சென்னை, அக். 23: தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கோவிந்தராஜன் திடீரென ராஜிநாமா செய்துள்ளார்.
மேல்முறையீடு செய்துள்ள தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்வது தொடர்பாக அரசுக்கும், நீதிபதி குழுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் ராஜிநாமா செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தனி நீதிபதி விதித்த இந்தத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற முதன்மை டிவிஷன் பெஞ்ச் அக்டோபர் 5-ம் தேதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், கல்விக் கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகள் தொடர்பாக 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தனியார் பள்ளிகளின் மேல்முறையீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்காக பள்ளிக் கல்வி கட்டண நிர்ணயக் குழு கடந்த 2 வாரங்களில் பலமுறை கூடி விவாதித்தது. இந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்குவதற்கு முன்பே நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
நீதிபதி கோவிந்தராஜனுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. எனவே, உடல் நலம் காரணமாகவும் அவர் பதவியிலிருந்து விலகியிருக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக மாநிலம் முழுவதும் பரவலாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பள்ளிக் கட்டண முறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின் படி, பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் 2009 டிசம்பர் 7-ல் பதவியேற்றார்.
மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் சம்பளம், பள்ளியில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து 10,934 தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை மே 7-ம் தேதி நீதிபதி குழு அறிவித்தது.
அதன்படி, தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் பிளஸ் 2 வரை 5 ஆயிரம் முதல் 11 ஆயிரம் வரை அதிகபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இந்தக் கட்டணத்தை எதிர்த்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்தன. மேல்முறையீடு செய்த அனைத்து பள்ளிகளும் ஏற்கெனவே நிர்ணயம் செய்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி குழு அறிவித்தது.
அதுதொடர்பான வழக்கில், நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்தத் தடையை சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீக்கியது. அதன்பிறகு, நீதிபதி குழுவின் கட்டண நிர்ணயத்தை வெளியிடக் கோரி பெற்றோர்கள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதங்களை மாவட்ட வாரியாக இணையதளத்தில் தமிழக அரசு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி