
16 ஜூலை 2018. தமிழ்நாட்டின் விடியல் திடுக்கிடலாய் அமைந்தது. செய்தித்தாள்கள் அன்று அனைத்துத் தரப்பினருக்கும் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தன. அன்றாடம் தென்படுகிற செய்தியில் ஒன்றாய் அதைக் கடக்க யாராலும் இயலவில்லை. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை என்பது அன்றாட நிகழ்வாகிவிட்ட பின்னரும் இந்த செய்தி அனைவரைம் பாதிப்பதற்கான காரணம் இருந்தது. பதினோரு வயதே ஆன மாற்றுத்திறனாளியான, செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுமிக்கு பதினேழு பேரால் ஏற்பட்ட பாலியல் தாக்குதல் என்பது அனைவரையும் ஆழமாய் பாதித்தது. சம்பவம் நடந்தது சென்னை அயனாவரம் என்பதால் இது ‘அயனாவரம் வழக்கு’ என்றழைக்கப்பட்டு தொடர்ந்து செய்தித்தாள்கள் தகவல்களைத் தந்தன. தகவல்கள அனைத்துமே அதிர்ச்சியைத் தரக்கூடியன.
பதினோரு வயதான பள்ளிக்கு செல்லும் சிறுமி தான் தினமும் சந்திக்கும் நபர்களால் ஆறு மாத காலத்துக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவித்திருப்பது தெரிய வந்தபோது அது பெரும் மனஉளைச்சலை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. குற்றவாளிகள் அனைவரும் 23 முதல் 60 வயதானவர்கள்.
அந்த சிறுமி வசிக்கும் அடுக்ககக் குடியிருப்பில் லிஃப்ட் ஆபரேட்டராக வேலை செய்த 56 வயது ரவிகுமாரிலிருந்து இந்தக் குற்றம் தொடங்கியது. அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியான தாக்குதலை ஏற்படுத்திய ரவிகுமார் இதனை அதே குடியிருப்பில் வேலை செய்யும் ப்ளம்பர் ஒருவனிடம் பகிர்ந்து கொள்கிறார்.
அந்த அடுக்ககத்தில் மொத்தம் 394 வீடுகள் உள்ளன. அங்கேயே வேலை செய்யும் ப்ளம்பர்கள், தோட்டக்காரர், செக்யூரிட்டிகள், துப்புரவு செய்வபவர்கள் என கொண்டிருக்கும் அடுக்ககம் அது. ப்ளம்பர் சுரேஷுக்கு 32 வயது. அவன் இதனை தோட்டக்காரர், எலெக்ட்ரிக் வேலை செய்பவர், செக்யூரிடியிடம் சொல்கிறான். இப்படியாக இந்த செய்தி பதினேழு பேரை சென்றடைகிறது.
ஆறுமாத காலம் அந்த சிறுமிக்கு பலவிதமான நெருக்கடிகள் தருகின்றனர். சிறுமியின் பெற்றோருக்கு இது தெரியவேயில்லை. ஜூலை 2018ல் சிறுமி தனக்கு வலிக்கிறது என்று சொல்லியபோது தான் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பிறகே சிறுமிக்கு நடந்தவை அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது. அவர்கள் உடனடியாக இதனை அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாராக அளித்தனர். செய்தி வேகமாகப் பரவுகிறது. உடனடி நீதி கிடைக்க வேண்டும் என்கிற உந்துதல் மக்களிடையே ஏற்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டும் என்றார்கள். இந்தக் குற்றத்துக்கு பின்புலமாக சில அரசியல் புள்ளிகள் இருப்பதாகக் கூட சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. மனித உரிமைக் குழுக்களும் காவல்துறைக்கு இந்த வழக்கு தொடர்பாக அழுத்தத்தைக் கொடுத்தன.
காவல்துறைக்கு இது பெரும் அழுத்தம் தந்த வழக்காக அமைந்தது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர் குழுக்கள் கொந்தளித்தன. வழக்கின் புலன் விசாரணையை வேகமாக முடிக்க வேண்டும் என்பது காவல் துறைக்கு புரிந்தது. சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், உடனடியாக சிறப்புப் படையை அமைத்தார். இந்தக் குழு கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்டது. காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து தங்களது விசாரணை வளையத்துக்கு கொண்டு வந்தது.
எஸ்.ராஜேந்திரன் தற்போது பூக்கடை துணை ஆணையராக உள்ளார். இந்த விசாரணை குறித்து அவர் ‘சவுக்கு’ தளத்திடம் பேசினார். “புகாரை பார்த்ததும், எங்களுக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. மாற்றுத்திறனாளியான செவித்திறன் குறையுடைய சிறுமியை எப்படி பதினேழு பேர் இப்படி வன்முறைக்கு உள்ளாக்கியிருக்க முடியும் என்று எங்களால் நம்பவே முடியவேயில்லை. 60 வயதான ஒரு நபரும் இதில் அடக்கம். எல்லா குற்றம் சாட்டப்பட்டவர்களையும் விசாரித்த போது நாங்கள் மேலும் அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் பேரில் தான் பதினேழு பேரையும் நாங்கள் எங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்தோம்” என்றார்.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். சிறையில் நீதிமன்ற அதிகாரிகள் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டன. சில குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யபப்பட்ட மொபைல் போன்களை பரிசோதித்த போது அவர்கள் தொடர்ந்து ஆபாசப்படங்களை பார்த்தவர்களாக இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அந்த சிறுமி உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தடயவியல் துறை மூலமாக சாத்தியங்கள் சேகரிக்கப்பட்டன.
குற்றவாளிகளில் சிலர் சிபிஐ விசாரணை வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனு நிராகரிக்கப்பட்டது. “ஒவ்வொரு நாளும் பதினேழு குற்றவாளிகளில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு மனுவாவது தாக்கல் செய்யப்படும். இந்த வழக்கினைத் தாமதப்படுத்த அவர்கள் அத்தனை சட்டரீதியான வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டனர். ஆனாலும் அரசுத்தரப்பில் இருந்து நாங்கள் பதில் மனு தாக்கல் செய்து அவர்களது மனுக்கள் மேம்போக்கானவை என்பதையும் நீதிமன்றங்கள் அதனை தள்ளுபடி செய்ததையும் உறுதி செய்தோம்” என்றார் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ்.
“அறுபது நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வதென்பது சவாலானதாக இருந்தது. திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறை விதி 2018ன்படி பாலியல் தாக்குதல் வழக்குகளில் அறுபது நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்யபப்ட வேண்டும் என்பது கட்டாயம். இது எங்களுக்கு அதிக அழுத்தத்தைத் தந்தது. நாங்கள் குற்றப்பத்திரிக்கை நிலையில் வைத்திருந்தபோது அரசுத்தரப்பு டெபுடி இயக்குனர் திரு.கோபிநாத் மதுரையில் இருந்தார். நாங்கள் இதன் வரைவினை அவருக்கு அனுப்பி சரியான சமயத்தில் ஒப்புதல் பெற்றோம்” என்றார் ராஜேந்திரன் ஐபிஎஸ்.
மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என் மஞ்சுளா முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியது. அனைத்து குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன (Charges framed) விசாரணை டிசம்பர் 12, 2018அன்று தொடங்கியது. வழக்கிலிருந்து விடுவிக்க, குற்றத்திலிருந்து விலக்கு அளிக்க குற்றவாளிகள் விசாரணை நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் மனுக்களைத தாக்கல் செய்தபடி இருந்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தபடி இருந்தது.
இந்த பதினேழு குற்றவாளிகளும் 10 வழக்கறிஞர்களை வைத்திருந்தனர். அரசுத்தரப்பின் 36 சாட்சியங்களையும் இந்த பத்து எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர். அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியைக் கூட குறுக்கு விசாரணையில் நீண்ட நேரம் விசாரித்தனர். என்கிறார் சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் என். ரமேஷ். “அவர்கள் கிட்டத்தட்ட பாதிக்கப்பட்ட சிறுமியை குறுக்கு விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தினார்கள். பலமுறை நீதிபதியே குறுக்கிட்டு கேள்விகளை மறுக்க தடுக்க நேர்ந்தது” என்கிறார் என். ரமேஷ்.
பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல் அரசுத்தரப்பு சாட்சியங்களும் கூட துன்புறுத்தப்பட்டனர். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் தடுமாறும் போதெல்லாம் பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தத் தொடங்கினார்கள்” என்றார் ரமேஷ். இது ஒருகட்டத்தில் வரம்பு மீறியும் போயிருக்கிறது, “அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரியின் நடத்தை குறித்த தவறான சித்தரிப்பை மேற்கொள்ளத் தொடங்கினர். மற்றொரு வழக்கறிஞர், அவர்கள் குடும்பமே பாலியல் தொழில் செய்பவர்கள் என்று களங்கத்தை ஏற்படுத்தினார்“ என்றார்.
ஆனாலும் கூட குற்றவாளிகள் அனைவருக்கும் தங்களது தரப்பினை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தரபப்ட்டிருந்தன.
வழக்கு விசாரணை முடிந்து, இறுதியாக, 6 டிசம்பர் 2019 அன்று, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 1, 2020அன்று குற்றம் சாட்டப்பட்ட 16பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியது. பதினேழு பேரில் ஒருவர் விசாரணையின்போது (A10) பாபு, உடல்நலக் குறைபாட்டால் இறந்து போயிருந்தார். தண்டனை விவரங்கள் கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி அறிவிக்கப்பட்டது.
வழக்கின் முதல் குற்றவாளி ரவிக்குமார், 2-வது குற்றவாளி சுரேஷ், 5-வது குற்றவாளி அபிஷேக், 11-வது குற்றவாளி பழனிற ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 4-வது குற்றவாளியான ஏரால்பிராஸுக்கு 7 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பினைக் குறித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் வழக்கறிஞரும், சுதா ராமலிங்கம். “இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. காவல்துறை சிறப்பாகவும், குறையின்றியும் விசாரணை நடத்தியிருக்கிறது என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது. இந்த விசாரணை பாதிக்கப்பட்ட மற்றும் குற்றவாளி என இரண்டு தரப்புக்கும் நீதியை உறுதி செய்திருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு விடுதலை அளித்திருப்பதின் மூலம் சாட்சியங்கள்படி மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், உணர்ச்சிவசப்பட்டு தந்த தீர்ப்பு இல்லை என்றும் தெளிவாகியுள்ளது” என்றார்.
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து பேசிய, அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், “தீர்ப்பை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மேல் முறையீடு செய்வதா இல்லையா என்பதை அரசு முடிவு செய்யும்” என்றார்.
பொதுமக்களின் உணர்ச்சி வேகத்துக்கும், கோபத்திற்கும் செவிசாய்க்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சில குற்றவாளிகளையாவது போலி என்கவுண்டர் செய்திருக்க முடியும். ஏனெனில் இந்த பாலியல் தாக்குதல் செய்தி வெளிவரும்போது கூட்டுப் படுகொலை செய்வது நியாயமானதே என்பது மாதிரியான மனநிலை ஏற்பட்டிருந்தது. சமூக வலைதளங்களும் அதற்கு தீமூட்டிக் கொண்டிருந்தது. சட்டத்தைக் கையில் எடுக்காமல் காவல்துறை நீதிமன்றத்தையும், தங்களது புலனாய்வு திறனையும் நம்பியது.
அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் பேசுகையில், “இவ்வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டது. துளியும் தாமதமின்றி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களிலும், இதர வெளிகளிலும், குற்றவாளிகளை, “சுட்டுத் தள்ள வேண்டும். தெருவில் தூக்கிலிட வேண்டும்” என்ற உணர்ச்சி முழக்கங்களுக்கெல்லாம், காவல் துறை செவிமடுக்காமல், சட்டபூர்வமாக வழக்கை நடத்தியது.
வெகு விரைவாக வழக்கின் புலனாய்வு முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையும் ஏறக்குறைய ஒரே ஆண்டில் முடிவுக்கு வந்துள்ளது. இதுதான் இவ்வழக்கின் சிறப்பம்சம்” என்றார்.
இவ்வழக்கு விசாரணை குறித்து பல்வேறு காவல் துறை அதிகாரிகளிடம் பேசியதில், சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் இவ்வழக்கில் காட்டிய முனைப்பையும், அக்கறையையும் சுட்டிக்காட்டினர். தனிப்பட்ட முறையில் அவர் இவ்வழக்கு சரிவர நடத்தப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்ததாக பல அதிகாரிகள் தெரிவித்தனர்.
சவுக்கிடம் இவ்வழக்கு குறித்து பேசிய சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், “நாங்கள் போலி என்கவுண்டர்கள் செய்வதில்லை. சட்டத்தின்படியே நின்றோம். நிற்கிறோம், என்றும் நிற்போம். என்கவுண்டர் செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தது உண்மைதான். மகளிர் நீதிமன்றம் தந்திருக்கும் தீர்ப்பு எங்களது டீமுக்கு கிடைத்த வெற்றி. துணை ஆணையர் எஸ். ராஜேந்திரன் தலைமையிலான எங்களது அதிகாரிகள் அருமையாக பணியாற்றினார்கள்.
குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் பதினேழு பேரையும் 24 மணிநேரத்தில் அவர் கைது செய்தார். சிறப்பு அரசுத் தரப்பு வழக்கறிஞர் இந்த விசாரணையை சரியாக வழிநடத்தினார். விசாரணை அதிகாரி கே.விஜயசந்திரிகா பாராட்டத்தக்க வகையில் செயலாற்றியிருக்கிறார். இறுதியில் எங்களது பலனாய்வு திறனும், நல்ல உள்ளங்களின் உதவிகளும் சரியான பலனைத் தந்திருக்கிறது. இவர்களது உதவி இல்லையென்றால் எங்களால் இதை சாதித்திருக்க முடியாது” என்றார்.
இந்த சமயத்தில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் நிகழ்ந்ததை பொருத்திப பார்க்க வேண்டியிருக்கிறது. ஹைதராபாத் காவல்துறை குற்றவாளிகள் மேல் நடத்திய போலி என்கவுண்டருக்கு கிடைத்த அதீத வரவேற்பும் மகிழ்ச்சியும் சட்டத்தின் மேல் நம்பிக்கை கொண்ட அனைவரையும் திகைக்க வைத்தது.
#WATCH Hyderabad: People celebrate and cheer for police at the encounter site where the four accused were killed in an encounter earlier today. #Telangana pic.twitter.com/WZjPi0Y3nw
— ANI (@ANI) December 6, 2019
உடனடி தீர்ப்பு வழங்கியதாக தெலுங்கானா காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்தன. அவர்கள் மேல் மக்கள் பூக்களை வாரி இறைத்தனர். நமது சட்ட அமைப்பின்படி தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று காத்திருக்க யாருக்கும் விருப்பமில்லை.
பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தில் சில எம்பிக்கள் அதீதமான கருத்துகளைத் தெரிவித்தனர். சமாஜ்வாடி ராஜ்ய சபா எம்பி ஜெயா பச்சன் கூட்டுப் படுகொலையை ஆதரித்தார். அஇஅதிமுகவின் விஜிலா சத்யானந்த், டிசம்பர் 31க்குள் குற்றவாளி தூக்கிலிடப்பட வேண்டும் என்றார். திமுகவின் எம்.பி பி.வில்சன், சிறையில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் முன்பே அவர்களின் ஆண்மை அகற்றப்பட வேண்டும் என்றார்.
இப்படி ஒருபக்கம் மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருக்க, சென்னை மாநகர காவல்துறை சட்டத்தினை மதித்திருக்கிறது. நீதிமன்ற நடைமுறைகள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. அவர்களது சரியான விசாரணையினால் இன்று பலன் கிடைத்திருக்கிறது.
ஒரு வழக்கு எப்படி விசாரிக்கப்பட வேண்டும் என்பதற்கு தமிழ்நாடு காவல்துறை இவ்வழக்கை கையாண்ட விதம் உதாரணமாய் அமையும். சட்டத்தை மதிப்பது, நேர்மையான முறையில் விசாரணை ஆகிய இரண்டும் நல்ல பலன்களைத் தரும். இதனை நாடு முழுவதுமுள்ள காவல்துறை பின்பற்ற வேண்டும்.
தண்டனைகள் போதாது, அவர்களை தினமும் வலிக்கும்படி ஏதாவது செய்ய வேண்டும்..(அதற்கு மனநல மருத்துவர்களையும், வலி சம்பந்தமாக படித்த மருத்துவர்களையும் ஆலோசித்து அவர்கள் தாங்கள் செய்ததைத் நினைத்து தினமும் நொந்தும்படி ஏதாவது கடுமையான தண்டனைகள் தர வேண்டும்)
இதே ஏ.கே.விஸ்வநாதன் தானே சவுக்கு மீது வழக்கு போட்டது..(எடப்பாடிக்காக)…….?????
பொள்ளாச்சி வழக்கில் இந்த வேகத்தை கட்டியிருந்தால் காவல் துறையை உண்மையாக பாராட்டி இருக்கலாம். பணம் படைத்தவர்களுக்கு போலீஸ் ஒரு மாதிரியும் சாமானியர்களுக்கு ஒரு மாதிரியும் உழைப்பது வெட்ககேடு
சரிதான் நண்பா..