கொரோனா பொது முடக்கத்தினை தளர்த்துவதற்கென்று அரசின் உயர்மட்ட விஞ்ஞானிகள் குழு சில விதிமுறைகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அரசோ அதனை பொருட்படுத்தவில்லை. அதோடு புதிதான விதிமுறைகளை தன்னிச்சையாக வகுத்துக் கொண்டது.
அதனை மாநில அரசுகளுக்குத் தெளிவுபடுத்தவுமில்லை.
இதன் விளைவாக கொரோனா தொற்று 10,841 சதவிகிதம் அதிகரித்தது.
பொது முடக்கதை தொடங்குவதற்கு முன்பிருந்ததை விட தற்போது 19,303 சதவீதம் தொற்று பரவியிருக்கிறது.
டெல்லியில் 20,565 சதவீதமும், அகமதாபாத்தில் 4,1457 சதவீதமும் கூடியிருக்கிறது.
இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகள் ஊரடங்கு குறித்தும், புதிய தொற்று ஏற்படும் நோயாளிகளுக்கான மருத்துவ அமைப்பு பற்றியும் மேற்கொண்ட திட்டம் மற்றும் மேற்பார்வை குறித்து எப்படி நமது அரசு உதாசினபடுத்தியது என்பது குறித்து நாம் புலனாய்வு செய்தோம்.
ஐ.சி.எம்.ஆர் இது தொடர்பாக ஏப்ரல் முதல் வாரத்தில், அரசுக்கு ஒரு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில், பொது முடக்கத்தை எப்படி தளர்த்துவது என்பது குறித்து பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்தது.
கொரொனா தொற்றை கண்டறிய வீட்டுக்கு வீடு சென்று தொற்றுள்ளவர்களை கண்டறிய வேண்டும். அறிகுறி உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 14 நாட்கள் தொடர்ந்து இத்தகைய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதனால் கொரொனா பரவல், 40 சதவிகிதம் குறைந்தது என்றாலோ புதிய தொற்றுகள் ஏற்பாட்டால் அதைக் கையாள போதுமான மருத்துவ வசதிகள் உள்ளது என்றாலோ பொது முடக்கத்தை தளர்த்தலாம் என்றது. ஐ.சி.எம்.ஆர் நிபுணர்கள் அளித்த இந்த பரிந்துரையை அரசு உதாசீனம் செய்தது.
ஏப்ரல் 14 அன்று பொது முடக்கம் இருபதாவது நாளை எட்டியிருந்தது. அன்றைய தினம் மாநில அரசுகளிடம் பேசிய ஐசிஎம்ஆர் – ன் தலைவர் பல்ராம் பார்கவா “இந்தியாவில் கோவிட் 19 தொற்றுகள் அதிவேகமாக அதிகரிக்கவிருக்கின்றன” என்றார் என்ன தவறு நடந்திருக்கிறது? அரசு நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்பது தான் தவறு.
ஏப்ரல் 24 அன்று இன்னும் 22 நாட்களில் (மே 16ல்) இந்தியாவில் புதிய கொரொனோ தொற்று நோயாளி இருக்க மாட்டார் என்றது அரசு. ஆனால் மே 11 நிலவரப்படி 10,841 சதவீதம் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது . இதற்கு அகரணம் அரசு தங்களுடைய சொந்த விஞ்ஞானிகள் பொது முடக்கத்தை தளர்த்துவதற்கு முன் செய்ய வேண்டியதாக கூறிய கருத்துகளை புறந்தள்ளியதே ஆகும்.
பொது முடக்க சமயத்தில், தொடர் கண்காணிப்பு அவசியம் என்பதை வலியுறுத்திய விஞ்ஞானிகள், அத்தகைய கண்காணிப்பு, புள்ளி விபரங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் இல்லாமல், பொது முடக்கத்தை தளர்த்துவது பற்றி யோசிக்க வேண்டாம் என்று பரிந்துரைத்தனர்.

பொது முடக்கத்தை படிப்படியாக எப்படி விலக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் அளித்த வழிகாட்டுதல்களில் உள்ள வரைபடம்
இந்தியா ஆறு வாரங்களை கடந்து பொது முடக்கத்தில் இருந்து வருகிறது. 50 நாட்களை நெருங்கி விட்டோம். ஆனால், வீடு வீடாக சென்று, நோய் தொற்றை கண்டறிய விழி முறைகளை கையாண்டால் மட்டுமே, பொது முடக்கம் பயன் தரும். இவற்றை செய்யாமல், பொது முடக்கத்தை செயல்படுத்துவதோ, தளர்த்துவதோ, பலன் தராது என்று ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்தது. ஆனால் ஐ.சி.எம்.ஆரின் இந்த பரிந்துரைகளுக்கு மாறாக, வெளிப்படைத்தன்மை இல்லாத ஒரு புதிய முறையை மத்திய அரசு கடைபிடித்தது. இந்த மர்மமான முறையின் அடிப்படையில், நாடு முழுக்க 700 மாவட்டங்களில் பொது முடக்கத்தை தளர்த்துவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுத்தது.
ஐ.சி.எம்.ஆரின் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை / பரிந்துரைகளை நிராகரித்ததன் விளைவு மோசமாக இருந்தது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
24 மார்ச் அன்று, பொது முடக்கம் தொடங்கியபோது, இந்தியாவில் 618 கொரொனா தொற்றுகள் இருந்தன. , 11 மே அன்று, இந்தியாவில் 67,000 தொற்றுகள் இருந்தன. இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, உள்ளிட்ட 15 நகரங்களில் இருந்த நோய் தொற்றுகள் மட்டும் 60 சதவிகிதம். இந்த நகரங்களில் பொது முடக்கம் முழுமையாக இருந்தது. ஆனால் நோய் தொற்று பரவல் குறையவில்லை. பொது முடக்கம் தொடங்குகையில், மும்பை வெறும் 67 தொற்றுகளை கொண்டிருந்தது. 11 மே அன்று மும்பை தொற்று எண்ணிக்கை 13,000. இது 19,309 சதவிகித உயர்வு. டெல்லியில் பொது முடக்கம் தொடங்குகையில், வெறும் 35 தொற்றுகள் மட்டுமே. 11 மே அன்று 7233 தொற்றுகள். இது 20,565 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அகமதாபாத்தில் 25 மார்ச் அன்று வெறும் 14 மட்டுமே. 11 மே அன்று 5818. இது 41,457 சதவிகித அதிகரிப்பு.
இறுதியாக, மகாராஷ்டிர மாநில அதிகாரிகள், 11 மே அன்று, அம்மாநிலத்தில் சமூக பரவல் இருப்பதை ஒப்புக் கொண்டனர். ஒதிஷா மாநிலத்தில், ஒரே வாரத்தில் நோய் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. 24 ஏப்ரல் அன்று, மத்திய அரசு, கொரொனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. 16 மே வாக்கில் புதிய தொற்றுகளே இல்லாத சூழல் உருவாகும் என்று கூறியது முழுக்க தவறு என்பது நிரூபணமாகியுள்ளது
30 மே அன்று, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்துவது என்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, சிகப்பு, பச்சை, ஆரஞ்சு என்று வகைப்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த வரையறை, நான்கு அளவீடுகளின் அடிப்படையில் எடுக்கப்படும். கொரொனா தொற்றுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள், சோதனைகளின் எண்ணிக்கை மற்றும், கண்காணிப்பு நடவடிக்கைகள். ஒரு சிகப்பு மண்டலம், கடுமையான முடக்கத்தில் இருக்கும். பச்சை மண்டலத்தில் மிக குறைவான கட்டுப்பாடுகள் இருக்கும்.
இக்கட்டுரைக்காக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், சுகாதரத் துறை செயலாளர் ப்ரீத்தி சுதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா, தலைமை தொற்று நோய் பிரிவின் தலைவர் ராமன் கங்கேத்கர் ஆகியோரிடம் நோய் தொற்று பகுதிகளை வண்ண மண்டலங்களாக பிரிப்பது எதன் அடிப்படையில் என்று விளக்கம் கேட்கப்பட்டது. மேலும், ஐ.சி.எம்.ஆர் அளித்த பரிந்துரைகள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்றும் கேட்கப்பட்டது. சுகாதாரத்துறை செயலர், அவருக்கு அனுப்பப்பட்ட கேள்விகளை சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் அனுப்பினார்.
ஐ.சி.எம்.ஆர் பார்கவா மட்டும், இந்த கேள்விகள், மத்திய சுகாதாரத்துறை தொடர்பானவை என்று பதில் அனுப்பினார். பிறரிடமிருந்து பதில் வரவில்லை.
30 ஏப்ரல் அன்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பியது. அதில் மேலே குறிப்பிட்ட நான்கு காரணிகளின் அடிப்படையில், பொது முடக்கத்தை படிப்படியாக தளர்த்துவது குறித்து விபரங்கள் எதையும் அளிக்கவில்லை. மத்திய அரசின் உத்தரவு இவ்வாறு கூறியது. “கள நிலவரங்களின்படி, மாநில அளவில், மாநில அரசுகள், கூடுதலாக ஒரு பகுதியை சிகப்பு அல்லது ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கலாம். ஆனால், மத்திய அரசு சிகப்பு / ஆரஞ்சு என்று அறிவித்த மண்டலங்களில் மாற்றங்கள் செய்யக்கூடாது”.
மே 1 அன்று, மத்திய உள்துறை அமைச்சகம், இதே கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தியது. “மத்திய அரசின், சுகாதாரத் துறை, சிகப்பு பச்சை மண்டலங்களாக வரையறை செய்த, சிகப்பு ஆரஞ்சு மண்டலங்களில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது” என்று கூறப்பட்டது. எந்த அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன, இந்த மண்டலங்களில் மாற்றம் எந்த அடிப்படையில் செய்யப்படும் என்பது குறித்து விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
தவறவிடப்பட்ட வாய்ப்புகள்.
இதற்கு முந்தைய கட்டுரைத் தொடரின் முதல் பகுதியில், இந்தியாவில், கொரொனா பரவல் பெருமளவில் நடக்கும் என்றும், பொது முடக்க காலத்தை, மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்ளவும், தயார்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்தது குறித்து விபரங்கள் வெளியிடப்பட்டன.
வீடு வீடாக சோதனை, சமூக கண்காணிப்பு, சமூக தனிமைப்படுத்தல், உள்ளிட்ட பல அறிவியல்பூர்வமான ஆலோசனைகளை ஐ.சி.எம்.ஆர் வழங்கியது. இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், பொது முடக்கத்தின் பலன்கள் தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்பதை ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.
இந்த எச்சரிக்கை, விஞ்ஞானிகளை கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் விளைவு என்பதும் இந்த கட்டுரையில் அம்பலப்படுத்தப்பட்டது. சீனாவை போன்ற கடுமையான பொது முடக்கம், சமூகரீதியான, பொருளாதார ரீதியான, உளவியல் ரீதியான பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இதற்கு பதிலாக, விஞ்ஞானிகள், சமூக அடிப்படையிலான முடக்கத்தை கடைபிடிக்கலாம். கண்காணிப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்தலாம் என்று பரிந்துரைத்திருந்தனர். ஆனால், இந்திய விளிம்புநிலை மக்களை மிக மிக மோசமாக பாதிக்கும் வகையில், வெறும் நான்கு மணி நேர அவகாசம் அளித்து நாடு முழுமைக்கும் கடுமையான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.
விஞ்ஞானிகளை கலந்தாலோசிக்காமல் விதிக்கப்பட்ட பொது முடக்கத்துக்கு பிறகு இந்த நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், ஐ.சி.எம்.ஆர் விஞ்ஞானிகள் பரிந்துரைத்தனர்.
பொது முடக்க காலத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிக அளவில் வைரஸ் பரவும் சூழல் ஏற்படுகையில், பொது முடக்கத்தை விட்டு எப்படி வெளியேறுவது என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக அளித்தனர். ஆனால் அரசு அந்த பரிந்துரைகளை உதாசீனப்படுத்தியது.
கொரொனா குறித்து, மத்திய அரசு வெளியிட்டு வரும் பல்வேறு அறிவுறுத்தல்கள், உத்தரவுகள், சுற்றறிக்கைகளை பார்க்கையில், தவறான முடிவுகளை எடுத்த அரசு, என்ன செய்வது என்று புரியாமல் குழப்பமான முடிவுகளை எடுத்து வருகிறதோ என்றே தோன்றுகிறது.
“இந்நோய்க்கு சிகிச்சையே இல்லாவிட்டாலும், நோய் தொற்றை கண்டறிந்து தனிமைப்படுத்த, சோதனைகள் செய்யப்பட வேண்டும். இதனால்தான், மொத்த மண்டலமும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும்,” என்று கூறுகிறார், பொது சுகாதார மையத்தின் தலைவரும், கொரொனா தடுப்புக் குழுவின் உறுப்பினருமான ஶ்ரீநாத் ரெட்டி.
விஞ்ஞானிகளின் பரிந்துரைகளுக்கு எதிராக
பொது முடக்கத்தை விலக்குவதற்கான ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைகளை அரசுக்கு அளித்த நிதி ஆயோக்கின் தலைவர் வினோத் கே பால், நாடு முழுக்க வீடு வீடாக சோதனைகள், மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதற்கான தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு வார காலம் ஆகும் என்று தெரிவித்தார்.
இந்த கடிதப் போக்குவரத்துகள் அரசுத் துறைகளில் நடந்து கொண்டிருந்தபோது, அரசு வெளிப்படையாக நோய் தொற்று கட்டுக்குள் இருக்கிறது என்று மார்தட்டிக் கொண்டது. ஆனால், உள்ளூர நிலைமை மோசமாக உள்ளது என்பதை உணர்ந்தே இருந்தது.
19 ஏப்ரல் அன்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பார்கவா அரசுக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியாவில், கொரொனா பரவல் எண்ணிக்கை மிக தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

கொரொனா பரவல் அபாயகரமாக அதிகரித்து வருகிறது என்று ஐ.சி.எம்.ஆர் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையின் ஒரு பகுதி
அதே நாளில்தான், மத்திய அரசு, நோய் தொற்று மண்டலங்களை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என்று வகைப்படுத்தியது.

நோய் தொற்றுப் பகுதிகளை, சிகப்பு, ஆரஞ்சு மற்று பச்சை நிறங்களில் வகைப்படுத்தும் அரசின் அறிக்கையின் ஒரு பகுதி.
தொடர்ந்து 28 நாட்களாக புதிய தொற்று இல்லாத பகுதிகள் பச்சை மண்டலங்களாகும். இதர பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்களாகும். தொடர்ந்து 14 நாட்களுக்கு புதிய தொற்று இல்லாத சிகப்பு மண்டலங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகும். இதே போல 14 நாட்களுக்கு புதிய தொற்று இல்லாத ஆரஞ்சு மண்டலங்கள் பச்சை மண்டலங்களாகும்.
“இந்த நேரத்தில், பல மாவட்டங்கள் நோய் தொற்றே இல்லை என்று கூறிக் கொண்டிருந்தன. அவை சொல்வது உண்மைதான். நோய் தொற்று இல்லைதான். ஏனெனில், அவர்கள் போதுமான சோதனைகளையோ, கண்காணிப்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ளவில்லை. அதனால் அந்த மாவட்டங்களில் நோய் தொற்றே இல்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது” என்கிறார், பெயர் குறிப்பிட விரும்பாத, கொரொனா தடுப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர்.
உதாரணத்துக்கு, திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், 23 ஏப்ரல் அன்று, இரண்டு நோயாளிகள் கொரொனாவிலிருந்து குணமடைந்ததை அடுத்து, திரிபுராவில் கொரொனா இல்லை என்று அறிவித்தார். அடுத்த இரண்டு வாரங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையினரை சோதனையிட தொடங்கியதும், திரிபுராவில் 62 புதிய நோய் தொற்றுகள் கண்டு பிடிக்கப்பட்டன. 10 மே அன்று திரிபுராவில் 100 நோய் தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இரண்டாவது பொது முடக்க காலமான 15 ஏப்ரல் முதல் 1 மே வரை, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், பிப்ரவரி மாதத்திலும், பின்னர் ஏப்ரல் முதல் வாரத்திலும் அறிவுறுத்தியபடி நாடு முழுக்க கோவிட் சோதனைகள் நடத்துவதற்கோ, கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கோ, அரசு எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, 17 ஏப்ரலில், அரசு கொரொனா பாதிக்கப்பட்ட பகுதிகளை வண்ணங்கள் மூலமாக வகைப்படுத்தியது.
“கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களில், பொது முடக்க காலத்தில், கிராமப்புறங்களில், தன்னார்வர்லர்கள் வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து நோய் அறிகுறி பற்றி கேட்டறிந்தனர்” இதை செய்ய மருத்துவர்கள் வேண்டியதில்லை. சாதாரண தன்னார்வலர்களே போதும் என்கிறார், , பொது சுகாதார மையத்தின் தலைவரும், கொரொனா தடுப்புக் குழுவின் உறுப்பினருமான ஶ்ரீநாத் ரெட்டி.
இதற்கிடையே, நாடெங்கும், சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய அரசு இது கொரொனாவை கையாள வகுத்திருந்த திட்டங்கள் தோல்வியடைந்தது என்பது தொற்று அதிகரிக்கும் எண்ணிக்கையில் தெரிய வந்தது. அடுத்த பதினைந்து நாட்களில், இரண்டாவது பொது முடக்கம் முடிவுக்கு வரும் நேரத்தில், கொரொனா முன்னெப்போதையும் விட வேகமாக பரவுவது தெரிய வந்தது. 14 ஏப்ரல் அன்று உள்ளபடி, 12,000 கொரொனா தொற்றுகளும், 30 ஏப்ரல் அன்று 33,000 தொற்றுகளும், 9 மே அன்று 60,000 தொற்றுகளும் உருவாகின. இது ஒரு புறம் இருக்க, பொது முடக்கத்தாலான பொருளாதார இழப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.
இந்த இடத்தில், அரசு தனது அணுகுமுறையை மீண்டும் மாற்றியது.
புதிய அணுகுமுறை.
1 மே அன்று, மத்திய உள்துறை அமைச்சகம், நோய் தொற்று உள்ள பகுதிகளை. வண்ணங்களின் மூலம் மண்டலவாரியாக வகைப்படுத்தி உத்தரவு வெளியிட்டது. இவ்வாறு வகைப்படுத்த நான்கு காரணிகளை குறிப்பிட்டது உள்துறை அமைச்சகம்.
“மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், நோய் தொற்றுகளின் எண்ணிக்கை, எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால அவகாசம், சோதனைகளின் எண்ணிக்கை, கண்காணிப்பின் அடிப்படையில் கிடைக்கும் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு பகுதியை சிகப்பு மண்டலமாக வரையறுக்கும்” என்று நான்கு காரணிகளை குறிப்ப்பிட்டு அந்த உத்தரவு தெரிவித்தது.
அரசு, இந்த அறிவிக்கையிலோ, அல்லது அதற்கு பின்னர் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட மற்ற அறிவிக்கைகளிலோ, இந்த நான்கு காரணிகள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன, இந்த காரணிகள் எவ்வாறு பொது முடக்கம் தளர்த்துவதற்கு பயன்படப்போகின்றன, என்பது போன்ற விபரங்களை வழங்கவில்லை.
இந்தியாவில் ஒரு மாநிலம், எந்த அடிப்படையில, நோய் தொற்று மாவட்டங்கள் வண்ணவாரியாக வகைப்படுத்தப்படுகின்றன என்பதை கேள்விக்கு உள்ளாக்கியதோடு, இந்த முறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. அந்த மாநிலத்தை அடையாளப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அதிகாரி, “பொது முடக்கம் எதற்காகவென்றால்,, போதுமான மருத்துவமனைகள் இல்லாத நிலையில், நோய் தொற்று அதிகமாகும் சமயத்தில், பொது முடக்கம் காரணமாக, மக்கள் மருத்துவமனைகளை பெருமளவில் அணுகுவதை தடுப்பதற்காகவே. ஒரு மாவட்டத்தின் மருத்துவ உட்கட்டமைப்பு எத்தகையது, சிகிச்சை அளிக்கும் திறன் என்ன என்பவற்றை கணக்கிலெடுக்காமல், இது போல நோய் தொற்று மண்டலங்களை வகைப்படுத்துவது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை” என்றார் அம்மாநிலத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி.
“ஒரு மாவட்டத்தின் மருத்துவமனையில் வெறும் 50 படுக்கைகளே இருக்கிறதென்றால், 500 கொரொனா தொற்றுகள், சமாளிக்க முடியாத பெரிய எண்ணிக்கையே. அதே மாவட்டத்தில் 1000 படுக்கைகள் இருந்தால், இதை சமாளித்து விட முடியும். இப்படி ஒரு சூழலில், பொது முடக்கத்தை படிப்படியாக நீக்குவது பற்றி பரிசீலிக்கலாம். ஆனால் மத்திய அரசின் உத்தரவுகள் இது போல எந்த தெளிவையும் வழங்கவில்லை” என்றார் அந்த அதிகாரி.
கண்காணிப்பு நடவடிக்கை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், வீடு வீடாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிந்துரைத்தது. மத்திய அரசின் ஏப்ரல் 30 நாளிட்ட உத்தரவில், கண்காணிப்பின் அடிப்படையில், தரவுகளை சேகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், மத்திய அரசு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் பரிந்துரைகளில், சிலவற்றையாவது ஏற்றுக் கொண்டு செயல்படுத்தியுள்ளது என்று கருதலாமா என்ற கேள்விக்கு இல்லை என்று மறுக்கிறார்கள் நிபுணர்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வாரமிருமுறை நோய் தொற்று இருக்கிறதா என்று வீடு வீடாக சென்று 700 மாவட்டங்களில் ஆய்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. இது தவிர, மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருத்துவ முகாம்களில் கொரொனா சோதனைகளை நடத்தி, நோய் தொற்று பரவலின் தன்மையை கண்டறிய வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரைத்தது.
நோய்தொற்றே இல்லாத மாவட்டங்களில், தீவிர கண்காணிப்பு செயல்படுத்தப்பட வேண்டும். இதனால் மக்கள் மருத்துவமனைகளுக்கு தாமாக சென்று, கொரொனா சோதனைகளை செய்து, கொரொனா பரவல் இருக்கிறதா என்பதை கண்டறிய முடியும் என்று ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்திருந்தது.
ஆனால், 17 ஏப்ரல் நாளிட்ட மத்திய அரசின் சுற்றறிக்கை, எந்த பகுதி நோய்தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டதோ, அந்த பகுதியில் மட்டும் வீடு வீடாக சென்று சோதனை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஒரு பகுதி நோய் தொற்று பகுதி என்று கண்டறியப்பட்டால், அப்பகுதியை வெளித்தொடர்பு இல்லாமல் தனிமைப்படுத்தி, அதன் பின்னர் சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை பரிந்துரைத்தது.
மேலும், இது போன்ற நோய்தொற்றுப் பகுதிகளிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் சோதனைகள் நடத்தி, நோய் பரவியிருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டிய அவசியம் இல்லை என்று, மத்திய அரசு அறிவுறுத்தியது. 30 ஏப்ரல் அன்று, நோய் தொற்று பகுதிகளாக கண்டறியப்பட்ட பகுதிகளின் அளவையும் சுருக்கியது. சிறு கட்டிடங்கள், அதன் அருகாமை பகுதிகள், தெருக்கள், அல்லது காவல் நிலைய எல்லைகள் என்று நோய்தொற்று பகுதிகளாக அடையாளம் காணப்பட வேண்டிய இடங்களின் எல்லையை சுருக்கியது.
“இனி ஐ.சி.எம்.ஆரின் பரிந்துரைகளை செயல்படுத்துவது எந்த பயனையும் தராது. பொது முடக்கம், மக்களுக்கு பொருளாதார ரீதியாக கடும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மத்திய அரசு இதை உணராமலேயே கொரோனாவை கையாள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. பொது முடக்கம் முடிய இன்னும் குறுகிய காலமே உள்ளதால், அதற்கு முன்னால், ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்தது போல, வீடு வீடாக சோதனைகளையும், மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதையும், எப்படி செய்து முடிக்க முடியும்” என்று கேள்வி எழுப்புகிறார்,மத்திய அரசின் கொரொனா தடுப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர்
ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வீடு வீடாக கண்காணிப்பு நடத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. ஆனால் இது முழுமையடையவில்லை. டெல்லியில் இது இப்போதுதான் செய்யப்பட்டு வருகிறது. நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்கிறது ஐ.சி.எம்.ஆர் பரிந்துரை. ஆனால் டெல்லியிலோ, வீடுகளிலேயே அவர்களை வைத்திருந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன. மிகத் தீவிர நோய் அறிகுறி உள்ளவர்கள் மற்றும், பாசிட்டீவ் என்று முடிவு வந்தவர்கள் மட்டுமே தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.
700 மாவட்டங்களில், கொரொனா தடுப்பு / தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசிடம் போதுமான தரவுகள் இருந்தனவா என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
ஆக்கம் :
மிருதுளா சாரி
ட்விட்டரில் தொடர @mridulachari
நித்தின் சேத்தி
ட்விட்டரில் தொடர @nit_set
கட்டுரையின் ஆங்கில வடிவம்
https://www.article-14.com/post/cases-surged-as-govt-ignored-scientific-advice-on-lifting-lockdown
ட்விட்டரில் தொடர @reporters_co
இந்தியில் காணொலி வடிவில்
ஆங்கிலத்தில் ஒலி வடிவில்