திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட பொக்கிஷங்கள் அனைத்தும் திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமானது என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நீண்ட காலமாக பத்மநாப சுவாமி கோயிலின் பாதுகாவலர்களாக திருவாங்கூர் மன்னர் குடும்பம் தான் இருந்து வந்துள்ளது. அந்த கோயிலுக்காகவே அவர்களது ஆட்சி அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்துள்ளது. தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அனைத்து நகைகளும் ஆபரணங்களும் கோயிலுக்கு திருவாங்கூர் மன்னர்களால் அளிக்கப்பட்டது தான். எனவே, அவை அனைத்தும் மன்னர் குடும்பத்தினருக்கே சொந்தமானது. எனினும், அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் கோயிலிலேயே வைக்கப்பட வேண்டும்.” என்று ஜயேந்திரர் கூறினார்.
பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி திறக்கப்பட்டது. இதில், இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் காசுகள், நகைகள், வைரங்கள் உள்ளிட்ட ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் ஒரு அறை திறக்கப்பட உள்ளது. அதன் கதவு மற்றதை விட மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், அதில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் பெருமளவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு சொந்தமான அறக்கட்டளை மூலம் பத்மநாப சுவாமி கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
savukku could you pl send your FD link