நாடு முழுவதும் தேசியக்குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு (CAB) எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் மதத்தால் (முஸ்லீம் அல்லாத) ஒடுக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதே அந்த சட்டதிருத்தம். உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு தருணங்களில் தேசிய மக்கள் பதிவேட்டிற்கு (NRC) முதல் படி தான் CAB என்று கூறியிருக்கிறார் இணைப்பு. அதன் படி NRC வரும்பட்சத்தில் முறையான ஆவணங்கள் கொடுக்க முடியாத முஸ்லீம் அல்லாதவர்கள் CAB சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறவும், முஸ்லீம்கள் நாடற்றவர்களாக மாறுவதும் சாத்தியம் என்பதால் தான் இத்தனை போராட்டமும்.
போராட்டங்கள் கைவிடப்படாத நிலையில் மோடி அவர்கள் டிசம்பர் 22இல் ஆற்றிய உரையில் NRC என்ற வார்த்தையை கூட இதுவரை பிரயோகப்படுத்தியது இல்லை எனவும் இந்தியாவில் எந்த மூலையிலும் அகதி முகாம்கள் இல்லை எனவும் ஒரு பச்சை பொய்யை கூறினார். இணைப்பு
வெவ்வேறு கருத்துகளை கூறி மக்களை திசை மாற்றும் வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே 24 டிசம்பர் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிக்க 4000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது இணைப்பு. பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை பிரகாஷ் ஜாவ்டேகர் NRCக்கும் NPRக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை எனவும், எந்த ஆவணங்களும் தர தேவை இல்லை, கைரேகை போன்றவை இதில் பதிவு செய்ய தேவை இல்லை எனவும் கூறினார்.
இது எந்த அளவு உண்மை ? NPR NRCக்கு வழிவகுக்குமா? இதை பற்றி அறிய சற்று பின்னோக்கி 1999க்கு செல்வோம். கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தான் ராணுவ வீர்கள் இந்திய எல்லைக்குள் சாமானியர்கள் போல ஊடுருவினர். போர் முடிந்தவுடன் வாஜ்பாய் அரசு ஒரு விசாரணை குழு அமைத்தது. முதற்கட்டமாக எல்லையில் வசிப்பவர்களுக்கு அடையாள அட்டை கொடுக்கவும் பின்னர் அதை நாட்டில் உள்ள அனைவர்க்கும் விரிவுபடுத்தும்படியும் அந்த குழு பரிந்துரைத்தது இணைப்பு.
இந்திய குடியுரிமை சட்டம் 1955இன் கீழ் அனைவருக்கும் அடையாள அட்டை (Multi Purpose National Identity Cards – MNIC) கொடுக்க 17 நவம்பர் 2001ஆம் ஆண்டு நடந்த அனைத்து முதலமைச்சர் மாநாட்டில் மத்திய அரசு பரிந்துரை செய்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2002இல் பாராளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் வித்யாசாகர் ராவ் இதை பற்றி கூறியது இணைப்பு
இந்த திட்டத்தை செயல்படுத்த 100 கோடி மக்கள் கொண்ட தகவல்களை திரட்டி, பிறப்பு இறப்பை பதிவு செய்வதில் தொடங்கி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது வரை செய்தாக வேண்டும். அரசு போதிய பரிசோதனை செய்த பின், சட்டம் இயற்றி இதை செயல்படுத்தும்.
அப்படி உதயமானது தான் ஆதாரின் முன்னோடியான பந்நோக்கு அடையாள அட்டை திட்டம். MNICக்கும் ஆதாருக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே தனி நபர் விபரங்களை அவர்களின் கைரேகையுடன் சேர்த்து பதிவு செய்வதே ஆகும். இதற்கு முன் போலி ஓட்டுநர் உரிமையை கண்டுபிடிக்க வடிவமைக்கப்பட்ட “Smart Card Operating System for Transport Application’ (SCOSTA)” அடிப்படையில் இதுவும் திட்டமிடப்பட்டது.
2003ஆம் ஆண்டு இந்தியத் தலைமை பதிவாளரின் (Registrar General of India)ன் தலைமையில் அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. அப்பொழுது அவர்கள் வெளியிட்ட செய்தி மடலில் முதற்கட்டமாக NPR உருவாக்குவதையும் அதனடிப்படையில் NRC உருவாக்குவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது இணைப்பு
அதே ஆண்டு வெளியிடப்பட்ட மற்றொரு செய்தி மடலில், சோதனை முறையில் 13 மாவட்டங்களில் இதை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், MNIC மூலம் எப்படி “எதிர்காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறும் அகதிகளை கண்டறிவது” என்றும் குறிப்பிட்டுள்ளது இணைப்பு
இந்த சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கும் போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி மீன் பிடி படகுகள் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இதன் பின் மன்மோகன் சிங் அரசு, கடலோரம் வசிக்கும் மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் அடையாளப்படுத்தி ReALCraft என்ற டேட்டாபேஸ் உருவாக்கியது. இணைப்பு
ஆதார் vs தேசிய மக்கள் தொகை பதிவேடு
MNIC தொடங்கி 10 வருடங்கள் ஆன போதும் பெரிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் அதை துரிதப்படுத்தும் நோக்கத்தோடு திட்டக்கமிஷன் பரிந்துரை பேரில் UIDAI அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இன்போசிஸ் நிறுவனர் நந்தன் நீலன்கேனி நியமிக்கப்பட்டார். UIDAI ஸ்மார்ட் கார்டு MNIC திட்டத்தின் அடிப்படையை மாற்றியது ( MNIC கார்டில் உங்கள் விபரங்கள் பாதுகாப்பான சிப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும்). மாற்றியமைக்கப்பட்ட விதியின் படி அனைத்து தகவலும் கார்டில் இருந்து டேட்டாபேஸ்க்கு மாற்றியமைக்கப்பட்டது (ஆதார் வெறும் எண் மட்டுமே. ஸ்மார்ட் கார்டு அல்ல).
இந்த மாற்றங்கள் ஒருபக்கம் நடந்துகொண்டு இருக்கும் போது இந்திய பதிவாளர் (RGI) அலுவலகம் NPR கட்டமைத்துக் கொண்டு இருந்தது, NPR இல் கைரேகை இருந்தது. ஆனால் ஆதாரில் கருவிழிப்படலம் கூடுதலாக இருந்தது. மேலும் இரு வேறு இடங்களில் தகவல்கள் சேமிப்பது கடினமானது மட்டுமன்றி செலவும் அதிகம். இதனால் 2010ஆம் ஆண்டு RGI, UIDAI இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இணைப்பு. இதன் அடிப்படையில் 30 கோடி தகவல்களை RGI UIDAIவிடம் ஒப்படைத்தது, MNIC அட்டையை வழங்கும் பணி கைவிடப்பட்டது,
ஆனபோதும் RGI தொடர்ந்து NPR விபரங்களை சேகரித்துக்கொண்டு இருந்தது. ஆதார்க்கும் NPRக்கும் முரண்கள் அதிகரித்து கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், UID செயல்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்தார். தேசிய பாதுகாப்பில் ஆதார் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் NPRக்கு அதிக அதிகாரம் வேண்டும் என கூறினார். மன்மோகன் சிங் தலையீட்டில் ஜனவரி 2012ஆம் ஆண்டு NPR கடலோர பகுதிகளிலும், UID மற்ற பகுதிகளிலும் செயல்பட அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படி சென்றுகொண்டு இருந்த போது மத்திய அரசு உச்சநீதி மன்றத்தை அணுகி UID சேகரித்த தகவல்களை பகிர வேண்டியதில்லை என்று வழக்குத் தொடுத்து அதன் படி தீர்ப்பும் பெற்றது. உள்துறை அமைச்சகம் தலைமை வழக்கறிஞரிடம் பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டு மீண்டும் NPR தகவலை ஆதார் எண்ணுடன் சேர்த்து புதுப்பித்தது.
மாநில அளவிலான தகவல் தளங்கள்
NPR தகவலை திரட்டும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்ததால் அந்த தகவல்களை கொண்டு மாநிலங்கள் தனி டேட்டாபேஸ் உருவாக்கி கொண்டது. ஆதார் பொறுத்தமட்டில் தனியார் மூலமாக தகவல் சேகரிப்பு நடந்ததால் தகவல்கள் தனியாரிடமும், UIDAIயிடமும் இருந்தது. எல்லா மாநிலங்களும் NRPயில் கலந்து கொள்ள வில்லை என்பதை நினைவு கொள்ளுங்கள், இதனால் அந்த மாநில அரசு தங்களுக்கும் அந்த தகவல்வேண்டும் என்று UIDயிடம் முறையிட்டதால் பின்னர் அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் பகிரப்பட்டது.
மாநிலங்கள் அந்த அடிப்படை தகவலை (KYR) தாண்டி, வருமானம், ஜாதி (KYR+) போன்றவை சேர்த்து State Resident Data Hub (SRDH) உருவாக்கி கொண்டது. உதாரணத்திற்கு தெலுங்கானா உருவான புதிதில் ஆகஸ்ட் 19, 2014 ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தியது.
NPR, NRC என்ன தொடர்பு?
2015ஆம் ஆண்டு ஏற்கனவே NPR புதிப்பிக்கப்பட்டதை பார்த்தோம், இந்த முறை முன்பைக்காட்டிலும் கூடுதல் தகவல் பெறப்படவுள்ளது. அதில் குறிப்பாக தந்தை, தாய் பிறந்த இடம்/தேதி, இது ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்
ஏப்ரல் 21,2015ல் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைச்சர் இவ்வாறு கூறினார்.
NPRல் இந்தியாவில் குடியிருப்போர் (நம் நாட்டவர், வெளிநாட்டவர்) பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படும் அதை அடிப்படையாக கொண்டு NRC பட்டியல் தயாரிக்கப்படும்
அனைத்து தகவல்களும் ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும், NPR பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டும் போகலாம் அல்லது உங்கள் பெயரை நீக்க கோரி யார் வேண்டுமானாலும் ஆட்சேபிக்கலாம் என்று விதி 4(6) கூறுகிறது இணைப்பு
அஸ்ஸாமில் NRC பட்டியல் வெளிவந்த பிறகு AASU கொடுத்த புகாரின் பேரில் 2.5 லட்சம் பெயர் நீக்கப்பட்டு அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்கள் இந்தியக் குடிமகன் தான் என்று மீண்டும் நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இணைப்பு இது அத்தனை எளிதான காரியம் அல்ல. அரசு கேட்கும் ஆவணங்கள் ஒருவரிடம் இருக்க வேண்டும். இல்லாதவர்கள் திறந்த வெளிச் சிறைகளில் அடைக்கப்படுவர். இது போன்ற சிறைகள் அஸ்ஸாமிலும், மேலும் பல மாநிலங்களிலும் கட்டப்பட்டு வருகின்றன.
இன்று NRC வராவிட்டாலும் முழுமையான தகவல்களை NPR மூலம் சேகரித்த பின் எப்பொழுது வேண்டுமானாலும் செயல்படுத்த முடியும். அப்பொழுது தந்தை/தாய் பிறப்பிட ஆவணம் இல்லாவிட்டால் குடியுரிமை நிராகரிக்கப்பட்டவர்களின் நிலையை நினைத்துப்பாருங்கள்? இஸ்லாமியர்கள் அல்லாதவர்களாக இருந்தால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என மூன்று நாடுகளில் இருந்து வந்ததாக நிரூபிக்க வேண்டும். அதுவும் மதரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதாக நிரூபிக்க வேண்டும். அதுவே முஸ்லிமாக இருந்தால் முகாமுக்கு தான் செல்லவேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் இதை செயல்படுத்தாமல் விடுவது தான் மக்களுக்கு அவர்கள் செய்யும் கைமாறு. ஏற்கனவே, பிஜேபி ஆளாத பல மாநிலங்களின் முதல்வர்கள் இதை செயல்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளனர். கேரள முதல்வர், தேசிய மக்கட்தொகை பதிவேடு குறித்து தகவல்கள் சேகரிக்க முடியாது என்று உத்தரவே பிறப்பித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் இதே போன்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நிராகரிக்கும் பொறுப்பை மக்களிடம் விட்டால் பயத்தின் காரணமாக பதிவு செய்யத்தான் செய்வார்கள்.
தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, புறவாசல் வழியாக வரும், தேசிய குடிமக்கள் பதிவேடுதானே தவிர வேறல்ல.
பிஜேபி அமைச்சர்களும் தலைவர்களும், தேசிய மக்கள் தொகை பதிவேடு என்பது, சென்சஸ் எனப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதி என்று விளக்கமளிக்கின்றனர். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் உங்கள் பெற்றோர் எங்கே பிறந்தனர் என்ற கேள்வி இதுவரை கேட்கப்பட்டதில்லை என்பதை மறக்க வேண்டாம். இப்படி பெற்றோர் பிறந்த இடம் குறித்த விபரங்களை கேட்பதன் நோக்கம், உரிய ஆவணங்கள் இல்லாத இஸ்லாமியர்களை சிறையில் அடைப்பது மட்டுமே. ஏனெனில் குடிமக்கள் திருத்தச் சட்டத்தில், இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் திருத்தச் சட்டம், (CAA), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. பிஜேபி தலைவர்கள், இவற்றுக்கு தொடர்பில்லை. அனைத்தும் தனித்தனி என்று நம்மை நம்ப வைக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். மேலும், தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது என்றும் கூறுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், NRCஐ நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் இல்லை என்பதோடு, அப்போது இருந்த NPRல், பெற்றோர் பிறந்த இடம் கேட்கப்படவில்லை என்பதையும் மறந்து விடக் கூடாது.
பிஜேபி அரசு பதவியேற்ற பிறகு,. 23 ஜூலை 2014 அன்று, பாராளுமன்றத்தில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள் துறை இணை அமைச்சர் கிரேண் ரிஜிஜூ இவ்வாறு கூறினார்.
“தேசிய மக்கட்தொகை பதிவேடு (NPR)ல் சேகரித்த விபரங்களின் அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நாடு முழுக்க உள்ளவர்களின், குடியுரிமை சரி பார்க்கப் படும்” என்று கூறினார்.
24 டிசம்பர் 2019 அன்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உள் துறை அமைச்சர் அமித் ஷா, NRC வேறு, NPR வேறு. NPR காரணமாக யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று கூறினார்.
Home Minister Amit Shah to ANI: It is possible that some names are missed in the NPR, still their citizenship will not be revoked because this is not the process of NRC. The NRC is a different process. I want to make it clear that nobody will lose citizenship because of NPR. pic.twitter.com/JnSdPwIKxx
— ANI (@ANI) December 24, 2019
ஆனால், NPR மூலமாக, ஒருவர் இந்தியரா என்பது சந்தேகத்திற்கிடமாக இருந்தால், அவர் “சந்தேகத்துக்கிடமானவராக” (Doubtful citizen) அடையாளம் காணப் படுவார். இதற்கு அடுத்த கட்டமான NRC அமல்படுத்தப்படும் சமயத்தில், இப்படி சந்தேகத்துக்கு இடமானவராக அறியப்பட்டவர், இந்தியரல்ல என்று அறிவிக்கப்படுவார். அதன் பின் என்ன ? திறந்தவெளி சிறைதான்.
இஸ்லாமியர் அல்லாதோர் இதில் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் இஸ்லாமியர்களுக்கு வழியே இல்லை. சிறைதான்.
இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, தலித்துகள், ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர், கல்வியறிவு அற்றோர், முதியோர் என்று அனைத்துத் தரப்பினரும் இதன் காரணமாக பாதிக்கப்படுவார்கள்.
இதுவரை இந்தியா சந்தித்திராத ஆபத்து இது. நம் ஒவ்வொருவருக்குமான ஆபத்து. என்னிடம் தேவையான ஆவணங்கள் உள்ளன. எனக்கு கவலையில்லை என்று நாம் இருக்கலாம். ஆனால் நம்முடன் ஒரே தேசத்தில் வாழ்ந்தவர்களை ஆவணமில்லாத காரணத்துக்காக அரசே அகதியாக மாறுமானால் அதற்கு நாமும் பொறுப்பாகத் தான் வேண்டும். ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகத்தில் வரும் லேடி மேக்பெத், ஒரு கொலைக்கு காரணமாக இருந்த பின்னர் குற்ற உணர்ச்சியால், என் கையில் உள்ள ரத்தக் கறையை எந்த சமுத்திரமும் அழிக்க முடியவில்லையே என்று புலம்பியதை போல, நம் கையில் உள்ள ரத்தக் கறையையும் அழிக்க முடியாமல் நாம் கழிவிரக்கத்துக்கு ஆளாக வேண்டி வரும்.
CAA / NPR / NRC ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்கள் நமக்கானது மட்டுமல்ல. நாளைய தலைமுறையினருக்கானது. இதற்கு எதிரான போராட்டங்களில், நம்மில் ஒவ்வொருவரும், நமக்கான பங்கை செலுத்த வேண்டியது, நமது கடமை.
வாருங்கள் தோழர்களே. இந்த கருப்புச் சட்டங்களை எதிர்த்து போராடுவோம்.
(ஸ்ரீனிவாச கோடாலி the wire இணையத்தளத்திற்காக எழுதியதை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது https://thewire.in/tech/aadhaar-infra-npr-nrc )
Sir, how do you justify accepting non-Muslim illegal immigrants but not muslims by a secular country? Either stop every illegal immigrant or accept everyone regardless the religion! I know you will not comprehend the justice. But still worth a try.
Sankar sir, I am a huge fan of you, I am not a bjp supporter, but I support CAB. This article is biased and full of irrelevant details. By the time when student who oppose and protest against CAB without even knowing the facts of the rule, these kind of hand detailed article is truly biased.
By the way, personally you know very well, CAB is only against mulsim illegal migrants not against India Muslims.
Sir, how do you justify accepting non-Muslim illegal immigrants but not muslims by a secular country? Either stop every illegal immigrant or accept everyone regardless the religion! I know you will not comprehend the justice. But still worth a try.
. There is no problem for any one. It can identify infiltraters. Why Muslim people worring are they came from unlawful migration.
This wrong message is created by media.