தேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு வந்திருக்கிறது.
பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திர விவரங்களுக்கு தொடர்ந்து மழுப்பலான அல்லது உண்மைக்கு புறம்பான பதில்களையே தந்து வந்திருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் பதிமூன்று கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்ததன் மூலமாக பாரத ஸ்டேட் வங்கி நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரத்தில் உள்ள தலைவர்களை வங்கியின் சார்பாக யாரெல்லாம் பாதுகாக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது. வங்கி தந்திருக்கிற பதில்களில் எஸ்பிஐயின் இணை பொது மேலாளரும் மத்திய பொதுத் தகவல் துறை அதிகாரியுமான நரேஷ் குமார் ரஹேஜா கையெழுத்திட்டிருக்கிறார்.
ஏற்கனவே தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படைத் தன்மை இல்லாத காரணத்திற்காகவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்காகவும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இதோடு இந்தத் திட்டத்தின் மேல் வைக்கப்படுகிற முக்கிய விமர்சனம் என்னவென்றால் யார் யாருக்கு தேர்தல் நிதி வழங்கியிருக்கிறார்கள் என்ற விபரங்களை அரசாங்கம் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஏனைய எதிர்க்கட்சிகளும், நாட்டு மக்களும் இது பற்றிய எந்த விபரங்களும் தெரிந்து கொள்ள இயலாமல் போனது என்பதும், அனைத்தும் மர்மமாக மறைக்கப்பட்டிருக்கும் என்பதும்தான்.
நடுநிலையாக இருக்க வேண்டிய எஸ்பிஐ போன்ற நிறுவனங்களே சமநிலையற்று முறைதவறி நடந்து கொள்கின்றன தகவல் அறியும் சட்டத்திற்கு தவறான தகவல்களளைத் தெரிவிப்பதன் மூலம் அந்த நிறுவனம் நிதி அமைச்சக கட்டளைகளுக்கு மட்டும் அடிபணிந்து வருவதும் தெரிய வந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் ஒரு ரகசிய எண் தரப்பட்டிருக்கும். இதனைக் கொண்டு ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் தொடக்கம் முதல் இறுதி வரை எஸ்பிஐ கண்காணித்து நன்கொடையாளர்களின் அடையாளத்தை மறைத்தது என்பதை டிசம்பர் 2019ல் ஹஃப்போஸ்ட் இந்தியா வெளியிட்ட ஆவணத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்திருந்தது. இதோடு நிதி அமைச்சகத்தின் உத்தரவுப்படி காலாவதியான பத்திரங்களை எஸ்பிஐ ஏற்றுக்கொண்டதையும் ஹஃப்போஸ்ட் இந்தியா வெளியிட்டது.
ஹஃப்போஸ்ட் இந்தியா மற்றொன்றையும் வெளியிட்டிருந்தது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்ட கேள்விகளுக்கான பதிகளைத் தருவதற்கு நிதிமைச்சகத்திடம் எஸ்பிஐ அனுமதி கேட்டிருந்தது. இது சட்டத்திற்கு புறம்பானது. இது முதன்முதலில் எப்போது நடந்தது என்பதனை ஹஃப்போஸ்ட் இந்தியா வெளியிட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டதின்படி, எஸ்பிஐ என்பது தன்னிச்சையான ஒரு நிறுவனம், தகவல்களை வெளியிடுவதற்கு அது மத்திய அரசிடம் அனுமதி கேட்க் வேண்டிய அவசியம் இல்லை.
பிப்ரவரி 2017ல் தேர்தல் பத்திரத் திட்டம் அறிமுகப்படுத்தபப்ட்டு, மார்ச் 2018ல் செயல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் தான் தேர்தல் பத்திரங்களின் முதல் தொகுதி விற்கப்பட்டது. (இதில் 95 சதவீத பலன் பிஜேபிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடப்பட வேண்டியது). இந்தத் தேர்தல் பத்திரத் திட்டத்தை நன்கொடையாளர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச்க் ஹட்ட ஆர்வலர் நாயக் கேள்வி கேட்டிருந்தார்.
சில கேள்விகள் இப்படியாக அமைந்திருந்தன.
- எத்தனை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கபப்ட்டிருந்தன
- எத்தனை விற்கப்பட்டன
- எத்தனை வாங்கப்பட்டன
- எப்போது வரை இதனை இந்தப் பத்திரங்களை வைத்துக் கொள்ள இயலும் (எவ்வளவு காலத்திற்கு வாங்குபவரால் இதனை வைத்துக் கொள்ள இயலும் என்பதைப் புரிந்து கொள்வதற்காக)
- அடமானம் மற்றும் பறிமுதல் செய்யபப்ட்ட பத்திரங்களின் விசாரணைப் பத்திரங்களை எஸ்பிஐ வைத்துக் கொள்ள இயலும்,
- இந்த அடமான பத்திரங்கள் எங்கு பாதுகாக்கப்படுகின்றன
போன்றவை தகவல் சரியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்டன.
இந்தக் கேள்விகள் எல்லாம் முக்கியமானவை. ஏனெனில் ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா இந்தப் பத்திரங்கள் குறித்து கவலை கொண்டிருந்தது. முக்கியமாக பண உறுதிப் பத்திரங்கள் (Bearer Bonds) மூலமாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வாய்ப்பு உள்ளது. அதோடு அதிகளவில் பண உறுதிப் பத்திரங்களை விநியோகிப்பதன் மூலம் இந்திய கரன்சி மீதான நம்பகத்தன்மையும் குறையும் வாய்ப்பும் உண்டு என்பதே ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் கவலைக்கு காரணம்.
2018 மற்றும் 2019ல் எஸ்பிஐ ஒவ்வொரு முகமதிப்பிலும் (denomination) எத்தனை பத்திரங்கள் விற்கப்பட்டன என்கிற நாயக் கேட்டிருந்தார். அதற்கு இப்படியான பதிலை சொல்லியிருந்தது.
“தகவல் கேட்கப்பட்டுள்ள வடிவத்தில், அத்தகவல், வங்கியின் பொதுத் தகவல் அதிகாரியிடம் இல்லை. அதனால் கேட்கப்பட்ட தகவலை வழங்க இயலாது”
இது உண்மை அல்ல.
ஏனெனில் மற்றுமொரு தகவல் உரிமைச் சட்ட ஆர்வலாரான ஓய்வுபெற்ற கப்பல்படை அதிகாரியான லோகேஷ் பத்ரா பெற்ற பதிலையும் ஹஃப்போஸ்ட் இந்தியா பரிசீலத்தது. இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தையும் எஸ்பிஐ பராமரிக்கிறது. அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதித்துறை அமைச்சகத்தோடு அதனைப் பகிர்ந்து கொள்கிறது. இதோடு பத்திரங்களை அச்சிடுவது தொடர்பாக அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுகிறது.
ஏப்ரல் 4, 2018ல் தான் முதன் முதலில் தேர்தல் பத்திரங்களின் முதல் பகுதி விற்பனை செய்யப்பட்டது. இந்தப் பத்திரங்களின் விற்பனை மற்றும் கையிருப்பு போன்ற தகவல்களை எஸ்பிஐ நிதி அமைச்சகத்திடம் தெரிவித்தபடி இருந்திருக்கிறது. ஒவ்வொரு விற்பனையின் போதும் இதனை எஸ்பிஐ தெரிவித்திருக்கிறது.
மார்ச் 2018ல் தொடங்கி அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு எஸ்பிஐ கிளைகளிலும் விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்களின் பரிவர்த்தனைகளின் தேதி வாரியான பதிவுகளையும் நாயக் கேட்டிருந்தார்.
தன்னுடைய கிளைகளில் இருந்து இந்தத் தகவல்களை வங்கியின் தலைமையகம் பெறுவதில்லை என்றும் “இந்த விபரங்களை சேகரித்து வழங்குவது வங்கி அதிகாரிகளின் நேரத்தை விரயமாக்கும் என்பதால் இந்த தகவல்களை வழங்க இயலாது” என்றும் தெரிவித்திருந்தது.
இதுவும் கூட உண்மைக்கு புறம்பானதே.
தேர்தல் பத்திரத் திட்டத்திற்கென பரிவர்த்தனை வர்த்தக பிரிவு என்கிற சிறப்புக் குழுவினை எஸ்பிஐ அமைத்திருந்தது என்பதை ஆவணங்கள் மூலமாக ஹஃப்போஸ்ட் இந்தியா கண்டுகொண்டது. இந்த “பரிவர்த்தனை வர்த்தக பிரிவு” (Transaction Business Unit) அனைத்து தேர்தல் பத்திர பரிவர்த்தனைகள் பற்றிய ஆவணங்களையும் ஒருசேர பாதுகாக்கிறது. அனைத்து கிளைகளில் இருந்தும் பெறப்படுகிற இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் வங்கியின் மூலமாக விற்பனைக்கு பிறகான பத்துநாட்களுக்குப பிறகு நிதி அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் எஸ்பிஐ 24000 கிளைகள் கொண்டுள்ளன. இதில் 32 குறிப்பிட்ட கிளைகளில் மட்டுமே தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன நிலைமை இப்படியிருக்க, இந்த விபரங்களை சேகரித்து வழங்குவது வங்கி அதிகாரிகளின் நேரத்தை விரயமாக்கும் என்பதால் இந்த தகவல்களை வழங்க முடியாது” என்பதாக வங்கி அளித்திருக்கும் பதில் ஏற்கத்தக்கதல்ல.
இதே பதிலைக் காரணம் காட்டி எத்தனை பத்திரங்கள், ஒவ்வொன்றுக்குமான முகமதிப்பு, ஒவ்வொரு பரிவர்த்தனையின்போதும் எத்தனை பத்திரங்கள் விற்பனையானது , இவற்றில் எத்தனை அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கும் வங்கி பதில் அளிக்க மறுத்துள்ளது.
ஓய்வுபெற்ற கப்பல்படை அதிகாரியான லோகேஷ் பத்ரா நிதி அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தகவலின்படி நிதியமைச்சகம் ஒவ்வொரு விற்பனை காலம் முடிந்த பின்னரும் எஸ்பிஐயிடமிருந்து விற்பனையான பத்திரங்களின் முகமதிப்போடு தகவல்கள் பெறுகிறது எனபது தெரிய வந்திருக்கிறது.
ஒவ்வொரு முறை விற்பனையின் போதும ஒவ்வொரு பத்திரமும் எவ்வளவு தொகைக்கும் மாற்றப்பட்டது என்பதையும் வங்கி முன்னதாக தெரிவித்திருந்தது.
நாயக் கேட்ட மற்றொரு கேள்வியானது, தேர்தல் பத்திர நிதியில் வைப்பு நிதி எவ்வளவு என்பதாக இருந்தது. இதற்கு எஸ்பிஐ பதில் கூற மறுத்தது. “விண்ணப்பதாரர் கேட்ட தகவல்கள், வங்கி அதன் வாடிக்கையாளரோடு கொண்டுள்ள வணிகரீதியான ரகசியங்கள் தொடர்பானது. இத்தகவலை வெளியிடுவது, இவ்வங்கி, இதர வங்கிகளோடு போட்டியிடும் தன்மையை குறைக்கும் என்பதால், தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவு 8 (1) (d) பிரிவின் கீழ் இந்த தகவலை தர இயலாது” என்று வங்கி பதிலளித்திருந்தது.
இது எஸ்பிஐயின் பலவீனமான நிலையையே சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் தேர்தல் பத்திர நிதியைப் பொறுத்தவரை வங்கிக்கு முழு அதிகாரமும் உண்டு. வேறெந்த வங்கிக்கும் இதனை விற்பதற்கான அனுமதி இல்லை. இது அரசின் திட்டத்திற்காக செயல்படுத்தப்படுவது, ஒரு தனிப்பட்ட வங்கியின் வணிக அங்கம் அல்ல. அதுவும் போக இந்த விவரங்களை வங்கி நிதி அமைச்சகத்திடம் தொடர்ந்து தெரிவித்தபடி தான் இருந்திருக்கிறது.
நாயக்கின் இறுதி கட்ட கேள்விகளுக்கு பதில் தர மறுத்த வங்கி அதனை எதிர்கொண்ட விதம் மிகவும் சிறுபிள்ளைத்தனமானதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கிறது.
அச்சடிக்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளாலும், நன்கொடையாளர்களாலும் பெறப்பட்ட , வைக்கப்பட்ட பத்திரங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு எத்தனை காலம் எஸ்பிஐ தன்னகத்தே வைத்திருக்கும், எந்த இடத்தில் பாதுகாப்பாக அதுவரை வைக்கப்பட்டிருக்கும் என்கிற கேள்விகளுக்கு வங்கி “இது தனிப்பட்ட ஒருவரின் அந்தரங்கத்துக்குள் உத்தரவாதமற்ற ஊடுருவலுக்கு வழி செய்யும்” என்றது.
இப்படியாக தகவல் மறுக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பொது தகவல் அலுவலர்கள், தனி நபர் / மூன்றாம் நபர் குறித்த தகவல்களை, தனிநபர் சம்பந்தப்பட்டது என்ற காரணத்தை காட்டி தர மறுக்கலாம். ஆனால் இந்த கேள்விகள் தனி நபர சார்ந்ததல்ல.
ஹஃப்போஸ்ட் இந்தியா விரிவான கேள்விகளை எஸ்பிஐ க்கு அனுப்பியுள்ளது. வங்கியின் பத்திகளைப் பெற்றபின் அடுத்ததாக கட்டுரை எழுதப்படும்.
எஸ்பிஐ தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் மறுத்த சில கேள்விகள்
ஹப்பிங்டன் போஸ்ட் ஆங்கில கட்டுரையின் ஆங்கில இணைப்பு
எழுதியவர் : நித்தின் சேத்தி
ட்விட்டரில் பின் தொடர : @nit_set
Sir tnpsc scam pathi article eluthanga…tamil nadu elai manavarhalin nilamaya pathi eluthuga😞😞