தேர்தல் பத்திர மோசடியில் நிதி அமைச்சகம் எப்படி அனைத்து விதிகளையும் வளைத்தது என்றும், ரிசர்வ் வங்கி மற்றும் தேர்தல் ஆணைய ஆட்சேபணைகள் எப்படி மீறப்பட்டன என்றும் இதற்கு முந்தைய இரண்டு பகுதிகளில் பார்த்தோம்.
மூன்றாம் பகுதியில், தேர்தல் பத்திரம் தொடர்பான விதி மீறலில் எப்படி மோடியே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பார்ப்போம். ஹப்பிங்டன் போஸ்ட் தொடர் புலனாய்வு கட்டுரையின் மூன்றாம் பாகம் தமிழில்.
2 ஜனவரி 2018 அன்று, நரேந்திர மோடி அரசு, சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விதிகளை வெளியிட்டது.
இந்த விதிகள் வெளியிட்ட சில நாட்களுக்குள்ளாகவே, இந்த விதிகளை மீறுவதற்கு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டது. முதலில் இது ஒரு விதிவிலக்கு என்று கூறப்பட்டது. பின்னர் அதுவே வாடிக்கையாக பின்பற்றப்பட்டது.
ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தையும், உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தையும், சட்டபூர்வமாக, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க வகை செய்தது. இதில் பெருமளவு பயனடைந்தது, பிஜேபியே என்பதையும், 95 சதவிகித நன்கொடையை பிஜேபியே பெற்றுள்ளது என்பதையும் பார்த்தோம்.
2017 நிதி நிலை அறிக்கையின்போது, அருண் ஜெய்ட்லியால், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேர்தல் பத்திர திட்டம், நன்கொடை கொடுப்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதில்லை என்ற உத்தரவாதத்தை அளித்தது. நன்கொடை அளிப்பவர்களுக்கு எப்படி நிதி வந்தது என்ற விபரத்தையும், தெரிவிக்க வேண்டியதில்லை. மேலும், நன்கொடை அளிப்பதற்கான உச்சவரம்பும் நீக்கப்பட்டது. இதனால், நன்கொடை அளிப்பவர்கள், எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் வழங்க முடியும்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஜனவரி 2018ல் தொடங்கி, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, மற்றும் அக்டோபரில் ஒவ்வொரு ஆண்டும், 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை விற்றுக் கொள்ளலாம் என்றும் விதிகள் திருத்தப்பட்டன. இந்த விதி, மக்களவை தேர்தல் அல்லாத ஆண்டுகளில் கூட கூடுதலாக 30 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய வழி வகுத்தது.
தற்போது, தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் லோகேஷ் பத்ரா பெற்ற ஆவணங்கள், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சகத்துக்கு, பொதுத் தேர்தல் அல்லாத ஆண்டுகளில், சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை, மாநில தேர்தல் நடக்கும் சமயங்களில் வெளியிட உத்தரவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கர்நாடகா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிஸோராம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு மோடியின் முதல் ஆட்சிக் காலம் முடியும் முன்னர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்கள் 2019 பொதுத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. இந்த தேர்தலில், பிஜேபி எதிர்க்கட்சிகள் அத்தனையையும் வீழ்த்தி ஆட்சியை பிடித்தது.
மார்ச் 2018ல், தேர்தல் பத்திரங்கள் மூலமாக வரப்பெற்ற நன்கொடையில் 95 சதவிகிதத்தை பிஜேபியே பெற்றுள்ளது என்பதை அந்த கட்சியின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது. 2018-2019 நிதியாண்டில், பிஜேபிக்கு எவ்வளவு நன்கொடை வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இது வரை வெளியிடப்படவில்லை.
தேர்தல் அல்லாத நேரங்களில் தேர்தல் பத்திரங்களை வெளியிட பிரதமர் அலுவலகம் அனுமதி அளித்ததன் மூலம், கருப்புப் பண பரிவர்த்தனையை தடுப்பதற்காக குறுகிய காலத்துக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கமே சிதைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ரிசர்வ் வங்கி தனது பரிந்துரையில் வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே தேர்தல் பத்திரங்களை வெளியிட வேண்டும் என்று பரிந்துரை செய்தது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.
பிரதமர் அலுவலக குறிப்பு.
முதல் வாய்ப்பு கிடைத்ததுமே, அரசு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விதிகளை முறித்தது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் பத்திரங்களை ஏப்ரல் 2018ல் விற்பனை செய்திருக்க வேண்டும். ஆனால், மார்ச் 2018லேயே பத்திர விற்பனை தொடங்கியது. மார்ச் மாதத்தில் 222 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 95 சதவிகிதம் பிஜேபிக்கே போனது.
ஏப்ரல் 2018ல், ஏற்கனவே உள்ள விதிகளின்படி பத்திர விற்பனையை தொடங்கியது. இந்த மாதத்தில் 114.90 கோடிக்கான பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் அரசு இதில் திருப்தி அடையவில்லை. மே 2018ல் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வருவதால், பத்திர விற்பனை நாட்களை மேலும் 10 நாட்களுக்கு அதிகரிக்க வேண்டும் என்று கூறியது.
ஆனால் கவனமாக, பிரதமர் அலுவலகம் கர்நாடக தேர்தல் பற்றி அதன் குறிப்பில் எதுவும் எழுதவில்லை. ஆனால் நிதி அமைச்சகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி, இந்த முரண்பாட்டை கண்டுபிடித்து சுட்டிக்காட்டினார். அந்த அதிகாரி, கூடுதலாக 10 நாட்கள் தேர்தல் பத்திர விற்பனை செய்ய பிரதமர் அலுவலகம் அவகாசம் கேட்பது, கர்நாடக தேர்தலை மனதில் வைத்தா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.
தற்போது உள்ள விதிகளில், சட்டப்பேரவை தேர்தலுக்காக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய விதிகளில் இடமில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அவர் தனது குறிப்பில்,
“தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அறிவிக்கையில், பத்தி 8 (2)ல், மக்களவை தேர்தல் குறித்துதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில தேர்தல்களை பற்றி அதில் குறிப்பிடவில்லை என்று, தேர்தல் பத்திரம் தொடர்பான விவகாரங்களை நிதி அமைச்சகத்தில் கவனித்து வரும், துணை இயக்குநர் விஜயக்குமார் 3 ஏப்ரல் 2018 நாளிட்ட தனது குறிப்பில் எழுதுகிறார். மேலும், தேர்தல் பத்திரங்கள் வழங்க அவகாசத்தை நீட்டிப்பது, சட்டப்பேரவை தேர்தலுக்காக என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் எழுதினார்.

கூடுதல் நாட்களில் தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கான புதிய அறிவிக்கைக்கு மறுப்பு தெரிவித்த பொருளுதார விவகாரங்கள் செயலர் கார்கின் குறிப்பு.
இந்த முரண்பாடு, பிரதமர் அலுவலகத்தின் கோரிக்கையில் இல்லை. விதிகளில்தான் முரண்பாடு உள்ளது. இந்த சட்டம் உருவாக்கும் சமயத்தில், தேர்தலுக்காக என்று குறிப்பிட்டிருந்தது, சட்டப்பேரவை, மக்களவை ஆகிய இரண்டு தேர்தல்களுக்காகவும்தான். மக்களவை தேர்தலுக்காக என்று புரிந்து கொள்ள முடியாது என்றும், விதிகளில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் எழுதினார்.
பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் எஸ்.சி.கார்க், இந்த யோசனையை நிராகரித்தார். அவர் தனது 4 ஏப்ரல் 2018 நாளிட்ட குறிப்பில், “தேர்தல் பத்திரங்கள் வெளியீடு என்பது மக்களவை தேர்தலுக்காக மட்டுமே. சட்டப்பேரவை தேர்தலுக்கும் சேர்த்து என்றால், ஒவ்வொரு ஆண்டும் ஏதாவதொரு மாநில தேர்தல் இருக்கத்தான் செய்யும். அதனால் அதை அப்படி பொருள் கொள்ள முடியாது. சட்ட திருத்தம் அவசியம் இல்லை” என்று எழுதினார்.
ஒரு வாரம் கழித்து, நிதி அமைச்சக துணை இயக்குநர் குமார் 11 ஏப்ரல் 2018 அன்று மேலும் விளக்கம் கேட்டு ஒரு குறிப்பை தன் உயர் அதிகாரிகளுக்கு எழுதுகிறார்.
“பிரதமர் அலுவலகம், தேர்தல் பத்திரங்கள் வெளியிட கூடுதலாக 10 நாட்கள் அவகாசம் கேட்டது. 2 ஜனவரி 2018 நாளிட்ட தேர்தல் பத்திரம் தொடர்பான அறிவிக்கையின் பத்தி 8 (2)ன்படி, மக்களவைக்கான தேர்தல் நடக்கும் ஆண்டுகளில், 30 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கலாம் என்று உள்ளது. தற்போது உள்ள சூழலில் மக்களவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. அதனால், அறிவிக்கையில் உள்ள வாசங்கள் பொருத்தமானதாக இல்லை” என்று ஒரு குறிப்பை எழுதுகிறார்.
அரசு அதிகாரிகள், முதல் முறையாக, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உத்தரவு வந்துள்ளது என்பதை எழுத்துபூர்வமாக பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசு அலுவலக நடைமுறைகளின்படி, பிரதமரிடமிருந்தே நேரடியாக உத்தரவு வந்திருந்தாலும், அதை பிரதமர் அலுவலக உத்தரவு என்றே பதிவு செய்வது வழக்கம்.
இது வரை தேர்தல் பத்திரங்களுக்கான விற்பனை நாளை நீட்டிக்க வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொருளாதார விவகாரத்துறை செயலர், எஸ்.சி.கார்க், பிரதமர் அலுவலகம் என்ற பெயரை கேட்டதும், உடனடியாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.
நிதியமைச்சருக்கு 11 ஏப்ரல் அன்று எழுதிய கடிதத்தில், “தேர்தல் நடக்காத ஆண்டுகளில் வருடத்துக்கு நான்கு முறை மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வெளியிட வேண்டும் என்று தற்போது விதி உள்ளது. தேர்தல் பத்திரங்கள் உத்திரவாத பத்திரங்கள் (Bearer Bonds) என்பதால், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதை கரன்சியைப் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால்தான் இந்த கட்டுப்பாடு. (இது ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டிய ஆபத்து).”
இருப்பினும், நான்கு மாதங்களுக்கு முன்பு இவர்களே உருவாக்கிய விதியை மீறுவதற்கு கார்க் நிதியமைச்சருக்கு பரிந்துரைத்தார்.
“இப்போதுள்ள தேவையை கருத்தில்கொண்டு, 1 மே முதல் 10 மே 2018 வரை, புதிய தேர்தல் பத்திரங்கள் வாங்க விதிவிலக்கு வழங்கலாம்” என்று கார்க் பரிந்துரைத்தார்.
“எந்த தேவையின்” அடிப்படையில் இதை பரிந்துரைத்தார் என்பதை கார்க் குறிப்பிடவில்லை. ஆனால் நிதி அமைச்சகத்தின் கோப்புகளில், பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரையின் பேரில், கர்நாடக தேர்தலை மனதில் வைத்தே இந்த விதிவிலக்கு வழங்கப்பட்டது என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது.
2018 இறுதியில், பல சட்டப்பேரவை தேர்தல்கள் வந்தன. இதன் காரணமாக, விதிகளை மீறுவதை, பிஜேபி ஒரு வழக்கமாகவே மாற்றியது.
இது தொடர்பாக ஹப்பிங்டன் போஸ்ட் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு, நிதி அமைச்சகம் கீழ்கண்டவாறு பதில் அனுப்பியிருந்தது.
“நீங்கள் மின்னஞ்சலில் சில் விவகாரங்களை எழுப்பியிருந்தீர்கள். அவை யாவும் அப்போதைய துறைசார் அதிகாரிகள் மேற்கொண்ட கொள்கை முடிவே ஆகும். இதனடிப்பையில் பார்க்கிறபோது அரசு அமைப்புகளைப் பொறுத்தவரை அனைத்து முடிவுகளுமே நல்லெண்ணம் மற்றும் மக்களின் நலனுக்காகவுமே எடுக்கப்படுகின்றன. இந்த முடிவுகளை எடுத்துக்கொள்ளும் விதங்களில் ஒவ்வொருவரின் கோணங்கள் மாறுபடக்கூடும். அதனால் கொள்கை முடிவுகளில் உள்ள அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டே பொருத்தமான விளக்கத்தை அளிக்க முடியும்.
மத்திய பட்ஜெட் தயாராகிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பட்ஜெட் துறையினருக்கு பிரிவுக்கு இது முக்கியமான சமயம். அதனால் இந்த விவகாரம் குறித்து அவர்களால் உடனடியான பதிலைத் தர இயலாது. இதற்கான தகுந்த சமயத்தில் நாங்கள் எங்களது தரப்பு பதிலைத் தருவோம்” என்று விளக்கம் அளித்தது.
பிரதமர் அலுவலகம் ஹப்பிங்டன் போஸ்ட் கேள்விகளுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
மாநில தேர்தல்களுக்காக மீண்டும் விதி மீறல்.
நவம்பர் மற்றும் டிசம்பர் 2018ல், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிஸோராம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடந்தது. அதே நிதியமைச்சக துணை இயக்குநர் விஜயக்குமார், 22 அக்டோபர் 2018 அன்று, நவம்பர் 2018ல், மீண்டும், தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்காக விதிவிலக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பு எழுதி வைத்தார். இம்முறை யாரிடமிருந்து உத்தரவு வந்தது என்பதை குறிப்பிடவில்லை. ஆனால், இதன் நோக்கம் என்னவென்பதை குறிப்பிட்டிருந்தார்.
மே 2018ல், ஒரு சிறப்பு நேர்வாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய விதிகள் தளர்த்தப்பட்டதை ஒரு வழக்கமாக கையாள பிஜேபி முடிவு செய்தது.
விஜயகுமாரின் 22 அக்டோபர் 2018 குறிப்பு, இவ்வாறு கூறுகிறது.
“வரக்கூடிய மாநில தேர்தல்களை அடிப்படையாகக் கொண்டும், உத்தரவின்படியும், ஏற்கனவே, 1 முதல் 10, மே 2018 வரையிலான காலத்தில் கர்நாடகா தேர்தலுக்காக நிதி அமைச்சரின் ஒப்புதலோடு தேர்தல் பத்திரம் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது போலவே, இம்முறையும் கூடுதலாக 10 நாட்கள் தேர்தல் பத்திரம் விற்பனை செய்ய அனுமதி வழங்க ஒப்புதல் கோரப்படுகிறது”.
இந்த குறிப்புக்கு, பொருளாதார விவகாரங்கள் துறையின், செயலர் கார்க் மற்றும் நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி எவ்வித எதிர்ப்பும் இன்றி ஒப்புதல் அளித்தனர். 184 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
மே 2018ல், ஒரே ஒரு முறையி சலுகையாக அனுமதி அளிக்கப்பட்ட விதிகளை மீறிய தேர்தல் பத்திர விற்பனை, பிஜேபி அரசால் தொடர் வழக்கமாக்கப் பட்டது. மே 2019 வரை 6000 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டடு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இது வரை நடந்தவற்றை ஆராய்ந்து பார்த்ததில் ஏதாவது பாடம் கற்றுக் கொண்டால், அதன்படி பிஜேபியே இதில் பெரும்பாலான தொகையை பெற்றுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
கட்டுரையின் ஆங்கில இணைப்பு
https://www.huffingtonpost.in/entry/electoral-bonds-modi-illegal-sale-state-elections_in_5dce6b7ee4b01f982effa205
Mr.Sankar, please share in your FB page
அட பாவிகளா