இந்தியாவில் இப்போது லாக்டவுன் செயல்பாட்டில் இருக்கிறது. ஆனால் இது தீர்வல்ல என்று பல்வேறு விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த நீண்டகால செயல்பாடுகள் தேவை. இந்த செயல்பாடுகளுக்கு கால அவகாசம் தேவைப்படும். அதற்காக தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே இந்த லாக்டவுன் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
உலகின் மிகப்பெரிய லாக்டவுன் நடைபெற்றது இந்தியாவில் தான். 23 மார்ச் 2020 அன்று, லாக்டவுன் நடவடிக்கையை பிரதமர் மோடி, இந்தியாவில் செயல்படுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் உச்சபட்ச மருத்துவ அமைப்பான, இந்திய மருத்துவ கவுன்சில், கொரொனா வைரசைத் தடுப்பதில் லாக்டவுன் நடவடிக்கைகள் ஒரு தற்காலிக அம்சம் மட்டுமே என்றது. லாக்டவுனால் 20 முதல் 25 சதவிகிதம் வரையிலான பரவலை மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்கு, அரசு அறிவியல்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், அது வரையில் தற்காலிகமாக லாக்டவுனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அந்த அமைப்பு அரசிடம் தெரிவித்திருந்தது.
பல்வேறு மருத்துவர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், நுண்கிருமி நிபுணர்களால் ஆராயப்பட்டு, இந்திய மருத்துவ கவுன்சிலால் அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகள் ஆகும். 22 மார்ச் நிலவரப்படி, 652 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 19818 புதிய தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை குறுகிய காலத்தில் இரட்டிப்பாகி வருகிறது.
பொதுவான நோய் பரவல் அல்லது சமூக பரவல் வரும் காலங்களில் அதிகமாகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் கூறுகிறார், அரசின் தொற்றுநோய் ஆலோசகர்களில் முக்கியமானவரான வினோத் கே பால். இவர் நிதி ஆயோக்கின் உறுப்பினரும் ஆவார்.
சமூக பரவல் தொடங்கி விட்டது என்பதை, இந்திய ஆய்வாளர்கள் உறுதியாக கூறுகிறார்கள். இணைப்பு 1 இணைப்பு 2
ஆனால் அரசோ, சமூகப் பரவல் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகிறது.
பிரதமர் மோடியே ஒப்புக் கொண்டபடி, இந்த லாக்டவுன், மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு, பொருளாதார நெருக்கடி, சிரமங்களை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், வினோத் பால் கூறுவது போல, இந்த லாக்டவுன், நோய் பரவலின் வீச்சை 40 சதவிகிதம் மட்டுமே குறைக்க உதவும். அதற்குள், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு அரசு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அரசு இதனை எப்படி அலட்சியமாக உதாசீனப்படுத்தியது என்பதனை இரண்டு பாகங்களில் வெளியாகிற இந்தக் கட்டுரைகள் விளக்க இருக்கிறது.
வீடு வீடாக சென்று சோதனைகள் செய்வது, அறிகுறி தென்படுவோரை தனிமைபடுத்துவது, உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், அளித்தது. இத்தகைய நடவடிக்கைகள், நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகாமல் தடுப்பதோடு, தீவிர நோய் பரவலை கட்டுப்படுத்தவும் உதவும்.
அரசுக்கு அளித்த பரிந்துரைகளில், வினோத் பால், லாக்டவுன் காலத்தை தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தினார். அரசு இப்பரிந்துரைகளை கொண்டதும் அடுத்த ஒரு வாரகாலத்துக்கு , “திட்டமிடுதல் மற்றும் தரவுகளை சேகரிப்பிற்கான தயாரிப்பு” தொடங்கிவிட வேண்டும். லாக்டவுன் முடியும் முன்னதாக, தேசிய அளவில், மாவட்ட வாரியாக, கொரோனா பரவல் தொடர்பாக முழுமையான எண்ணிக்கைகள் அடங்கிய பட்டியல் தயாராகியிருக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்தியா முழுமையாக அனைவருக்கும் பரிசோதனைகளை செய்ய கீழ்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
1) அனைத்து வீடுகளுக்கும் உணவு மற்றும் அவசியமான பொருட்களை வழங்குதல்.
2) ஒவ்வொரு மாவட்டமும் கொரொனா வைரஸ் பரவலை தொடர்ந்து கண்காணித்து, தொற்று குறித்து உரிய விபரங்களை சேகரித்து பராமரித்தல்.
3) நோய் தொற்று தொடர்புகளை கண்டறிந்து உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்க விரைவான வழிமுறைகள்.
4) அதிகமான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்கள் வசிக்கும் பகுதியில் நோய் தொற்று பரவினால், அவர்களை தனிமைப்படுத்தி வைக்க உரிய இடங்களை தேர்வு செய்து தயார்படுத்துதல்
5) மருத்துவமனைகளில் தீவிர நோய் சிகிச்சை பிரிவுகளை அதிகப்படுத்துதல், மருத்துவமனை படுக்கைகளை அதிகரித்தல்
ஆகியவை, அரசுக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளில் சில. வினோத் பாலின் மதிப்பீட்டின்படி, கொரொனா சிகிச்சைக்காக இந்தியாவின் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் படுக்கைகள் மற்றும் வெண்ட்டிலேட்டர்கள் ஏப்ரல் முதல் வார நிலையின்படி போதுமான அளவில் இல்லை. பெரும்பாலான விஞ்ஞானிகளின் மதிப்பீடும் இதுவாகவே இருந்தது.
மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகள் போதுமான அளவு இல்லை என்பதே நிபுணர்களின் கருத்து. உதாரணத்துக்கு, ஒரு பகுதியில், 500 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டால், 150 வெண்டிலேட்டர்கள், 300 தீவிர சிகிச்சை பிரிவுகள், 1200 முதல் 6000 படுக்கைகள் அந்தப் பகுதிக்கு மட்டும் தேவைப்படும்.
ஆனால் வினோத் பாலின் இந்த ஆய்வறிக்கை முழுமையானதல்ல. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் மற்றொரு அறிக்கை கவலையளிக்கும் ஒரு சித்திரத்தை அளித்தது.
அதிக அளவிலான சமூக பரவல்.
“அதிக அளவில், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரொனாவின் சமூகப் பரவல் அதிகரிக்கும். பல பகுதிகளில், பல்வேறு காலகட்டங்களில் இது அதிகரிக்கும்” என்ற அபாயகரமான சித்திரத்தை அந்த அறிக்கை அளித்தது.
இந்த அறிக்கையின் அடிப்படையிலும், வினோத் பால், அரசுக்கு பரிந்துரைகளை, ஏப்ரல் முதல் வாரத்தில் அளித்தார். லாக்டவுன் நடவடிக்கை, 40 சதவிகித நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் என்பது ஒரு உத்தேச மதிப்பீடுதானே தவிர, நடைமுறையில், 20 முதல் 25 சதவிகிதம் மட்டுமே லாக்டவுன் நோய் பரவலை கட்டுபடுத்தும்.
3 மே வரை நீட்டிக்கப்பட்டுள்ள இப்போதைய லாக்டவுன் பெரும் வெற்றி என்று அரசு கூறுவது உண்மையல்ல என்பதை இந்த மதிப்பீடுகள் உணர்த்துகின்றன. 14 ஏப்ரல் அன்று, மோடி இவ்வாறு பேசினார்.
“இந்தியாவில், கொரொனா தொற்று எண்ணிக்கை வெறும் 550ஆக இருக்கும்பொழுதே நாடுதழுவிய லாக்டவுன் நடவடிக்கையை மேற்கொண்டோம். கொரொனா சிக்கல் தீவிரமாகும் வரை இந்தியா காத்திருக்கவில்லை. மாறாக, இச்சிக்கலை, முளையிலேயே கிள்ளி எறியும் நடவடிக்கையில் நாம் ஈடுபட்டு உடனடி முடிவுகளை எடுத்தோம்” என்று மோடி பேசினார்.
இக்கட்டுரைக்காக, நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் பால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், ஆகியோருக்கு விரிவான கேள்விகள் அனுப்பப்பட்டன. நினைவூட்டலுக்காக செய்திகளும் அனுப்பப்ட்டன. ஆனால் இக்கட்டுரை பதிப்பிக்கப்படும் வரை, ஒருவரிடமிருந்தும் பதில் பெற இயலவில்லை..
11 ஏப்ரல் அன்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், லாக்டவுன் நடவடிக்கையால் கொரொனா தொற்று பரவல் குறைந்துள்ளது என்று ஒரு வரைபடத்தை வெளியிட்டது. லாக்டவுன் இல்லாமல் இருந்திருந்தால் 10 ஏப்ரல் 2020 அன்று உள்ளபடி கொரோனா தொற்று 2,08,000 எண்ணிக்கையில் இருந்திருக்கும். லாக்டவுன் நடவடிக்கை காரணமாக 7477 என்ற எண்ணிக்கையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
வெறும் 3.60 சதவிகிதம் மட்டுமே நோய்த் தோற்று இருந்ததாக அந்த வரைபடம் கூறியது.
இந்த வரைபடம் உருவாக்கப்பட்டதற்கான அடிப்படை தரவுகள் வெளியிடப்படவில்லை. மேலும், உலகிலேயே, இந்தியாவில்தான் நோய்பரவலை கண்டறியும் சோதனைகள் மிகக் குறைவாக நடத்தப்படுகின்றன என்பதை பல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசு வெளியிடும் புள்ளிவிபரங்கள் நம்பிக்கை தருவதாக இல்லை. நமது சோதனை அளவுகள் மிகக் குறைவாக உள்ளன. ஏப்ரல் மத்தியில் வரை நோய்தொற்றுக்கான தொடர்புகள் இல்லாத, நோய் அறிகுறியுடைய நோயாளிகளை நாம் சோதனை செய்யவே இல்லை” என்கிறார், தேசிய சுகாதார தரவுகள் மைய்யத்தின் முன்னாள் செயல் இயக்குனரும், டாட்டா சமூக அறிவியல் மையத்தின் சுகாதார பிரிவின் முன்னாள் தலைவருமான சுந்தரராமன்.
நாளடைவில், அரசு அதிகப்படியான சோதனைகளை நடத்த தொடங்கிய பிறகு, அபாயகரமான நோய்தொற்றுப் பகுதிகளின் எண்ணிக்கை மெட்ரோ நகரங்களில் அதிகரிக்கத் தொடங்கியது. டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் நோய்தொற்று எண்ணிக்கை மட்டுமே, நாட்டின் மொத்த நோய் தொற்றுகளில் நான்கில் ஒரு பகுதியாக உருவெடுத்தது.
31 மார்ச் அன்று, மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இவ்வாறு சொன்னது. “நாட்டில் கொரொனா பரவலை தடுக்கவும், சமூக இடைவெளியை கட்டாயமாக்கவும், வைரசின் கண்ணியை உடைக்கவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படி, தேசிய லாக்டவுன் செயல்படுத்தப்பட்டது. இம்முடிவு, பல்வேறு நிபுணர்களோடு கலந்தாலோசித்த பிறகு, இதன் பாரதூர விளைவுகளை ஆராய்ந்த பின்னர் எடுக்கப்பட்டது” என்றும் தெரிவித்தது.
நோய்த் தொற்று அதிகம் பரவும் இடங்களில் போதுமான கண்காணிப்பு இன்மை, குறைந்த அளவிலான சோதனைகள் ஆகியவை நோய் தொற்றை அதிக அளவில் பரப்பி வந்தாலும், அரசு, மிக குறைந்த அளவில், குறுகிய இடங்களில் மட்டுமே நோய் தொற்று பரவுகிறது என்றும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் மட்டுமே இந்நோய் பரவுகிறது என்றும், எளிதாக இவர்களை கண்டறிய முடிகிறது என்றும் பிடிவாதமாக வலியுறுத்தி வந்தது
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரை என்ன ?
தேவையான தடுப்பு / கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், லாக்டவுன் முடிந்ததும், நோய் பரவல் தீவிரமாகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை கூறியது. இந்தியா முழுக்க நோய்த் தொற்று, நோய் பரவல் குறித்து முழுமையான தரவுகள் / புள்ளி விபரங்களை சேகரிப்பது, வாரமிருமுறை வீடுதோறும் சென்று விபரங்களை சேகரிப்பது, நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு அதிக அளவில் தனிமைப்படுத்தி வைப்பது ஆகியவை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைத்தவைகளில் சில நடவடிக்கைகள்.
டெல்லியில் கொரொனா வைரஸ் பரவிய விபரங்களை அடிப்படையாக வைத்து, நாடு முழுக்க நோய் பரவல் எப்படி இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில், 21 நாள் லாக்டவுன் இருந்தால்கூட, இந்தியாவில் ஒரு கோடியே 30 லட்சம் மக்களுக்கு நோய் தொற்று பரவும் என்று ஆய்வறிக்கை கூறியது. மேலும் அந்த ஆய்வறிக்கை, “லாக்டவுன் நடவடிக்கை இல்லையென்றால், 100 முதல் 150 நாட்களுக்குள் உச்சத்துக்கு செல்லும் நோய் பரவல், லாக்டவுன் நடவடிக்கையால், 100 முதல் 200 நாட்களுக்குள் பரவும்” என்று கணித்தது. உலகெங்கும், இந்நோய் பரவலின் தாக்கம் ஒரே மாதிரிதான் இருக்கும் என்றும் கூறியது அவ்வறிக்கை.
14 ஏப்ரல் அன்றும் மோடி, லாக்டவுனை நீட்டித்தார். லாக்டவுன் நீட்டிப்புகள், பெரிய அளவில் பயன் தராதது மட்டுமல்ல, அவற்றை
செயல்படுத்துவது அத்தனை எளிதல்ல என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அறிக்கை கூறியது.
இது வரை, இந்நோய் பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி, விரைவான தனிமைப்படுத்தும் நடவடிக்கையே. கொரொனா பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமல்லாமல், நோய் அறிகுறி தென்படுபவர்களையும் தனிமைப்படுத்தி சோதனைக்குள்ளாக்குவது மட்டுமே, இந்நோயை மட்டுப்படுத்த வழி என்று அறிக்கை கூறியது. அரசால் இதை செய்திருக்க முடியும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள், சமூக சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் என்றொரு முறையை பரிந்துரைத்தனர். நோய்தொற்று அறிகுறி தெரியும் ஒவ்வொரு இரண்டாவது நபரையும் முதல் 48 மணி நேரத்தில் தனிமைப்படுத்தவும், நான்கில் மூன்று பேரை, அறிகுறி தென்பட்ட முதல் நான்கு நாட்களுக்குள் தனிமைப்படுத்தவும் பரிந்துரைத்தது.
தாமாக அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கொரொனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் மற்றும், நோய் தொற்று இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்டவர்களை மட்டுமே அரசு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை செய்து வருகிறது. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமோ, வீடு வீடாக சென்று, நோய் அறிகுறி இருப்பவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை செய்ய பரிந்துரைத்தது. எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், லாக்டவுன் நடவடிக்கை, நோய் பரவலை தடுக்கும் என்ற 24 மார்ச் நாளிட்ட அரசின் கூற்றை மறுத்தது
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் முடிவுகளின் அடிப்படையில், வினோத் பால், லாக்டவுன் நடவடிக்கை, அரசுக்கு வெறும் கால அவகாசத்தை மட்டுமே பெற்று தந்துள்ளது என்றார். மருத்துவமனைகளை அதிகரிப்பது, படுக்கைகளை அதிகரிப்பது, சோதனை செய்யும் வசதிகளை அதிகரிப்பது ஆகிய பணிகளை இந்த லாக்டவுன் காலகட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றார் பால்.
வெறும் நான்கு மணி நேர கால அவகாசம் கொடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட இந்த லாக்டவுன், காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாகவும், உரிய திட்டமிடல் காரணமாகவும், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளிகளை, உணவு, உறைவிட வசதி இல்லாமல் வீதிகளில் அலைய விட்டது.
கொரொனா அறிகுறி தென்படும் ஒவ்வொரு இரண்டாவது நபரையும் 48 மணி நேரத்தில் தனிமைப்படுத்த புதிய திட்டமிடல் தேவைப்படுகிறது. கண்காணிப்பு, சோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகியவை படிப்படியாக, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிக அளவில் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார் வினோத் பால்.
பிரதமர் உட்பட, மத்திய அரசின் அனைத்து பிரிவுகளும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று உறுதியாகக் கூறினர். 14 ஏப்ரல் அன்று லாக்டவுனை நீட்டித்த பிரதமர் மோடி, “இந்த வைரஸ் பரவலை தடுக்க, ஒரு ஒருங்கிணைந்த, முழுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்காகவிட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? இதனை நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்குகிறது. நமது கடந்தகால அனுபவங்களை வைத்து பார்க்கையில், நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம். லாக்டவுன் நடவடிக்கையாலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதாலும், இந்தியா அதிக பயனை பெற்றுள்ளது. இந்தியாவில் ஒரு லட்சம் படுக்கைகள் (மருத்துவமனை) உள்ளன. 600க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் தயாராக உள்ளன” என்றார் பிரதமர் மோடி.
இரண்டாவது பாகம் நாளை வெளிவரும்.
எழுதியவர்கள்
நிதின் சேத்தி @nit_set
குமார் சம்பவ் @kum_sambhav
ஆங்கில வடிவத்தின் இணைப்பு
https://www.article-14.com/post/govt-knew-lockdown-would-delay-not-control-pandemic