தற்போது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருக்கும் கபில் சிபல் என்ற இந்த பஞ்சாபியர் அமேரிக்காவில் சட்டம் படித்தவர். இவரைப் போன்ற கல்லுளி மங்கனைப் பார்க்கவே முடியாது. மன்மோகன் சிங் ஊரைக் கெடுக்கும் ஊமை என்றால், இந்த கபில் சிபல், பேரைக் கெடுக்கும் பெருச்சாளி.
மன்மோகன் சிங்கின் அரசாங்கம் 2004 முதல் ஊழல் சாக்கடையில் மூழ்கி முடை நாற்றமெடுத்துக் கொண்டிருந்த போதும், அது சாக்கடையல்ல, சந்தன நதி என்று சாதித்தவர் இந்த கபில் சிபல்.
2001 முதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது தொடர்பாக நடைபெற்ற ஊழல்களை விசாரிக்க உத்தரவிட்டு, உச்ச நீதிமன்றம் அந்த விசாரணைகளை நேரடியாக மேற்பார்வை செய்து வரும் நிலையில், தொலைத் தொடர்புத் துறையின் மீது மீண்டும் எழுந்துள்ள ஊழல் புகார், அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், தொலைத் தொடர்புத் துறையில் ஊழல்கள் என்றுமே ஓயாதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல், ராசாவையும், தயாநிதி மாறனின் பதவியையும் காவு வாங்கிய பின், சோனியா காந்தியால் தேர்ந்தெடுக்கப் பட்டு அமைச்சர் பதவியை ஏற்றவர் தான் கபில் சிபல். உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகவும், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்தவர், யுபிஏ 2 அரசாங்கத்தில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு, இவருக்கு கூடுதல் பொறுப்பாக தொலைத் தொடர்புத் துறை வழங்கப் பட்ட போது, வழக்கறிஞரான இந்தக் கல்லுளி மங்கன் எப்படி செயல்படப் போகிறார் என்பது ஆவலோடு கவனிக்கப் பட்டது.
தொலைத் தொடர்புத் துறை மீதான சிஏஜி அறிக்கை முதன் முதலாக ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்று கணக்கிட்டுச் சொன்னது. இந்தத் தகவலால் நாடெங்கும் அதிர்ச்சி அலைகள் ஏற்பட்ட போது, சற்றும் கவலைப் படாமல், அந்த அறிக்கையை “முற்றிலும் பிழையானது” என்று சொன்னவர் கபில் சிபல். ஊழலில் ராசா வசமாக சிக்கிக் கொண்ட பிறகும் கூட, கொஞ்சம் கூட அசராமல் ராசாவின் நடவடிக்கைகளால் “ஜீரோ லாஸ்” தான் ஏற்பட்டுள்ளது, அதாவது ஒரு பைசா கூட நஷ்டம் இல்லை என்று கூசாமல் பேசியவர் கபில் சிபல்.
இந்த கபில் சிபல், தற்போது தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக, அதுவும், 2ஜி விவகாரத்தில் சம்பந்தப் பட்டுள்ள ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக எடுத்திருக்கும் நடவடிக்கை ஊடகங்களில் வெளியான பிறகும், மன்மோகன் சிங் அரசு மவுனம் காத்து வருகிறது.
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் மூத்த அதிகாரிகளான கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் ஹரி நாயர் ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளரான அனில் அம்பானி மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை என்று பல்வேறு கேள்விகள் எழுப்பப் பட்டுள்ள சூழலில், கபில் சிபல் ரிலையன்ஸ் நிறுவனம் கட்ட வேண்டிய 650 கோடி ரூபாய் அபராதத் தொகையை குறைத்து 50 கோடி கட்டினால் போதும் என்று உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
தொலைபேசி சேவையை தொடங்கும் நிறுவனங்கள், லாப நோக்கம் காரணமாக நகர்ப்புரங்களில் மட்டும் தொடங்குவார்கள், இதனால் கிராமப்புரங்களில் தொலைபேசி சேவை வழங்கப் படாமல் பின் தங்கி விடும் என்று உணர்ந்து தொலைத் தொடர்பு அமைச்சகம், யூனிவர்சல் சர்வீஸ் ஆப்லிகேஷன் ஃபண்ட் என்ற ஒரு நிதியத்தை ஏற்படுத்தியது. இதன்படி, கிராமப்புரங்களில் தொலைபேசி சேவையை தொடங்கி நடத்தும் நிறுவனங்களுக்கு, யுனிவர்சல் நிதியம் மான்யம் வழங்கும்.
16 மே 2007ல் இந்த நிதியத்தோடு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஆந்திரா, பீஹார், ஜார்கண்ட், குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் (மேற்கு) மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 13 வட்டங்களில் கிராமப் புரங்களில் தொலைபேசி சேவையை வழங்க ஒப்பந்தம் போடுகிறது. இந்த ஒப்பந்தத்தின் படி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பிஎஸ்என்எல் வழங்கும். இதைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் வாடகை வழங்க வேண்டும். இவ்வாறு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, திடீரென்று, சேவையை நிறுத்தியது ரிலையன்ஸ் நிறுவனம்.
இவ்வாறு ரிலையன்ஸ் நிறுவனம் திடீரென்று சேவையை நிறுத்தியதும். யூனிசர்சல் நிதியம், ரிலையன்ஸுக்கு நோட்டீஸ் அனுப்புகிறது. பேச்சுவார்த்தை நடத்தாமல் கிராமப்புரங்களுக்கான சேவையை இது போல தன்னிச்சையாக நிறுத்துவது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும், இதற்காக உங்கள் நிறுவனம் மீது ஏன் 650 கோடி ரூபாய் அபராதம் (ஒரு வட்டத்துக்கு 50 கோடி வீதம்) விதிக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸில், “முன்னறிவிப்பின்றி, கிராமப்புரங்களுக்கான தொலைபேசி சேவையை நிறுத்தியது ஒப்பந்தத்தை மீறிய செயலாகும். மேலும், ஒப்பந்தத்தில் இது போல தன்னிச்சையாக விலகுவதற்கான ஷரத்துக்கள் இல்லாத நிலையில், இது போல சேவையை நிறுத்தி, கிராமப்புரங்களில் தொலைத் தொடர்புச் சேவையை சீர்குலைக்கும் வேலை இது“ என்றும் குறிப்பிட்டது.
இதையடுத்து, ரிலையன்ஸ் நிறுவனம், இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க 6 வார காலம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியது. ஆனால், தன்னிச்சையாக சேவையை நிறுத்தியதால், கால அவகாசம் கொடுக்க இயலாது என்று தொலைத் தொடர்புத் துறை முடிவெடுத்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், அமைச்சர் கபில் சிபலுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதத்தின் அடிப்படையில் கபில் சிபல், 13 வட்டங்களுக்கு 650 கோடி ரூபாய் என்று இருந்த அபராதத்தை 5.49 கோடியாக குறைத்து உத்தரவிடுகிறார்.
கிராமப்புரங்களில் தொலைபேசி சேவையை வழங்க வேண்டிய ஒரு நிறுவனம், லாபம் கிடைக்கவில்லை என்பதால் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் சேவையை நிறுத்துவது என்பது சட்டவிரோதம். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப் பட்ட ஸ்பெக்ட்ரம் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்கிறார், பிஎஸ்என்எல்லின் பொறியாளர் ஒருவர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து, இன்று சிபிஐ தன் விசாரணையை முடுக்கி விடும் அளவுக்கு நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இந்த வழக்கை எடுத்து வந்த “பொது நல வழக்குகளுக்கான மையம்” கபில் சிபல் விவகாரத்தையும் கையில் எடுத்திருக்கிறது. இது குறித்து வெள்ளியன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 650 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று யூனிவர்சல் நிதியம், அதன் இயக்குநர், தொலைத் தொடர்புத் துறையின் மூத்த அமைச்சர்கள், அத்துறையின் நிதி ஆலோசகர் மற்றும் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் ஆகியோர் ஏக மனதாக கருத்து தெரிவித்தும், விதி மீறலில் ஈடுபட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கு 650 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டிய இடத்தில் வெறும் 5 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம். கபில் சிபல் இந்த முடிவை என்ன காரணத்துக்காக எடுத்தார் என்பது சிபிஐயால் முழுமையாக விசாரிக்கப் பட வேண்டும். அதனால், உச்ச நீதிமன்றம் சிபிஐ க்கு கபில் சிபல் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அபராதத்தை தள்ளுபடி செய்த விவகாரத்தையும் விசாரிக்குமாறு உத்தரவிடக் கோரி பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். இது திங்கள் அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
இது குறித்து வெள்ளியன்று செய்தியாளர்களிடம், பேசிய அமைச்சர் கபில் சிபல், இந்த பொதுநல வழக்கு, அவதூறானது, உள்நோக்கம் கொண்டது, தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக தொடரப்பட்டது என்று தெரிவித்தார்.
திங்களன்று விசாரணைக்கு வரும் இந்த பொது நல மனுவில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியை சிபிஐ வேண்டுமென்றே காப்பாற்றுகிறது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது, பிசினெஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் பொதுச் செயலாளரான மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் தாக்கல் செய்துள்ள மனுவில் ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை முகப்பாக வைத்துக் கொண்டு, ரிலையன்ஸ் நிறுவனம் தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுள்ளது என்பதை சிபிஐயே தனது முதல் குற்றப் பத்திரிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஸ்வான் டெலிகாம் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவதற்காக அரசுக்கு செலுத்திய 992 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் தான் செலுத்தியுள்ளது என்பதை சிபிஐயே ஒப்புக் கொண்டுள்ளது.
இப்போது சிபிஐயால் கைது செய்யப் பட்டு சிறையில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், அனில் அம்பானிக்கு கீழே பணியாற்றுபவர்கள். இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் அனில் அம்பானிக்குத் தெரியாமல் கொடுத்திருக்க முடியாது. ஆனால் அனில் அம்பானியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் படாதது வியப்பை அளிக்கிறது. அனில் அம்பானிக்குத் தெரியாமல் அந்த 3 ரிலையன்ஸ் ஊழியர்களும் 1000 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்கள் என்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிலைபாடு. ஆனால், 1000 கோடி ரூபாயை அம்பானிக்குத் தெரியாமல் முதலீடு செய்தவர்களை பணி நீக்கம் செய்வதற்குப் பதிலாக, திஹார் சிறைக்குச் சென்று பார்த்து வருகிறார் அனில் அம்பானி. 1000 கோடி ரூபாயை தவறாக தனக்குத் தெரியாமல் அந்த 3 ஊழியர்கள் முதலீடு செய்ததனால், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்துக்கு ஏற்பட்ட அவப்பெயரையும், பங்குச் சந்தையில் ஏற்பட்ட அந்நிறுவன பங்குகளின் விலை வீழ்ச்சியையும் பொருட்படுத்தாமல், சிறைக்கு சென்று அவர்களைப் பார்த்து வருவதே, அவர்கள் தன்னைக் காட்டிக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான். அதனால் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானியையும் சிபிஐ இந்த வழக்கின் குற்றப் பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும் என்று தனது மனுவில் காமினி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
உச்ச நீதிமன்றம் தொலைத் தொடர்புத் துறையின் ஊழலை நேரடியாக கண்காணித்துக் கொண்டிருக்கும் போதே, நடைபெற்றிருக்கும் கபில் சிபலின் ஊழலையும், இத்தனை கண்காணிப்புகளை மீறியும், பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் அதிபரை காப்பாற்றுகிறது என்ற சிபிஐ மீதான குற்றச் சாட்டையும், உச்ச நீதிமன்றம் எவ்வாறு கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே கபில் சிபல் முந்தைய யுபிஏ அரசாங்கத்தில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த பொழுது நடைபெற்ற மற்றொரு பெரிய ஊழல் வெளிவந்திருக்கிறது. இந்தியாவில் மிகப் பெரிய ஊழல்களை அம்பலப்படுத்திய மத்திய கணக்காயர் அலுவலகம் தான் இந்த ஊழலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.
கபில் சிபல் அறிவியல் துறை அமைச்சராக இருந்த போது, அமேரிக்காவில் பணி புரியும், 5 லட்சம் இந்திய வம்சாவளியினரை ஒரு டேட்டா பேஸில் பதிய வேண்டும் என்பதற்காக, ஒரு மென்பொருளை உருவாக்க உத்தேசிக்கிறார். அந்த டேட்டா பேசுக்கு PIOUS (People of Indian Origin settled in the US). இந்த மென்பொருளைத் தயாரிக்க கபில் பீனிக்ஸ் ரோஸ், மேரிலேண்ட் என்ற நிறுவனத்தை தேர்ந்தெடுக்கிறார். இவ்வாறு கபில் சிபல் இந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததே சட்ட விரோதம் என்கிறது சிஏஜி அறிக்கை.
இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ஒரு லட்சத்து இருபதாயிரம் அமேரிக்க டாலர்கள் என்று மதிப்பிடப் பட்டது. ஆனால் வெறும் 16 சதவிகித வேலையை முடித்து விட்டு இந்த நிறுவனம் கம்பி நீட்டி விட்டதாக தெரிகிறது.
இந்த நிறுவனம் முதல் பகுதி வேலையைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. அவ்வாறு முடிக்காத நேரத்தில், மூன்று தவணைகளில் 25 ஆயிரம், 26,200 மற்றும் 38,800 ஆகிய மூன்ற தொகைகளை இந்த நிறுவனத்துக்கு வழங்க, கபில் சிபல் ஒப்புதல் கொடுத்தது ஏன் என்று சிஏஜி அறிக்கை கேள்வி எழுப்புகிறது. இந்தப் ப்ராஜெக்டின் முதல் பகுதியாக 20 ஆயிரம் நபர்களின் விபரங்களை சேகரிக்க வேண்டிய இந்த நிறுவனம், வேறும் 3300 நபர்களின் விபரங்களை மட்டுமே சேகரித்திருந்த நிலையில், கபில் சிபல் ஏன் அந்நிறுவனத்துக்கு பணம் அளிக்க ஒப்புதல் கொடுத்தார் என்று அந்த அறிக்கை கேள்வி எழுப்புகிறது.
இந்தத் திட்டத்திற்கான ஆலோசனையை கொடுத்த அமெரிக்காவிற்கான இந்தியத் தூதரகத்தின் அறிவியல் ஆலோசகர் இந்தத் திட்டத்திற்கான ஒப்புதலைக் கொடுத்தது கபில் சிபல் என்றும், அவர் இதற்காக ஒப்புதலை அமேரிக்கா வருகையில் கொடுத்தார் என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எப்படிப்பட்ட கல்லுளி மங்கன் பார்த்தீர்களா இந்த கபில் சிபல் ? இந்த கபில் சிபல் 2ஜி விவகாரத்தில் அரசுக்கு ஜீரோ லாஸ் என்று சொன்ன போது வாய் மூடி மவுனியாக இருந்த மன்மோகன் சிங்கும், சோனியாவும், சிபிஐ தனது 3வது குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யும் இந்த நேரத்தில் எங்கே வைத்துக் கொள்வார்கள் தங்கள் முகங்களை ?
திமுக வெறும் கருவி தோழர்களே….. உண்மையான எதிரி காங்கிரஸ் தான். அவர்களையும் கருவறுக்கும் காலம் வரத்தான் போகிறது.