உலகம் இந்தியாவைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு நமது அரசு சொல்லும் செய்தி இது, “எங்களை எதிர்ப்பவர்கள் எந்த மூலையில் இருந்தாலும், நாங்கள் அவர்களை ஒடுக்குவோம். பாரத மாதா கி ஜெய் சொல்வோம்’.” என்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததாக சொல்பவர்களுக்கும், அறிவுசார் கல்வி கற்க வந்தவர்கள் உரிமைக் குரல் எழுப்பினாலும் விளைவு என்பது இங்கு ஒன்று தான். இதுவே இந்தியாவின் முகமாக ஆகிவிட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாகவே மாணவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து தொடங்கிய சமீபத்திய போராட்டம் குடியுரிமை சட்டத்திற்கு எதிரானதாகவும் மாறியது.
பொதுமக்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடினாலும் பல்கலைக்கழகங்கள் மட்டும் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்ற வேண்டுமெனில் கல்விக்கூடங்களை மாற்றினாலே போதுமானது என்பதற்கு வரலாற்றில் சாட்சியங்கள் உண்டு. இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்ற விரும்பும் அதிகார மையம் இந்த வரலாற்று சாட்சியத்தை இப்போது பின்பற்றுகின்றன.
நாம் அனைவருக்கும் முன்பாக துருக்கியில் நடைபெற்ற மாற்றமே ஒரு எடுத்துக்காட்டு. அதன் நிலைமை இந்தியாவில் ஏற்படும் நாளுக்காகவே இத்தனை வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் துருக்கி, மேற்குலக நாடுகள் விரும்பும் சுற்றுலாத்தலமாக இருந்தது. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தாலும், மத அடிப்படைவாத நாடாக துருக்கி அறியப்படவில்லை.
இன்று துருக்கி, அந்நாட்டின் அதிபர் ரெசெப் தயீப் எர்டோகனின் ஆட்சியின் கீழ், ஜனநாயக உரிமைகள் அல்லாத, ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய நாடாக மாறியுள்ளது.
துருக்கியின் அதிபராக எர்டோகன் 2014ம் ஆண்டு பொறுப்பேற்ற பின்னரே அடிப்படைவாத துருக்கியாக மாறியிருக்கிறது.
அங்குள்ள உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்று, அங்காரா பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தின் அரசியல் கல்வி தொடர்பான பிரிவு முல்க்கியே என்று அழைக்கப்படுகிறது.
இந்த முல்க்கியே, நமது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்றது என்று கூறலாம். இதில், சமூக அறிவியல், பொது நிதி நிர்வாகம், பொது நிர்வாகம், தொழிலாளர் நலன், வணிக நிர்வாகம், சர்வதேச அரசியல், சர்வதேச உறவுகள் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த முல்க்கியேவில் மாணவர்கள் விவாதம் நடத்தலாம். சுதந்திரமாக கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம். 1960ல் நடந்த ஒரு புரட்சி சமயத்தில், அப்போதைய துருக்கி அரசியல் தலைவராக இருந்த அட்னான் மெண்டேரேஸை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இப்பல்கலைக்கழகம் மூடப்பட்டது. பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட பல்கலைகழகம், எழுபதுகளிலும், எண்பதுகளிலும் இடதுசாரிகளின் மையமாக மாறியது.
எர்டோகன் 2003ல் துருக்கியின் பிரதமராகிறார். சில ஆண்டுகள் கழித்து 2014ல் அவர் அந்நாட்டின் அதிபராகிறார். துருக்கியை, பாராளுமன்ற ஜனநாயக முறையிலிருந்து, அதிபர் முறைக்கு மாற்ற வேண்டும் என்று எர்டோகன் ஒரு கருத்தை முன்னெடுக்கிறார். 2017ல் துருக்கியின் அரசியல் சட்டம் திருத்தப்பட்டு 2017 முதல் அதிபர் ஆட்சி முறைக்கு துருக்கி மாறுகிறது.
2009ம் ஆண்டில், முல்கியேவில், ஒரு அரசியல் விவாதம் நடைபெறுகிறது. அப்போது எர்கோடன் துருக்கியின் பிரதமராக இருக்கிறார். அவர் பதவியேற்றது முதலாகவே, பிற்போக்கு நடவடிக்கைகளை கையாள்பவராக இருக்கிறார்.
2009 நடந்த அந்த அரசியல் விவாதத்தில், எர்கோடன் அமைச்சரவையில் துணை பிரதமராக இருக்கும், செமில் சிசெக் கலந்து கொள்கிறார். அவருக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும், அவர் கலந்து கொள்கிறேன் என்று சொன்னபோது, பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
செமில் பேச எழுகிறார். அரங்கில் அமர்ந்திருந்த மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து அவர் பேச்சை இடைமறிக்கிறார்கள். ஒரு மாணவர் எழுந்து, “மனித உரிமை போராளி எஞ்சின் செபர், காவல் துறையால் கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது போன்ற ஒரு நாட்டின் துணை பிரதமரான நீங்கள் எங்களிடம் சொல்வதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை”. என்கிறார்.
அடுத்து மற்றொரு மாணவர் எழுந்து “அன்பார்ந்த துணை பிரதமரே. இது மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான கருத்தரங்கு. இப்படிப்பட்ட ஒரு கருத்தரங்கு, எதற்காக காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு அரங்கில் நடக்கிறது” என்கிறார். மற்றொரு மாணவர் எழுந்து, “உங்களுக்கு இங்கே இடமில்லை. வெளியேறுங்கள்” என்கிறார்.
அதன் பிறகு, துணை பிரதமர் செமில், பாதுகாவலர்களோடு வெளியேறுகிறார். இதற்கு பிறகு, எந்த நெருக்கடியும் கேள்வி கேட்ட மாணவர்களுக்கு உடனடியாகத் தரப்படவில்லை. பல்கலைக்கழகம் எப்போதும் போல செயல்பட்டது.
ஆனால் பல்கலைக்கழகத்துக்கும் மெல்ல மெல்ல நெருக்கடிகள் தொடங்கின. அந்த பல்கலைக்கழகத்தின் முல்க்கியே பிரிவு பேராசிரியர்கள் வெளிநாட்டிற்கு சென்று ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களின் ஆய்வுக்கான நிதி குறைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை அரசு, எதிரி போல் பார்க்கிறதோ என்ற சந்தேகம் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் எழுந்தது.
அரசுக்கு ஆதரவான ஊடகங்கள், இப்பல்கலைக்கழகம் தீவிரவாதிகளின் கூடாரங்கள் என்று விமர்சிக்கத் தொடங்கின. 2015 முதல் மாணவர்கள் மீது நடவடிக்கை பாயத் தொடங்கியது. 2015ம் ஆண்டில் 626 மாணவர்கள் நீக்கப்பட்டனர். 2016ல் 758 மாணவர்களும், 2017ல் 815 மாணவர்களும் நீக்கப்பட்டனர்.
முல்க்கியேவில், ஆண்டுதோறும், மாட்டு விழா என்று ஒரு விழா நடக்கும். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடாக இருந்தாலும், அந்த விழாவில், இஸ்லாமிய மதமும், மத போதகர்களும் விமர்சிக்கப்படுவார்கள். அக்கல்லூரியின் பேராசிரியர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள். விழாவின் தொடக்கத்தில், இமாம் போல வேடமணிந்த ஒருவர், இமாம்களை கிண்டல் செய்வார்.
அது அந்தக் கல்லூரியின் பாரம்பரியம். இந்த விழா, அரசு மற்றும் எர்டோகனின் ஆதரவாளர்களால் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
2017ம் ஆண்டு, இந்த விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு, நடந்த விழாவில் இமாம் வேடமிட்ட மாணவர் மீது, மதத்தை அவமானப்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
ஆகஸ்ட் 2016ல், சிரியா மீது துருக்கி போர் தொடுத்தது. இந்தப் போரை எதிர்த்து, அங்காரா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சார்பாக அதிபருக்கு ஒரு திறந்த கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தில்,
“இக்கல்லூரியின் பேராசிரியர்களாகிய துருக்கியை சேர்ந்த நாங்கள், இந்தக் கொடிய குற்றத்தின் (போர்) பங்குதாரர்களாக இருக்க மாட்டோம். துருக்கி நடத்தும் இந்தப் போர், ஒரு படுகொலையாகும். இது, துருக்கி நாட்டு சட்டங்களுக்கும், சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. இந்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய, சர்வதேச பார்வையாளர்கள் வர வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம்” என்றது அந்தக் கடிதம்.
இந்த திறந்த மடல் துருக்கி அதிபர் எர்டோகனை கடும் கோபம் கொள்ள வைக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் கடுமையான எதிர்வினை ஆற்றுகிறார் எர்டோகன். அவரது உரையில், “பழைய துருக்கி, தங்களை அறிவுஜீவிகள் என்று அழைத்துக் கொள்ளக்கூடிய, பேராசிரியர்கள் என்று அழைத்துக் கொள்ளக்கூடிய பொறுக்கிகளால் நடத்தப்பட்டு வந்தது. அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தார்கள். இந்த பொறுக்கிகளின் அசல் முகம் இப்போது வெளிப்பட்டுவிட்டது. இந்தக் கடிதத்தின் மூலம், அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவான பிரச்சாரத்தை நேரடியாக கட்டவிழ்த்து விட்டுள்ளனர். துருக்கி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்தத் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தர மாட்டார்கள். தீவிரவாதிகளின் குரலில் பேசும் இவர்கள், நம் நாட்டு மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார்கள்.”. இதுதான் எர்டோகனின் உரை.
நாம் அடிக்கடி கேட்கும் குரல் போல இருக்கிறதா?
2016ல், ஒரு புரட்சியின் மூலம், எர்டோகனை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற ஒரு முயற்சி நடந்தது. அது தோல்வியுறுகிறது. அது ஒன்றே எர்டோகனுக்கு போதுமானதாக இருந்தது. அங்காரா பல்கலைக்கழகத்தின் மீது, குறிப்பாக, முல்கியேவின் மீது கடுமையான தாக்குதலை தொடுத்தார் எர்டோகன்.
இதை எதிர்த்து நடந்த போராட்டங்கள், காவல் துறை உதவியோடு, வன்முறையால் ஒடுக்கப்பட்டன. பல பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வேலை நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை பணிக்கு ஏற்றுக்கொள்ள தனியார் பல்கலைக்கழகங்களும் தயங்கின. பல பேராசிரியர்கள், துருக்கியிலிருந்து வெளியேறி, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். எஞ்சியிருக்கும் பேராசிரியர்கள், கருத்து சொல்வதையே நிறுத்தி விட்டனர்.
இடதுசாரி சிந்தனையின் கோட்டையாக, விவாத களமாக இருந்த அங்காரா பல்கலைக்கழகம், இன்று, இஸ்லாமிய பழமைவாதிகளின் பிடியில் சிக்கி கலையிழந்து நிற்கிறது. தற்போது அங்கே விவாதங்கள் நடைபெறுவதில்லை. அறிவுஜீவிகளும் இல்லை.
இப்போது இந்தியாவுக்கு வருவோம். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அங்காரா பல்கலைக்கழகத்தை விட தரத்தில் உயர்ந்தது. பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் உருவாக வேண்டிய தேவையைப் பற்றி அப்போதைய பாராளுமன்ற விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பூஷன் குப்தா, இந்த பல்கலைக்கழகம் ஒரு வழக்கமான பல்கலைக்கழகமாக அமையக் கூடாது. அறிவியல்பூர்வமான சமூகவியல் போன்ற புதிய பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டும். சமூகத்தின், விளிம்பு நிலையில் உள்ள மாணவர்கள் படிக்கும் வகையில் இது உருவாக்கப்பட வேண்டும்” என்று பேசினார். அப்படித்தான் இந்த பல்கலைக்கழகம் உருவாகி வளர்ந்தது.
ஜேஎன்யூ பல்கலைக்கழகம், பல சிந்தனையாளர்களை உருவாக்கியுள்ளது. மருத்துவப் பல்கலைகழகம், ஐஐடிகள், ஐஐஎம்கள் போல அல்லாமல், சமூகம் சார்ந்த பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தந்தது. வரலாறு, சமூகவியல், அரசியல், சர்வதேச உறவுகள் போன்ற பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் பலர் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களாக இந்தியாவையே பெருமைப்படுத்தியுள்ளார்கள். சமூகத்தில் மிகவும் பிற்பட்ட நிலையில் உள்ளவர்கள், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர், எவ்வித பாகுபாடும் இன்றி இங்கே பயில முடியும். செல்வச் சீமான்கள் படிக்கும் பல்கலைக்கழகம், கல்லூரிகளைப் போல அல்லாமல், சகோதரத்துவதோடு இங்கே கல்வி கற்க இயலும்.
இப்படி படித்து பட்டம் பெறுபவர்களில் பலர், இடதுசாரி சிந்தனைகளோடு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுகின்றனர். அப்பல்கலைக்கழகத்தின், மரபுகளை, அதன் விழுமியங்களை தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களோடு சுமக்கிறார்கள். இதனால், இவர்கள், பெரும்பாலான விஷயங்களில் சரியான தரவுகளோடு விவாதிக்கிறார்கள். முடிவெடுக்கிறார்கள். இவர்களின் கருத்துக்களுக்கு உலகெங்கும், மிகுந்த மரியாதை அளிக்கப்படுகிறது.
இதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு மிகுந்த சிக்கலாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் யார் சேர்வார்கள் ? அறிவியலுக்கு முரணாக பசு மூத்திரத்தால் புற்றுநோய் குணமாகும், பெண் கல்வி கூடாது, ராமர் அயோத்தியில் சர்வே எண் XXXல்தான் பிறந்தார், வேதகாலத்தில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது, என்பது போன்ற கருத்துக்களை நம்புபவர்களே ஆர்.எஸ்.எஸ்ஸில் சேருகிறார்கள்.
(மோடியின் அந்த ப்ளாஸ்டிக் சர்ஜரி உரை)
உலகெங்கிலும் உள்ள அறிவுசார் நூல்களைப் படித்து, தர்க்கத்தில் ஈடுபடுபவர்களையும், சங்கிகளின் பொய்களை ஆதாரத்தோடு முடக்குபவர்களையும், அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை.
ஒரு அறிவுத் தொழிற்சாலை போல சிந்தனையாளர்களை உற்பத்தி செய்யும் ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தை முடக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாள் திட்டம். அந்தத் திட்டத்தை ஆட்சியும் அதிகாரமும் கையில் இல்லாத காரணத்தால், செயல்படுத்த முடியாமல் காத்திருந்தனர். ஆட்சி கையில் வந்ததும், அதைப் படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கினர்.
இதற்கு முன்பும், ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மீது, பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுக்கு இணையத்தளத்துக்காக நாம் தொடர்பு ஜேஎன்யூவின் முன்னாள் மாணவர் இதனை உறுதி செய்கிறார். இன்று அவர் ஒரு அரசு அதிகாரியும் கூட. முன்பும் கூட டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து முகமூடி அணிந்து கொண்டு வந்து ஜேஎன்யூவில் திடீரென தாக்குதல் நடத்திவிட்டு ஓடி விடும் வழக்கம் இருந்தது. ஆனால், அவையெல்லாம், கல்லூரி மாணவர்களுக்குள் நடைபெறும் சாதாரண சிறு மோதலாகத்தான் இருந்து வந்தது.
அதன் தொடக்கமாகத்தான், 12 பிப்ரவரி 2016ல் ஜே.என்.யூ ஆராய்ச்சி மாணவர் கன்னையா குமார் உள்ளிட்டோரின் கைது நடந்தது. இணைப்பு
ஜேஎன்யூ வளாகத்தில், அப்சல் குருவை தூக்கிலிடக்கூடாது என ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இது போன்ற நிகழ்வுகள், ஜேஎன்யூவில் நடப்பது சாதாரணமானது. நம்நாட்டுப் பிரச்சனைகள் மட்டுமல்லாது க்யூபாவில் அமெரிக்க அத்துமீறலுக்கு எதிராக, ஈராக் போருக்கு எதிராக வியட்நாமுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தபடி இருக்கும்.
அது போல நடந்த ஆர்ப்பாட்டத்தில் தான் கன்னையா குமார் கைதானார். அது வரை ஜேஎன்யூவை தாண்டி யாரும் அறிந்திராத மாணவத் தலைவராக இருந்த கன்னையா குமாரின் கைது இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் அவரை அறிமுகப்படுத்தியது. பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கன்னையா குமார், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்படி உண்மையிலேயே முழக்கங்கள் எழுப்பபட்டனவா என்று காவல் துறை விசாரணையை இறுதி செய்வதற்கு முன்னதாகவே ஜீ நியூஸ், போன்ற தொலைக்காட்சிகளில், பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கங்கள் எழுப்பபடுவது போல எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டன. ஒரே நாளில் கன்னையா குமார், உமர் காலித் போன்றவர்கள் தேசத் துரோகிகள் ஆக்கப்பட்டனர்.
பொறுப்போடு செயல்பட்டிருக்க வேண்டிய அப்போதைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினால் அவர்களை சும்மா விட மாட்டோம் என்று கூறினார்.
கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட கன்னையா குமாரை, நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து பிஜேபி வழக்கறிஞர்கள் தாக்கினர். நாங்கள் திட்டமிட்டே அவரை தாக்கினோம் என்று அதில் ஈடுபட்ட ஒரு வழக்கறிஞர் ஒரு ஸ்டிங் ஆப்பரேஷனில் கூறினார்.
அதற்கடுத்தும் தொடர்ந்து ஜேஎன்யூவை சிதைக்க உருக்குலைக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஏபிவிபி அமைப்பினரோடு மோதலில் ஈடுபட்ட நஜீப் அஹமது என்ற மாணவர் காணாமல் போனார். சிபிஐ இவ்வழக்கை விசாரித்து தடயங்கள் கிடைக்காமல் மூடியது. மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்றும் நஜீப் எங்கே என்ற கேள்விக்கு விடையில்லை.
2017ம் ஆண்டு, பல்கலைக்கழக மானியக் குழுவின் உத்தரவின்படி, எம்.பில் மற்றும் பி.எச்.டி மாணவர் எண்ணிக்கையை குறைத்தது. இதனால், போராட்டங்கள் வெடித்தன. திடீரென்று, பல்கலைக்கழக நிர்வாகம், 75 சதவிகித வருகைப் பதிவேடு கட்டாயம் என்று உத்தரவிட்டது. இது எம்.பில், பிஎச்டி மாணவர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துறைத் தலைவர்கள் ஏழு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னாளில் டெல்லி உயர்நீதிமன்றம், இவர்களில் ஐவரை மீண்டும் பணியில் அமர்த்தியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், பல்கலைகழகம் ஹாஸ்டல் மற்றும் இதர கட்டணங்களை 1000 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தியது. இதையடுத்து பெருமளவில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை அடுத்து, கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்டது. ஆனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், போராட்டம் தொடர்ந்தது.
ஜே.என்.யூ மாணவர்களின் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்போதெல்லாம், பிஜேபி ஆதரவு ஊடகங்கள் (ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும்), மாணவர்கள் அனைவரையும் நக்சலைட் ஆதரவாளர்கள், பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தின. வலதுசாரி ஆதரவாளர்கள், ஜே.என்.யூவை மூடவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்தச் சூழலில்தான், கடந்த ஞாயிறன்று, (5 ஜனவரி 2020) ஜே.என்.யூ மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
சம்பவம் நடந்த தினத்தன்று தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் தன்னுடைய நம்பர் ஒருவரை தற்செயலாக ஜேஎன்யூ பல்கலையில் சென்று சந்திக்க சென்றிருந்தார். அன்றைய தினம் அங்கு நடந்த வன்முறைக் அக்கட்சிகளை அவர் நேரிலும் கண்டிருக்கிறார். அவர் ஜேஎன்யூ பல்கலையின் முன்னாள் மாணவரும் கூட.
அவர் சொன்னது, “கடந்த ஞாயிறு மாலை ஜே.என்.யூவில் நடந்தது, ஒரு திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல். மாணவர்களும், பேராசிரியர்களும், குறிவைத்து தாக்கப்பட்டனர். தங்கள் முகத்தை மறைத்துக் கொண்ட ஏபிவிபி ஐம்பது பேர் (பிஜேபியின் மாணவர் அமைப்பு) பல்கலைக்கழக நிர்வாகிகளோடு கூட்டுச் சேர்ந்து இந்தத் தாக்குதலை நடத்தினர். காவல்துறை மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தரின் உதவியோடு ஏறக்குறைய மூன்று மணி நேரம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
‘ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்’, ‘இடதுசாரிகளுக்கு எதிரான நண்பர்கள்’ என்ற பெயர்களில் இயங்கும் வாட்ஸப் குழுக்களில், வன்முறை எப்படி நிகழ்த்தப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அந்தக் குழுக்களில், ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் முக்கிய அதிகாரிகள் மற்றும், பேராசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
துணை பதிவாளர், பல்கலைக்கழக தலைமை ஒழுங்குநிலையாளர் (ப்ராக்டர்) மற்றும், முக்கிய நிர்வாகிகள் பலர் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு தங்களின் உறவை வெளிப்படையாகவும் பெருமையாகவும் கூறி வருகின்றனர்.
இவர்களின் நோக்கமே, பெருமைமிகு இப்பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மையையும், ஜனநாயக விழுமியங்களையும் சிதைப்பதே” என்றார்.
கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று உயர்கல்வித் துறை செயலாளர் ஆர்.சுப்ரமணியம் ஜேஎன்யூவின் துணைவேந்தர் ஜகதீஷ் குமாரிடம், தெரிவித்திருந்தார். கூடுதல் கட்டணத்தை, பல்கலைக்கழக மானியக் குழு ஏற்றுக் கொள்ளும். அதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்துருமாறு உயர்கல்வித் துறை செயலாளர் கேட்டுக்கொண்டார். இதனை ஜகதீஷ் குமாரும் ஏற்றுக் கொண்டார். இணைப்பு
ஆனால், முதல்நாள் இந்த சமரச ஏற்பாட்டை ஏற்றுக் கொண்ட ஜகதீஷ் குமார் மறுநாள் பின்வாங்கினார். அன்றைய தினம் மாலையே, உயர்கல்வித் துறை செயலாளர் சுப்ரமணியம் மாற்றப்படுகிறார்.
ஜே.என்.யூ துணை வேந்தர் ஜகதீஷ் குமாருக்கு வன்முறை நடக்கிறது, மாணவர்களை ஏபிவிபி குண்டர்கள் தாக்குகிறார்கள் என்பது தெரிந்திருந்தும், அவர் காவல் துறையினரை, பல்கலைக்கழக வாசலில் நிற்க மட்டுமே கேட்டுக் கொண்டார் என்பதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பது தெளிவாக தெரிய வருகிறது. இணைப்பு
‘வாட்ஸப் குழுக்களில் ஏபிவிபி ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரால், தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதை, நியூஸ் லாண்ட்ரி செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. இணைப்பு.
ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 15 அன்று, டெல்லி காவல் துறை, துணை வேந்தரின் அனுமதி இல்லாமல்தான் உள்ளே நுழைந்தது. இதை அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அறிக்கையாகவே வெளியிட்டுள்ளார்.
உள்ளே நுழைந்த டெல்லி காவல் துறை, மாணவர்களை சகட்டு மேனிக்கு தாக்கியது. துப்பாக்கி பிரயோகமும் நடத்தப்பட்டது. ஆனால், ஜேஎன்யூவில் வன்முறையில் ஈடுபட்டவர்களை, தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததோடு, அவ்வன்முறையாளர்களை, தெரு விளக்குகளை அணைத்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தது.
#JNUattack
Delhi police giving a safe passage to the goons who attacked jnu today @ReallySwara pic.twitter.com/NCp86HZz8b— SHAIK ZOEB (@zoeb_shaik) January 5, 2020
ஜாமியா பல்கலைக்கழக வன்முறைக்காக, மறுநாளே, பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களை டெல்லி காவல் துறை கைது செய்தது. அவர்களில் ஒருவர் கூட மாணவர்கள் அல்ல. இணைப்பு.
ஆனால், ஜேஎன்யூவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் இது நாள் வரை கைது செய்யப்படவில்லை. இன்றோடு, ஐந்து நாட்கள் முடிந்து விட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை, ஊடகங்கள் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளன. ஆனால் டெல்லி காவல் துறை, வன்முறையாளர்களை அடையாளம் காண, பொது மக்களின் உதவியை கேட்டு விளம்பரப்படுத்தியுள்ளது.
மாறாக, ஜே.என்.யூ தாக்குதல் தொடர்பாக, இத்தாக்குதலில் கடுமையாக காயம் பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஐஷி கோஷ் மீதே டெல்லி காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இது எப்படிப்பட்ட மோசமான சதியின் பேரில் நடந்துள்ளது என்பது புரிகிறதா ? இணைப்பு.
டெல்லி, ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் படித்து இப்போது காவல் துறை அதிகாரியாக உள்ள ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி, “என்னைப் போல ஒரு சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த ஒருவனுக்கு, முற்போக்கு சிந்தனைகளின் களமாக உள்ள ஜேஎன்யூ, ஒரு சொர்க்கமாக இருந்தது.
பெரிய அளவில் அரசியல் அறிவோ, சமூக அக்கறையோ இல்லாமல் இருந்த எனக்கு, ஜே.என்.யூவின் கலாச்சாரம் எல்லாவற்றையும் கற்றுத் தந்தது. ஏழைகள், தலித்துகள், விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்படுவோரைப் பற்றி சிந்திக்க வைத்தது. சமூகத்தின் பலவீனமானவர்கள் குறித்து அக்கறை கொள்ள வைத்தது.
“ஜே.என்.யூ இன்று என்ன பேசுகிறதோ, அதை நாளை இந்தியா பேசும்” என்பதே, ஜே.என்.யூ மாணவர்களாகிய எங்களின் பெருமையான முழக்கம்.
பாசிச சக்திகளின், வன்முறையையும், அராஜகத்தையும் எதிர்த்து குரல் கொடுக்க எதிர்க்கட்சிகள் தவறிய நிலையில், தொடர்ந்து இதை எதிர்த்து போராடி வரும் ஜே.என்.யூ மாணவர்களின் மீது தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதல் இது” என்றார் அந்த ஐபிஎஸ் அதிகாரி.
ஆர்.எஸ்.எஸ் ஜே.என்.யூவை சிதைக்க வேண்டும் என்று சொல்வது, மோடிக்கு உவப்பாக இருக்கிறது. உலகின் முதல் ப்ளாஸ்டிக் சர்ஜரி நடந்தது விநாயகருக்குத்தான். யானையின் தலையை மனித உடலில் பொருத்தியதுதான் உலகின் முதல் ப்ளாஸ்டிக் சர்ஜரி என்று நம்பி, அதை பொது மேடையில் பேசும் ஒருவருக்கு, அறிவின் ஊற்றான ஜே.என்.யூவை எப்படி சகித்துக் கொள்ள முடியும் ?
ஜே.என்.யூவின் முன்னாள் மாணவரான யோகேந்திர யாதவ், ஒரு கட்டுரையில்,. ஜே.என்.யூவை இதர சாதாரண பல்கலைக்கழகம் போல மாற்ற பிஜேபி முயன்றால், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஜே.என்.யூவாக மாற வேண்டும்” என்றார்.
எதற்காக பாஜக உள்ளிட்ட இந்துத்தவ சக்திகளுக்கு ஜேஎன்யூ மீது இத்தனை வன்மம் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஒன்றை சொல்ல முடியும்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் கடந்த வாரத்தில் ஒருநாள் தனியார் மையம் ஒன்றில் கருத்தரங்கு ஒன்று நடைபெற இருந்தது. மகாபாரத பெண்கள் குறித்த கருத்தரங்கு அது. அதன் தலைப்பைப் பார்த்ததும் இது மகாபாரதத்தை கொச்சைப்படுத்தும் கருத்தரங்கு என முடிவு செய்து ஹெச் ராஜா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். எந்தவொரு முன்னறிவிப்புமின்றி கருத்தரங்கு ரத்து செய்யப்பட்டது. அதற்கான காரணமாக ‘சமீபத்தில் பெய்த கடும்மழை காரணமாக கட்டடம் சேதமடைந்ததாக அரங்க ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தார்கள். சென்னையில் அந்த நிகழ்வுக்கு முன்பு கடும் மழை எதுவும் இல்லை என்பது குறிப்பிட வேண்டியது.
இதை விட முக்கியமானது அந்த கருத்தரங்கில் பேச இருந்தவர் ஜேஎன்யூ பல்கலையின் முன்னாள் பேராசிரியர் விஜயா ராமசாமி என்பவர். கனத்த மனதுடன் சென்னையில் இருந்து டெல்லி திருப்புகையில் அவர் தான் திரௌபதி போன்றோரின் வலுவான தன்மையையே கருத்தரங்கில் பேச இருந்ததாக தெரிவித்திருந்தார்.
இது ஒரு உதாரணம். ஜேஎன்யூ பேராசிரியர் என்றதும் அவருடைய கருத்து இந்து மதத்துக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிரானதாகவே இருக்கும் என்கிற முன்தீர்மானம் கொண்ட ஹெச். ராஜா போன்றவர்கள் தான் பாஜகவின் முகங்கள். ஒரே ஒரு பேராசிரியரையும் அவரது கருத்துகளையுமே ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி ஒரு அறிவார்ந்த, கேள்வி எழுப்புகிற, சுயசிந்தனையுள்ள பல்கலைகழகத்தினை சகித்துக் கொள்வார்கள்?
விஞ்ஞானப்பூர்வமான, தர்க்கப்பூர்வமான, அறிவிப்பூர்வமான விவாதங்களை இவர்கள் வெறுக்கிறார்கள். இத்தகைய விவாதங்கள் இவர்கள் பரப்பிவரும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அமையும் என்று நினைக்கிறார்கள்.
இத்தகைய விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று நாடு முழுவதும் பரவுமேயானால் நாளை கடவுளையே கேள்விக்குள்ளாக்கும் செயல்களுக்கு இது இட்டுச் செல்லும் என்று அஞ்சுகிறார்கள். இதனாலும் ஜேஎன்.யூவை ஒழித்துக் கட்ட வேண்டுமென்பதை தங்கள் கடமையாக கருதுகிறார்கள்.
முல்கியேவைப் போல ஜே.என்.யூவை அழித்து விடலாம் என்று, மோடி, அமித் ஷா, மற்றும் முட்டாள் காவிகள் திட்டம் போடுகிறார்கள். ஆனால், இது ஜே.என்.யூ.
இது இந்தியாவின் சொத்து. இந்தியாவின் மணி மகுடம்.
இதை பாதுகாக்க, இந்தியாவின் ஒவ்வொரு மாணவரும் போராட வேண்டும். போராடுவார்கள். மண்டல் போராட்டத்துக்கு பிறகு, 30 ஆண்டுகளாக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாத, டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் எழுப்பிய “ஆசாதி” முழக்கங்களே இது சான்று.
இந்நாட்டின் மாணவர்கள், “எண்ட்டயர் பொலிட்டிக்கல் சயின்ஸ்” என்ற போலி டிகிரி படித்த மோடிக்கு, உண்மையான அரசியலை கற்றுக் கொடுக்கத்தான் போகிறார்கள்.
These guys are dragging the country to stone age.
Delhi police look like clowns and they are framing the victims based on manufactured evidence provided by real.culprits . Police keeps mum.about masked attackers . Ours is Banana Republic now . It’s a shame that JNU is headed by a coward who sides with government .