பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவது, காலம் காலமாக தொடர்ந்து நடந்து வருகிறது. 1997ம் ஆண்டு, பெண்கள் பணியாற்றும் இடங்களில் அவர்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுக்கவும், அச்செயல்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்கவும், தற்போது சட்டம் இல்லாத காரணத்தால், இத்தகைய குற்றங்களை தடுக்கவும், பெண்களை பாதுகாக்கவும், பெண்கள் பணியாற்றும் அனைத்து பணியிடங்களிலும், ஒரு குழு உருவாக்கப்பட வேண்டும் என்று, உச்சநீதிமன்றம், 13 ஆகஸ்ட் 1997 அன்று, விசாகா என்ற வழக்கில் ஒரு தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில், 9 டிசம்பர் 2013 அன்று, மத்திய அரசு, ஒரு சட்டத்தை உருவாக்கியது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 20 ஆண்டுகள் கடந்து விட்டாலும், உழைக்கும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், பணியாற்றும் இடங்களில் தொடர்ந்து தங்கு தடையில்லாமல் நடைபெற்றே வருகிறது. இதில் தண்டிக்கப்படும் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பிற துறைகளை விட்டு விடுங்கள். நீதித் துறையில், உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது வந்துள்ள புகார்களை, பாலியல் புகார்களை விசாரிக்க அமைத்த கமிட்டியும், உச்சநீதிமன்றமும் எப்படி கையாண்டன என்று பார்ப்போம்.
2013ம் ஆண்டு, உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே.கங்குலி மீது அவரிடம், சட்ட உதவியாளராக பணியாற்றிய ஒரு பெண், கங்குலி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்று ஒரு புகார் கூறினார். அப்போது ஓய்வு பெற்றிருந்த நீதிபதி கங்குலி, மேற்குவங்க மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்தார். அந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ஒரு குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் இறுதியில், கங்குலி, அந்த பெண்ணிடம், தவறாக நடந்து கொண்டார் என்பது உறுதியானது.
தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய கங்குலி என்ன சொன்னார் தெரியுமா ? “என் மீதான புகாரை உச்சநீதிமன்றம் விசாரித்ததே தவறு. குற்றச்சாட்டின் மீது எந்த எப்.ஐ.ஆரும் பதிவு செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அறிக்கை சட்டபூர்வமானதல்ல”.
இதற்கு அடுத்து அவர் சொன்னதுதான் சிறப்பு. “சில அதிகாரமிக்க சக்திகளுக்கு எதிராக நான் தீர்ப்பளித்தேன். அதன் காரணமாக நான் பழி வாங்கப் படுகிறேன்”. கங்குலி 2ஜி வழக்கில் 133 லைன்சென்சுகளை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கங்குலி மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்து, குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து, மேற்கு வங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து கங்குலி ராஜினாமா செய்தார்.
அடுத்ததாக பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய ஸ்வதந்தர் குமார். கங்குலியை விட இவர் கில்லாடி. ஓய்வு பெற்ற பின், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்தார்.
இவர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, அவரிடம் சட்ட உதவியாளராக (Law Intern) இருந்த பெண், ஸ்வதந்தர் குமார் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று ஜனவரி 2014ல் குற்றம் சுமத்தினார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த பெண், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உடனடியாக, பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக இருந்த, ஸ்வதந்தர் குமார், சுற்றுச் சூழல் தொடர்பாக பெரிய தொழில் நிறுவனங்களுக்கு எதிராக தீர்ப்புகளை வழங்கியதால், அவருக்கு எதிராக அந்நிறுவனங்கள் சதி செய்தன என்றார்.
இதன் நடுவே, ஸ்வதந்தர் குமார், டெல்லியின் மிக பெரிய வழக்கறிஞர்கள் மூலம், அந்த பெண்ணும், ஊடகங்களும் அவர் புகழுக்கு களங்கம் விளைவித்து விட்டதாக அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் பெயரையோ, புகைப்படத்தையோ, எந்த ஊடகமும் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவும் பெற்றார். அந்த தடை இன்றும் நீடிக்கிறது.
டெல்லியில் ஸ்வதந்தர் குமாரிடம் பணியாற்றிய பிறகு, பெங்களூரில் பணியாற்றிய அந்த பெண், தன்னால் டெல்லிக்கு வந்து வழக்காட முடியாது என்பதால், வழக்கை பெங்களூருக்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த இரண்டு வழக்குகளும் இன்று வரை நிலுவையில் உள்ளன. எந்த முன்னேற்றமும் இல்லை.
தற்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் ரஞ்சன் கோகோய், கடந்த சனிக்கிழமை நீதிபதியாக அவர் மீதான வழக்கை அவரே விசாரித்து என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.
“எல்லா ஊழியர்களும் நியாமாகவும், மரியாதையாகவும் நடத்தப்படுகிறார்கள். அந்த பெண் ஊழியர் ஒன்றரை மாதமே இருந்தார். அவர் சுமத்திய புகார்கள் பதில் கூறும் தகுதியற்றவை. இந்த பெண் கிரிமினல் பின்னணி கொண்டவர். அவர் மீது இரண்டு எப்.ஐ.ஆர்கள் நிலுவையில் உள்ளன. அவர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கையில் எப்படி அவர் உச்சநீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார் ? நான் டெல்லி போலீசில் விசாரித்தேன். அவர் கணவர் மீதும் இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த பெண் அந்த எப்.ஐ.ஆர் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி போலீஸ் அவர் ஜாமீனை ரத்து செய்ய மனு தாக்கல் செய்துள்ளது.
20 வருடமாக தன்னலமில்லாத சேவை செய்த எனக்கு கிடைத்துள்ள பரிசு இதுதான். என் வங்கிக் கணக்கில் வெறும் 6.80 லட்சம் மட்டுமே உள்ளது. இதுதான் மொத்த சொத்து. எனக்கெதிராக பெரிய சதி உள்ளது”.
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அத்தனை நீதிபதிகளும் எடுக்கும் ஒரே தற்காப்பு வாதம், “எனக்கு எதிராக சதி”: என்பதே.
கிரிமினல் குற்றவாளியான பெண் எப்படி உச்சநீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார் என்று கேள்வி எழுப்பும் ரஞ்சன் கோகோய், இப்படிப்பட்ட ஒரு பெண்ணை எதற்காக தனது இல்லத்தில் பணியாற்ற அனுமதித்தார் ? டெல்லி காவல் துறையில் விசாரித்தபோது, அந்த பெண் மீதும், அவர் கணவர் மீதும், குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறும் கோகோய், எதற்காக, அந்த பெண்ணின் குடும்பத்தோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார் ?
தலைமை நீதிபதி பதவியேற்பு விழா என்பது, குடியரசுத் தலைவர் மாளிகை நடத்தும் விழா. ஏற்கனவே உள்ள மரபுப் படி, அரசுத் துறை செயலர்கள், உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசுத் துறை செயலர்கள், பிரதமர், அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என்று அழைப்பிதழ் அனுப்பப்படும். இந்த பட்டியலில், உச்சநீதிமன்றத்தின் கீழ் நிலை ஊழியர்கள் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கையில், கோகோய் கேட்டுக் கொள்ளாமல், குடியரசுத் தலைவர் மாளிகை இப்படி ஒரு அழைப்பிதழை, அந்த உச்ச்நீதிமன்ற பெண் ஊழியருக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு துளியும் கிடையாது. யாருடைய உத்தரவின் அல்லது வேண்டுகோளின் பேரில் அந்த சாதாரண உச்சநீதிமன்ற பெண் ஊழியருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கோகோய் பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை அனுப்பியது ?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டில் பல்வேறு உச்சநீதிமன்ற ஊழியர்கள் பணியாற்றுவார்கள். அவர்களில், வழக்கு சுருக்கங்களை தயாரிப்பவர்கள், பழைய தீர்ப்புகளை எடுத்து தருபவர்கள், உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் அடங்குவர். இளநிலை நீதிமன்ற உதவியாளர் பதவி என்பது, மிக மிக சாதாரணமான ஒரு பதவி. தமிழக அரசுத் துறையை எடுத்துக் கொண்டால், இள நிலை உதவியாளர் பதவியோடு இதை ஒப்பிடலாம். இத்தகைய பதவிகளில் இருப்பவர்களை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டு அலுவலகத்தில் பணியாற்ற ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். சாதாரணமாக, மூத்த நீதிபதிகளிடம் பணியாற்ற பணியில் அனுபவம் பெற்ற மூத்தவர்களையே நியமிப்பார்கள். இதுதான் அனைத்து நீதிமன்றங்களிலும் கடைபிடிக்கப்படும் மரபு. பின் எப்படி அந்த பெண், கோகோய் வீட்டில் நியமிக்கப்பட்டார் ? அதுவும், சுருக்கெழுத்து கூட தெரியாத அந்த பெண்ணால்,தலைமை நீதிபதி வீட்டில் என்ன பணியை செய்து விட முடியும்.
மேலும், ஏற்கனவே, காலை ஷிப்டில், கோகோய் வீட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளர்கள், பிற்பகல் ஷிப்டுக்கு மாற்றப்பட்டு, இந்த பெண் மட்டும் காலை 8 மணிக்கே கோகோய் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது யார் ?
Discretionary Quota எனப்படும் விருப்புரிமை கோட்டாவின் கீழ், வீட்டு மனைகள், அடுக்குமாடி வீடுகள், வேலைகள், கல்லூரி சீட்டுகள் போன்றவை பல்வேறு அரசுகளால் செயல்பட்டு வந்தன. சுதந்திர போராட்ட வீரர்கள் போன்றவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட இவைகள், பிற்காலத்தில், மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்ததை எதிர்த்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும், இவற்றை பல முறை ரத்து செய்துள்ளன. இத்தகைய திட்டம் சட்டவிரோதம் என்றும் அறிவித்துள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒவ்வொரு உயர்நீதிமன்ற நீதிபதியும் தங்கள் வீட்டுக்கு அலுவலக உதவியாளர்களை இன்றும் இஷ்டம் போல நியமித்து வருகிறார்கள். இத் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதே போன்றதொரு நியமனத்தைத்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயும் செய்துள்ளார். ஒரு விஷயம் ரத்து செய்யப்படாமல், சட்டபூர்வமாக இருப்பது வரை அதை செய்வதில் தவறில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கோகோய், அவர் மீது புகாரளித்த அந்த பெண்ணின் உறவினருக்கு இந்த விருப்புரிமை கோட்டாவின் அடிப்படையில், எதற்காக பணி நியமனம் வழங்கினார் என்பதுதான் கேள்வி.
ரஞ்சன் கோகோய் 3 அக்டோபர் 2018 அன்று தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். அந்த பெண்ணின் உறவினருக்கு, 9 அக்டோபர் 2018 அன்று பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. அந்த ஆணையின் தொடக்கமே, Hon’ble Chief Justice of India is pleased to appoint, அதாவது தலைமை நீதிபதியின் உத்தரவின்படி பணி நியமனம் என்று கூறப்பட்டுள்ளது. எதற்காக, தலைமை நீதிபதி, அவர் கூற்றின்படியே “குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட” ஒரு இள நிலை ஊழியரின் உறவினருக்கு விருப்புரிமை கோட்டாவில் பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் ? நியமனம் பெற்றவர், அந்த பெண்ணின் உறவினரா ? ரஞ்சன் கோகோயின் உறவினரா ?
பின்னர் எந்த காரணமும் கூறாமல் அவரை, மூன்றே மாதத்தில் எதற்காக பணி நீக்கம் செய்ய வேண்டும் ?
உறவினர் கதையை விடுங்கள். புகாரளித்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். 19.11.2018 அன்று அந்த பெண்ணுக்கு விளக்கம் கேட்டு மெமோ அளிக்கப்படுகிறது. 22 நவம்பர் 2018 அன்று அந்த பெண் விளக்கம் அளிக்கிறார். 26 நவம்பர் 2018 அன்று அந்த பெண் அளித்த விளக்கம் ஏற்கப்படவில்லை என்று புதிய மெமோ அளிக்கப்படுகிறது. 27 நவம்பர் 2018 அன்று அவர் பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார். அதே நாளன்று, அவருக்கு துறை நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான ஷோ காஸ் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது.
6 டிசம்பர் 2018 அன்று அந்த பெண் இதற்குறிய விளக்கத்தை அளிக்கிறார். 10.12.2018 அன்று, அந்த பெண் மீதான விசாரணையை நடத்த சூர்ய பிரதாப் சிங் என்ற அதிகாரி நியமிக்கபடுகிறார். 17 டிசம்பர் அன்று விசாரணை என்று உத்தரவிடப்படுகிறது. விசாரணை அன்று உச்சநீதிமன்றத்திலேயே அந்த பெண் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லப் படுகிறார். 18 டிசம்பர் 2018 அன்று அந்த பெண்ணின் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக விசாரணை அதிகாரி அறிக்கை அளிக்கிறார்.
மருத்துவமனை சிகிச்சை முடிந்து 20 டிசம்பர் 2018 அன்று, எழுத்துபூர்வமான விளக்கத்தை அந்த பெண் அளிக்கிறார். மறுநாளே அந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
துறை ரீதியான விசாரணை என்பதை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடத்தி முடிக்க முடியாது. ஒவ்வொரு துறைக்கும் இதற்கென விதிமுறைகள் இருக்கும். அந்த பெண்ணுக்கு 27 நவம்பர் அன்று வழங்கப்பட்ட குற்ற குறிப்பாணையில், அவருக்கு விதிகளின்படி, என்னென்ன ஆவணங்கள் வேண்டுமென கேட்கலாம், நேரில் விசாரணை நடத்த வேண்டுமா இல்லையா, அவருக்கு ஆதரவாக என்னென்ன ஆதாரங்களை சமர்ப்பிக்க உள்ளார் என்று கூற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி 10 நாட்களுக்குள் அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அந்த பெண் உரிய நேரத்துக்குள் விளக்கத்தையும் அளித்துள்ளார். ஆனாலும், அவருக்கு பணி நீக்க தண்டனை வழங்கப்பட்டது. மேலும், இந்த விசாரணை, எத்தனை விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது என்பதையும் பார்ப்போம்.
அப்பெண்ணின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ன ?
1) ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்தில் அமர்ந்து பணியாற்றுமாறு உத்தரவிட்டதை ஏன் என்று கேள்வி கேட்டார்.
2) வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டது ஏன் என்று உச்சநீதிமன்ற ஊழியர் சங்க நிர்வாகிகளிடம் கூறி, அழுத்தம் கொடுத்தார்.
3) 17 நவம்பர் 2018 அன்று தகவல் அளிக்காமல் விடுப்பு எடுத்தார்
இவைதான் இந்த பெண் மீதான குற்றச்சாட்டு.
அந்த பெண் அளித்த விளக்கங்கள் :
முதல் குற்றச்சாட்டுக்கான விளக்கம் :
மூன்றே வாரங்களில், மூன்று இடங்களுக்கு நான் மாற்றப் பட்டேன். வேறு யாருமே இவ்வாறு மாற்றப்படவில்லை. நான் மற்றும் ஏன் இவ்வாறு மாற்றப்படுகிறேன் என்று கேட்டேனே ஒழிய எனக்கு கொடுக்கப்பட்ட புதிய வேலையை செய்ய மாட்டேன் என்றோ, மறுத்தோ நான் யாரிடமும் பேசவில்லை.
இரண்டாவது குற்றச்சாட்டுக்கான விளக்கம் :
உச்சநீதிமன்ற ஊழியர் நல சங்கத்தின் தலைவராக இருந்தவரோடு நான் இதற்கு முன் பணியாற்றி உள்ளேன். என்னை மட்டும் ஏன் அடிக்கடி மாற்றுகிறார்கள் என்று நட்பின் அடிப்படையில் அவரிடம் கேட்டேன். இது குறித்து எனக்காக சிபாரிசு செய்யுங்கள் என்று நான் ஒரு போதும் கூறவில்லை.
மூன்றாவது குற்றச்சாட்டுக்கான விளக்கம் :
17 நவம்பர் 2018 அன்று, என் மகளின் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தாமதமாக வர உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் அலுவலகம் வருமாறு கூறினார்கள். அன்று அலுவலகம் அரை நாள் மட்டுமே. பள்ளி நிகழ்ச்சி முடிய 12.30 மணி ஆனதால், அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு நான் அலுவலகம் செல்லவில்லை. என் கணவர் வெளியூரில் இருந்ததால், நான் பள்ளிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
எனக்கு ஆண்டுக்கு 8 விடுப்புகள் உண்டு. நவம்பர் மாதம் வரை நான் 4 நாள் விடுப்பு மட்டுமே எடுத்துள்ளேன்.
நிலைமையை நான் சரியாக கணிக்க தவறிவிட்டேன் என்பதை உணர்கிறேன். என் குடும்பம் இந்த வேலையை நம்பியே உள்ளது. என் குடும்பத்தின் நிலை கருதி, மனிதாபிமான அடிப்படையில், கருணையோடு என் விளக்கத்தை பரிசீலிக்குமாறு, இரு கரம் கூப்பி வேண்டுகிறேன் என்பதுதான் அந்த பெண் அளித்த விளக்கம்.
இந்த விளக்கம் ஏற்கப்படாமல்தான் அந்த பெண் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா முழுக்க உள்ள அரசு ஊழியர்களின் பணி விதிகள் ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும். ஒழுங்கீனமான நடத்தைகளுக்கு இரு விதமாக தண்டனைகள் வழங்கப்படும்.
கண்டனம், ஊதிய உயர்வு திரண்ட பயனின்றி நிறுத்தம். ஊதிய உயர்வு திரண்ட பயனுடன் நிறுத்தம். பதவி உயர்வு நிறுத்தம். கட்டாய ஓய்வு, பண பிடித்தம், பணி வெளியேற்றம் (Removed from service) பணி நீக்கம் (dismissal).
பணி வெளியேற்றம் செய்யப்பட்டால், மீண்டும் வேறு அரசு பணியில் சேரலாம். பணி நீக்கம் என்றால், இந்தியாவில் வேறு எந்த அரசுத் துறையிலும் சேர முடியாது.
இத்தனை வகையான தண்டனைகள் உள்ளன. இதில், உச்சபட்ச தண்டனையான பணி நீக்கம் அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு ஊழியர், பணம் கையாடல், திருட்டு, ஊழல் போன்ற மோசமான குற்றச்சாட்டுகளுக்கே உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். சிறிய குற்றச்சாட்டுகளுக்கு, பொருத்தமற்ற, அதிகப்படியான தண்டனைகள் வழங்கக் கூடாது என்று பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. அந்த தீர்ப்புகள் அடிப்படையில் வைத்துப் பார்த்தாலும், அந்த பெண் இழைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பார்க்கையில், இந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது, மிக மிக அதிகபட்சமானது.
எதற்காக இந்த பெண்ணுக்கு இப்படி அவசர அவசரமாக, அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது என்பதை ஆராய்ந்தாலே, அந்த பெண் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா என்பது புரியும்.
இந்த பெண்ணின் உறவினர் திடீரென்று வேலையில் அமர்த்தப்பட்டதும், திடீரென்று வேலையில் இருந்து நீக்கப்பட்டதும், எதேச்சையான நிகழ்வாக கருத முடியவில்லை.
இந்த பெண்ணின் கணவர் டெல்லி காவல் துறையில் காவலராக பணியாற்றி வந்தார். அவர், டெல்லி குற்றப் பிரிவிலிருந்து திடீரென்று ஆயுதப் படைக்கு மாற்றப் படுகிறார். தலைமை நீதிபதியின் செயலருக்கு தொலைபேசியில் அழைத்ததாக கூறி இவர் பணி இடைநீக்கம் செய்யப்படுகிறார். பின்னர், தலைமை நீதிபதியின் செயலாளர், தேவையில்லாமல், அந்த பெண்ணின் கணவர் அவரை தொலைபேசியில் அழைப்பதாக காவல் துறையில் ஒரு புகார் அளிக்கிறார்.
9 ஜனவரி 2019 அன்று, டெல்லி காவல் துறையின் துணை ஆணையர் விகாஸ் பூரி, அந்த பெண்ணின் கணவருக்கு ஒரு குற்றப் பத்திரிக்கையை அளிக்கிறார். அந்த புகாரில், திலக் நகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபடும் ஒருவருக்கு ஆதரவாக அப்பெண்ணின் கணவர் செயல்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதே குற்றப் பத்திரிக்கையில், அந்த பெண்ணின் கணவர் மற்றும், அவர் சகோதரர் (அவர் டெல்லி காவல் துறையில் தலைமை காவலர்) ஆகியோர் மீது, 2012ம் ஆண்டு ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக இருவர் மீதும் துறை நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் குற்ற எண் 86/2012. இந்த வழக்கு வேறு ஒரு நபரோடு தகராறு செய்ததற்காக பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கும், புகார் அளித்தவரோடு சமாதானமாக போனதால் (offences compounded) 12 ஜனவரி 2017ல் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. அதற்கான உத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது.
முடிந்துபோன இந்த வழக்கின் மீதுதான், அந்த பெண்ணின் கணவர் மற்றும், அவர் சகோதரர் மீது, டெல்லி காவல் துறை துணை ஆணையர் துறை ரீதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
இதன் பிறகுதான், மார்ச் மாதத்தில், அந்த பெண்ணும் அவள் கணவரும், சொந்த ஊரான ராஜஸ்தானில் இருக்கையில், நவீன் என்பவருக்கு உச்சநீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 50 ஆயிரம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் என்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக, பர்மீந்தர் சிங் என்ற ஆய்வாளர், தர்மேந்தர் குமார் என்ற உதவி ஆய்வாளர், ஒரு பெண் காவலர் உட்பட மூன்று காவலர்களும் ராஜஸ்தானுக்கு HR-14-L-3494 என்ற தனியார் வாகனத்தில் கைது செய்ய விரைகிறார்கள்.
இதன் பின் இந்த பெண் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வருகிறார். 11 ஏப்ரல் 2019 அன்று, இந்த பெண்ணின் மீதான வழக்கு டெல்லி குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அவர் ஜாமீனை ரத்து செய்ய டெல்லி குற்றப் பிரிவு மனுத் தாக்கல் செய்கிறது. அந்த விசாரணை 20 ஏப்ரல் அன்று விசாரணைக்கு வந்து பின்னர் தள்ளி வைக்கப்படுகிறது.
இதற்கு பின்னர்தான் இந்த பெண் பொறுத்தது போதும் என, நடந்த சம்பவங்களை ஆதாரங்களோடு, 22 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மனுவாக அனுப்புகிறார்.
இந்த பெண், அவள் கணவர் மற்றும் அவர் உறவினர்களுக்கு நடந்தவற்றை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், இவை யதேச்சையாக நடந்த சம்பவங்களாக இருக்க வாய்ப்பே இல்லை. அந்த பெண்ணும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் உள்ள ஒருவரோடு மோத இயலாது என்று பல நாட்கள் அமைதி காத்துதான் உள்ளார். மீண்டும் திகார் சிறைக்கு செல்லும் சூழல் ஏற்பட்ட பின்னரே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
பணியிடங்களில் பெண்களுக்கு வரும் பாலியல் தொல்லைகளில் 95 சதவிகிதம் வெளியில் வருவதில்லை. பெரும்பாலான பெண்கள், இது போல புகார் அளித்தால் தங்களுக்கு கட்டப்படும் “பட்டம்” என்ன என்பதை அறிந்தே இருக்கிறார்கள். அப்படி இந்த பெண்ணும் தன் வேலை பறிபோன பின்னர் கூட விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் அமைதியாகவே இருந்துள்ளார். குடும்பத்தோடு அவரை சிறையில் தள்ளிய பிறகும் அமைதியாக இருந்துள்ளார். ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் தள்ள முயற்சி நடந்த போதுதான் வெகுண்டெழுகிறார்.
அதிகாரம் படைத்தவர்கள் மீது சுமத்தப்படும் எல்லா பாலியல் புகார்களைப் போலத்தான் இந்த புகாரும் கையாளப்பட்டது. புகார் வந்ததும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய புகாருக்கு உள்ளான தலைமை நீதிபதியே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து புகாரளித்தவரை கிரிமினல் என்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விடுங்கள். தமிழகத்தில், ஒரு காவல் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த ஒரு பெண் அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியாக இருக்கும் முருகன், இதை விட அதிகமான பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கினார். முருகனும், உயர் அதிகாரி என்ற மமதையில், தன் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த பெண் எஸ்பிக்கு ஏராளமான தொந்தரவுகளை கொடுத்தார்.
அந்த பெண் எஸ்பியும், உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தார். நடவடிக்கை முருகன் மீது எடுக்கப்படவில்லை. மாறாக புகாரளித்த பெண் எஸ்.பிதான் மாறுதல் செய்யப்பட்டார். கடந்த 8 மாதங்களாக, அந்த பெண் எஸ்பி, முருகன் மீது நடவடிக்கை வேண்டுமென்று கோரி, நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், பொறுக்கித் தனம் செய்த முருகனுக்கு ஆதரவாகத்தான் நீதிமன்றம் இருக்கிறதே ஒழிய, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் மீது இது வரை விசாரணை நடைபெறவில்லை. இன்னமும் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. முருகன் மீதான விசாரணைக்கும் தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
பாலியல் சீண்டல்கள், மற்றும் தொந்தரவுகளுக்கு உள்ளாகும் உழைக்கும் பெண்கள் அளிக்கும் இது போன்ற புகார்களை முறையாக விசாரிக்காமல், அவர்களுக்கு தேவடியாள் பட்டம் கட்டுவதை, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள் மட்டும் செய்வதில்லை. பெரும்பாலான ஆண்களும் சேர்ந்தே இதை செய்கிறார்கள்.
நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி வேண்டி நீதிமன்றம் செல்லலாம் என்று நினைத்தால், நீதியின் தலைமையே இப்படியொரு குற்றச்சாட்டுக்கு ஆளாகி, அதை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருவது இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரிய சாபக்கேடு.
இந்த சாபக்கேட்டை நீக்குவது, சமத்துவத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமை.
எதிர்பார்த்த படியே இந்த வழக்கில் தலைமை நீதிபதி க்கு ஆதரவாக அறிக்கை சமர்பிக்க ப்படுள்ளது.
sir please remove her name in displinary proceeding office order
you have not removed her name Ms.A*********. Please remove her name. Detailed story.
Timeline of Events creates doubts about Gogoi especially the steps he has taken to cover up this issue raises serious questions . Hope the victim gets proper justice , expecting her to get back her job and husbands job .
Detailed article.
Dear Savukku,
You made a conscious effort to hide her identity. But you missed masking her name in a document about Deepak Jain’s photo. Please mask as soon as possible before it spreads.
ஊடகங்களில் தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான செய்திகளையும் , சத்தியம் டிவி யில் விவாதம் பால் கனகராஜ் போன்றவர்களுடன் நடந்தப்பட்டதை கண்டவுடன் நான் பிரதமர் நரேந்திர மோடி மீது கடும் வெறுப்பு கொண்டேன்.
இதன் பிறகு, The Wire, Scroll, Quint, மற்றும் உச்ச நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கம் வெளியிட்ட அறிக்கை போன்ற பல்வேறு தகவல்களை படித்து விட்டு குழப்பங்கள் எனக்கு ஏற்பட்டது.
இறுதியில் சவுக்கு சங்கர் அவர்களின் இந்த இரண்டு கட்டுரைகள் படித்த பிறகு உண்மை தெளிவாக தெரிகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசை மோடியை இழுப்பது அயோக்கிய தனமாக தெரிகிறது. மோடி அயோக்கிய நபர்தான். அது வேறு விடயமாகும்.
தமிழக பெண் காவல்துறை கண்காணிப்பாளருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு கொள்ளாமல் முருகன் IPS அவர்களுக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றம் செயல்பட்டதை நினைவுக்கு வருகிறது.
ரஞ்சன் கோகாய் இந்த நாட்டின் சக்திவாய்ந்தவர். இந்நிலையில் சாதாரண பெண்ணின் குரல் எடுபடவில்லை. ஆனாலும் இணைய தள ஊடகங்கள் இப்போது பெரிய அளவில் அம்பல படுத்தி அதை பொது வெளியில் விவாத பொருளாக்கி, மேதகா பட்கர்,அருணாராய், அருந்ததி ராய் போன்ற பல ஆளுமைகளால் அறிக்கை வெளியிட்ட பிறகு பிரச்சினை முக்கிய கட்டத்தில் வந்து நிற்கிறது.
இனி எப்படி போகும் என குழப்பம் வருகிறது.