ஜுலை 2010ல் ஜுனியர் விகடன் பொட்டு சுரேஷைப் பற்றி மடக்கப் பட்ட மதுரைத் திலகம் என்று செய்தி வெளியிட்டதும், அதற்காக ஜுனியர் விகடன் அலுவலகத்தை அடித்து நொறுக்குவோம் என்று பொட்டு சுரேஷ் தினமலரில் விளம்பரம் கொடுத்ததும், பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதையும் ஒட்டி, ஜுலை மாதத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. இன்று பொட்டு சுரேஷ் பாளையங்கோட்டையில் பாம்புக்கும் பல்லிக்கும் நடுவினில் இருக்கையில், இந்தக் கட்டுரையை மீண்டும் பதிப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
உடன்பிறப்பே,
நெடுநாட்களாக உனக்கு கடிதம் எழுதாமல் இருந்தேன். ஆனால் எழுதியே தீர வேண்டிய சூழலை சில குடிலன்கள் உருவாக்கியுள்ளதால், உன்னை இக்கடிதம் வாயிலாக சந்திப்பதைத் தவிர வேறு என்ன வழி ?
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில், தமிழக மக்கள் ஒரு ரூபாய்க்கு அரிசி உண்டு, இலவச வண்ணத் தொலைக்காட்சி கண்டு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் நலம் கொண்டு, எனக்கு அளிக்கிறார்கள் மலர்ச் செண்டு. இதை குலைக்க வருகிறது மவுண்ட் ரோடு வண்டு.
சமீப காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளை நீயும் கவனித்திருப்பாய் என்று நினைக்கிறேன். கழக அரசு ஏதோ பத்திரிக்கையாளர்களை அடக்குவதாகவும், மிரட்டுவதாகவும், ஒடுக்குவதாகவும், ஓட ஓட விரட்டுவதாகவும் திட்டமிட்டு விஷமத்தனம் பரப்பப் பட்டு வருகிறது என்பதை நீ அறிவாய். பொய்யாலும் புரட்டாலும் தமிழகத்தை இருட்டுக் கூடாரமாக வைத்திருக்க வேண்டும் என்று புறப்பட்டுள்ளார்கள் சில புல்லுருவிகள்.
ஆற்காடு வீராச்சாமி இருக்கும் போது, புதிதாக எதற்காக தமிழகத்தை இருளில் ஆழ்த்த வேண்டும் ? வேறு எந்த மாநிலத்திலும், நாட்டிலும் இல்லாத வகையில் கழக ஆட்சியிலேதான் இருட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சரை ஏற்படுத்தி வைத்திருக்கிறானே இந்தக் கருணாநிதி ! பிறகெதற்கு இப்படி ஒரு பதர்களின் கூட்டம் தலைகொழுத்து ஆடுகிறது ?
கருணாநிதி ஆட்சியிலே வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டார்கள், நீதிபதிகள் தாக்கப் பட்டார்கள், உழைப்பாளர்கள் தாக்கப் பட்டார்கள், உத்தப்புரத்திலே தலித்துகள் தாக்கப் பட்டார்கள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப் பட்டார்கள், என்று கூக்குரலிடுகிறார்களே !!! இவர்கள் கூற்றிலிருந்தே புரியவில்லையா, இந்தக் கருணாநிதி பாரபட்சமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் தான் தாக்கியிருக்கிறான் என்று.
அந்த அம்மையாரைப் போல பாரபட்சமாக நடந்து கொள்ளும் பாரம்பரியத்தில் வந்தவனல்ல நான். அறிஞர் அண்ணா என்னை அப்படி வளர்க்கவுமில்லை, பெரியார் அதை எனக்கு கற்றுக் கொடுக்கவுமில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும் என்பதையும் இந்த பதர்கள் அறியவில்லை.
பதவி போய் நான் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் போது பாருங்கள்.. … எத்தனை பாசத்தோடு இந்தக் கருணாநிதி பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று. 2001 முதல் 2006 வரை, பத்திரிக்கை சுதந்திரத்தைப் பற்றியும், பத்திரிக்கையாளர்கள் அடக்கப் படுவது பற்றியும் நான் பேசாததையா இன்று கூக்கூரலிடும் நரிகளின் கூட்டம் பேசி விட்டது ?
பொட்டு என்பவர் யார் ?. என்னைப் போலவே பிற்பட்ட வகுப்பில் பிறந்து, சமுதாயத்தில் முக்கியப் புள்ளியாக உயர்ந்து நிற்பவர். அந்தப் பொட்டை திருஷ்டிப் பொட்டாகச் சித்தரித்து எழுதியிருக்கிறது இன்று புதிதாக அவதாரம் எடுத்திருக்கும் அண்ணா சாலை ஆரியக் கூட்டம்.
தமிழகத்திற்கே விடிவெள்ளியாக விளங்கும் அஞ்சா நெஞ்சனின் கரத்தை மதுரையில் மட்டுமல்லாமல், கொடை ரோட்டிலும் வலுப்படுத்தும் அன்பு இளவல் பொட்டின் நெற்றிப் பொட்டில் தாக்குவது போலல்லவா எழுதியிருக்கிறார்கள் ?
என் அன்பு மகனைப் பற்றியும் அன்பு மகனுக்கு பொட்டு செய்யும் சேவையை இந்த குள்ளநரிகளால் செய்ய முடியுமா ? கொடை ரோடு முழுவதுமே சொல்லுமே பொட்டின் சேவைகளை.. … … … .. .. .. .. . ..
இன்று இல்லாமல் இருந்தாலும் என்றுமே என் அன்பிற்குரிய பிரபாகரனுக்கு ஒரு பொட்டு அம்மான் போலத்தானே என் அன்பு மகனுக்கு இந்தப் இந்தப் பொட்டு. அந்தப் பொட்டை போற்றும் அண்ணாசாலை ஆரியக் கூட்டத்திற்கு மதுரைப் பொட்டு வேப்பங்காயாய் கசப்பதேன் ? விளக்கெண்ணையாய் இருப்பதேன் ? அவர் பிற்பட்ட வகுப்பிலே பிறந்து, முற்பட்ட வகுப்பினருக்கே சவால் விடும் வகையில் வளர்ந்திருப்பதால் தானே ?
இன்று என் ஜால்ராவாக மாறியிருக்கும் அன்பு உடன்பிறப்பு கலைஞானி கமலஹாசன் அன்றே பாடியிருக்கிறாரே “சாந்துப் பொட்டு, ஒரு சந்தனப் பொட்டு “ என்று. கலைஞானி மட்டுமா ? கண்ணதாசனும் “பொட்டு வைத்த முகமோ“ என்று அருமை பொட்டைப் பற்றி பாடியிருக்கிறாரே .. … …
கர்நாடக கண்மணி அருமை நண்பர் முரளியும் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா“ என்று பாடியிருக்கிறாரே ?
ஆனால் இந்த அண்ணா சாலை ஆரியக் கூட்டம் இந்தப் பாடல்களையெல்லாம் கேட்காமல், பொட்டுவை ஏதோ ஸ்டிக்கர் போட்டு போல எழுதியிருக்கிறார்களே கழுகார் என்ற பகுதியில்… அந்தக் கழுகின் சிறகை உடைக்க வேண்டாமா ? அந்த கழுகை கழக உடன்பிறப்புகள், புறநானூற்று புலிகளைப் போல புறப்பட்டு புசிக்க வேண்டாமா ? புரட்டி எடுக்க வேண்டாமா ? அதைத்தானே அறிவித்தார்கள் ஒரு விளம்பரம் மூலமாக .. … ? இதில் என்ன தவறு இருக்கிறது ? இதற்கு அய்யோ அய்யய்யோ என்று கூப்பாடு போடுகிறார்களே ?
என்றுமே நான் “செய்வதைச் சொல்வோம், சொல்வதைச் செய்வோம்“ என்றுதானே சொல்லி வந்திருக்கிறேன். செய்யப் போவதை வாயால் சொல்லாமல், ஒரு பத்திரிக்கையின் வாயிலாக விளம்பரம் மூலமாகச் சொல்வது ஒரு நற்பண்பன்றோ ?
உண்மையைச் சொன்னால் அடித்துஉதை; அதைமுன்கூட்டியே தினமலர்வழிச் சொல்
என்று அய்யன் வள்ளுவரே தெரிவித்திருக்கிறார். அந்த அய்யன் வழி வந்தவனல்லவா நான் ?
அந்த அம்மையார் கட்சியினர் மட்டும் மூன்று மாணவிகளை எரித்துக் கொலை செய்து விட்டார்கள், கழகம் இது போல் ஏதாவது செய்யாவிட்டால், நாளை கழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக இது அமைந்துவிடும் என்பதற்காகத் தானே தினகரன் நாளிதழ் அலுவலகத்தில் அதே போல், மூன்று பேரை எரித்துக் கொன்றனர் அன்பு உடன்பிறப்புகள் ? அன்று தினகரன் அலுவலக ஊழியர்கள் அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து எழுதிய ஏடுகள், “திடீரென உள்ளே புகுந்த“ “திடீர் தாக்குதல்“ என்றல்லவா எழுதின ?
அதுபோல ஒரு அவச்சொல் வரக் கூடாது என்பதற்காகத் தானே பத்திரிக்கையில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. வரப் போகிறோம். தரப் போகிறோம் என்பதை அருமை நண்பரின் உதவியோடு அருமையான விளம்பரமாக தந்திருக்கிறோம்.
ஒரு செய்தி ஆசிரியரின் கைது தினமலர் நாளேட்டை எப்படி வழிக்கு கொண்டு வந்திருக்கிறது பார்த்தாயா உடன்பிறப்பே ? இதே போல அண்ணா சாலை ஆரியக் கூட்டத்தையும் வழிக்கு கொண்டு வருவது எனது கடமை அல்லவா ? அந்தக் கடமையை செய்யத் தவறினால் கருணாநிதி கடமை தவறிய கயவன் என்று வரலாறு வையாதா ?
நான் என்ன இந்தப் பத்திரிக்கைகளை எழுத வேண்டாம் என்று தடுக்கிறேனா ? எதிர்க்கிறேனா ? இவர்களுக்கு செய்தி தரவேண்டும் என்பதற்காகத் தானே தினமும் ஒரு பாராட்டு விழா, திறப்பு விழா, திருமண விழா, திரைப்பட விழா என்று கலந்து கொள்கிறேன். இவர்களுக்காகத் தானே தினமும் ஒரு அறிக்கை விடுகிறேன். இவர்களுக்காகத் தானே என் குடும்பத்தினரையும் தினமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கட்டளையிட்டுள்ளேன் ?
இதைப் பற்றியெல்லாம் எழுதாமல், தப்பும் தவறுமாக, அந்த அம்மையார் விடும் அறிக்கைகளையெல்லாம் வெளியிடுவதும் உண்மையை மறைக்கும் வேலை தானே ? பொய்யை வாரி இறைக்கும் காரியம் தானே ?
பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இன்னும் இந்த பத்திரிக்கைகளை எல்லாம் சொந்தமாக வாங்காமல் இருக்கிறேன்.
நானே ஒரு பத்திரிக்கையாளன் ஆகையால், இந்த விகடன், குமுதம், தினத்தந்தி, தினமணி, தினமலர், கல்கி, போன்ற அனைத்துப் பத்திரிக்கைகளையும் நானே சொந்தமாக வாங்கி, அதில் என்னைப் பற்றி நானே அத்தனை பக்கங்களையும் எழுதி நிரப்ப வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் அவாவை, பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்பதால் ஒத்தி வைத்திருக்கிறேன். ஆனால், இதைச் செய்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடிக்கு என்னைத் தள்ளுவது போலத்தானே இருக்கிறது இந்த விபீடணர்கள் நடத்திய செவ்வாய்க் கிழமை கூட்டம் ?
தினமலர் குழுமத்தைப் போன்ற பிற்பட்ட ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்து முன்னேறியவர்களும், இந்து ராம் போன்று, தாழ்த்தப் பட்ட சமூகத்தின் பிறந்து முன்னேறியவர்களும் இருப்பதால்தானே, இன்று இந்த பார்ப்பனர்களின் கூட்டத்தை அடக்கி வைக்க முடிகிறது ? இந்த பார்ப்பனர்களின் சதிச் செயலை, முரசொலியிலே தொடர்ந்து “காதற்ற ஊசி“ எழுதி வருவதை நீ படித்திருப்பாய் என்பதை நான் அறிவேன் உடன்பிறப்பே.
கலைஞானி நடித்த சலங்கை ஒலி படம் பார்த்திருப்பாய். அந்தப் படத்திலே ஒரு காட்சி. நடனமாடிக் கொண்டிருக்கும் கலைஞானியை ஜெயப்ரதா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். அப்போது திடீரென்று மழை வரும். அந்த மழையில் ஜெயப்ரதா நனைவார். அப்போது, ஜெயப்ரதா தலையில் விழுந்து நெற்றியில் வழிந்து, ஜெயப்ரதாவின் பொட்டை மழை நீர் அழிக்க எத்தனிக்கும் போது, கலைஞானி ஓடிச் சென்று அந்த பொட்டு அழியாமல் காப்பார்.
அது போலத்தானே அன்பு உடன்பிறப்பு பொட்டுவை அழிக்க துடிக்கிறார்கள். கலைஞானி போல, வேகமாகச் சென்று தடுக்க முடியாது என்றாலும், மெதுவாகச் சென்றாவது, பொட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டியது எனது கடமை அல்லவா ?
பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காது இருந்தால், சோடையாகி விட்டான் தமிழன், சோரம் போய்விட்டான் தமிழன், சோதாக்களின் கூட்டத்திலே ஒருவனாகி விட்டான் தமிழன், தன் சுகமொன்றே போதுமென்று சுயமரியாதை இழந்து விட்டான் தமிழன் என்பது உறுதியாகி விடாதா ?
இந்நிலை உறுதியாகி விட்டால், அண்ணாசாலை ஆரியக் கூட்டம் இன்னும் வேகமாக சுழற்றும் வாளை, பொட்டுவைப் பற்றி எழுதி நிரப்புவார்கள் தாளை, இதைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறானா, பொட்டு என்ற காளை ?
இதயத்தில் பதிந்திருக்கிற கொள்கைக்கும் ஏற்றுக் கொண்டிருக்கிற பொறுப்புக்கும் மாசு வராமல் காப்பாற்றுகிற கடமையை கழக அரசு செய்துள்ளது என்பதற்கான சான்றுதானே தினமலர் விளம்பரம் ?
ப்ரஸ் கிளப்பில் விபீடணர்கள் கூடி நடத்தும் போராட்டத்தை, ஜிம்கானா கிளப்பிலும், காஸ்மாபாலிடன் கிளப்பிலும், முடித்து வைக்கத் தெரியாதா இந்தக் கருணாநிதிக்கு ? அண்ணா சாலை ஆரியக் கூட்டம் என்னிடம் சரணடைந்து பேச்சு வார்த்தைக்கு நேரம் கேட்டிருப்பதை போராட்டம் நடத்தும் அந்த விபீடணர்கள் அறிவார்களா ?
அன்புடன்
மு.க.