எல்லோருக்கும் பொதுவான கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக போட்டுக்கொண்டிட வேஷங்கள் கலைந்துவிட்டன.
தற்போது நடந்துகொண்டிருக்கும் தேர்தல் பிரச்சாரம் போலச் சுதந்திர இந்தியா ஒருபோதும் கண்டதில்லை. நாட்டின் அரசமைப்பு சாசனம் மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிக்கிறது. ஆனால் மத்திய ஆளும் கட்சியான பாஜக திரும்பத் திரும்ப “மற்றவர்கள்” மீது, குறிப்பாக முஸ்லிம்கள் மீது, வெறுப்பை வளர்ப்பது ஜனநாயகத்தையே உறைந்துபோக வைக்கிறது.
விதிவிலக்கே இல்லாமல் பாஜக தலைவர்கள் பகை நெருப்பைப் பற்ற வைத்து விசிறிக்கொண்டே இருக்கிறார்கள். அதன் தலைமைப் பீடத்தில் உள்ள பிரதமர், கட்சியின் தலைவர் முதல், உள்துறை அமைச்சர். நிதியமைச்சர் என அக்கட்சியின் ஒட்டுமொத்தத் தலைவர்களும் கட்டவிழ்த்துவிட்டுள்ள பிரச்சாரங்கள் சிறுபான்மையினர், மாற்றுக் கருத்துடையோர், மக்கள் களத்தில் செயல்படுவோர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தோர் ஆகியோரது குடியுரிமை மீது விதைக்கப்படும் சந்தேகத்தையும் வெறுப்பையுமே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. முன்னெப்போதும் காணாத இப்படிப்பட்ட தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாஜக தலைவர்களையும் அவர்களது விசுவாசிகளையும் தவிர்த்து வேறு யாருமே அந்த வெறுப்பலையிலிருந்து விட்டுவைக்கப்படவில்லை.
பன்முகப் பண்பாடு செழித்திருக்கும் இந்தியாவை இரண்டாவது முறையாக ஆளும் வாய்ப்பைத் தருமாறு, பெரும்பான்மை இந்து சமூகத்தின் பெயரால் பகிரங்கமாகக் கோருகிறார்கள் ஆளுங்கட்சியினர். கிராமங்கள், சிறிய நகரங்கள், பெரிய ஊர்கள் என எங்கும், இந்தக் காட்சிதான். கடந்த காலங்களில் சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இயக்கமாகத் தன்னை பாஜக முன்வைத்துக்கொண்டது. அந்த வேடம் இப்போது கலைந்து காற்றோடு கரைந்து போய்விட்டது. இன்று நடப்பது அச்சத்தை வளர்க்கிற, பகைமையைத் தூண்டுகிற பிரச்சாரம்தான்.
அக்கட்சியின் தலைவர் அமித் ஷா வங்கத்தின் வட பகுதியில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், புலம்பெயர்ந்து வந்துள்ள பங்களாதேஷ் மக்களைக் “கரையான்கள்” என்று குறிப்பிட்டார் என்றால், பிரதமர் நரேந்திர மோடி வார்தா நகரில் நடந்த கூட்டத்தில், “இந்து பயங்கரவாதம் என்ற சொல்லாடலை உருவாக்கியதற்காக காங்கிரஸ் கட்சிக்கு இந்து மக்கள் பாடம் கற்பிப்பார்கள்” என்று பேசினார்.
குஜராத்தில் நடந்த ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “முதுகுத்தண்டை நடுங்க வைக்கும் அளவிற்கு” தேசத்துரோகச் சட்டம் கடுமையாக்கப்படும், என்று கூறினார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பங்கிற்கு, “துண்டு துக்காணி மனப்போக்கின் தாக்கத்தில் அல்லாமல் வலுவான தேசியக் கண்ணோட்டத்தோடு” பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் தனக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கு உதவ வேண்டிய கட்டாயம் தனக்கு இல்லை என்றார். “ எனக்கு வாக்களியுங்கள், இல்லையேல் தேர்தலுக்குப் பிறகு எந்த வேலைக்காகவும் என்னிடம் வராதீர்கள்” என்றே அவர் பேசினார்.
இத்தகைய நெறி தவறிய வார்த்தைகளின் பின்னணியில், ஒத்துழைக்க மறுப்போருக்குத் தண்டனையாக வன்முறை கட்டவிழ்த்து விடப்படும் என்ற ஒரு எச்சரிக்கை இருப்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். எதிரிகளாகக் கற்பிதம் செய்து முன்னால் நிறுத்தப்படுகிறவர்களை, அவர்கள் மனிதப் பிறவிகளே இல்லை என்று சித்தரிப்பது உலகம் முழுவதும் பெரும்பான்மைவாத அரசியல் சக்திகளால் கையாளப்பட்டு வந்திருக்கிற ஒரு மிகப் பழமையான உத்திதான். 1994இல் ருவாண்டா நாட்டில் டூட்சி இன மக்களைக் கொன்றொழித்த பெரும்பான்மை ஹூட்டு இனத்தினர், அந்தச் சிறுபான்மை மக்களை “கரப்பான்கள்” என்று சித்தரித்தார்கள். யூத மக்களை அழித்த நாஜி வெறியர்கள் அவர்களைப் பூச்சிகளோடு ஒப்பிட்டார்கள். அன்று அங்கே ஒலித்த இப்படிப்பட்ட சித்தரிப்புகள் இன்று இங்கே எதிரொலிப்பது கேட்கிறதா?
தன்னை எதிர்க்கிறவர்களை இவ்வாறு அவதூறு செய்வதை. பாஜகவினர் 2019 தேர்தலுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். சென்ற ஆண்டு மும்பை நகரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, பாஜகவுக்கு எதிராக ஒரு மாபெரும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த எதிர்க்கட்சிகளைச் சிறுமைப்படுத்தினார். பாஜக ஒரு “வெள்ளம்” என்று வர்ணித்த அவர், “வெள்ளம் பாய்ந்து வருகிறபோது பூனைகளும் நாய்களும் பாம்புகளும் கீரிகளும் ஏதாவது ஆலமரத்தடியில் தஞ்சம் புகுந்து ஒன்றாக இருக்கும்,” என்று கூறினார். இப்போது அவர் பங்களாதேஷ் நாட்டில் இருந்து வந்தவர்களைக் கரையான்கள் என்று கூறியிருப்பது சிறுமைப்படுத்தும் அரசியல் கலாச்சாரத்தின் தொடர்ச்சிதான்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதை நாம் காண்கிறோம். பெரும்பான்மை மதம் சார்ந்த மக்களின் ஆதரவுத் தளத்தை ஏற்படுத்துவது எவ்வளவு எளிதானது என்பதை பாஜக நன்றாக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறது. பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக வந்து குடியேறியுள்ள மக்களை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தோடு அடையாளப்படுத்துவது எவ்வளவு சுலபமான வேலை என்பதும் பாஜகவுக்கு தெரியும்.
ஆனால், பிரச்சினை அது மட்டுமே அல்ல. பாஜக பிரச்சாரம் அரசியல் ரீதியாக அபாயகரமானது, சமுதாயரீதியாக பின்னுக்கு இழுப்பது. எடுத்துக்காட்டாக, அண்மையில் கேரளத்தின் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி என்ன கூறினார் என்பதைப் பார்ப்போம். “உச்ச நீதிமன்ற ஆணையின் பெயரால் நமது கலாச்சாரப் பாரம்பரியங்களை அழிப்பதற்குச் சில சக்திகள் முயல்கின்றன. நமது பாரம்பரியத்தின் மீதும் நம்பிக்கையின் மீதும் எந்தவொரு தாக்குதலும் தொடுக்கப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது” என்றார் அவர். மாதவிடாய் ஏற்படும் வயதுகளில் உள்ள பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைவது தொடர்பான சர்ச்சையை இவ்வாறு பயன்படுத்திக்கொண்ட மோடி, ஒரு பிற்போக்கான, ஆணாதிக்க நியதிக் கலாச்சாரத்தை உச்ச நீதிமன்றத்தின் நீதித் தீர்ப்புக்கு மேலானதாக நிறுத்தினார்.
தீர்ப்பைப் புறக்கணித்த கேரள பாஜகவினர் தங்களது கட்சியின் மத்தியத் தலைமை அளித்த ஊக்கத்தோடு, நீதிமன்ற ஆணையைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்த மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராகக் கலவரங்களில் இறங்கினார்கள். பிரதமர் தனது கோழிக்கோடு பேச்சில் பாலினச் சமத்துவம், பாலின நீதி ஆகியவற்றில் தானும் தனது கட்சியும் நிற்பது எங்கே என்று காட்டிவிட்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இவ்வாறு முஸ்லிம்களுக்கும் தலித் மக்களுக்கும் கருத்து மாறுபாடு கொள்வோருக்கும் எதிரான வார்த்தைத் தாக்குதல்களும் வன்முறைத் தாக்குதல்களும் பெருகியிருக்க, அதற்குக் குடிமைச் சமூகத்தின் எதிர்வினை என்ன என்று பார்க்கிறபோது, கொஞ்சம் மென்மையாகச் சொல்வதென்றால், ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. மக்களிடையே பரவியுள்ள பீதிச் சூழல் பாஜகவுக்குச் சாதகமாகியிருக்கிறது. அந்தக் கட்சி மத்திய ஆட்சியதிகாரத்திற்கு வந்ததிலிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் – குறிப்பாக பாஜக சித்தாந்தத் தொட்டிலான இந்தி மாநிலங்களில் கும்பல் வன்முறைகளும் கொலைவெறித் தாக்குதல்களும் நிகழ்த்தப்பட்ட காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். பாஜக தனது இந்த வன்மப் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்திக்கொண்டிருக்க, இந்து மக்களை இவ்வாறு திரட்டிக்கொண்டிருக்க, ஒரு கற்பனை எதிரியைப் பழி வாங்குகிற வேட்கையை வளர்த்துக்கொண்டிருக்க, இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் இன்றளவும் தொடர்கின்றன.
மிக அண்மையில்கூட, அசாம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன் முஸ்லிம் முதியவர் ஒருவர் ஒரு கும்பலால் அவமானப்படுத்தப்பட்டார். அது நடந்த ஒரே வாரத்தில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜூம்ரோ கிராமத்தில், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பிரகாஷ் லக்ரா என்பவர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த நாடு, எல்லோரும் ஏற்கத்தக்கதொரு வடிவில் தாக்குப் பிடித்திருக்கும், அதை முடிவு செய்வதாக இந்தத் தேர்தல்கள் அமையும் என்றெல்லாம் எதிர்பார்ப்போடு சொல்லப்படுகிறது. அது மிகையான எதிர்பார்ப்போ, அதில் துளியேனும் உண்மை இருக்காதோ என்ற ஐயப்பாட்டைத்தான் தற்போதை நிலவரங்கள் ஏற்படுத்துகின்றன.
மோனோபினா குப்தா
நன்றி: தி வயர்
https://thewire.in/politics/elections-2019-bjp-modi-campaign
தமிழில்: அ. குமரேசன்
You are doing outstanding work sir which shows the real face of our country politicians.
Salute you sir.
Sankar Sir,
We dont want translations from multiple news sources against BJP alone. You mentioned and initiated a countdown in 2016 as Jayalalitha ‘s ADMK government is coming to end and you disappeared till Jayalalitha’s Death. If Modi comes to power again , its Decision of Indian People, not you alone or writers who say #packupmodi2019 . I request you to respect People’s decision and never keep abusing them. You dropped lot of articles requesting Hindus to vote against BJP-ADMK (indirectly favoring for Congress-DMK alliance). In 2014, ADMK won 37 seats and it went of no use since BJP came with majority. Ki.Veeramani , DK spoke a lot bad about Hindus. He is a follower of Periyar who said no god exists (hope Nathigam talks against all gods includes hindu, Muslim, Christianity , Sikhs etc). you never advice him as what he speak is wrong. words in Music has attraction power in the name of Songs across the globe ,similarly the pronounciation of Sanskrit mantras has its own power ( atleast on hindus belief) . Please speak about everything ,not one sided.
வர வர பக்கித் தனமான பதிவுகளையே காண்கிறேன். முன்னால் போலீசாச்சே. போலித்தனமாத்தான் இருக்கும்.
வர வர சவுக்கின் வேசமும் கலைந்து விட்டது.
tamil nadu election patri katturai ethavathu……