கேரவன், தி வயர், மற்றும் ஸ்க்ரொல் ஆகிய இணைய இதழ்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது, உச்சநீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தது தொடர்பான விபரங்களை வெளியிட்டன. அதைத் தொடர்ந்து மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வை அமைத்து, புகாரளித்த பெண் ஒரு கிரிமினல், நீதித்துறைக்கு எதிராக பெரும் சதி நடக்கிறது, அதன் ஒரு பகுதியே இந்த பாலியல் குற்றச்சாட்டு என்று கூறினார்கள். இந்த அமர்வுக்கு தலைமை வகித்தவர் குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தான். பின்னர், நீதிபதி போப்டே தலைமையில் இப்புகார் குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
அந்தக் குழுவின் விசாரணையில் பங்கேற்க உதவியாக தனக்கு ஒரு வழக்கறிஞர் வேண்டும் என்று புகாரளித்த பெண்ணின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அப்பெண், பாரபட்சமாக நடக்கும் இந்த விசாரணையில் பங்கெடுக்க முடியாது என்று விசாரணைக் குழுவுக்கு கடிதம் எழுதி விட்டு, விசாரணையில் பங்கெடுக்க மறுத்தார்.
புகார்தாரர் பங்கெடுக்காமலேயே, விசாரணையை மூன்று நீதிபதிகள் குழு நடத்தி முடித்தது. பிறகு அந்தப் பெண் அளித்த புகாரில் முகாந்திரமில்லை என்று முடிவெடுத்தது. விசாரணை அறிக்கை வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புகாரளித்த அப்பெண்ணை, கேரவன், ஸ்க்ரோல் மற்றும் த வயர் இணைய இதழ்களின் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டியெடுத்தனர். அதன் தமிழாக்கத்தை சவுக்கு வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த செய்தி வெளியான உடனேயே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஒரு புதிய அமர்வை அமைத்து, தலைமை நீதிபதியின் அலுவலகத்தை முடக்க சதி நடப்பதாக கூறினார். இது குறித்து என்ன கூறுகிறீர்கள் ?
நான் எந்த சதித் திட்டத்திலும் பங்கெடுக்கவில்லை. எனது பிரமாண வாக்குமூலத்தில் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளேன். அவர் நான் குற்றப் பின்னணி உள்ளவள் என்று கூறியுள்ளார். அந்த வழக்கு 2016லேயே முடிந்து விட்டது. இதையே என் மீதான புகாருக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள். இவ்வழக்கில் எந்த உண்மையும் இல்லை என்பதைத் தெரிந்தே அனில் அம்பானியோடு எனக்கு தொடர்பு உள்ளது என்று புதிது புதிதாக குற்றச்சாட்டைக் கிளப்புகிறார்கள். எங்கிருந்து இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வருகின்றன என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தபோது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் வரும் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை.
பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தபோது, என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நினைத்தீர்கள் ?
அவர்கள் உண்மையை உணர்வார்கள் என்று கருதினேன். ஏனென்றால், என் பிரமாண வாக்குமூலத்தை படிப்பவர்கள் எனக்கும் என் குடும்பத்துக்கும் நேர்ந்தது என்ன என்பதை புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் என்ன நடந்தது என்பதை இன்று நீங்கள் பார்க்கிறீர்கள். போதுமான ஆதாரங்களை நான் அளித்தும், மூவர் நீதிபதி குழு என் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளது.
நீதிபதி போப்டே குழு தொடர்பாக கூற முடியுமா ?
விசாரணை தொடர்பாக எனக்கு நோட்டீஸ் வந்த நாள் முதலாக , எனக்கு உதவியாக ஒருவர் வேண்டும், விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும், விசாகா கமிட்டியின் விதிமுறைகளின்படி விசாரணை நடக்க வேண்டும் என்று கூறி வருகிறேன். ஆனால் அவர்கள் அதை பின்பற்றவில்லை. நீதிபதி ரமணா விசாரணைக் குழுவில் இருக்கக் கூடாது என்ற எனது கோரிக்கை மட்டுமே ஏற்கப்பட்டது. எனக்கு நீதிபதி ரமணாவும், நீதிபதி ரஞ்சன் கோகோயும் நல்ல நண்பர்கள் என்பது தெரியும். அவர் ரஞ்சன் கோகோய் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அதனால் அந்த கோரிக்கை மட்டும் ஏற்கப்பட்டது (நீதிபதி ரமணா மற்றும் நீதிபதி ரஞ்சன் கோகோய் ஆகியோரது நெருக்கம் குறித்து புகார் அளித்த பெண் கடிதம் எழுதியதை தொடர்ந்து, நீதிபதி ரமணா விசாரணை குழுவிலிருந்து விலகினார். அவர் இடத்தில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்).
எனக்கு வலது காது கேட்காது. சில சமயங்களில் இடது காதும் கேட்கவில்லை. இந்த விசாரணை நடந்தபோது, அவர்கள் “உங்களுக்கு புரிகிறதா ?” என்று கேட்பார்கள். நான் “லார்ட்ஷிப், மீண்டும் ஒரு முறை சொல்ல முடியுமா ?” என்று கேட்பேன். இது என்னை மிகவும் பயமுறுத்தியது. எத்தனை முறை நான் அவர்களை மீண்டும் சொல்லுங்கள் என்று கேட்க முடியும்? இதனால்தான் எனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.
விசாரணைக்காக நான் ஆஜரானபோது மூன்று அல்லது நான்கு பெண் காவலர்கள், என்னை சோதனைக்கு ஆட்படுத்தினர். என்னை தீவிரவாதி போல நடத்தினர். என் தலைமுடியை அவிழ்த்து காட்ட சொன்னார்கள். என் உடை, உடைமைகள் ஆகியன முரட்டுத்தனமாக சோதிக்கப்பட்டது. நான் அழத் தொடங்கினேன். அதற்கு பிறகுதான் விருந்தா மேடம் (வழக்கறிஞர் விருந்தா க்ரோவர்) வந்து என்னை அழைத்துச் சென்றார்.
முதல் நாள், நீதிபதிகள், “இது பாலியல் விசாரணை கமிட்டி அல்ல. துறைரீதியிலான விசாரணையும் அல்ல. உள் விசாரணையும் (In house committee) அல்ல. நாங்கள் உங்கள் புகார் குறித்து என்னவென்று பார்க்கப் போகிறோம்” என்றார்கள். எவ்வித விதிகளுமின்றிதான் அந்த விசாரணை நடந்தது.
பின்னர் அவர்கள் “உனக்கு எதிர்காலத்தில் எந்த தீங்கும் நேராது” என்றனர். நீதிபதி போப்டே, “உங்களுக்கு வேலை திரும்ப கிடைக்கும்” என்றார். அதற்கு நான், “லார்ட்ஷிப், எனக்கு என் வேலை திரும்ப வேண்டாம். எனக்கு நீதி வேண்டும். எனக்கு வேலை திரும்ப வேண்டுமென்பதற்காக நான் இதை செய்யவில்லை. என் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்றேன்.
“நான் முதன் முதலாக உச்சநீதிமன்றத்துக்கு பணிக்கு சேர்ந்தது முதல் சொல்லத் தொடங்கினேன். நீதிபதி கோகோய் குறித்த அனைத்தையும் சொன்னேன்” முதல் நாள் விசாரணை அப்படித்தான் நடந்தது.
அவர்கள், “நீங்கள் ஊடகத்திடம் பேசக் கூடாது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. பின்னர் அவர்கள், “வழக்கறிஞர்களிடமும் பேசக் கூடாது”. குறிப்பாக, வழக்கறிஞர் விருந்தா க்ரோவரிடம் பேசக் கூடாது என்று கூறினார்கள்.
அதன் பின்னர், மீண்டும் நான் ஏப்ரல் 29 அன்று அழைக்கப்பட்டேன்.
வழக்கறிஞர்களிடம் பேசக் கூடாது என்று யார் கூறியது ?
நீதிபதி இந்து மல்ஹோத்ரா
ஏன் இவ்வாறு அவர் கூறினார் ?
எனக்கு தெரியவில்லை. அவர், “வழக்கறிஞர்கள் இப்படித்தான்” என்று கூறினார். முதல் நாள் மிகவும் சாதாரணமாக விசாரணை நடந்தது. அவர்கள், அந்த விசாரணையை விரைவாக முடிக்க முயற்சி செய்தனர்.
எனக்கு வேலை வேண்டாம், எனக்கு நீதிதான் வேண்டும் என்று கூறியதற்கு அவர்கள் என்ன கூறினார்கள் ?
எனக்குத் துல்லியமாக நினைவில்லை. “எனக்கு மீண்டும் வேலை வேண்டாம். கடந்த ஆறு மாதமாக நான் சந்தித்து வரும் துன்பங்களில் இருந்து எனக்கு விடுதலை வேண்டும்” என்று கூறினேன். அதற்கு நீதிபதி போப்டே, “அவையெல்லாம் நின்று விடும். நாங்கள் உறுதி கூறுகிறோம்” என்று கூறினார்.
விசாரணைக் குழுவின் விசாரணை, விதிகளின்றி, அலுவல் சாராமல் ஏன் நடந்தது என்று நினைக்கிறீர்கள் ?
அவர்கள், இது உள் விசாரணையும் அல்ல, துறைரீதியிலான விசாரணையும் அல்ல, பாலியல் சீண்டல் தொடர்பான விசாரணையும் அல்ல என்று கூறினர். அப்போது எனக்கு, பிறகு இது எந்த வகையான விசாரணை என்று தோன்றியது.
இது உள் விசாரணை (In-House) அல்ல என்று கூறியது யார் ?
நீதிபதி போப்டேதான் அவ்வாறு கூறினார். “இது உள் விசாரணை அல்ல. பாலியல் புகார் விசாரணைக் குழுவும் அல்ல. உங்கள் புகார் என்னவென்று பார்க்கிறோம்” என்று கூறினார்.
நான் விசாரணை முடிந்து உச்சநீதிமன்ற கெஸ்ட் ஹவுசிலிருந்து திரும்புகையில், அடையாளம் தெரியாத நபர்கள் என்னையும் என் கணவரையும் பைக்கில் பின் தொடர்ந்தனர். 26, 29 மற்றும் 30ம் தேதி கூட பின் தொடர்ந்தார்கள். இதை நான் காலையில் உணரவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் என்னை பின் தொடர்கிறார்கள் என்று நான் திலக் ரோட் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். இது குறித்து நான் நீதிபதி போப்டேவிடம் கூறியபோது, “உங்களது குடும்பம் பெரிய குடும்பம். அனைவரும் காவல் துறையில் உள்ளனர். அவர்களுக்கு உங்களை எப்படி பாதுகாப்பது என்று தெரியும்” என்றார்.
‘உங்கள் குடும்பத்தினருக்கு உங்களை எப்படி பாதுகாப்பது என்று தெரியும்’ என நீதிபதி போப்டே கூறியபோது, இதர நீதிபதிகள் ஏதாவது கூறினார்களா ?
இல்லை அவர்கள் எதுவும் சொல்லவில்லை. நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் ஏன் நான் வீட்டுக்கு தாமதமாகப் போனேன் என்று கேட்டார். நான் கிட்டத்தட்ட நள்ளிரவில் வீட்டுக்குச சென்றேன். என்னை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த நபர்கள் அகலட்டும் என்பதற்காக காத்திருந்தேன் என்று நான் பதிலளித்தேன். இந்த சமயத்தில்தான், நீதிபதி போப்டே, “உங்கள் குடும்பத்தினர் உங்களை பாதுகாப்பார்கள்” என்று கூறினார்.
இது குறித்து போப்டே கூறிய கருத்து குறித்து உங்களுக்கு ஏமாற்றமாக இருந்ததா ?
ஆம். “லார்ட்ஷிப், என் குடும்பத்தில் அனைவரும் டெல்லி காவல்துறையில் இருந்தாலும், டெல்லி காவல் துறையினர்தான் என்னை இத்தகைய துன்பத்துக்கு ஆளாக்குகிறார்கள். அதுவும், வேறு யாரோ ஒருவரின் தூண்டுதலினால்” என்று கூறினேன்.
அவர் அதற்கு ஏதாவது கூறினாரா ?
இல்லை
முதல் நாள் விசாரணை முடிந்ததும், விசாரணைக் குழுவின் விசாரணை உங்களை அச்சுறுத்தும் வகையில் இருப்பதாக கூறியுள்ளீர்கள்.
முதல் நாள் அவர்கள் “இது பாலியல் விசாரணை குறித்த குழு அல்ல” என்றார்கள். இரண்டாவது நாள் எனது கடிதத்தை பார்த்ததும் அவர்கள் அணுகுமுறையே மாறி விட்டது. அவர்கள் கடுமையாக நடந்து கொள்ள தொடங்கினார்கள். எனது பிரமாண வாக்குமூலம் குறித்து மீண்டும் மீண்டும் கேட்டார்கள். எப்படி நடந்தது, எந்த நேரத்தில் நடந்தது என்று கேட்டார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் குறிப்பாக கேட்ட கேள்வி, “இவ்வளவு தாமதமாக இந்த நேரத்தில் ஏன் புகார் அளித்தேன்” என்பதுதான். அதற்கு நான் அளித்த பதிலை அவர்கள் ஏற்கவில்லை. இப்படி நடக்க வாய்ப்பில்லை என்று கூறினார்கள். விசாரணையில் எனக்கு உதவியாக ஒருவர் வேண்டும், விசாரணை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று மீண்டும் அந்த விசாரணையில் வலியுறுத்தினேன். ஏன் அதை வலியுறுத்தினேன் என்றால், அந்த விசாரணையில் என்ன பதிவு செய்யப்படுகிறது என்பது எனக்கு தெரியவில்லை.
மூன்று நீதிபதிகளும் நடந்து கொண்ட விதம் குறித்து கூற முடியுமா ?
பெரும்பாலான கேள்விகளை, நீதிபதி போப்டேதான் கேட்டார். இந்து மல்ஹோத்ராவும் சில கேள்விகளை கேட்டார். நீதிபதி இந்திரா பானர்ஜி, பெரும்பாலும் அந்த விசாரணையில் பங்கெடுக்கவில்லை.
அந்த விசாரணையில், திருப்தியாக / சவுகர்யமாக உணர்ந்தீர்களா ?
முதல் நாள் சவுகர்யமாக உணர்ந்தேன். ஏனென்றால் அவர்கள் என்னை அமைதிப்படுத்துவதற்கு முயன்றார்கள். அவர்கள், நான் என்ன மனுவை தாக்கல் செய்துள்ளேன், அதன் தாக்கம் என்ன, அவ்வாறு செய்திருக்கக் கூடாது என்று கூறினார்கள். “ஓ. வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும், விருந்தா க்ரோவர் ஆகியோரை சந்தித்த பின்னர் இந்த மனுவை தாக்கல் செய்தீர்களா ? அவர்கள்தான் இப்படி மனுத் தாக்கல் செய்ய தூண்டினார்களா” என்று கேட்டார்கள். அதில் உண்மையில்லை. எனக்கு நடந்த சம்பவங்கள் / அனுபவங்களுக்கு பிறகு உண்மையை வெளியில் சொல்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை. எனது அமைதிக்கு இனி பொருளில்லை என்பதை புரிந்து கொண்டேன்.
அந்த விசாரணையை யாராவது பதிவு செய்தார்களா ?
ஒரு நபர் தட்டச்சு செய்து கொண்டிருந்தார். அவர் சுருக்கெழுத்தர் அல்ல. நான் விஷயங்களை விளக்கிச சொன்ன பிறகு, நீதிபதி போப்டே அவருக்குச் சொல்வார். அந்த தட்டச்சர் அதனை தட்டச்சு செய்வார். சில நேரங்களில், சட்டம் தொடர்பான வாக்கியங்கள் இடம் பெற்றன. அவை எனக்கு புரியவில்லை. அதனால்தான் நான் எனக்கு உதவியாக ஒருவர் வேண்டும் என்று கேட்டேன்.
ஏதாவது குறிப்பிட்ட கேள்விகள் உங்களிடம் வலியுறுத்தப்பட்டதா ?
திலக் நகர் காவல் நிலையத்தில் அந்த வீடியோவை பதிவு செய்தது யார் என்பதைத் திரும்பத் திரும்ப கேட்டார்கள். (புகாரளித்த பெண், தான் திலக் நகர் காவல் நிலையத்தில் இருந்தபோது, ஆய்வாளர் நரேஷ் சோலங்கியோடு நடத்திய உரையாடலையும், அதில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மனைவியிடம் மன்னிப்பு கேட்க நேரிட்டதையும் பதிவு செய்திருந்தார்) நான் தான் அந்த வீடியோவை பதிவு செய்தேன். எனக்கு நடந்த பல்வேறு சம்பவங்களால் அச்சமடைந்த நான் என் பாதுகாப்புக்காக அதைப் பதிவு செய்தேன். பாதுகாப்பு இல்லாமல் உணர்ந்ததால் அதை பதிவு செய்தேன்.
மற்றொரு கேள்வி, “எச்.கே.ஜுனேஜாவுடனான உரையாடலை பதிவு செய்தது நீங்களா உங்கள் கணவரா. அது உங்களது போனிலா அல்லது உங்கள் கணவர் போனிலா என்பது (புகாரளித்தவர் பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அவர் கணவர் தலைமை நீதிபதியின் செயலாளர் எச்.கே.ஜுனேஜாவிடம், தலைமை நீதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு பேசியிருந்தார்).
உங்களை சங்கடப்படுத்தம்வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டனவா ?
பணி நீக்கத்தை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று கேட்டார்கள். நான் மீண்டும் இந்த பணிக்கு திரும்ப விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நீதிபதி போப்டே “இல்லை. நீங்கள் பணி நீக்கத்துக்கு எதிராக மேல் முறையீடு செய்திருக்க வேண்டும்” என்றார். அதற்கு நான் “லார்ட்ஷிப், எனது மேல் முறையீடு, தலைமை நீதிபதியிடம் சென்றால் நிச்சயமாக தள்ளுபடி செய்யப்படும் என்பதை உணர்ந்தே மேல் முறையீடு செய்யவில்லை” என்று கூறினேன்.
அக்டோபர் 10 மற்றும் 11 அன்று தலைமை நீதிபதியால்உங்கள் மீது நடந்த பாலியல் சீண்டல் குறித்து கூறியபோது நீதிபதிகள் என்ன கூறினார்கள் ?
அவர்கள் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள். “எந்த நேரத்தில் அது நடந்தது” என்று கேட்டார்கள். நான் காலை 8.30 அல்லது 9 மணி இருக்கும் என்று கூறினேன். “பிறகு என்ன நடந்தது என்று கேட்டார்கள்.
“அன்று என்ன உடை அணிந்திருந்தீர்கள் என்று கேட்டார்கள். “நான் ஆரஞ்சு நிறத்தில் சுடிதாரும், பச்சை நிற துப்பட்டாவும் அணிந்திருந்ததாகக் கூறினேன். தலைமை நீதிபதி எனக்கு இனிப்பு வழங்கினாரா அல்லது கோவில் பிரசாதம் வழங்கினாரா என்றும் கேட்டார்கள்.
உங்கள் கணவர் பணி நீக்கம் பற்றி…
என் பிரமாண வாக்குமூலத்தை படித்தார்கள்.
அது குறித்து கேள்வி கேட்கவில்லையா ?
ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் கேட்டார்கள்.
எவ்வளவு நேரம் கேள்வி கேட்டார்கள் ?
முதல் நாள் மதியம் 12.30க்கு தொடங்கி, 4 மணிக்கு முடித்தார்கள். இரண்டாவது நாள் மாலை 4.30 மணிக்கு தொடங்கி 7.30க்கு முடித்தார்கள்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேள்வி அனுப்பினால், உச்சநீதிமன்றத்தின் செயலர் பதில் அனுப்பினார். தலைமை நீதிபதி அவரே அதை விசாரித்து ஒரு உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து உங்களது ஏப்ரல் 30ஆம் தேதி கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டபோது நீதிபதிகள் என்ன கூறினார்கள் ?
அவர்கள் எதுவும் கூறவில்லை. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
நீதிபதி கோகோய் ஏப்ரல் 20 விசாரணையன்று என்ன செய்தார் என்பது குறித்து அவர்களிடம் கூறினீர்களா ?
கூறினேன்.
நீதிபதி மனைவியை ஜனவரி மாதம் சந்தித்தது பற்றி கேட்டார்களா ?
இல்லை. கேட்கவில்லை.
அது குறித்து பேச முயற்சித்தீர்களா ? நடந்த அத்தனை சம்பவங்களையும் விவரிக்க முனைந்தீர்களா ?
11 ஜனவரி அன்று, நானும் எனது கணவரும், திலக் நகர் காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்டது குறித்தும், திலக் காவல் நிலைய ஆய்வாளர், தன் சீருடையை மாற்றிக் கொண்டு, அவரது வெள்ளை நிற ஸ்விப்ட் மாருதி காரில் தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றது குறித்தும், அங்கே உச்சநீதிமன்ற பதிவாளர் தீபக் ஜெயின் இருந்ததையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மனைவி, என் மூக்கை அவர் பாதத்தில் உரசச் சொல்லி உத்தரவிட்டதையும் கூறினேன்.
இது குறித்து நீங்கள் கூறியபோது, நீதிபதிகள் ஏதாவது கேள்வி கேட்டார்களா ?
இல்லை. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
இரண்டு பெண் நீதிபதிகளின் நடவடிக்கைக்கும், நீதிபதி போப்டேவின் நடவடிக்கைக்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தனவா ?
நீதிபதி இந்திரா பானர்ஜி அமைதியாக இருந்தார். பெரும்பாலும் அவர் விசாரணையில் பங்கெடுக்கவில்லை. நீதிபதி இந்து மேடம், நீதிபதி போப்டேவின் கேள்விகளின் அடிப்படையில் சில கேள்விகளை கேட்டார். நீதிபதி போப்டே, மாற்றுத் திறனாளியான எனது மைத்துனர் வேலை நீக்கம் செய்யப்பட்டது குறித்து கேட்டார். உடனே நீதிபதி இந்து மல்ஹோத்ரா அவர் ஒழுங்காக வேலை செய்யாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பார் என்று கூறினார்.
கடைசி நாளன்று, நான் விசாரணையில் இருந்து விலக விரும்புகிறேன் என்று கூறியபோது, நீதிபதி இந்து மல்ஹோத்ரா “விசாரணையில் நன்றாக ஒத்துழைக்கிறீர்கள்” என்று கூறினார். “நீங்கள் பேசுவது எனக்கு பல முறை கேட்கவில்லை” என்று கூறியதற்கு அவர் “இல்லை. நீங்கள் எல்லாவற்றிற்கும் சரியாக பதில் அளிக்கிறீர்கள். எல்லா விபரங்களும் உங்களுக்கு தெரிந்திருக்கிறது. எதற்காக விசாரணையில் இருந்து விலக விரும்புகிறீர்கள்” என்று கேட்டார். நான் மீண்டும் மீண்டும், எனக்கு உதவிக்கு ஒருவர் வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.
விசாரணையில் இருந்து விலக விரும்புகிறேன் என்று நீங்கள் கூறியதற்கு நீதிபதி போப்டேவோ, அல்லது இந்திரா பானர்ஜியோ ஏதாவது கூறினார்களா ?
நீதிபதி போப்டே கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி நீதிபதி இந்து மல்ஹோத்ராவிடம் கொடுத்தார். பிறகு எழுந்து வெளியே சென்று விட்டார். பின்னர் இந்து மேடம், ஏன் விசாரணையில் இருந்து விலக விரும்புகிறேன் என்று கேட்டார். நான், இது தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கு. அவர் மிக மிக அதிகாரம் பொருந்திய நபர் என்று கூறினேன்.
நீதிபதி போப்டே எப்போது திரும்ப வந்தார். ?
ஐந்து நிமிடம் கழித்து வந்தார். கழிவறைக்கு சென்றதாக கூறினார்.
அதன் பின்னர் வேறு ஏதாவது கூறினாரா ?
“உங்களுக்கு 5 நிமிடங்கள் தருகிறோம். நன்றாக யோசியுங்கள். இல்லையென்றால்விசாரணையை நீங்கள் இல்லாமலேயே (Ex parte) நடத்த வேண்டி வரும்.” என்றார். நான் சரி என்றேன். ஏனென்றால், அவர்கள் கேள்வி கேட்கும்விதத்தை வைத்து எனக்கு அங்கே நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வரவில்லை. மீண்டும் மீண்டும், அவர்கள், “ஏன் இவ்வளவு தாமதமாக புகார் அளித்தேன்” என்பதிலேயே நின்றார்கள். அவர்களுக்கு உரிய விளக்கத்தை நான் அளித்தும் அவர்கள் மீண்டும் மீண்டும் அதையே கேட்டுக்கொண்டிருந்தார்கள். அப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை திரும்ப திரும்ப சொன்னார்கள்.
விசாரணை நடக்கையிலேயே நீங்கள் வெளியேறினீர்களா அல்லது கேள்வி முடிந்ததும் வெளியேறினீர்களா ?
இரண்டாவது நாள், 2016ல் எனக்கு இன்னொருவரோடு நடந்த ஒரு மோதல் சமரசமாக முடிக்கப்பட்டது தொடர்பான ஒப்பந்தத்தைக் கேட்டார்கள். எனது ஜாமீன் மனுவை ரத்து செய்ய டெல்லி காவல் துறையினர் தாக்கல் செய்த மனுவின் நகலைகேட்டார்கள். இவற்றையெல்லாம் நான் ஏற்கனவே கொடுத்திருந்தாலும் மீண்டும் கேட்டார்கள்.
அவற்றை மீண்டும் கொடுத்த பிறகு, நான் எனக்கு உதவிக்கு ஒருவர் வேண்டும் என்ற எனது கடிதத்தை குறிப்பிட்டேன். அவர்கள் அதை படித்தார்கள். படித்து முடித்த பிறகு, இது உள் விசாரணை (In-House procedure) உதவிக்கு யாரையும் வழங்க முடியாது என்று கூறினார்கள். நான் “லார்ட்ஷிப்ஸ், அப்படியென்றால் என்னால் இந்த விசாரணையில் தொடர முடியாது” என்று கூறினேன்.
பின்னர் அவர்கள், எனக்கு உதவியாக வழக்கறிஞரை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள். அப்போதுதான் நீதிபதி போப்டே, ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி நீதிபதி மல்ஹோத்ராவிடம் கொடுத்து விட்டு வெளியே சென்றார்.
நீங்கள் இல்லாமல் விசாரணையை முடிக்க ஒப்புக் கொண்டீர்களா ?
உதவிக்கு வழக்கறிஞர் வேண்டும் என்பதை மறுத்து விட்டார்கள். நான் என் கடிதத்தில் கேட்டவற்றையெல்லாம் மறுத்தார்கள். அதனால் நான் விலகுவதாகக் கூறினேன். அவர்கள் நான் இல்லாமல் விசாரணை முடிக்கப்படும் என்று கூறினார்கள். நான் சரி என்று கூறினேன். இந்த விபரங்கள் எனது 30 ஏப்ரல் கடிதத்தில் உள்ளன.
இந்த விசாரணையில் வேறு யாரையாவது விசாரித்தார்களா ?
எனக்கு இது குறித்து சுத்தமாக எதுவும் தெரியாது. நான் வெளியேறி விட்டேன். அதற்கு பிறகு அவர்கள் அழைத்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. தலைமை நீதிபதியை மட்டும் அழைத்தார்கள் என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்து கொண்டேன்.
உங்கள் புகாரில் முகாந்திரமில்லை என்ற அந்த விசாரணைக் குழுவின் அறிக்கையை படித்த பிறகு எப்படி உணர்ந்தீர்கள் ?
மிகுந்த மனச்சோர்வு ஏற்பட்டது. என் வேலை போய் விட்டது. என் குடும்ப உறுப்பினர்கள் வேலையை இழந்து விட்டார்கள். எல்லாவற்றையும் இழந்து விட்டேன். எனக்கும் என் குடும்பத்துக்கும் மிகப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறேன். என் குற்றச்சாட்டில் முகாந்திரமில்லை என்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
எனது மற்ற குற்றச்சாட்டுகளுக்கான பதில் என்ன ? அது குறித்து அவர்கள் விசாரிக்கவே இல்லை. திலக் நகர் காவல் நிலையத்தின் ஆய்வாளரை விசாரித்தார்களா இல்லையா என்பது கூட எனக்குத் தெரியாது. அந்த வீடியோவை விசாரித்தார்களா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. என் பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள யாரையாவது விசாரித்தார்களா என்பதும் எனக்கு தெரியாது.
உண்மை இல்லை என்பதற்கான காரணங்களை அவர்கள் கூறும் வரை நான் என்ன செய்ய முடியும் ? என் வழக்கை உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் அனுப்பி விட்டேன். அவர்கள் அந்த விசாரணை அறிக்கையின்நகலை எனக்கு வழங்க வேண்டும்.
விசாரணை அறிக்கையின் நகல் வேண்டும் என்று கேட்டீர்களா ?
அறிக்கையின் நகல் வேண்டும் என்று நான் கடிதம் எழுதி உள்ளேன். அதற்கான உரிமை எனக்கு உள்ளது.
நீங்கள் விசாரணைக்கு சென்றபோது, உச்சநீதிமன்றத்தில் பெண் காவலர்கள் உங்களை நடத்திய விதம் குறித்து கூறினீர்கள். அது பற்றி மேலும் கூற முடியுமா ?
மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. முதல் நாள் மிகவும் மோசமாக இருந்தது. மார்ச் மாதம் நான் கைது செய்யப்பட்டு திலக் நகர் காவல் நிலையத்தில்வைக்கப்பட்டபோது இருந்த அச்சத்தை அப்போது உணர்ந்தேன். நான் அழத்தொடங்கினேன். அங்கே இருந்த பெரும்பாலான காவலர்கள் திலக் நகர் காவல் நிலையத்தை சேர்ந்தவர்கள்.
உங்களது புகார் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீங்கள் அணுகியிருக்கிறீர்கள்? அவர்கள் எந்த மாதிரியான பதிலைத் தந்திருக்கிறார்கள்?
நீதிபதி சந்த்ரசூட் அவர்கள் விசாரணை ஆணையத்துக்கு நான் செல்லும் முன் என்னுடைய வழக்கறிஞரையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவரைத் தவிர வேறு யாரும் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை.
நீதித்துறையின் மற்றவர்களின் எதிர்வினை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
எனக்கு ஏமாற்றம் தான். இது முழுவதும் என்னுடைய குடும்பத்துக்கு நடக்கிறது. நான் உச்சநீதிமன்றத்தின் ஊழியராகவும் இருந்திருக்கிறேன்.
விசாரணை ஆணையத்தின் நீதிபதிகளிடம் உங்களால் சரியான முறையில் பேச முடிந்ததா?
இல்லை. நான் ஆசுவாசமாக உணரவில்லை.
இப்படித் தான் என்னுடைய துறை சார்ந்த விசாரணையும் நடந்தது. துறை சார்ந்த விசாரணையின் முதல் நாள் நான் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டேன். இரண்டாவது நாள் ‘எல்லா கட்டளைகளும் மேலிடத்திலிருந்து வருவதாகவும், அவர்கள் கையில் ஒன்றுமில்லை’ என்றும் என்னிடம் சொன்னார்கள்.
பாலியல் தொல்லைக்கு எதிரான விசாரணை ஆணையத்திடமும் இது போன்ற நடைமுறையைத் தான் கண்டீர்களா?
ஆமாம். முதல் நாள் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன – இப்படி நடந்திருக்கும், அப்படி நடந்திருக்கக் கூடும் என்று சொன்னார்கள். இரண்டாவது நாள் “நாங்கள் அப்படி சொல்லவேயில்லை.நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்” என்றார்கள். அவர்கள் எதையும் பின்பற்றவில்லை. பாலியல் தொல்லைக்கு எதிரான சட்டத்தையும், விசாகா கமிட்டியின் விதிமுறைகளையும் அவர்கள் பின்பற்றவில்லை. எந்த வழக்கறிஞரையும் அனுமதிக்க முடியாது என்று அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார்கள். உண்மையாகவே நான் என்னுடன் ஒருவரை உதவிக்கு வைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு அனுமதிக்கவில்லை. அதனாலேயே நான் அங்கிருந்து வெளியேறினேன்.
ஊடகத்திடம் நீங்கள் முறையிட்ட பின்பு உங்களுடன் பணி செய்த ஊழியர்கள் யாரேனும் உங்களைத் தொடர்பு கொண்டார்களா?
இல்லை. அவர்கள் துணிந்திருக்கமாட்டார்கள். எனக்கு நேர்ந்த நிலையை பார்த்த பிறகு ஒருவரும் முன்வரமாட்டார்கள்.
உச்சநீதிமன்றத்தின் ஊழியர் நல சங்க அமைப்பின் தலைவரான பி.ஏ ராவ் நீதிமன்றத்தில் தொடர்ந்து உங்களை பணியிட மாறுதல் செய்தது குறித்து உங்களுடன் பேசியபடி இருந்தார். ஆனால் அவர் தான் முதன்முதலில் நீதிபதி கோகோய்க்கு ஆதரவாக அறிக்கை அளித்தார். நீங்கள் அவரிடம் பேசினீர்களா?
ஆமாம். எனக்குத் தெரியும். நான் அவரது எண்ணை ‘ப்ளாக்’ செய்துவிட்டேன்.
ஓய்வுபெற்ற நீதிபதி A.K.பட்நாயக் தலைமையில் ஒரு ஆணையத்தை உச்சநீதிமன்றம் அமைத்தது. நீதிபதி கோகோய்க்கு எதிரான புகார்களை விசாரிக்க அந்த ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது. இருவரும் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு எதிரான எரிக்ஸன் நிறுவனத்தின் வழக்கின் நீதிமன்ற உத்தரவை மாற்றி எழுதியதற்காக நீதிமன்ற அலுவலர்களான தபன் சக்ரபார்த்தி மற்றும் மானவ் ஷர்மா இருவரும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களில் யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?
ஆஷா சோனி கோர்ட் மாஸ்டர்களில் ஒருவராக இருந்தபோது நீதிபதி கோகோய் அலுவலகத்துக்கு திரு.தபன்சக்ரபார்த்தி வருவார். ஆஷா சோனியின் குடும்பத்தில் யாரோ மரணமடைந்தார்கள் என்றதும், அவர் அந்த வேலையை விட்டு நீங்கினார். அந்தப் பணிக்கு திரு.தபன் சக்ரபார்த்தி நியமனம் ஆனார். இப்படித் தான் எனக்கு அவரைத் தெரியும். நேரடியாக அவரிடம் நான் பேசியதில்லை.
நீங்கள் இருவரிடமுமே நேரடியாகப் பேசியதில்லையா?
எனக்கு மானவ் ஷர்மா யாரென்றே தெரியாது. அவர் முகத்தைக் கூட நான் பார்த்ததில்லை.
நீங்கள் மன்சா ராமுடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றியதாக உங்கள் மேல் மார்ச் 3, 2019 அன்று நவீன் குமார் என்பவரால் புகாரளிக்கப்பட்டு எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. நீங்கள் நவீன் குமாரையோ, மன்சா ராமையோ பார்த்திருக்கிறீர்களா?
இல்லை. எனக்கு நவீனையும் தெரியாது, மன்சா ராமையும் தெரியாது. திலக் மார்க் போலிஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த போலிஸ் குழு ராஜஸ்தானில் என்னை வந்து கைது செய்ய வரும்போது கூட இதே கேள்வியைத் தான் கேட்டார்கள். “உங்களுக்கு மன்சா ராமைத் தெரியுமா? நவீன் குமாரைத் தெரியுமா? என்று கேட்டார்கள். எனக்குத் தெரியாது. அவர்களை நான் பார்த்ததில்லை என்று சொன்னேன்.
இதற்கு முன்பு நீங்கள் நீதித் துறையில் வேலை செய்திருக்கிறீர்கள். இப்போதும் உங்களுக்கு நீதித்துறை நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை இருக்கிறதா?
இல்லை. விசாரணை ஆணையத்தின் அறிக்கை வந்தபிறகு என் இடத்தில் யார் இருந்தாலும் நம்பிக்கைப் போய்விடும்.
இன்று என்னால் யாரையும் நம்பமுடியவில்லை. நான் சொல்வது அத்தனையும் உண்மை என்று தெரிந்தபிறகும் அத்தனை பேரும் எனக்கு எதிராகவே செயல்படுகின்றனர். என்னைத் தவறானவளாக்கி விட்டார்கள். போலிஸ் தவறுசெய்துவிட்டது. அதனால் எனக்கு நம்பிக்கை இல்லை.
பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தபிறகு உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது?
பயமாக இருக்கிறது. யாரென்று தெரியாதவர்கள் எல்லாம் என்னுடைய உறவினர்கள் வீட்டுக்குச் செல்கிறார்கள். இரண்டு பேர் என்னுடைய சகோதரியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அவள் உத்தரபிரதேசத்தில் ஒரு சிறிய நகரத்தில் வசிக்கிறாள். வந்தவர்கள் தங்களை வழக்கறிஞர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். நான் சில வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், நான் கொலை செய்யப்படுவேன் என்றும் என்னுடைய சகோதரியின் கணவரிடம் சொல்லியிருக்கிறார்கள். சகோதரியின் கணவன் என்னுடைய சகோதரனை அழைத்து இதனை சொல்லியிருக்கிறார்.
இது போன்று உங்களது குடும்ப உறுப்பினர் வேறு எவருக்கேனும் மிரட்டல் வந்துள்ளதா?
என்னுடைய கணவரின் உடன்பிறந்தவர்கள் ராஜஸ்தானில் இருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை செய்திருக்கிறார்கள்.
யார்?
எனக்குத் தெரியாது. அவர்கள் யாரையும் எங்களுக்குத் தெரியவில்லை.
மார்ச்சில் உங்களை டெல்லி போலிசால் நீங்கள் கிராமத்தில் வீட்டுச்சிறையில் இருந்ததாக சொல்லபப்ட்டதே..
ஆமாம். அந்த இடத்துக்கும் அவர்கள் சென்றிருந்தார்கள். அவர்கள் கிராமத் தலைவரிடம் எங்களைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள்.
விசாரணை ஆணையத்துக்கு செல்வதற்கு முன்பு ஒரு பைக் உங்களைப் பின்தொடர்ந்ததாக சொல்லியிருந்தீர்கள். என்ன நடந்தது என்று சொல்ல முடியுமா?
நாங்கள் முதல் நாள் உச்சநீதிமன்ற விருந்தினர் மாளிகையில் இருந்து என்னுடைய கணவர் மற்றும் அவருடைய நண்பருடன் காரில் வெளியே வந்தோம். யாரோ பைக்கில் பின்தொடர்வது தெரிந்தது. நாங்கள் இரண்டு முறை காரை நிறுத்தினோம். அவர்களும் நிறுத்தினார்கள். அந்த பைக் இராணுவ பச்சை நிறத்தில் இருந்தது. அவர்கள் இரண்டு பேர் இருந்தார்கள், அவர்கள் எங்களைத் தொடர்ந்தார்கள்.
அந்த இரண்டு நாட்களும் வந்தது அதே பைக் தானா?
இல்லை. வேறு வேறு பைக்குகள். இரண்டாவது நாள் கூடுதலான நபர்கள் இருந்தார்கள். அவர்கள் எங்களைத் தான் பின்தொடர்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள நாங்கள் இரண்டாம் முறை நின்று பார்த்தோம். அவர்களும் உடனே நின்று விட்டார்கள். அப்போது அவர்கள் எங்களைப் பின்தொடர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டோம். நான் என்னுடைய மருத்துவரைப் பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தேன். அதனால் என்னுடைய கணவர் நண்பருடைய காரினை வரவழைத்து அதில் என்னை மருத்துவரிடம் அழைத்துப் போவதாகச் சொன்னார். அப்போதும் அவர்கள் எங்களைத் துரத்திக் கொண்டு தானிருந்தார்கள். அந்த நேரத்தில் என்னுடைய கணவர் வண்டி எண்ணை குறித்துக்கொண்டார்.
உங்களுடைய கணவரின் நண்பர் காரில் சென்றுவிட்டார். நீங்களும் உங்கள் கணவரும் தனியாக சென்றீர்கள்…
ஆமாம்.. நாங்கள் ஆட்டோவில் சென்றோம்.
அவர்கள் ஆட்டோவினையும்துரத்தினார்களா?
அவர்கள் காரினைத் துரத்திக் கொண்டிருந்தார்கள், நாங்கள் அதில் தான் இருக்கிறோம் என்று நினைத்தார்கள். இரண்டாவது நாளில் மேலும் சிலர் கூடுதலாக இருந்தார்கள். நான் நடைமுறைகளைஎல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வரும்போது அவர்களில் ஒருவன் , “ஓய், சீக்கிரம் வா!” என்றான்.
நான் இதனை என்னுடன் இருந்த மேடமிடம் சொன்னேன் (விருந்தா க்ரோவரின் உதவியாளரைக் குறிப்பிடுகிறார்). நான் அவரிடம் யாரோ என்னைப் பின்தொடர்கிறார்கள் என்றேன். மூன்று, நான்கு பேர் வெவ்வேறு பைக்குகளில் இருந்தார்கள். உடனே அவர் அங்கிருந்த போலிஸ்
குழுவுக்கு தகவல் சொன்னார் (விருந்தினர் இல்லத்தில் உள்ள போலிஸ்). அவர்கள் எங்களை துக்ளக் ரோட் காவல்நிலையத்துக்கு சென்று அங்கே எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கச் சொன்னார்கள். நாங்கள் சென்று புகார் அளித்தோம். நாங்கள் உடனேயே அங்கு சென்று விட்டோம். விருந்தா மேடமும் அங்கு வந்துவிட்டார்கள். காவல் நிலைய அதிகாரி எங்களிடம், “நீங்கள் ஏற்கனவே பாதுகாப்பில் தான் இருக்கிறீர்கள். எந்த மாதிரியான பாதுகாப்பு உங்களுக்குத் தேவைப்படுகிறது?” என்று கேட்டார்.
அதன் பிறகு அவர்கள் எங்களை பின்தொடர்வதை நிறுத்தினார்கள். நாங்கள் போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்றதால் அவர்கள் பயந்திருக்கலாம்.
பைக்கில் வந்த நபர்கள் தான் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் வந்திருந்தார்களா?
இல்லை. அவர்கள் வெளியில் இருந்தார்கள். சாலையின் மறுபக்கம் நின்றிருந்தார்கள்.
உங்களது வீட்டின் அருகில் ஏதாவது அச்சமூட்டும் சம்பவம் நடந்ததா?
இல்லை. ஆனால் எங்கள் வீட்டை விட்டு வெளிவரும்போது யாரோ எங்களைப் பின்தொடர்வது போலத் தோன்றியது. என்னுடைய மாமியார் ஒரு இதய நோயாளி. இவையெல்லாம் நடந்தபிறகு அவர் என்னை காரணமில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. என்னுடைய கணவருடன் மட்டுமே வெளியில் சென்று கொண்டிருந்தேன்.
நீங்கள் ஆணையத்திடம் , தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் என்பதால் வாழ்வில் முன்னேறுவதற்கு நிறைய போராட வேண்டியிருந்தது என்று சொல்லியிருந்தீர்கள். அதைப் பற்றி சொல்ல இயலுமா?
சுற்றியுள்ளவர்கள் என்னுடைய சாதியினைத் தெரிந்து கொண்ட பின்பு ஒரு இடைவெளியை உருவாக்கினார்கள். முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தினார்கள். நீங்கள் உங்களது வேலையில் மிக அசாதரணமான விஷயத்தை செய்தால் தவிர எதையும் சுலபமாக சாதித்துவிட முடியாது. நான் எப்போதுமே என்னுடைய சாதி அடையாளத்தை தள்ளியே வைத்திருந்திருக்கிறேன். ‘ஒரு சாதாரண நபர்’ போல எதையும் செய்ய வேண்டும் என்று நினைப்பேன்.
நான் தனியார் பள்ளியில் படிக்கவில்லை. அரசுப் பள்ளிக்குத் தான் சென்றேன். ஏனெனில் அது தான் என்னுடைய பிரிவுக்கானதாய் இருந்தது. சில நேரங்களில் நம்முடைய பிரிவை மறைக்க வேண்டியிருந்தது. நீங்கள் இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தால் அந்த நொடியிலிருந்து அவர்கள் வேறு மாதிரி நடந்து கொள்ளத்தொடங்குவார்கள்.
பொதுவாய் மக்கள் எல்லோரையும் போல் சமமாக எங்களை நினைப்பதில்லை. நம்முடைய சமூகம் அப்படித் தான் இருக்கிறது. சொல்லப்போனால், என் வீட்டின் அருகில் இருந்த பெண் மீது 2016ல்நான் தாக்கல் செய்த வழக்கென்பதுதாழ்த்தப்பட்ட பழங்குடியினபாதுகாப்புச்சட்டத்தின் கீழ் தான் பதியப்பட்டது. அந்தப் பெண்மணி என்னை சாதிரீதியாகதிட்டினார். (நீதிபதி கோகோய் ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற சிறப்பு அமர்வில் தனக்கெதிரான இந்தக் குற்றச்சாட்டிற்கு எதிராய் இந்த வழக்கினைத் தான் ஒரு ஆதராமாக எடுத்துச் சொல்லி புகார் கொடுத்தவருக்கு கிரிமினல் பின்னணி இருக்கிறது என்றார்)
அந்தப் பெண்மணி என்ன சொன்னார்?
அது வழக்கின் கோப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. என்னுடைய சாதியைச் சேர்ந்தவர்கள் துப்புறவுப்பணிக்குத்தான்லாயக்கு என்றார்.
நீதிபதி கோகோய்க்குஉங்களது சமூகப் பின்புலம் தெரியுமா?
அவர் என்னிடம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
அவருக்கு உங்கள் சாதி தெரியும் இல்லையா?
அவருக்குத் தெரியும். அவர் என்னுடைய குடும்பப்பின்னணி குறித்து என்னிடம் விசாரித்திருக்கிறார். ஒருநாள் நான் ஏன் நீதித்துறையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கேட்டார். நான் நீதித்துறை தேர்வுகளை எழுத வேண்டும் என்று நினைத்ததைப் பற்றிச சொன்னேன்.
அப்போது அவர் அதற்கு இருக்கும் வயது வரம்பை சொல்லி, “உனக்கெதுவும் ஒதுக்கீடு உண்டா?” என்று கேட்டார். அன்று நான் என்னுடைய சாதி பற்றி சொல்ல வேண்டியிருந்தது.
நீங்கள் அளித்துள்ள பிரமாண மனுவில் நீதிபதி கோகோய் வீட்டிற்கு மன்னிப்பு கேட்பதற்காக நீங்கள் அழைத்துச் செல்லப்பட்டபோது கோக்கோயின் மனைவி உங்களிடம் ‘மூக்கைத் தேய்த்து விட்டு போ” என்று சொன்னதாக எழுதியிருந்தீர்கள், அதே போல் திலக் மார்க் போலிஸ் ஸ்டேஷனின் முன்னாள் காவல் நிலைய அதிகாரி நரேஷ் சோலங்கி உங்களை அங்கே அழைத்துப் போனதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் ஜெயினும் அப்போது உடன் இருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள்.
நான் அங்கே சென்றதும் (நீதிபதி வீட்டிற்கு) “நான் ஸாரி என்பதைத் தவிர ஒன்றும் சொல்லக்கூடாது என்று சோலங்கி என்னிடம் சொன்னார். வேறு எந்தக் கேள்வியும் நீ கேட்ககூடாது என்றார். ஏனெனில் என்னிடம் கேட்பதற்கு கேள்விகள் இருந்தன. எல்லாத் தவறுகளும் எனக்கு எதிராக நடந்த பிறகும் நான் ஏன் அங்கு அழைத்து வரவழைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்க நினைத்தேன்.
நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எனக்குப் புரியவேயில்லை. நான் நினைக்கிறேன், அவருக்குமே கூட என்ன நடக்கப்போகிறது என்று தெரியாது என்றே நினைக்கிறேன். அங்குதான் திருமதி கோகோய் என்னிடம் “மூக்கைத் தேய்த்துவிட்டுப் போ” என்றார்.
திருமதி கோக்கோயிடம் நீங்கள் மன்னிப்பு கேட்டு பேசிவிட்டு வந்த பிறகு சோலங்கி உங்களிடம் பேசியது பொதுமக்களிடையே பரவிவிட்டது. அதன் பிறகு சோலங்கி உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்தாரா?
அந்த வீடியோ வெளிவந்த பின்பு எதுவும் நடக்கவில்லை. பெயிலுக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது நாங்கள் அவரைத் தொடர்பு கொண்டோம், “சார், நீங்கள் இதற்குப் பிறகு (திருமதி கோக்கோயிடம் மன்னிப்பு கேட்ட பிறகு) எதுவும் நடக்காது என்றீர்கள்” என்று கேட்டோம். அவர், “நான் அங்கிருந்து மாற்றல் பெற்றுவிட்டேன். அதனால் என்னால் எதுவும் செய்ய முடியாது: என்றார்.
இத்தனை நிகழ்வுகளின்போதும் உங்களுடைய குடும்பத்தின் ஆதரவு உங்களுக்கு இருந்ததா?
என்னுடைய குடும்பம்இருப்பதினால் தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். இல்லாவிட்டால் இத்தனை நடந்தபின்பு நான் இறந்திருப்பேன். என்னுடைய மாமியாருக்கு எழுபது வயதாகிறது. நான் போலிஸ் கஸ்டடியில் இருந்தபோது அவர் தான் என்னுடைய மகளைப் பார்த்துக் கொண்டார்.
ஒரு வேலை என்பது உங்களுக்கு என்னவாக இருக்கிறது? அது ஏன் உங்களுக்கு அத்தனை முக்கியமானது?
நான் ஒரு விளையாட்டு வீராங்கனை. நான் பேஸ்கட் பால் விளையாடுவேன், நீச்சல் போட்டிகளுக்கு சென்றிருக்கிறேன். நான் என்ன செய்தாலும் என்னுடைய நூறு சதவீத ஈடுபாட்டைக் காட்டுவேன். நீதிபதி கோகோய்வீட்டிலும் கூட அவர் எனக்கு என்ன வேலை கொடுத்தாலும் அதனையும் நான் நூறு சதவீதம் ஈடுபாட்டோடு தான் செய்திருக்கிறேன், அவரே சில சமயங்களில் “என்னுடைய சட்ட உதவியாளர்கள் கூட செய்ய முடியாத வேலைகளைக் கூட நீ எனக்காக செய்திருக்கிறாய் “ என்று சொல்லியிருக்கிறார்.
நீதித்துறைக்குள் எப்படி வந்தீர்கள்?
நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். என்னுடைய மகள் அப்போது ஆறு மாத குழந்தை. அவளுக்கு அப்போது உடல்நிலை சரியில்லை. அதனால் தனியார் வேலை தானே, விட்டு விட்டு குழந்தையைப் பார்த்துக் கொள் என்று என்னுடைய கணவர் சொன்னார். அந்த நேரத்தில் எனக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும், வேலையையும் சேர்ந்து பார்த்துக் கொள்வது சிரமமானதாக இருந்தது. அப்போது ஒரு விளம்பரம் வந்தது (உச்சநீதிமன்றத்தில் பணியிடம் தொடர்பான விளம்பரம்) . “நீ வேண்டுமானால் அரசாங்க வேலைக்கு விண்ணப்பி”என்றார். இதற்கு முக்கிய பாடங்கள் ஆங்கிலமும், இந்தியும் தான். அதனால் நான் விண்ணப்பித்து வேலை பெற்றேன்.
உச்சநீதிமன்றத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு நீங்கள் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்ட பட்டப்படிப்பு முடித்தீர்கள். எது உங்களை வழிநடத்தியது?
உச்சநீதிமன்றத்தில் வேலைக்கு சேர்ந்தபிறகு நான் சட்டம் தொடர்பான சிலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அங்கிருந்த (உச்சநீதிமன்றம்) நூலகத்தில் இருந்தவர்கள் சட்டம் படித்துக் கொண்டிருந்தார்கள். அது எனக்கு உந்துதலாக இருந்தது. கற்றுக் கொள்வதற்கு வயது வரம்பு தேவையில்லை என்று எப்போதும் எனக்குத் தோன்றும். அதனால் நான் 2015ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இணைந்தேன்.
அப்போது அந்த நேரத்தில், நீங்கள் சட்டத்துறை சார்ந்த பணியில் ஈடுபடலாம் என்று முடிவு செய்திருந்தீர்கள் இல்லையா?
ஆமாம். நீதிபதி கோகோய் என்னிடம் ஆவணங்கள், புத்தகங்கள், அறிக்கைகள் போன்றவற்றை தரும்போதே சட்ட நுணுக்கங்கள் தொடர்பான பணிகளை செய்யத் தொடங்கிவிட்டேன். நீதிபதி கோகோய் போன்றவருடன் வேலை செய்வதை நானொரு கௌரவமான வாய்ப்பாக நினைத்தேன், நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
நவீன் குமார் உங்கள் மீது பதிவு செய்த மோசடி வழக்கினைக் காரணம் காட்டி உங்கள் மீதான பெயிலை போலிஸ் ரத்து செய்யவதற்கு மனு செய்ததாக நீங்கள் உங்கள் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எப்போது வெளிப்படையாக பேச வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்?
நான் ஒரு பெண் குழந்தைக்கு அம்மா. அவர்கள் என்னை சிறைக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார்கள். என்னுடைய குழந்தையை யார் கவனித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு (போலிசுக்கு) என்னை எப்படி துன்புறுத்த வேண்டும் என்பதெல்லாம் சொல்லப்பட்டிருந்தது. என்னைக் கைது செய்தார்கள், துன்புறுத்தினார்கள். அவர்களை எதுவும் தடுத்து நிறுத்தவில்லை. அவர்கள் என்னை திரும்பவும் சிறையில் அடைத்தாலும் கூட எப்படியும் நடப்பது தான் நடக்கப்போகிறது. அதனால் வெளிப்படையாக சொன்னால் என்ன என்று தோன்றியது. என்னுடைய கணவருடன் ஆலோசனை செய்தேன். நாங்கள் சாரையும், மேடமையும் (வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், விருந்தா குரோவர்) சந்திக்க முயற்சி செய்தோம்.
யாரை நீங்கள் முதலில் அணுகினீர்கள்?
பிரசாந்த் சார்.
பிரசாந்த் பூஷன் மற்றும் விருந்தா குரோவர் இருவரையும் எப்படி தொடர்பு கொண்டீர்கள்?
எனக்கு பிரசாந்த் சாரை ஏற்கனவே தெரியும். அவரை உச்சநீதிமன்றத்தில் பார்த்திருக்கிறேன். அவரிடம் நான் முழுவதையும் சொன்னேன். அவரும் கேட்டார். அவர் என்னிடம்சில கேள்விகளைக் கேட்டார். எல்லாமே குறுக்குக் கேள்விகள். நான் காட்டிய ஆவணங்களையும் பார்த்தார். விருந்தா குரோவர் இது போன்ற வழக்குகள் பலவற்றை கையாண்டிருக்கிறார் என்றார். அவர் சொல்லி நான் மேடமை தொடர்பு கொண்டேன். விருந்தா மேடம் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்தார். ஆவணங்களைப் பார்த்தார். எப்படி நடந்தது என்று கேட்டார். அதன்பிறகு தான் அவர் எனக்கு ஆதரவைத் தந்தார். “நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்” என்று சொன்னார்கள். அதுவரை எங்களுடன் யாரும் இல்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் முடிவே செய்தவுடன் பிரமாண வாக்குமூலம் தர வேண்டும் என்று எப்போது , எப்படி முடிவு செய்தீர்கள்?
எப்படி இதனை மேற்கொள்ள வேண்டும் என்று எனக்கு எதுவுமே தெரியாமல் இருந்தது. உண்மையைத் தவிர என்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி சொல்ல வேண்டும், எதனை மேற்கொள்ள வேண்டும், எதனைப் பின்பற்ற வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. நாங்கள் பிரஷாந்த் பூஷன் மற்றும் மற்றவர்களின் உதவியைக் கேட்டோம்.
உங்களது பிரமாணவாக்குமூலத்தில் நீங்கள் சட்டவிரோதமாக திலக் மார்க் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் அடைத்துவைக்கபப்ட்டிருந்ததாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த இரவு எப்படியான பாதிப்பை உங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது?
அது ஒரு கொடுமையான இரவு. அப்போது இரவு இரண்டு மணி இருக்கும். திலக் மார்க் காவல்நிலையத்தின் அதிகாரி தேவேந்திரகுமார் என்னைக் கைது செய்தார். அவர் சில போலீசுடன் வந்து என்னுடைய தொடையில் மிதித்தார், பிறகு மோசமான வார்த்தைகளால் பேசினார். “உன்னை உரிச்சுருவேன்..உனக்கு ஜட்ஜோட கேபினுக்கு போய் என்ன வேலை?” என்று கேட்டார். பெஞ்சோடு சேர்த்து என் கால்களைக் கட்டினார் (உடைந்து அழுகிறார்).
ஒவ்வொரு போலிசையும் பார்க்கும்போதும் நான் பெருமையாக நினைப்பேன். இன்று இவர்கள் எல்லாம் நான் நினைத்த அளவுக்கு சரியானவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது.
நீதிமன்றப் பணியில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்போது செவித்திறனும் குறைந்துள்ளது. இப்போது மனஅழுத்தத்தில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறீர்கள்.
என்னுடைய வாழ்க்கை மொத்தமும் மாறிவிட்டது. அக்டோபருக்குமுன்பும்பின்புமான வாழ்க்கை மொத்தமாய் மாறிவிட்டது (அழுகிறார்). நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன், நிதி ஆதாரம், மனநலம் என எலலாவற்றையும்.
உங்களுடைய கணவரும், அவருடைய சகோதரரும் கூட வேலையில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது உங்களது குடும்பத்தில் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?
எங்களது குடும்பத்தில் எல்லோருமே பதற்றத்திற்கு உள்ளானோம். நிறைய நடந்துவிட்டது. நிதி ஆதாரம் போய்விட்டது. மனநலமும் தான். நாங்கள் எல்லோருமே தொந்தரவுக்கு உள்ளாகியிருக்கிறோம்.
எப்போது எது நடக்கும் என்று யாருக்குமே தெரியவில்லை. பயமாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து தொந்தரவுப்படுத்தப்படுகிறோம். என்னுடைய சகோதரி வீட்டில் எனக்கு நடந்த கொடுமைகளை அவர்கள் நேரில் பார்த்ததால் என்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.
நீங்கள் போலிஸ் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று சொன்னீர்கள். உங்களுடைய கணவர் திரும்பவும் வேலைக்குப் போவதை விரும்புகிறீர்களா?
எங்களுக்கு இது தான் வாழ்வாதாரம். நாங்கள் வேறென்ன செய்ய முடியும்? இப்போது எனக்கும் வேலையில்லை.
மெளனமாக இருப்பதென்பதுமுடிவாக இனி இருக்க முடியாது என்று சொன்னீர்கள். ஏன் அப்படி உணர்கிறீர்கள்?
இப்போது எங்களிடம் ஒன்றுமில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். என்னுடைய மகள் என்னுடன் இருக்கிறாள். நான் அவளுடன் இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய மகள் இல்லாமல் மூன்று நாட்கள் நான் எப்படி இருந்தேன் (போலிஸ் கஸ்டடியில்) என்று எனக்குத் தான் தெரியும். ஒவ்வொரு முறையும் அவளிடம், “அம்மா ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள்..ஹாஸ்பிட்டலில் இருக்கிறாள்” என்றே சொல்லிஏமாற்றியிருக்கிறார்கள்.
ஜனவரி 2019ல் நீங்கள் தேசிய மனித உரிமைக் கமிஷன் பெண்களுக்கான டெல்லி கமிஷன் போன்றவற்றிக்கு முறையற்று வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கடிதங்களை அனுப்பினீர்கள்.
பலருக்கும் நாங்கள் கடிதங்கள் அனுப்பினோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு அமைப்பு கூடவா பதிலளிக்கவில்லை?
இல்லை.
இப்போது ஆணையம் தன்னுடைய விசாரணையை முடித்துக் கொண்டது. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ரிட் மனு தாக்கல் செய்ய இருக்கிறீர்களா?
ஆமாம். என்னுடைய வேலைப்பறிப்புக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்வேன்.
இறுதி அறிக்கையின் பிரதி வேண்டும் என விசாரணை ஆணைய உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். பிறகு தான் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே நான் கொடுத்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எல்லா ஆதாரங்களும் தந்த பிறகும் இப்படி சொல்வதன் காரணம் என்ன என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொன்று குறித்தும் என்னுடைய பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். பிறகெப்படி இப்படியொரு முடிவுக்கு வந்தார்கள் என்பது பற்றி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்போது உங்களுடைய கோரிக்கை என்ன?
தொடக்கத்திலிருந்தே என்னுடைய கோரிக்கை என்பது , யாரேனும் எனக்கு நடந்தவைகளுக்கெல்லாம் நீதி பெற்றுத் தாருங்கள் என்பது தான். போலிஸ் கஸ்டடியின்போது என்னை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தியவர்களை அங்கே அனுப்ப வேண்டும். அப்போது தான் எப்படி இருக்கும் என்று அவர்களுக்குத்தெரியும்.
இது போன்ற கடினமான போராட்டத்திற்கான உந்துதல் என்னவாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா?
என்னுடைய குடும்பம் பட்டதுன்பங்கள் தான். என்னால் இதற்கு மேல் சகித்துக் கொள்ள முடியாது. எங்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. எப்போதோ நடந்தவை குறித்து இப்போது சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
எப்படி எல்லாவற்றையும் சமாளித்தீர்கள்?
அக்டோபர் 11க்குப் பிறகு நானாக என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து எந்த யோசனையும் இல்லை. ஏனெனில் நான் முழுமையான அதிர்ச்சியில் இருந்தேன். ஏனெனில் உங்கள் மனதுக்குத் தெரியும், இப்படி நடந்திருக்கிறது, அது தவறு என்று, ஆனால் யாரிடமும் சொல்ல முடியாது. ஆனால திரும்பவும் நான் போக விரும்பாத ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டியிருந்தது.
தூக்கமின்மை ஏற்பட்டது. அடுத்து என்ன நடக்கும் என்று யோசித்துக் கொண்டே இருப்பதால் என்னால் தூங்க முடியவில்லை. நீதிபதி பட்நாயக் தலைமையில் உள்ள மற்றுமொரு ஆணையத்திலும் கூட என்னுடைய பங்கு எதுவும் இருக்கப்போவதில்லை.
இது கற்பனையான ஒரு விஷயத்தை எல்லோரும் நம்புவதற்காகவும், மக்களை திசைதிருப்பு அதற்காகவும் எதோ பெரிய சக்திகள் இதற்குள் இருப்பதாகவும் நம்பச் செய்வதைத் தவிர வேறொன்றையும் செய்யாது.
ஸ்ருதிசாகர் யமுனன், இஃப்ஷிதா சக்ரவர்த்தி (SCROLL.IN)
அதுல் தேவ் , நிகிதா சக்சேனா (THE CARAVAN)
அஜோய் ஆசிர்வாத் மகாபிரஷாதா (THE WIRE)
நன்றி : தி ஸ்க்ரோல்
Savukku,
Hope u r alive still.. No news at all from u. U r disappointing 1000s of your readers.
GOOD ARTICLE
You don’t make fun of Sanghis and Bhakts any more. Your facebook account is very quiet. இது தேவையா சங்கரு? உசுப்பேத்தி விட்டுட்டு போயிட்டயே!
Modi is going to win. There is no question. I could see that you are already keeping quiet.
Excellence in journalism.
Kudos savukku
Hi Sir,
Learnt that your facebook account got locked…. Is it true?