இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், அஸ்ஸாம் சில பிரத்யேகமான பிரச்சினைகளை கொண்ட ஒரு மாநிலம். அஸ்ஸாமில்தான், பிற மாநில மக்களும், வங்கதேச இஸ்லாமியர்களும் அதிக அளவில் குடியேறி, பூர்வகுடிகளான அஸ்ஸாமியர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினார்கள். வங்காள மொழி அலுவல் மொழியாக்கப்பட்டது. அஸ்ஸாமியர்களின் கலாச்சாரம் பின்னுக்கு தள்ளப்பட்டது. இந்த இன அடையாள சிக்கல், அஸ்ஸாமில் 19ம் நூற்றாண்டு முதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக அங்கே இனக் கலவரங்களும் நடந்துள்ளன.
அதற்கான தீர்வு எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எடுப்பதல்ல. 80 ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கே புலம் பெயர்ந்து வாழ்ந்து வருபவர்களை ஒரே நாளில் அத்தனை எளிதாக வெளியேற்றி விட முடியாது. ஆனால், அப்படி வெளியேற்ற வேண்டும், என்றுதான் ரஞ்சன் கோகோய் விரும்பினார். அதை நிறைவேற்ற தனது உச்சநீதிமன்ற நீதிபதி என்ற பதவியை பயன்படுத்திக் கொண்டார்.
அவருக்கு இந்த வழக்கில் தனிப்பட்ட விருப்பம் நலன்கள் (Personal interest) இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டியபோதும், இவ்வழக்கிலிருந்து விலக மறுத்தார்.
அவர் என்.ஆர்.சி பற்றி அளித்த தீர்ப்பு, பிஜேபி மற்றும் சங் பரிவார அமைப்புகளுக்கு வாராது வந்த மாமணியாக அமைந்தது. இஸ்லாமியர்களுக்கு எதிரான மதவெறியை தூண்ட சங் பரிவார அமைப்புகளுக்கு பேருதவியாக இருந்தது, பாப்ரி மசூதி மற்றும் ராமர் கோவில். அந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முடிவுக்கு வந்ததும், அடுத்து பிரிவினையை தூண்ட, இவ்வமைப்புகளுக்கு தரவுகள் இல்லாமல் தவித்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைந்தது. இதை மனதில் வைத்துத்தான் அஸ்ஸாமின் பிரத்யேக சிக்கலுக்காக உருவாக்கப்பட்ட என்.ஆர்.சி திட்டத்தை நாடு முழுக்க செயல்படுத்துவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.
CAA / NPR / NRC பற்றிய தெளிவு, படித்த மக்களுக்கே போதுமான அளவில் இல்லாமல் இருக்கிறது. அது குறித்த தெளிவை மக்களுக்கு உருவாக்க இச்சிக்கல் தொடர்பாக, தொடர் கட்டுரைகளை வெளியிட சவுக்கு முடிவெடுத்துள்ளது. அதன் முதல் கட்டுரையாக, NRC குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அளித்த தீர்ப்பு, அதன் பின்புலம் ஆகியவை பற்றி, கேரவன் மாத இதழில் வெளிவந்த கட்டுரையை தோழர் தீபா ஜானகிராமன், மொழிபெயர்த்து சுருக்கமாக தந்துள்ளார். இனி கட்டுரை.
கோகாய் – செய்தித்தாள்கள், பத்திரிகைகளில் எதிர்மறையான காரணங்களுக்காக அதிகம் ‘அடிபட்ட’ முன்னாள் தலைமை நீதிபதி என்று இவரை சொல்ல முடியும். அசாமில் அமைதியான, பணிவான ஒரு மாணவனாக வளரத் தொடங்கி இந்தியாவின் உயர் பொறுப்பான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தன்னைப் பொருத்திக் கொண்டவர்.
இன்று நாடு முழுவதும் பற்றியெரியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக அரசை நோக்கி நீளும் நமது விரல் ரஞ்சன் கோகாயை நோக்கியும் திரும்ப வேண்டும். இதனை விவரிக்கிறது தி கேரவன் ஆங்கில இதழ்.
ரஞ்சன் கோகாய் என்கிற தனி மனிதனுக்குள் இருந்த தீவிர ஒரு சார்பு நிலைப்பாடு (personal prejudice) இந்தத் தேசத்தின் தலையெழுத்தை எப்படியெல்லாம் திசை மாற்றியது என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் சொல்கிறது தி கேரவன் இதழின் கட்டுரையான Sealed and Delivered – Gogoi’s Gift to the Government.
இந்தக் கட்டுரையை எழுதியவர் அர்ஷு ஜான். இவர் தி கேரவன் இதழின் உதவி இணைய ஆசிரியர். முன்பு டெல்லியில் குற்றவியல் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
அதிகாரம் என்பது பொறுப்பாக இல்லாமல் தனிமனித சொத்தாக மாறும்போது ஏற்படும் விளைவை இந்தக் கட்டுரையின் மூலம் உணர முடிகிறது.
ரஞ்சன் கோகாய் அக்டோபர் 2018ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தலைமையேற்கிறார். பொறுப்பேற்பதற்கு முன்பு அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றம் சுமத்தி கோகாய் உட்பட நான்கு நீதிபதிகள் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர். அதுவரை இந்தியாவில் நிகழாத ஆச்சரியமான நிகழ்வு அது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சேர்ந்து உயரிய பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி மேல் குற்றச்சாட்டு வைப்பார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் தீபக் மிஸ்ரா மீது வைத்த குற்றச்சாட்டு, அவர் மத்திய அரசான பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதாக இருந்தது.,
ரஞ்சன் கோகாய் தீபக் மிஸ்ராவுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கிறார். ‘இவர் தானா தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளோடு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது’ என்று அதிரும் அளவுக்கு பாஜகவிற்கு தாராளமான ‘நீதி’ சலுகைகளை கோகாய் அடுத்தடுத்து வழங்கத் தொடங்கினார். ரஃபேல் ஊழல், பாபர் மசூதி – அயோத்யா வழக்கு, ஜம்மு காஷ்மிர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான வழக்குகள், சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கியது என முக்கிய வழக்குகளில் எல்லாம் பாஜக அரசுக்கு சார்பான தீர்ப்புகளையே தந்தார்.
பாஜகவிற்கு கோகாய் இத்தனை சலுகைகளை அளிக்க வேண்டியதன் காரணம் என்ன என்பதை உணர்த்தும் விதமாக 2019 ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தீவிரமான குற்றசாட்டுகளை கோகாய்க்கு எதிராக எடுத்து வைத்தார். 2016 ஆம் ஆண்டு T.S தாக்குர் தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருந்தார். அப்போது உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் ஐவர் கொண்ட குழு நீதிபதி வால்மீகி மேத்தா என்பவரை பணியிட மாற்றம் செய்யுமாறு தாக்குரிடம் வலியுறுத்தினார்கள். வால்மீகி மேத்தா டெல்லி உயர்நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதியாக இருந்தவர். மேத்தா மீது ‘மிகத் தீவிரமான குற்றங்கள்’ என பணியிட மாற்றத்துக்கு காரணமாக குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வால்மீகி மேத்தாவின் மகனைத் தான் கோகாயின் மகள் திருமணம் செய்திருந்தார். அப்போது உச்சநீதிமன்றத்தில் ஜூனியர் நீதிபதியாக இருந்த கோகாய் மோடியையோ அல்லது அவரது அமைச்சகத்தின் முக்கிய அமைச்சரையோ சந்தித்து தன் சம்பந்தியை பணியிட மாற்றம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார் என்பதை பகிரங்கமான குற்றசாட்டாக மார்க்கண்டேய கட்ஜூ முன்வைத்தார்.
‘இது உண்மை என்றால், பாஜக அரசு தங்களுக்கு கோகாய் திரும்ப செய்ய வேண்டியது குறித்து நினைக்காமல் இருக்குமா?” என்றார் கட்ஜு.
கட்ஜு சொல்வது போல் கோகாய் பாஜகவிற்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையில் தனக்கு கிடைத்ததை விட அதிகமாக திருப்பித் தந்தார். இறுதியாக அவர் பாஜகவிற்கு தந்த பரிசு தான் அசாம் குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் உத்தரவு. கோகாய் தொடங்கி வைத்ததை பாஜக அரசு நாடு முழுவதிற்குமானதாய் மாற்ற நினைத்தது. இந்தியா முழுவதுமுள்ள இருபது கோடி இஸ்லாமியர்களின் குடியுரிமை குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி நாட்டினைக் கொந்தளிக்க வைத்தற்கு மூல காரணம் கோகாய் என்ஆர்சி குறித்து அளித்த தீர்ப்புகளே.
ஏற்கனவே மத்திய அரசு என்ஆர்சிக்கான முன்தயாரிப்பாக தேசிய மக்கள் தொகை பதிவுக்கான புள்ளிவிவரங்களை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நாடு முழுவதும் இதற்கான எதிர்ப்புகள் உச்சத்தில் இருக்கும் வேளையில் கோகாய்க்கு பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ள சரத் அரவிந்த் போப்டே தலைமேயேற்றுள்ள பெஞ்ச் சிஏஏவுக்கான எதிர்ப்பினை அரசியல் சாசன எதிர்ப்பாக கருதி தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்து வருகிறது.
ஏப்ரல் 2013 தொடங்கி அக்டோபர் 2019 வரை என்ஆர்சி தொடர்பான பல வழக்குகளை விசாரித்திருக்கிறார் கோகாய். வழக்கு விசாரணைகள் மூலமாக அசாம் மாநிலத்தில் அந்நியர் என்று முத்திரைக் குத்தப்பட்டவர்களை எப்படி வெளியேற்றுவது , அகதி முகாம்களக்கு அவர்களை அனுப்புவது என்பது குறித்து வரையறை செய்தார். இதனால் பல இலட்சம் பேர் தாங்கள் இந்தியக் குடிமகன்கள் தான் என்பதை நிரூபிக்க பல்வேறு விதமான சோதனைக் கட்டங்களுக்கு உட்பட வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இது குடிமகன்களுக்கு வழங்கப்படுகிற தண்டனை தான். நீதிமன்றத்தினால் உத்தரவிட மட்டுமே முடியும். உத்தரவை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமை . ஆனால் என்ஆர்சியில் உச்சநீதிமன்றமே அரசின் பொறுப்பை தனதாக்கிக் கொண்டு திட்டம் சரியாக செயல்படுகிறதா என்பதை மேற்பார்வையிட்டது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், அரசின் பணியை நீதிமன்றம் தன்வசம் எடுத்துக் கொண்டது.
அசாமில் இது எப்போதுமே எரிகிற பிரச்சனை தான். இந்திய சுதந்திரத்துக்குப் பிறகிலிருந்தே அசாமின் அரசியல் இந்த அந்நிய குடியேற்றத்தை மையமிட்டே சுற்றிச் சுழல்கிறது. சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அசாமின் சில இயக்கங்கள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அப்படியான ஒரு இயக்கம் அரச பரம்பரையான அஹம் சமூகத்தினுடையது. கோகாய் இந்த அஹம் அரச பரம்பரையில் வந்தவர். இது போன்ற இயக்கங்களின் குரல்களையே என்ஆர்சி வழக்குகளில் பிரதிபலித்தார் கோகாய்.
இதற்கு காரணமாக கோகாயின் குடும்பப் பின்னணியையும், பரம்பரையையும் இளமையில் அவரை ஈர்த்த கொள்கைகள் குறித்தும் சொல்கிறது கட்டுரை.
1954 நவம்பர் ஒன்றாம் தேதி அசாம் மாநிலம் திப்ரூஹா மாவட்டத்தில் ரஞ்சன் கோகாய் பிறந்தார். சமூக, பொருளாதார, அரசியலில் வளமான பின்புலம் கொண்டவர் கோகாயின் தாய்வழி வம்சத்தினர். அவர்கள் அஹம் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அஹம் அரசர்கள் அறுநூறு ஆண்டுகாலம் அசாமை ஆண்டவர்கள். இவர்கள் அசாமின் பூர்வகுடியினர் அல்ல, குடியேறியவர்களே,
அஹமின் முதல் அரசனான சுகபா, யுனான் பிரதேசம் என்று சீனாவில் தற்காலத்தில் அழைக்கப்படும் மவுலாங் பகுதிக்கு 1215 அன்று சென்றவர். அங்கு பதிமூன்று ஆண்டுகாலம் சுற்றிக் கழித்துவிட்டு அசாமிற்கு வந்து அஹம் ஆட்சியை நிறுவுகிறார். இப்போதுள்ள தாய்லாந்து மக்களுக்கும் பண்டைய அஹம் பரம்பரைக்கும் மரபணு தொடர்பு இருப்பதை 2018ஆம் ஆண்டு வெளிவந்த விஞ்ஞான ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
கோகாயின் அம்மா வழி தாத்தா, பாட்டி காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களாக இருந்துள்ளனர். பாட்டி பத்மகுமாரி அசாமின் முதல் பெண் அமைச்சராக பதவி வகித்தவர். கோகாயின் அம்மா சாந்தி அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் சமூகப் போராளியாக அசாம் முழுவதும் அறியப்பட்டவர்.
கோகாயின் அப்பா கேசப் சந்த்ரா பிரபல வழக்கறிஞர். ஜனதா கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறியவர். காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு இருமுறை எம்.எல்.ஏ ஆனவர். அசாமில் ஆளுனரால் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வருவதற்கு முன்பான இரண்டு மாத காலங்களுக்கு அசாமின் முதலைமைச்சர் பொறுப்பு வகித்தவர் கேசப் சந்திரா.
இத்தனை வலுவான அரசியல் பின்புலம் இருந்தும் கூட கோகாய் அரசியல் ஈடுபாடில்லாமல் இருந்திருக்கிறார். அசாமில் தொடர்ந்து மாணவப் போராட்டங்கள் நடந்தபோது கூட அதில் கோகாய் கலந்து கொள்ளவில்லை. இதற்கு அவருடைய குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸார் என்பதும் முக்கிய காரணம்.
கோகாய் கௌஹாத்தியில் உள்ள காட்டன் கல்லூரியில் சேர்கிறார். அங்கு அவருக்கு உதயாதித்யா பராலி என்கிற வரலாற்று ஆசிரியரின் அறிமுகம் கிடைக்கிறது. பராலியும் அஹம் வம்சாவழியை சேர்ந்தவர். அசாமின் முக்கிய வரலாற்று ஆய்வாளர்.
பராலி பத்திரிக்கைகளில் தொடர்ந்து எழுதுகிற கட்டுரைகள் கோகாயை ஈர்த்திருந்தன. 1996 – 2001 வரை பராலி ‘அசோமியா பிரதிதின்’ என்கிற பிரபல அசாமிய பத்திரிகையில் எழுபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருந்தார். கட்டுரைகள் முழுவதுமே என்ஆர்சியை மேம்படுத்த சொல்கிறவையாக இருந்தன.
“1996ல் நான் தான் முதன்முதலாக இதனைத் தொடங்கி வைத்தேன். அசாமில் வாழும் அந்நிய குடிமகன்களைக் கண்டுகொள்ள ஒரே தீர்வு தான் உண்டு. அதற்கு அசாமில் வசிக்கும் சட்டபூர்வமான குடிமகன்களின் முழுமையான பட்டியலை தயாரிக்க வேண்டும். என்னுடைய கட்டுரைகள் அனைத்திலும் இதையே உணர்த்தி வந்தேன். இதற்கு நாம் தீர்வு காண வேண்டுமெனில் அந்நிய குடிமகன்களை மறந்து விட வேண்டும். அசாம் குடிமகன்கள் மீது மட்டும் கவனம் செலுத்த வேண்டும். ஒற்றைப் பதிவேட்டில் அனைத்து குடிமகன்களின் விவரங்களையும் கொண்டு வர வேண்டும். மீதமுள்ளவர்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இங்கு குடியேறியவர்களாகவோ, வெளிநாட்டவராகவோ இருப்பார்கள். இது தான் தீர்வு. இதனை கோகாய் இப்போது நிறைவேற்றி இருக்கிறார். கோகாய் இதனை சாதித்ததும் ‘என்னுடைய சிறந்த மாணவன் இறுதியில் என்ஆர்சியை செயல்படுத்திவிட்டான்’ என உணர்ச்சிப்பூர்வமான கட்டுரையை எழுதினேன்’ என்கிறார் பராலி.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அசாமின் மண்வளம் தேயிலைத் தோட்டத்திற்கு உகந்தது என்று அரசு நினைத்தது. தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு நாட்டின் சில பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். கொல்கத்தாவில் இருந்து இந்துக்கள் வரவழைக்கப்பட்டனர். கொல்கத்தா அப்போதைய பிரிட்டிஷ் அரசின் தலைநகராக இருந்த காரணத்தால் ஆங்கிலக் கல்வி கற்றவர்கள் இருந்தார்கள். அவர்களை பிரிட்டிஷ் அரசாங்கம் அசாமில் குடியேற்றியது. இவர்களைத் தொடர்ந்து வங்காளத்தில் இருந்து பெருமளவு குடியேற்றம் அசாமிற்குள் நிகழ்ந்தது. மெதுவாக வங்காள மொழி அசாமில் அதிகாரப்பூர்வ மொழியானது. இது அசாமி – வங்காள மொழிப் பிரிவினையை மக்களிடையே ஏற்படுத்தத் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிழக்கு வங்காளத்தில் இருந்து அசாமுக்கு ரயில்வே தண்டவாளம் போடப்பட்டது. அதிகமான வங்காள இஸ்லாமியர்கள் அசாமின் சதுப்பு நிலங்களில், பிரம்மபுத்திரா கரையோரங்களில் குடியேறினார்கள். இவர்கள் மூலமாக உணவு உற்பத்தியைப் பெருக்கி வரி வருவாயை அதிகரிக்கலாம் என்ற காரணத்தால் பிரிட்டிஷ் அரசு அவர்களை ஊக்குவித்தது. அதானால் இஸ்லாமியர்களின் வரவு அதிகரித்தது. இது உள்ளூர்வாசிகளுக்குள் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் குடிபெயர்ந்த இஸ்லாமியர்களை பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் மட்டுமே வசிக்கும்படி வலியுறுத்தியது பிரிட்டிஷ் அரசு. பிரம்மபுத்திராவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயமெல்லாம் தொடர்ந்து இந்த மக்கள் தங்கள் குடிபெயர்வை இழந்து அலைய வேண்டியிருந்தது.
“கடந்த 25 ஆண்டுகளாக அசாமில் குடிபெயர்ந்த அதிலும் குறிப்பாக வங்காளத்தில் இருந்து வந்த இஸ்லாமியர்களின் நிலத்துக்கான வேட்கையினால் அசாமின் கலாசாரம் மற்றும் நாகரீகம் தகர்க்கப்படுகிறது” என்று அப்போதைய பிரிட்டிஷ் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் சி.எஸ். முல்லன் சொல்லியிருந்தார். முல்லன் இதனை 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் குறிப்பில் ஒரு வரியாக சேர்த்திருந்தார். இதனைத் தான் இன்று வரை குடியேறிகளுக்கான எதிரான இயக்கங்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்கான வழிகாட்டியாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அசாமிய கலாச்சாரத்தில் தங்களை பொறுத்திக் கொண்டனர். அசாமிய மொழியைத் தங்களின் தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனாலும் ஒவ்வொரு முறையும் வங்காளத்துக்கு எதிரான கிளர்ச்சி ஏற்படும்போதெல்லாம் வங்காளிகள் மீது கட்டற்ற வன்முறை சகஜமாக ஏவப்படுகிறது. அசாம் மாநிலத்தில் பெரும்பான்மை சமூகத்தின் நிரந்தர எதிரிகளாக வங்காள இஸ்லாமியர்கள் ஆனார்கள்.
பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்காள இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அசாமுக்குள் பெருவாரியாக குடிபெயர்ந்தார்கள். இப்போது வங்காளத்துக்கு எதிரான எதிர்ப்பு என்பது ஒட்டுமொத்த குடியேறிகளுக்கான எதிர்ப்பாக மாறியது.
அதிலிருந்து தொடர்ந்து அசாமில் இது சார்ந்த பெரும் போராட்டங்களும், வன்முறைகளும் நிகழத் தொடங்கின. ஆட்சி மாற்றமும், ஆட்சிக்கலைப்பும் நடந்தேறின. எந்த ஆட்சியாளராலும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை.
ரஞ்சன் கோகாயிடம் என்ஆர்சி குறித்து இரண்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன. என்ஆர்சியை செயல்படுத்த வேண்டும் என்றது ஒரு மனு. மற்றொன்று குடியுரிமை சட்டம் 6Aவின் சாசனத்தை மாற்றியமைக்கும்படி கேட்டுக்கொண்டாலும் கோகாய் என்ஆர்சியினை செயல்படுத்தலாம் என்று முடிவெடுத்திருந்தார். இதற்கு அவர் பொதுமக்களின் கருத்துக்கு முன்னுரிமை என்பதை சொல்லியிருந்தார். இப்படி சொல்வதனால் அவர் சட்டத்திட்டத்தின் முக்கிய கொள்கைகளை மட்டும் மீறவில்லை, அதோடு இந்திய இஸ்லாமியர்களின் குடியுரிமை நிலையை அச்சுறுத்தும் வகையிலான தேசிய கொள்கைக்கு வழிவகுத்திருந்தார்.
ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் பாஜக அரசுக்குத் தந்த மிகப்பெரிய பரிசு இது. “கோகாய் இந்த வழக்குகளை விசாரிக்கையில் அவர் அரசின் அழுத்தத்தில் இல்லை. தன்னிச்சையாகவே செயல்பட்டார்” என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
மூத்த வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமான பிரசாத் பூஷன், “அவர் அசாமின் அஹம் வம்சாவழியைச் சேர்ந்தவர். அந்நியர்கள் அசாமுக்குள் நுழைந்து அதன் பாரம்பரியத்தை நீர்த்துப் போகச் செய்வதாக இந்த வம்சாவழியினரிடம் கடுமையான உணர்வு இருந்தது” என்கிறார்.
கோகாய் என்ஆர்சி வழக்குகளுக்கு வழக்கத்துக்கு மாறான முக்கியத்துவம் தந்திருந்தார். கோகேயும் H.L கோகலேயும் கொண்ட இருவர் பெஞ்ச் ஏப்ரல் 2, 2013 அன்று என்ஆர்சி வழக்கின் முதல் விசாரணையைத் தொடங்கியது. இந்த வழக்கின் விசாரணையை மறுநாளே பட்டியலிடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்ததாக மத்திய, மாநில அரசுக்கு என்ஆர்சியில் திருத்தம் கொண்டு வருவதற்கு எவ்வளவு கால அவாசம் தேவைப்படும் என்பதை ஒரு வார காலத்துக்குள் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.
H.L கோகலே மார்ச் 2014ல் ஒய்வு பெற்றதும் நாரிமன் இருவர் பெஞ்சில் இணைந்தார். இந்தக் காலகட்டம் முழுக்க இந்தத் திட்டம் குறித்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது இந்த பெஞ்ச். ஒருகட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் வேகமாக செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அழுத்தம் கொடுக்கத் தொடகியது.
தொடர்ந்து நீதிமன்றம் அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்தது. ஒவ்வொரு கட்டத்தையும் கோகாய் மேற்பார்வையிடத் தொடங்கினார். ஒருகட்டத்தில் சட்டத்தின் நடைமுறைகளை புறந்தள்ளிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை என்ஆர்சி வழக்குகளிலும் தன்னுடைய அதிகாரத்தை மிதமிஞ்சி செலுத்தத் தொடங்கினார்.
2014ஆம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது. 2016ஆம் ஆண்டு அசாமின் ஆட்சியைப் பிடித்தது. அசாமின் வரலாற்றில் இடம்பெற்றுவிட்ட என்ஆர்சியை முஸ்லிம் பிரிவினைக்காக தங்களுக்கு சாதகமாக பாஜக பயன்படுத்தத் தொடங்கியது.
முதல்வர் சர்பானந்தா சோனோவால் மாவட்ட காவல்துறை, உயரதிகாரிகள் மாவட்ட ஆட்சியாளர்கள் துணை கமிஷனர்கள் என அனைவரையும் சந்தித்து என்ஆர்சியைத் தயார் செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனிடையே மற்ற மாநிலங்களில் பொதுமேடைகளில் பேசிய அமித்ஷா, என்ஆர்சியை நாடு முழுவதும் கொண்டு வரும் திட்டம் உள்ளதாகவும், குடியேறிகளை இந்தியாவில் இருந்து நீக்க இருப்பதாகவும் பேசத் தொடங்கினார்.
இதற்காக பாஜக 1600 கோடி ரூபாயை ஒதுக்கி, 50000க்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் நியமித்தது.
டிசம்பர் 2014ல் ஒரு தீர்ப்பில் அறுபது நாட்களுக்குள் வெளிநாட்டவருக்கான கூடுதல் தீர்ப்பாயங்களை ஏற்படுத்தும்படி உச்சநீதிமன்றம் அசாம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி மே 2019ல் மாநில அரசு கூடுதலாக 200 வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயங்களை அமைக்கத் தொடங்கியது. ஏற்கனவே 300 இருந்த நிலையில் வருங்காலத்தில் மேலும் 200 தீர்ப்பாயங்கள் அமைய உள்ளன.
இதில் சட்டவிரோதமான குடியேறிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் முதல் தடுப்பு முகாம்கள் அசாமின் கோல்பரா மாவட்டத்தில் கட்டபப்ட்டு வருகிறது. இதே போல் மேலும் பத்து தடுப்பு முகாம்கள் மாநில அரசால் கட்டப்பட உள்ளன.
என்ஆர்சி தொடர்பான அத்தனை வழக்கு விசாரணைகளையும் மூடு மந்திரப் போக்கிலேயே கடைபிடித்திருக்கிறார் கோகாய். என்ஆர்சியின் அசாம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதித் ஹலேஜா உட்பட இதில் தொடர்புடைய அனைவருமே சீல் வைக்கப்பட்ட உரையிலேயே ஆவணங்களையும் தர வேண்டும் என உத்தரவிட்டார். நீதிமன்றம் மட்டுமே இதை பார்வையிட முடியும். திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அரசுக்கே நடப்பது ரகசியமாக இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதாரமே சாட்சியங்கள் தான். அதை ரகசியமாக வைத்திருப்பது என்பது வெளிப்படையான செயலை மறைமுகமாக செய்வது தானே தவிர வேறொன்றுமில்லை என்பதே மூத்த வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களின் கருத்தாக இருந்தது.
2017 பிப்ரவரியில் என்ஆர்சியில் திருத்தம் கொண்டுவருவதற்கான இடைகாலத்தில் ஹலேஜா புதுவிதமான வழிமுறையை கோகாய்க்கு முன்மொழிந்தார். மூடப்பட்ட அறைக்குள் ஹலேஜா கோகாய்க்கு காட்டிய பவர் பாயின்ட் பிரசெண்டஷனின் போது உடனிருந்தது நான்கு சாட்சியங்கள் மட்டுமே. அதற்கு family tree verification என்று பெயரிடப்பட்டிருந்தது. இதன்படி விண்ணப்பதாரர்கள் தங்களின் மூதாதையர்கள் குறித்த விவரங்களைத் தக்க ஆவணங்களோடு தரவேண்டும். இதனைக் கொண்டு கம்ப்யூட்டரில் டிஜிட்டல் முறையில் ஃபேமிலி ட்ரீ பதிவேற்றப்படும். அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்கள் ஒப்படைக்கும் ஆவணங்களோடு இந்த பேமிலி ட்ரீ ஒப்பிடப்படும்.
இப்படியான family tree verification என்பது விலகலைத் தான் ஏற்படுத்துமே தவிர ஒருபோதும் குடிமகன்களை ஒருங்கிணைக்காது என்கிறார் சமூக செயற்பாட்டாளர் அப்துல் பாட்டின் காண்டேகர். ஆனால் இதற்கு கோகாய் உடனடியாக ஒப்பதல் தெரிவித்திருந்தார்.
குறிப்பிட்ட தேதிக்குள் என்ஆர்சி புள்ளிவிவர அறிக்கைகளை சமர்ப்பிக்கக் சொல்லி உச்சநீதிமன்றம் கொடுத்த அழுத்தத்தால் முடிவுறாத ஒரு அறிக்கையை ஹலேஜா சமர்ப்பிக்கும்படி ஆனது.
தேர்தலுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை என்ஆர்சிக்குத் தரும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக 50000 அரசு ஊழியர்கள் மூன்று வருடங்களாக இரவு பகல் பாராமல் அசாமில் உழைத்தார்கள். அசாம் மாநிலத்தின் மற்ற துறைகள் செயல்பாடில்லாமல் தேங்கின. மற்றத் துறைகளின் அதிகாரிகள் என்ஆர்சி பணிக்கு மாற்றப்பட்டதால் மக்களின் அடிப்படை வசதிகளுக்கான சேவைகள் முடங்கின.
கோகாய் எந்தளவுக்கு என்ஆர்சியைத் தனிப்பட்ட விருப்பமாக மாற்றிக்கொண்டார் என்பதற்கு பல உதாரணங்களை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.
அதில் ஒன்று இது. கோகாயின் ஒருசார்புத்தன்மை காரணமாக அவரை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற அலுவலகத்தில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மனித உரிமை போராளியுமான ஹர்ஷ் மாண்டேர் விண்ணப்பித்திருந்தார். உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் இதனை ஏற்க மறுத்தது. நேரடியாக தலைமை நீதிபதியிடம் மனு கொடுக்க அறிவுறுத்தியது இதனை கோகாய் உட்பட மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. ஹர்ஷ் மாண்டேர் தன்னுடைய வழக்குக்குத் தானே வாதாடினார். அவரின் வாதம் முழுக்கவும் குறுக்கிட்டு, கோபப்பட்டு, அவரை அவமானப்படுத்தினார் கோகாய். இறுதியில் மனு நிராகரிக்கப்பட்டது. “நீதிமன்றம் இப்படி நடந்து கொள்ளும் என்று நினைக்கவில்லை. என்னுடைய இந்த நிலைமை என் மக்கள் அனுபவிக்கிற நிலையின் ஒரு எடுத்துகாட்டு” என்றார் மாண்டேர்
கோகாய் ஒய்வு பெற்றபிறகும் கூட இப்போதும் பொதுவிழாக்களில் என்ஆர்சி குறித்த தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
அசாமில் என்ஆர்சியை கோகாய் தீவிரமாக அமல்படுத்தியதை நாடு முழுமைக்குமானதாகக் கொண்டு வருவதற்கான மசோதாவை நிறைவேற்றியது பாஜக. இதில் உச்சநீதிமன்றமும் பாஜக அரசும் அதிகாரத்தை தங்களது எல்லை மீறி பயன்படுத்தியிருக்கின்றன.
ஒரு தனி மனிதனுக்குள் இருக்கிற சாதி , மத , இன வெறி ஒரு மாநிலத்தை நிம்மதியிழக்க வைத்துள்ளது. அதை ஒரு தேசத்துக்கானதாய் மாற்றியமைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
அசாம் என்கிற ஒரு மாநிலத்தில் எந்தத் தயாரிப்பும், முன்னேற்பாடும் இல்லாமல் அதிகார போதை ஏறிய ஒரு தனிமனிதரால் நிறைவேற்றப்படுகிற குழப்பமான என்ஆர்சி கணக்கெடுப்பு அந்த மாநிலத்தின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கிறது எனும்போது தேசம் முழுவதும் இதனை செயல்படுத்தும்போது என்னவாகும் என்பது இந்தக் கட்டுரை நமக்குத் தருகிற முக்கிய செய்தி.
மேலும், ஒரு நீதிபதி, சட்டத்தின்படியும், அரசியல் சாசனத்தின்படியும் நடக்காமல், தன் சுய விருப்பத்தின் அடிப்படையில் வழக்கை நடத்தி தீர்ப்பளித்தால், அது எத்தனை பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
‘இதுவரை உச்சநீதிமன்றம் கண்டதிலேயே மோசமான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தான்’ என்கிற பெயரோடு ஒய்வு பெற்றிருக்கிறார் கோகாய். அவரை இது பாதிக்காமல் இருக்கலாம். ஆனால் வரலாறு அவரை மறக்காது. ஒரு இனத்தை தனது பிடிவாதத்திற்காக தனி மனிதனாக அழித்தொழிப்பு செய்தவராக ரஞ்சன் கோகாய் பெயர் இடம் பெற்றுவிட்டது.
ரஞ்சன் கோகோய், ஒரு நீதிபதியாக இல்லாமல் ஒரு இனவெறியராகவே என்.ஆர்.சி விஷயத்தில் நடந்து கொண்டார். அவர் அப்படியே அடையாளம் காணப்படுவார்.
உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஒருவரா?
நாட்டை அநீதி காரிருல் சூழ்ந்து விட துவங்கிவிட்டது!
As an advocate I bow my head down for the recent happenings in the corridors of courts and justice I tell you even ordinary lay citizens who had no occasion to go to court also started to comment that they lost hope/faith in the judiciary’s role now a days
கோகாய்
இத்தனை பெரிய அய்யோக்கியனா
Superb Research 👌
மாஷா அல்லாஹ்
I find this as a best article regarding the origin of the NRC in Assam and why the BJP is shown much interest to implement all over the Nation.
இதுவரை அறியாத பல விஷயங்கள் கட்டுரையில் தந்துளீர்கள்.
மிக்க நன்றி.
இது போன்று தொடராக வெளியிடுவார்கள் என்று நம்புகிறோம்.
அருமையான பதிவு….🙏🤝
Whats wrong with creating a situation to oust illeagal immigrants? Why so much angst about it. The Caravan’ s sub editor is a Christian. So he write anything against Modi. Justice Ranjan and his family are Congress people. So why find fault with BJP? This article is yet another attempt to tarnish BJP. But they wont juzt care about these kinds of barkinks.
Savukku is reproducing articles written . Judge cannot give judgements at his own whims and fancies and there may be some exceptions which cannot be taken as precedence. Before commenting on Justice Ranjan , Savukku should have taken stock of the data, facts and figures on the rationale of the judgement.