இந்த வார தமிழக அரசியல் இதழில், “வழக்கில் சிக்க வைக்க சதி. ராமசுந்தரம் ஐஏஎஸ் ராஜினாமா ? “ என்ற தலைப்பில் அட்டைச் செய்தி வந்திருக்கிறது. படித்துப் பார்த்தால், நமது சுனில் குமார் பற்றியும் செய்தி இருக்கிறது. சுனில் குமாரைப் பற்றி வேறு யாரோ எழுதவும், அதை நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியுமா ? சுனில் குமார் சவுக்கின் செல்லப் பிள்ளை அல்லவா ? யாரோ ஒருவர் சுனில் குமாரைப் பற்றி எழுதுகிறார்களே. சவுக்கு கம்மென்று பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று, நாக்கு மேலப் பல்லப் போட்டு நாலு சாதி சனம் கேள்வி கேட்டுட்டா அசிங்கமாப் போயிடாது… … ? அதனால், இந்தச் செய்தியைப் பற்றி சவுக்கு டீம் புலன் விசாரணையில் இறங்கியது. நமது புலன் விசாரணையில் கிடைத்த செய்திகளுக்கு போவதற்கு முன், தமிழக அரசியலில் வந்த கட்டுரையை படியுங்கள்.
தான் வைத்த பொறியில் தானே சிக்கிக் கொள்வது என்பது எத்தனை வேதனையானது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., சுனில்குமார் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வருகிறார்’ கடந்த சில நாட்களாக கோட்டை வட்டாரத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் இந்த வார்த்தைகள்தான் முணுமுணுக்கப்படுகிறது.
ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் என்று விசாரித்தால், யாரும் ‘மூச்’ விட-வில்லை. அப்படியென்ன சிதம்பர ரகசியம் இருக்கப் போகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கும் அதிகாரிகளையே வளைத்துப் பிடித்தோம். கேட்க, கேட்க பல திருப்பங்களுடன் கூடிய க்ரைம் திரில்லர் படம் பார்ப்பது போன்று இருந்தது.
எஸ்.ராமசுந்தரம். புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர், 1979-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக அரசின் பொதுப் பணித்துறை செயலராக பணியாற்றி வருகிறார். புதிய தலைமைச் செயலகத்தை கலைஞரின் விருப்பப்படி கட்டிக் காட்டியதன் மூலம் கலைஞரின் மனதில் இடம் பிடித்தவர். இவரது மனைவி அர்ச்சனா ஐ.பி.எஸ். இவர் சி.பி.சி.ஐ.டி. பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார்.
இந்த ராமசுந்தரத்துக்கு எதிராக ஓர் சதிவலை பின்னப்பட்டு, ஒருகட்டத்தில் அது அவரது கவனத்திற்கே போனதுதான் இத்தனை பரபரப்புக்கும் காரணம் என்று சொல்லி அதையும் விவரிக்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். ராமசுந்தரத்துக்கு எதிராக சதி வலை ஏன் பின்னப்படுகிறது? அவரைப் பழிவாங்க துடிப்பவர்கள் யார்?
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோ, ஐ.பி.எஸ்.அதிகாரிகளோ இரு தரப்புமே, ஆட்சியாளர்களால் அல்லது அரசியல்வாதி களால் அவ்வப்போது பழி வாங்கப்படுவார்கள். அதுதான் வாடிக்கை(!). ஆனால், இந்த ஆட்சியில், ஆட்சியாளர்களால் எந்த அதிகாரிகளுக்குமே ஆபத்து வந்தது கிடையாது. பிறகு யார் என்று கேட்டால், அதிகாரிகளை அதிகாரிகளே பழிவாங்கிக் கொண்டு, ஆட்சிக்கு அவப்பெயரை தேடிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சரி! ராமசுந்தரம் விஷயத்துக்கு வருவோம். அவரைக் கடந்த பத்து நாட்களாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் பின் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருந்தனர். தன்னை யாரோ சிலர் பின் தொடர்வதை குறித்து உணர்ந்த ராமசுந்தரம், தனது மனைவியிடம் விசாரிக்கும்படி சொல்லியிருக்கிறார். அவர் விசாரித்த போதுதான், லஞ்ச ஒழிப்புத் துறையினர் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. அவர், உடனே லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி., சுனில்குமாரிடம் விசாரித்து இருக்கிறார்.
‘எதற்காக, என் கணவர் ராமசுந்தரம் பின்னால் உங்கள் டீம் அலைகிறது? அவர் மீது ஏதாவது புகார் இருந்தால், முறைப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதை நான் தடுக்க மாட்டேன். ஆனால், அவரை ‘பாலோ’ செய்து வேண்டுமென்றே வழக்கில் சிக்க வைக்க முயற்சிகள் எடுத்தால், கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்தார்.
‘அவர் மீது எந்தப் புகாரும் வரவில்லை. அவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பின் தொடரவுமில்லை’ என்று மறுத்திருக்கிறார் சுனில்குமார்.
கூடுதல் டி.ஜி.பி., அர்ச்சனாவின் எச்சரிக்கைக்கு பிறகு சுனில்குமார் வேக, வேகமாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை சந்தித்திருக்கிறார். அவர் யாரென்றால், அர்ச்சனாவின் பேட்ச்மென்ட். அவரிடம் சென்ற சுனில்குமார், ‘சார்… மேடம் என் மேல் ரொம்ப கோபமா இருக்காங்க. அவங்க கணவர் மேல் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை. அவர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி, மேலிடத்து உத்தரவு. அதைத்தான் நான் செய்தேன். அவர் என்னைக் கோபித்துக் கொண்டால் எப்படி?’ என்று விளக்கமளித்துள்ளார்.
ஆனால், சுனில்குமார், ‘மேலிடம்’ என்கிற அந்த ‘சூப்பர் பவர்’ யார் என்பதை கூறவில்லை. இந்த விஷயங்கள் குறித்து அறிந்த ராமசுந்தரம், கடும் அதிர்ச்சிக்குள் மூழ்கியிருக்கிறார். ‘என்னை ஏதோ ஒரு வழக்கில் சிக்கவைக்கவும் அல்லது என்னை அவமானப்படுத்தும் வகையில் சில காரியங்களைச் செய்யவும் முயற்சித்தது ஏன் என்பது எனக்கே தெரியவில்லை’ என்று குடும்ப உறுப்பினர்களிடமும், நண்பர்களிடமும் சொல்லி-இருக்கிறார்.
இதற்கிடையில் லஞ்ச ஒழிப்புத் துறையில் பெரும் குழப்பம் வெடித்துவிட்டது. ராமசுந்தரத்தை ரகசியமாக பின் தொடர்ந்த விஷயம், எப்படி அவருக்கு தெரிந்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், ராமசுந்தரம் தொடர்பான பணியில் இருந்த நடராஜன் என்ற டி.எஸ்.பி., இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு, லஞ்ச ஒழிப்புத்துறையின் சென்னை மண்டல டி.எஸ்.பி.யாக இருந்த இக்பால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நம்மிடம் பேசிய சுனில் குமார் தரப்பினர் இந்த சம்பவங்களை ஒட்டு மொத்தமாக மறுத்தனர்.
இது தொடர்பாக உண்மை நிலையை அறிய பொதுப்பணித் துறை செயலர் ராமசுந்தரத்தை தொடர்பு கொண்டோம். ‘அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று சொல்லி செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டார்.
ஆனால் நமக்கு கிடைத்த தகவல்களின்படி தனக்கு எதிராக நடக்கும் சதிப் பின்னணிகள் பற்றிய விவரங்களை ராமசுந்தரம் சேகரித்திருப்பதுடன் அதற்கு காரணமான ‘சூப்பர் பவர்’ யார் என்பதயும் தெரிந்துகொண்டிருக்கிறார். இந்த விஷயங்களை எல்லாம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். சதி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், ஐ.ஏ.எஸ். பதவியிலிருந்து ராஜினாமா செய்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.
ராமசுந்தரம் விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இருக்கும் அதிகாரி-களிடம் கேட்டபோது, ‘முதல்வருக்கு நெருக்க-மான அதிகாரிகளையே, முதல்வரின் அனுமதி-யின்றி கண்காணிப்பதும், அந்த அதிகாரிகளின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதும் முறையானது அல்ல. இதுபோன்று பல உயர் அதிகாரிகள் பலமுறை சிக்கலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முதல்வரிடம் நெருங்கிப் பழகும் அதிகாரிகளை குறி வைத்து அவமானப்படுத்தும் செயல்கள் ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. இப்படிச் செய்யும்படி தூண்டிவிடும் அதிகாரிகள் மீதும், அவர்களின் பேச்சைக் கேட்டு ஆடும் அதிகாரிகள் மீதும் முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பல அதிகாரிகள் ஏதோ காரணங்களுக்காக அமைதியாக போய்விட்டார்கள். ஆனால் ராமசுந்தரம் துணிந்து-விட்டார். அவரது முயற்சியாவது இதுபோன்ற அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதா என்று பார்ப்போம்’ என்கிறார்கள் எதிர்பார்ப்புடன்.
அதிகாரிகளுக்குள் நடக்கும் மோதல், ஆட்சிக்கு அவப்பெயரை தேடித்தரும் என்பதை கலைஞர் அறியாதவர் அல்ல. அவர் எடுக்கும் நடவடிக்கையால், ராமசுந்தரத்துக்கு நெருக்கடி கொடுத்த ‘சூப்பர் பவர்’ யார் என்பது அம்பலமாகும். அதன் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகளும் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில்!
இதுதான் தமிழக அரசியலில் வந்த கட்டுரை. இப்போது சவுக்கின் புலனாய்வுக்கு வருவோம்.
கருணாநிதியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த துரை முருகன் தான் பொதுப் பணித் துறையை பார்த்துக் கொண்டு இருந்தார். 2006 முதல் பொதுப் பணித் துறையை துரை முருகன் ஒரு மன்னர் போல ஆண்டு கொண்டிருந்தார். வழக்கமாக, பணியிட மாறுதல், காண்ட்ராக்ட் போன்ற விஷயங்களில், கருணாநிதியோ அல்லது அவரது குடும்பத்தாரின் பேரைச் சொல்லிக் கொண்டு வேறு யாராவதோ வந்தால், “நான் தலைவரிடம் பேசிக் கொள்கிறேன்“ என்று அந்தப் பேப்பரை எடுத்து ஓரமாகப் போட்டு விடுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
13 ஜுலை 2009 அன்று, துரைமுருகனிடம் இருந்து பொதுப் பணித்துறை பறிக்கப் பட்டு, கருணாநிதி தன் வசமே அதை வைத்துக் கொண்டார்.
அது முதல், முதல்வரின் செயலாளராக இருக்கும் ராஜரத்தினத்துக்கு கொண்டாட்டம் தான். ராஜரத்தினமே பொதுப் பணித்துறை அமைச்சர் போல செயல்படத் தொடங்கினார். கருணாநிதியின் பெயரைச் சொல்லி பணியிட மாறுதல்களும், காண்ட்ராக்டுகளும் வழங்கினால் யார் போய் கருணாநிதியிடம் சரிபார்க்கப் போகிறார். ராஜரத்தினத்துக்கு சுக்கிர திசைதான்.
துரைமுருகன் பொறுப்பிலிருந்து விலகிய கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட மூத்த பொறியாளர்கள் பணியிட மாறுதல் செய்யப் பட்டுள்ளார்கள். பணியிட மாறுதல் என்றால் சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதீர்கள். பாலாறு டிவிஷனுக்கு தலைமைப் பொறியாளராக நியமிக்கப் படுவதற்கான தொகை 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை. ஏனெனில் பாலாறு டிவிஷனில் தான் மணல் கொள்ளை அமோகமாக நடைபெறுகிறது. மேலும், பொதுப் பணித்துறை செயலாளர் ராமசுந்தரத்தின் புண்ணியத்தில் தேவர் சாதியினரின் ஆதிக்கமும் அத்துறையில் பெருகியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
நல்ல போஸ்டிங் வேண்டுமென்றால், பணம் இருந்தால் மட்டும் பத்தாது. அவர் தேவர் சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால்தான் நல்ல பணியிடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
இந்த மாறுதல் மாபியாவில் மொத்தம் மூன்று பேர் உறுப்பினர்கள். ஒன்று கருணாநிதியின் செயலாளர் ராஜரத்தினம். அடுத்தவர் ராமசுந்தரம். அடுத்தவர் பொதுப்பணித்துறையின் தலைமைப் பொறியாளர் ஜெயராமன். இந்த ஜெயராமன் தான் மற்ற பொறியாளர்களுக்கு பிரோக்கராக இருந்து பணத்தை வசூல் செய்து தருகிறார் என்று கூறுகிறார்கள்.
இந்நிலையில், இந்த மாறுதல் மாபியாவுக்கு நடுவே கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்படுகிறது. இந்தத் தகராறில், ஜெயராமனும் ராமசுந்தரமும் ஒரு அணி. ராஜரத்தினம் தனி அணி.
தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு நாறிப்போய் கிடக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடம் மட்டும் குறித்த நேரத்தில் எப்படி முடிந்தது. இரண்டு காரணங்கள். பொதுப் பணித்துறையை தன் வசம் வைத்திருந்தாலும், குஷ்பூவை வைத்து திராவிடக் கொள்கையை வளர்ப்பதற்கே கருணநிதிக்கு நேரம் பத்தவில்லை என்பதால் பொதுப்பணித் துறை வேலைகளை கவனிக்க முடியவில்லை. அதனால் நூலகக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கிறார். அந்தப் பணிக்கு பொறுப்பாக இருந்தது, பொதுப் பணித்துறையைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற ஒரு கண்காணிப்புப் பொறியாளர். மிகத் திறம்பட வேலை செய்து குறித்த நேரத்தில் அந்தப் பணியை செய்து முடிக்கிறார்.
இதே கோபாலகிருஷ்ணன் தான் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளுக்கும் பொறுப்பாக இருந்தார். ஆனால், இந்த மாறுதல் மாபியா கும்பலால், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப் பட்டார். தலைமைச் செயலக கட்டுமானப் பணிகள் ராஜாராம் என்ற ஒரு மங்குணி கண்காணிப்புப் பொறியாளரிடம் ஒப்படைக்கப் படுகிறது. அதனால்தான் இவ்வளவு குளறுபடி என்கிறார்கள்.
இந்நிலையில், முதல்வர் அலுவலகம் நவம்பர் 1ம் தேதி புதிய சட்டமன்ற வளாகத்துக்கு மாறும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. சட்டமன்றக் கூட்டமும் நவம்பர் 8ம் தேதி தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. ஆனால், புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் 60 சதவிகித பணிகள் கூட முடியவில்லை. இதனால், மீண்டும் தங்கம் தென்னரசுவை அழைத்து, தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளையும் அவரிடம் ஒப்படைக்கிறார் கருணாநிதி. தென்னரசு தனக்கு கோபாலகிருஷ்ணன் என்ற கண்காணிப்புப் பொறியாளர் வேண்டும் என்கிறார். யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள் என்று, உத்தரவிட்டதை அடுத்து, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 4 கண்காணிப்புப் பொறியாளர்கள் இந்த வேலையை கவனித்து வருகிறார்கள்.
இதன் நடுவே, கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற கோபாலகிருஷ்ணன், 2000 சிமென்ட் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிப் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். மேலும், தரைகள் தயாராகாமல், 4 அடிக்கு சேறும் சகதியும் நிரம்பிக் கிடப்பதைப் பார்த்து விட்டு அதிர்ச்சி அடைகிறார்.
இந்த நேரத்தில், கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டது போல, ஒரு திறப்பு விழா நடத்தி, கட்டுமானப் பணியாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து, அந்த விழாவில், திமுகவின் பார்ப்பனப் பிரிவு தலைவர் இந்து ராமும் கலந்து கொண்டதை நினைவுக் படுத்திப் பாருங்கள்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்க இருப்பதை ஒட்டி, செய்ய வேண்டிய பணிகளை ஆய்வு செய்வதற்காக சட்டப் பேரவைச் செயலர் செல்வராஜ் கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்று ஆய்வு செய்ய ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். இந்தக் கூட்டத்துக்கு வந்த பதிலளிக்க வேண்டிய ப்ராக்கர் மற்றும் தலைமைப் பொறியாளர் ஜெயராமனும், மற்றொரு தலைமைப் பொறியாளர் கருணாகரனும் வராமல் டபாய்க்கிறார்கள். சட்டமன்ற வளாகத்துக்குள் சாலைகள் கூடத் தயாராகாமல் சேறும் சகதியுமாக கிடப்பதைப் பார்த்தால், நாளை சட்டப் பேரவை நடக்கையில் பெரும் பிரச்சினையாகுமே என்று பணிகள் நிறைவடையவில்லை என்ற தகவலை கருணாநிதியின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறார். கருணாநிதியும் தங்கம் தென்னரசுவை அழைத்து பணிகளை விரைவு படுத்தச் சொல்கிறார்.
இந்நிலையில், பொதுப் பணித்துறையில் நடந்த மாறுதல்களில் நடந்த ஊழல்கள், தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் ஏற்பட்ட சுணக்கங்கள் அதற்கான காரணங்கள் இவையெல்லாம் ஆதாரத்தோடு, புகாராக முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.
இந்தப் புகார் ராஜரத்தினத்திடமே வருகிறது. (இதுதான் திருடனுக்கு தேள் கொட்டியதா) ராஜரத்தினம் ஏற்கனவே மாறுதல் மாபியாவில் ஏற்பட்ட பிணக்குக்கு கணக்கு தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். வந்த புகாரில் தன்னுடைய பெயரை மட்டும் நீக்கி விட்டு உளவுத் துறை அறிக்கை போல இதைத் தயார் செய்து அனுப்புமாறும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்து அனுப்புமாறும் ஜாபர் சேட்டிடம் கூறுகிறார். (வந்துட்டான்யா வந்துட்டான்யா)
ஜாபர் சேட்டுக்கு கூடுதல் டிஜிபியாக இருக்கும் ராமசுந்தரத்தின் மனைவி அர்ச்சனாவோடு கணக்கு தீர்க்க வேண்டி உள்ளது.
2008ல் அர்ச்சனா ராமசுந்தரம் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக உள்ளார். டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்களை மாறுதல் செய்ய ஒரு மாறுதல் கமிட்டி டிஜிபி அலுவலகத்தில் உண்டு. இந்தக் கமிட்டியில் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, மற்றும் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் உறுப்பினர்கள்.
இந்த ட்ரான்ஸ்பர் கமிட்டியின் கூட்டம் நடைபெறுகையில் உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி சார்பில் உளவுப் பிரிவு ஐஜியான ஜாபர் சேட் கலந்து கொள்கிறார். ஜாபர் சேட்டைக் கண்ட அர்ச்சனா, நீங்கள் எதற்கு வந்தீர்கள் என்று கேட்கவும், நான் உளவுத் துறை கூடுதல் டிஜிபி பதவியின் பொறுப்பு வகிக்கிறேன், அந்தத் தகுதியில் வந்தேன் என்று கூறவும், இந்தக் கமிட்டியில் கூடுதல் டிஜிபிக்கள் மட்டும் தான் இருக்க முடியும், நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூறுகிறார். கூட்டத்தை ரத்து செய்து விட்டு, டிஜிபி கே.பி.ஜெயினை சந்தித்து, உளவுத் துறை கூடுதல் டிஜிபிக்கு பதில், தலைமைய கூடுதல் டிஜிபியை இந்தக் கமிட்டியில் போடுங்கள் என்று பரிந்துரைக்கிறார். இந்தப் பரிந்துரையை ஏற்று, ஜெயினும் உத்தரவு பிறப்பிக்கிறார்.
இந்த விவகாரத்தை கடும் அவமானமாக எடுத்துக் கொண்ட ஜாபர் (சார் உங்களுக்கு மானமெல்லாம் இருக்கா ?) உடனடியாக பாண்டியனிடம் சொல்லி, கருணாநிதியின் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்கிறார். அடுத்த வாரமே அர்ச்சனா குற்றப் பிரிவுக்கு மாற்றப் பட்டு, லத்திக்கா சரண் நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப் படுகிறார்.
அடுத்த விவகாரம், சவுக்கு தொடர்பானது. தனக்கு தெரிந்த உயர் அதிகாரி மூலம், சிபி.சிஐடியின் சைபர் க்ரைம் செல்லை வைத்து, சவுக்கின் மீது பிணையில் வெளி வரமுடியாத வழக்கு ஒன்றை போடச் சொல்கிறார். இந்தக் கோரிக்கையை அர்ச்சனா மறுத்தது மட்டுமல்ல, ஜாபர் ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறார் என்று ஜாபர் சேட்டை கேவலமாக திட்டிய விஷயமும் ஜாபரின் காதுக்கு போகிறது.
அடுத்த விவகாரம், ராமசுந்தரம் தொடர்பானது. ராமசுந்தரம், ஏப்ரல் 2009ல் பொதுப் பணித் துறை செயலாளராக நியமிக்கப் பட்டதிலிருந்தே, கருணாநிதியோடு நல்ல உறவை பேணி வருபவர். கருணாநிதியோடே நெருக்கமாக இருக்கும் அதிகாரிக்கு ஜாபரின் தயவு எதற்கு ? அதனால், ஜாபரை அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார் ராமசுந்தரம். 50 டன் ஈகோவை தலையில் வைத்திருக்கும் ஜாபருக்கு, இதுவும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
மேலும், ராமசுந்தரம் மாதந்தோறும், தேவர் மற்றும் தேவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கு ஒரு “ரேவ்“ பார்ட்டி கொடுப்பது வழக்கம். உள்துறைச் செயலாளர் ஞானதேசிகன், மற்றும் நம்ப கண்ணாயிரம், இந்த ரேவ் பார்ட்டியின் பரம விசிறி. ஜாபர் ஒரு நாள் ராமசுந்தரத்தைப் பார்த்து, என்ன சார் என்னையெல்லாம் ரேவ் பார்ட்டிக்கு கூப்பிட மாட்டீர்களா என்று கேட்டுள்ளார். ராமசுந்தரம் கண்ணாயிரத்திடம், இந்த ரேவ் பார்ட்டிக்கு ஜாபரை அழைக்கலாமா என்று ஆலோசனை கேட்டுள்ளார். கண்ணாயிரம், ஜாபரை கூப்பிடாதீர்கள் நமக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். ரேவ் பார்ட்டிக்கு அழைக்காததும் ஜாபருக்கு ஒரு கோபம். (ஜாபர் சார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு சார்)
இந்தச் சூழலில், ராஜரத்தினம் ஜாபரிடம் பொதுப் பணித் துறை ஊழல் தொடர்பாக ஒரு அறிக்கையை கேட்கவும், இதுதான் சாக்கு என்று ராமசுந்தரத்தை வலையில் சிக்க வைப்பது போன்ற ஒரு அறிக்கையை தயார் செய்து, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அறிக்கை அனுப்புகிறார்.
அதிகாரம் இல்லாத அதிகாரி என்றால், ஒரே நாளில் விசாரணைக்கு உத்தரவிடலாம். ஏ.கே.விஸ்வநாதன் போல. ராமசுந்தரம் கருணாநிதிக்கு நெருக்கமானவர் ஆயிற்றே. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல், இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் எந்த வகையிலும் சேர்த்தியில்லாத ஒரு விசாரணையை நடத்துமாறு, ராஜரத்தினம், ஜாபரின் அறிக்கை அடிப்படையில் ஒரு கடிதத்தை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் போலா நாத்துக்கு அனுப்புகிறார். அந்தக் கடிதம் சுனில் குமார் வசம் ஒப்படைக்கப் படுகிறது.
இதற்கு நடுவே, சுனில் குமாரை அழைத்த ஜாபர் சேட், ஜாங்கிட் புறநகர் கமிஷனராக இருக்கிறார். அவருக்கு கூடுதல் டிஜிபி பதவி உயர்வு வந்தவுடன் மாற்றப் படுவார். உன்னை புறநகர் கமிஷனராக ஆக்குகிறேன். ராமசுந்தரத்தை மட்டும் வலையில் சிக்க வை என்று கூறுகிறார்.
சுனில் குமார், லஞ்ச ஒழிப்புத் துறையில் நகரப் பிரிவு 1ல் பணியாற்றும் எம்.பி.நடராஜனிடம் இந்தப் பணியை ஒப்படைக்கிறார். நடராஜன் பொதுப் பணித் துறையில் பல தொடர்புகளை பல காலமாக மெயின்டெயின் செய்து வருபவர். மேலும் ராமசுந்தரத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, நடராஜன் ராமசுந்தரத்திடம் விஷயத்தை சொல்லுகிறார்.
ராமசுந்தரம் தனது மனைவியிடம் விஷயத்தை சொன்னவுடன், அர்ச்சனா விசாரித்து விட்டு, முறையான விசாரணை எதற்கும் அரசு உத்தரவு வரவில்லை என்பதை அறிந்து கொண்டு, சுனில் குமாரை போனில் பிடித்து, லெப்ட் அன்ட் ரைட் வாங்குகிறார். சுனில் குமார், “மேடம் என் கடமையைத் தானே நான் செய்கிறேன்“ என்று விட்ட கதையெல்லாம் எடுபடவில்லை. முறையான விசாரணைக்கு அரசு உத்தரவிட்டிருந்தால் விசாரியுங்கள், உத்தரவு இல்லாமல் ஏதாவது விசாரித்தீர்கள் என்று தெரிந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
எம்.பி.நடராஜன் டிஎஸ்பி தான் நம்மை போட்டுக் கொடுத்தது என்பதை அறிந்த சுனில் குமார், உடனடியாக நடராஜனை நகரம் 1 பிரிவிலிருந்து நகரம் 3 பிரிவுக்கு மாற்றுகிறார். கன்னியாக்குமரியிலிருந்து மாறுதலில் கண்ணன் என்ற டிஎஸ்பியை நகரம் 1 பிரிவுக்கு நியமிக்கிறார்.
ஆனாலும், சுனிலுக்கு பயம் போகவில்லை. கடும் அச்சத்தில் இருக்கிறார். புறநகர் கமிஷனர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. சஸ்பெண்ட் ஆகாமல் பணியில் இருப்போமா இருக்க மாட்டோமா, நம் மீதே ஊழல் புகார் வந்துள்ளதே, என்ன செய்வதென்று, தனக்கு நெருக்கமானவர்களிடம், ஜாபர் சேட்டை நம்பி மோசம் போனதைக் கூறி, “அவனுக்கென்ன.. தூங்கி விட்டான்.. அகப்பட்டவன் நானல்லவா“ என்று புலம்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதான் சவுக்கின் புலனாய்வில் கிடைத்த தகவல். ஒரு கொசுறு தகவல். செல்வி ஜெயலலிதா, மதுரை கூட்டத்திற்கு ஜாபர் சேட் ஏகப் பட்ட தொந்தரவுகளைக் கொடுத்தார் என்று அறிக்கை வெளியிட்டதும், அதிமுகவினர், சேட்டை செட் தோசை ஆக்குகிறோம் பாருங்கள் என்று, சேட் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்போது சொல்லுங்கள். இது பொதுப் பணித் துறையா…. ? பொதுப் பணத் துறையா … ?