பிஜேபி அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தேர்தல் பத்திர மோசடிகளை எவ்வாறு செயல்படுத்தியது என்பது குறித்து ஆதாரங்களுடன் ஹப்பிங்க்டன் போஸ்ட் இதழ் வெளியிட்டது. மொத்தம் ஆறு கட்டுரைகள் கொண்ட தொகுதி அது. அந்தக் கட்டுரைகள் அனைத்தும் தமிழில் சவுக்கு இணையத்தளத்திலும் வெளியானது.
மக்களையும், நாட்டையும், பாராளுமன்றத்தையும் ஏமாற்றி, ஆவணங்களை திருத்தி, எப்படி மோசமான வழியில் தேர்தல் பத்திர திட்டங்களை பிஜேபி அரசு செயல்படுத்தியது என்பதை இந்தக் கட்டுரைகள், அம்பலப்படுத்தின.
அந்தக் கட்டுரைகளின் அடுத்த பாகங்களை ஹப்பிங்டன் போஸ்ட் தற்போது வெளியிடுகிறது. ஹப்பிங்டன் போஸ்ட் இதழோடு சேர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சவுக்கில் வெளிவருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தேர்தல் பத்திரம் தொடர்பான மசோதா பாராளுமன்றத்தில் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு துணைபோனது மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகம். மாநிலங்களவையின் சம்மதம் இல்லாமல் இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று பதிவு செய்த பிறகும், சட்டத் துறை அமைச்சகம், மோடி அரசின் நோக்கத்துக்கு துணை போனது. இவை அனைத்தையும் தக்க ஆவணங்களுடன் ஹப்பிங்டன் போஸ்ட் வெளியிட்டது.
இதில் நடந்த கூடுதலான தவறு என்பது, வெளிநாடுகளில் உள்ள செயல்படாத நிறுவனங்கள் கூட, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கலாம் என்பது பற்றி அரசு நிர்வாகத்தில் விவாதங்கள் நடந்துள்ளன. இது சட்டத்திற்கு புறம்பானது. அதனால் இந்த விவாதம் பற்றி அரசுக் குறிப்புகளில் பதிவு செய்யப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களை அரசுக் குறிப்பு ‘பெயர் குறிப்பிடாத அதிகாரிகளுக்கிடையே நடந்த “அலுவல் சாராத விவாதங்கள்” என்று பதிவு செய்துள்ளது. வேறெந்த விவரங்களும் தரப்படவில்லை. இது சட்ட விரோதமானது. அரசு நிர்வாகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்கிற விதிகளை இது மீறியிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு இத்தகைய நடைமுறை எதிரானதும் கூட.
பாஜக அரசின் சட்டத்துறை அமைச்சகம், இந்தத் தேர்தல் பத்திர திட்டத்துக்கு அனுமதி அளித்ததை “ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று மோடி அரசுக்கு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இது சட்டத்துக்கு விரோதமானது என்பதை ஒப்புக் கொண்டுள்ளது சட்ட அமைச்சகம். இதனை இரண்டு பக்க அறிக்கையாக சட்ட அமைச்சகம் அரசுக்கு அனுப்பியதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆய்வு செய்திருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள், என்.ஜி.ஓக்கள், அறக்கட்டளைகள், தனி நபர்கள் போன்றோர் அளவில்லாத தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கு வகை செய்யும் இத்திட்டம், 2017ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியால் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்துவது சாதாரணமானதல்ல. இதற்கு பல்வேறு சட்டங்களில் திருத்தங்கள் தேவைப்படும். இதில் மிக முக்கியமான திருத்தம் ‘கம்பெனி சட்டத்தில்’ ஏற்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு இருந்த கம்பெனிகள் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம், அரசியல் கட்சிக்கு நன்கொடை கொடுக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகள் இருந்தன. அதில் ஒரு முக்கியமான நிபந்தனை, தொடர்ந்து செயல்பட்டு லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மட்டுமே நன்கொடை கொடுக்க வேண்டும் என்பது. ஆனால், புதிய திருத்தத்தின்படி, செயல்படாத நிறுவனங்கள், கருப்புப் பணத்தை வெள்ளையாக்க வெறும் காகிதங்களில் மட்டுமே இயங்கும் பேப்பர் கம்பெனிகள் / ஷெல் கம்பெனிகள் ஆகியவை கூட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்று மாற்றப்பட்டது. மேலும், ஒரு நிறுவனம் ஒரு ஆண்டில், எவ்வளவு நன்கொடை வழங்கலாம், எந்தக் கட்சிக்கு நன்கொடை வழங்கியது என்ற விவரங்களை பகிரங்கப்படுத்துதல் ஆகிய விதிகளும் தளர்த்தப்பட்டன.
இத்தகைய சர்ச்சைக்குரிய சட்டத்தை போதிய எண்ணிக்கை இல்லாத காரணத்தால் மாநிலங்களவையில் சட்டமாக்குவது கடினம் என்பது பிஜேபிக்கு தெரியும். தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சவுரவ் தாஸ், தற்போது பெற்றுள்ள ஆவணங்களின்படி, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, அரசியல் அமைப்பு சட்டத்தை வளைத்து, விதிகளை மீறி, தேர்தல் பத்திர திட்டத்தை எப்படி பண மசோதாவாகா மாற்றி, மாநிலங்களவைக்கு அனுப்பாமலேயே அதை சட்டமாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. அரசியல் அமைப்பு ஷரத்து 110, பண மசோதாக்கள் மாநிலங்களவைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறது. அருண் ஜெட்லியின் கீழ் செயல்பட்ட கார்ப்பரேட் விவகாரங்களுக்கான துறை, சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் பத்திர மசோதாவை, பண மசோதாவாக நிறைவேற்றுவது குறித்து கருத்து கேட்டுள்ளது. இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சகம், விதிகளின் / சட்டதிட்டங்களின்படி, “இதை பண மசோதாவாக தீவிரமாகக் கருத வேண்டியதில்லை” என்று கருத்து தெரிவித்திருந்தது. ஆனாலும் ஜெட்லியின் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதற்கான ஆவணங்கள் உள்ளன.
இதன் விளைவென்பது, இந்திய ஜனநாயகத்தின் ஆரோக்கியமான அம்சமான தேர்தலில் கையாளப்படும் தேர்தல் நிதியில் ஏற்படுத்தப்பட்ட முக்கியமான மாற்றம் என்பது மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமேல்யே நிறைவேறியிருக்கிறது. அதற்கு ஒரே காரணம் அங்கு பிஜேபிக்கு பெரும்பான்மை இல்லை என்பதே.
மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் மற்றும், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகங்கள், ஹப்பிங்டன் போஸ்ட் இது தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. அவர்கள் பதில் அளித்தால் அது பின்னர் கட்டுரையாக வெளியிடப்படும்.
2017ம் ஆண்டில், அருண் ஜெட்லியிடம் இரண்டு மணிமுடிகள் இருந்தன. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் மற்றும் சட்டத் துறை என இரண்டு அமைச்சகங்கள் அவர் பொறுப்பில் இருந்தன. தேர்தல் பத்திரத் திட்டத்தை, விதிகளை சட்டங்களை மீறி செயல்படுத்த அவருக்கு இந்த இரண்டு அமைச்சகஙக்ளும் தேவையாக இருந்தன.
மார்ச் 8, 2017 அன்று தேர்தல் பத்திரங்கள் குறித்து யோசனை முன்வைக்கபப்ட்டது. அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் பட்ஜெட் தாக்கல் செய்யபப்ட்டிருந்தது. கார்பரேட் துறை அமைச்சரான ஜெட்லி தனது அதிகாரிகளுடன் கம்பெனி சட்டம், 2013 குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த விவாதத்தில் நிறுவனங்களில் தனி நபர்கள் இயக்குநர்களாக இருப்பது குறித்த திருத்தங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தத் திருத்தங்கள் ஏற்கனவே விவாதத்தில் இருந்தவை. இந்த விவாதக் கூட்டம் பற்றிய ஆவணங்களை ஹப்பிங்க்டன் போஸ்ட் பார்வையிட்டது. அதில் தெரிய வந்தது என்னவெனில், அந்த விவாதத்தில் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்து எதுவுமே விவாதிக்கப்படவில்லை என்பது தான்.
ஆனால், விசித்திரம் என்னவெனில், மார்ச் 8 அன்று நடந்த விவாதத்தில் செயல்படாத நிறுவனங்கள் கூட தேர்தல் நிதிக்கு நன்கொடை தரலாம் என்று விவாதித்ததாக ஒரு அரசுக்குறிப்பு தெரிவிக்கிறது. மார்ச் 16 என்று தேதியிட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் இருந்து நமக்கு இது தெரிய வருகிறது. 8 மார்ச் 2017 விவாதக் கூட்டத்துக்கான கருப்பொருள் / அஜெண்டாவில், தேர்தல் பத்திரங்கள் குறித்து எந்தவொரு குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“2013ம் ஆண்டு கம்பெனிகள் சட்டத் திருத்தத்தின்படி, பிரிவு 182 (அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்த வரைமுறைகள்) திருத்தப்படலாம். தேர்தல் நன்கொடை வழங்குவது தொடர்பாக வெளிப்படைத்தன்மையை உருவாக்க அரசு தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது” என்று அந்த குறிப்பு கூறுகிறது. இந்த சட்டப்பிரிவில் கொண்டு வரப்பட்ட இரண்டு திருத்தங்கள் முக்கியமானவை. ஒரு நிறுவனம், தனது மூன்று ஆண்டுக்கான சராசரி லாபத்தில் 7.5 சதவிகிதத்துக்கு மிகாமல் நன்கொடை வழங்கலாம் என்ற உச்சவரம்பு நீக்கப்பட்டது. இது ஒரு திருத்தம். மற்றொன்று, முக்கிய திருத்தம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்குகின்றன என்ற விபரங்களை வெளியிட வேண்டியதில்லை என்பது இரண்டாவது திருத்தம்.
அந்த அலுவல் குறிப்பு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான திருத்தத்தை முன்மொழிந்தது யார் என்று குறிப்பிடவில்லை. ஆனால் ஜெட்லியின் 8 மார்ச் 2017 கூட்டத்துக்கு பிறகு, “அலுவல் சாரா விவாதங்கள்” வருவாய் துறை மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுக்கிடையே நடந்ததாகவும், அதில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும் அந்தக் குறிப்பு கூறுகிறது.
அந்த குறிப்பின்படி, அந்த “அலுவல் சாரா விவாதங்களின் அடிப்படையில்”, கம்பெனி சட்டப் பிரிவு 182ல் திருத்தங்கள், 2017ம் ஆண்டின் நிதி மசோதாவில் சேர்க்கப்படும் என்று கூறியது. 1 பிப்ரவரி 2017 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நிதி மசோதாவின் மீது மக்களவை வாக்கெடுப்பு அது வரை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் கீழ் செயல்படும், பணியாளர் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வுதியங்காளுக்கான அமைச்சகம்தான், அரசு அதன் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை செயல்படுத்தும் அமைச்சகம். அந்த அமைச்சகத்தின் அலுவலக நடைமுறை கையேட்டின்படி, இரு அதிகாரிகளுக்கிடையிலோ, அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு இடையிலோ நடைபெறும் விவாதங்கள், அது தொலைபேசி வழியிலான விவாதமாக இருந்தாலும் சரி, அதன் அடிப்படையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும், முறையாக அலுவலக குறிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும் என்கிறது. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இது பதிவு செய்யப்பட வேண்டும். அரசு நடத்தை விதிகளின்படி, அரசு அதிகாரிகள், வாய்மொழியாக வழங்கப்படும் உத்தரவுகளை ஏற்கக் கூடாது. மேலும், உச்சநீதிமன்றம், வாய்மொழியாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்துள்ளது. டிஎஸ்ஆர்.சுப்ரமணியம் Vs இந்திய அரசு என்ற வழக்கில், அக்டோபர் 2013ல், உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது. “அரசு அதிகாரிகள், வாய்மொழியாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகள், ஆலோசனைகள், கருத்தாக்கங்களின் அடிப்படையில் செயல்படக் கூடாது. அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், மற்றும், அதிகார வர்க்கம் சட்டவிரோதமாகவும், நேர்மையற்ற முறையிலும் பிறப்பிக்கும் உத்தரவுகள் மற்றும் அழுத்தங்களில் இருந்து அரசு அதிகாரிகள் காப்பாற்றப்பட வேண்டும்” என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அரசு அதிகாரிகளின் “அலுவல் சாரா விவாதங்கள்” இதன் அடிப்படையில் சட்டவிரோதமானவை. எத்தகைய விவாதங்களாக இருந்தாலும், அது அரசு அலுவலக கோப்புகளில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தேர்தல் பத்திர விவகாரத்தில் இது செய்யப்படவில்லை. இப்படி கடைபிடிக்கப்பட்ட இந்த நடைமுறை கவலை அளிக்கக் கூடியதென்றால், இதன்பொருட்டு பரிந்துரைக்கப்பட்ட திருத்தம் மிகவும் மோசமானதாக இருக்கிறது.
அரசு ஒரு சட்டத்தை திருத்துகையில், “சட்டத் திருத்தம்” என்றொரு வரைவு மசோதா உருவாக்கப்படும். பல துறைகளை சேர்ந்த மூத்த அதிகாரிகள், இந்தத் திருத்தங்களை பல முறை பரிசீலித்து, முடிவெடுப்பார்கள். பல நேரங்களில் இத்தகைய திருத்தங்களின் மீது, பொதுமக்களின் கருத்து கேட்கப்படும். இதன் பிறகு இந்த சட்டத் திருத்தம், மாநிலங்களவை மற்றும் மக்களவையில் வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டு சட்டமாக்கப்படும்.
கம்பெனிகள் சட்டப் பிரிவு 182ல் கொண்டு வரப்படும் திருத்தம், இந்திய தேர்தல்களில், கார்ப்பரேட்டுகளின் பண முதலீடு பற்றியதொரு திருத்தம் என்பதால், இந்தத் திருத்தம் இத்தகைய நடைமுறைகளை பின்பற்றியே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ, பெயர் தெரியாத, அதிகாரிகள் நடத்திய “அலுவல் சாரா விவாதங்களின்” அடிப்படையில் இந்த சட்டத் திருத்தம் செய்யப்பட்டால் போதும் என்று கருதியது.
இந்தத் திருத்த மசோதாவில், விவாதங்களை முற்றிலும் தவிர்க்க, இந்த திருத்தங்களை, பண மசோதாவில் நுழைத்து, நிதி சட்டமாக, மாநிலங்களவையை தவிர்த்து குறுக்கு வழியில் நிறைவேற்றியது
அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஷரத்து 110 பண மசோதா பற்றி இவ்வாறு கூறுகிறது.
“பண மசோதா என்பது, மத்திய அரசின் கூட்டுத் தொகுப்பு நிதியை பாதிக்கும் அரசின் வருவாய், செலவு, வரி, கடன் ஆகிய மசோதாக்களே பண மசோதாக்கள்” என்று கூறுகிறது.
தேர்தல் பத்திரம் தொடர்பான கம்பெனிகள் சட்டத் திருத்தம் பண மசோதாவாக கருதப்படுமா ?
16 மார்ச் 2017 தேதியிட்ட, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சரவையின் குறிப்பு, இது குறித்து ஒரு வினோதமான விளக்கத்தை அளிக்கிறது. “கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நன்கொடை காப்பரேட் சட்டப் பிரிவு 182ன் கீழ் வருகிறது. இதன்படி அளிக்கப்படும் நன்கொடைகள், அந்த நிறுவனத்தின் மொத்த வருவாயிலிருந்து கழித்துக் கொள்ள, வருமான வரிச் சட்டப் பிரிவு 80GGBன் வகை செய்கிறது. நன்கொடைக்கான உச்சவரம்பான 7.5 சதவிகிதத்தை நீக்கினால், அது அரசின் வரி வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்தும் நன்கொடைக்காக வரிச் சலுகை பெறப்படும். அமைச்சகம் அளித்த விளக்கத்தின்படி, உச்சவரம்பை நீக்கினால், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூடுதலாக நன்கொடை தரும். அதன் காரணமாக அவை குறைந்த வரியை செலுத்தும். இதனால் அரசின் வருவாய் குறையும். இதன் அடிப்படையில், இந்த திருத்தம் பண மசோதாவே என்ற வாதத்தை கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் வைத்தது.
இந்த வினோதமான விளக்கத்தில், அமைச்சகம், கார்ப்பரேட் நிறுவனங்கள் / செயல்படாத நிறுவனங்கள் ரகசியமாக அரசியல் கட்சிகளுக்கு அளிக்கும் நிதி எப்படி அரசு வருவாயை பாதிக்கும் என்பதற்கான எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.
சட்ட அமைச்சகத்தின் அறிவுரை.
16 மார்ச் 2017 அன்று, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம், சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கேள்வியை எழுப்பியது. “கம்பெனிகள் சட்டத்துக்கான பிரிவு 182ல் செய்யப்படும் திருத்தம், பண மசோதாவில் சேர்த்து திருத்தப்பட முடியுமா” என்பதே அந்தக் கேள்வி.
மறு நாளே சட்டத்துறை அமைச்சகம் இரண்டு பக்க குறிப்பில் விளக்கம் அளித்தது. சட்ட அமைச்சகத்தின் துணை சட்ட ஆலோசகர் ஆர்.ஜே.ஆர்.காஷிபத்லா இதை தயாரித்து, உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்றார். இணை செயலர் மிஷ்ராவும் இதில் கையெழுத்திட்டுள்ளார். அந்த குறிப்பு இவ்வாறு கூறியது.
“அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும், இதர சூழல்களை வைத்து ஆராய்ந்ததில், பண மசோதா குறித்து விளக்கும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவுகள் 110 (1) (a) முதல் (g) வரையிலான ஷரத்துக்களை வைத்தும் ஒப்பிட்டதில், கம்பெனி சட்டப் பிரிவு 182ல் செய்யப்பட உள்ள திருத்தம், நிச்சயம் பண மசோதாவாக கருத முடியாது”.
சட்ட அமைச்சக அதிகாரிகள், அருண் ஜெட்லியின் தந்திரத்தை புரிந்து கொண்டனர்.
அடுத்து அந்த அதிகாரிகள் இவ்வாறு எழுதுகின்றனர்.
“மேலே குறிப்பிட்ட பத்தி 3ல் சொல்லியவாறு, இந்த திருத்தம், வருமான வரி வருவாயிலும், இந்தியக் கூட்டு நிதியிலும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதால், இதை பண மசோதாவாக நிறைவேற்றலாம்” என்று பதிவு செய்தனர்.
இந்த மோசடி வேலைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தாலும், கடைசியில் ஒரு எச்சரிக்கை குறிப்பை பதிவு செய்கிறது.
“இது போன்றதொரு முறையை இனி வருங்காலங்களில் கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கென உள்ள சட்டபூர்வ வழிமுறைகளையே வருங்காலத்தில் பின்பற்ற வேண்டும்” என்று அந்த குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சகத்தின் இந்த குறிப்பு, அதிகாரிகள் அனைவருக்கும் சுற்றுக்கு விடப்படுகிறது. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சராக அருண் ஜெட்லி, அதற்கு ஒப்புதல் அளிக்கிறார். இந்த ஒப்புதல் நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படுகிறது. நிதி அமைச்சகத்தில் நிதி அமைச்சராக உள்ள அதே அருண் ஜெய்ட்லி, சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கிறார்.
நான்கு நாட்கள் கழித்து, 21 மார்ச் 2017 அன்று கம்பெனிகள் சட்டப் பிரிவு 182ல் திருத்தங்களை ஏற்படுத்த வகை செய்யும் திருத்த மசோதாவை, பண மசோதாவாக மக்களவையில் தாக்கல் செய்கிறார்.
31 மார்ச் 2017 அன்று, கம்பெனிகள் சட்டத்தில் பிரிவு 182ல் திருத்தம், பண மசோதாவாக மக்களவையில் நிறைவேற்றப்படுகிறது. இது மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமலேயே நிறைவேற்றப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம், எந்த தொழிலும் செய்யாத கார்ப்பரேட் நிறுவனங்கள் / ஷெல் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு ரகசியமாக நிதி அளிக்கலாம். அவர்கள் இத்தகைய நன்கொடைகளை, அவர்களின் ஆண்டறிக்கைகளில் காட்ட வேண்டியதில்லை. பொதுவெளியில் தெரிவிக்க வேண்டியதில்லை. எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது என்பதையும் சொல்ல வேண்டியதில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் சவுரவ் தாஸ், பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் கோரி கடிதம் அனுப்புகிறார். அதில், கம்பெனிகள் சட்ட திருத்தம் தொடர்பாக, பிரதமர் அலுவலகத்தில் உள்ள கோப்புகள், அலுவலக குறிப்புகள் அனைத்தின் நகல்களையும் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடிதம் அளிக்கிறார். ஏன் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அளிக்கிறார் என்றால், இரு அமைச்சகங்களுக்கிடையே நடக்கும் சட்டத் திருத்தம் தொடர்பான கடிதப் போக்குவரத்துகள் அனைத்தும் பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமரின் பார்வைக்காக அனுப்பப்படும்.
பிரதமர் அலுவலகம், விண்ணப்பதாரர், “தெளிவில்லாமல்,குழப்பமாக, மிக மிக பொதுவாக (generic) கேள்விகளை கேட்டுள்ளார் என்று கூறி தகவல் அளிக்க மறுத்தது. ஆனால் சவுரவ் தாஸ், குழப்பம் எதுவுல் இல்லாமல், மிக மிகத் தெளிவாகவே, கம்பெனிகள் சட்டத் திருத்தம் தொடர்பான கேள்விகளை கேட்டிருந்தார். தகவல்களை மறுக்க பிரதமர் அலுவலகம் மற்றொரு காரணத்தையும் கூறியது.
“விண்ணப்பதாரர் கேட்கும் கேள்விகளால், பொது அதிகாரிகளின் நேரம் விரயமாக்கப்பட்டு, அரசு பணம் வீணாகும்” என்பதும் மற்றொரு காரணம்”.
இந்த காரணத்தின் அடிப்படையில் பார்த்தால் பிரதமர் அலுவலகத்தின் வசம், இது தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றை அளிப்பதில் அதிக நேரம் ஆகும் என்பதால் தர இயலாது என்று பதிலளித்துள்ளதாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சவுரவ் தாஸ், இதே போல, கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்திடமும் விண்ணப்பம் அனுப்பினார். ஏதாவதொரு கார்ப்பரேட் நிறுவனம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவதை ரகசியமாக்கும்படியோ, உச்சவரம்பை நீக்கும்படியோ கோரிக்கை வைத்ததா என்று கேள்விகளை அனுப்பினார். இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும்போது, பாராளுமன்றத்தில், நிதியமைச்சர் அருண் ஜெய்ட்லி, கார்ப்பரேட் நிறுவனங்கள், இத்தகைய கோரிக்கையை வைத்ததாக கூறியதன் அடிப்படையில் இந்த விண்ணப்பத்தை அனுப்பினார் சவுரவ் தாஸ். கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் தனது பதிலில், “எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் இப்படியொரு கோரிக்கையை வைத்ததாக தங்களிடம் தகவல் இல்லை” என்று பதில் அளித்தது. இதற்கு முந்தைய கட்டுரைத் தொடரில், நிதி அமைச்சகம், எந்த கார்ப்பரேட் நிறுவனமும், இத்தகைய கோரிக்கையை வைக்கவில்லை என்பதை நிதி அமைச்சகம் விளக்கியிருந்ததை ஹப்பிங்டன் போஸ்ட் ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் ரகசியமாக நிதி அளிப்பதையும், ஷெல் நிறுவனங்கள் அளவில்லாமல் நிதி அளிப்பதையும், ஏற்பளிக்கும் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் சட்டபூர்வமானதா என்பதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஆனால் 2017லேயே தொடுக்கப்பட்ட இந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று வரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஜனவரி 11 அன்று, தேர்தல் பத்திரங்களை வாங்கலாம் என்று அரசு மீண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கதவைத் திறந்துள்ளது. இது டெல்லி தேர்தலுக்கு சற்று முன்னதாக என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய ஆவணங்கள்.
ஆங்கில கட்டுரையின் இணைப்பு :
களவாணிகள் கைகளில் மாட்டிக்கொண்டோம்