1996ல் முதல்வராக கலைஞர் பதவியேற்றதும், தமிழகத்தில் ஒன்றிரண்டு இடங்களில் கள்ளச்சாராய சாவுகள் நடந்தன. 1991-1996 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், மது ஒழிப்புப் பிரிவுக்கு ஒரு ஆய்வாளர் சென்றால், ஒரு வருடத்தில் இரண்டு வீடுகள் கட்டி விடலாம் என்று பேச்சு.
இதை மனதில் வைத்து கலைஞர் சட்டப்பேரவையில், “காவல்துறையின் முக்கால்வாசி ஈரல் அழுகிவிட்டது” என்றார். அவர் பேசியதை கேட்டு, பல காவல்துறை அதிகாரிகள் மனவேதனை அடைந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு சில வாரங்கள் கழித்து, லயோலா கல்லூரி அருகே, ஒரு கடத்தல் வழக்கில் ரவுடி ஆசைத்தம்பி சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது, கலைஞர் “கள்ளச்சாராய பானைகளின் மீதும் துப்பாக்கிக் குண்டுகள் பாயும்” என்று காவல்துறையை பாராட்டவும் தவறவில்லை.
தமிழக காவல்துறை பல்வேறு குற்றச்சாட்டுகள், குறைகளுக்கு ஆளானாலும், இந்தியாவின் சிறந்த காவல் துறைகளில் ஒன்றாகவே இருந்து வந்தது. ஸ்காட்லாண்ட் யார்டுக்கு அடுத்தபடி என்றெல்லாம் ஒரேயடியாக உச்சிமுகர முடியாது என்றாலும், வடமாநிலங்களோடு ஒப்பிடுகையில் ஒரு சிறந்த துறையாக தமிழக காவல் துறை திகழ்ந்து வந்துள்ளது. உத்திரப் பிரதேச காவல் துறையோடு சில மாதங்கள் நெருங்கிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தபோதுதான், தமிழக காவல்துறை எத்தகைய ஒரு professional துறை என்பதை புரிந்து கொண்டேன். சமீபத்தில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி கலவரம் போன்றவற்றிலெல்லாம் ஈடுபட்ட குற்றவாளிகளை டெல்லி காவல் துறை அப்பட்டமாக காப்பாற்றியது போல தமிழக காவல் துறை ஒருபோதும் செய்யாது என்று உள்ளபடியே பெரும் நம்பிக்கையில் இருந்தேன். 2002ம் ஆண்டு குஜராத்தில் காவல்துறை உதவியோடு நடந்த பெரும் மதக்கலவரத்தை, தமிழகத்தில் காவல் துறை அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள் என்றே இறுமாந்து இருந்தேன்.
அந்த நம்பிக்கையெல்லாம் தகர்ந்து, தமிழக காவல்துறை ஒரு காவிப்படையாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கைக்கூலியாக மாறிவிட்டதோ என்று கடந்த ஒரு ஆண்டாக நடக்கும் சம்பவங்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன. தமிழகம் சங்கிகள் கட்டுப்பாட்டில் சென்று விட்டதோ என்று முதன் முதலில் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய சம்பவம், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாகப்பட்டினத்தில் நடந்தது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த முகம்மது பைசான் என்பவர், தனது முகநூல் பக்கத்தில், தான் பீப் சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்கிறார். பகிர்ந்து “பீப் எனது நண்பன்” என்று எழுதுகிறார்.
அதே பகுதியை சேர்ந்த இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பார்த்திபன், தினேஷ் குமார், அகத்தியன் ஆகியோர் கூட்டமாக சேர்ந்து பைசானை தாக்கி எலும்பு முறிவு ஏற்படுத்துகின்றனர். பைசான் காவல்துறையில் புகாரளிக்கவும், பார்த்திபன் உள்ளிட்டோர் கைது செய்யப்படுகிறார்கள். இது வரை சரி. அடுத்து காவல்துறை என்ன செய்தது தெரியுமா ?
இரு சமூகங்களுக்கு இடையே வன்முறையை உருவாக்குதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில், பைசானை கைது செய்தது.
ஒருவன் தான் உண்ணும் உணவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்கிறான். இது எப்படி இரு சமூகங்களுக்கிடையே வன்முறையை தூண்டுவதாகும் ? அவன் மீது வழக்கு பதிவு செய்வது எப்படி சரியான நடவடிக்கையாக இருக்கும் ? இணைப்பு
உளவுத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, பிரச்சினை பெரிதாகாமல் இருக்க இவ்வாறு செய்தததாக கூறினார்கள். சரி இது ஒரு தனி சம்பவம். இனி இதுபோல தொடராது. தமிழக காவல்துறை அப்படியெல்லாம் சங்கிகள் பிடியில் சிக்கி விடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெறும் சம்பவங்கள் என் நம்பிக்கையை தவிடுபொடியாக்கி விட்டன.
சம்பவம் 1
முதல் சம்பவம் கருப்பர் கூட்டம் என்ற வீடியோ சேனல் நடத்திய பெரியார் திராவிடர் கழக தோழர்கள் பற்றியது. பல ஆண்டுகளாக கருப்பர் கூட்டம் என்ற பெயரில் அவர்கள், கடவுள் மறுப்பு, பகுத்தறிவு கொள்கைகள் பற்றி வீடியோ போட்டுக்கொண்டுதான் இருந்தார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகவராக கடந்த சில ஆண்டுகளாக திடீர் புகழடைந்த மாரிதாஸ் நபர் நடத்தும் யுட்யூப் சேனலில்தான், கருப்பர் கூட்டம் வீடியோ பற்றி பேசப்படுகிறது. அப்படி பேசப்பட்டதும், வலதுசாரிகள், வன்மத்தோடு சமூக வலைத்தளங்களில் கருப்பர் கூட்டம் மீது தாக்குதல் தொடுக்கின்றனர்.
புதிதாக பிஜேபியில் சேர்ந்து, பிஜேபி வழக்கறிஞர் பிரிவு தலைவரான பால் கனகராஜ், இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கிறார். அவர் தனது புகாரில் சுரேந்திரன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார். புகார் வந்த அன்றே, சுரேந்திரனின் வீட்டுக்கு காவல் துறை செல்கிறது. சுரேந்திரன் தலைமறைவாகிறார். அவர் கிடைக்கவில்லை என்பதால், அந்த யூட்யூப் சேனலுக்கு தொழில்நுட்ப உதவி செய்த செந்தில்வாசன் என்பவர் அன்றே கைது செய்யப்படுகிறார். மறுநாள், சுரேந்திரன் சரணடைகிறார்.
காவல் துறை, இவ்வழக்கில் சம்பந்தமே இல்லாத மேலும் மூன்று பேரை கைது செய்கிறாது. கருப்பாக இருந்ததால் கைது செய்தார்களோ என்னவோ தெரியவில்லை.
இத்தோடு சென்னை மாநகர காவல்துறை நிற்கவில்லை. புகார் என்னவோ கருப்பர் கூட்டம் கந்தர் சஷ்டி கவசம் குறித்து வெளியிட்ட வீடியோ குறித்துதான். ஆனால், கருப்பர் கூட்டம் இத்தனை ஆண்டுகளாக தயாரித்து வெளியிட்ட 500க்கு மேற்பட்ட வீடியோக்களை நீக்கியது.
இத்தோடு நிற்கவில்லை சென்னை மாநகர காவல்துறை. கருப்பர் கூட்டம் வழக்கில் சம்பந்தப்பட்ட சுரேந்திரன், செந்தில்வாசன் ஆகிய இருவரையும் காவல்துறை கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில் காவல்துறை குறிப்பிட்டிருந்ததுதான் கவனிக்க வேண்டியது. இவர்கள் இருவரையும் எதற்காக கஸ்டடி எடுக்க வேண்டும் என்றால், “இந்த வீடியோவுக்கு ஆதரவான கருத்தோட்டத்தில் இருப்பவர்களை கண்டறிய வேண்டும்” இது அப்பட்டமான சதி என்பதில் சந்தேகம் வேண்டாம். ஆதரவான கருத்தோட்டத்தில் இருப்பவர்கள் என்றால், நாத்தீக கொள்கை உடைய அனைவரும்தான் வருவார்கள். அனைவரையும் கைது செய்து விடுவார்களா ?
இவ்வழக்கில் தொடர்புடையது என்று கூறி, கம்ப்யூட்டர், சர்வர், மொபைல் போன்கள் ஆகிய அத்தனையையும் காவல் துறை பறிமுதல் செய்தது.
உச்சகட்டமாக, கருப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன், மற்றும் செந்தில்வாசன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்ட உத்தரவில் கையெழுத்திட்டவர் மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ்.
குண்டர் தடுப்பு சட்டம் என்பதன் நோக்கமே, ஒரு குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே குற்றத்தை செய்யக்கூடாது என்பதற்காக பயன்படுத்தப்படுவது. கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் வீடியோ வெளியிடப் போகிறார்களா என்ன ? அப்படியே வெளியிட்டால்தான் என்ன தவறு ? ஒரு வீடியோ தவறாக வெளியிட்டார்கள் என்பதால் அவர்கள் இனி பேசவோ எழுதவோ கூடாதா ? என்ன அயோக்கியத்தனம் இது ?
சம்பவம் 2
மேலே குறிப்பிட்ட அதே மாரிதாஸ், நியூஸ்18 தமிழ் சேனல் தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிடுகிறார். அந்த வீடியோவில், நியூஸ்18 சேனல் இந்துக்களுக்கு எதிரானது, நியூஸ்18 ஆசிரியர் குணசேகரனின் மாமனார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர். அந்த சேனலே இந்துக்களுக்கு எதிரானது என்கிறார். இந்து மதத்தை இழிவுபடுத்துவதற்காகவே அந்த சேனல் நடைபெறுகிறது என்கிறார்.
அத்தோடு, குணசேகரனை பதவி நீக்கம் செய்யக் கோரி அனைவரும் நியூஸ்18 நிறுவனத்துக்கு புகார் அனுப்ப வேண்டும் என்கிறார்.
இரு நாட்கள் கழித்து, மாரிதாஸ் மீண்டும் ஒரு வீடியோவை போடுகிறார். அந்த வீடியோவில் நியூஸ்18 குழுமத்தைச் சேர்ந்த வினய் சாரவாகி என்ற எடிட்டர் தனக்கு பதில் மெயில் அனுப்பியுள்ளதாகவும், அந்த மெயிலின் உண்மைத்தன்மை குறித்து பலமுறை உறுதி செய்ததாகவும், கூறினார். அந்த நியூஸ்18 மெயிலில், குணசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றும், உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
இரு நாட்களில் நியூஸ்18 நிர்வாகம் சென்னை மாநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து ஒரு புகார் அளித்தது. அந்த புகாரில், மாரிதாஸ் என்பவர், போலியான ஒரு ஈமெயிலை நியூஸ்18 அனுப்பியதாக வீடியோ போட்டுள்ளார். அப்படி ஒரு மெயிலை நாங்கள் அனுப்பவில்லை என்று கூறியதோடு, கீழ்கண்ட குற்றங்களை மாரிதாஸ் செய்துள்ளார் என்று தெரிவித்திருந்தனர்.
பொய்யை கூறி, வதந்தியை பரப்பி மத விரோதத்தை வளர்த்தல், அதன் மூலம் வன்முறையை உருவாக்குதல், இரு குழுக்களிடையே மோதலை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்துதல், பொதுமக்களிடையே வன்முறையை தூண்டுதல், இந்து சமய மக்களை பிற சமுதாயத்தினருக்கு எதிராக தூண்டி விடுதல், இந்து சமுதாய மக்களை நியூஸ் 18 செய்தியாளருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும்படி தூண்டி விடுதல், பொது அமைதியை குலைத்தல், பொது அமைதியை குலைத்து, அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுதல் ஆகியவை. இது தவிர, அவதூறு, இன்னபிற.
காவல்துறை இந்த புகாரை பெற்று ஒரு வாரம் அமைதியாக இருந்தது. ஒரு வாரம் கழித்து, ஒரு எப்.ஐ.ஆரை பதிவு செய்தது. அந்த எப்.ஐ.ஆரில் குற்றவாளி யார் தெரியுமா ? எந்த மின்னஞ்ஜசல் முகவரியிலிருந்து ஈமெயில் வந்ததோ, அந்த மின்னஞ்சல் முகவரிதான் குற்றவாளி.
எப்படி இருக்கிறது இந்த கூத்து ?
ஒரு சைபர் க்ரைம் வழக்கில் முக்கிய தடயங்கள் என்பவை, கம்ப்யூட்டர், ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ், சர்வர் முதலியன. அவை இருந்தால்தான் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்ய முடியும். இல்லையென்றால் வழக்கு அதோகதிதான்.
இந்த வழக்கில், வழக்கு பதிவு செய்து, 7 நாட்கள் ஆகியும், இன்னும் எந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. மாரிதாஸ் வீடு அலுவலகம் சோதனை செய்யப்படவில்லை. மாரிதாஸ் விசாரணைக்கே அழைக்கப்படவில்லை. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா போலீஸ் விசாரணை ? மாரிதாஸ், தனது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கை மாற்றி விட்டான் என்று தகவல். இனி எப்படி இந்த வழக்கை புலனாய்வு செய்வார்கள் ?
நியூஸ் 18 தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நியூஸ்18 பற்றி மாரிதாஸ் வெளியிட்ட அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பிறகாவது சென்னை மாநகர காவல்துறை விழித்துக் கொண்டு வீறுகொண்டெழுந்தது என்றா நினைக்கிறீர்கள் ? இல்லவே இல்லை. அதே பாராமுகம்தான்.
சம்பவம் 3
இதுவும் அதே மாரிதாஸ் பற்றியதுதான். கருப்பர் கூட்டம் பற்றி மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், கருப்பர் கூட்டம் பின்னணியில், நியூஸ்18 செய்தியாளர் ஹாசிப் இருக்கிறார் என்றார் மாரிதாஸ். இது வெறும் விஷமத்தனமான பொய் செய்தி கிடையாது. மிக மிக ஆபத்தானது.
ஹாசீப் இஸ்லாமியர். கருப்பர் கூட்டத்தின் வீடியோ இந்து கடவுள்களை இழிவுபடுத்தியது. தமிழகம் இருக்கும் நிலையில், ஏதாவது ஒரு மூலையில், மதக் கலவரம் மூளாது என்று யாராவது உறுதி கூற முடியுமா ? அப்படி மூண்டால் அது இந்த வீடியோவால்தானே !! இன்று தமிழகம் அமைதியாக இருக்கிறதல்லவா ? அப்படி இருக்கக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம்.
எத்தகைய ஆபத்தான வீடியோ இது ? இந்த சர்ச்சை எழும்வரை, ஹாசிப்புக்கு இப்படி ஒரு யுட்யூப் சேனல் இருப்பதே தெரியாது என்பதுதான் உண்மை.
சிக்கலை இழுத்து விடுகிறார்கள் என்பதை உணர்ந்த ஹாசீப், உடனடியாக மாரிதாஸ் வெளியிட்ட பொய்யான வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர ஆணையாளரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரிலாவது மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். குண்டர் சட்டம் இந்த வழக்கில் செலுத்த பொருத்தமானதே.
செய்தார்களா ? செய்தார்களா சென்னை மாநகர காவல்துறையினர் ?
சங்கி போலீஸ் எப்படி சட்டப்படி நடக்கும் ?
சம்பவம் 4
சென்னை, நங்கநல்லூரில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்தான் டாக்டர் சுப்பையா. இவர் சென்னை ராயப்பேட்டை மற்றும் கேஎம்சி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவின் துறை தலைவர். இவர் பிஜேபியின் மாணவர் அமைப்பான அகில் பாரத வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய தலைவர். இவருக்கும் இவருக்கு பக்கத்து வீட்டில் இருக்கும் 62 வயதான பெண்ணுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கை நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்கிறார். அந்த அம்மா, மாதம் 2000 ரூபாய் கொடுத்து விடுங்கள் என்று கூறுகிறார். அதற்கு, மாதம் 2 லட்சம் சம்பளம் பிச்சைக்காரன் சுப்பையா அதெல்லாம் தர முடியாது ஓசியில் குடு என்கிறார். இது தகராறாக மாறுகிறது.
இதற்கு எதிர்வினையாக அந்த அயோக்கியப் பயல் சுப்பையா, அந்த பெண்மணியின் வீட்டு கதவின் மீது சிறுநீர் கழிக்கிறான். பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகளை வீசி எரிகிறான்.
இது சிசிடிவியில் பதிவாகிறது. அந்த பெண்மணி காவல் துறையில் புகார் அளிக்கிறார். 12 நாட்கள், இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் இது குறித்து செய்தி வெளியாகிறது. அதன் பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.
உடனடியாக காவல் நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி தலைவர்கள் விரைகிறார்கள். கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. புகார் வாபஸ் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மூத்திர சங்கி சுப்பையா மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் காவல் துறை தரப்பில், வழக்கு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. சரி அதை உண்மை என்றே வைத்துக்கொள்வோமே. என்ன நடவடிக்கை எடுத்தது காவல் துறை ?
மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், மூத்திர சங்கி சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் சென்னை மாநகர காவல் துறை ஆணையருக்கு அழுத்தம் கொடுத்தார்கள் என்பது உண்மையா ? உண்மையில்லை என்றால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
சங்கி போலீஸ் எப்படி சங்கி மீதே நடவடிக்கை எடுக்கும் ?
சம்பவம் 5
சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் காவல்நிலைய கஸ்டடி கொலைகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்துகையில், காவல் துறையினரின் மனவள பயிற்சிக்காக பெங்களூரில் உள்ள மத்திய அரசின் தேசிய மனநல நிறுவனத்தோடு ஒப்பந்தம் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதன்படி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கு முன்னதாக, புதிய கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் வருவதற்கு முன்னதாகவும் சென்னை மாநகர காவல்துறை ஆளினர்களுக்கு யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு முறை கூட, யோகா பெருவியாபாரிகளான பாபா ராம்தேவோ, காடுதிருடன் ஜக்கியோ, அயோக்கியன் ஶ்ரீஶ்ரீயோ அழைக்கப்பட்டதில்லை. ஏனெனில் இவர்கள் மூவரும் எத்தகைய சமூக விரோதிகள் என்பது ஒன்றும் ரகசியமல்ல.
ஆனால், புதிய ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், பதவியேற்ற ஒரு சில நாட்களிலேயே சென்னை மாநகர காவல் ஆளினர்களுக்கு ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் மூலம் காணொலி காட்சிவழி யோகா பயிற்சி நடத்தினார். சென்னையில் பல அற்புதமான யோகா ஆசிரியர்கள் உள்ளனர். காவல்துறை ஆணையர் அழைத்தால் உளமகிழ்ச்சியோடு வந்து பயிற்சி அளிப்பர்கள். ஒரு நொடி கூட தயங்கமாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.
அப்படி இருக்கையில், மகேஷ் குமார் அகர்வால் எதற்காக ஶ்ரீஶ்ரீ என்ற சமூக விரோதியை அழைத்தார் என்பதே எனது கேள்வி.
ஶ்ரீஶ்ரீயை அழைத்தது ஏன் பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது என்பதற்கு காரணம் இருக்கிறது. ஒரு நள்ளிரவில் சிபிஐ அலுவலக கதவுகள் திறக்கப்பட்டு அப்போது இருந்த இயக்குநருக்கு பதிலாக, நாகேஷ்வரராவ் என்ற ஒரு பச்சை அயோக்கியனை சிபிஐ இயக்குநராக நியமித்தார் மோடி. ரபேல் ஊழல் விசாரணையிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவே அந்த நடவடிக்கை.
அந்த நாகேஷ்வரராவ் ஒரு அப்பட்டமான சங்கி. இந்து வெறியன். நாகேஷவரராவ் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்று செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?
ஶ்ரீஶ்ரீயை அழைத்து, சிபிஐ தலைமையகத்தில், சிபிஐ அதிகாரிகளுக்கு யோகா வகுப்பு நடத்தியதுதான்.
நாகேஷ்வரரவ் இப்படி செய்ததில் வியப்பில்லை. அந்த நபர் ஒரு இந்து வெறியன். முரட்டு சங்கி.
ஆனால் நமது ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ?
சம்பவம் 6
சோசியல் மீடியாவில் கிஷோர் என்று ஒரு சல்லிப்பயல் இருக்கிறான். இவன் ஒரு கூலிப்படை. எந்த வேலையும் கிடையாது. முழுநேர வேலை புரணி பேசுவதுதான். ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், ஊடக நிறுவனங்களிலும், நடக்கும் செய்திகளை எக்ஸ்க்ளூசிவாக தருகிறேன் என்று சொல்லுவான். எப்படி என்றால், சம்பந்தப்பட்ட இடங்களில் பணி காரணமாக அதிருப்தியடைந்தவர்கள் இவனை தொடர்பு கொள்வார்கள் அவர்களுக்கு உள்ள தனிப்ப்பட்ட கோபத்தை தீர்த்துக்கொள்ள இவனிடம் கிளுகிளுப்பு கதைகளை சொல்லுவார்கள். அதற்கு காது வைத்து மூக்கு வைத்து சமூகவலைத்தளங்களில் எழுதுவான். இதை ஆகா ஓகோ என்று புகழ ஒரு பெரும் சங்கிக் கூட்டம் இருக்கிறது. பொதுக் கழிப்பிடத்தில் தனக்கு பிடிக்காத பெண்ணின் போன் நம்பரை எழுதி வைத்து செக்சுக்கு இந்த எண்ணை அழைக்கவும் என்று எழுதுபவன் போலான ஒரு மனப்பிறழ்வு இவனுக்கு இருக்கிறது.
அவன் சமூக வலைத்தளத்தில் எழுதிய சில பதிவுகள்.
இது போல இவன் ஆபாசமாக எழுதி, பெண் பத்திரிக்கையாளர்கள் அளித்து கமிஷனர் அலுவலகத்தில் நிலுவையில் இருக்கும் புகார்கள் மட்டும் 13. இவன் ஒரு பெண் பத்திரிக்கையாளரை, கோடம்பாக்கம் ஐட்டம் என்று பெயர் குறிப்பிட்டே எழுதி விட்டான். அந்த பெண் பத்திரிக்கையாளரை இதற்கு முன் பல முறை மோசமாக எழுதியுள்ளான். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பத்திரிக்கையாளர், ஆன்லைன் மூலமாக சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்துக்கு புகார் அளித்தார்.
அன்றே அவன் கைது என்று செய்தி பரவியது. சமூக ஊடகங்கள் சமூக ஊடகங்களில் பிரபலமான ஒரு நபர் கைது செய்யப்பட்ட செய்தியை கொண்டாடி நான் பார்த்தது இல்லை. அன்று இரவே, அவனை கைது செய்யாமலேயே விடுவித்தது சென்னை மாநகர காவல்துறை.
அவனுக்காக பிஜேபியின் தேசிய செயலாளர் எச்.ராஜா உரக்க குரல் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு சல்லிப்பயலுக்காக சாதி காரணமாக குரல் கொடுக்கும் எச்.ராஜா எப்பேர்பட்ட சல்லிப்பயலாக இருப்பான். “ஹைகோர்ட்டாவது மயிராவது” என்று சொல்லி விட்டு, அதே வேகத்தில் காலில் விழுந்த அயோக்கியன் தானே இவன் !!!
மறுநாள் பத்திரிக்கையாளர்கள், சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து முறையிட்டபோது, “அனைத்து வழக்குகளிலும் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் கைது அவசியமில்லை. சட்டம் மற்றும் விதிமுறைகளின்படிதான் நடக்கிறோம் என்று கூறி விட்டு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு “நாங்கள் அவன் செல்போனை பறிமுதல் செய்து விட்டோம்” என்றார்.
சாதாரணமாக போலீசார் தேடப்படும்போது எக்காளமிடுபவர்களை, காவல்துறை அவ்வளவு எளிதில் விடாது. எந்த குற்றத்துக்காக காவல்துறை தேடுகிறதோ, அப்படி தேடப்படும் நேரத்தில் அவன் எழுதிய பதிவை பாருங்கள். இதற்குக் கூட காவல் துறைக்கு ரோஷம் வரவில்லை என்றால், அந்நிலை கண்டு நான் அவமானமாக உணர்கிறேன்.
கமிஷனரின் பதிலைக் கேட்டு பத்திரிக்கையாளர்களுக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. இந்த வழக்கில் புகார் அளித்த அந்த பெண் காவல் துறையின் நடவடிக்கை குறித்து இவ்வாறு கூறினார்.
“ஆன்லைன் வாயிலாக கொடுத்த புகாரை கிரிமினல் முகாந்திரம் இருந்ததால் விசாரிக்க எடுத்துக்கொண்டது சைபர் செல். அவர்கள் என்னை அழைத்து ஃஎப்ஐஆர் பதிவு செய்ததும் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஏனெனில் இது பெண் பத்திரிக்கையாளர்களின் 7 ஆண்டுகால போராட்டம். என்னை மட்டும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவதூறாகவும் ஆபாசமாகவும் எழுதி வந்தார் இந்த நபர். மேலும் என்னுடைய அப்பா, அண்ணன், நண்பர்கள் மற்றும் அலுவலகம் சார்ந்த பல உண்மையில்லாத அவதூறுகளை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் எழுதி வந்தார். ஏற்கனவே அந்த நபர் ஆறு மாதங்களுக்கு முன்னர் இதே போன்ற வழக்கில் கைதாகி பிணையில் இருந்து வருகிறார், மேலும் இதே போன்றதொரு (என்னுடைய புகாரில்) வழக்கில் எஃப்ஐஆர் பதிவானதால் உடனே கைது செய்யப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என நம்பினேன். ஒரு நாள் முழுக்க அந்நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் அடுத்த நாள் கைதானதாக கூறினர். ஆனால் ஏற்கனவே நடந்ததை போல சில மணிநேரங்களில் அந்நபர் வெளியிடப்பட்டது அதிர்ச்சியளித்தது.
கடைசி வரை காவல் துறை அந்நபரை வெளியிலே விட வாய்ப்பில்லை என்றே நண்பர்களிடம் பகிர்ந்து வந்தேன். அந்த அளவுக்கு காவல்துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய வழக்கை தனி வழக்காக காவல் துறை கையாண்டது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் டிவிட்டரில் எச. ராஜா, கேடி ராகவன், காயத்ரி ரகுராம் போன்றவர்கள் காவல்துறை அந்நபரை விசாரிக்கும் போதே முதலமைச்சருக்கும், மத்திய உள்துறை அமைச்சருக்கும் டேக் செய்து சிபாரிசு செய்தது கூடுதல் மன உளைச்சலை ஏற்படுத்துயது.
பெண்களை ஐட்டம், விபச்சாரி, கிராக்கி என பதிவிடுவது எப்போது கருத்துரிமை ஆனது என தெரியவில்லை. இதை என்னுடைய தனிப்பட்ட பிரச்னையாகவோ, வழக்காகவோ கருதவில்லை. பல ஆண்டுகளாக இந்த நபர் சமூக வலைதளங்களில் உள்ள பெண்களையும், பத்திரிக்கைத் துறையில் உள்ள பெண்களையும் ஆபாசமாகவும் அறுவருக்கத்தக்க முறையிலும் பேசி வருவதற்கு நிச்சயம் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தண்டனை கிடைக்கப்பெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே பெண் பத்திரிக்கையாளர்களும், பெண்கள் அமைப்புகளும், பத்திரிக்கை சங்கங்களும் போராடி வருகின்றோம்.”
மகேஷ்குமார் அகர்வால் கைதுக்கு என்னென்ன வியாக்கியானம் சொன்னார் என்று நினைவிருக்கிறதா ? கிஷோர் இப்படி எழுதியும் கைது செய்யாமல் விட்டது இவனைப்போலவே சமூக வலைத்தளத்தில் புற்றீசல் போல பலர் நாளை கிளம்ப ஊக்கப்படுத்தாதா ? அத்தகையோருக்கு காவல்துறை ஊக்கம் கொடுத்ததாக மட்டும்தானே அவர்கள் நடவடிக்கையை புரிந்து கொள்ள முடியும் ?
சம்பவம் 7
வேலு பிரபாகரன் என்பவர் ஒரு திரைப்பட இயக்குநர். அவர் ஒரு பெரியாரிஸ்ட். எனக்கு தெரிந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக மேடைகளில் பேசி வருகிறார்.
அவர் சமீபத்தில் ஒரு யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “இந்து மதத்தை ஒழிக்கும் வரை எங்க போராட்டம் தொடரும்” என்று பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியை பார்த்தால்தான் எந்த Contextல் அவர் அவ்வாறு சொல்லியிருக்கிறார் என்பது புரியும். மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வந்து, பார்ப்பனர்களின் பிடியில் மாட்டிக் கொண்டு உருவான இந்து மதத்தை ஒரு தனி நபர் அழித்து விட முடியுமா என்ன ?
கடவுளை மிரட்டினால் கடவுள்தானே கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டும் ? கண்ட நாயெல்லாம் எதற்கு கொடுக்கிறது ?
இந்த புகாரை வாங்கிய சென்னை மாநகர ஆணையர் என்ன செய்திருக்க வேண்டும் ? வேலு பிரபாகரனை அழைத்து செல்போனை பிடுங்கிக் கொண்டிருக்க வேண்டுமா இல்லையா ? செல்போனில் ஜூம் கால் வழியாகத்தானே பேட்டிக் கொடுத்தார் ? வேலு பிரபாகரன் மட்டும் அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.
இப்போது இதை, சம்பவம் 5ல் கைது பற்றி மகேஷ் குமார் அகர்வால் கொடுத்த வியாக்கியானத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
இந்த ஐந்து சம்பவங்களும், எனக்கு ஒரே ஒரு விஷயத்தைத்தான் உணர்த்துகின்றன. சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஒரு தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பதே.
எனக்கு இதை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை. ஒரு மாநகர ஆணையாளருக்கு பல அழுத்தங்கள் வரும். ஜார்ஜ் ஆணையராக இருந்த காலத்தில், சத்தியம் திரையரங்க உரிமையாளர்கள் வேளச்சேரி ஜாஸ் சினிமாஸை விற்க மறுத்ததற்காக, சத்தியம் உரிமையாளர்கள் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்ததெல்லாம் நடந்திருக்கிறது. அந்த அழுத்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் கிஷோரும், மாரிதாசும் சல்லிப்பயல்கள் அல்லவா ? ஒரு நல்ல காவல்துறை அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் இருவரையும் தூக்கிப் போட்டு மிதித்திருக்க வேண்டாமா ? அகர்வாலும் நிச்சயம் செய்திருப்பார். இவர்கள் இருவர் பின்னாலும் எச்.ராஜாவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் இல்லாதிருந்திருந்தால்.
சரி. இதற்காக மகேஷ் குமார் அகர்வாலை குறைசொல்லலாமா ? இந்த அழுத்தங்களை யார்தான் எதிர்கொள்ளமாட்டார் ? முடியாது என்று சொன்னால் அகர்வாலின் வேலை போய் விடுமா என்ன ? இல்லை கழுத்தை சீவி விடுவார்களா என்ன ? அகர்வால் ஒரு கூடுதல் டிஜிபி. ஒன்றுமே செய்ய முடியாது. எந்த பதவியில் நியமித்தாலும், வாகனம், ஓட்டுனர், அலுவலகம், வீட்டில் வேலை செய்ய ஆட்கள் என்று எந்த குறையும் இருக்கப் போவதில்லை. பிறகேன் மனசாட்சிக்கு விரோதமாக பொறுக்கிகளை காப்பாற்றுகிறார் ?
சென்னை மாநகர ஆணையாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் மட்டும்தானே ?
லஞ்சம் வாங்காமல் இருப்பது மட்டும்தான் நேர்மையா ? சட்டத்தின்படி நடப்பதும்தான்.
ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரி, இன்று காவல் துறை இருக்கும் நிலை குறித்து கூறினார். “துறையின் நலனை விட தங்கள் சொந்த நலன் பெரிது என்று கருதும் அதிகாரிகள், மக்கள் நேசிக்கும் இந்த காவல் துறைக்கு சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை விளைவிக்கிறார்கள். மிகச்சிறந்த புலனாய்வுத் திறன் மற்றும் சட்டம் ஒழுங்கு மேலாண்மை திறன் கொண்ட இந்த துறையை, சுயநலத்துக்காக அதிகாரிகள் அடகு வைக்கத் தொடங்கினால், மக்களின் தீராத சாபத்துக்கு நாம் ஆளாவோம்.”
இப்போதே காவல் துறை இப்படி நடந்துகொள்கிறது என்றால், தேர்தல் நெருங்க நெருங்க, பிஜேபி தலைவர்களின் உத்தரவுகளை எப்படியெல்லாம் செயல்படுத்தப் போகிறது என்பதை நினைத்தாலே அச்சமாக இருக்கிறது.
மேலே கூறிய அனைத்து விபரங்களையும், எம்மக்களின் மேலான கவனத்துக்கு சமர்ப்பிக்கிறேன். தமிழகத்தை இத்தகைய இழிநிலைக்கு ஆளாக்கிய ஆட்சியாளர்களுக்கும், பிஜேபியினருக்கும் தகுந்த பாடத்தை புகட்டுங்கள். இனி எந்நாளும் மீள முடியாத பாடத்தை புகட்டுங்கள்.
தமிழகத்தின் மாண்பை மீட்டெடுப்போம். இது போர் தோழர்களே. தமிழர்களுக்கும் பார்ப்பனீயத்துக்குமான போர்.