மத்தியில் ஆளும் மன்மோகன் சிங்கின் அரசு போன்ற மானங்கெட்ட அரசை உலகில் எங்குமே பார்க்க முடியாது போலிருக்கிறது.
சேனல் 4ன் ஆவணப்படம், உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது. கண்டவர் மனதை கதற வைத்திருக்கிறது. ஆனாலும், இலங்கையின் இந்தப் போருக்கு உதவி செய்து தன் கரங்களில் ரத்தத்தோடு இருக்கும் மத்திய அரசாங்கம் மவுனம் சாதிக்கிறது.
இலங்கையிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும், அமெரிக்க அரசாங்கத்தின் காங்கிரஸ் கமிட்டி, இலங்கை மீது உள்ள போர்க்குற்றங்களுக்காக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறது. அருகில் உள்ள, வல்லரசு ஆக வேண்டும் என்ற நப்பாசை உள்ள மத்திய அரசாங்கமோ, திருடனுக்கு தேள் கொட்டியது போல கனத்த மவுனத்தோடு இருக்கிறது.
இது மட்டுமல்ல, ஊழலுக்கு மேல் ஊழலாக புற்றீசல் போல கிளம்பியிருக்கும் புகார்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், கர்நாடகத்தில் பிஜேபியின் ஊழல், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் ஊழல் என்று சாவகாசமாக சவடால் பேசிக் கொண்டிருக்கிறது. விலைவாசி உயர்வு, ஊழல், பணவீக்கம், கோஷ்டி மோதல், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி என்று அனைத்து பக்கங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் அரசாங்கம்.
ஆனால் காங்கிரசின் நல்ல நேரம், பிரதான எதிர்க்கட்சியான பிஜேபி, சொந்தக் காசிலேயே சூனியம் வைத்துக் கொண்டு இருக்கிறது. ஆட்சியில் இல்லாத போதே அக்கட்சியின் கோஷ்டி மோதலால் நிலைகுலைந்து எழுந்திருக்க முடியாமல் இருக்கிறது.
இது தவிரவும் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தால் பல முறை கண்டிக்கப் பட்டு வந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜுலை மாதத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பற்றி ஒரு பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அப்போது, வேலைக்குச் செல்லாமல், வீட்டு வேலையில் இருக்கும் பெண்களை, பிச்சைக்காரர்கள், விலை மகளிர், சிறைக் கைதிகள் வரிசையில், பொருளாதார ரீதியாக பயனற்றவர்கள் என்று வகைப்படுத்தியிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. “மக்கட் தொகை கணக்கெடுப்பில் இந்த பாரபட்சம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வது, தண்ணீர் சேகரிப்பது, சுள்ளி பொறுக்குவது போன்ற வேலைகளைச் செய்யும் பெண்களை பிச்சைக்காரர்களோடு வகைப்படுத்தப் பட்டுள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண்கள், வீட்டு வேலைகளை செய்வதன் மூலம், அலுவலகத்தில் சென்று வேலை பார்க்கும் பெண்கள் அங்கு செலவிடும் நேரத்தை வீட்டில் செலவிடுகின்றனர். அரசு கடைபிடித்துள்ள இது போன்ற பாரபட்சமே, அவர்களை சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக ஒடுக்கி, வறுமையில் வைததிருப்பதற்கான காரணம்” என்று உச்ச நீதிமன்றம் சொன்னது.
ஆகஸ்ட் மாதத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவோடு ஒரு நாளைக் கழிக்கும் ஒரு தேசத்தில், உணவு தானியங்கள் கெட்டுப் போக அனுமதிப்பது, கிரிமினல் குற்றமல்லவா என்று கேள்வி எழுப்பி விட்டு, இது போல வீணாகும் தானியங்களை வீணாகும் முன்பாக ஏழை மக்களுக்கு வழங்கவும் என்று கூறியது. இதைப் பற்றி கருத்து தெரிவித்த உணவு அமைச்சர் ஷரத் பவார், உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆலோசனையை ஏற்க முடியாது என்றார். அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, உச்ச நீதிமன்றம், இது எங்களது ஆலோசனை அல்ல. உத்தரவு. உங்கள் அமைச்சரிடம் இது உத்தரவு என்று சொல்லுங்கள் என்று கூறியது.
அக்டோபர் 2010ல், மற்றொரு வழக்கில், பணம் இல்லாமல் எதுவுமே இந்நாட்டில் நகராது என்று தங்கள் விரக்தியை வெளிப்படுத்தினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு மற்றும், டி.எஸ் தாக்கூர் ஆகியோர். நீதிபதிகள் கிண்டலாக, “பேசாமல் ஊழலை சட்டபூர்வமாக, இது இதற்கு இவ்வளவு கட்டணம் என்று அறிவித்து விட்டால் என்ன ?” என்றும் கேட்டு விட்டு, ஒரு மனிதனின் வழக்கை முடிப்பதற்கு 2500 ரூபாய் என்று அறிவித்து விட்டால், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெளிவாக தெரியும் அல்லவா ? பேரம் பேச வேண்டிய அவசியம் இருக்காது அல்லவா ? அரசு ஊழியர்களையும் குறை சொல்ல முடியாது. பண வீக்கத்தை சமாளிக்க வேண்டுமல்லவா ? என்று கிண்டலாக கேட்ட நீதிபதிகள், நாட்டில் ஊழல் கடுமையாக பெருகி விட்டது. குறிப்பாக, வருமான வரித் துறை போன்ற வரி விதிக்கும் துறைகளில் ஊழல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது என்றனர்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு நவம்பர் 2010ல் விசாரணைக்கு வந்த போது, 11 மாத காலமாக சுப்ரமணிய சுவாமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மன்மோகன் சிங்கின் நடவடிக்கையை கண்டித்த உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது, கவலை அளிக்கிறது என்றனர். மூன்று மாதங்களுக்குள் அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால் 11 மாதம் என்பது மிக நீண்ட காலம் என்றனர் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே.கங்குலி ஆகியோர்.
ஜனவரி 2011ல், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இழப்பு என்று சொல்லுவது, முழுக்க முழுக்க தவறானது. அடிப்படை இல்லாதது என்றும், ஜீரோ லாஸ் என்றும் கூறிய கருத்துக்கு தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது உச்ச நீதிமன்றம். அமைச்சரின் இந்தக் கருத்த துரதிருஷ்ட வசமானது. அமைச்சர் என்பவர் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியது. கூறியதோடு அல்லாமல், இது போன்ற எந்தக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளாமல், சிபிஐ தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறிய அன்றே தன் பதவியை கபில் சிபல் ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அதெல்லாம் மானமுள்ளவர்கள் செய்யும் காரியமல்லவா ?
மத்திய அரசுக்கு மிகப் பெரிய அவமானமாக அமைந்தது, மத்திய கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸின் நியமனத்தை ரத்து செய்தது தான். தாமஸின் நியமனம் சரியே என்று வெட்டியாக வறட்டுத் தனமாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய மன்மோகன் அரசுக்கு பெரும் பின்னடைவாக அது அமைந்தது. பாமாயில் இறக்குமதி ஊழலில் 8வது குற்றவாளியாக, குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப் பட்டிருந்த தாமஸை எப்படி ஊழல் ஒழிப்பு ஆணையராக்க முடியும் என்று சங்கடமான பல கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம்.
பிப்ரவரி 2011ல் அமர் சிங்கின் தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இது போல சட்டவிரோதமாக ஒருவர் உரையாடலை ஒட்டுக் கேட்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் லைசென்சுகளை ஏன் ரத்து செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியது. “ஒட்டுக் கேட்க வேண்டும் என்று அனுப்பப் பட்ட கடிதத்தில் அத்தனை தவறுகள் உள்ளது வெளிப்படையாக தெரிகிறதே… உடனடியாக அந்நிறுவனத்தின் லைசென்ஸை ரத்து செய்திருக்க வேண்டாமா ? யாருடைய உரையாடல்களை வேண்டுமானாலும் ஒருவர் ஒட்டுக் கேட்க முடியும் என்றால் எவ்வளவு ஒரு ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதைப் பாருங்கள். எவ்வளவு ஒரு மோசமான சூழல் ஏற்பட்டு விட்டது. இவ்வளவு ஒரு முக்கியமான ஒரு விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி விட்டது. நீங்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து இதைச் செய்கிறீர்கள். நீதிமன்றம் தான் உங்கள் எல்லாருக்கும் இளப்பமாகத் தோன்றுகிறது” என்று கடுமையான கருத்துக்களை பதிவு செய்தனர்.
சமீபத்தில் இந்த மாதம், நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கென்று அமைக்கப் பட்ட சிறப்பு காவல்படையை கலைக்க உத்தரவிட்டும், உச்ச நீதிமன்றம் கடும் கண்டனங்களை மத்திய அரசு மீதும் பதிவு செய்திருந்தது குறிப்பிடத் தக்கது.
கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருவதற்கு தயக்கம் காட்டும் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்த உச்ச நீதிமன்றம், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது, மத்திய அரசுக்கு சரியான சவுக்கடி. ஆனாலும், சூடு சொரணையற்ற அரசு, அந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்றுவதில் எவ்வளவு குறியாக இருக்கிறது மத்திய அரசு என்பதையே காட்டுகிறது.
கண்மூடித்தனமாக பெட்ரோல், டீசல் விலைகளை ஏற்றி நடத்தர ஏழை மக்களை மோசமான வேதனைக்குள்ளாக்கியிருக்கிறது மத்திய அரசு.
எதிர்க்கட்சியான இருக்கும் பிஜேபி கூடாரம் கல கலத்துப் போய் இருக்கும் சூழலில், மூன்றாவது அணி அமைய வாய்ப்பே இல்லை என்ற சூழ்நிலையிலும், கூட்டணிக் கட்சிகளை ஊழல் புகாரில் சிக்க வைத்து பலவீனமாக்கி வேறு வழியில்லாத காரணத்தால் இன்று ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
பிஜேபி கட்சியோ, இந்துத்வாவா இல்லையா ? ஊழல் எதிர்ப்பா இல்லையா ? கட்சி இருக்கிறதா இல்லையா ? ஆர்எஸ்எஸ் பேச்சைக் கேட்பதா இல்லையா ? என்ற குழப்பத்திலே ஆழ்ந்து கொண்டிருக்கும் போது, அவ்வப்போது தலை தூக்குகிறது எடியூரப்பாவின் பிரச்சினை. ஊழலில் ஊறித் திளைத்து, முடை நாற்றம் எடுக்கும் அளவுக்கு கர்நாடக பிஜேபி அரசு நாறிக் கொண்டிருந்தாலும், ஒரு மாநில முதலமைச்சரை ராஜினாமா செய்ய வைக்க வக்கில்லாத நிலையில் தான் பிஜேபி இருக்கிறது. கர்நாடகத்தின் சுரங்க வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ரெட்டி சகோதரர்களின் ஊழலை ஆவணத்தோடு கர்நாடக லோக் ஆயுக்தா அம்பலப்படுத்தினாலும், அந்த ஊழலைப் பற்றிப் பேச மாட்டேன், ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றித் தான் பேசுவேன் என்று இரட்டை வேடம் போட்டு வருகிறது பிஜேபி. ஊழலை மூடி மறைப்பதில், காங்கிரசுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை, டெஹல்கா விவகாரத்தை பிஜேபி கையாண்ட விதம் வெளிப்படுத்தியது.
என்னை கூட்டணி சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பிஜேபி கதறினாலும், எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சியும், பிஜேபியை சேர்த்துக் கொள்ள தயாரில்லாத ஒரு நிலையில், அனாதையாக அரற்றிக் கொண்டிருக்கிறது பிஜேபி. அதனால் 2016ல் கூட, பிஜேபி, காங்கிரஸ் அரசை வீழ்த்தும் என்ற நம்பிக்கை இல்லை. மேலும், பிஜேபி போன்ற, மதவாத, இந்துத்துவ வெறி பிடித்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது நாட்டுக்கு ஆபத்தே…. புதிய தீவிரவாத சட்டம், ராமர் கோவில் என்று நாட்டை பிளவுபடுத்தும் வேலைகளில் பிஜேபி காட்டும் முனைப்பு, மிக மிக ஆபத்தில் கொண்டு போய் முடியும்.
இந்நிலையில் நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த இடது சாரிகள், மக்கள் மனதை சரியாக கவனிக்கத் தவறி, எந்த முதலாளித்துவத்தை எதிர்ப்பதை கொள்கையாக வைத்திருந்தார்களோ, அந்த முதலாளியின் காலை வருடி, ஏழை உழைப்பாளி மக்களை போலீசை விட்டு அடித்தார்கள். ரத்தன் டாடாவுக்கு ரத்தினக் கம்பளம் விரித்து, உழைப்பாளி மக்களை தாக்கியதன் விளைவே, 30 ஆண்டு கால இடது சாரிகளின் தகர்ந்த கோட்டை.
ஆனாலும், இன்று நம்பிக்கை அளிக்கும் சக்தியாக விளங்குவது, இடது சாரிகள் மட்டுமே. இந்த இடது சாரிகள் இன்று மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும், எதிர்க்கட்சியாக இருப்பது, அவர்கள் சுயபரிசோதனை மேற்கொண்டு, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, மீண்டு எழுந்து வருவார்கள் என்பதே ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பார்ப்பு.
அவ்வாறு எழுந்து வரும் இடது சாரிகள், சோனியா காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவிற்கும் ஒரு மாற்றாக உருவாகும், மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.
ஈழத் தமிழரின் ரத்தம் தோய்ந்த கைகளைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை கருவறுக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் செய்த துரோகத்தை மறக்காமல், நினைவில் வைத்திருந்து, தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை துடைத்து எறிய வேண்டும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று சொன்னால் அடி விழும் என்று அஞ்சும் நிலையை உருவாக்க வேண்டும். இந்த காங்கிரஸ் கட்சியை பல்லக்கில் வைத்துத் தூக்கிக் கொண்டிருக்கும், திமுகவை அந்த காங்கிரஸ் கட்சியே அழித்து ஒழித்து விடும். மீதம் உள்ள வேலையை கருணாநிதி செய்து முடிப்பார். அதனால் திமுக பற்றி கவலைப் படத் தேவையில்லை.
காங்கிரஸ் ஒழிக்கப் படும் நாளே, முள்ளிவாய்க்காலில் உயிரை விட்டவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.