நாட்டில் நமக்கு நீதி வேண்டுமென்றால் நீதிமன்றங்களை அணுகுவோம். நமக்கு நீதி வழங்கும் நீதிபதிகளுக்கே நீதி இல்லையென்றால் ? அப்படிப்பட்ட ஒரு கதைதான் இது.
தமிழகத்தில் இருப்பதிலேயே பாவப்பட்ட ஜென்மங்கள் யாரென்றால் கீழமை நீதிமன்ற நீதிபதிகள்தான். இவர்களின் தலையெழுத்தை தீர்மானிப்பது முழுக்க முழுக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள். ஒரு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நினைத்தால், ஒரு கீழமை நீதிபதியின் கதையை கேள்வி கேட்பாரின்றி முடிக்க முடியும். காரண காரியமின்றி அவரை வீட்டுக்கு அனுப்ப முடியும். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் மனம் கோணும்படி ஒரு மாவட்ட நீதிபதி நடந்து கொண்டாரென்றால், அந்த உயர்நீதிமன்ற நீதிபதி அந்த மாவட்ட நீதிபதியை பணி இடை நீக்கம் செய்ய முடியும். பதவி இறக்கம் செய்ய முடியும். டிஸ்மிஸ் செய்ய முடியும்.
ஒரு அரசு ஊழியருக்கு அரசியல் அமைப்பு சட்டமும், அரசு விதிகளும் ஏராளமான பணிப் பாதுகாப்பை வழங்கியுள்ளன. அவ்வளவு எளிதில் ஒரு அரசு ஊழியரை வீட்டுக்கு அனுப்ப முடியாது.
இந்த இரண்டுக்கும் ஏன் இவ்வளவு வேறுபாடு என்று கேட்கிறீர்களா ? ஒரு அரசு ஊழியரை காரணமின்றி பணி நீக்கம் செய்தால் அவர் என்ன செய்வார் ? உடனே உயர்நீதிமன்றத்தை அணுகுவார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பழைய தீர்ப்புகள், முன்னுதாரணங்களை சுட்டிக்காட்டி, அந்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்வார்.
ஆனால் ஒரு மாவட்ட நீதிபதி பணி நீக்கம் செய்யப்பட்டால்? அவரும் உயர்நீதிமன்றத்தைதானே அணுக வேண்டும் ? அவரை பணி நீக்கம் செய்ததும் ஒரு உயர்நீதிமன்றம் தானே ? இது போன்ற பணி நீக்கங்கள், உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவினால் (Full Court) செய்யப்படும். இப்படி அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் சேர்ந்து எடுத்த ஒரு முடிவை, அதே உயர்நீதிமன்றத்தை சேர்ந்த ஒரு நீதிபதி ரத்து செய்வாரா என்ன? பணி நீக்கம் அல்லது இடை நீக்கம் செய்யப்பட்ட அந்த கீழமை நீதிபதிக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?
இதை நன்றாக புரிந்த காரணத்தால்தான் கீழமை நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகளை, “அய்யா” என்று அழைக்கிறார்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்கிறார்கள். அவர்களை கடவுள் நேரில் தரிசனம் தந்தது போல நடத்துகிறார்கள்.
இப்படித்தான் கீழமை நீதிபதிகளுக்கு ஒரு மிக மோசமான அநியாயம் நடந்து வருகிறது.
காவல் துறையில் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், ஆய்வாளரை அடுத்து, துணை காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) பதவி உயர்வு பெறுவார். டிஎஸ்பியாக, க்ரூப் 1 தேர்வு மூலம் நேரடியாக வருபவர்களும் உண்டு. டிஎஸ்பி பதவிக்கு அடுத்து கூடுதல் எஸ்பி பதவி. இப்படி கூடுதல் எஸ்பி பதவிக்கு நியமனம் செய்யப்படும்போது, ஒரே தேதியில் உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு டிஎஸ்பியாக உள்ளவரும், க்ரூப் 1 தேர்வு மூலம் டிஎஸ்பி ஆகியவரும் இருக்கிறார்கள் என்றால் யாருக்கு முதலில் கூடுதல் எஸ்பி பதவி உயர்வு கொடுப்பது ? இதற்கென விதிகள் உள்ளன. அந்த விதிகளின்படி, உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவருக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படும் என்று பணி விதிகள் கூறுகின்றன.
இதற்கான காரணம் என்னவென்றால், க்ரூப் 1 மூலம் நேரடியாக டிஎஸ்பி ஆனவருக்கு வயது குறைவாக இருக்கும். எஸ்.ஐயாக பணியில் சேர்ந்து டிஎஸ்பி ஆனவருக்கு வயது அதிகமாக இருக்கும். அவர் விரைவில் ஓய்வு பெற்று விடுவார். இதன் காரணமாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவருக்குத்தான் முன்னுரிமை.
இதே போல கீழமை நீதித் துறையில், மேஜிஸ்டிரேட்டாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று மாவட்ட நீதிபதியாவார். மாவட்ட நீதிபதியாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களும் உண்டு. இவர்கள் இருவருக்கும் அடுத்த பதவி உயர்வு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி.
இப்போது ஏற்கனவே சொன்ன காவல் துறை பதவி உயர்வோடு ஒப்பிடுங்கள்.
மொத்த சென்னை உயர்நீதிமன்ற 75 பணியிடங்களில் மூன்றில் ஒரு பங்கு (25) மாவட்ட நீதிபதி பதவிகளில் இருந்து தேர்வு செய்யப்படும். மீதம் உள்ள இரண்டு பங்கு (50) நீதிபதிகள் பதவி, நேரடியாக வழக்கறிஞர்களால் நிரப்பப்படும். வழக்கறிஞர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் ஒரு மிகப் பெரிய அரசியல். அதை பின்னாளில் பார்ப்போம்.
பதவி உயர்வு மூலமாக நிரப்பப்படும் நீதிபதி பணியிடங்கள் குறித்துதான் இப்போது பஞ்சாயத்து.
2011ம் ஆண்டில் நேரடியாக மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 14 பேர். இவர்கள், 19 பிப்ரவரி 2021-ல்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக தகுதி பெறுகிறார்கள். இவர்கள் ஏற்கனவே வழக்கறிஞராக பணியாற்றி இருந்தாலும், 10 ஆண்டுகள் நீதிபதியாக (Judicial Service) முடிக்கவில்லை என்பதால், இவர்கள் எப்போது 10 ஆண்டுகள் மாவட்ட நீதிபதிகளாக பணி முடிக்கிறார்களோ அப்போதுதான் உயர்நீதிமன்ற நீதிபதியாக தகுதி பெறுகிறார்கள் என்று, அரசியலமைப்பு சட்டம் பிரிவு 217(2)(a)-ன் படி, சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வுக் குழு (Collegium) முடிவெடுத்தது. அந்த முடிவு தவறென்று, இந்த நேரடி மாவட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு மனு அளிக்கிறார்கள். அதை ஏற்க மறுத்து, உச்சநீதிமன்ற அமர்வுக் குழு 03.10.2017ல் அதை தள்ளுபடி செய்தது.
அந்த முடிவு பின்வருமாறு:
“While considering the above proposal, we have also taken note of the fact that the above proposal involves non-recommendation of large number of senior Judicial Officers. Many of them have given representations putting forth their grievances of having been over-looked by the High Court Collegium. In this regard, we have gone through the letter dated 30th January, 2017 of the then Chief Justice of the Madras High Court who has duly recorded reasons for not recommending names of these Judicial Officers. We are satisfied with the reasons assigned by the Chief Justice of the Madras High Court and find no merit in the said representations which deserve to be rejected.”
இதன்படி, நேரடியாக மாவட்ட நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 பேர்களை தவிர்த்துவிட்டு, மேஜிஸ்டிரேட்டாக நியமனம் செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதிகளாக உள்ள 13 பேரின் பெயர்களை, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அது தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த இடத்தில்தான் டர்னிங் பாயிண்ட்.
நேரடியாக தேர்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் 10 ஆண்டுகள் கழித்து பிப்ரவரி 2021ல்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக முடியும் என்று இருந்தாலும், அது வரை பொறுத்திருக்க முடியாது என்று இந்த 14 நேரடி மாவட்ட நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்தை அணுகுகிறார்கள்.
அந்த வழக்கை தாக்கல் செய்வது இந்த 14 பேரில் 8 பேர். மீதம் உள்ள 6 பேரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். விசித்திரமாக உள்ளதா ?
14 பேரின் கோரிக்கையும் ஒன்றே. இவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் 14 பேரும் பலனடைவார்கள். அப்படி இருக்கையில் 14 பேரில் 8 பேர் வழக்கு தொடுக்கிறார்கள். 6 பேர், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருக்கிறார்களே…. ஏன் ?
நேரடி மாவட்ட நீதிபதிகளான இந்த 14 பேரும் சக்திவாய்ந்தவர்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பல பதிவாளர் பதவிகள் உண்டு (Registrar). இதில் தலைமை பதிவாளர் (Registrar (General) என்ற பதவிதான் முக்கியமானது. ஏனெனில், இவர்தான் சென்னை உயர்நீதிமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் மீது ஒருவர் வழக்கு போடுகிறார் என்றால், தலைமை பதிவாளர்தான் சென்னை உயர்நீதிமன்றத்துக்காக வாதாடுவார். உயர்நீதிமன்றத்தின் சார்பாக வழக்கு தொடுப்பார்.
முன்னாள் நீதிபதி கர்ணன், தவறான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பித்தபோது, உச்சநீதிமன்றம் அந்த உத்தரவுகளுக்கு தடை விதித்தது நினைவிருக்கிறதா? அப்போது, அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் தொடுத்தது, தலைமை பதிவாளர்தான்.
எங்களுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்று, தற்போது 14 நேரடி மாவட்ட நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்கள் அல்லவா ? யார் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள் ? சென்னை உயர்நீதிமன்றத்தின் மீதுதான். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டியது யார் ? தலைமை பதிவாளர்தான்.
தற்போது இந்த பதவியில் இருப்பவர், குமரப்பன் என்பவர். இவர் இந்த 14 நேரடி மாவட்ட நீதிபதிகளில் ஒருவர். இவர் நேரடி மாவட்ட நீதிபதி குமரப்பன் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தை அணுகினால், உயர்நீதிமன்றத்தின் சார்பில் பொது பதிவாளர் குமரப்பனாக எப்படி எதிர் மனு தாக்கல் செய்ய முடியும் ? சிக்கல் அல்லவா ?
அதற்காகத்தான் இவர் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேரில் இவர் ஒருவரை மட்டும் எதிர் மனுதாரராக சேர்த்தால் இது ஏதோ செட்டிங் போல தெரியும் அல்லவா? அதற்காகத்தான் 14 பேரில், 8 பேர் மனுதாரர்கள். 6 பேர் எதிர் மனுதாரர்கள்.
பல பதிவாளர் பதவிகள் உண்டு என்று சொன்னேன் அல்லவா ? அதில் ஒரு அதிமுக்கியமான பதவி ரிஜிஸ்ட்ரார் விஜிலென்ஸ். விஜிலென்ஸ் என்றால் ஓரளவு புரிகிறதல்லவா ? ஆம். கீழமை நீதிபதிகள் பற்றி வரும் புகார்கள் அனைத்தையும் விசாரணை செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பது ரிஜிஸ்ட்ரார் விஜெலென்ஸின் பணி.
தற்போது இந்த பதவியில் இருப்பவர் பெயர் பூர்ணிமா. உச்சநீதிமன்றத்தில், 14 நேரடி மாவட்ட நீதிபதிகள் தொடர்ந்துள்ள வழக்கில் முதல் மனுதாரர் யார் தெரியுமா ? இந்த பூர்ணிமாதான். இவர் ஒரு மாவட்ட நீதிபதியை காலி செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஒரு புகாரை உருவாக்கி, தயார் செய்து, அதன் மீது விசாரணை நடத்தி, அந்த மாவட்ட நீதிபதியை பணி நீக்கம் செய்ய உயர்நீதிமன்ற நியமன குழுவுக்கு பரிந்துரை செய்ய முடியும். இவர் இப்படி இப்போது செய்கிறார் என்று சொல்லவில்லை. ஆனால் செய்வதற்கான சாத்தியக் கூறுகளும், வாய்ப்புகளும் இவர் பதவிக்கு உண்டு. ஏனெனில், இவர் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில்தான் உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு (Full Court) முடிவு எடுக்கும்.
மேஜிஸ்டிரேட்டாக நியமனம் செய்யப்பட்டு, (promotes) மாவட்ட நீதிபதிகளாக உள்ள 13 பேரின் பெயர்களைஉச்சநீதிமன்றம் பரிசீலனை செய்து வருகிறது என்று கூறினேன் அல்லவா? அதில் முதல் இடத்தில் இருப்பவர் திருமதி. சரோஜினி தேவி. பணியில் மிக மூத்தவர். இவர் இரண்டு ஆண்டுகள் முன்னதாகவே உயர்நீதிமன்ற நீதிபதி ஆகியிருக்க வேண்டும். சமீபத்தில் உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு (Full Court), இவரின் பணிக்காலத்தை 58 வயதிலிருந்து 60 வயது வரை நீட்டித்து ஒப்புதல் அளித்திருந்த நிலையில்……
கடந்த வாரம், இந்த சரோஜினி தேவி அவர்களின் வீட்டுக்கு நள்ளிரவு 11 மணிக்கு சென்று நீதிமன்ற பணியாளர் கதவை தட்டுகிறார். கதவை திறந்ததும், சரோஜினி தேவிக்கு கடும் அதிர்ச்சி. அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக உத்தரவை வழங்குகிறார் நீதிமன்ற ஊழியர். அதிர்ந்து போகிறார் சரோஜினி தேவி. என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார். இடிந்து போகிறார். சரி நம் விதி இனி இதுதான் என்று நொந்து போகிறார். மறு நாள் நீதிமன்ற ஊழியர் மீண்டும் ஒரு உத்தரவை வழங்குகிறார். அந்த உத்தரவின்படி பணி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டு, பணி நீட்டிப்பு உத்தரவு வழங்கப்படுகிறது.
இது போல எங்காவது நடக்குமா? ஒரு மூத்த மாவட்ட நீதிபதிக்கே இந்த நிலையென்றால்? இதற்கு யார் காரணம் என்று விசாரணை ஏதாவது நடத்தப்பட்டதா? எவர் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்றால் இல்லை. இதன் பின்னணியில் இருந்தது ரிஜிஸ்ட்ரார் விஜெலென்ஸ் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் இப்படி ஒரு சந்தேகம் எழ வாய்ப்பு இருக்கிறது அல்லவா ?
இந்த ரிஜிஸ்ட்ரார் விஜெலென்ஸ்-டம்,தமிழகத்தில் பணியாற்றும் அனைத்து கீழமை நீதிபதிகளின் பணி பதிவேடுகளும், பணி விபரங்களும் இவரிடமே உள்ளன. சுருக்கமாக சொன்னால் அனைத்து கீழமை நீதிபதிகளின் ஜாதகமும் இவர் கையில். இந்த விபரங்களை பயன்படுத்தித்தானே, இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்க முடியும் ?
இவரால் பாதிக்கப்படும் மேஜிஸ்திரேட்டாக சேர்ந்து மாவட்ட நீதிபதிகள் யாராவது பேச முடியுமா ? யாரிடம் பேச முடியும் ? எங்கே முறையிட முடியும் ?
மேலும் இந்த 14 நேரடி மாவட்ட நீதிபதிகளும் மிகுந்த அதிகாரமான பதவிகளில், சென்னையில் அமர்ந்துள்ளனர். இவர்களில் ஒருவரான ஜோதிராமன், ரிஜிஸ்ட்ரார் (judicial) உள்ளார். ராஜசேகர் லீகல் சர்வீசஸ் ஆணையத்தின் உறுப்பினர் செயலராக உள்ளார்.
மற்றொருவரான ரகுமான், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் மீதான எழுத முடியாத வகையிலான பல புகார்கள் குறிப்பாக இவர் பணிபுரிந்த அரியலூர் மற்றும் தற்போது சென்னையிலும் உள்ளன. அந்த புகார்களின் மீது ரிஜிஸ்ட்ரார் விஜிலென்ஸ் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று அவரிடம் கேளுங்கள். அவரிடம் பதில் இருக்காது.
இந்த தகவல்களெல்லாம் உயர்நீதிமன்றத்தின் முக்கியமான நீதிபதிகள் வசம் இருக்கத்தான் செய்கிறது. இவர்கள்மீது உயர்நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மாவட்ட நீதிபதிகளுக்கே இந்த கதி. நமக்கு இந்த உயர்நீதிமன்றம் நீதி வழங்கும் என்றா நம்புகிறீர்கள்.
நண்பா எனக்கும் நீதி வேண்டும் எவ்வித corruption குற்றம் இல்ல சட்டப்படி நடந்த எனக்கு என்மேல் நடவடிக்கை எடுக்க சொன்ன நீதியரசர் portfolio மாவட்டத்தில் ஒழுங்கு நடவடிக்கை நீதி கிடைக்கவில்லை
நமது நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை credibility பற்றி கடந்த வாரத்தில் முன்னாள் காவல் துறை அலுவலர் திரு. சித்தண்ணன் அவர்களிடம் திருச்சி. வேலுச்சாமி கூறிய கருத்தை இப்போது இந்த கட்டுரையை படிக்கும் போது நினைத்து கொண்டேன். The eye opener என்ற யூடியூப் சேனலை பார்க்க வேண்டும்.
நமது நீதிமன்றத்தின் நம்பகத்தன்மை credibility பற்றி கடந்த வாரத்தில் முன்னாள் காவல் துறை அலுவலர் திரு. சித்தண்ணன் அவர்களிடம் திருச்சி. வேலுச்சாமி கூறிய கருத்தை இப்போது இந்த கட்டுரையை படிக்கும் போது நினைத்து கொண்டேன்.