பிஜேபி அரசின் தேர்தல் பத்திர மோசடி எப்படி தொடங்கப்பட்டது என்பதை முதல் பாகத்தில் பார்த்தோம். இரண்டாம் பாகத்தில், இந்த மோசடி திட்டத்தை மறைக்க மோடி அரசு எத்தகைய பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட்டது என்பதை பார்ப்போம்.
பத்திரிக்கையாளர் நிதின் சேத்தி எழுதிய, ஹப்பிங்டன் போஸ்ட் கட்டுரையின் இரண்டாம் பாகத்தின் தமிழ் வடிவம்.
பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதியை நன்கொடையாக பெற வேண்டும் என்ற அவசரத்தில், நரேந்திர மோடி அரசு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பை உதாசீனப்படுத்தியது, இந்திய பாராளுமன்றத்தில் பொய் கூறியது. விஷயம் வெளியே வந்ததும், அதை மூடி மறைக்க அனைத்து வேலைகளையும் செய்தது.
இந்தியாவின் உயர்ந்த அமைப்பான பாராளுமன்றத்தில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொய் கூறி மாட்டிக் கொண்டபோது, மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள், ஆறு விதமான விளக்கங்களை கூறி அவரை காப்பாற்ற முயன்றனர் என்பதை ஆவணங்கள் உணர்த்துகின்றன. . மத்திய அரசின் ஒரு ரகசியமான அறிக்கை, மூத்த அதிகாரிகள், தேர்தல் ஆணையத்தை வேண்டுமென்றே திசை திருப்பி, அவ்வாணையத்தின் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான எதிர்ப்பை மழுங்கச் செய்தனர்.
தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்பு மட்டும் நிராகரிக்கப்படவில்லை. இந்த அரசு, ஒப்புக்காக எதிர்க்கட்சிகளிடம் தேர்தல் பத்திரங்கள் குறித்து கருத்து கேட்டது. கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்கு முன்னதாகவே, நிதி அமைச்சகம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுத்து முடித்திருந்தது.
ஹப்பிங்டன் போஸ்ட் பரிசீலனை செய்த ஆவணங்களின்படி, மோடி அரசு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக தொடர்ந்து பொய்யுரைத்துள்ளது என்பதும் தெரிய வருகிறது. 2017ம் ஆண்டில்தான் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி, கார்ப்பரேட் நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், அறக்கட்டளைகள் , தனி நபர்கள், ஆகியவை, அளவில்லாத நிதியினை அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் தேர்தல் பத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறை மூலமாக பெறப்பட்ட நிதியில் 95 சதவிகிதம், ஆளும் பிஜேபிக்கே சென்றது என்பதை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு வெளியிட்டது.
உச்சநீதிமன்றம், தற்போது, இந்த தேர்தல் பத்திரங்களின் சட்டபூர்வமான அங்கீகாரம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்து வருகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக இந்த தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை பெற்ற, ஓய்வு பெற்ற கப்பல் கேப்டன் லோகேஷ் பத்ரா, இந்த விவகாரத்தில் அரசு சொல்வது எதையுமே நம்ப முடியாது என்கிறார். அது பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டாலும் கூட.
2018 பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில் மாநிலங்களவை உறுப்பினர் முகம்மது நடிமுல் ஹக் ஒரு கேள்வி ஒன்றை எழுப்பினார். “தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு எழுப்பியதா” என்ற எளிமையான கேள்விதான் எழுப்பட்டது. அப்போதைய நிதித் துறையின் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை” என்று பதிலளித்தார்.
இது பொய்யான தகவல். ராணுவ அதிகாரி லோகேஷ் பத்ரா பெற்ற ஆவணங்களின்படி, பொய்யான தகவலை பாராளுமன்றத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்தது தெரிய வந்தது. எம்.பி முகம்மது நடிமுல் ஹக், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது, மக்களவையில் உரிமை மீறல் புகார் அளித்தபோது, ஊடகங்கள் இதை பெரிய செய்தியாக்கின.
ஹப்பிங்டன் போஸ்ட் வசம் உள்ள ஆவணங்கள், அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவையில் தெரிவித்த பொய்யான தகவலை மறைக்க எத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை உணர்த்துகிறது. உரிமை மீறல் பிரச்சினைக்கு அளித்த பதிலில் கூட அரசு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. இந்த கடிதப் போக்குவரத்துக்களில் இருந்து தெரிய வரும் ஒரே விஷயம் இதுதான். தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்களுக்கு தெரிவித்த எதிர்ப்பை நிராகரிக்க அல்லது மழுங்கடிக்க ஏன் அரசு இவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதே.
இந்த கட்டுரைக்காக மத்திய நிதி அமைச்சகத்திடம், ஹப்பிங்டன் போஸ்ட் அனுப்பிய நீண்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தயாரிப்பதில் பிசியாக இருப்பதாக பதில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து முடிவுகளும் நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டன என்பது மட்டுமே பதிலாக வந்தது. நிதி அமைச்சகம் அனுப்பியிருந்த பதிலில், கீழ்கண்டவாறு கூறப்பட்டிருந்தது.
“நீங்கள் மின்னஞ்சலில் சில விவகாரங்களை எழுப்பியிருந்தீர்கள். அவை யாவும் அப்போதைய துறைசார் அதிகாரிகள் மேற்கொண்ட கொள்கை முடிவே ஆகும். இதனடிப்பையில் பார்க்கிறபோது அரசு அமைப்புகளைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளுமே நன்னம்பிக்கை மற்றும் மக்களின் நலனுக்காகவுமே எடுக்கப்படுகின்றன. இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளும் விதங்களில் ஒவ்வொருவரின் கோணங்கள் மாறுபடக்கூடும். அதனால் கொள்கை முடிவுகளில் உள்ள அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டே பொருத்தமான விளக்கத்தை அளிக்க முடியும்.
மத்திய பட்ஜெட் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பட்ஜெட் துறையினருக்கு பிரிவுக்கு இது முக்கியமான சமயம். அதனால் இந்த விவகாரம் குறித்து அவர்களால் உடனடியான பதிலைத் தர இயலாது. இதற்கான தகுந்த சமயத்தில் நாங்கள் எங்களது தரப்பு பதிலைத் தருவோம்”
மறைக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்புகள்.
மே 2017ல், தேர்தல் ஆணையம், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அக்கடிதத்தில், தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகள் தங்களுக்கு சட்டவிரோதமாக, வெளி நாடுகளில் இருந்து வரும் நிதியினை மறைக்கவே இந்த திட்டம் உதவும் என்று தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில், வெறும் லெட்டர் பேட் நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் கருப்புப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு நிதியாக வழங்க இது வகை செய்யும் என்றும் தெரிவித்திருந்தது.
இவ்வாறு நிதி வழங்குவதை மறைக்கவும், வெளிப்படைத் தன்மையை நீக்கவும் வழி வகுக்கும் இந்த திட்டம் தொடர்பான சட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
3 ஜூலை 2017ல், மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை, பொருளாதார விவகாரங்கள் துறைக்கு அனுப்பியது. ஆனால் நிதித் துறையோ, இப்படி ஒரு கடிதமே வராதது போல நடந்து கொண்டது.
தேர்தல் ஆணையத்தின் அடிப்படை சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும், தேர்தல் ஆணைய அதிகாரிகளோடு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார் நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி. அந்த கூட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் உறுதியான எதிர்ப்புக்கு விளக்கமளிக்காமல், அரசு, இந்த திட்டத்தை, ரகசியமான முறையில் வேகமாக செயல்படுத்தியது.
அருண் ஜெய்ட்லி அழைத்த இந்த கூட்டம், 19, ஜூலை 2017ல் நடைபெற்றது. தேர்தல் ஆணையம் சார்பாக இரண்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொருளாதார விவகாரத் துறை செயலர் எஸ்.சி.கார்க், அவர் பைலில் எழுதிய குறிப்ப்பில், “தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம், இந்த திட்டம் சிறப்பான திட்டம் என்றும், அரசியல் கட்சிகளுக்கு நிதி கொடுப்பதில் வெளிப்படைத் தன்மையை இத்திட்டம் உறுதி செய்யும்” என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையின் ஆவணங்களை பரிசீலிக்கையில், தேர்தல் ஆணையம், இந்த வலியுறுத்தல்களை ஏற்கவில்லை என்பது புலப்படுகிறது.
22 செப்டம்பர் 2017ல் அவர் நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் , செயலர் கார்க், 28, ஜூலை 2017ல், அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் அச்சல் குமார் மற்றும், தேர்தல் ஆணையர்கள் ஓம் பிரகாஷ் ராவத் மற்றும் சுனில் அரோராவோடு மற்றொரு கூட்டத்தை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில், கார்க், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும்போது, அவர்களின் கணக்குப் புத்தகங்களில் நிதி அளித்த விபரங்களை எழுதுவார்கள் என்றும், இதனால் அந்த நிதி ஆதாரம் மற்றும் வழங்கப்பட்ட நிதி ஆகியவற்றின் விபரங்கள் இருக்கும் என்றும், இதனால் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும் குறிப்ப்பிடுகிறார்.
இதுவும் ஒரு முழு பொய். கார்ப்பரேட் நிறுவனங்கள், எந்த கட்சிக்கு அவர்கள் நிதி வழங்கினார்கள், எவ்வளவு வழங்கினார்கள் என்பதை அவர்களின் வரவு செலவு கணக்கில் குறிப்பிட வேண்டியதில்லை. ஒட்டுமொத்த வரவும் செலவும்தான் நிறுவனங்களால் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படுகின்றன. தனித்தனியான செலவு விபரங்கள் சமர்ப்பிக்கபடுவதில்லை.
அரசியல் கட்சிகளுக்கு நிதியளித்த விபரங்களை ரகசியமாக வைத்திருப்பதால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயக்கமில்லாமல் நிதி அளிக்க முடியும் என்பதையும், இது அரசியல் கட்சிகளுக்கும் நன்மை பயக்கும் என்பதை தேர்தல் ஆணையர்களுக்கு விளக்கியதாகவும், கார்க் தனது ரகசிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இது உதவும் என்றும், வெளிநாடுகளில் லெட்டர் பேட் கம்பெனிகள் உருவாகும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இத்திட்டத்தில் மேலும் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியிருந்தது.
ஆனாலும், தனது ரகசிய கடிதத்தில், கார்க், “தேர்தல் ஆணையம், தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதையும், அரசியல் கட்சிகளுக்கு நிதி ஒதுக்குவதற்கு இது ஒரு நல்ல வழி என்பதையும் ஒப்புக் கொண்டதாக எழுதுகிறார்.
இதுவும் ஒரு முழுப் பொய்.
கடைசியாக அக்டோபர் 2018ல் கூட, தேர்தல் பத்திர திட்டத்தில் சர்ச்சைக்குறிய அம்சங்களை நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளதை சட்டத் துறை அமைச்சக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் ஆணையத்தின் எதிர்ப்புகளுக்கு விளக்கம் அளிக்காமல் பல்வேறு நினைவூட்டுகளுக்கு பிறகும், நிதி அமைச்சகம் பதில் அளிக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான கடிதப் போக்குவரத்துகளும், தேர்தல் ஆணையம் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு இடையேயான கூட்டங்களும், தேர்தல் ஆணையம், இந்த திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததை வெளிப்படுத்துகின்றன. இப்படி இருக்கையில், அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாராளுமன்றத்தில், 2018 குளிர்காலத் தொடரில் “தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை” என்று எப்படி துணிச்சலாக கூறினார் என்பதுதான் புரியவில்லை.
லோகேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேர்தல் ஆணையம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷயத்தை ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டதை அடுத்து, பாராளுமன்ற உறுப்பினர், ஹக் பொன்.ராதாகிருஷ்ணன் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார். அது மாநிலங்களவை செயலரால், நிதி அமைச்சகத்துக்கு 28 டிசம்பர் 2018 அன்று அனுப்பப்பட்டது. பச்சையாக ஒரு பொய்யை கூறி, பொன்.ராதாகிருஷ்ணன் மாட்டிக் கொண்டார். நிதி அமைச்சகமோ இதற்கு பதில் கூற முனைந்து மேலும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. உண்மையை மறைக்க நிதி அமைச்சகம் மேலும் பல பொய்களை கூறியது.
நிதி அமைச்சகத்தில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கோப்பினை கையாண்டு வரும் துணை இயக்குநர் விஜயக்குமார், 1 ஜனவரி 2019 அன்று, பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் கார்க், தேர்தல் ஆணையர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையர்கள் பங்கு பத்திர திட்டத்தில் உள்ள சிக்கல்களை முறையாக எடுத்துரைக்கவில்லை. அதனால் நிதித் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொய் கூறவில்லை என்றார்.
பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் கார்க், வழக்கமாக அரசு அதிகாரிகள் கூறும் மழுப்பலான காரணங்களை தெரிவித்தார்.
அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவையில் தவறான தகவலைத்தான் தெரிவித்ததாக அவர் முதலில் ஒப்புக் கொண்டார். 2 ஜனவரி 2019ல், தனது கருத்தினை பதிவு செய்தார். “பாராளுமன்றத்தில் பதில் கூறுகையில் ஒரு வடிவம் இருக்கிறது. அரசு தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபங்களை பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நிதி அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் ஆட்சேபங்களை பெறவில்லை என்பதே சரியான பதிலாக இருந்திருக்கும்” என்று அவர் பதிவு செய்கிறார்.
அடுத்ததாக இரண்டு மாற்று யோசனைகளை முன் வைக்கிறார். “அமைச்சரிடம், பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில், “அரசு” என்று குறிப்பிடுவது நிதி அமைச்சகத்தையே என்று விளக்கம் தரலாம். நிதி அமைச்சரோடு விவாதிக்கலாம்” என்று எழுதுகிறார்.
கார்க், கூறியதில் இருந்து உத்வேகம் பெற்ற, நிதித் துறையின் இணைச் செயலாளர் ஒருவர் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் பொய் கூறவில்லை என்பதற்கு புதிய விளக்கத்தை அளித்தார். இதுவும், அரசின் சிகப்பு நாடா கலாச்சாரத்தைப் போலவே குழுப்பமானது. “தேர்தல் ஆணையம் மற்றும், நிதி அமைச்சகத்துக்கும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக கடிதப் போக்குவரத்து இல்லை. ஊடகங்களில் 26 மே 2017 நாளிட்ட தேர்தல் ஆணையத்தின் கடிதம் குற்த்து செய்தி வந்திருத்தது. இந்த கடிதம் நிதி அமைச்சகத்திடம் வரவில்லை. அதனால், அந்த கடிதத்தை படித்து பார்த்து கருத்து கூறும் வாய்ப்பு நிதி அமைச்சகத்துக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.
இதுவும் மற்றொரு பொய். தேர்தல் ஆணையத்தின் கடிதம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பொய் மீது பொய்யாக கூறி வரும் நிதி அமைச்சகத்தின் தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரத்தை கையாளும் பிரிவுக்கே வந்துள்ளது. மேலும், ஹப்பிங்டன் போஸ்டால்தான், பொருளாதார விவகாரங்கள் துறை செயலர், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவாதித்திருக்கிறார் என்ற தகவலும் வந்தது.
ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த பொய் குறித்து அவையில் கேள்வி எழுப்பினால், அடாவடியாக இந்த பிரச்சினையை மூட வேண்டும் என்று கார்க் முடிவு செய்தார். இறுதியாக இதைத்தான் நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லியும் செய்தார்.
இறுதியாக, எம்.பி ஹக் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினைக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் 12 ஜனவரி 2019 அன்று இவ்வாறு பதிலளித்தார். “நிதி அமைச்சகத்தில், தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பிய எந்த கடிதமும் வரவில்லை. அதனால் இது குறித்து பதில் கூறுகையில், அரசு என்றால் நிதி அமைச்சகம்தான் குறிப்பிடப்பட்டது. அதனால் பாராளுமன்றத்தில் பொய் கூற வேண்டும் என்ற எண்ணத்தில் கூறவில்லை. தேர்தல் பத்திரம் திட்டமானது, வெளிப்படைத்தன்மை கொண்டது. அது அதற்கான நோக்கத்தை நிறைவேற்றும்”.
தகவல் உரிமை சட்ட செயற்பாட்டாளர் பத்ரா இந்த பொய்யையும் அம்பலப்படுத்தினார். மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் மூலமாக, மத்திய நிதித் துறையும், தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை 3 ஜூலை 2017 அன்று பெற்றுள்ளது என்பதை அம்பலப்படுத்தினார். தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவகாரத்தை கையாளும் அனைத்து துறைகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் கடிதம் அனுப்பப்பட்டது.
இதில் ஒரு துறை, பொருளாதார விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், நிதித் துறை சீர்திருத்தம் மற்றும் சட்டத் துறை. இந்த துறை, ஏறக்குறைய தேர்தல் ஆணையத்தின் பல கருத்துக்களை ஏற்றுக் கொண்டது. ஆனால், நிதி அமைச்சகம், தேர்தல் ஆணையத்தின் எந்த புகாருக்கும் பதில் அளிக்கவில்லை. ஏனெனில், பதில் அனுப்பினால், தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டிய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்.
தேர்தல் ஆணையர்கள், இந்த தேர்தல் பத்திர திட்டத்தை, தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறார்கள். நேரிலும் கடிதம் மூலமாகவும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வந்திருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையத்தின் இத்தகைய எதிர்ப்பு, மார்ச் 2019ல், உச்சநீதிமன்றத்தில், தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையம் தாக்கல் செய்த மனு மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. ஆனால் இப்போது, இது வரை வாங்கப்பட்டுள்ள தேர்தல் பத்திரங்களின் மதிப்பு 1400 கோடியை தாண்டி விட்டது.
ஆகஸ்ட் 2019ல், இப்போதைய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், எம்.பி ஹக் எழுப்பிய கேள்விக்கு திருத்தப்பட்ட பதிலை சமர்ப்பித்தார். தேர்தல் பத்திரங்களுக்கு தேர்தல் ஆணையம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது என்பதை பதிவு செய்தார். மழுப்ப முயற்சிக்கவில்லை.
அதே நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் சந்தேகங்களை போக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற ஹக்கின் கேள்விக்கு வசதியாக பதில் அளிக்காமல் தவிர்த்து விட்டார். இந்த கேள்விக்கு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விளக்கும் ஒரு குறிப்பை காப்பி பேஸ்ட் செய்து சமர்ப்பித்து விட்டார். இந்த கேள்விக்கு இரண்டு ஆண்டுகளாக பதில் அளிக்காமல் அரசு தவிர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் தந்திரமான ஏமாற்று வேலைகள்.
தேர்தல் ஆணையத்தையும், ரிசர்வ் வங்கியையும் மட்டும் அரசு ஏமாற்றவில்லை. அரசியல் கட்சிகளோடும் கலந்தாலோசிப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே, தேர்தல் பத்திர வேலைகளை நிறைவெற்றி முடித்தது என்பதை ஆவணங்கள் உணர்த்துகின்றன.
2 மே 2017 அன்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி, இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் குறித்து கடிதம் எழுதினார்.
பல கட்சிகள் பதில் எழுதின. காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்த மோத்திலால் வோரா விரிவான கடிதத்தை எழுதினார்.
“அரசு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று விரும்புகிறது. வெளிப்படைத்தன்மை என்றால் 1) நன்கொடை வழங்குபவர் யார் 2) நன்கொடை பெறும் அரசியல் கட்சி எது, 3) எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கப்பட்டது என்ற விபரங்கள் தெரிய வேண்டும். மத்திய அமைச்சரின் உரையின்படி, நன்கொடை அளிப்பவரின் விபரம் வங்கிக்கு மட்டுமே தெரியும். நன்கொடை பெறும் அரசியல் கட்சியின் விபரம் வருமான வரித் துறைக்கு மட்டுமே தெரியும். மொத்தத்தில், இந்த நன்கொடை விபரங்கள் அரசுக்கு மட்டுமே தெரியும்.
அரசின் நோக்கங்கள் முழுமையாக தெரிந்த பிறகே இத்திட்டம் குறித்து கருத்து கூற முடியும்” என்று தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி, அரசின் திட்டம் குறித்த வரைவு அறிக்கை கொடுக்கப்பட்டால் இத்திட்டத்தை ஆராய உதவும் என்று எழுதினார். சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, “இந்த திட்டத்தை நம்புவதற்கில்லை. இந்த திட்டம் வெளிப்படைத் தன்மையை கொண்டு வராது. இந்த திட்டம் தொடர்பாக முன்தேதியிட்டு கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்கள், கார்ப்பரேட்டுகளும், அரசியல் கட்சிகளும் உண்மையை மறைக்கவே உதவும்” என்றார். மேலும் அவர் “இந்த ரகசியமான தேர்தல் பத்திரங்களையும், இது தொடர்பான சட்ட திருத்தங்களையும் எதிர்க்கிறோம். உடனடியாக இந்த திட்டம் ரத்து செய்ய வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தருவதற்கான உச்சவரம்பை உருவாக்க வேண்டும்” என்றார்.
பிஜேபியின் கூட்டணி கட்சியான சிரோமனை அகாலி தள் கட்சி, பிஜேபியின் இந்த நடவடிக்கையை, வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதில் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று குறிப்பிட்டது. அதே கட்சியின் செயலாளர் டல்ஜித் சிங்க் சீமா இது குற்த்து பேசுகையில், “லாபம் ஈட்டக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அரசியல் கட்சிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும்” என்று கூறினார். ஆனால் பிஜேபி, இதற்கு நேர் எதிரான வேலையை செய்தது. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், அதன் ஆண்டு லாபத்தில் 7.5 சதவிகிதத்துக்கு மிகாமல் நன்கொடை வழங்கலாம் என்ற விதியை தளர்த்தியது.
அரசியல் கட்சிகள் இந்த தேர்தல் பத்திரங்கள் குறித்து ஆட்சேபம் தெரிவித்ததால், நிதி அமைச்சக அதிகாரிகள், தங்களின் அரசியல் தலைவர்களின் மனங்களை குளிர்விக்க அவசர அவசரமாக ஒரு திட்டத்தை தயாரித்து வெளியிட்டனர். தயாரித்து முடித்த பிறகு, அத்திட்டத்தின் விபரங்களை அரசியல் கட்சிகளோடு பகிர்ந்து கொள்ளலாமா என்று கேட்டனர். அருண் ஜெய்ட்லி அதற்கு அமைதியாக மட்டுமே இருந்தார். அதனால் இந்த திட்டத்தின் விபரங்கள் இதர அரசியல் கட்சிகளோடு பகிரப்படவில்லை.
அரசியல் கட்சிகளுடனான் இது குறித்த விவாதம், ஒரு சம்பிரதாயமாகவே நடத்தப்பட்டது. ஏனெனில், அனைத்து கட்சிகளையும் கலந்தாலோசித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது என்பதற்காகவே இது. இதே போலத்தான், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணையத்தோடு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும், ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
கட்டுரையின் ஆங்கில வடிவத்தின் இணைப்பு