும்பவில்லை. பலதரப்பட்ட கலாச்சாரம், பண்பாடு, மதம், மொழி, இனம், பழக்க வழக்கங்களை கொண்ட இந்த அற்புதமான நாடான இந்தியா, அதன் பல்வேறு கலாச்சார கூறுகளோடு உயிர்ப்போடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கலவரமோ, வன்முறையோ இல்லாத ஒரு இந்தியாவை நான் விரும்புகிறேன்.
அன்பும் நேசமும் மனிதநேயமும் இன்னும் இந்தியாவில் செழித்தோங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
உத்திரப் பிரதேசத்தில் மாட்டுக் கறி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட அக்லக்காக நான் உணர்கிறேன். ஜார்கண்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக அடித்து கொலை செய்யப்பட்ட அலிமுத்தீன் அன்சாரியாக நான் உணர்கிறேன். இதே காரணத்துக்காக ராஜஸ்தானில் கொலை செய்யப்பட்ட பெஹ்லூ கான் மற்றும் ரக்பர் கானாக நான் உணர்கிறேன்.
விலங்குகளுக்காக என் சக மனிதன் அடித்துக் கொல்லப்படுவதை நினைத்து வெட்கப்படுகிறேன். இதுவா என் இந்தியா என்று நினைத்து வேதனைப்படுகிறேன்.
இதன் காரணமாகத்தான் மீண்டும் இந்த காவிக் கும்பல் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
விலங்கின் பெயரால் சக மனிதன் அடித்துக் கொல்லப்படுவதை நீங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.
அதனால் உங்களிடம் கூறுகிறேன். மத்தியில் உள்ள இந்த ஆட்சியை அகற்றுவதற்கான வழிவகைகள் எது சரி என்று நீங்கள் கருதுகிறீர்களோ அந்த கட்சிக்கு வாக்களியுங்கள்.
வெற்றி பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லாத கட்சிகளுக்கோ நோட்டாவுக்கோ உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். புதிய கட்சிகளுக்கோ, புதிய வேட்பாளர்களுக்கோ ஆதரவு தருவது வரவேற்கத்தக்கதே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்தியில் ஆளும் பாசிச ஆட்சியை அகற்றியே தீர வேண்டிய கடமை நம் முன் உள்ளது.
மீண்டும், மத்தியில் மோடி ஆட்சியை பிடிப்பாரேயானால், அதற்கு நாம் உதவினோம் என்ற வரலாற்றுப் பிழைக்கு நாம் ஆளாகக் கூடாது.
தவறாமல் வாக்களியுங்கள். மத்தியில் ஆளும் பிஜேபியையும், தமிழகத்தை ஆளும் அடிமைகளையும் வீழ்த்தவும், வீட்டுக்கு அனுப்பவும், எந்த கட்சி சக்தி படைத்ததோ, அந்த கட்சிக்கு வாக்களியுங்கள்.
ஆணவத்தால் ஆடிய பல சர்வாதிகாரிகள் மண்ணோடு மண்ணாகப் போயுள்ளதை வரலாறு பார்த்துள்ளது. நானே நிரந்தரம் என்று தலை கொழுத்து ஆடிய பல சர்வாதிகாரிகள் காணாமல் போயுள்ளார்கள்.
அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகாரியான மோடிக்கும் நமது வாக்கின் வலிமை என்ன என்பதை உணர்த்துவோம்.
ஐயா, சவுக்கு பதிவிடும் ஒவ்வொரு கருத்தும் ஆணித்தரமாக உள்ளதை பெரிதும் மதிப்பவன் நான். ஜெயலலிதா ஆட்சியில் அவருடைய ஆணவப்போக்கை மட்டுமன்றி எதிர்கட்சியான தி.மு.க.வின் தில்லுமுல்லுகளையும் அக்குவேறு ஆணிவேறாகக் கிழித்து எடுத்தது சவுக்கு மட்டுமே. மேலும் மத்தியில் உள்ளவர்களையும் அங்குள்ள எதிர்கட்சிகளையும் நடுநிலையாக விமர்சித்ததும் சவுக்கின் தனிச்சிறப்பு.
ஆனால் சமீபகாலமாக பி.ஜே.பி. யை மட்டுமே தரம் தாழ்த்தி விமர்சிப்பது என்ற பாகுபாடு என் சிற்றறிவுக்கு எட்டவில்லை.
நான் நடுநிலையாளன்.
உங்கள் கூற்றுப்படி பார்த்தால் காங்கிரஸ் அல்லது வேறு கட்சிகளின் ஆட்சி அமைந்தால் நம் நாடு நலம் பெறும் என்ற தொனி தென்படுகிறது. உங்களுக்கே தெரியும் அது நடக்காது என்பது. நாடு மேலும் சீரழியும்.
சவுக்கு நியாயத்தின் பக்கம் என்று இன்னும் நம்புகிறேன்.
Investigate Journalism என்று தொடங்கிய சவுக்கு……….இன்று தன்னுடைய சொந்த கருத்துக்களை திணிக்க கூடிய தளமாக மாறிவிட்டது. தமிழ் நாட்டில் நடக்க கூடிய ஒரு குற்றத்தை பற்றி கூட ஒரு கட்டுரை வரவில்லை. Straight ஆ டெல்லி தான் போல ..
சவுக்கு நீங்களும் கடைசில காங்கிரஸ் சொம்பா
Vote for DMK and Congress Alliance.. Save India
After a long time savukku wrote wonderful article.. Tamil nadu People should realize this..
உண்மையை உரக்க சொல்லியிருக்கும் அருமையான கட்டுரை.
இந்த தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் மிக அற்புதமான கட்டுரை.
வாழ்த்துகள் !
உங்கள் இப்பணிதொடர வேண்டும்
நன்றி.
நாம் தமிழராய் தமிழ் அடையாளத்துடன் வாழ நாம் தமிழருக்கு ஓட்டு போடுங்கள்.
super sir i will vote for congress
உங்க கட்டுரை எப்போதும் வேற லெவல். இது அதுக்கும் மேல 👏👏
நன்றி. இன்று இந்த நாடு எப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலை யில் இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கமாகவும் கூறியுள்ளீர். இத்தகைய சூழலில் பி.ஜே.பி. கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே காங்கிரஸ் வரலாம். ஒருவேளை தொங்கு பாராளுமன்ற நிலை வந்தால் தி.மு.க. நிச்சயமாக பிஜேபி பக்கமாக போகாது என உறுதியாக கூற முடியாது. நாம் தமிழர் கட்சி போன்ற மாற்று அரசியலுக்கு வாய்ப்பு தரவில்லை என்றால் நாம் அனைவரும் ????
தெளிவான கருத்து.
இனிமேல் பிஜேபியுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என உரக்க சொல்லி ஓட்டு கேட்கும் ஓரே அரசியல் கட்சி நாம் தமிழர் மட்டுமே.
Ennathu naam Tamilarl groupa.. Avan Mumbai ku poye bjp ku vote ketavan aache..
Super sir