
2008ம் ஆண்டு கைது செய்ய்ப்பட்ட பிறகு, மறு நாள் என்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபி.சிஐடி போலீசார் அழைத்து வந்தபோது
நான் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் ஜூலை பதினேழாம் தேதியான இன்றைய தினத்தை என்னுடைய வாழ்க்கையின் முக்கிய நாளாக கருதுகிறேன். கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக இந்த நாளை என்னையே நான் உரசிப் பார்க்கும் நாளாகவும் நினைக்கிறேன். என்னைக் காவல்துறை கைது செய்த நாள் இன்று. உடல்ரீதியான அச்சுறுத்தலுக்கு பிறகு இரண்டு மாதங்களை புழல் சிறையில் கழித்தேன். இணைப்பு
எத்தனை விரைவாக காலம் ஓடி விட்டது !! அரசுப் பணியில் இருந்திருந்தால் லஞ்ச ஒழிப்புத் துறையில் உதவி மேலாளராக இருந்திருப்பேன். 29 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருப்பேன். பொருளாதார தன்னிறைவு இருந்திருக்கும். மனநிறைவு இருந்திருக்குமா என்றால் நிச்சயம் இருந்திருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.
ஏனெனில் நான் வேலை செய்த லஞ்ச ஒழிப்புத் துறையில் என்னைச் சுற்றி நடக்கும் எல்லாமே என்னை அலைக்கழித்திருக்கின்றன. ஊழலில் ஊறி முத்தெடுத்த ஜெயலலிதா, லஞ்ச ஒழிப்புத்துறைக்கான கட்டிடத்தை திறந்து வைக்க வந்திருந்தபோது துறையின் அலுவலகக் குறிப்பில் இப்படி எழுதியிருந்தார்.
“There is no safety for honest men except by believing all possible evil of evil men. Among a people generally corrupt, liberty cannot long exist–Edmund Burke.”
ஐரிஷ்தத்துவ ஞானி எட்மண்ட்பர்க் என்பவரின் மேற்கோள் இது.
லஞ்ச ஒழிப்புத் துறையால், கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளியான ஜெயலலிதாவே இப்படி எழுதியதை வாசித்தபோது எனக்கு வருத்தமும், சிரிப்பும் ஒரு சேர எழுந்தது. அங்கு வேலை செய்த ஏராளமான அதிகாரங்களை உடைய அதிகாரிகள், நல்ல பதவிக்காக எத்தகைய சமரசங்களையும் செய்ய தயாராக இருக்கிறார்களே என்பது எனக்கு மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தியது. இத்தகைய அதிகாரிகள் தங்கள் சுயநலனுக்காக எதையும் செய்ய தயாராக இருந்தார்கள். இவர்கள் இவ்வளவு தகிடுதத்தங்களையும் செய்து விட்டு, 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் ஒரு வி.ஏ.ஓவை மட்டும் கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என்றே தோன்றியது.
2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், துறை இன்னும் மோசமானது. மனப் புழுக்கம் இருந்தாலும், துறையை விட்டு எப்படி வெளியேற முடியும் ? எங்கே வேலைக்கு போக முடியும் ? 15 ஆண்டுகள் பணி முடித்த பிறகு வேலையை ராஜினாமா செய்தால், அடுத்து என்ன என்ற கேள்விக்கு என்னிடம் விடையில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் இருந்தேன். பணி இடைநீக்கம் செய்யப்பட்டேன்.
புழல் சிறையிலிருந்து வெளியே வந்ததும், உலகமே இருண்டு போனது போலத்தான் இருந்தது. வேலை இல்லை. அந்தக் காலகட்டத்தில்தான் இணையத்தில் எழுதலாம் என்று முடிவெடுத்து சவுக்கு தளத்தை தொடங்கினேன். தொடக்கக் காலத்தில் வெகு சிலரே என் கட்டுரைகளை வாசித்தார்கள். அப்போதைய உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட், சட்டவிரோதமாக வீடு ஒதுக்கீடு பெற்றது தொடர்பான ஆவணங்களோடு சவுக்கு தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டேன். மறுநாள் காலையிலேயே மதுரவாயல் காவல் நிலைய அதிகாரிகள் வந்து இரண்டாவது முறையாக என்னை கைது செய்தனர். இந்த முறை, “சாலையில் சென்று கொண்டிருந்தவரிடம் தகராறு செய்து, கல்லால் அடித்தேன்” என்ற வழக்கு. ஜாபர்சேட் மீதான ஊழல் புகார் குறித்து ஆவணங்கள் வெளியிட்டதாலேயே நான் கைது என்பது அனைவருக்குமே தெரிந்தது. ஊடகங்களிலும் செய்தி வந்தது. அதற்கு பிறகுதான் சவுக்கு தளம் புகழ்பெறத் தொடங்கியது.
திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து எழுதத் தொடங்கினேன். செம்மொழி மாநாடு நடந்த சமயத்தில் எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து எழுதினேன். திமுக ஆட்சியில், வெகுஜன ஊடகங்களில் அரசுக்கு எதிராக எந்த செய்தியும் வராமல் கவனமாக பார்த்துக் கொண்டார் கருணாநிதி. ஊடக முதலாளிகளை தன் பேச்சுத்திறமையாலும், அதிகார பலத்தாலும் தன் வசம் கொண்டு வந்திருந்தார். அந்த சமயத்தில், சவுக்கு தளத்தில்தான் திமுக அரசை விமர்சித்து கட்டுரைகள் வந்தன.
ஆட்சியில் இருந்த திமுகவினருக்கு “யார் இவன். எப்படி இவ்வளவு தைரியமாக எழுதுகிறான்” என்று வியப்பு. ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவோடே நேரடியாக பேசும் அளவுக்கு போயஸ் தோட்டத்தில் செல்வாக்கு உள்ளவன் என்று என்னை கருதினார்கள். ஜெயலலிதா தன் கட்சி எம்.எல்.ஏக்களையே பார்க்க மாட்டார். என்னையா பார்ப்பார் ?
திமுகவை சேர்ந்த பல தலைவர்கள், நான் அதிமுக ஆதரவாளன் என்று உறுதியாக நம்பினர். 2011ல் ஆட்சி மாற்றம் நடந்ததும் சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா. கலைஞர் கட்டிய அற்புதமான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, மருத்துவமனையாக மாற்ற முயற்சி செய்தார். அதிமுக ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில், “முட்டாள் அரசு” என்று அதிமுக அரசுக்கு எதிராக தொடர் கட்டுரைகள் வெளியிடத் தொடங்கினேன்.
திமுகவை எதிர்த்து நான் கடுமையாக எழுதியபோது திமுக மீது வெறுப்பு கொண்டவர்கள் என்னைக் கொண்டாடினார்கள். என் கட்டுரைகளை பரப்பினார்கள். ஜெயலலிதாவை எதிர்த்து எழுதத் தொடங்கியதும், என்னை திமுக சொம்பு என்று வசைபாடத் தொடங்கினார்கள். திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு எழுதுகிறேன் என்கிறார்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் புளித்துப் போய் விட்டன.
அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி விரல் சுட்டி கேள்வி எழுப்புவதே ஒரு ஊடகவியளாரின் கடமை என்பதை உறுதியாக நம்புகிறேன். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பத்தான் துணிவு வேண்டும். மன உறுதி வேண்டும். எதிர்க்கட்சியை போட்டு அடித்துக்கொண்டிருப்பது செத்த பாம்பைஅடிப்பதற்கு சமம்.
பத்து ஆண்டுகளாக சவுக்கு தளத்தை நடத்தி வருகிறேன். ஒரு ஊழலை அம்பலப்படுத்தவோ, மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவோ அனைத்து வழிகளையும் பயன்படுத்த வேண்டும். எனது நோக்கம் தீர்வுதானே தவிர பரபரப்பு அல்ல. அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல் பல ஊழல்களையும் அம்பலப்படுத்தியுள்ளேன். காட்டை அழித்து கடவுளை அறிமுகம் செய்கிறேன் என்று திரியும் மோசடி பேர்வழி ஜக்கிவாசுதேவ் பற்றி சவுக்கு தான் முதலில் கட்டுரை வெளியிட்டது. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மோசடி தீர்ப்பு வழங்கியகுமாரசாமியின் தீர்ப்பு செய்த கணக்குப் பிழையை சவுக்குதான் முதலில் வெளியிட்ட ஊடகம். அதன் பின்னரே இதர வெகுஜன ஊடகங்கள் இதை கையில் எடுத்தன. இது போல பல முக்கிய கட்டுரைகள்சவுக்கு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய அளவில் சவுக்கு கவனிக்கப்படுகிறது என்பதை அறிவேன். இது ஒரு மாற்று ஊடகமாக உருவாகியுள்ளது என்ற கூற்று மிகைப்படுத்தல் அல்ல என்றே நம்புகிறேன்.
சவுக்கு தளத்தில் விளம்பரங்கள் கிடையாது. வருவாய் கிடையாது. யாருடைய முதலீடும் கிடையாது. இதன் காரணமாக இதர ஊடகங்களுக்கு வரும் அழுத்தம் சவுக்கு தளத்துக்கு கிடையாது. யார் குறித்தும் எது குறித்தும் அஞ்சாமல் என்னால் இதில் எழுத முடியும். விபரங்களை சரி பார்த்த பின்னர் எழுத வேண்டும் என்பதில் மட்டும்தான் கவனம். விளைவுகளைப் பற்றி அல்ல.
ஒரு அரசு இயந்திரத்தில் எங்கு கை வைத்தாலும் ஷாக் அடிக்கும் என்பது தெரியும். வேறு எந்த ஊடகமும் எழுதத் தயங்கும் நீதித்துறையின் ஊழல்கள் பற்றியும் பல கட்டுரைகள் வெளிப்படுத்தியிருக்கிறேன். நீதித்துறை, காவல்துறை குறித்து விமர்சனம் செய்கிறபோது எது மாதிரியான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை அறியாதவன் அல்ல நான். இப்போதும் என் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதை தெரிந்தே நீதித்துறை ஊழல்கள் குறித்து எழுதுகிறேன். நீதி மட்டுமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது, நீதியரசர்கள் அல்ல. நீதியை மீறி அவர்கள் பல காரணங்களுக்காகத் தவறு செய்யும்போது அதனை ஆதாரத்தோடு வெளியிடுவது என்பது ஜனநாயகக் கடமை என்றே நினைக்கிறேன். அதே சமயம் பல நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சட்டத்தினைத் தங்களது உயிராக மதிக்கும் நீதியரசர்கள் குறித்தும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நல்ல தீர்ப்புகளை தயங்காமல் பாராட்டி எழுதியிருக்கிறேன். சவுக்கில் வெளிவரும் கட்டுரைகளை பல நீதிபதிகள் கவனிக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். தன் மேல் வழக்கு நிலுவையில் இருக்கும் ஒருவர் நீதித்துறை குறித்து எதையும் பேசமாட்டார். நான் பேசுவதற்கு காரணம், இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்பதே.
நான் கைது செய்யப்பட்டது, பணி இடைநீக்கம் செய்யப்பட்டது தொடக்கத்தில் மலைப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலத்தில் Cornered cat என்று சொல்லுவார்கள். விரட்டினால் ஓடிக்கொண்டே இருக்கும் பூனை, இனி ஓட வழியில்லை என்றால், திரும்பி சீறும். தாக்கத் தொடங்கும். அது போலத்தான் எனக்கும் இனி ஓட வழியில்லை என்ற நிலை ஏற்பட்டபோது, என்னை ஓட ஓட விரட்டிய அரசு இயந்திரத்தை எதிர்த்து போராடத் தொடங்கினேன். 12 ஆண்டுகளாக போராடி வருகிறேன்.
கடும் அச்சுறுத்தலையும், விமர்சனத்தையும் தாக்குதல்களையும் தினமும் எதிர்கொண்டு வருகிறேன். என்னை எதிர்ப்பவர்கள் தனிப்பட்ட எனது வாழ்க்கை குறித்த அவதூறுகளை பரப்புகிறார்கள் என்பதையும் கவனித்து வருகிறேன். அதற்கு பதில் சொல்ல அவகாசமும், அவசியமும் இல்லை. சிலவற்றிற்கு நாம் சொல்லும் பதில்களால், கேள்விகள் எல்லையில்லாமல் பெருகிக் கொண்டே போகும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.
எனது வாழ்க்கை ஒருவகையில் ஒரு போராட்டமே. அதில் என்னுடன் இணைந்திருப்பவர்கள் பலரின் முகமும், பெயரும் கூட எனக்குத் தெரியாது. அவர்கள் என்னை நம்புகிறார்கள். நான் அவர்களுக்காக போராடுகிறேன். என்னுடைய போராட்டம் என்பது அரசுத்துறைகளிலும் அரசியல் கட்சிகளிலும் குரலை உயர்த்த முடியாமல் புழுங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் சேர்த்து தான். சொந்தக் கட்சியில் நடைபெறுகிற அவலங்களை வெளியில் சொல்ல முடியாமல் அதனை சகித்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள் கட்சி சார்ந்து நான் அழைத்துப் பேசியிருக்கிறார்கள் ஆதரித்திருக்கிறார்கள். அரசுத்துறையின் சில முடிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாத அதிகாரிகள் தங்களின் மனக்குமுறலை என் மூலமாக ஆற்றிக் கொள்கிறார்கள். நாம் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறோம். உங்களுக்காக எழுதுகிறேன். எனக்காக நீங்கள் வாசிக்கிறீர்கள். இந்த புரிதலைத் தான் இந்த 12 ஆண்டுகாலம் ஏற்படுத்தித் தந்திருக்கிறது.
மிரட்டல்களையும், அவதூறுகளையும், பலரின் கோபங்களையும் சந்திக்காத நாள் என்பது எனக்கு இல்லை. என் மீது ஒவ்வொரு நாளும் சொல்லப்படுகிற அவதூறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வெகு சிலரே என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்டவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம். இது ஆச்சரியமானது. ஏனெனில் என்னைத் நேரடியாகத் தெரிந்தவர்கள், என்னை என் எழுத்து மூலம் மட்டுமே அறிந்தவர்கள் என்னிடம் எந்த தன்னிலை விளக்கத்தினையும் எதிர்பார்க்கவில்லை. இது தான் நான் அடைந்த பெரும் பேறாக நினைக்கிறேன்.
இன்று எனக்கு உலகெங்கும் நண்பர்கள். உலகின் பல நாடுகளில் இருந்து என்னை அழைத்து பேசுகிறார்கள். உதவி வேண்டுமா என்று கேட்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார்கள். சமூக வலைத்தளங்களில் எனக்கு ஏராளமான நண்பர்கள். எனக்கு இதுதான் நிறைவை தருகிறது.
உங்கள் நம்பிக்கையை பொய்யாக்காமல், நான் தொடர்ந்து எழுதுவேன். பேசுவேன். சமூக அவலங்களை சாடுவேன். விமர்சிப்பேன் என்பதையே உங்களுக்கு இந்த தருணத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
சவுக்கு தளத்தின் வெற்றி, உங்களின் அன்பாலும், அளவில்லாத ஆதரவாலும் கிடைத்தது. நீங்களே சவுக்கு தளத்தின் பலம். நீங்கள் ஒவ்வொருவரும் சவுக்கே. தொடர்ந்து மனித சமுதாயத்தின் துயர் நீக்க சேர்ந்து பயணிப்போம்.
அன்புடன்
சவுக்கு சங்கர்
17 ஜூலை 2020
HAPPY BIRTHDAY Sir!!
உங்கள் பணி மேன்மேலும் தொடரட்டும்..
வாழ்த்துக்கள்..
Very good article sir. Please continue to write, would like to meet you. Please mail me your contact.
Please continue this good work, we will always stand by your side and support.
Super Sir, I salute your bravery.
Superb. You are doing great job.I salute you.
Superb. You are doing great job.I salute you.
Super sir
Sir, I saw your videos on YouTube. Very good. Great work. First of all Thanks. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் வருமானத்துக்கு என்ன வேலை அல்லது தொழில் செய்கிறீர்கள்?
சஸ்பென்சனில் உள்ளதால் பாதி சம்பளம் பெறுகிறார்..