முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. மக்களைப் போலவே எதிர்க்கட்சியினரும் இவரை மிகக் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். கூவாத்தூரில் நடந்த நாடகத்தில், போட்டியிலேயே இல்லாத எடப்பாடி பழனிச்சாமி எப்படி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற கதையை தெரிந்தவர்களுக்கு, இவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பது புரியும்.
ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியதும், முதல்வர் கனவில் இருந்த ராஜமாதா சசிகலாவுக்கு இரண்டு சிக்கல்கள்.
ஒன்று அதிமுக என்ற கட்சி பன்னீரின் கைக்கு போய் விடும் என்பது. பன்னீரை ஆட்டுவிப்பது பிஜேபி என்பதை சசிகலா நன்றாகவே உணர்ந்திருந்தார். கட்சியை பிஜேபி கையில் எடுத்தால், மன்னார்குடி மாபியாவின் மொத்த எதிர்காலமும் சூனியமாகி விடும் என்பதை உணர்ந்திருந்தார். இதோடு ஆட்சியும் பன்னீர்செல்வத்தின் கைக்கு போய் விட்டால், உடனடியாக குடும்பத்துக்கு சிக்கல் வரும் என்பதையும் புரிந்திருந்தார். ஓரிரு நாட்களில் சிறை செல்ல வேண்டும் என்பது வேறு.
அப்போதைக்கு, டிடிவி.தினகரன், சசிகலா ஆகியோரின் முதல்வர் பதவிக்கான தேர்வு, செங்கோட்டையன் மட்டுமே.
பன்னீர்செல்வம் அணிக்கு எம்.எல்.ஏக்கள் செல்லாமல் தடுக்க வேண்டும். ஆனால் அத்தனை எம்.எல்.ஏக்களும் உடனடியாக பணம் கேட்கிறார்கள். எப்படி இதை சரி செய்வது என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தளவாய் சுந்தரமும், சட்ட அமைச்சர் சிவி.சண்முகமும், எம்.எல்.ஏக்களை தூண்டி விடுகிறார்கள். “சசிகலா சிறைக்கு போய் விடுவார். நீங்கள் இப்போது பணத்தை கேட்டுப் பெறாவிட்டால், எப்போதும் பெற முடியாது. பன்னீர்செல்வம் அணியில் ஏராளமாக பணம் கொடுக்கிறார்கள் என்று எம்.எல்.ஏக்கள் மத்தியில் தகவலை பரப்புகிறார்கள்.
எம்.எல்.ஏக்களும், பரப்பரப்படைந்து, எதிர்ப்பு குரல் எழுப்புகிறார்கள். அந்த நேரத்தில், சசிகலா மற்றும் மன்னார்குடி மாபியா மீது இருந்த வெறுப்புணர்வும், பன்னீருக்கு பெருகி வந்த ஆதரவும் சசிகலாவை கவலை கொள்ள வைத்தன.
செங்கோட்டையனை அழைத்து உங்களை முதல்வராக்கினால், எத்தனை நாளைக்குள் ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும், தலா 3 கோடியை உங்களால் கொடுக்க முடியும் என்று கேட்டதும், செங்கோட்டையன் ஒரு வாரம் அவகாசம் கேட்கிறார்.
இது நடந்து கொண்டிருக்கையிலேயே, பொதுப் பணித் துறை மற்றும், நெடுஞ்சாலைத் துறையை கையில் வைத்திருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகம் முழுக்க உள்ள காண்ட்ராக்டர்களை அழைத்து, உடனே பணத்தை தான் சொல்லும் முகவரிக்கு சென்று வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இவர்களில் முதன்மையானவர் சேகர் ரெட்டி. அமைச்சர் சொல்லும்போது காண்ட்ராக்டர்கள் முடியாது என்றா சொல்லுவார்கள். அனைவரும் பணத்தை தயார் செய்கிறார்கள்.
இதற்கிடையே, எம்.எல்.ஏக்களிடம், ஒரு வாரத்தில் அனைவருக்கும் பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இது இப்படியே போனால், செங்கோட்டையன் முதல்வராகி விடுவார், அவர் சசிகலா கூட்டத்துக்கு விசுவாசமாக இருப்பார். பழைய முறைபோல, மீண்டும், சம்பாதிப்பதில் பெரும் பகுதியை மன்னார்குடி மாபியாவுக்கு வழங்க வேண்டும் என்று கருதிய சி.வி.சண்முகம் மற்றும் சில அமைச்சர்கள், தளவாய் சுந்தரம் மூலமாக மீண்டும் எம்.எல்.ஏக்களை தூண்டி விடுகிறார்கள். எம்.எல்.ஏக்கள், மீண்டும் பிரச்சினை பண்ணுகிறார்கள்.
அப்போது டிடிவி தினகரன், தளவாய் சுந்தரத்தை அழைத்து ஆலோசனை செய்கிறார். முதல் முறையாக, அப்போதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் வருகிறது. டிடிவி தினகரன் பழனிச்சாமியை அழைத்து, எம்.எல்.ஏக்கள் எதிர் முகாமுக்கு தாவும் மனநிலையில் இருக்கிறார்கள். உடனடியாக அவர்களுக்கு பணத்தை கொடுத்து சரி செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக உங்களால் எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்க முடியும் என்று கேட்டபோது, இன்றே பணத்தை பட்டுவாடா செய்ய முடியும் என்று கூறுகிறார்.
அவரிடம் உறுதி செய்து கொண்டபின், பழனிச்சாமியை சசிகலாவிடம் அழைத்துச் செல்கிறார் தினகரன். சசிகலாவிடமும் இதையே சொல்ல, எம்.எல்.ஏக்களை தக்கவைத்து, ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்ற நெருக்கடியின் காரணமாக, எடப்பாடியை முதல்வராக்க சசிகலா சம்மதிக்கிறார். அன்றே, அத்தனை எம்.எல்.ஏக்களின் வீடுகளிலும், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. அப்படித்தான் படிப்படியாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அன்று அழுதுகொண்டே இருந்த செங்கோட்டையனை சமாதானம் செய்ததும் சி.வி.சண்முகமே.
இதே போல எடப்பாடியின் சாதுர்யத்துக்கு இன்னொரு விஷயத்தை உதாரணமாக சொல்லலாம். 2019 பாராளுமன்றத் தேர்தலோடு, 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. மற்ற அமைச்சர்கள், அதிமுக தலைவர்கள், தங்களுக்கு வேண்டியவர்களை எம்.பி ஆக்க முயற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமியின் கவனம் முழுக்க 22 சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் மட்டுமே இருந்தது.
ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்கு வங்கியை வைத்திருக்கக் கூடிய, தேமுதிக கட்சிக்கு என்ன மரியாதை என்பது தெரியும். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் பேரம் நடத்திய தேமுதிகவை எடப்பாடி நினைத்திருந்தால் தெருவில் விட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மேலும் விஜயகாந்தின் உடல்நிலையும் பிரச்சாரம் செய்யும் வகையில் இல்லை. ஆனாலும், தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம் பெற்றதற்கு எடப்பாடியின் பிடிவாதம் மட்டுமே காரணம். நெருக்கடியான ஒரு தேர்தலில், Close contest இருக்கையில், 50 அல்லது 100 ஓட்டுக்கள் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை எடப்பாடி உணர்ந்தே தேமுதிகவை கூட்டணியில் சேர்த்தார். அவர் எடுத்த முடிவு சரியானது என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவித்தன. 2021 வரை ஆட்சிக்கு ஆபத்தில்லாமல் பார்த்துக் கொண்டார்.
எடப்பாடி பழனிச்சாமி குறித்து இப்படியொரு அறிமுகம் தந்ததற்கு காரணம் உண்டு. இப்படிப்பட்ட எடப்பாடியால் இன்று ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வில் செல்லும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் சந்தோஷ் பாபு, தமிழக அரசின் தகவல் தொழிநுட்பத் துறையின் முதன்மை செயலாளராக உள்ளார். தமிழக அரசின் மின் ஆளுகை கொள்கையை செயல்படுத்துவது இவரது பணி. கடந்த நவம்பர் 2017ல், தமிழக அரசின் மின் ஆளுகை கொள்கை வெளியிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தமிழகமெங்கும் உள்ள 12,524 கிராமப் பஞ்சாயத்துகளை ஃபைபர் ஆப்டிக் இணைப்பு மூலமாக இணைய இணைப்பு வழங்குவது இதன் நோக்கம்.
2016ல் இத்திட்டம் மத்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையால் மேற்கொள்ளப்பட்டது. பாரத்நெட் என்ற அத்திட்டத்தின்படி, இந்தியா முழுக்க 2,50,000 கிராமங்களை ப்ராட்பேண்ட் இணைய இணைப்பு வழங்கி இணைப்பது இதன் திட்டம். இதற்கென, 14 ஜூலை 2017 அன்று, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) என்ற பெயரில், ஒரு புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டது. தகவல் தொழிநுட்பத்துறையின் செயலர், இதன் தலைவராக இருப்பார்.
தமிழகம் முழுக்க பைபர் ஆப்டிக் கேபிள்களை பதிக்க, டிசம்பர் 11 அன்று, டெண்டர் விடப்படுகிறது. மொத்தம் 4 கட்டங்களாக இந்த பணி செயல்படுத்தப்படும். 55 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு இது செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி 1815 கோடி. மீதம் உள்ள தொகையை மாநில அரசு செலவு செய்யும்.
இந்த டெண்டரில்தான் சிக்கல் எழுந்துள்ளது. 2200 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரில் பல நிறுவனங்கள் பங்கு பெற்றாலும், இறுதியாக இரண்டு நிறுவனங்களுக்கு இடையேதான் போட்டி. எல் அண்ட் டி தொழில்நுட்ப நிறுவனமும், ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இறுதி சுற்று வரை வந்துள்ளன.
எல் அண்ட் டி நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. TANFINET நிர்வாகம், ஒப்பந்தத்தை இரு நிறுவங்களுக்கும் பகிர்ந்து வழங்கலாம் என்று முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவ்விவகாரத்தில் தலையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, TANFINET மேலாண் இயக்குநர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ்ஸை அழைத்து, பைபர் ஆப்டிக்கின் மொத்த டெண்டரும், ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்க்காக டெண்டர் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். முதல்வர் கூறியபடி டெண்டரை ரத்து செய்து புதிய விதிகளோடு டெண்டர் வெளியிடப்பட்டால், இந்த டெண்டரில் தகுதி பெறும் ஒரே நிறுவனமாக ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் மட்டுமே இருக்கும்.
இப்படி திருத்தம் செய்யப்பட்டால், பழைய டெண்டரில் இது வரை பங்கேற்ற நிறுவனங்கள் நீதிமன்றம் செல்லக் கூடும். இத்திட்டத்தின் பெரும்பாலான நிதியை வழங்குவது மத்திய அரசு என்பதால், எதிர்காலத்தில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளும் சாத்தியக் கூறுகள் உள்ளன.
அப்படியொரு விசாரணை நடைபெறுமேயானால், வாய்மொழியாக டெண்டரை மாற்றச் சொன்ன எடப்பாடி பழனிச்சாமியின் பங்கு எந்த ஆவணத்திலும் இருக்காது. டெண்டரை ரத்து செய்து, திருத்திய விதிகளோடு புதிய டெண்டரை வெளியிட முடிவெடுத்த சந்தோஷ் பாபு மட்டுமே இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். முதல்வர் சொன்னதால் மாற்றினேன் என்று அவர் எத்தனை உரத்த குரலில் சொன்னாலும், அது எடுபடாது.
இதன் காரணமாக டெண்டரை மாற்ற முடியாது என்று சந்தோஷ் பாபு உறுதியாக மறுத்துள்ளார்.
ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுக்கக் காரணம், இந்த டெண்டரை ஸ்டர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கு சாதகமாக முடிவெடுத்தால், 14 சதவிகித லஞ்சம் கொடுக்க ஸ்டர்லைட் நிறுவனம் முன்வந்துள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன. இதை உறுதிப் படுத்த முடியவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி ஸ்டர்லைட் போராட்டத்தின்போதே, அந்நிறுவனத்துக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டார். தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய சமயத்தில், 13 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
உள்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கிச் சூடு நடந்த அன்று, “டிவியில் பார்த்துதான் துப்பாக்கிச் சூடு நடந்தை தெரிந்து கொண்டேன்” என்று, பொறுப்பற்று பதில் கூறினார்.
100 நாட்களாக தொடர்ந்து நடந்த அந்த போராட்டத்தை ஒடுக்கவும், மக்களை அச்சுறுத்தவும், ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு ஆதரவாக துப்பாக்கிச் சூடு நடத்த எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டாரா என்ற சந்தேகம், இந்த டெண்டர் விவகாரத்தில் பழனிச்சாமி ஸ்டர்லைட் நிறுவனத்துக்கு விதிகளை மீறி ஆதரவாக நடந்து கொள்வதில் இருந்து தெரிய வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில், அவசர அவசரமாக விசாரணை ஆணையத்துக்கு உத்தரவிட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஒரு மோசமான ஊழல் நீதிபதியை அதை விசாரிக்க நியமித்து, அந்த ஆணையத்துக்கு தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்கி வருவதும் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சந்தோஷ் பாபு போன்ற ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரியே, இந்த ஊழலுக்கு துணை போக மறுத்து, விருப்ப ஓய்வில் செல்வது, தமிழக அரசில் ஊழல் எந்த அளவுக்கு புரையோடிப் போயுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஒரு மூத்த ஐஏஎஸ் அதிகாரி, “இந்த விவகாரத்தில் நிதித் துறை செயலர் துணிச்சலாக முடிவெடுத்திருக்க வேண்டும். ஆனால், நிதித் துறை செயலர் முடிவெடுக்காமல், தகவல் தொழில்நுட்ப செயலாளர் முடிவெடுத்திருப்பது வருத்தத்திற்குறிய விஷயமே. இதன் காரணமாக அத்துறை செயலாளர் எஞ்சியிருக்கும் தனது பத்து வருட பணியை துறக்கவும் தயாராக உள்ளது தமிழகத்தில், நிர்வாகம் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளது என்பதையும், ஆளும் வர்க்கத்தினருக்கு அகம்பாவம் எந்த அளவுக்கு கூடியுள்ளது என்பதை உணர்த்துகிறது” என்றார்.
முதல்வர் அவர்களுக்கும், இது போன்ற விவகாரங்களில், துணிந்து ஊழல் செய்தால், என்றாக இருந்தாலும் இதில் சிக்கல் வரும் என்பதை அற்ந்தே இதை செய்கிறார். நேர்மையாக இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மிரட்டும் அளவுக்கு சென்றிருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த ஒரு பத்திரிக்கையாளர் இது குறித்து பேசுகையில், “அரசியல்வாதிகளால் அதிகாரிகள் நெருக்கடிக்கு ஆளாவது, தமிழகத்தில் புதிதல்ல. முந்தைய ஜெயலலிதா ஆட்சியில், வேளாண் துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் நெருக்கடியால், விவசாயத் துறையை சேர்ந்த பொறியாளர் முத்துக்கிருஷ்ணன் என்பவர், கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதை இம்மாநிலம் பார்த்திருக்கிறது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை, ஊழல், ஒரு ஒழுங்கமைவோடு நடைபெற்று வந்தது. அனைத்து ஊழல்களும் போயஸ் தோட்டத்தின் வழிதான் செல்லும். அவர் மறைவுக்கு பிறகு அவரவர் வைத்ததுதான் சட்டம்.
அரசு அதிகாரிகள், கோடிட்ட இடத்தில் கையெழுத்து போடும், தலையாட்டி பொம்மைகளாக மாறி விட்டார்கள். இதற்கு அவர்கள் மத்தியில் நிகழும் அச்சமே காரணம். தமிழகத்தில் ஒவ்வொரு அமைச்சரும் ஒரு குறுநில மன்னர். குட்கா ஊழல் முதல், தன் சொந்தக்காரர்களுக்கு காண்ட்ராக்டுகளை வாரி வழங்கும் எஸ்.பி.வேலுமணியாகட்டும். இவர்கள் அனைவரும், அதிகாரிகள் துணையின்றி இத்தகைய ஊழல்களில் ஈடுபட முடியாது.
ஊழலை எதிர்க்கிறோம் என்று முழக்கமிடும் பிஜேபி அரசு, அதிமுக அமைச்சர்களை ஊழல் செய்யவிட்டு வேடிக்கை பார்த்து வருகிறது. குட்கா ஊழலில் முக்கிய குற்றவாளியான விஜயபாஸ்கர் இன்றும் அமைச்சராக தொடர்ந்து வருகிறார். இது போக அவர் மீது வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருப்பதால், தமிழக அமைச்சர்கள் ஊழல் வேட்டையில் இறங்கி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. இந்த ஊழலை செயல்படுத்த உதவியாக, அதிகாரிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வில் செல்வதென்பது, நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. சந்தோஷ் பாபுவின் இந்த முடிவு, இதர அதிகாரிகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. ஆளும் அமைச்சர்களின் துதிபாடிகளாக இருக்க வேண்டுமா, அல்லது அரசியல் அமைப்பு சட்டத்தின்படி செயல்படும் அதிகாரிகளாக இருக்க வேண்டுமா என்பதை அவர்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
தமிழக வரலாறு, கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிப்பதையும், அதிகாரிகள் சிக்கிக் கொள்வதையும் கண்டித்திருக்கிறது. அதிமுக அமைச்சர்கள் அவசரமாக அடிக்கும் இந்த இறுதிக் கொள்ளையில், அதிகாரிகள் சிக்கிக் கொள்ளாமல், தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.
சந்தோஷ் பாபு, 2004ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் உள்ள ஸ்வர்ணமூர்த்தி ஈஸ்வரன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தேர் திருவிழாவில், தலித்துகளும் தங்களுக்கு தேர் இழுக்கும் உரிமையை கேட்டு வந்தார்கள். நாட்டார்கள் என்று அழைக்கப்படும் கள்ளர்கள் அந்த உரிமையை தலித்துகளுக்கு மறுத்து வந்தார்கள். சென்னை உயர்நீதிமன்றம் 1999ம் ஆண்டு பிறப்பித்த ஒரு உத்தர்வின் அடிப்படையில், 2004ம் ஆண்டு தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது தலித்துகளுக்கும் தேர் இழுக்கும் உரிமையை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை.
அந்த ஆண்டு தேர் இழுக்கும் சமயத்தில், கள்ளர்கள், தலித்துகள் தேர் இழுக்கக் கூடாது என்று பிரச்சினை செய்தார்கள். மதுரை சரக டிஐஜியாக இருந்த ட்டி.ராஜேந்திரன், சிக்கலை தீர்க்க ஒரு நூதன யோசனையை சொன்னார்.
தமிழக சிறப்பு காவல் படையை சேர்ந்த சில காவலர்களை சீருடை அல்லாமல் தேர் இழுக்க வைத்து, அவர்கள்தான் தலித்துகள் என்று கூறி ஜெயலலிதாவையும், உயர்நீதிமன்றத்தையும் ஏமாற்ற திட்டமிட்டார். ஆனால் அப்போது ஆட்சியராக இருந்த சந்தோஷ் பாபு இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உண்மையான தலித்துகள் தேர் இழுத்தால் மட்டுமே, விழா நடக்கும் என்று தீர்க்கமாக முடிவெடுத்ததன் அடிப்படையில், கண்டதேவி திருவிழாவே ரத்து செய்யப்பட்டது.
இதனால் கடும் கோபம் அடைந்த ஜெயலலிதா, சந்தோஷ் பாபுவை நேரில் அழைத்து கடிந்து கொண்டதோடு, அவரை உடனடியாக மாற்றவும் உத்தரவிட்டார்.
இப்படிப்பட்ட அதிகாரியான சந்தோஷ் பாபு, எடப்பாடியின் சட்டவிரோத உத்தரவுகளுக்கு கீழ்படியாததில் வியப்பு இல்லை.
முதல்வரும் அமைச்சர்களும், ஆட்சி முடியும் தருவாயில் இறுதி வேட்டையில் இறங்கியிருக்கின்றனர். அமைச்சர் விஜயபாஸ்கர், கையெழுத்து போடும் அத்தனை கோப்புகளிலும் வசூலை நடத்துகிறார். அவர் செயலாளர் பீலா ராஜேஷ், தனி வசூல் சாம்ராஜ்யம் நடத்துகிறார். முதல்வரின் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறையை பற்றி கேட்கவே வேண்டாம். புதிது புதிதாக திட்டங்கள் போடப்பட்டு, மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இந்த அமைச்சர்களோடு கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கும் அதிகாரிகளை பற்றிப் பேசுவதற்கு எதுவுமில்லை. ஊழல் புரிய மறுக்கும் அதிகாரிகள், ஊழலுக்கு துணை போக மறுப்பதோடு, இந்த ஊழல்கள் மக்கள் பார்வைக்கு வருவதற்கும் உதவ வேண்டும். அது ஒன்றே இந்த கொள்ளைக் கூட்டத்தை அம்பலப்படுத்த வழி.
முதலைமச்சர் மற்றும், அதிமுகவின் அமைச்சர்களுக்கு ஆட்சி முடியும் இந்தத் தறுவாயில் உடுமலை நாராயண கவியின் வரிகள் ஒன்றுதான் தாரக மந்திரம்.
பிணத்தைக்கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே
பணப் பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே
திமுக தலைவர் ஸ்டாலினும் 21.01.2020 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பைபர் ஆப்டிக் டெண்டர் விவகாரத்தில், தலைமைச் செயலாளர் தலையிட்டு, ஊழலை தடுப்பதோடு, மூத்த ஐஏஎஸ் அதிகாரி, சந்தோஷ் பாபு அவர்கள் தனது விருப்ப ஓய்வு கடிதத்தை வாபஸ் பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுவே நமது கோரிக்கையும். தலைமைச் செயலாளர் சண்முகம் இதை செய்வார் என்று நம்புவோம்.
இவர் ஏன் இராஜினாமா செய்ய வேண்டும்? அரசியல் அமைப்பு சாசனம் Article 311 secures to civil servants procedural safeguards. வருவதை நீதிமன்றம் மூலமாக சந்திக்க துணிச்சல் இல்லை என்பதா ? இல்லை என்றால் அடியாட்களை எதிர்கொள்ள திராணி இல்லையா? சகாயம். உமா சங்கர். அந்த காலத்தில் இராயப்பா போல வரலாற்றில் இடம் பெறும் வகையில் செயல் பட வேண்டும். சீமானிடம் சென்று பேசுங்கள். வரலாறு போற்றும்.
சந்தோஷ் பாபு சீமானிடம் பேசட்டும், சீமான் தன் டெல்லி எஜமானர்களுடன் பேசுவார், பிறகு தன் பங்கை வசூலிப்பார்
As expected Tr. Santosh Babu resignation letter has been accepted and allowed to go on voluntary retirement as requested by him. Nothing to say about the honesty, integrity and who are all behind the episode.
IAS Officers Association remain silent for long time , Till now they dint stood up for Junior IAS Officers when govt punished them now for a senior officer like Dr. Santhosh Babu itself they are not speaking up and asking him to cooperate with govt in their loot shamelessly . Dr. Santhosh Babu should be requested to stay back and continue his service to satisfy the needs of people . State needs people like him , he has put up a brave face during Kandadevi Ther issue