தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், ரகசியமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நன்கொடை அளிக்க ஏதுவாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமையாக பல முறை கூறினார்.
ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரையின் நான்காம் பாகம், ஜெய்ட்லி எப்படி கூசாமல் பொய் உரைத்தார் என்பதையும், அரசு தேர்தல் பத்திரங்களை எப்படி கண்காணிக்கிறது என்பதையும் விளக்குகிறது. கட்டுரை தமிழில்.
பிப்ரவரி 2017ல், நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, மாநிலங்களவையில் நின்று, கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கு தடையில்லாமல், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க வகை செய்யும் திட்டத்தை பெருமையோடு விளக்கினார்.
புதிய தேர்தல் பத்திர திட்டம், நன்கொடையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்தது. நன்கொடை வழங்குபவர், இதன் மூலம், யாருக்கும் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ரகசியமாக தங்களுக்கு விருப்பமான கட்சிக்கு நன்கொடை வழங்க முடியும். ஒருவர் யாருக்கு எவ்வளவு நன்கொடை கொடுத்தார் என்பது கொடுத்தவருக்கு மட்டுமே தெரியும் என்று, ஜெய்ட்லி தான் எழுதிய ஒரு கட்டுரையில் பெருமையாக குறிப்பிட்டார்.
ஏப்ரல் 2018ல், தி க்விண்ட் இணைய இதழ் 1000 ரூபாய்க்கான இரண்டு தேர்தல் பத்திரங்களை வாங்கி ஆராய்ந்தது. அதில், புற ஊதா கதிர்களை கொண்டு ஆராய்ந்ததில் ஒவ்வொரு பத்திரத்திலும் ஒரு ரகசிய எண் இருக்கிறது என்பதை கண்டறிந்து கட்டுரையாக வெளியிட்டது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம், ஒரு பத்திரிக்கை செய்தி மூலமாக விளக்கத்தை வெளியிட்டது. அதில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
“அந்த ரகசிய எண், ஸ்டேட் பேங்க் ஆப் வங்கியின் எந்த ஆவணங்களிலும் வாங்குபவர் சார்பாகவோ, அல்லது, அதை வங்கியில் அளித்து பணம் பெறும் அரசியல் கட்சி சார்பாகவோ பதிவு செய்யப்படுவதில்லை. அதன் காரணமாக, இதை வைத்து தேர்தல் பத்திரங்களை வாங்குபவரையோ, அரசியல் கட்சியையோ, கண்டு பிடிக்க இயலாது” என்று கூறப்பட்டது.
இது வரை வெளிவராத ஆவணங்களால் தற்போது தெரிய வந்துள்ள விபரங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தகவல் அறியும் சட்ட செயற்பாட்டாளர் லோகேஷ் பத்ரா பெற்ற ஆவணங்களின்படி, அரசு தெரிவித்ததன்படி அல்லாமல், “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, அந்த ரகசிய எண்ணை வைத்து, யார் தேர்தல் பத்திரங்களை வாங்குவது, எந்த அரசியல் கட்சி அந்த பத்திரங்களை காசாக்குவது என்ற விபரங்களை சேகரித்தே வந்துள்ளது. இப்படி சேகரிப்பதற்கான அனுமதி மத்திய நிதித் துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இது போல எஸ்பிஐ சேகரிக்கும் விபரங்களை புலனாய்வு அமைப்புகள் கேட்டால் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற அமைப்புகள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டுகளுக்கு சமீபகாலமாக ஆட்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் சட்டம் மூலமாக பெறப்பட்ட ஆவணங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவரின் அடையாளத்தை ரகசியமாக வைக்கவில்லை என்பதும், அரசுக்கு இந்த விபரங்கள் தெரியும் என்பதையே உணர்த்துகின்றன. இந்த விவகாரத்தில் எந்த உண்மையும் தெரியாமல் இருக்கும் தரப்பு பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும்தான்.
ஆனால் பாராளுமன்றத்தில், அருண் ஜெய்ட்லி, நன்கொடை அளிப்பவர்களின் அடையாளங்களை ரகசியமாக வைத்திருப்பது என்பது, அனைத்து கட்சிகளும் நன்கொடை பெற உதவும் என்று கூசாமல் பொய் சொன்னார். “ஒரு அரசு, எதிர்க்கட்சிகளுக்கும் பயன்படும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தால், அந்த அரசுக்கு எத்தனை பெரிய மனது இருக்கிறது” என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
2017 முதல் 2019 வரையிலான பல்வேறு கடிதப் போக்குவரத்துக்களை பரிசீலித்தால், ரகசியம் காக்கப்படும் என்பது எத்தனை பெரிய மோசடி என்பதை உணர்த்துகிறது.
ரகசியம் என்ற போலி வாக்குறுதி.
முதன் முதலாக பிப்ரவரி 2017ல், அருண் ஜெய்ட்லி இந்த திட்டத்தை அறிவித்தபோது, பிஜேபி அரசுக்கு இந்த தேர்தல் பத்திரங்கள் எப்படி செயல்படும் என்பது குறித்து சுத்தமாக புரிதல் இல்லை. ஒரு பெயருக்கு, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகளோடு ஆலோசனை நடத்தியது. ஆனால் அனைவரின் ஆலோசனையையும் நிராகரித்தது.
ஜனவரி 2018ந் நிதி அமைச்சக குறிப்பு ஒன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவோடு, நிதி அமைச்சகம் ஆலோசனைகளை நடத்தி, இத்திட்டத்தை எப்படி செயல்படுத்தலாம் என்று ஒரு வரைவை தயாரித்தது. 16 ஜனவரி 2018 அன்று நிதி அமைச்சகத்தோடு நடந்த ஒரு கூட்டத்தில் எஸ்பிஐ, தேர்தல் பத்திரங்களில் வரிசை எண் / ரகசிய குறியீடு எண் இருந்தால்தான், இதை வாங்குபவர் யார், காசாக்குவது யார் என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கூறியது.
வங்கி என்பதால், அவர்கள் கோணத்தில், இது போல போலி பத்திரங்களை யாராவது தயாரித்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலை இருந்திருக்கலாம்.
இது தொடர்பான நிதி அமைச்சக குறிப்பு இவ்வாறு கூறுகிறது. “தேர்தல் பத்திரங்கள் வாங்குபவர் பெயரையோ, காசாக்குபவர் பெயரையோ கொண்டிராது. ஆனால், வரிசை எண் என்பது அவசியம்” என்று நிதி அமைச்சகத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரிசை எண் இல்லாமல், இந்த பத்திரங்களின் விபரங்களோ, எவ்வளவு பத்திரங்கள் வெளியிடப்பட்டன என்ற விபரங்களோ இருக்காது. இது வங்கி பின்னாளில் கணக்குகளை சரி பார்க்கையில் சிக்கலை உருவாக்கும். நாளை நீதிமன்றமோ, புலனாய்வு அமைப்புகளோ விபரங்களை கேட்டால் வங்கியால் உரிய பதிலை கொடுக்க இயலாது. மேலும், வரிசை எண் இல்லாவிட்டால், இந்த பத்திரங்கள் போலவே போலி பத்திரங்களை உருவாக்க இயலும். அது பின்னாளில் பெரும் சிக்கலை உருவாக்கும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், எஸ்பிஐயின் இந்த திட்டத்தால், வங்கிக்கு, பத்திரங்களை யாரு வாங்குகிறார்கள், யாருக்கு பத்திரம் சென்றது, எந்த கட்சி காசாக்கியது என்ற விபரங்கள் அனைத்தும் தெரியும். தனியார் கணக்கிலிருந்து வாங்கப்பட்டதா, கார்ப்பரேட் கணக்கிலிருந்து வாங்கப்பட்டதா என்ற விபரமும் தெரியும். நன்கொடை வழங்குபவரின் விபரம் பொதுமக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வங்கிக்கு தெரியும்.
எஸ்பிஐ வங்கியின் இந்த ஆலோசனைகளை, நிதி அமைச்சகமும் ஏற்றுக் கொண்டது.
எஸ்பிஐ வங்கி இது போல சேகரிக்கும் விபரங்களை புலனாய்வு அமைப்புகள் கேட்டால் கொடுக்க வேண்டும் என்று விதிகளில் கூறப்பட்டுள்ளது.
“2 ஜனவரி 2018 அறிவிக்கையில் பிரிவு 6 (4)ல், பத்திரம் வாங்குபவர் பற்றிய விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கி ரகசியமாக வைத்திருக்க வேண்டும். கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் பேரில் புலனாய்வு அமைப்புகள் கேட்டால் மட்டுமே இந்த விபரங்கள் கொடுக்கப்பட வேண்டும். நீதிமன்றங்கள் கேட்டாலும் கொடுக்கலாம்” என்று கூறுகிறது.
இந்த விதிகள், கிரிமினல் வழக்குகள் என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. இது குறித்து விளக்கம் இல்லாத காரணத்தால், புலனாய்வு அமைப்புகள், எப்போது வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும், நன்கொடை அளித்தவர்களின் விபரங்களை அளிக்கலாம். இப்படி யாருக்கு விபரங்கள் அளிக்கப்பட்டன என்பதை, நன்கொடை அளித்தவருக்கோ, நன்கொடை பெர்ற கட்சிகளுக்கோ தெரிவிக்க வேண்டியதில்லை.
கூண்டுக் கிளிகள்.
தற்போது உள்ள அரசு, எஸ்பிஐ வங்கியின் தேர்தல் பத்திர விபரங்களை பெற முடியுமா ?
இந்த தேர்தல் பத்திரங்களின் விபரங்களை புலனாய்வு அமைப்புகள் மூலமாக அரசு பெறாமல் இருப்பதற்கான உறுதியான விதிகள் எதுவும் இல்லை. ஒரு காலத்தில், உச்சநீதிமன்றத்தால் கூண்டுக் கிளி என்று வர்ணிக்கப்பட்ட சிபிஐ, இந்த விவகாரத்தில் அரசுக்கு உதவாது என்று கூற எந்த உத்தரவாதமும் இல்லை.
ஹப்பிங்டன் போஸ்ட் வசம் உள்ள ஆவணங்களின்படி நிதி அமைச்சகத்தின் எல்லா உத்தரவுகளுக்கும் எதிர்ப்பின்றி கீழ்படிந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நிதி அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் சட்டத்தை மீறவும் தயங்காத எஸ்பிஐ, அமைச்சகத்தின் ஒப்புதலோடு எந்த விதிகளையும் மீறுவதற்கு தயங்கும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு முக்கிய தகவலை தருவதற்குக் கூட, தன்னிச்சையான அமைப்பான ஸ்டேட் வங்கி, நிதி அமைச்சகத்தின் அனுமதியை கோருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிப்ரவரி 2019ல், மத்திய அரசு, ஸ்டேட் வங்கியை 2019 பொதுத் தேர்தலை ஒட்டி, தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கான அவகாசத்தை நீட்டிக்க கோரியபோது, தொடக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்த வங்கி பிறகு ஒப்புக் கொண்டது. விதிகளின்படி, வழக்கமாக ஸ்டேட் வங்கி 40 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்யலாம். பொதுத் தேர்தல் நடக்கும் வருடத்தில் இந்த நாட்களோடு கூடுதலாக 30 நாட்களை நீடிக்கலாம்.
ஹப்பிங்டன் போஸ்ட் வசம் உள்ள ஆவணங்களின்படி, பிப்ரவரி 2019ல், மத்திய அரசு, இந்த 30 நாள் அவகாசத்தை மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்குமாறு வலியுறுத்தியது. இந்த சட்டவிரோதமான கால நீட்டிப்பு, நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லியால், அதே மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை, நிதி அமைச்சக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
28 பிப்ரவரி 2019ல், நிதி அமைச்சகம் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கப்பட்ட உத்தரவுகளுக்கு கீழ்படியுமாறு வலியுறுத்தப்பட்டது.
அதே நாளன்று, நிதி அமைச்சகத்துக்கு திருப்பி எழுதிய எஸ்பிஐ, நிதி அமைச்சகத்தின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்றும், இது குறித்து விளக்கம் வேண்டும் என்றும் கோரியது.
பந்தை அப்படியே திருப்பிப் போட்டது நிதி அமைச்சகம். அதே நாளன்று எஸ்பிஐக்கு பதில் அனுப்பிய நிதி அமைச்சகம், “எஸ்பிஐயின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது”. ஆனால் எஸ்பிஐ இதை ஏற்றுக் கொள்ளவில்லை.
மீண்டும் நிதி அமைச்சகத்துக்கு பதில் அனுப்பிய எஸ்பிஐ, “எந்தெந்த தேதிகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்ய வேண்டும் என்ற நிதி அமைச்சகத்தின் அறிவிப்பு குறித்த விபரங்கள் தொலைபேசி வாயிலாக 27.02.2019 அன்று ஸ்டேட் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டனவே ஒழிய, 28.02.2019 நாளிட்ட உங்களின் மின்னஞ்சலின்படி, அது “ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பரிந்துரை அல்ல” என்பதை தெளிவாக கூறியது.
ஆனால், அதே மின்னஞ்சலில், எஸ்பிஐ, சட்ட விரோதமாக, நிதி அமைச்சகத்தின் உத்தரவுக்கு ஏற்ப 35 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய ஒப்புக் கொண்டது. அதே நேரத்தில் இந்த சட்டவிரோதமான காரியத்துக்கு தன்னை பொறுப்பாக்கக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தது.
இதற்குள், உச்சநீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தொடங்கியிருந்தது. இவ்வழக்கில் 12 ஏப்ரல் 2019 அன்று உச்சநீதிமன்றம் ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. மத்திய அரசு, 2019ல், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதற்கான காலக்கெடுவை 30 நாட்களில் இருந்து அதிகரிக்கக் கூடாது என்றும் அவ்வுத்தரவில் தெரிவித்திருந்தது.
நிதி அமைச்சகம், உச்சநீதிமன்றத்தின் 30 நாட்கள் உத்தரவை மீறி 35 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கும் வகையில், அவசர சட்டத் திருத்தம் கொண்டு வரலாம் என்று திட்டமிட்டது. ஆனால் என்ன காரணத்தினாலோ, அத்திட்டத்தை கைவிட்டது.
கட்டுரையின் ஆங்கில வடிவம்