நேற்று 3 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் ஆணை பிறப்பித்தார். அதில் ஒரு பதவி நியமனம் தான் லஞ்ச ஒழிப்புத் துறை அல்லாமல், காவல்துறை வட்டாரங்களிலேயே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலத்தில் டிஐஜியாக இருந்த வெங்கட்ராமன் என்பவர், லஞ்ச ஒழிப்புத் துறையின் துணை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார். உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவின் எஸ்பியாக இருந்த மகேஸ்வரி என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் மேற்கு சரக எஸ்பியாக நியமிக்கப் பட்டுள்ளார்.
மேற்கு சரக எஸ்பியாக நியமிக்கப் பட்டுள்ள ஆசியம்மாள் என்பவரின் நியமனம் தான் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த ஆசியம்மாள் ? இந்த ஆசியம்மாள், ஜெயலலிதா அரசாங்கம் 1991 முதல் 1996 வரை எடுத்த வரதட்சிணை தடுப்புப் பிரிவு சிறப்புப் பிரிவின் டிஎஸ்பியாக நியமனம் செய்யப் பட்டவர். பதவி உயர்வில் 2007ல் லஞ்ச ஒழிப்புத் துறையின் மத்திய சரக எஸ்பியாக நியமிக்கப் பட்டார்.
இவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் எஸ்பியாக நியமனம் செய்யப் பட்ட நாள் முதலே லஞ்ச ஒழிப்புத் துறையின் ஊழியர்கள் அலறத் தொடங்கினார்கள். ஏனென்றால், பணியில் மூத்த ஊழியர்களை கூட ஏகவசனத்தில் பேசுவார். உயர் அதிகாரிகளைக் கூட மதிக்காமல் மிகுந்த திமிரோடு நடந்து கொள்வார்.
இவ்வாறு இவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில் தான், தலைமைச் செயலக கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் நடைபெற்ற ஒரு ஊழல் தொடர்பான விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறை வசம் வந்தது.
தலைமைச் செயலக ஊழியர்கள் வீடு கட்டிக் கொள்வதற்காக சென்னையை அடுத்துள்ள ஒக்கியம் துரைப்பாக்கம் என்ற இடத்தில் அரசு நிலத்தை கருணாநிதி அரசு ஒதுக்கியது. எந்த ஒரு வீட்டு வசதி இடமென்றாலும், அந்த இடத்தில் பொதுப் பணிகளுக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். அதாவது, அந்த பொது இடத்தில், காவல்நிலையம், வங்கிகள், தொலைபேசி அலுவலகம், கடைகள் போன்றவை கட்டுவதற்காக, மொத்த இடத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என்பது விதி. அந்த விதியின் படி மொத்தம் 75 வீட்டு மனை அளவுள்ள இடம் ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஒதுக்கப் படுகிறது.
இவ்வாறு ஒதுக்கப் பட்ட பொது இடங்களை செய்தித் தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், வங்கிகள், தொலைபேசி இணைப்பகங்கள் கட்டுவதற்காக, விருப்பப் படும் நிறுவனங்கள் அந்த இடங்களை கூட்டுறவு சங்கத்திடம் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும்.
தலைமைச் செயலக ஊழியர்கள் வீட்டு வசதிச் சங்கத்தின் நிர்வாகியாக இருந்த தேவதாஸ், கோபால், இளஞ்செழியன், இளமதி, விஜயலட்சுமி, தேவராஜ் ஆகியோர், இந்த பொது இடங்களை யாரும் வாங்கிக் கொள்ள வரவில்லை என்று ஒரு தீர்மானத்தை ரகசியமாக இயற்றி, ஏறக்குறைய 80 க்ரவுண்டு நிலங்களை தலைமைச் செயலகத்தில் பணியாற்றாத மற்றவர்களுக்கு பல லட்சம் ரூபாய்க்கு விற்றனர்.
குலுக்கல் முறையில் நடந்த வீட்டு மனை ஒதுக்கீட்டில், நிலம் கிடைக்காத பல தலைமைச் செயலக ஊழியர்கள் இது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து புகார் அளிக்கின்றனர். இந்தப் புகாரின் மீது, கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்டப் பிரிவு 145ன் கீழ், ஒரு விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை நடத்துபவர், அப்போது தலைமைச் செயலக ஊழியர் கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த ஆண்டவர் என்பவர். இவர் விசாரணை நடத்தி, இந்த சங்கத்தில் எந்த விதமான முறைகேடும் நடைபெறவில்லை. இந்த சங்கம் அப்பழுக்கின்றி நடைபெறுகிறது என்று அறிக்கை அளித்தார்.
திருப்தி அடையாத தலைமைச் செயலக ஊழியர்கள், உடனடியாக வீட்டு வசதித் துறை அமைச்சரிடம் புகார் அளிக்கின்றனர். அந்தப் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.
இதனிடையே விசாரணை அதிகாரியாக இருந்த ஆண்டவர் மாற்றப் படுகிறார். மாற்றப் பட்டு எங்கே நியமிக்கப் படுகிறார் தெரியுமா ? லஞ்ச ஒழிப்புத் துறை வீட்டு வசதிச் சங்கத்தின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். இந்த சங்கத்தின் தலைவர் யார் தெரியுமா ? நம்ப ஆசியம்மாள் தான்.
2008 காலகட்டத்தில் ஆசியம்மாள், லஞ்ச ஒழிப்புத் துறையின் எஸ்பியாக பணியாற்றியதை விட, ரியல் எஸ்டேட் பணியாற்றியதுதான் அதிகம். வாரத்திர் நான்கு நாட்கள் வண்டியை எடுத்துக் கொண்டு நிலம் பார்க்கிறேன் பேர்விழி என்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருத்தணி, திருவள்ளுர் என்று நிலத்தை தேடிக் கொண்டிருப்பார் என்று அத்துறை ஊழியர்கள் தகவல் கூறுகிறார்கள்.
அந்த சமயத்தில் ஒக்கியம் துரைப்பாக்கம் நிலம் தொடர்பான விசாரணை லஞ்ச ஒழிப்புத் துறையில் தொடங்குகிறது. இந்த விசாரணையை மேற்கொண்ட அதிகாரி நல்லதுரை என்ற காவல் ஆய்வாளர்.
லஞ்ச ஒழிப்புத் துறை கூட்டறவு வீட்டு வசதிச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் ஆசியம்மாளுக்கும், சிறப்பு அதிகாரி என்ற முறையில் ஆண்டவருக்கும் நெருக்கமான நட்பு உண்டு.
விசாரணை அதிகாரி நல்லதுரை, தனது பூர்வாங்க விசாரணையை முடித்து, தேவதாஸ், கோபால், இளஞ்செழியன், இளமதி, விஜயலட்சுமி, தேவராஜ் மற்றும் விசாரணை நடத்தி, ஊழல் நடைபெறவில்லை என்று சான்றளித்த ஆண்டவர் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் அனைவரும் பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்து ஒரு அறிக்கையை அளிக்கிறார்.
இந்தக் கட்டத்தில் ஆசியம்மாள் தலையிட்டு, ஆண்டவர் மீது மட்டும் முதல் தகவல் அறிக்கை வேண்டாமென்றும், துறை ரீதியான நடவடிக்கை போதும் என்றும் அப்போது நல்லதுரைக்கு உயர் அதிகாரியாக இருந்த துக்கையாண்டியிடம் கோரிக்கை வைக்கிறார். துக்கையாண்டிதான் பெரிய ரியல் எஸ்டேட் ப்ரோக்கராயிற்றே….!!! “அப்படியே ஆகட்டும் ஆசியம்மாள்” என்று, ஆண்டவர் மீது துறை நடவடிக்கை மட்டும் போதும் என்று அந்த அறிக்கையை மாற்றி அளிக்குமாறு உத்தரவிடுகிறார்.
துக்கையாண்டி, ஐபிஎஸ்
எல்லா இடத்திலும் அதிகப்பிரசங்கிகள் இருப்பார்களே.. இதே போல அந்தத் துறையிலும் ஒரு அதிகப்பிரசங்கி, ஆசியம்மாளின் மீது இயக்குநருக்கு புகார் அளிக்கிறார். அந்தப் புகாரில், இது போல ஆசியம்மாளின் தலையீட்டால், ஆண்டவர் இந்த விசாரணையிலிருந்து காப்பாற்றப் படுகிறார், மேலும், ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் விசாரணை அதிகாரியாக இருக்கக் கூடாது என்றும் புகார் அளிக்கிறார்.
உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டது. நம்புவதற்கு கடினமாக இருக்கிறதா ? உண்மை தான் தோழர்களே.. உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டது. என்ன நடவடிக்கை தெரியுமா ? அந்த வழக்கின் விசாரணை அதிகாரி நல்லதுரை, லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து மாற்றப் பட்டார்.
அதிகப்பிரசங்கி அளித்த அந்தப் புகாரை கிரிமுருகன் என்ற கூடுதல் எஸ்பியிடம் விசாரணைக்காக ஒப்படைக்கிறார்கள். ஒப்படைத்த ஐந்தாவது நிமிடம், கிரிமுருகனை அழைத்த ஆசியம்மாள், உங்களுக்கு ஓய்வு பெற இன்னும் 6 மாதங்கள் தான் இருக்கிறது. பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார். வெகுண்டெழுந்த கிரிமுருகன், தயவு செய்து இந்த விசாரணையை வேறு யாருக்காவது மாற்றுங்கள் என்று கடிதம் அளிக்கிறார்.
இந்நிலையில் ஆண்டவரின் பணி ஓய்வு தேதி வருகிறது. 2008 ஜுன் 30ல் ஆண்டவர் பணி ஓய்வு பெற வேண்டும். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதாக அறிகுறியே இல்லை. இந்நிலையில், தினமணி நாளேட்டில் 30 ஜுன் அன்று முதல் பக்கத்தில் “அட ஆண்டவா… ….” என்ற தலைப்பில் ஒரு செய்தி வருகிறது.
அந்தச் செய்தியில், ஆசியம்மாளின் அற்புதங்களைப் பற்றியும், தப்பிக்கப் போகும் ஆண்வடவரைப் பற்றியும் விரிவான தகவல்கள் வந்திருந்தன.
ஜுன் 30 அன்று பணி ஓய்வு பெற்று, ஆண்டவருக்கு பிரிவு உபச்சார விழாவெல்லாம் நடந்து முடிந்த பிறகு, இரவு 8.30 மணிக்கு ஆண்டவர் பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். நம் சொத்தைக் கொள்ளையடித்த ஒருவன் தப்பிச் செல்கிறானே என்று பதைபதைப்பில் இருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதன் பிறகு, ஆசியம்மாளின் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் ரகசிய நிதியை கையாடினார், அலுவலகத்தில் அவருக்கு வழங்கப் பட்டுள்ள ஏசி வாகனத்தை தனது கணவர் பயன்பாட்டிற்காக வழங்கினார், அவர்களுக்குச் சொந்தமாக மைலாப்பூரில் இருந்த கடையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் காவலர்களை வேலைக்கு அமர்த்தினார் என்று ஏராளமான புகார்கள் அரசுக்கு குவிந்த வண்ணம் இருந்ததால், ஆசியம்மாள் லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து தூக்கி அடிக்கப் பட்டார்.
ஆசியம்மாள் பூக்கடை துணை ஆணையராக நியமிக்கப் பட்டார். ஆசியம்மாளின் திறமையான சட்டம் ஒழுங்கு நிர்வாகத்துக்கு பூக்கடை நியமனம் ஒரு நல்ல சான்று.
13 நவம்பர் 2008 அன்று சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டார்கள் நினைவிருக்கிறதா… ? அப்போது ஆசியம்மாள் தான் பூக்கடைச் சரக துணை ஆணையர். அந்தக் கல்லூரியின் நிர்வாகி இரண்டு பிரிவு மாணவர்களுக்கிடையே மோதல் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், போதுமான பாதுகாப்பு வழங்குமாறும், தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தும், ஆசியம்மாள் செவி சாய்க்க வில்லை. சம்பவம் நடந்த அன்று, 4 மணிக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஈழப்போரை நிறுத்தக் கோரி, மாணவர்கள் டெல்லி பயணம் செல்லுகையில் அவர்களுக்கு மெமோரியல் ஹால் அருகே வாழ்த்து தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்த்து விட்டு, ஆசியம்மாள் அவர் அலுவலகம் இருக்கும், வடக்கு கடற்கரை காவல்நிலையத்துக்கு செல்லும் போது, அந்த மோதல் நடந்த சட்டக்கல்லூரி வழியாகவே சென்றார். மாணவர்களின் மோதல் தொடங்கிய உடனேயே உதவி ஆணையர் ஆசியம்மாளிடம் தகவல் தெரிவிக்கிறார். ஆனால் ஆசியம்மாள் எந்த உத்தரவையும் பிறப்பிக்காமல், உங்களை திருப்பிக் கூப்பிடுகிறேன். நீங்கள் எதுவும் செய்யாமல் அமைதியாக இருங்கள் என்று சொன்னதாலேயே, அன்று காவல்துறையினர், சம்பவத்தை தடுக்க முற்படவில்லை.
இந்தச் சம்பவத்துக்காக, அப்போதைய கமிஷனர் சேகர் மாற்றப் பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
இதன் பிறகு, இதற்காக ஏற்படுத்தப் பட்ட விசாரணை ஆணையம் முன்னாள் நீதிபதி மங்குணி சண்முகம் தலைமையில் ஏற்படுத்தப் பட்டது. அவர் பெயரே மங்குணி அல்லவா ? அதனால், இந்தத் தாக்குதலை தடுக்காமல் தவறியது இரண்டு கான்ஸ்டபிள்களும், ஒரு இன்ஸ்பெக்டரும், ஒரு உதவி ஆணையரும் என்று அறிக்கை கொடுக்கிறார்.
இதுதான் ஆசியம்மாளின் சட்டம் ஒழுங்கு திறமை. இந்த ஆசியம்மாள் தற்போது மீண்டும் லஞ்ச ஒழிப்புத் துறையின் மேற்கு சரக எஸ்பியாக நியமிக்கப் பட்டுள்ளார் என்ற தகவலைக் கேட்டதும், லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள குற்றவாளிகளுக்கு கொண்டாட்டமாகவும், அத்துறையின் ஊழியர்களுக்கு திண்டாட்டமாகவும் அமைந்துள்ளது.
பல முக்கியமான வழக்குகளை கையாள வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறையில், இப்படிப் பட்ட அதிகாரியை நியமித்திருப்பது, மிகுந்த ஆச்சர்யத்தையும் குழப்பதையும் ஏற்படுத்துகிறது.