தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது இந்நாட்டின் குடிமகன் உண்மையிலேயே இது மக்கள் ஆட்சி தான் என்பதை உணரும் வகையில் உருவாக்கப் பட்ட ஒரு சட்டம். இந்தச் சட்டம் வந்த பிறகு, பல ஊழல்கள் இதன் மூலமாக வெளி வந்திருக்கின்றன என்றால் அது மிகைச் சொல் அல்ல.
ஆனாலும், எத்தனை சட்டங்கள் உருவாக்கப் பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு அதை வளைக்கத் தெரியாதா என்ன ? அப்படித் தான் இந்தச் சட்டமும் வளைக்கப் பட்டது. பல துறைகளில் தகவல் தந்தால், சிக்கலில் மாட்டிக் கொள்வோம் என்று அதிகாரிகள் தகவல் தராமல் மறுத்து வந்த நேர்வுகள் தமிழகத்தில் ஏராளமாக நடந்திருக்கின்றன. இது போல, தகவல்கள் தராத நேர்வுகளில், தகவல்களை தர வைப்பதற்காக உருவாக்கப் பட்ட அமைப்பு தான் மாநில தகவல் ஆணையம். இந்த ஆணையங்களில் தகவல் ஆணையர்களாக நியமிக்கப் படுபவர்கள் பாரபட்சமின்றி, சமூக ஆர்வலர்களாகவும், இந்தச் சட்டத்தின் நோக்கங்களை சீர் தூக்கிப் பிடிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எதிர்க்கட்சித் தலைவரை கலந்தாலோசித்து நியமனம் செய்ய வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது.
ஆனாலும், எதிர்க்கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தால், ஆளுங்கட்சிக்கு இருக்கும் இரண்டு ஓட்டுக்களை வைத்து, பெரும்பான்மை முடிவு என்று, ஆளுங்கட்சி துதிபாடிகளை தகவல் ஆணையர்களாக நியமித்து வருவது தமிழகத்தில் வழக்கமாக நடைபெற்றே வருகிறது.
கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி, தற்போதைய தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி போன்றோரின் நியமனம் இதற்கு உதாரணம். அரசு அதிகாரிகளாக பணியாற்றுபவர்களின் பேராசைக்கு ஒரு அளவே கிடையாது. பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும், எப்படியாவது பணி நீட்டிப்போ, வேறு அரசுப் பதவியோ பெறுவதற்காக யாருடைய காலையும் கழுவுவதற்கு தயங்கவே மாட்டார்கள். அப்படி கருணாநிதியின் காலை கழுவி பதவியைப் பிடித்தவர்கள் தான், இன்றைய தலைமைத் தகவல் ஆணையர் ஸ்ரீபதி, உள்ளிட்டோர்.
டி.ஆர்.ராமசாமி
இந்த நியமனங்கள் வெளிப்படையாக பார்த்தால், நியாயமான முறையில் நடைபெறுவது போல கோப்புகள் தயார் செய்யப் பட்டாலும், திரை மறைவில் பல்வேறு பேரங்களுக்குப் பிறகே இந்த நியமனங்கள் செய்யப் படுகின்றன.
இது போல கருணாநிதி ஆட்சிக் காலத்தில், 2008ல் தகவல் ஆணையர்களாக நியமிக்கப் பட்டவர்கள் தான், பேராசிரியர்.சாரதா நம்பி ஆரூரான், டி.சீனிவாசன், டி.ஆர்.ராமசாமி மற்றும் பெருமாள் சாமி ஆகியோர். இவர்களுள் டி.ஆர்.ராமசாமியைத் தவிர்த்து மற்ற அனைவரும் 20 லட்சம் லஞ்சமாகக் கொடுத்தே இந்தப் பதவியை பெற்றார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.
பெருமாள்சாமி என்பவர் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் எப்படி வழக்கை நடத்தினார் என்பதற்கு சவுக்குக்கு நேரடியாக ஒரு அனுபவம் கிடைத்தது. லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து ஒரு தகவல் வேண்டி விண்ணப்பம் அனுப்பப் பட்டது. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையின் கண்காணிப்பாளராக இருந்தவர் லட்சுமி. அவர்தான் தகவல் தர வேண்டும். இந்த லட்சுமி மீது இருந்த ஊழல் புகார்கள் குறித்து, சவுக்கு அப்போதே எழுதியிருக்கிறது.
இந்த லட்சுமி தகவல் தர மறுத்ததால், விவகாரம் தகவல் ஆணைய விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் சவுக்கு சார்பாக மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். முதலில் மற்ற மனுதாரர்களை மிரட்டுவது போல, ராதாகிருஷ்ணனையும் பெருமாள் சாமி மிரட்டினார். ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்றத்தில் வாதாடுவது போலவே, அங்கேயும் வாதாடினார். “இந்த பொதுத் தகவல் அலுவலர் தகவல் தர மறுத்துள்ளது சட்ட விரோதம். இந்த ஆணையத்திற்கு தகவல் அலுவலருக்கு அபராதம் விதிப்பதைத் தவிர வேறு வழியே இல்லை” என்று வாதாடினார். உடனே பெருமாள் சாமி, இது போல ஆணையத்தை நீங்கள் மிரட்ட முடியாது என்றார். ராதாகிருஷ்ணன் ”நான் மிரட்டவில்லை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் அதைத் தான் சொல்கிறது. தகவல் தர மறுக்கும் அலுவலருக்கு அபராதம் விதிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியே இல்லை. நான் இப்படி வாதாடுவதை நீங்கள் மிரட்டலாக எடுத்துக் கொண்டால் நான் ஒன்றும் செய்ய முடியாது. சட்டம் என்ன சொல்கிறதோ, அதைத்தான் எடுத்துச் சொல்கிறேன். உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு கூட நான் சட்டத்தை விளக்கும் போது இப்படித்தான் விளக்குவேன். இப்படித்தான் வாதாட வேண்டும் என்ற என்னை நீங்கள் கட்டாயப் படுத்த முடியாது” என்றார். இதைக் கேட்டதும் பெருமாள் சாமி பயந்து விட்டார். அமைதியானவர், நான் தீர்ப்பை ஒத்தி வைக்கிறேன் என்று வழக்கை தள்ளி வைத்தார்.
அதன் பிறகு, அந்த லட்சுமியிடமே கேட்டு தீர்ப்பு எழுதி தகவல் தர வேண்டியதில்லை என்று ஒரு தீர்ப்பை வழங்கினார்.
இந்தப் பெருமாள்சாமி ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவரை பேராசைப் பிடித்த பெருமாள்சாமி என்று அழைக்கலாம் தானே…
இது போல, சட்ட அறிவு இல்லாத, சமூக அக்கறை இல்லாத சுயநலமிகளை தகவல் ஆணையர்களாக நியமிக்கும் பொறுப்பற்ற போக்கு தமிழகத்தில் நிலவி வருகிறது.
இந்த அடிப்படையிலேயே 2008 நியமனமும் நடந்தது. இந்த நியமனத்திற்கான கூட்டம் கருணாநிதி தலைமையில் 11 ஏப்ரல் 2008 அன்று நடந்தது. 11 ஏப்ரல் அன்று நடக்கும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு, கருணாநிதியின் செயலாளராக இருந்த டி.ஆர்.ராமசாமி 7 ஏப்ரல் அன்று விண்ணப்பிக்கிறார். பெருமாள்சாமி 31.03.2008 அன்று விண்ணப்பிக்கிறார். டி.சீனிவாசன் மற்றும் சாரதா நம்பி ஆரூரான் ஆகியோர் கூட்டம் நடப்பதற்கு முதல் நாள், அதாவது 10.04.2008 அன்று தான் விண்ணப்பிக்கிறார்கள்.
கருணாநிதி கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் விருது கொடுப்பது போல, இந்த நியமனங்களை அள்ளி வீசிச் சென்றார்.
இது போன்ற நியமனம் நடக்கப் போகிறது என்பதை விளம்பரப்படுத்தி உண்மையில் இந்த பணியை ஏற்றுக் கொள்வதற்கு உண்மையான ஆர்வம் இருப்பவர்களை அல்லவா தேர்ந்தெடுக்க வேண்டும் ? அதை விடுத்து ரகசியமாக, இரவோடு இரவாக விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான காரணம் என்ன ?
இது போல தேர்ந்தெடுக்கப் பட்டு, தற்போது தகவல் ஆணையராக உள்ள சீனிவாசன் தன் வாயாலேயே உண்மையை கூறினார். அதாவது அவர் தகவல் ஆணையர் பதவிக்காக விண்ணப்பிக்கவே இல்லையாம்.
டி.சீனிவாசன்
அவர் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பதவிக்குத் தான் விண்ணப்பித்தாராம். அதற்காக அவர் அளித்த பயோ டேட்டாவை வைத்து, அவரை தேர்ந்தெடுத்து விட்டாராம். முதலில் அவர் பேசிய உரையாடலை கேளுங்கள்……
{mp3}1final{/mp3}
சீனிவாசன் சார்…. இந்த ஆவணத்தை பாருங்கள்……….
இது உங்கள் கையொப்பம் இல்லையா ? இல்லை நீங்கள் பேசியது பொய்யா ?
சவுக்கு இப்போது உங்கள் பொய்யை அம்பலப் படுத்தி விட்டது. உங்களின் உயர் அதிகாரியான ஸ்ரீபதிக்கு சுயமரியாதை என்பது துளி கூட கிடையாது. ஆனால் உங்களுக்கு துளியூண்டாவது சுயமரியாதை இருக்கும் என்று நம்புகிறோம். அப்படி இருந்தால், உடனடியாக பதவியை ராஜினாமா செய்யுங்கள்…..
சவுக்கு உங்களை வாழ்த்தும். அந்த உரையாடலை கேட்ட போது, உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறது என்பது தெரிகிறது. நீங்கள் ஊரை ஏமாற்றினாலும், உங்கள் மனசாட்சியை ஏமாற்ற முடியாது. நேர்மையற்ற வழியில் நீங்கள் பெற்ற பதவியில் இனியும் நீங்கள் தொடர்வது உங்களுக்கு அழகல்ல. ராஜினாமா செய்யுங்கள்.