தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதற்கான விதிகள் எப்படி பிஜேபியின் வசதிக்கேற்ப வளைக்கப்பட்டதென்பதை பார்த்தோம். பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவே இந்த விதியை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது.
இந்த விதியும் மீறப்பட்டு, ஒரு கட்சிக்காக, காலாவதியான 10 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பணமாக்கிக் கொள்ள ஸ்டேட் வங்கிக்கு எப்படி நிதி அமைச்சகம் உத்தரவிட்டது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரைத் தொடரின் ஐந்தாம் பாகத்தில் பார்ப்போம்.
கர்நாடக சட்டப்பேரவை முடிவுகள் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றமாக அமைந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை விதிகளுக்கு எதிராக, காலாவதியான 10 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை மாற்றி பணத்தை தர நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய காலாவதியான தேர்தல் பத்திரங்களை வைத்திருந்த கட்சிகள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை, பத்திரங்கள் காலாவதியான பின்னரும் மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டதன் அடிப்படையிலேயே நிதி அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்தது. ஹப்பிங்க்டன் போஸ்ட் வசம் உள்ள ஆவணங்கள் மூலம் இந்த விபரங்கள் தெரிய வந்துள்ளன.
இப்படி காலாவதியான தேர்தல் பத்திரங்களை வாங்குவதற்கு காரணமே, பத்திரம் வாங்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவை, பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில், நிதி அமைச்சகம், கர்நாடக தேர்தலுக்கு சற்று முன்பாக சட்டவிரோதமாக மாற்றியதுதான்.
தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் லோகேஷ் பத்ரா பெற்ற ஆவணங்களை ஆராய்ந்ததில், எந்த கட்சி இத்தகைய காலாவதியான பத்திரங்களை பெற்றுக் கொண்டது, இதை வழங்கியவர் யார் என்ற விபரங்கள் இல்லை. கர்நாடக சட்டப்பேரவை முடிவுகள் தொங்கு சட்டமன்றமாக அமைந்த பிறகு, அனைத்து கட்சிகளும், எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க கடுமையாக முயன்றன.
சட்டவிரோதமாக கால நீட்டிப்பு செய்யப்பட்ட பின்னர், அரசியல் ரீதியாக நெருக்கடியான ஒரு நிலைமையில் பிரதமர் அலுவலக தலையீட்டால் காலாவதியான பத்திரங்கள் வாங்கப்பட்ட ஒரு சூழலை மனதில் வைத்துத்தான், ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த இடத்தில், இத்தகைய பத்திரங்கள் மூலமாக பெறப்பட்ட நிதியில் 95 சதவிகிதத்தை பிஜேபி மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம், இந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை தற்போது விசாரித்து வருகிறது. கடந்த வியாழனன்று ஹப்பிங்டன் போஸ்டில் பங்கு பத்திரங்கள் குறித்த கட்டுரை வெளியானதை அடுத்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இது குறித்து அமளியை கிளப்பின. அப்போது அவையில் இருந்த நரேந்திர மோடி, இதை கற்சிலை போல வேடிக்கை பார்த்து வந்தார்.
மீறப்பட்ட விதிமுறைகள்
முதல் முறையாக பிப்ரவரி 2017ல், அருண் ஜெய்ட்லி, தேர்தல் பத்திரங்களை குறித்து அறிவிப்பு வெளியிட்டபோது, ரிசர்வ் வங்கி, இது சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு வழி வகுக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த பத்திரங்களை, காகித பத்திரங்களாக, எந்த ஒரு தனி நபரோ, ஒரு அமைப்போ, ஒரு கார்ப்பரேட் நிறுவனமோ, ரகசியமாக வங்க முடியும். நன்கொடை பெறும் கட்சி, அதை அவர்களுக்கென்று உள்ள வங்கிக் கணக்கில் செலுத்தி பணமாக்கிக் கொள்ள முடியும்.
கடைசி வரை இதை எதிர்த்து வந்த ரிசர்வ் வங்கி, பின்பு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இரண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியது. வருடத்தில் இரண்டு முறை, தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். தேர்தல் பத்திரமாக நன்கொடையை பெறும் கட்சிகள், அப்படி நன்கொடை பெற்ற 15 நாட்களுக்குள், பத்திரத்தை வங்கியில் செலுத்தி பணமாக்க வேண்டும்.
பத்திரங்களை எஸ்பிஐ வழங்க நிதி அமைச்சக உத்தரவால் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது குறித்து முன்பே பார்த்தோம்.
23 மே 2018 அன்று, எஸ்பிஐ வங்கி நிதி அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறது.
அக்கடிதத்தில், “தேர்தல் பத்திரங்கள் வைத்திருப்போர் சிலர், 23 மே 2018 அன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் டெல்லி மெயின் கிளைக்கு சென்று, 20 கோடி மதிப்பிலான பத்திரங்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். இவற்றில் பாதி பத்திரங்கள் 3 மே 2018 அன்று வாங்கப்பட்டவை. மீதம் உள்ளவை 5 மே 2018 அன்று வாங்கப்பட்டவை. மொத்த பத்திரங்களும் 15 நாட்களை கடந்தததால் காலாவதியாகி விட்டன. ஆனால் பத்திரங்களை வைத்திருக்கும் அரசியல் கட்சியினர் விதிகளை வளைத்து அவற்றை காசாக்கித் தருமாறு கேட்டுள்ளனர்”.
இப்படி டெல்லி மெயின் எஸ்பிஐ கிளைக்கு அரசியல் கட்சியினர் வந்து பத்திரங்களை மாற்ற கேட்ட விபரத்தை, அன்றே தெரியடுத்தியதாக கிடைக்கப்பெற்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
மறுநாள், 24 மே 2018 அன்று, எஸ்பிஐ துணை பொது மேலாளர் மிருத்துஞ்சய் மஹாபாத்ரா, எஸ்பிஐ சேர்மேன் ரஜ்னீஷ் குமாரின் சார்பாக நிதி அமைச்சகத்துக்கு, காலாவதியான பத்திரங்களை காசாக்கலாமா என்று கேட்கிறார். அவர் தனது கடிதத்தில், “தேர்தல் பத்திரங்களை வைத்திருப்பவர்களில் சிலர், காலாவதியான பத்திரங்களை 15 நாட்கள் கழித்து பணமாக்க வங்கியை அணுகினர். அவர்கள் எழுப்பிய சந்தேகம் என்பது, 15 நாட்கள் என்பது, காலண்டரின்படி 15 நாட்களா அல்லது, 15 வேலை நாட்களா என்பதே. பத்திரங்களின் கால அளவை குறிப்பது, வேலை நாட்களா, 15 காலண்டர் நாட்களா என்பதை நிதி அமைச்சகம் தெளிவுபடுத்த வேண்டும்” என்று அந்த கடிதத்தில் எஸ்பிஐ டெல்லி கிளையின் துணை பொது மேலாளர் எழுதுகிறார்.
கடிதம் கிடைத்த அதே நாளில், அவசர அவசரமாக நிதி அமைச்சகத்தை சேர்ந்த துணை இயக்குநர் விஜய குமார் பதில் எழுதுகிறார்.
“15 நாட்கள் என்றால் வெறும் 15 நாட்கள்தான். அதில் விடுமுறை நாட்களும் அடங்கும். இதன் காரணமாக, அந்த பத்திரங்கள் காலாவதியாகி விட்டன. அதில் உள்ள தொகைகளை பிரதமரின் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும் என்றுதான் விதி கூறுகிறது” என்று முதல் பத்தியில் கூறிவிட்டு, அடுத்த பத்தியிலேயே அந்தர் பல்டி அடிக்கிறார்.
“கடைசியாக வாங்கப்பட்ட பத்திரங்களில், இந்த 15 நாட்கள் பற்றிய தெளிவான விளக்கம் இல்லாததால், 10 மே 2018க்கு முன்னதாக வாங்கப்பட்ட பத்திரங்களை, எஸ்பிஐ ஏற்றுக் கொள்ளலாம். இப்படி ஏற்றுக் கொள்வதற்கு 15 வேலை (Bank working days) என்பதை கணக்கீடாக கொள்ளலாம். ஆனால், இது போன்ற விதிவிலக்குகளை வருங்காலத்தில் வழங்க முடியாது” என்று குறிப்பு எழுதுகிறார்.
இவரின் குறிப்பு, பொருளாதாரத் துறை விவகாரங்களுக்கான செயலர் எஸ்.சி கார்கால், உடனடியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது. இந்த கடிதம், எஸ்பிஐ தலைமையகத்துக்கு அனுப்பப் படுகிறது. அதே நாளில் எஸ்பிஐ தலைமையகம், அதன் டெல்லி கிளைக்கு, 10 கோடி மதிப்பிலான பத்திரத்தை எந்த அரசியல் கட்சியும், 5 மே 2018க்கு முன்னதாக பத்திரங்களை வாங்கியிருந்தால், அதற்கான தொகையை வழங்கலாம்” என்று கடிதம் அனுப்புகிறது.
3 மே 2018க்கு முன்னதாக வாங்கப்பட்ட மேலும் 10 கோடிக்கான பத்திரங்கள், பிரதமரின் நிவாரண நிதிக்கு அனுப்பப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
“எந்த கட்சிக்கு இத்தகைய சலுகை வழங்கப்பட்டது” என்று இந்த ஊழலை வெளிக் கொணர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட செயற்பாட்டாளர் லோகேஷ் பத்ரா கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்கான விடை, இறுதி வரை கிடைக்கவில்லை.
இந்த கட்டுரைக்காக நிதி அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு எழுதப்பட்ட கடிதத்துக்கு எந்த பதிலும் வரவில்லை.