“மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் வரவேற்பறைகள், பணியிடங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.
பிரதமரின் அபிமானிகள் மற்றும் பக்தர்களைப் பொற்த்தவரை “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஒரு கேள்வி என்பதைவிட, பதிலடியாக அமைகிறது. அவரது வார்த்தைகள், செயல்கள் மற்றும் கொள்கைகள் பற்றிக் கேள்வி கேட்கும்போது அவர்களில் பலரும் சரியான மாற்று இல்லாத நிலையையே சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆனால் மோடி ஆதரவாளர்களாக இல்லாத பலருக்கு, இந்தக் கேள்வி அவர்கள் மனதில் உள்ள குழப்பத்தை பிரதிபலிக்கிறது. இதைத் தொடர்ந்து, எனில் யார் மாற்று? ராகுல் காந்தியா, மாயாவதியா, அகிலேஷ் யாதவா எனும் சிந்தனை எழுகிறது.
இந்தக் கேள்வி கேட்கப்படும்போதெல்லாம் ஒரு செங்கல் கொடுக்கப்பட்டிருந்தால், இப்போது ஒரு வீடு கட்டியிருப்பேன் என நான் வேடிக்கையாகச் சொல்வது வழக்கம். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு நிகழ்ந்த மகத்தான விஷயம் என மோடியை முன்நிறுத்தியிருப்பதோடு, “மோடி இல்லை எனில் வேறு யார்?” எனும் கேள்வி, தவறான கேள்வியைக் கேட்பதன் மூலம் மக்களைச் சரியான பதிலைத் தேடவிடாமல் இருந்து திசை திருப்புவது எத்தனை எளிதானது என்பதையும் உணர்த்துகிறது.
“மோடி இல்லை எனில் வேறு யார்?” என்பது ஏன் தவறான கேள்வி. ஏனெனில், இதில் நரேந்திர மோடி இந்தியாவுக்குத் தவிர்க்க இயலாதவர் எனும் மிகப்பெரிய அனுமானம் ஒளிந்திருக்கிறது.
ஆனால், மோடி விஷயத்தில் இது உண்மையா? மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தேச பொருளாதாரத்தையும் பிளவுபட்டுள்ள இந்தியச் சமூகத்தையும் பார்க்கும்போது, இதற்கு நேர் எதிரானதே உண்மை என தோன்றுகிறது. அவர் பிரதமராக இல்லாமல் இருந்தாலே நாடு நன்றாக இருக்கும்.
மோடியின் தவிர்க்க இயலாத தன்மையைச் சித்தரிக்க ஆயிரக்கணக்கான கோடிப் பணம் (மொத்த தொலைக்காட்சிகளும் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்) செலவிடப்பட்டதையும் மீறி, கள யதார்த்தம் வேறு சித்திரத்தைக் காட்டுகிறது. 1974க்குப் பிறகு இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு நெருக்கடியை இந்தியா எதிர்கொண்டிருக்கிறது.
தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் (எம்.எஸ்.எஸ்.90ஓ.) ஆய்வு, வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக இருப்பதாக தெரிவிக்கிறது. 1971இல் பாகிஸ்தானுடனான போருக்குப் பின், சர்வதேச கச்சா எண்ணெய் நெருக்கடியை இந்தியா எதிர்கொண்ட 1972-73இல் இருந்த 5.18 விகிதத்தை விட இது அதிகமாகும்.
இது நாம் சந்திக்கும் பிரச்சினை அல்ல. இது நெருக்கடி.
2014 மக்களவைத் தேர்தலில் மோடி உறுதி அளித்த வேலைவாய்ப்பை நம்பிய இளைஞர்களில் கணிசமானோர் இப்போது வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 18.7 சதவீதம் பேர் 15 முதல் 19 வயதுள்ள நகர்ப்புற ஆண்கள். 27 சதவீதம் பேர் நகர்ப்புறப் பெண்கள். ஜிடிபியில் உள்நாட்டு உற்பத்தியை 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்தி, 1.2 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கம் கொண்ட மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் படுமோசமாக தோல்வி அடைந்துள்ளது.
பணமதிப்பு நீக்கம் மற்றும் மோசமாக செயல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவை இந்தியப் பொருளாதாரத்தை முடக்கியுள்ளது. 2018இல் மட்டும் 1.1 கோடி இந்தியர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களில் 90 லட்சம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்.
இவை எல்லாம், எந்த உலகில் மோடி தவிர்க்க இயலாதவர் எனும் கேள்வியை எழுப்புகின்றன.
இந்தியாவின் 73 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் ஒரு சதவீதத்தினர் வசிக்கும் உலகில்தான் இப்படி நினைக்க முடியும் என ஊகிக்க ஒருவர் பெரிய அறிவாளியாக இருக்க வேண்டியதில்லை. இந்த ஒரு சதவீதத்தினர்தான், எஞ்சிய 99 சதவீதத்தினர் நுகரும் அச்சு மற்றும் காட்சி ஊடகத்தைக் கட்டுப்படுத்துகின்றனர்.
இந்த ஒரு சதவீதத்தினர்தான் மோடி தவிர்க்க இயலாதவர் எனும் மாயையைப் பரப்ப விரும்புகின்றனர். அப்போது தான் ஒரு சதவீதத்தினராக இருப்பதற்கான அரசியல் ஆதரவை அவர்கள் தொடர்ந்து பெற முடியும். மகாராஜா அம்மணமாகி இருக்கிறார். ஆனால் அப்படியெல்லாம் இல்லை என்று அவர்களின் ஊடகம், 99 சதவீத மக்களை நம்ப வைக்கத் தேர்தல் நேரத்தில் அதிகமாக உழைக்கிறது.
மோடி இல்லை எனில் வேறு யார் எனும் கேள்விக்குள் மூர்க்கத்தன்மை உள்ளது. நம்மில் யாருமே, ஒட்டுமொத்த தேசம் முழுவதற்கும் பேசுவதாக நினைத்துக்கொண்டு இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் அளிக்க முடியும்? மக்கள் வாக்களிக்கும் வரை அவர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என நாம் எப்படி அனுமானிப்பது? இந்தக் கேள்விக்கு மக்களவைத் தேர்தலில் தேசம் பதில் அளிக்கும். ஜனநாயகத்தில் மாற்றுகள் உருவாகும். தேர்தலுக்கு முன் நிலவும் நிச்சயமற்றதன்மை ஜனநாயகச் செயல்முறையின் ஒரு அங்கமாகும்.
1964இல் நேரு மறைந்தபோது, பலரது மனதில் நேரு இல்லை எனில் வேறு யார் எனும் கேள்வி எழுந்தது.
புதிய ஜனநாயகமாக மலர்ந்த இந்தியா, தான் எதிர்கொண்ட முக்கியமான முதல் 15 ஆண்டுகளைக் கடந்து வர வழிகாட்டியவர் அவர். ஆனால் நேரு மறைந்த பிறகும் இந்தியா ஒரு ஜனநாயகமாகத் தாக்குப்பிடித்துத் தழைக்கவில்லையா? இதற்குக் காரணம், தற்போதைய தலைவரைப் போல அல்லாமல் இந்தியாவின் முதல் பிரதமர், எதிர்காலத் தலைமுறையினருக்காக ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தினார்.
இறுதியாக, “மோடி இல்லை எனில் வேறு யார்?” என்னும் கேள்வி, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மாவைப் பற்றிய புரிதல் அற்ற கேள்வி. நம்மில் பலரும், ஆட்சியில் அமரும் உரிமை உள்ள மன்னரோ ராணியோ முடி சூடிக்கொண்டு, நாட்டை ஆள்வது போல நினைத்துக்கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை இது ஏற்படுத்துகிறது.
ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்படுபவர்கள் மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் எனப் புரிந்துகொள்வதற்கு மாறாக, நம்முடைய நவீன ராஜாக்கள், ராணிகள் முன் மண்டியிட்டு, அவர்களை நாயகர்களாக வழிபடவும் செய்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம், நாம் நம்மை அறியாமலேயே ஜனநாயகம் என்னும் கருத்தாக்கத்தை வலுவிழக்கச்செய்து, அவமானத்திற்கு உள்ளாக்குகிறோம்.
ஒற்றை மனிதரை எல்லாப் பிரச்சினைகளுக்குமான மகத்தான பதிலாகவும், மகத்தான தலைவராகவும் பார்ப்பதன் ஆபத்தை நாம் இப்போது கண்கூடாகப் பார்க்கலாம். அரசியல் மீட்பர்கள் ஆபத்தான மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிடும் தலைவர்களாகவும் வாய் வீச்சாளர்களாகவும் மாறிவிடும் வாய்ப்பும் உள்ளது.
பிளவுபடுத்தும் சக்தியை ஆட்சியில் இருந்து அகற்றுமாறு நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 700 நாடக கலைஞர்கள், வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கை மேலே குறிப்பிடப்பட்டுள்ள போக்கினைச் சிறந்த முறையில் சித்தரிக்கிறது.
“5 ஆண்டுகளுக்கு முன் தேசத்தின் மீட்பராக முன்நிறுத்தப்பட்டவர், தனது கொள்கைகள் மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தை அழித்துள்ளார். கறுப்புப் பணத்தை மீட்டு வருவோம் என்றார். அதற்கு மாறாக, மோசடிப் பேர்வழிகள் தேசத்தைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர். பணக்கார்களின் செல்வம் அதிகரித்து ஏழைகள் இன்னும் ஏழையாகியுள்ளனர்.”
இந்தியாவின் பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், கலைஞர்கள் ஆகியோர், கடந்த சில மாதங்களில், இந்தியா முற்றுகைக்கு உள்ளாகியிருப்பது குறித்த தங்கள் கவலையை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
ரோகித் குமார்.
https://thewire.in/politics/an-answer-to-if-not-modi-then-who
போய்யா நீயும் உன் கருத்துக் கணிப்பும்