“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும், இருக்கின்றானே” என்றார் பாரதிதாசன்.
சவுக்கும் சாதி இருக்கின்றன்று தான் சொல்கிறது. சாதி இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல… சாதி இருக்கிறதே என்ற வேதனை.
சமச்சீர் கல்வி தொடர்பான கட்டுரையில், திருமதி.ஒய்.ஜி.பார்த்தசாரதி பார்ப்பன சனாதனத்தை தூக்கிப் பிடிப்பவர் என்று ஒரு வார்த்தை எழுதிய காரணத்துக்காகவே, சவுக்கு மீது கடுமையான வசவுகள். குறிப்பாக பிராமண வாசகர்கள், ‘நீ சாதியைப் பற்றி பேசாதே… உன் மனதில் தான் சாதி இருக்கிறது… பார்ப்பனர்களை நீ எப்படி குறை சொல்லலாம். நீயாவது சாதியைப் பற்றி பேசாமல் புதிய தலைமுறையை உருவாக்கலாமே… நீயும், சாதியைப் பற்றி, பார்ப்பனர்களை குறை கூறிப் பேசும், வீரமணி, திராவிடர் கழகம் போல ஆகி விட்டாயே, உனக்குள் சாதி வெறி இருக்கிறது” என்று பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப் பட்டன. இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், உன்னைப் போன்ற பன்றிகளுக்கு சனாதனத்தைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்டிருந்தார். மற்றொருவர், கோட்டாவில் படித்து வந்த சூத்திரப்பயலே, நீ பார்ப்பனர்களைப் பற்றி பேசாதே என்று கூறியிருந்தார்.”
நேற்றைக்கு வந்த இந்து நாளேட்டின், மணமகன், மணமகள் தேவை விளம்பரப் பகுதியை சற்று எடுத்துப் பாருங்கள். எத்தனை வகையான சாதிகள் இருக்கிறது என்று பாருங்கள். இந்த விளம்பரங்கள் யாருக்காக இருக்கிறது என்றால், 23 வயது முதல் 50 வயது வரை உள்ள இளைய தலைமுறையினருக்காக.
ஐயர் வடமா, பால்காட் ஐயர், விஸ்வகர்மா, சீர் கருணீகர், செங்குந்த முதலியார், நாயக்கர், அகமுடைய முதலியார், அகமுடையர், யாதவர், இசை வெள்ளாளர், துளுவ வெள்ளாளர், சோழிய வெள்ளாளர், அகமுடையர், நாடார், சைவ பிள்ளை, அசைவ பிள்ளை, என்று கணக்கில் அடங்கவில்லை.
இந்த இளைய தலைமுறையா சாதியற்ற சமுதாயத்தை படைக்கப் போகிறது என்று நினைக்கிறீர்கள் ? உடனே, ஒரே ஒரு நாளேட்டில் வந்த விளம்பரத்தை வைத்து முடிவு செய்ய முடியாது என்று பசப்பாதீர்கள். இதுதான் இன்று சமுதாயத்தின் நிலை. உங்களில் சாதி இல்லை, சாதியைப் பற்றிப் பேசாதே என்று பின்னூட்டம் இடும் ஒருவராவது, ஒரு தலித்தை மணக்க தயாரா என்று கூறுங்கள். உயர் சாதியில் பிறந்து, ஒரு தலித்தை மணம் புரிபவரை, சாதியை மறுத்தவர் என்று ஏற்றுக் கொள்ள முடியும். மற்றவர்கள் எல்லாமே வாய்ச் சொல்லில் வீரர்கள் தான்.
சாதி இருக்கிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு நாம் சமுதாயப் பணி ஆற்ற வேண்டும் என்பதே நமது நோக்கம். இருக்கும் சாதியை எப்படி இல்லை என்று மறுக்க முடியும் ? சவுக்கு வாசகர்களில் பல மென் பொறியாளர்கள் இருப்பீர்கள். அவர்களில் பிராமணர்கள் அல்லாதோர் உண்மையைச் சொல்லுங்கள். உங்கள் அலுவலகத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் இல்லை ?
ஊடகத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். எடிட்டோரியல் அளவில், இன்று எந்த பெரிய ஊடகத்திலும் ஒரு தலித் கூட இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். செய்தி வாசிப்பவராகக் கூட, ஒரு தலித் கூட இல்லை என்பது தெரியுமா ? ஆங்கில ஊடகங்களில் இன்னும் மோசம். ஆங்கில ஊடகங்களில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
சாதி இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள் ? இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களாக கருதப் படும் ஐஐடிக்களின் நிலை என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா ?
1959ல் இந்தியாவில் ஐஐடிக்கள் தொடங்கப் பட்டிருந்தாலும், தலித் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு 1978ல் தான் வழங்கப் பட்டது.
இவ்வாறு வழங்கப் படும் இட ஒதுக்கீட்டை வேண்டா வெறுப்பாக வழங்குகிறார்கள் என்பதே உண்மை. ஐஐடி ஜேஈஈ எனப்படும் ஐஐடிக்களுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஐஐடிக்களில் அனுமதிக்கப் படுகிறார்கள். இவ்வாறு அனுமதிக்கப் படுபவர்களில் தலித்துகள் மட்டும் நேரடியாக ஐஐடி படிப்பை தொடங்க முடியாது. தலித்துகளுக்கு மட்டும், தயாரிப்பு வகுப்பு (Preparatory Course) என்று தனியாக ஒரு வகுப்பு ஒரு ஆண்டுக்கு நடத்தப் படுகிறது. இந்த வகுப்பில் ப்ளஸ் டூவில் அந்த மாணவன் படித்த அதே பாடங்கள் மீண்டும் எடுக்கப் படும். இதற்குப் பிறகு இதில் நடத்தப் படும் தேர்வில் அந்த தலித் மாணவன் தேர்ச்சி பெற வில்லை என்றால், அவன் வெளியேற்றப் படுவான்.
கடுமையாக தயாரிப்பு வேலைகளைச் செய்து, நுழைவுத் தேர்வு எழுதி வரும் தலித் மாணவனுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி ? ஐஐடி பாடங்களை அவனால் முடிந்தால் படிக்கிறான், முடியாவிட்டால் போகிறது.. தனியாக வகுப்பு என்று அவனது ஒரு கல்வி ஆண்டை வீணடிக்க இந்த ஐஐடி பார்ப்பனர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது ?
ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஆந்திராவைச் சேர்ந்த மலைவாழ் மாணவி சுஜி தேஜ்பால் என்பவர். இவர் ஆந்திர மாநிலத்தில் நடக்கும் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வில் மலைவாழ் பிரிவில் முதலிடம் பிடித்தார். இதற்காக ஆந்திர அரசு, இவருக்கு ஆண்டுதோறும் 17,500 ரூபாய் உதவித் தொகை வழங்கியது. இவர் இந்த உதவித் தொகையை பெற வேண்டுமென்றால், ஆந்திர மாநிலத்தில் ஒரு கல்லூரியில் சேர வேண்டும். இவர் ஆந்திர மாநிலத்தில் ப்ளஸ் டூ தேர்வில் பிசிக்ஸ் பிரிவில் நூற்றுக்கு நூறு எடுத்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
இவருக்கும் நேரடியாக ஐஐடியில் சேர அனுமதி தராமல், தகுதி வகுப்பில் ஓர் ஆண்டு படிக்க வைத்த பிறகு, தேர்வு வைத்தனர். அந்தத் தேர்வில் ப்ளஸ் டூவில் நூற்றுக்கு நூறு எடுத்த சுஜி தேஜ்பால் பிசிக்ஸ் பாடத்தில் பெயில் ஆனார் என்று அவருக்கு அனுமதியை மறுத்தது சென்னை ஐஐடி. அதற்கடுத்து நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகே ஐஐடி நிர்வாகம் அவருக்கு அனுமதி கொடுத்தது என்பது தெரியுமா ? இப்போது ஐஐடி சென்னையின் தலைவராக இருக்கும் ஆனந்த் என்ற பார்ப்பன சாதி வெறிப் பிடித்த மனிதர் அப்போது டீனாக இருந்தார். இந்த ஆனந்தை சுஜி சந்தித்த போது, உனது பிசிக்ஸ் பேப்பரை 11 பேராசிரியர்கள் மறு மதிப்பீடு செய்யப் போகிறார்கள். அதில் ஒருவர் வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் வந்தால் தான் மறு மதிப்பீடு. அது வரை காத்திருங்கள் என்று சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
ஐஐடி சென்னை உருவாகி 50 ஆண்டுகள் ஆகியும் தலித் மாணவர்களில் ஒன்றிரண்டு பேர் தான் பிஎச்டி எனப்படும் ஆய்வுப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
மாணவர்களின் கதி இப்படி என்றால் ஆசிரியர்களின் கதி இன்னும் மோசம். மொத்தம் உள்ள 498 பேராசிரியர்களில் வெறும் இரண்டே இரண்டு பேர் தான் தலித் பேராசிரியர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
திட்டமிட்டு இந்தியா முழுக்க அமலில் உள்ள, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதப் படுத்தியுள்ள இட ஒதுக்கீடு ஐஐடிக்களில் மட்டும் இல்லை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா ?
சமீபத்தில் மத்திய மனித வளத் துறை மேம்பாட்டு அமைச்சகம், வெளியிட்ட சுற்றறிக்கையின் படி, தலித்துகளுக்கும், பிற்பட்டவர்களுக்கும், பேராசிரியர்கள் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. இதன் படி, இட ஒதுக்கீடு கொடுத்தே ஆக வேண்டும்.
ஆனால், ஐஐடி சென்னையில் உதவிப் பேராசிரியர்கள் சேர்க்கைக்கான விளம்பரத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக என்ன வாசகம் பயன் படுத்தப் பட்டுள்ளது என்பது உங்களக்குத் தெரியுமா ?
Reservation: Without any compromise on qualification, experience and competence,
reservation as per Government of India rules is available. Necessary certificates pertaining to the current financial year 2010 – 2011 must be enclosed with the application form.
அதாவது, தகுதி, அனுபவம், திறமை இவற்றை சமரசம் செய்து கொள்ளாமல் இட ஒதுக்கீடு வழங்கப் படுமாம்.
சட்டப் படியும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் அரசுப் பணிக்கு விளம்பரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா ? மொத்தம் 10 இடங்கள் என்றால், அந்த 10 இடங்களில், தாழ்த்தப் பட்டவருக்கு எத்தனை, மலைவாழ் மக்களுக்கு எத்தனை, பிற்படுத்தப் பட்டவருக்கு எத்தனை, திறந்த வெளிப் போட்டி எத்தனை என்பதை தெளிவுப் படுத்த வேண்டும். இந்த விபரங்களை வெளியிடாத விளம்பரங்கள் செல்லாது என்று பல முறை ரத்து செய்யப் பட்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விளம்பரம் ஒன்றைப் பார்ப்போம்.
இதில் குறிப்பிட்டுள்ளவாறு தெளிவாகக் குறிப்பிட வேண்டும். குறிப்பிடாத விளம்பரங்கள் செல்லாது.
இது போல இட ஒதுக்கீடு கொடுக்காமல், தலித் மாணவர்களுக்கு தகுதி வகுப்பு நடத்துவது என்பதற்கெல்லாம் பார்ப்பனர்கள் சொல்லும் காரணம், ஐஐடியின் தகுதி உலக அளவில் குறைந்து போகும் என்பது. அதில் நாமும் உடன் படுகிறோம். ஐஐடியின் தரம் இட ஒதுக்கீடு கொடுப்பதால் உலகத் அளவில் குறையக் கூடும் தான். அவ்வாறு குறையாமல் இருப்பதற்கு, ஐஐடியில் இருக்கும் பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் அல்லவா ஐஐடியை நடத்த வேண்டும் ? தலித்துகளும், பிற்படுத்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் எதற்காக நடத்துகிறீர்கள் ? இஷ்டத்துக்கு நடத்தவதற்கு இது என்ன ஐஐடி சேர்மன் ஆனந்தின் அந்தப்புரமா ?
சென்னை ஐஐடி சேர்மேன் ஆனந்த்
மக்கள் வரிப்பணத்தில் எந்த அமைப்பு செயல்பட்டாலும், அரசியல் அமைப்புக்கு உட்பட்டு அல்லவா செயல்பட வேண்டும் ? தீட்டுப் படாத ஐஐடி வேண்டுமென்றால், ஆனந்த், சத்யநாராயணா போன்ற பார்ப்பனர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு கல்வி நிறுவனத்தை தொடங்கி, அரசிடமிருந்து பத்து பைசா வாங்காமல் நடத்தலாமே ? யார் தடுத்தார்கள் ?
அரசு நிலத்தில், அரசு பணத்தில், நடத்தப் படும் கல்வி நிலையத்தில் தலித்துக்கு இடம் இல்லையென்றால் அந்த கல்வி நிலையம் எதற்கு ?
இந்தப் பார்ப்பனர்களின் கூடாரமாக இருக்கும் ஐஐடி சென்னையை சீர்படுத்தவதன் முதல் படியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில், இட ஒதுக்கீடு விபரங்களை தெளிவு படுத்தாத உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான விளம்பரத்தை தடை செய்யக் கோரி பொது நல வழக்கு தாக்கல் செய்யப் பட்டு நாளை விசாரணைக்கு வருகிறது. மூத்த வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியுமான ராதாகிருஷ்ணன் நாளை வாதாடுகிறார்.
இந்த சென்னை ஐஐடியை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை. பார்த்து விடுவோம், எத்தனை நாளைக்கு இதை சங்கர மடமாகவே வைத்திருப்பீர்கள் என்று ?
இப்போது சொல்லுங்கள் தோழர்களே….!!!! அவர்கள் தீண்டத்தகாதவர்கள் தானே ?