அச்சு வடிவத்தில் ஆதித்யா என்றவுடன் புரியாமல் விழிக்காதீர்கள் தோழர்களே… ! ஆதித்யா நகைச்சுவை சேனல்தான் அச்சுவடிவத்தில் வெளி வந்திருக்கிறது. ஏற்கனவே, பல ஆண்டுகளாக வெளி வந்து கொண்டிருந்த ஒரு வாரமிருமுறை இதழ் இப்போது ஆதித்யாவின் அச்சு வடிவமாகி விட்டிருக்கிறது.
ஆதித்யா சன் குழுமத்தின் பிரத்யேக நகைச்சுவை சேனல் என்பதை அன்பர்கள் அறிவிர்கள். அந்த இதழின் அச்சு வடிவமாக தற்போது உருவெடுத்திருப்பது நக்கீரன் இதழ் தான்.
இந்த இதழ் நக்கீரனின் அட்டை படக் கட்டுரையின் தலைப்பு “மத்திய அமைச்சராகிறார் கனிமொழி. தயா ஷாக்” என்பதுதான். கேட்டவுடனே சிரிப்பு வந்திருக்குமே.. அதுதான் அச்சு வடிவ ஆதித்யா.
இந்த இதழ் நக்கீரனின் ராங் கால் பகுதியில், (பெயரே பொருத்தமாக இருக்கிறது. ரைட் கால் என்றால் தானே உண்மை வரும். ராங் கால் என்றால் பொய்யும் புரட்டும் தானே இருக்கும் ?) அந்த ராங் கால் பகுதியில்.. … …. ….
“தயாநிதியின் சந்திப்புக்கு மறுநாள்தானே கலைஞரை பிரணாப் சந்தித்தார் ? “
“ஆமாங்க தலைவரே… .. சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகளுடனான ஒரு ஆலோசனைக் கூட்டத்துக்கான தேதி ரொம்ப காலமா தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கலைஞரைப் பார்ப்பதற்காக சென்னைக்கு வர பிரணாப் முகர்ஜி திட்டமிட்டதும், அந்தக் கூட்டத்துக்கும் சேர்த்து தேதி கொடுத்து விட்டார். “
சென்னைக்கு பிரணாப் வந்த நிகழ்வு, நேரடி வரி விதிப்பு தொடர்பான ஆண்டறிக்கையை வெளியிடுவதற்காக…. ஆலோசனைக் கூட்டம் ஏதும் இல்லை. நிதி அமைச்சராக இருப்பவர், ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டுமென்றால், அதிகாரிகளை டெல்லிக்கு வரவழைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் ?
நக்கீரன்… ….
“தனி விமானத்தில் சென்னைக்கு வந்த அவரை, டி.ஆர்.பாலு வரவேற்றார். அதன் பிறகு, அவர் தனது பணிகளை கவனிக்க (இந்த பச்சிலை புடுங்கிக்கு (டி.ஆர்.பாலு) பிரணாப்புக்கு சொம்படித்து, அமைச்சராவதைத் தவிர வேறு என்ன வேலை இருக்க முடியும் ?) பிரணாப் முகர்ஜியோடு தங்கபாலுவும், நாராயணசாமியும் கோபாலபுரத்துக்குப் போனாங்க. பிரஸ்ஸுக்கு போட்டோ, விருந்தினர்களுக்கு டீ, காபின்னு 10 நிமிடம் ஆனதும், தங்கபாலுவும், நாராயணசாமியும் பக்கத்து ரூமுக்கு பிளம்பி விட, ரூமில் பிரணாப் முகர்ஜி, கலைஞர், தயாநிதி மாறன், துரை முருகன், பொன்முடி, ஆகியோர் மட்டும் இருந்தாங்க. அவங்க பேச்சு ரொம்ப காரசாரமா இருந்திருக்கு. “
“என்ன பேசினாங்களாம் ? “
“கலைஞர் தான் ரொம்ப சீரியஸா பேசியிருக்கிறார். காங்கிரசுக்கு எத்தனையோ முறை நெருக்கடிகள் வந்தப்ப திமுக தான் உதவி செய்திருக்கு.. ஆனா, இப்ப ஒண்ணுமே இல்லைன்னு தெரிஞ்சும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை குறி வைத்து காங்கிரஸ் செயல்படுதுன்னு கலைஞர் சொல்ல, சுப்ரீம் கோர்ட் நெருக்கடியால்தான் எல்லாம் நடக்குதுன்னு பிரணாப் பதில் சொல்ல, கலைஞர் அதை ஏத்துக்கலை. கலைஞர் டிவிக்காக ஒரு கம்பெனிகிட்டேயிருந்து கடன் வாங்கியிருக்காங்க. அந்தப் பணத்தையும் திருப்பிக் கொடுத்தாச்சு. அந்தக் கம்பெனி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதை, கடன் தொகையோடு முடிச்சுப்போட்டு கேஸைக் கொண்டுபோனால் என்ன அர்த்தம் ? தயாநிதி ஒரு மாசம்தானே டயம் கேட்டார். அதையும் ஏன் நீங்க பரிசீலிக்கலை ? இதற்கெல்லாம் என்ன காரணம்னு கேட்டிருக்கார்“
பிரணாப் முகர்ஜி என்பவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் நிதி அமைச்சராகவும் இருந்தவர். அமலாக்கப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை போன்ற முக்கிய புலனாய்வுத் துறைகள் பிரணாப்பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. கலைஞர் டிவிக்கு கொடுத்த 200 கோடி ரூபாய் கடன் அல்ல, லஞ்சம் என்பது, பிரணாப்புக்கும், கருணாநிதிக்கும் நன்றாகவே தெரியும்.
இது தெரியாமல், பிரணாப்பிடம், மொக்கைத் தனமாக பேசிக் கொண்டிருக்க, கருணாநிதி ஒன்றும், நக்கீரனில் வேலை பார்க்கவில்லை. அவருக்கு என்ன பிரணாப் யார், அவரிடம் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது, என்பது நன்றாகவே தெரியும். இது போலவெல்லாம் பேசி, மூக்குடைபடுவதற்கு, கருணாநிதி காமராஜ் போலவும், பிரகாஷ் போலவும் டுபுக்கு அல்ல.
நக்கீரன்… …. …
“பிரணாப் முகர்ஜி என்ன பதில் சொன்னாராம் ? “
“சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பால் தான் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இத்தனை நெருக்கடிங்கிரதை திரும்பத் திரும்பச் சொன்ன பிரணாப் முகர்ஜி, மத்தி மந்திரிசபை விரிவாக்கத்தில் திமுக பங்கேற்கணும்கிறதையும், ஆ.ராசாவுக்கும், தயாநிதிக்கும் பதிலாக இரண்டு பேரை அமைச்சராக நியமிக்கப் பரிந்துரைக்கணும்கிறதையும் கலைஞரிடம் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். கலைஞரோ, கோவையில் 23, 24 தேதிகளில் பொதுக்குழு கூட்டியிருக்கோம். அதில்தான் இது பற்றி முடிவெடுக்க முடியும்னும் சொல்லியிருக்கிறார். கலைஞர் உறுதி கொடுக்கலைன்னு தெரிஞ்ச பிரணாப் முகர்ஜி, 2004ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய நீங்கதான் காரணம். 2009லும் உங்க தயவில்தான் மத்தியில் ஆட்சி அமைஞ்சது. நீங்க இந்தக் கூட்டணியில் இருந்தாத் தான் ஸ்திரத்தன்மை இருக்கும். அதனால் மத்திய மந்திரி சபை விரிவாக்கத்தில் திமுக இடம்பெறணும்னு மீண்டும் வலியுறுத்திவிட்டுப் புறப்பட்டார். சுமார் 50 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்புக்குப் பிறகு, கோபாலபுரத்திலிருந்து வெளியே வந்த பிரணாப் முகர்ஜி, வழக்கம் போல திமுக காங்கிரஸ் உறவு தொடரும்னு பேட்டி கொடுத்துவிட்டு கிளம்பினார். “
இது அத்தனையும், கருணாநிதியின் ஆதங்கம். 2004ல் எங்கள் தயவில் தானே ஆட்சி நடத்தினீர்கள் என்பது அவரின் ஆதங்கம். அதற்குப் பதிலாகத் தானே, கப்பல் போக்குவரத்துத் துறை, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை எல்லாவற்றுக்கும் மேலாக தொலைத்தொடர்புத் துறை என்ற துறைகளில் கொள்ளையடித்துக் குவித்தார்கள் ? இது காங்கிரசுக்குத் தெரியாதா ? இன்னொரு விஷயம். இப்போது, திமுக காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வந்தால், ஆதரவு தருவதற்கு ஜெயலலிதா தயாராக இருக்கிறார் என்பது காங்கிரசுக்குத் தெரியாதா ? உத்தரப் பிரதேசத்தில் முலாயம் சிங்கும், பீஹாரில் லல்லுவும், சோனியாவின் கடைக்கண் பார்வைக்காக வரிசையில் நிற்கிறார்கள் என்பது காங்கிரசுக்குத் தெரியாதா ? சட்டசபை தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போதும், அதற்குக் பிறகும், திமுகவை செருப்பால் அடித்ததை விடவா அடிக்க வேண்டும் ? சொந்த மகளை சிறையில் வைத்த பின்னும், காங்கிரஸ் உடனான கூட்டணியை பிரிக்க முடியாது என்று ஒவ்வொரு முறையும், “உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தைக்“ கூட்டி சரவண பவன் காபியைக் குடித்து விட்டு கருணாநிதி அறிவிப்பு வெளியிடுவது பிரணாப்புக்கும் காங்கிரசுக்கும் தெரியாதா ?
நக்கீரன்… …. ….
“கலைஞர்-பிரணாப் சந்திப்பு நடந்த போது, திருச்சி பொதுக்கூட்டம் முடித்து சென்னைக்குத் திரும்பிவிட்டார் ஸ்டாலின். ஆனா, அவர் இந்த சந்திப்பில் பங்கேற்கலை. அவருக்கு, மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் திமுக பங்கேற்பதில் விருப்பமில்லை. ஆனா, அழகிரி தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் திமுக நீடிக்கணும்னு நினைக்கிறார். காங்கிரசோடு, தொடர்பில்லாமல் போனால், மாநிலத்தில் கட்சி முன்னணியினருக்கு வரும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாதுன்னும் அதனால் டெல்லியில் நம்ம பிடி உறுதியா இருக்கணும்னும் நினைக்கிறார்“
மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் திமுக பங்கேற்பதில் விருப்பமில்லாமல் தானா, ஏகேஎஸ் விஜயனையும், டிகேஎஸ் இளங்கோவனையும் அமைச்சராக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார் ? திமுகவில என்ன நடக்குதுன்னு ஒரு எழவும் தெரியலன்னா எதுக்குடா இஷ்டத்துக்கு புளுகுறீங்க….
நக்கீரன்… ….. ….
“அப்படின்னா, யார் யாருக்கு மந்திரி யோகம் ? “
“இரண்டு கேபினட் பதவி இருக்குது. முன்னாள் அமைச்சரான டி.ஆர்.பாலுவை மீண்டும் அமைச்சராக்க பிரதமர் விரும்பலைன்னு மீடியாக்கள் மூலமா செய்திகள் வந்துக்கிட்டே இருக்குது. பாலுவே அமைச்சராவதை விரும்பலைங்கறதுதான் தற்போதைய நிலவரம். அவர் இது பற்றி ஏற்கனவே கலைஞர்கிட்டே சொல்லிட்டாராம். டெல்லியில் கலைஞர் இருந்தப்ப மரியாதை நிமித்தமாக் கூட காங்கிரஸ் காரர்கள் வந்து பார்க்காததால அவங்க தலைமையிலான அமைச்சரவையின் விரிவாக்கத்துல இடம்பெறுவது சரியா இருக்காதுங்ககிறது பாலுவோட ஸ்டாண்ட். பாலு விரும்பாததால், அதே முக்குலத்தோர் இனத்தவரான டிகேஎஸ்.இளங்கோவனை நியமிக்கலாம்ங்கிற பேச்சு திமுக மேலிடத்தில் அடிபடுது“
டிஆர் பாலு அமைச்சராவதை விரும்பலையாம்.. நல்ல தமாஷுங்க.. சைதாப்பேட்டையில் உள்ள பொதுக்கழிப்பிடத்தை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சுத்தம் செய்தால், உனக்கு மந்திரி பதவி என்று சொல்லிப் பாருங்கள் டி.ஆர்.பாலுவிடம். காலை 5 மணிக்கு அந்த பொதுக்கழிப்பிடத்தில் இருப்பார். அவருக்கா மந்திரி பதவி மீது ஆசை இல்லை ? கலைஞர் டெல்லியில இருந்தப்ப காங்கிரஸ் காரர்கள் மரியாதை நிமித்தமாக கூட வந்து பார்க்கவில்லை என்பதால் இந்த அமைச்சரவையில பங்கேற்கக் கூடாதுன்றது டி.ஆர்.பாலுவோட விருப்பமாம். சரி, மரியாதை கொடுக்கலையே… எம்.பி. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள் பார்ப்போம்… இருக்கற சொத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், சிபிஐ விசாரணை வராமல் தடுப்பதற்காகவும், டி.ஆர்.பாலு, கழுதை முடியை பிடுங்குவதற்குக் கூட தயங்க மாட்டார்.
நக்கீரன்………. ………
“… …. …. இதற்கிடையில் பிரணாப் முகர்ஜியிடம் கலைஞர் திட்டவட்டமா ஒரு விஷயத்தைப் பேசியிருக்கிறாராம். “
“என்ன விஷயம் ? “
“2ஜி விவகாரத்தில் கனிமொழி மேலே எந்தத் தவறும் இல்லை. கடன் தொகையை லஞ்சம்னு சொல்லி, அவர் மீது பழி போடுவது, முழுக்க முழுக்க ஜோடித்த வழக்கு. தன் மீது குற்றமில்லைங்கிறதை அவர் நிரூபிச்சி பெயிலில் வந்ததும், அவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரணும்கிறதுதான் பிரணாப்பிடம் கலைஞர் வலியுறுத்திய விஷயம். கேஸ் பெண்டிங்கில் இருக்கும் போது, பெயிலில் வந்தவருக்கு பதவி தரமுடியுமாங்கிறது பற்றியெல்லாம் டிஸ்கஷன் நடந்திருக்கு. ஜெயலலிதா மேலே சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கிற நிலையில் அவர் முதல்வரா இல்லையான்னும், ஏற்கனவே அவர் சிறைக்குப் போய் பெயிலில் வந்து, கேஸ் பெண்டிங்கில் இருக்கும்போது, பதவி ஏற்கலையான்னும் பல விஷயங்கள் விவாதிக்கப் பட்டிருக்கு“
இந்த வார்த்தையை கவனியுங்கள். “தன் மீது குற்றமில்லைங்கிறதை நிரூபிச்சி பெயிலில் வந்ததும்……“
குற்றமில்லைன்னு நிரூபிச்சா எதுக்குடா பெயிலில் வரணும்… ? விடுதலையாகியே வந்துடலாமே…. பெயிலில் வந்தாலே, ஒரு நபர் மீதான குற்றச் சாட்டுகள் முழுமையாக கைவிடப் படவில்லைனு தானே பொருள்… நக்கீரனின் தலைமை நிருபரா இருக்கற பிரகாஷுக்கு தான் அறிவில்லைன்னு பாத்தா, கோபாலுக்கும் இல்லை, காமராஜுக்கும் இல்லை. இப்படி சுத்தமா அறிவேயில்லாம எதுக்கு கோபால் சார் பத்திரிக்கை நடத்துறீங்க… விஜிபி கோல்டன் பீச்சுல, முன்னயெல்லாம், உங்கள மாதிரி பெருசா மீசை வைச்சுக்கிட்டு, மன்னர் வேஷம் போட்டுக்கிட்டு சிரிக்காம ஒருத்தர் நிப்பார். அவரை சிரிக்க வைக்கணும்னு போட்டி வைப்பாங்க. அந்த வேலைக்கு நீங்க ஏன் போகக் கூடாது. அந்த அனுபவத்தை சேலன்ஜ் பாகம் 2ன்னு எழுதிக் கொடுங்க… சவுக்குலேயே வெளியிடலாம்.
கனிமொழி மந்திரி ஆகிறாராம்… இந்தக் கதையை கனிமொழி நம்புவாரா ? எப்போது பெயில் கிடைக்கும், எப்போது சிறையி விட்டு வெளியே வரலாம் என்று கனிமொழி அல்லாடிக் கொண்டிருக்கும் போது, இது போன்ற செய்திகள் வந்தால், இது காங்கிரஸ் கட்சியினரையும், நீதிபதிகளையும், சிபிஐ அதிகாரிகளையும் எரிச்சலூட்டுமா ஊட்டாதா ?
மேலும், உச்ச நீதிமன்றம் கனிமொழியில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த போது, குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப் பட்ட பிறகு ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு விட்டது. குற்றச் சாட்டுகள் பதிவு செய்வதற்கு முன்பு, பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. கடந்த வார செய்திகளின் படி, சிபிஐ மேலும் சில சாட்சிகளையும், ஆவணங்களையும் குற்றப் பத்திரிக்கையில் புதிதாக சேர்த்திருக்கிறது. இதற்கு குற்றவாளிகள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இதன் மீதான விசாரணை வெள்ளியன்று நடைபெறும். இந்தத் தீர்ப்பு வந்த பிறகு, இதை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் பிறகு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப் படும். இதற்குப் பிறகு, டிஸ்சார்ஜ் பெட்டிஷன் என்று அழைக்கப் படும், வழககிலிருந்து விடுவிக்கக் கோரும் மனுவை ஒவ்வொரு குற்றவாளியும் தாக்கல் செய்வார். அதன் மீதான விசாரணையும் மேல் முறையீட்டின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வரை செல்லும். இதற்குப் பிறகே குற்றச் சாட்டுகள் புனையப்படும். அதற்குப் பிறகு தான் ஜாமீன்.
அப்படியே ஜாமீனில் கனிமொழி வெளியே வந்தாலும், அவரை அமைச்சராக்குவதற்கு, சோனியாவும், மன்மோகனும், பைத்தியமா ? ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு இருக்கும் தலைவலி போதாதா ?
கனிமொழி அமைச்சராக வேண்டும் என்பது, காமராஜ் மற்றும் கோபாலின் தனிப்பட்ட விருப்பமாகவும், கனவாகவும் இருக்கலாம். அதற்கு அவர்களுக்கு உரிமையும் உண்டு. அதற்காக, 10 ரூபாய் வாங்கிப் படிக்கும் வாசகனுக்கு இப்படியா பொய்யையும் புனைசுருட்டையும், அச்சிட்டுக் கொடுப்பீர்கள்…
இணையதளம், போன்ற விஞ்ஞான வளர்ச்சி வருவதற்கு முன்பெல்லாம், செக்ஸ் புத்தகங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தன. சிந்தாதிரிப்பேட்டையின் சந்துகளில், இருட்டறைகளில் “சரோஜாதேவி“ என்ற தலைப்பில், ஆபாச புத்தகங்கள் அச்சிடப்பட்டு சென்னை நகரங்களின் பிளாட்பாரங்களில் விற்பனை செய்யப் படும். சரோஜாதேவி புத்தகங்களை அச்சிடுபவர்களுக்கு சமுதாய நோக்கோ, பொறுப்புணர்ச்சியோ இருந்தது கிடையாது. கிட்டத்தட்ட நீங்களும் அந்த வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனால், நக்கீரனின் பெயரை சரோஜா தேவி என்று மாற்றி விட்டு, உங்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் எழுதுங்களேன்.. உங்களை யாருமே கேள்வி கேட்க மாட்டார்கள்.
சரோஜா தேவி என்றவுடன் தான் ஞாபத்துக்குக் வருகிறது. சரோஜாதேவி கதையைப் போன்றே ஒரு கதையை படத்தோடு மார்ச் 2010ல் வெளியிட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா ? நடிகை ரஞ்சிதாவின் படத்தோடு அதை வெளியிட்டிருந்தீர்கள். அந்த விவகாரத்தில் சம்பந்தப் பட்ட நித்யானந்தா இன்று சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார்.
அந்த சந்திப்புக்கு ஏற்கனவே “நக்கீரனின் தரத்தைப் பாருங்கள்“ என்ற கட்டுரையின் மூலமாக சவுக்கு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான நக்கீரனின் தலைமை நிருபர் பிரகாஷ் கலந்து கொண்டார். அவர் 18 வயதிலேயே “பாம்“ எடுத்தவர் என்பதும், அவர் ஒரு முன்னாள் “டார்ச்லைட்“ சாரி, “நக்சலைட்“ என்பதும் சவுக்கு வாசகர்களுக்கு அந்த உரையாடலின் மூலமாக நன்கு தெரிந்திருக்கும்.
அந்த பிரகாஷ் இன்று நித்யானந்தா ப்ரஸ் மீட்டில் கலந்து கொண்டார். அப்போது நித்யானந்தா “எங்கள் பக்தர்கள் மற்றும் மடத்துக்குச் சொந்தமான நிலங்களை அபகரிக்க, சன் டிவி, நக்கீரன் மற்றும் தினகரன் ஊடகங்களை நடத்துபவர்கள் முனைந்தார்கள். அதற்கு இணங்கவில்லை என்பதாலேயே, அந்த வீடியோவை வெளியிட்டார்கள்“ என்று கூறினார். அப்போது, அந்த நிலம், எந்த நிலம் என்பதை சொல்ல முடியுமா என்று கேட்ட போது, எழுந்த பிரகாஷ் “அது எந்த எடம்ன்றத நான் சொல்றேன்.. ஜமீன் பல்லாவரத்துல கவர்மென்டுக்கு சொந்தமான குவாரில நீங்க ஆசிரமம் கட்ட ட்ரை பண்ணீங்க… அதுனாலதான் இவ்ளோ பிரச்சினை“ என்று கூறினார். அதற்கு நித்யானந்தா, “நீங்கள் சொல்வது உண்மையில்லை. இதற்கு ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டும். இந்த உரையாடல் பதிவு செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் சொல்லும் இடம் ஈசிஆரில் இருக்கிறது. ஆதாரத்தை காட்டத் தவறினால் நான் அவதூறு வழக்கு தொடுப்பேன்“ என்று கூறினார்.
அதையடுத்து, தினகரனைச் சேர்ந்த ஒரு நிருபர், “கர்நாடகா போலீஸ் உங்களை கைது செய்தவுடன் எதற்காக பெண்கள் சிறையில் அடைத்தார்கள்“ என்று கேட்டார்.
அதற்கு நித்யானந்தா “பெங்களுருவில், ஆண்கள் சிறை, பெண்கள் சிறை என்று தனியாக இருக்கிறது. பெண்கள் சிறை என்று பெயர் இருந்தாலும், அது பயன்படுத்தப் படாமல் இருந்தது. என்னைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக அந்தச் சிறையில் அடைத்தனர்“ என்று கூறிய போது, நித்யானந்தாவைப் பார்த்து, “அரவாணி“ என்று பொருள் தொனிக்கும் வகையில் பிரகாஷ் செய்கை செய்து காட்டினார். இதைப் பார்த்த நித்யானந்தா, “நான் முற்றும் துறந்த ஞானி. எனக்கு கை மற்றும் வாய் வேலை செய்தால் போதும். அதாவது, அருள்வாக்கு சொல்ல வாயும், ஆசி வழங்க கையும் இருந்தால் போதும். நான் என் பக்தர்களிடம் எப்போதும் சொல்வேன். தெருவில் நீங்கள் செல்லும் போது, உங்களை நாய் கடித்தால் சிகிச்சை செய்யுங்கள். நாயைத் திருப்பிக் கடிக்காதீர்கள். அதைத் தான் நான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்“ என்று கூறினார். தொடர்ந்து பிரகாஷ் சத்தம் போட்டு அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை குலைக்க முயற்சி செய்தார். அப்போது காவல்துறையினர் வந்து பிரகாஷை அப்புறப்படுத்த முயற்சி செய்த போது, சக பத்திரிக்கையாளர்கள் பிரகாஷே வெளியேறு என்று கோஷங்களை எழுப்பியதும், பிரகாஷ் அமைதியானார்.
நித்யானந்தாவோடு மோதும் “நக்சலைட்” பிரகாஷ்
நக்சலைட்டை அப்புறப்படுத்த வரும் காவல்துறை அதிகாரிகள்
காவல்துறையினரோடு தகராறு செய்யும் “நக்சலைட்” பிரகாஷ்
இப்போது நக்கீரனைப் பார்த்து சவுக்கு கேட்க விரும்புவது. சவுக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரகாஷ் பேசியதை இந்த உலகமே கேட்டு விட்டது. இப்படிப் பட்ட ஒரு நபரை இன்னும் வேலையில் வைத்திருக்கும் போதே நக்கீரனின் தரம் தெரிகிறது. உங்களைப் பற்றி எழுதும் போது வரும் அதே கோபம், மற்றவர்களைப் பற்றி எழுதும் போது உங்களை யோசிக்க வைக்க வேண்டும்.
நேற்றைக்கு முன்தினம், குமுதம் ரிப்போர்ட்டரில் காமராஜ் புகைப்படத்தோடு ஜாபர் சேட் பற்றி வெளி வந்த கட்டுரையைப் பார்த்தபுடன், காமராஜ், “நான் யார் தெரியுமா ? என் போட்டோவைப் போட்டு எழுதுகிறார்கள். என் பேக்கிரவுண்ட் என்னன்னு இவனுங்களுக்கு என்ன தெரியும்… ? இந்த பத்திரிக்கை உலகத்துக்காக நான் எப்படி உழைச்சுருக்கேன் தெரியுமா ? நான் அடிச்ச நியூஸை இங்க இருக்கற எவனாவது அடிச்சுருப்பானா ? நீயுஸுக்காக நான் ஏறாத காடு மலை, எதுவுமே கிடையாது… இந்த பத்திரிக்கை உலகத்துக்காக நான் அவ்ளோ கஷ்டப்பட்டுருக்கேன்…. என்னப் போயி இப்படி எழுதுறானுங்க……… காலம் இதுக்கெல்லாம் பதில் சொல்லும். நான் யாருன்றத அப்போ புரிஞ்சுக்குவாங்க“ என்று புலம்பியிருக்கிறார்.
காமராஜ் சொல்வது உண்மையா என்று விசாரித்த போது உண்மை என்று தெரிய வந்தது. மலைகளின் ராணி என்று அழைக்கப் படும் ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலைகளில் காரில் ஏறி, நன்றாக சரக்கடித்திருக்கிறார். தலைமைச் செயலகத்தின் படிகளில் ஏறி, வீட்டு வசதித் துறை அமைச்சர் அறைக்குச் சென்று, தன் மனைவி ஜெயசுதா பெயரில், “சமூக சேவகர்“ என்ற பிரிவில் திருவான்மியூரில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யக் கோரி, 1.26 கோடியை கட்டி அந்த மனையை வாங்கியிருக்கிறார். காடு என்று இவர் குறிப்பிடுவது திமுக ஆட்சி நடந்த சமயத்தில் இருந்த தலைமைச் செயலகத்தைத் தான். அடுத்தவரை அடித்துத் தின்னலாம், கபளீகரம் செய்யலாம் என்று மிருகங்களாக அலைந்த அப்போதைய அமைச்சர்களும், அதிகாரிகளும் இருக்கும் இடம் காடு தானே ? ஆனால் அந்தக் காட்டின் ராஜா மட்டும் வீல் சேரில் வருவார்.
நக்கீரன் கோபாலுக்கும், காமராஜுக்கும் சவுக்கு ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறது. நடக்காத சம்பவங்களை நடந்தது போல “ராங் கால்“ பகுதியில் போடுகிறீர்களே…… நடந்த சம்பவத்தை சவுக்கு உங்களுக்காக தருகிறது பாருங்கள்.
கடந்த இதழ் நக்கீரன் இதழின் கவர் ஸ்டோரி….. இந்தியாவின் மிகப் பெரிய திருடனான தயாநிதி மாறனைப் பற்றியது. அட்டையில் தயாநிதி மாறனின் படத்தைப் போட்டு, “1575 கோடி வந்தது எப்படி ? சிவசங்கரனின் வாக்குமூலம்“ என்று கவர் ஸ்டோரி செய்திருந்தார்கள். இதற்காக தமிழகம் முழுக்க கூடுதலாக போஸ்டர்கள் அடித்து ஒட்டப் பட்டன. இந்த இதழ் வந்ததை அடுத்து, இந்தியாவின் மிகச் சிறந்த சீரியல் நடிகையான கருணாநிதியின் மகள் செல்வி, நக்கீரன் கோபாலைச் சென்று பார்த்தார். பார்த்து, “ஏன் இப்படி எழுதுகிறீர்கள்….. நாங்கள் உங்களுக்கு என்ன பாவம் செய்தோம். மாறன் பாவம்……. இப்படியெல்லாம் எழுதலாமா“ என்று கேட்டிருக்கிறார். அதற்கு கோபால், “காமராஜ் வீட்டில ரெய்டு நடந்ததுக்கு யாரும்மா காரணம்….. மாறன் தானே… ? முருகன் ஐஏஎஸ் எதுக்கு காமராஜுகிட்ட ரெய்டு நடந்து முடிஞ்ச மறு நாள்ளேர்ந்து தொடர்ந்து பேசுனார்…. காமராஜ் என்ன ஃபீல் பண்றான்னு தயாநிதி மாறன் கேட்டதா, காமராஜுக்கு எதுக்கு ஃபோன் பண்ணார் ? எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனச்சுகிட்டு இருக்கீங்களா ? தலைவர் பர்மிஷனோடதான் எல்லாத்தையும் எழுதறோம் (கருணாநிதி உங்களுக்குத் தலைவரென்றால், நக்கீரன் திமுகவின் பத்திரிக்கையா கோபால் ?) அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லியாச்சு… அவர்தான் எழுதச் சொன்னார். “ என்று கூறியிருக்கிறார்…..
இந்தியாவின் தலைச்சிறந்த சீரியல் நடிகை செல்வி
அடுத்த எபிசோடில், செல்வி கோபாலபுரம் வந்து கருணாநிதியைப் பார்த்து “ அப்பா பாருங்கள் அப்பா…… நம்ப குடும்பத்தப் பத்தி எப்படி எழுதறாரு அப்பா அந்த வீரப்பன் (கோபால் சார்.. செல்வி உங்களுக்கு வைத்திருக்கும் பெயர் வீரப்பனாம்) அந்த வீரப்பன்கிட்ட சொல்லுங்கப்பா…. “ என்று கிளிசரின் போடாமல் கண்ணீரைத் தாரைத் தாரையாக ஊற்றியிருக்கிறார். இது போல எத்தனை எபிசோடுகளை பார்த்திருப்பார் கருணாநிதி ? “யாரு குடும்பத்தப் பத்திம்மா எழுதறாங்க…..“ என்று கேட்டிருக்கிறார். “மாறன்களப் பத்தி தாம்பா“ என்று நடிகை சொல்லவும், “அவங்க நம்ப குடும்பமாம்மா ? “ என்று எதிர்க்கேள்வி கேட்டதோடு, “உன்ன யாரு கோபாலப் போயிப் பாக்கச் சொன்னது““போயி வேலையைப் பாரு“ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
செல்வியும், என்னடா இது, அரை லிட்டர் கண்ணீர் வீணாகப் போய் விட்டதே என்று மனமுடைந்து சென்று விட்டாராம். ஊரில் உள்ள எல்லாவற்றையும் எழுதுகிறீர்களே கோபால்….. செல்வி உங்களை வந்து பார்த்ததை ஏன் எழுதவில்லை ? மாறன் சகோதரர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி பெங்களுரு முழுக்க செல்வி சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதைப் பற்றி ஏன் எழுத மாட்டேன்கிறீர்கள் கோபால், ஏன் எழுத மாட்டேன்கிறீர்கள்.
போராட்டத்தில் வளர்ந்த நக்கீரன் பத்திரிக்கையை இன்று ஆதித்யாவின் அச்சு வடிவமாக மாற்றி விட்டீர்கள். பேசாமல் நீங்கள் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை இந்தியா போன்ற நாடுகளுக்குச் சென்று “கோபால் பல்பொடி“ விற்கச் செல்லுங்கள் கோபால். விற்கச் செல்லுங்கள். இதுவே தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நீங்கள் செய்யும் மகத்தான உதவி