குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றுக்கு எதிராக, நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. கரையான் புற்றுக்குள் கை விட்டு விட்டோமோ என்று பிஜேபியே எண்ணும் அளவுக்கு நாடெங்கும் எதிர்ப்பு அலை பரவி வருகிறது.
விலைவாசி உயர்வு, பொருளாதார சரிவு, பணமதிப்பிழப்பு என இன்னலுக்குள்ளாக்கிய எந்த நடவடிக்கையையும் விட, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்கள் மக்களை வீதிக்கு வரும்படி ஒன்றிணைத்துள்ளன.
ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, மக்களவையில் உள்ள மிருக பலத்தால், இச்சட்டத்தை பிஜேபி அரசு எளிமையாக நிறைவேற்றி உள்ளது. மாநிலங்களவையில், அதிமுக போன்ற கோடரிக் காம்புகளால் இது சாத்தியமாகியிருக்கிறது என்பது பெரும் அவலம்.
குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன ?
குடியுரிமை திருத்தச் சட்டம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் வாழ்கின்ற மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் திட்டம். இந்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது. அதே போல் அஸ்ஸாமில் சில பகுதிகள், மேகாலயா, மிஸோராம், திரிபுராவின் சில பகுதிகள், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து மாநிலங்களுக்கு பொருந்தாது.
என்ன தான் ஆபத்து இந்த சட்டத்தினால்?
இந்தச் சட்டத்தினால் குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது என்றும் இந்தச் சட்டத்தில் என்ன தவறு என்றும் தோன்றும். ஆனால், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும், ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை என்று கூறுவதில்தான் சிக்கல் அடங்கியுள்ளது. இந்திய பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில் இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தார்கள். இந்தியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பலர் பங்களாதேஷ், பாகிஸ்தான் நாடுகளுக்கு குடிபோனார்கள். அதே சமயம் இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள் , கிறித்தவர்கள் இடம்பெயராமல் தங்கியிருந்தனர். ஆனால் அவர்களின் சதவீதம் குறைவே. இப்படி அங்கேயே நிரந்தரமாகத் தங்கியவர்கள் அந்நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்றும் அவர்களுக்காகவே இந்த சட்டம் இயற்றப்படுகிறது என்றும் அரசால் சொல்லப்படுகிறது. .
சரி இந்த வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் கூட, இந்த வாதம் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷுக்கு பொருந்தும். ஆப்கானிஸ்தானுக்கு எப்படி பொருந்தும் ? அப்போது “பிரிவினையினால் அண்டை நாட்டில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள்” என்ற கூற்றே பொய்தானே ?
மதரீதியான துன்புறுத்தல்கள் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு அண்டை நாடுகளில் நடைபெறுகிறது என்று அரசு சொல்வதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? ஏனெனில் மத ரீதியான துன்புறுத்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும், பங்களாதேஷில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நம்மிடம் எந்தத் தகவலும் இல்லை. மாறாக, பங்களாதேஷில் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் கூட்டமாக சேர்ந்து கொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் நாத்தீகர்களுக்கு இந்த சட்டத்தில் இடமில்லை.
மதரீதியாக ஒதுக்கப்படுபவர்களுக்கு இந்த சட்டம் என்று அரசு சொல்லுமானால் பாகிஸ்தானில், அகமதியா என்ற பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்களை, இஸ்லாமியர்களாகவே பாகிஸ்தான் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லையே. 1953 முதல் நடந்த பல கலவரங்களில், பல நூறு அகமதியர்கள் இறந்துள்ளனர். இன்னும் அகமதியா இஸ்லாமியர்கள் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் நடத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இச்சட்டத்தில் இடமளித்திருக்க வேண்டுமே…
அண்டை நாடான பூட்டானில் இரண்டு சதவிகிதமாக இருக்கும் கிறித்துவர்கள் மதரீதியாகத் தான் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கும் இச்சட்டத்தில் இடமில்லை.
மியான்மாரில் (பர்மா), ரோகிங்க்யா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், 40 ஆயிரத்துக்கும் மேல் இந்தியாவுக்குள்ளேயே வந்து விட்டனர். மத ரீதியான ஒடுக்குமுறையின் அடிப்படையில் குடியுரிமை என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரோஹிங்க்யா இஸ்லாமியர்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று கூறியிருக்கிறார்.
இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை பிஜேபி அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகிறது. ஆனால் எண்பதுகள் முதல் மொழி மற்றும் மத ரீதியான ஒடுக்குமுறைக்கு ஆளான இலங்கைத் தமிழர்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் குடியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள். இவர்களுக்கும் இந்த சட்டத்தின் கீழ் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்கிறார்கள். இவர்களுக்கான குடியுரிமை இல்லையென்பதை நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆக, மதரீதியாக ஒடுக்கப்படுபவர்களுக்கான சட்டம் இது அல்ல என்பதும் மொழிரீதியாக ஒடுக்கப்படுபவர்களுக்கான சட்டமும் அல்ல இந்தியப் பிரிவினையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான சட்டமும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.
பிறகு எதற்கு தான் இந்த சட்டம் பயன்படப்போகிறது ?
முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமே இது. அதனால்தான் நாம் முழுமூச்சோடு இதை எதிர்த்தாக வேண்டியிருக்கிறது..
ஏனெனில் அடுத்த ஒரு விஷஊசியை நம்மிடையே ஏற்றுவதற்காக அரசு தயாராகக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தோடு சேர்ந்து வருவதுதான், தேசிய குடிமக்கள் பதிவேடு. இதைத்தான் National Register of Citizens (NRC) என்று அழைக்கின்றனர்.
இந்த என்.ஆர்.சி முதன் முதலில் அஸ்ஸாமில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கானத் தேவை இருப்பதால் அசாமில் நிறைவற்றப்பட்டது. 1890களில், தேயிலை பயிர்த்தொழிலுக்காக, வங்காளிகளை குறிப்பாக இஸ்லாமிய வங்காளிகளை அஸ்ஸாமில் குடியேற்றினர் பிரிட்டிஷார். இதனால் தொடக்கத்தில் எந்த சிக்கலுமில்லாமல் இருந்தது. ஆனால் காலங்கள் செல்லச் செல்ல பூர்வீக அஸ்ஸாமியர்களுக்கும், வங்காளத்திலிருந்து குடிவந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படத் தொடங்கியது.
1905ல் வங்காள பிரிவினையை உருவாக்கினர் பிரிட்டிஷார். அப்போது, அஸ்ஸாம், தற்போது பங்களாதேஷாக உள்ள கிழக்கு வங்காளத்தோடு இணைந்து இருந்தது. வங்காளத்திலிருந்து அஸ்ஸாமில் குடியேறிய இந்து மற்றும் இஸ்லாமிய வங்காளிகளால் பூர்வீகமாக அஸ்ஸாமில் வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் அடையாளத்தை இழப்பதாக பிரச்சனை ஏற்பட்டது. இதன் நீட்சியாக எழுபதுகளிலும், எண்பதுகளிலும் அஸ்ஸாமில் பெரும் போராட்டம் நடந்தது. அதன் அடிப்படையில்தான் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியோடு, அனைத்து அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம் 15 ஆகஸ்ட் 1985ல் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன்படி அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறிய, பங்களாதேஷிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒப்பந்தம் ஆனது.
இதன்படி, ஏற்கனவே 1951ல் இறுதி செய்யப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேட்டினை, புதுப்பிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, பங்களாதேஷில் போர் தொடங்கிய, 24 மார்ச் 1971க்கு முன்னதாக அஸ்ஸாமில் உள்ளவர்கள் இந்தியர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர். அதற்கு பின்னர் உள்ளவர்கள் வெளியேற்றப்படுபவர்கள் என்பதுதான் இந்த ஒப்பந்தம்.
1983ம் ஆண்டு ஐஎம்டிடி (IMDT) என்று ஒரு சட்டம் உருவாக்கப்படுகிறது. Illegal Migrants (Determination by Tribunal) என்பதுதான் இதன் விரிவாக்கம். இந்த சட்டத்தின்படி, ஒருவர் இந்தியரா அல்லது வெளிநாட்டவரா என்று நிரூபிக்கும் பொறுப்பு, காவல் துறை அல்லது வருவாய்த் துறையை சேர்ந்தது. ஒருவர் வெளிநாட்டவராக இருந்தால், காவல் துறையோ, அல்லது வருவாய்த்துறையோதான் அதை நிரூபிக்க வேண்டும்.

அஸ்ஸாமை சேர்ந்த பெரோஸ் மோனி தாஸ். இவர் மூத்த மகன் பாபேனின் படத்தை கையில் வைத்திருக்கிறார். என்.ஆர்.சியில் இவர் மகனின் பெயர் விடுபட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டார். புகைப்படம் : கேரவன்
2005ம் ஆண்டு, IMDT சட்டம் தொடர்பான ஒரு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது. அவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஒருவர் இந்திய குடிமகனா இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். காவல் துறையோ, வருவாய் துறையோ இல்லை என்று உத்தரவிடுகிறது. அந்த உத்தரவுதான் புதிய என்.ஆர்.சிக்கான அடித்தளத்தை அமைக்கிறது.
2013ல் அஸ்ஸாமை சேர்ந்த அஸாம் பப்ளிக் வொர்க்ஸ் மற்றும் ஒரு என்.ஜி.ஓ, (அசாம் சன்மிலிட்டா மகாசங்கா & ஓஆர்எஸ்) சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கிறது. அந்த வழக்கில்தான் டிசம்பர் 2014ல், உச்சநீதிமன்றம், ஒரு வருடத்துக்குள், புதிய என்.ஆர்.சி பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறது.
திருத்தப்பட்ட என்.ஆர்.சி பட்டியல் 31 ஆகஸ்ட் 2019 அன்று வெளியிடப்படுகிறது. அந்தப் பட்டியலின்படி 19 லட்சம் மக்கள், அகதிகள் என்று தீர்மானிக்கப்படுகிறார்கள். இப்படி அகதிகள் என்று தீர்மானிக்கப்படுபவர்களுக்கு இந்த நாட்டின் குடிமகனாக தங்களை அங்கீகரிக்க வேண்டுமென்று சொல்வதற்கு ஒரு வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களுக்கு சென்று, தான் இந்திய குடிமகன்தானா என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தீர்ப்பாயம் என்பது ஏறக்குறைய நீதிமன்றங்கள் போல. அங்கே உள்ள அதிகாரிகளிடம், உங்களது பிறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு போன்ற ஆதாரங்களை சமர்ப்பித்து நீங்கள் இந்திய குடிமகன்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இதனை ஒருவர் நிரூபிக்கத் தவறினால் என்ன ஆகும் ?
அப்படி நிரூபிக்கத் தவறும்போது அரசு இதற்கென்று அமைத்துள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் (Detention Center) அடைத்து வைக்கப்படுவார்.
இதுதான் என்.ஆர்.சி எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் பின்னணி. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும், என்.ஆர்.சி உருவாக்குவதற்கான தேவை இது வரை ஏற்படவில்லை. ஏனெனில், அஸ்ஸாம் போல பிரத்யேகமான சிக்கல்களை வேறு எந்த மாநிலங்களும் இது வரை சந்தித்திருக்கவில்லை.
இந்தச் சூழலில்தான், அமித் ஷா இந்தியா முழுமைக்கும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.
நாடு முழுமைக்கும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும் என்று கூறும் அமித் ஷா.
ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் தவிர்த்து என்ற அம்சத்தை சேர்த்திருக்கிறார்கள். இதோடு சேர்ந்து இந்தியா முழுமையிலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்பட்டால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி, இஸ்லாமியர் அல்லாதவர்கள் இந்திய குடியுரிமை பெறுவதில் சிக்கல் இல்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தியா முழுவதும் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டால் யார் முதலில் குறிவைக்கப்படுவார்கள் ? இஸ்லாமியர்கள்தானே !!
மோடி மற்றும் அமித் ஷா, இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து இந்த சட்டத்தை கொண்டு வருகிறார்கள் என்பதற்கு அவர்களின் கடந்தகால நடவடிக்கைகளே சான்று.
காஷ்மீருக்கு மட்டும் எதற்கு 370 சட்டப் பிரிவு ? அவர்களுக்கு மட்டும் எதற்கு சிறப்பு அந்தஸ்து என்ற காரணத்தை கூறியே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் பிரிவு 370ஐ பிஜேபி அரசு ரத்து செய்தது.
அரசியல் சாசன பிரிவு 371, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் சில பகுதிகள், நாகாலாந்து, அஸ்ஸாம், மணிப்பூர், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் சில பகுதிகள், சிக்கிம், மிஸோராம், அருணாச்சல பிரதேசம் ஆகிய இடங்களுக்கு சில சிறப்பு அந்தஸ்தினை வழங்குகிறது.
இந்த 371வது பிரிவு குறித்து பிஜேபி என்றாவது பேசியுள்ளதை கேட்டிருக்கிறீர்களா ? கேட்டிருக்க மாட்டீர்கள். எப்போதும் பேச மாட்டார்கள். அவர்கள் கவனம் ஏன் பிரிவு 370ன் மீது இருக்கிறதென்றால், அந்தப் பிரிவு சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருப்பது இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் என்பதாலேயே.
தேசிய குடிமக்கள் பதிவேட்டினை நாடு முழுக்க அமல்படுத்தியே தீருவோம் என்று கொக்கரிக்கும் அமித் ஷா, அஸ்ஸாமில் என்.ஆர்.சி நிறைவேற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியான பிறகு சொன்னது என்ன தெரியுமா ? அஸ்ஸாமில் புதிய என்.ஆர்.சி தயாரிக்கப்படும் என்பதே.
ஏன் அமித் ஷா இப்படி பேசினார் ? எனென்றால், அகதிகள் என்று தீர்மானிக்கப்பட்ட 19 லட்சம் மக்களில் பாதிக்கும் மேல் இந்துக்கள். இதனால்தான் அஸ்ஸாமில் புதிய என்.ஆர்.சி என்று அறிவிக்கிறார் அமித் ஷா. இப்போது என்.ஆர்.சி யாரை குறிவைத்து என்று தெரிகிறதா ?
இது இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று நாம் நினைத்தால் பிழை செய்தவர்கள் ஆகிறோம்.
அமித் ஷா சொல்ல வருவது என்ன தெரியுமா ? இதே நாட்டில் பிறந்து வளர்ந்த நாம் அனைவரும், இந்தியாவில்தான் பிறந்தோம் என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சிறை செல் என்பதுதான். அது மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அல்லாத வேறு நாட்டில் இருந்து இந்துக்களை வரவைத்து ஒரு மாபெரும் இந்து நாடாக அமைக்க வேண்டும் என்பதும் தான் நோக்கம். இவர்கள் ஏற்கனவே அகண்ட இந்து ராஜ்ஜியம் என்று முழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
முறையான ஆவணங்களும் ஆதாரங்களும் யாரிடம் இருக்கும் ? 200 அல்லது 300 ஆண்டுகளாக, செல்வந்தர்களாக, படித்தவர்களாக, சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களிடம் இருக்கும். பார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர் சாதி இந்துக்களிடம் ஆவணங்கள் இருக்கும். பார்ப்பனர்களில், எழுத்தறிவில்லாதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணி விடலாம் அல்லவா ? அதே போல உயர் சாதி இந்துக்களில் பெரும்பாலானோர் நில உடமையாளர்களாக இருப்பார்கள். படிப்பறிவில்லாவிட்டாலும், நில ஆவணங்களை காண்பித்து அவர்களால் தங்கள் குடியுரிமையை நிலை நாட்ட முடியும்.
தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், நிலமில்லாதவர்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரிடம் ஆவணங்கள் சரியாக இருக்குமா என்ன ? அவர்களைப் போன்றோரை, நாடற்ற அபலைகளாக்கி, வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களுக்கும், நீதிமன்றத்துக்கும், திறந்த வெளிச் சிறைச்சாலைக்கும் அனுப்புவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.
நிலமற்ற ஒரு முதல் தலைமுறை பட்டதாரியின் வீட்டில், அவரின் பெற்றோர்கள் படித்தவர்களாகவா இருப்பார்கள் ? அவர் பெற்றோரிடம் நிலமும் இல்லை. வேறு ஆவணங்களும் இல்லை என்றால், அவர்கள் நாங்கள் இந்தியாவில்தான் பிறந்தோம் என்று நிரூபிக்க என்ன வழி ? எந்த வழியும் இல்லை. ஆனால் அவர்களே இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருந்தால் சிக்கல் இல்லை என்று சொல்கிறார் அமித் ஷா. இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்கள் நிலை என்ன என்பதை எண்ணிப் பாருங்கள்.
இந்துவாகவோ, கிறித்துவராகவோ இருந்தாலும், குறைந்தது உங்கள் மதத்தையாவது, வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் ஆவணப் பராமரிப்புகள் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். ஒரு சாதாரண சாதிச் சான்றிதழோ, அல்லது வருமான சான்றிதழோ பெற வேண்டுமென்றால் எப்படி தாலுகா அலுவலகத்துக்கு நடையாக நடக்கிறோம் என்பதையும் நாம் அறிவோம்.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் 90 கோடி மக்களை உங்கள் குடியுரிமையை நிரூபியுங்கள் என்று உத்தரவிடுவது எத்தனை பெரிய கொடுமை ?
இன்று தகவல் தொடர்பு பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டது. ஆனாலும் அனைவரையும் அவை போய்ச் சேரவில்லை என்பதற்கு நம்மிடம் சமீப கால உதாரணம் ஒன்று உண்டு. திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, பூமலூர் கிராமத்தை சேர்ந்த ரங்கம்மாள் மற்றும் தங்கம்மாள் ஆகிய 75 வயதை கடந்த இரு மூதாட்டிகள், சிறுக சிறுக 45 ஆயிரம் பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளனர்.
அவர்கள் சேர்த்து வைத்த பணம் 8 நவம்பர் 2016ல் செல்லாத ரூபாயாக அறிவிக்கப்பட்டது. அப்போது இவரின் மகன் செல்வராஜ், பணம் செல்லாததாகி விட்டது என்ற தகவலை கூறியபோது, அவர்கள் தங்களிடம் எந்த சேமிப்பும் இல்லை என்று கூறி விட்டார்கள். மகனை விட அரசின் மீது அவர்கள் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை. இணைப்பு.
நவம்பர் 2019ல்தான் அவர்கள் இந்த தகவலையே அறிகிறார்கள். இதுதான் இந்தியா. இந்த தங்கம்மாள், ரங்கம்மாள்களை போல, லட்சக்கணக்கான படிப்பறிவில்லாத இளையவர்களும் முதியவர்களும் உள்ள நாடு இது.
இப்படியொரு நாட்டில், நீ இந்த நாட்டில்தான் பிறந்தாயா என்பதை ஆவணங்களோடு நிரூபி. இல்லையென்றால் சிறை செல் என்று சொல்வது எத்தகையதொரு கொடுமை !!!.
மோடி அமித் ஷாவின் இந்த திட்டத்தின் நோக்கம், இந்தியாவை இந்து நாடு என்று மறைமுகமாக அறிவிப்பதே. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ள “மதச்சார்பற்ற” (Secular) என்ற வார்த்தையை நீக்குவது அவ்வளவு சுலபமல்ல. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதற்கு பதிலாக இஸ்லாமியர்களை நாடற்றவர்களாக அறிவித்து விடலாம் அல்லவா ? அதற்காகத்தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC).
அமித் ஷா – மோடி என்ற இரு நாஜிக்களின் திட்டத்தின்படி இந்தியாவை அப்படி எளிதாக உருமாற்றம் செய்து விட முடியாது. அவ்வளவு எளிதில் சிதைத்து விட முடியாது என்பதைத்தான் நாடெங்கும் பொங்கி எழுந்து வரும் போராட்டங்கள் நமக்கு நிரூபிக்கின்றன. இந்தியா என்ற நாடு சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் எத்தனையோ அரசுகளால் சிக்கல்களை சந்தித்திருக்கிறது. பல சர்வாதிகாரிகளையும் கொடுங்கோலர்களையும் பார்த்திருக்கிறது. மோடியும், அமித் ஷாவும், இதில் முதலும் அல்ல. கடைசியுமல்ல.
இவர்களின் காலத்துக்குப் பின்பும் இந்தியா வாழும். அந்த இந்தியாவை ஒரு மனிதநேயமிக்க இந்தியாவாக, அன்பு நிறைந்த இந்தியாவாக மாற்றி விட்டுச் செல்வது நம் ஒவ்வொருவரது கடமை.
அதற்காகத்தான் நாம் இப்போது இந்த அடக்குமுறைச் சட்டத்துக்கு எதிராக நமது குரல் உரத்து ஒலிக்க வேண்டும். மவுனமாக இருப்பது, இந்த அக்கிரமத்துக்கு துணை போவதேயன்றி வேறல்ல.
ஒரு அரசென்பது மக்களுக்கானது என்று ஒவ்வொரு முறையும் அரசு மறக்கும்போது பதிலடி மக்களிடமிருந்தே வந்திருக்கிறது. கோடிக்கணக்கான குடிமக்கள் எதையும் சகித்துக் கொள்ளவே செய்கிறார்கள். இதனை வெகு சுலபமான ஒன்றாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கெதிரான சட்டங்களை நடு இரவுகளில் இயற்றினால் என்னவாகும் என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
தெரிந்து கொள்ளும்வரை மக்கள் கற்றுக்கொடுத்தபடி தான் இருப்பார்கள்.
i accept ur view and thoughts heartfully and warm eyes .
Dear Savukku, Be always neutral. and judicial. What is the population of India.? Is it possible to give asylum to all refugees from all over the world? The opposition are playing vote bank card in this issue. If a section of Muslims are being ill treated then what all other muslim countries and Muslim populations are doing? Do they raise their voice? If BJP government is asking any proof from the indian muslims to continue their stay in India it is all right. But why the Government should not ask identity or regulate the stay in India? The saftey of the common innocent people of India is more important than any other thing. who is DMK ? Are they our leader? Ask DMK to conduct agitation against Pakistan, if a section of Muslim are ill treated there? Did he aware of the ground reality of the Hindus in the hands of Muslims there? But ask him at least try to speak with out a paper pit in the stage. Don’t support DMK or congress or any other party in this issue.
அப்பா சவுக்கு..நீ தூங்கி வழிந்து இத்தனை நாள் கழித்து எந்த பக்கம் யாரு காசு கொடுப்பாங்கன்னு காத்திருந்து எழுதினா இப்படித்தான் அரைகுறையா இருக்கும். ஈழத் தமிழனுக்கு நாம் குடியுரிமை வழங்கினால் அது அவர்களின் அடிப்படை இலங்கை அரசுக்கு எதிரான போராட்ட நோக்கத்திற்கு நேரெதிர் இல்லையா? அதை நீர்த்து போக செய்யாதா? அரசியலுக்காக எதிர் கட்சிகள் முட்டாள்தனமாக எதிர்பதை நீங்கள் கண்மூடி ஆதரிப்பது உங்களையும் முட்டாளாய்த்தான் சித்தரிக்கும்.
Don’t support BJP blindly. If you agree with this CAB, then what about our Srilankan Tamils who came from 1983 riots. Why they are eliminated? There is no answer for that. So don’t support blindly and think about in a broader view. Never forget the demonetization announcement and never forget about those 47 people died by standing in hot sun for days and nights and those who committed suicide. Never forget the Godhra incident and never forget or own Jallikattu & Sterlite protests. When Himachal Pradesh is having special status that outsiders cannot work and purchase land, then why it is removed for Kashmir? After Independence, Union territories like Goa and Pondicherry became States but this is a first time a State is transferred in to Union Territory. Why? It is not just because of terrorists, it is a targeted and systematic discrimination. First of all everyone should have equal democracy but unfortunately all the political leaders in Kashmir are under house arrest for more than 3 months? Are you afraid of opposition political leaders? Everyone should have a freedom to write & speak as long as it is not affecting someone else.
Sir I have not expected an uncooked story like this from you!! So biased view!! Illegal immigration would only lead to further detorriation of our soverignty and reduces government’s ability to serve our own citizens! The opposition have a vested interest with the illegal immigrants because of the vote banks politics!! Else there is no reason for these violent protests!! Students and the minorities are being used for their political interests!! Among the dead in the riots there is not even 1 political leader why?? Please do not add fuel into the fire!!
Mr Subramaniam and Mr Mani. Can you explain what is wrong information in the article?. We need to provide proper arguments. Just denying all the arguments is not an argument.
Mr Shankar, please don’t spread lies. Read the Act carefully and get some proper legal advise before putting out comments
DMK Sombu savukku Shankar…..you already biased……please don’t spread false information about CAB……you are not going to die……appavigal thaan intha kalavarathal saga pokirigal……ungalathu posta padipathai vittu romba nalla akkuthu….