ஒரு வழியாக தயாநதி மாறன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அடுத்து திஹார் செல்ல வேண்டியதுதான். இப்போது மத்திய அமைச்சரவையில் எஞ்சியிருக்கும் ஒரே கேபினெட் அமைச்சர் மு.க.அழகிரி மட்டும் தான். மு.க.அழகிரி எப்போது ராஜினாமா செய்யப் போகிறார் என்பதே அடுத்த எதிர்ப்பார்ப்பு. அழகிரி எதற்காக ராஜினமா செய்ய வேண்டும் ? அவர் என்ன தவறு இழைத்து விட்டார் ? பார்ப்போம்.
தொழில் அதிபர் ராசாத்தி அம்மாளைப் பற்றி சவுக்கில் படித்திருக்கிறீர்கள். கருணாநிதி குடும்பத்திலிருந்து மற்றொரு தொழில் அதிபரைப் பற்றி மகிழ்ச்சிகரமான தகவல்கள் வந்துள்ளன. கருணாநிதி குடும்பத்தினரின் தொழில் திறமைகளைப் பற்றி தற்போது ஊர் அறிந்து கொண்டே வருகிறது.
இன்னும் ஐந்தே ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியிலும், மத்திய ஆட்சியில் பங்கேற்றும் இருந்திருந்தார்களேயானால், ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்து இன்று நொடித்துப் போயிருக்கும் சினிமா தயாரிப்பாளர்களைப் போல, அனில் அம்பானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, ஆதித்ய பிர்லா போன்றவர்கள் ஆகியிருப்பார்கள். காலத்தின் கோலம், இவர்களின் தொழில் வளர்ச்சி பொறுக்க முடியாத, சில சதிகாரர்கள், ஆரியக் கூட்டத்தினர், பார்ப்பன பதர்கள் இந்த வளர்ச்சிக்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியிலிருந்து அகற்றி விட்டார்கள்.
இருப்பினும், இந்தியாவின் உயரிய பொருளாதார பள்ளிகளான இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினெஸ், ஐதராபாத் போன்ற இடங்களில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கற்றுக் கொள்ளும் வகையில், இவர்கள் அனைவருக்கும் பாடமாக வைக்கும் வகையில், இந்தப் புதிய தொழில் அதிபரைப் பற்றி பார்ப்போம்.
காந்தி அழகிரி என்பவர் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பெரிய பணக்கார பின்புலம் எதுவும் கிடையாது. இவரும், இவருடைய மகனும் இணைந்து 28 மார்ச் 2007 அன்று “தயா சைபர் பார்க்” என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்கள். இந்த சைபர் பார்க் நிறுவனம் என்ன தொழில் செய்யலாம் என்று உத்தேசித்துள்ளார்கள் என்றால், தொழில் பூங்கா, அறிவியல் பூங்கா, தொழில்நுட்ப பூங்கா, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது, மென்பொருள் நிறுவனம், கால் சென்டர்கள் நிறுவுவது என்ற தொழில்களில் ஈடுபடலாம் என்று உத்தேசித்து தொடங்கினார்கள்.
ஆனால் உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்றால், ஒரு புண்ணாக்கு வியாபாரமும் பண்ணலை…. இந்த நிறுவனத்தை, அழகிரிக்கு கோடிக்கணக்கில் வந்த லஞ்சப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதே உண்மை.
மார்ச் 2007ல் 2 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப் படும் இந்த நிறுவனம், இரண்டே ஆண்டுகளில் பல கோடி ரூபாய் லாபத்தில் இயங்குகிறது. ஊரெங்கும் சொத்துக்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.
இவ்வாறு இவர்கள் வாங்கிக் குவித்த சொத்துக்களில் ஒன்று தான், மதுரை உத்தங்குடியில் வாங்கிய சொத்து. உத்தங்குடி என்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளைக்கு எதிரில் அமைந்திருக்கும் இடம். இந்த இடத்தில் 3.95 ஏக்கரை, தயா சைபர் பார்க்குக்காக வாங்கியிருக்கிறார் காந்தி அழகிரி. அந்த இடத்தை காந்தி அழகிரி வாங்கியது, பல்வேறு வழக்குகளை எதிர் கொண்டு, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக் கொண்டிருக்கும் சான் டியாகோ மார்ட்டின் என்கிற லாட்டரி அதிபரிடமிருந்துதான்.
இந்தியாவின் மிகப் பெரிய லாட்டரி அதிபராக இருப்பவர் சான் டியாகோ மார்ட்டின். இவர் மீது தமிழ் நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்கு இருக்கிறது. 2007ம் ஆண்டு மே 7 அன்று 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சிக்கிம் மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகளும், மூன்றே முக்கால் லட்ச ரூபாய் பணம் மற்றும், கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர்கள் உள்ளிட்ட பல்வேறு கருவிகளும் கைப்பற்றப் பட்டன. இந்த வழக்கின் புலனாய்வை சிபி.சிஐடி மேற்கொண்டது. ஒரு ரூபாய் மதிப்புள்ள பூட்டான் மாநில லாட்டரியை 200 ரூபாய் வரை விற்றதாகவும், லாட்டரி முடிவுகளை அறிவிப்பதற்காகவே எஸ்.எஸ்.மியூசிக் மற்றும் எஸ்.எஸ்.சங்கீத் என்ற இரண்டு தொலைக்காட்சி சேனல்களையும் நடத்தி வந்ததாகவும் மார்ட்டின் மீது குற்றச் சாட்டு. ஜுன் 2007 அன்று இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மார்ட்டின் மனு செய்த போது, அந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி “தடைசெய்யப் பட்ட லாட்டரிச் சீட்டுகளின் விற்பனைக்காக மனுதாரர் (மார்ட்டின்) நடத்தும் டிவியில் விளம்பரங்கள் வந்தது என்பதும், குலுக்கல் முடிவுகள் ஒளிபரப்பப் பட்டது என்பதையும் மறந்து விடக் கூடாது. மார்ட்டின் மற்றும் அவருடைய கூட்டாளிகள் ஆகியோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது” என்று கூறி, அவர்களின் முன் ஜாமீனை தள்ளுபடி செய்தார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத் தகுந்தது.
இவ்வாறு சிபி சிஐடி போலீசின் வழக்கில் சிக்கிய மார்ட்டின், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கடைக்கண் பார்வை பட்டதும், யாரும் தொட முடியாத இடத்திற்கு சென்றார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த கருணாநிதி கதை வசனத்தில் தயார் செய்யப் பட்ட “இளைஞன்” திரைப்படத்தை மார்ட்டின் 60 கோடி ரூபாய் செலவில் தயார் செய்யத் தொடங்கியவுடன், மார்ட்டின் கருணாநிதியிடம் மிகவும் நெருக்கமானார். இந்த நெருக்கம், காவல்துறை அதிகாரிகளையே மார்ட்டினைப் பார்த்த அஞ்ச வைத்தது. செம்மொழி மாநாடு வரவேற்புக் குழுவில் இடம் பெறச் செய்யும் அளவுக்கு மார்ட்டினின் செல்வாக்கு கருணாநிதியிடம் வளர்ந்தது. இந்த நெருக்கத்தை தனது கள்ள லாட்டரி விற்பனைக்கு மார்ட்டின் பயன்படுத்திக் கொண்டார். மத்திய உளவுத்துறையின் ரகசிய ஆவணம், தமிழகத்தில் மட்டும் மார்ட்டினின் ஒரு நாள் லாட்டரி வியாபாரம் 10 கோடி என்று மதிப்பிட்டுள்ளது.
இந்த மார்ட்டினிடம் தான், மு.க.அழகிரியின் மனைவி மற்றும் மகனுக்குச் சொந்தமான “தயா சைபர் பார்க்“ என்ற நிறுவனத்தின் பெயரில், மதுரை ஒத்தக்கடையில் 3 ஏக்கர் 95 சென்டு நிலத்தை வாங்கியிருக்கின்றனர். இந்த நிலம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மிக அருகாமையில் உள்ள உத்தங்குடி என்ற கிராமத்தில் உள்ளது. இந்த 3 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை மார்ட்டினிடமிருந்து வாங்குவதற்காக 85 லட்சத்து 65 ஆயிரத்து 84 ரூபாய்க்கான காசோலை மதுரை டிவிஎஸ் நகர் இந்தியன் வங்கிக் கிளையிலிருந்து வழங்கப் பட்டுள்ளது.
அது எப்படி அண்ணி மூஞ்ச பச்ச புள்ள மாதிரி வச்சுக்கறீங்க
4 ஏக்கர் நிலம் 85 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப் பட்டிருந்தாலும், மதுரை ஏரியாவில் விசாரித்த போது, உத்தங்குடி கிராமம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் அருகாமையில் இருப்பதால், ஒரு ஏக்கர் 7 கோடிக்கு விலை போகிறது என்று கூறுகிறார்கள்.
இதில் சிறப்பு என்னவென்றால், மார்ட்டின் இந்த நிலத்தை அபகரித்துள்ளார். இந்த இடம் கோவிலுக்குச் சொந்தமான தர்ம நிலம். இந்த நிலத்தை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. இது பற்றி விசாரித்தால் பல்வேறு பூதாகரமான தகவல்கள் வெளி வருகின்றன.
1936ம் ஆண்டின் பத்திரம்.
இந்தச் சொத்து நாகர் ஆலயம் என்று இப்போது உத்தங்குடியில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமானது. இந்தச் சொத்தை ‘நாகர் பூஜை வகையறா தர்ம ட்ரஸ்ட்’ என்ற ட்ரஸ்ட் நிர்வகித்து வந்தது. இந்த ட்ரஸ்ட்டுக்கு சொந்தமாக உத்தங்குடியில் மொத்தம் 17 ஏக்கர்கள் உள்ளன.
இந்த ட்ரஸ்டை நிர்வகித்து வந்த நாகேந்திர ஐயர் என்பவர் 1941ல் இறந்து போகிறார். அதன் பிறகு, அவர் மூத்த மகன் ராஜகோபால ஐயர் நிர்வகித்து வருகிறார். ராஜகோபால ஐயர் 1952ல் இறந்த பிறகு, நாகேந்திர ஐயரின் இளைய மகன் விஸ்வநாத ஐயர் நிர்வகித்து வந்தார். இதற்குப் பிறகு இந்த ட்ரஸ்டை நிர்வகிப்பதில், அவருக்கும் அவரின் மற்றொரு சகோதரர் ராமமூர்த்திக்கும் ஏற்பட்ட சிக்கலால், இந்த ட்ரஸ்ட் மற்றும் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை 1978ல் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதை எதிர்த்து மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 1995ல் முடிவுக்கு வந்து, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து, மீண்டும் ட்ரஸ்ட் கட்டுப்பாட்டுக்கே கோயில் சொத்துக்கள் மீண்டும் வந்தன. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை செய்யத் தவறியது.
இதற்குப் பிறகு, விஸ்வநாதனின் மகன் குப்புசாமி இந்த ட்ரஸ்ட் நிர்வாகத்துக்கு வந்தார். அவர் வந்த பிறகு, தன் தந்தை விஸ்வநாதனை மீறி சொத்துக்களை விற்க முயன்றார். அதற்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்தார். திடீரென்று விஸ்வநாதன் காணாமல் போய் விட்டார். விஸ்வநாதன் காணாமல் போய் விட்டார் என்று அறிவித்த, அவர் மகன் குப்புசாமி, அவர் இஷ்டத்துக்கு தன் சொல்படி கேட்கும் ட்ரஸ்ட் மெம்பர்களை நியமித்து, அவர்கள் அனைவரும் சேர்ந்து ஏகமனதாக முடிவெடுத்தது போல, சொத்துக்கள் அனைத்தையும் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு விற்றனர்.
இவுரே இவுரு கம்பேனில வேலை பாக்கறேன்னு லெட்டர் குடுத்துக்குவாராம்….
இவ்வாறு விற்பதற்கு இவர்கள் சொன்ன காரணம் சிறப்பான கவனத்துக்கு உரியது. ட்ரஸ்டை நிர்வாகம் செய்து வந்தவர்களிடையே ஏற்பட்ட குழப்பங்களாலும், பல்வேறு வழக்குகள் காரணமாகவும், இந்த நிலத்தில் வரும் வருமானத்தை வைத்து செய்ய வேண்டிய தர்மகாரியங்களை சரி வர செய்ய முடியாமல் போய் விட்டது. அதனால், இந்தச் சொத்தை மார்ட்டின் என்பவருக்கு விற்று, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து, வேறு புதிய சொத்தை வாங்கி, அந்த வருமானத்தில் தர்ம காரியங்களை தொடர்வதற்காகவாம்… (சூப்பரப்பு. உங்கள் ஆலோசனையை தஞ்சாவூர் பெரிய கோவில் கல்வெட்டில் தான் எழுதி வைக்க வேண்டும்)….
இவ்வாறு கோயில் நிலம் 17 ஏக்கரையும், அபேஸ் செய்த மார்ட்டினை, அழகிரி சார்பாக அட்டாக் பாண்டி மிரட்டியதாக தெரிகிறது. இந்த மிரட்டல் மற்றும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக, 3.95 ஏக்கர் நிலம், காந்தி அழகிரிக்கு மாற்றப் படுகிறது.
இப்போது, இந்த கோவில் நிலத்தை பராமரித்து வந்து 81 வயது வி.வி.சுப்ரமணியன் என்ற பெரியவர், இது தொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இந்தச் சொத்து, மார்ச் 2010ல் வாங்கப் பட்டுள்ளது. இந்தச் சொத்தை வாங்குவதற்கு முன்பாகவே, அழகிரி மற்றும் அவர் குடும்பத்தினருக்கு கீழ் கண்ட சொத்துக்கள் இருந்தன.
மதுரை வடக்கு தாலுகா, ஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.
மதுரை வடக்கு தாலுகா, கள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு 2 கோடி.
மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர், அழகிரி பெயரில் மதிப்பு 5 கோடி.
மதுரை வடக்கு தாலுகா, சின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 40 லட்சம்.
மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
மதுரை தெற்கு, மாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு 1 கோடி.
மதுரை தெற்கு, பொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2 கோடி.
மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு 2 கோடி.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, தோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6 சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.
மதுரை மாவட்டம், நாகைமலை புதுக்கோட்டை, கே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
மதுரை மாவட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம், தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
மதுரை, திருமங்கலம், டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3 சென்ட் நிலம். மதிப்பு 5 கோடி.
தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.
சென்னை, சோழிங்கநல்லூரில், தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5 கோடி.
2.6 கிரவுண்ட் நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 993/2008) ஆவண மதிப்பு 2.20 கோடி. அசல் மதிப்பு 25 கோடி.
1800 சதுர அடி நிலம். வாங்கியவர் கயல்விழி வெங்கடேஷ், (அழகிரியின் மகள்) எண்.24, பத்மம், கலாஷேத்ரா அவென்யூ 1வது தெரு, திருவான்மியூர், சென்னை (ஆவண எண் 996/2008) ஆவண மதிப்பு 1.08 கோடி. அசல் மதிப்பு 7 கோடி.
சென்னை திருவான்மியூரில், தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு 3 கோடி.
காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில், மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு 3 கோடி.
சென்னை மாதவரம் பால்பண்ணை, ஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில், காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு 1 கோடி.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2 கோடி.
மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.
மதுரை மாட்டுத் தாவணி, அருகே 5 கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (8 மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு 1 கோடி.
இவ்வளவு சொத்துக்களையும் வைத்துக் கொண்டு, ஏழைகளை சுரண்டி லாட்டரி விற்றுப் பிழைக்கும் ஒரு திருட்டுப் பயலிடமிருந்து இப்படி சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் இவர்களின் பேராசைக்கு அளவே இல்லையா ?
மகாத்மா காந்தியின் வாசகங்களை இந்த முட்டாள்கள் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
“Earth provides enough to satisfy every man’s need, but not every man’s greed.
இந்த பூமி எல்லா மனிதனின் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு தேவையானவற்றை வழங்குகிறது, ஆனால் எல்லா மனிதனின் பேராசைகளையும் பூர்த்தி செய்வதற்கு அல்ல. (இதுல பேரு வேற காந்தி அழகிரியாம்… என்ன கொடுமை சரவணன் இது….)
இப்போது அழகிரியின் மந்திரி பதவி எப்படி காலியாகும் என்று பார்ப்போம். இந்த நில மோசடிப் புகாரில் அழகிரியின் மனைவி கைதாவது ஒரு புறம் இருந்தாலும், பிரதமருக்கு அளித்த தகவல்களில் உண்மையை மறைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தயாநிதி மாறன் 2ஜி விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ளார் என்ற குற்றச் சாட்டுகள் எழுந்த உடனேயே பிரதமர் மன்மோகன் சிங், தனது அமைச்சரவை சகாக்கள் அனைவரும், உடனடியாக அவர்களுடையது மற்றும் அவர்கள் குடும்பத்தினருடைய தொழில்கள், முதலீடுகள், சொத்துக்கள், கடன்கள் குறித்த விபரங்களை அடிளக்க வேண்டும் என்று கேபினெட் செயலாளர் சந்திரசேகர் மூலமாக அனைத்து அமைச்சர்களுக்கும் கடிதமாக அனுப்பினார்.
இதற்கு முன்பாகவே, ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் சொத்துக் கணக்கையும், தொழில் விபரங்களையும் ஆண்டுதோறும், பிரதமரிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனாலும், பிரதமர் மன்மோகன் சிங், மாறன் விவகாரம் ஊடகங்களில் வெளியானதும், இதை வலியுறுத்தினார்.
ஏற்கனவே உள்ள சுற்றறிக்கையின் படி, அனைத்து அமைச்சர்களும், ஒவ்வொரு ஆண்டும். ஜுன் 30க்குள் தங்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, மு.க.அழகிரியும் அவரது சொத்துக் கணக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த கணக்கில் மார்ச் 2010ல் தன் குடும்பத்தினர் நடத்தும் நிறுவனத்தின் பெயரில் வாங்கப் பட்டுள்ள உத்தங்குடி நிலத்தை காட்டாமல் மறைத்துள்ளார்.
இந்த விவகாரம் ஆகஸ்ட் 1 அன்று பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், எதிரொலிக்கப் போகிறதே…. அப்போது, பொய்த் தகவல் அளித்த அழகிரி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கேள்வி எழப் போகிறதே… !!!!!.
அஞ்சா நெஞ்சன் அவர்களே….. அய்யன் வள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ?
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
இதற்கு உங்கள் தந்தை என்ன உரை எழுதியிருக்கிறார் தெரியுமா ?
மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து, பழியும் வந்து சேரும்.
உரையெல்லாம் நல்லாத் தான் எழுதறீங்க… வள்ளுவருக்கு சிலையெல்லாம் வைக்கறீங்க… ஆனா உங்க குடும்பத்துல ஒருத்தர் கூட இதை பின்பற்ற மாட்டேங்கறீங்க…….