ஏமாற்றப் பட்ட ஜார்ஜ் வேறு யாருமல்ல….. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி எஸ் ஜார்ஜ் தான் அது. இவர் எப்படி ஏமாற்றப்பட்டார் ? அதைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி வருவதற்கு முன்பாக கருணாநிதியை விட அதிகாரம் படைத்தவராக இருந்தவர் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி ஜாபர் சேட். இவர் நடத்திய ஊழல் காரியங்களும், மனித உரிமை மீறல்களும், சட்ட விரோத ஒட்டுக் கேட்புக்களையும் பற்றி நாம் விரிவாகவே பார்த்திருக்கிறோம்.
ஆனால் இந்தக் கட்டுரை அவரைப் பற்றியதல்ல.. அவருக்கு இன்னும் இருக்கும் செல்வாக்கைப் பற்றியது. ஜாபர் சேட்டின் சட்ட விரோத ஒட்டுக் கேட்புக்கள், அரசியல் வாதிகளோடு நிற்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சவுக்கின் நண்பர்கள், காவல்துறையின் உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், என்று இந்த ஒட்டுக்கேட்பு வளையத்துக்குள் வராத பிரிவினரே கிடையாது எனும் அளவுக்கு சட்டவிரோத ஒட்டுக் கேட்பு பெரும் அளவில் நடைபெற்று வந்தது.
இந்த ஒட்டுக் கேட்புக்களுக்கெல்லாம் துணையாக இருந்தவர் உளவுப் பிரிவில் பணியாற்றிய குமரேஷ் என்ற காவல் ஆய்வாளர். இவர் 1996ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளர் பேட்சைச் சேர்ந்தவர். அடிப்படையில் இவர் பொறியியல் பட்டதாரி. ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பிறகும், இவர் ஒட்டுக் கேட்புப் பிரிவிலேயே தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
ஒரு அரசுக்கு தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் உரிமை இருக்கிறதா என்றால் நிச்சயமாக உண்டு. தீவிரவாதிகள், நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய சட்டவிரோதமாக காரியங்களில் ஈடுபடுபவர்கள், போன்ற பிரிவினரின் தொலைபேசிகளை இடை மறித்து கேட்க அரசுக்கு உரிமை உண்டு. எப்போது ஒட்டுக் கேட்கலாம் என்பது சட்டத்தில் தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது. (1) இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப் படும் (2) தேசத்தின் பாதுகாப்பு (3) அந்நிய நாடுகளுடனாக உறவுகள் பாதிக்கப் படும் போது (4) பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது (5) ஒரு குற்ற நிகழ்வு நடைபெறும் என்கிற போது, அதை தடுப்பதற்காக ஆகிய சூழலில் மட்டுமே தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படலாம் என்று சட்டம் சொல்கிறது. இது குறித்து 1997ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் எப்படி தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் வகுத்தது.
ஒரு நபரின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப் பட வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டால், ஒரு மாநிலத்தின் உள்துறைச் செயலாளர் எழுத்து பூர்வமான ஆணை பிறப்பிக்க வேண்டும். எதற்காக ஒட்டுக் கேட்கப் பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் தெளிவாக அந்த ஆணையில் குறிப்பிடப் பட வேண்டும். அந்த ஆணை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும், அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை நீட்டிக்கலாம் என்பதே அந்த வழிகாட்டும் நெறிமுறைகள்.
ஆனால் இது போன்ற எந்த நெறிமுறைகளும் கடந்த காலத்தில் பின்பற்றப் பட்டது கிடையாது. ஏனென்றால் அப்போது உள்துறைச் செயலாளர்களாக இருந்த மாலதி மற்றும் ஞானதேசிகன் ஆகியோர், “ஜாபர் கொள்ளைக் கூட்டத்தின்” அங்கத்தினர்களாக இருந்தது தான். இதனால் சகட்டு மேனிக்கு எல்லோருடைய தொலைபேசிகளும் ஒட்டுக் கேட்கப் பட ஜாபர் கேட்ட இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள் மாலதியும், ஞானதேசிகனும். (அவர்களுக்கு என்ன பலவீனமோ ?)
இது போன்ற சட்ட விரோத ஒட்டுக் கேட்புக்கள் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழும் உரிமையை மீறுவது மட்டுமல்ல, பேச்சு சுதந்திரத்தை மீறும் செயலாகும்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஒரு விவகாரத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.
நியூஸ் ஆப் தி வேர்ல்ட் என்று 168 ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருந்த ஒரு செய்தித் தாள் தொலைபேசி ஒட்டுக் கேட்பு என்ற ஒரே காரணத்துக்காக மூடப்பட்டது என்பது தெரியுமா ?
1843ம் ஆண்டு முதல் வெளி வந்து கொண்டிருந்த செய்தித் தாள் தான் நியூஸ் ஆப் தி வேர்ல்ட். இந்த செய்தித் தாள், 1969ம் ஆண்டு மீடியா முதலை ராபர்ட் முர்டாக் (ஸ்டார் குழுமம்) வந்து சேர்கிறது. அப்போது முதற்கொண்டு, இந்த செய்தித்தாள், செய்தி சேகரிப்பதில் எவ்விதமான நெறிமுறைகளையும் பின்பற்றாமல், சகட்டு மேனிக்கு விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்தது. பொதுமக்கள், அரசியல்வாதிகள், பெரிய விபத்துக்களின் பாதிக்கப் பட்டோர், போரில் மகனை இழந்தோர் போன்றவர்களின் தொலைபேசிகளையும், ஈமெயில்களையும் இடைமறித்து, அதிலிருந்து செய்தியை வெளியிடத் தொடங்கினர். தடையில்லாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த ஒட்டுக் கேட்பு, செப்டம்பர் 2010ல் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைக்குப் பிறகு சிக்கலைச் சந்தித்தது.
இந்தக் கட்டுரை வெளியான பிறகு, லண்டன் மாநகர காவல்துறையும், லண்டன் பாராளுமன்றமும் விசாரணையை தொடங்கின. தொடர்ந்து இச்செய்தித்தாளின் முன்னாள் மற்றும் இந்நாள் நிருபர்கள் கைது செய்யப் பட்டனர். கடும் நெருக்கடி காரணமாக ஜுலை 7 அன்று, இந்த செய்தித்தாள் மூடப்படும் என்று அறிவிக்கப் பட்டு, இன்று அச்செய்தித்தாளின் கடைசி வெளியீடு வந்தது.
மீடியா முதலையாக இருக்கும் ரூபர்ட் முர்டாக்குக்கே இந்த நிலைமை இங்கிலாந்தில். ஆனால், தமிழகத்தில், இதை விட மோசமான விதி மீறல்களில் ஈடுபட்டு விட்டு, மீண்டும் சென்னையிலேயே நல்ல பதவியில் அமர்ந்திருக்கிறார் என்றால் என்ன சொல்வது ?
இந்த குமரேஷ் என்ன மாதிரியான காரியங்களில் ஈடுபட்டார் என்பதை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளி வந்த கட்டுரை விரிவாகவே எடுத்துரைத்தது. தேர்தல் அறிவிப்பு வெளி வந்த பிறகு, ஜெயலலிதா விஜயகாந்த் இடையே கூட்டணி ஏற்படக் கூடாது என்பதற்காக பல்வேறு அயோக்கியத்தனமான காரியங்களில் இந்தக் குமரேஷ் ஈடுபட்டதாக குமுதம் ரிப்போர்ட்டரில் தகவல் வெளி வந்திருக்கிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு உரையாடலை வெட்டி, ஒட்டி, நமது இஷ்டத்துக்கு எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியுமே ? இப்படிப் பட்ட சூழலில், ஜெயலலிதாவை விஜயகாந்த் அவதூறாகப் பேசியதாக ஒரு உரையாடலும், விஜயகாந்தை ஜெயலலிதா அவதூறாகப் பேசியதாக ஒரு உரையாடலும் தயார் செய்து, சம்பந்தப் பட்ட நபர்களிடத்தே அனுப்பவும் ஏற்பாடு செய்தார் குமரேஷ் என்றால் அவரை மன்னிக்க முடியுமா ? ஒரு வேளை விஜயகாந்துக்கும், ஜெயலலிதாவுக்கும், ஜாபர் சேட் மற்றும் குமரேஷின் தகிடுதத்தங்கள் தெரிந்திருந்ததால், அந்த உரையாடல்களை பொருட்படுத்தாமல் போயிருக்கலாம். தெரியாமல் இருந்திருந்து, அதை நம்பி, கூட்டணி ஏற்படாமல் போயிருந்தால் ? கூட்டணி ஏற்பட்டிருக்காவிட்டாலும், திமுக தோற்கடிக்கப் பட்டிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் வாக்குகள் பிரிந்து, இன்று திமுகவுக்கு மேலும் ஒரு 20 எம்எல்ஏக்கள் கிடைத்திருந்தது என்று வைத்துக் கொள்ளுங்களேன்…. 900 கோடி ரூபாயை ஆட்டையைப் போட்டு விட்டு, திமிர்த்தனமாக கோயில் காளை போல சுற்றி வந்த தனது பேரனை மந்திரிப் பதவியிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி உத்தரவிட்டது சோனியா காந்தி. சிபிஐ விசாரணையில் இருக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்திலேயே தெரிவித்த பின்னாலும், நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்த மாறனை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். இதற்கு ஊடகங்கள் தான் காரணம் என்று அறிக்கை வெளியிடுகிறார் என்றால் கருணாநிதிக்கு என்ன திமிர் இருக்க முடியும் ? என்ன இறுமாப்பு இருக்க வேண்டும் ?
இப்படிப்பட்ட கருணாநிதிக்கு மேலும் 20 எம்எல்ஏக்களை கொடுத்திருந்தால் என்னென்ன பேசியிருப்பார் தெரியுமா ?
“நரசிம்மராவ் என்ற முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஊழல் புரிந்தால் அவரை கைது செய்யவில்லை. காஷ்மீர் பண்டிட் சாதியைச் சேர்ந்த நேருவின் வம்சாவளியில் பிறந்த காரணத்துக்காகவே ராஜீவ் காந்தி பீரங்கியில் ஊழல் செய்திருந்தும் அவர் கைது செய்யப் படவில்லை. அவ்வளவு பெரிய பீரங்கியில் ஊழல் செய்தவரையே கைது செய்யாத போது, துளியூன்டு செல்போனில் ஊழல் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று இன்று ஊடகங்கள் போடும் கூப்பாடு, தமிழனுக்கு வந்த சோதனை அன்றோ ? இந்தச் சோதனையை எதிர்கொண்டு, கைபர் கணவாய் வழியே வந்த சதிகாரர்களின் சதிச்செயலை முறியடிக்க வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் கடமையன்றோ ? “ என்று அறிக்கை விட்டாலும் விட்டிருப்பார்.
அதனால் தான் குமரேஷ் செய்த காரியத்தை மன்னிக்கவே முடியாது என்கிறது சவுக்கு. குமரேஷ் சார்பாக பேசிய காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அவர் அவருக்கு இட்ட பணியைத் தானே செய்தார். அவருக்கு வேறு என்ன வழி இருந்திருக்க முடியும் என்று கேட்கிறார்கள். அவர்களைப் பார்த்து சவுக்கு கேட்க விரும்புவது….. குமரேஷிடம் அவர் மனைவியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டு பதிவு செய்து தரச் சொன்னால் செய்திருப்பாரா ? மனைவிக்குத் தெரியாமல் அவர் ‘வைத்திருக்கும்’ காதலியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டுத் தரச் சொன்னால் தந்திருப்பாரா ? அப்போது மறுத்திருக்க மாட்டார் ? உயர் அதிகாரி சொன்ன கட்டளையை தட்ட முடியாது, அதனால் செய்தேன் என்று சொல்லும் காவல்துறையினர் அத்தனை பேரும் அயோக்கியப் பேர்விழிகள் என்றே சவுக்கு சொல்லும்.
குமரேஷ்
உயர் அதிகாரி, கீழே பணியாற்றும் அதிகாரிகளின் மகன்களை பொய் வழக்கில் கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டால் எந்த அதிகாரியாவது செய்வாரா ? அப்போது மறுத்துப் பேசுவது போலத்தானே சட்டவிரோதமான உத்தரவுகள் வழங்கப் படும்போதும் மறுத்துப் பேச வேண்டும் ? மறுத்துப் பேசினால் அதிக பட்சம் பணியிட மாறுதல் வரும். பனிஷ்மென்ட் வரும்.. அதற்காக மனசாட்சிக்கு விரோதமாக, சட்டவிரோதமாக என்ன உத்தரவிட்டாலும் செய்து விடுவார்களா ? ஆகையால் குமரேஷ் அவர் உயர் அதிகாரி இட்ட பணியைச் செய்தார் என்பதையெல்லாம் ஏற்க முடியாது.
ஜெயலலிதாவின் உரையாடலை பதிவு செய்து, எடிட் செய்து, அதை திரித்து விஜயகாந்திடம் சேர்ப்பிப்பது உளவுத் துறையின் ஆய்வாளர் வேலையா ?
இப்படிப் பட்ட குமரேஷ் இன்று எங்கே பணியாற்ற வேண்டும் ? கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு “செக்யூரிட்டி ஆபீசர்” ஆக நியமிக்கப் பட்டிருக்க வேண்டாமா ? ஆனால், இந்த குமரேஷ் இன்று சென்னை ஆவணக் காப்பகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இது என்னவோ அதிகாரம் இல்லாத பதவி போலத் தோன்றினாலும், இந்தப் பணி கொடுக்கும் சொகுசு அப்படி ஒரு சொகுசு. ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் அலுவலகத்தில் இருந்தாலே போதும். வரவில்லையென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். வேலையும் இருக்காது. இந்த ஆவணக்காப்பக அலுவலகத்தில் இருந்து குமரேஷின் வீடு ஐந்து நிமிடத்தில் நடந்து செல்லும் தூரம். தினமும் மதியம் சூடாக வீட்டு உணவை சாப்பிடலாம். இப்படிப் பட்ட சட்டவிரோதமாக காரியங்களை செய்தவருக்கு இதுவா தண்டனை ?
ஆய்வாளர் பணியிட மாற்றங்களை முடிவு செய்வதற்கு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி மற்றும் உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி ஆகியோர் கொண்ட குழு கூடி, யாரை எங்கே நியமிக்கலாம் என்று முடிவு செய்யும். தற்போது முறையே ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் மற்றும் கண்ணாயிரம் ஆகியோர் அந்தப் பதவிகளில் இருக்கிறார்கள்.
இந்தக் கமிட்டி கூடி, ஆய்வாளர் நியமனங்களை முடிவு செய்கையில், குமரேஷின் பெயர் வந்துள்ளது. இந்தப் பெயர் வந்தவுடன், நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், இவரை சென்னையிலேயே ஏதாவது ஒரு இடத்தில் நியமிக்கலாம் என்று சொல்லுகிறார். சொன்னவுடன், கண்ணாயிரம், இவர் யாரென்றே தெரியாதது போல, “யார் இந்த நபர்… உளவுத்துறை இன்ஸ்பெக்ட்ரா…. சரி.. சென்னையிலேயே ஆவணக் காப்பகத்தில் போட்டு விடலாம்” என்று கூறியிருக்கிறார்.
டி.கே.ராஜேந்திரன்
மற்றொரு உறுப்பினரான ஜார்ஜுக்கு குமரேஷ் யார், அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற விபரங்கள் எதுவும் தெரியாது. அதனால் ஜார்ஜ் குமரேஷ் நியமனத்துக்கு எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. இப்படித்தான் குமரேஷ் சென்னையில் இன்று சொகுசான பதவியில் நியமிக்கப் பட்டிருக்கிறார்.
காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்து கொள்வது என்பது மிக மிக முக்கியமான ஒரு விஷயம். தகவல் தெரியவில்லை என்றால், காவல்துறையில் காலம் தள்ளவே முடியாது. இப்போது ராமநாதபுரத்தில் கருவாடு விற்றுக் கொண்டிருக்கும் ஜாபர் சேட்டுக்கு, சென்னையில் இருந்து தகவல் தெரிவிக்க ஒருவரும் இல்லை. அவருடைய பல விசுவாசிகள் அணி மாறி விட்டார்கள். ஆனால் இன்று வரை அவருடைய விசுவாசியாகவே தொடர்பவர் இந்த குமரேஷ். குமரேஷ் சென்னையில் இருந்தால் தான் ஜாபருக்கு, சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் நடக்கும் தகவல்களை உடனுக்குடனாக தெரிவிக்க முடியும். இதனால், ஜாபர் சேட் கேட்டுக் கொண்டதற்கிணங்கவே, டி.கே.ராஜேந்திரன், குமரேஷை சென்னையிலேயே நீட்டித்ததாக தெரிகிறது. குமரேஷ் சென்னையில் நீட்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜாபர் சார்பாக வலியுறுத்தியது கண்ணாயிரமே…. ஆனால், கண்ணாயிரம் ஒரு ஆய்வாளர் சென்னையில் இருக்க வேண்டும் என்று சொன்னால், ஜார்ஜுக்கு சந்தேகம் ஏற்படும் என்ற காரணத்தால், டி.கே.ராஜேந்திரனை குமரேஷை சென்னையில் பணியமர்த்தலாம் என்று சொல்லச் சொல்லி, அதில் தனக்கு ஆர்வமே இல்லாதது போல காண்பித்துக் கொண்டு, அதை ஆமோதித்தது போல நாடகம் ஆடியது கண்ணாயிரமே என்கிறது உளவுத்துறை வட்டாரம்.
ஜார்ஜ்
இது குறித்து குமரேஷின் கருத்தை அறிவதற்காக சவுக்கு சார்பாக அவரிடம் பேசப் பட்டது. இது போல, உங்களுக்கு சென்னையில் நியமனம் கிடைப்பதற்காக கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உதவி செய்தாராமே என்று கேட்ட போது, “நீங்களே காவல்துறையில் இருந்தவர் தானே.. இது போல ட்ரான்ஸ்பர் அன்ட் போஸ்டிங் சாதாரமாணது என்பது உங்களுக்குத் தெரியாதா“ என்றார். “காவல்துறையில் இருந்ததால் தான் கூறுகிறேன், கடந்த ஆட்சியில் நீங்கள் செய்து கொண்டிருந்த காரியத்திற்கு, நீங்கள் கன்னியாக்குமரியில் தான் இருக்க வேண்டும், சென்னையில் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிறோம்“ என்று சொன்னதற்கு, “உயர் அதிகாரிகள் இட்ட வேலையைச் செய்தேன் சார். எனக்கு ஒன்றும் தெரியாது“ என்று கூறி முடித்துக் கொண்டார். மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட போது, அழைப்பை ஏற்கவில்லை.
நடந்த சம்பவங்கள் அத்தனையையும் அலசிப் பார்கையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜார்ஜ் ஏமாற்றப்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
இதை சரி செய்ய வேண்டிய அதிகாரிகள் சரி செய்வார்களா ?